ஸ்ரீ சடகோபர் அந்தாதி-21-30- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21–

மலை யவனே-மலைக்கு உரியவனே
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் -குறிஞ்சி நிலத்து சோலையிலே
தளிர் மெல்லடித் தண் மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு -கண்ணுக்கு இனிய பற்களையும் –
குறிஞ்சி என்னும் பண் போல் இனிய சொற்களையும் புன் சிரிப்பையும் யுடைய தலைவியின் முகத்தைப் பார்க்க
நீ முடுகும்–நீ விரைந்து வருவதாகிய
சூரல் குறிஞ்சி நெறி -பிரப்பங்காடு மிக மலை வழியை
நினை தோறும் துணுக்கு எனுமால்-நினைக்கும் தோறும் திடுக்கிட்டு அஞ்சுவதாய் இருக்கும்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை –ஆதலால் ஆழ்வார் மேல் ஆணை -இனி நீ இங்கனம் வர வேண்டா –

பகல் குறி -இரவுக் குறி -ஏகாந்தத்தில் தலைமகனை சந்தித்தல்
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி -அகத்துறை
இதன் பயன் -வெளிப்படையாக வந்து மணம் புரிய வற்புறுத்தல்
குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்-புணர்ச்சிக்கு உரிய இடம்

தமோ குண பிரசுரராய்
சம்சார மார்க்கத்தில் இருந்து மேற்பட்ட இடத்தில்
ஆழ்வார் பக்கல் பக்தி செய்து ஒழுகுகிற பாகவதர்களை நோக்கி
அன்பர்கள் இக்களவு ஒழுக்கைத்தை விட்டு
பிரபத்தி மார்க்கத்தில் நின்று அந வரத பாவனை செய்வதை வறுபுறுத்துவது இதன் ஸ்வா பதேசம் –
ஸ்ரீ வைஷ்ணவர்களை கிளவித் தலைமகனாக கொள்ளுதல் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மாயப்பிரான் அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ -போல் –

————-

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22-

மலை யாரமும் -பொதிய மலையில் உண்டாகிற சந்தன மரமும்
கடல் ஆரமும் –கடலில் தோன்றுகிற முத்துக்களும் -பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து அன்றோ
பன் மா மணி குயின்ற விலை யாரமும் -ரத்தினங்கள் பதிக்கப்பட்ட விலை மிக்க ஹாரங்களும்
விரவுந் திரு நாடனை –பொருந்திய சிறந்த பாண்டி வள நாட்டில் திரு அவதரித்தவரும்
வேலை சுட்ட சிலையார் அமுதின் அடி சட கோபனைச் –சமுத்திரத்தை ஆக்நேய அஸ்த்ரத்தால் வேகச் செய்த
சாரங்க பாணியின் திருவடி நிலைகளான ஆழ்வாரை
சென்று இறைஞ்சும்–போய் வணங்குகிற
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப்பாசுரம் –

————-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் -இந்திராதி தேவர்கள் எங்கள் ஸ்வர்க்க லோகம் வருவாய்
என்று வேண்டும்படி மேம்பட்ட பதவி கிடைப்பதானாலும்
பூந்தொழுவின் வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் –செருக்கு கொண்ட -ராஜஸ குணம் மிக்க
எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை அடைந்த திருமாலது ஸ்ரீ வைகுண்டமே பெறினும்
எழில் குருகூர் நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும் -எப்பொழுதும் திருவாய் மொழி யாகிய
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே–அமுதத்தை பருகி களித்துத் திரியும் பேறே எனக்கு சித்திக்க வேண்டும் –
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24-

சடகோபன் மொழித் தொகையே.
சித்தர்க்கும் -அணிமா மஹிமா இத்யாதி யோக சித்திக்களைப் பெற்றவருக்கும்
வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் -வேதாந்தம் அறிந்தவர்களுக்கும்
செய்தவர்க்கும்-தவம் செய்தவர்களுக்கும்
சுத்தர்க்கும் -மனம் மொழி மெய்-த்ரிகுண ஆர்ஜவம் உள்ளோருக்கும்
மற்றைத் துறை துறந்தோர் கட்கும் -இல்லறம் கடந்து சந்யாச ஆஸ்ரமம் கொண்டவர்களுக்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும் -பகவத் பாகவத சேஷ பூதர்களாய் அடிமை செய்வார்களுக்கும்
ஞானப் பகவர்க்குமே யன்றி –தத்வ ஞானம் யுடைய பெரியோர்கட்க்கும் அல்லாமல்
ஞானம் பலம் வீர்யம் ஐஸ்வர்யம் சக்தி தேஜஸ்ஸூக்கள் உடைய பகவர்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம் –முக்தர்களுக்கும் இன்னமுதம் போல் இனிய சுவை விளைப்பதாம்

——–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் -தொகுதியாக உள்ள மற்ற சமய நூல்களுக்கு எல்லாம்
துறை தோறும் தொட்டால்-இடம் தோறும் ஊன்றி நோக்கினால் -அவற்றில் உள்ள பொருள்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தால்
பகை யுளவாம் -முன்னுக்கு பின் வருத்தமாகவும் -வேத விருத்தமாகவும் உள்ளனவாம்
மற்றும் -மேலும் இது அன்றியும்
பற்றுளவாம் பழ நான் மறையின் வகை யுள வாகிய வாதுளவாம் -வேத விருத்தமான உள்ள சொற் போர்களும் உண்டாகும்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே- இங்கேயோ எதிர் வாதம் ஒன்றுமே இல்லாமல்
விசேஷ அர்த்தங்கள் பார்த்த பார்த்த இடங்களில் அமைந்து இருக்கும்

————-

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

அரு வினைகாள்
இள நாகு சங்கம் கொழுப்பாய் மருதம் சுலாம்-இளமையான பெண் சங்குகள் உடன் ஆண் சங்குகள் மருத நிலத்திலே திரியப் பெற்ற
கொழுப்பாய் மருதம்-கொழு பாய் மருதம் -கலப்பைக்காறு உழுது பாயப்பெற்ற வயல்கள் என்றுமாம்
குருகூர் எம் குலக் கொழுந்தே –பிரபன்ன ஜன கூடஸ்தரே
தொண்டக் குலத்தின் பேருக்கு காரணமானவர் ஆதாலால் கொழுந்து என்கிறார்
எம் குலக் கொழுந்து இராமானுசர் என்பதற்கு வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள்
வ்ருஷமாய் பலிக்கைக்கும்
கொடியாய்ப் படர்ந்து பலிக்கைக்கும் மூலமான கொழுந்து ஆகையால்
எம் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் என்றபடி

அன்றிக்கே
எம் குலம் அடங்கலும் ஒரு வேராய் -அதுக்கு எம்பெருமானார் கொழுந்தாய்க் கொண்டு
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்படத் தம்முடைய திரு முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் –
உம்மை அப்புறத்தே இழுப்பான் ஒருவன் வந்து -உங்களை இழுத்து அப்புறத்திலே எறிய வல்ல ஒருவராய் எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் இருந்து ஆட்டைப் பற்றி புலி இழுப்பது போல் இழுக்க வல்லவராய் வந்து
இன்று நின்றான்-இப்பொழுது எமது திரு உள்ளத்திலே நின்று அருளினார்
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் -இனி மேல் எம்மை பிறவித் துன்பத்தில் விழுத்த வல்லவர் எவரும் இல்லை
ஆகவே
மெய் உற வந்து அழுப்பா தொழியின் -எமது உடம்பில் பொருந்த வந்து வருத்தாமல் நீங்கிப் போகுகங்கள்
மெய்யாக அழுப்பாது ஒழிமின் -என்றுமாம் –

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல் –

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27-

இந்த மெல் இயலாள்
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் –மகிழ மரத்தினது கொளுத்தும் இலையும் அரும்பும்
உட்பட எல்லாவற்றையும் தனக்கு கொண்டு தர வேண்டுவாள்
கொய்ம் மகிழ்க் கீழ் விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் –மலர் கொய்வதற்கு உரிய மகிழ மரத்தின் கீழ் உதிர்ந்து –
காற்றின் விசையால் எப்புறத்தும் ஓடுவதான சருகு ஒன்றை யாயினும் பெற்றாள் இல்லை
விறல் மாறனென்றால்-பெருமை யுடைய மாறன் என்று தலைமகன் பெயரைச் சொன்னால் தலை மகன் பெயரைச் சொன்னால்
அழும் -ஆற்றாமையால் அழுவாள்
தோள் தளரும் –தோள்கள் தளரப் பெறுவாள்
மனமுருகும் -நெஞ்சு உருகப் பெறுவாள்
குருகூர் அறையில் –அவரது அவதார ஸ்தலப் பெயரைச் சொன்னால்
இவ் இளங் கொடிக்கே எழுந்து ஓடவுங் கருத் துண்டு – இவளுக்கு எழுந்து இருந்து இங்கு இருந்து
அவ்விடத்துக்கு ஓடிச் செல்லவும் எண்ணம் உண்டாகிறது
கெட்டேன்

பாட்டுடைத் தலைவனே கிளவித் தலை மகன்

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த
நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும்
அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும்
ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய்
அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும்
அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும்
அன்பர்கள் பாராட்டி
இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல்
இதற்கு ஸ்வாப தேசம் –

———

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28-

ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட -வேதம் போலவே சாரமான அர்த்தங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
அருளிச் செய்த –வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ
மாறன் என்றால் -மாறன் என்னும் திரு நாமம் உடையவர் என்று யார் சொன்னாலும்
அவரைக் குறித்து
பதுமக் கரங்கள் முடி எடுத்துக் கொண்ட -தாமரை போன்ற தமது கைகளைக் குவித்து அஞ்சலி பந்தத்தை
தமது சிரஸில் மேல் கொள்ளும் தன்மையரான
அந்தணர் தாள் -ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிகள்
என் முடி -எனது சிரஸ்ஸின் மேல் கொள்ளப் படுபவனவாம்
எனவே. -என்று சொல்லி
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் -பாகவதருக்கு வழித் தொண்டன் யான் என்று வெளியிடுமாறு
விருதுக் கொடி பிடித்துக் கொண்டு நின்றேன்
இனிக் -இவ்வாறு ஆழ்வார் அடியார் அடியார்குத் தொண்டனான பின்பு
கொடுங் கூற்றினுக்கோ அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் -யமனுக்கு என் பக்கல்
ஒரு காலடியாவது எடுத்து வைத்து வருதல் கூடுமோ

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

இராவணன் தன் பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான்– தலைகளைத் துணித்து அவற்றைக் கொண்டே
ஆழ்ந்த கடலை நிரம்பி விட்ட ஸ்ரீ கோதண்ட பாணி அடியவராக
பிரமன் வரத்தால் மீண்டும் மீண்டும் தலை முளைக்கச் செய்ததே இதற்காக அன்றோ
பொருநைந் துறைவன் -ஆழ்வார்
அவன் தாள் இணைக் கீழ்–ஸ்ரீ யபதியின் திருவடி இணைக்கீழ்
தன் முடியால் -தனது சென்னியால் வணங்கி
சொல் முடியால்-திருவாய் மொழி சேர்க்கையால்
எப் பொருளும் தழீஇச்-முமுஷுவுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் –
அர்த்த பஞ்சகங்களையும் -ஒருங்கு தொகுத்து
அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.–பா மாலையை சூட்டி அருளி சமர்ப்பிக்க
இப்படிப்பட்ட ஆழ்வாருக்கு அடிமைப்பட்ட பின்பு
என் முடியா தெனக்கி -எனக்கு அசாத்தியமாக இருப்பது யாது -ஒன்றுமே இல்லையே
யாதே அரியது -எனக்கு சிரமம் பட்டு சாதிக்க வேண்டியது தான் ஏது -ஒன்றுமே இல்லையே –
வேண்டிய நற் பயன்கள் எல்லாம் தவறாமல் எளிதில் கை கூடும் அன்றோ –

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

சூட்டில்-நெல் போர் களிலே
குருகு -மருத நிலத்துப் பறவைகள்
உறங்கும் -நிர்ப்பரமாக இனிது உறங்கப் பெற்ற
குருகூர் தொழுதேன் —ஆழ்வார் திரு நகரியை சேவிக்கப் பெற்றேன்
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன் –இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யங்களும் செய்யப் பெற்றேன்
மறை மெய் எனிலே.–வேதங்கள் ஸத்யமாகுமானால்
மெய் -யதார்த்த பிரமாணம்
என்னை நல் வினையாம் காட்டில் புகுத விட்டு –என்னை நற் செயகைகள் ஆகிற தவ வனத்தில் செல்ல விட்டு
நல் வினை -பிரபத்தி மார்க்கம்
சரணாகதி சாஸ்திரமான ஸ்ரீ கம்ப ராமாயணம் சாதிக்கச் செய்தவரும் ஆழ்வாரே என்கிறார்
உய்யக் கொள் -யான் ஈடேறுமாறு என்னை ஆள் கொண்டு அருளுகிற
மாறன் கழல் பற்றிப் போய் -ஆழ்வார் திருவடிகளை சரண் புக்க பின்பு
மாறன் கழல் பற்றி குருகூர் தொழுதேன் ஆளும் செய்தென்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை -ஸ்ரீ வைகுண்டம் சேர்வதற்கு பிரதிபந்தகம் ஏதேனும் உண்டோ
இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தருமே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: