ஸ்ரீ சடகோபர் அந்தாதி-31-40- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

உறு வினையைக்-மிக்க கருமங்களை
கொய்யும் -அறுத்து ஒழிக்கின்ற
மெய் வாள் வலவன் –ஸத்ய வாக்காகிய வாள் படையின் தொழிலில் வல்லவரும்
குருகைக் கரசன் -திருக்குருகூருக்குத் தலைவரும்
புலமை செய் மெய்யன் தனக்கே -ஸ்வரூப ஞானம் உபதேசித்து அருளும் பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கே
தனித் தாளன்பு செய்த பின்னே.–ஒப்பற்ற திருவடிகளில் நான் பக்தி செய்த பின்பே
எனக்கு
மெய்யும் மெய்யாது -உண்மைப்பொருளும் உண்மையாக விளங்கிற்று –
மெய் -ஜீவ பரமாத்ம ஸ்வரூபங்கள்
பொய்யும் பொய்யாது -பொய்மைப் பொருள்களும் பொய்யாகப் புலப்பட்டன
பொய் -தேகம் பிரகிருதி -பொய் நின்ற ஞானம் போல்வன
வேறு படுத்து-இங்கனம் பகுத்து அறிந்த பின்பே
உய்யும் -ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உரிய
மெய்யாய உபாயம் வந்துற்றது -உண்மையான உபாயமும் எனக்கு வந்து ஸித்தித்தது

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர-ஸ்ரீ யபதியை -செய்யன் கரியன் என்று ஆராய்ந்து அறிய
செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் செய்ய கை -செய்ய அவயவங்களையும்
நீல மேனி கருமையும் ஆராய்ந்து அறியார்கள் அன்றோ
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு
வய்யம் கரி யல்ல -வையகத்து உயிர்கள் சாக்ஷி யாக மாட்டாதே
மாட்டா மறை -வேதங்களும் அப்படியே
அவன் ஸ்வரூபத்தை இன்னது இப்படிப்பட்டது என்று உரைக்க சக்தி கொண்டவை அல்லவே
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டதே
ஆகவே
மதுரக் குருகூர் அய்யன் கவி யல்லவேல் –ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் இல்லாமல் போயிருந்தால்
இவ் வுயிர்களுக்கே. பிறவிக் கடலாழ்வது அல்லால்-உயிர்கள் எல்லாம் பிறவிக் கடலில் ஆழ்ந்து போவது அல்லாமல்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் -உஜ்ஜீவன உபாயம் ஒன்றுமே யான் கண்டேன் அல்லேன்

—————

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

உயிர்த் தாரையில் புக்குஉ று –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

அந்தணர்க்கோ -வேதியர்கட்காகவோ
நல் அருந்தவர்க்கோ -சிறந்த தபஸ்ஸூக்கள் செய்பவர்கட்காககோ
அன்றி யோகியராய் வந்தவர்க்கோ -அல்லது யோக அப்யாஸம் செய்பவர்கட்காகவோ
மறம் வாதியர்க்கோ -பிணக்கர்களாய் புற சமயத்தார்கட்காகவோ
மதுரக் குழை சேர் சுந்தரத் தோளனுக்கோ –ஸ்ரீ மன் நாராயணனுக்கட் காகவோ
அவன் தெண்டர்கட்கோ -அவன் அடியார்களுக்காகவோ
சுடர் தோய்-சந்தன ஸூர்யர்கள் விண் ஒளி கள் தன் மேல் படும்படி
தொடர்பு உயர்வு நவிற்சி அணி -சோலைகளின் மிக்க உயர்ச்சியைக் காட்டும் –
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.–ஆழ்வாரது திரு அவதாரம் –
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்
எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்ததியும் -எழுத்து புணர்ச்சி இலக்கணத்திலும்
சந்திப் பதமும் -அங்கணம் புணர்வதற்கு உரிய பாதங்களின் இலக்கணத்திலும்
அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் -அச் சொற்களில் மிக்கு விளங்குகிற பொருள் இலக்கண வகைகளிலும்
பல் அலங்காரப் பொருளும் -பலவகை அலங்கார அணி இலக்கண விஷயங்களிலும்
பயிலுகிற்பீர்-பழகுகிற இலக்கண புலவீர்காள்
தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. –திருக்குருகூரை சேவித்து
வந்தியும் -நமஸ்கரியுங்கோள்
வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்-அந்த ஆழ்வார் அடியார்களை வணங்குகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை
வணங்கும் விதத்தை அறிவீர்கள்
சிந்தியும் -அவர்களை தியானமும் செய்யுங்கோள் –

———-

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்–தெய்வ ஆவேசம் கொண்ட கட்டு விச்சியை சீர் கெடுத்து விட்டீர்கள்
பூவரை ஏறிய கோதை –மலர்களை அளவாகச் சூட்டப் பெற்றுள்ள கூந்தலுடைய இவ்விள மங்கையுடைய
யுள்ளம் புகுந்தார் எவர் என்று -மனத்தில் புகுந்து வறுத்துபவர் யார் என்று நீங்கள் வினவியத்தைக் குறித்து
அக்கட்டுவிச்சி
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று -நமது உறை யுள்ளின் எல்லையில் ஏறி-
கட்டுவிச்சி கட்டேறி போல் – வந்து விடை கூறுகிற போது சொன்னது
இறைவர் மூவரையோ -த்ரிமூர்த்திகளையோ
குரு கூரரையோ -ஆழ்வாரையோ
சொல்லும் முந்துறவே. –என் முன்னே சொல்லுங்கோள்

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

—————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

குருகூர் என்னும் ஆறு அறியாப்–தலை மகன் இருக்கும் திவ்ய தேசப் பெயரையும்
வாயினால் சொல்லும் விதத்தையும் அறியாது இருந்த
பைதலைக் -இளைமை யுடைய இம்மகளை -சிறு கிளிப் பைதலே -திருவாய் மொழியிலும் உண்டே
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய –முறை கேடு தலைக்கு ஏறி பனை மடல் குதிரையின் மேல் ஏறுமாறு செய்த
கோகு உகட்டுதல் –கும்பிடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதார் –திருவாய் மொழியிலும் உண்டே
கோகு -அடைவு கேடு
உகட்டுதல் -தலை மண்டியிடுதல் -மேலிடுதல்
பண்பனையே–குணத்தை யுடைய தலை மகனை -எதிர்மறை லக்ஷணம்
சென்று–அவனது ஊருக்கு யாம் சென்று
கை தலைப் பெய்து –கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு
அரும் பூசலிட்டுக் -பொறுத்தற்கு அரிய பேர் ஆரவாரத்தைச் செய்து
கவியால் உலகை உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ -ஆழ்வார் பாசுரங்களால் உலகத்தின் துன்பம் தீர்ந்து
வாழுமாறு செய்தனன் என்பதையும் பொய் என்று சொல்லி முறையிடுவோமோ
அவ்வூர் அறிய வைதலைத்து ஏசுதுமோ -அங்குள்ளார் அனைவரும் அறியும்படி நிந்தித்து கலக்கம் விளைத்துப் பழிப்போமோ

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து –
அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே –
ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

—————

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

கடை நாள்–கல்பாந்த காலத்திலே
ஆலத்திலே துயின்றோர்–ஆலிலையில் யோக நித்ரை செய்து அருள்பவரான எம்பெருமான்
கொண்ட–கரும வசத்தால் அன்றியே இச்சையாலே எடுத்துக் கொண்ட
ஐ யிரண்டா யமைந்த கோலத்திலே –தசாவதாரங்களிலே
முளைத்து–அடிக் கொண்டு
கொழுந் தோடி-கொழுந்து விட்டு வளர்ந்து
குணங்கடந்த மூலத்திலே செல்ல மூட்டிய -இழி குணங்களைக் கடந்த ஆதி மூலப் பெருமாளாகிய
அந்த ஸ்ரீ மன் நாராயணன் பக்கலிலே -பலரும் செல்லுமாறு —
தமது திவ்ய பிரபந்தம் மூலமாக பலருக்கும் ஆதரத்தை உண்டாக்கி அருளிய
ஞானத்து எம் மூர்த்தியையே–தத்வ ஞான பரி பூர்னரான ஆழ்வாரையையே
குருகூர் புக்குக் கைக் கொண்மினோ -கால விளம்பம் இன்றி -பழுதே பல பகலும் போக்காது –
திருக்குருகூர் சென்று சரண் புக்கு உஜ்ஜீவியுங்கோள்
ஞானத்தை மூட்டிய ஆழ்வார் என்றுமாம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: