ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –மூன்றாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் – –

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும் சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய்ஞ்ஞான வேதியனை –
யதாபூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத்கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் –
துயக்காவது மனம் திரிபு–சம்சய விபர்யய ரஹிதமாக சாஷாத் கரித்து –
அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,
உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

——————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை –
‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களை யுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக்குறைவு உண்டு அன்றோ?
அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,
பிரகாரரான இவரும் தரித்து,
இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,

அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

செயிர் இல் சொல் இசை மாலை –
குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை;
ஈண்டுக் குற்றமாவது, சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்;
அது இல்லாத மாலை எனவே, பகவல் லாபம் ஒழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச் சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி.
‘எங்கு இனித் தலைப் பெய்வனே’ என்ற உக்திக்கு -வார்த்தைக்கு நினைவு தப்பியிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?
‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில்

உயிரின் மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் –
ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

——————–

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்க வல்லவர்கள்,
ஆழ்வார் பிரார்த்தித்த படியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட
அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –
கடின ஸ்தலத்தில் பூவைப் பரப்பினால் போலே ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
காடும் மலையுமான பூமியை அநாயாசேந அளந்து கொண்ட சர்வேஸ்வரனை யாயிற்று கவி பாடிற்று

ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்?
மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,

’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும்,
‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்வர்கள்;

அன்றியும்,
எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும்
திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லக் கடவது இறே

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி
வளர்ந்த பொழிலை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த. ‘

கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் –
கேழ்-என்று ஒப்பாய் -ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்.
இப் பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு அனுரூபமான கைங்கரியத்தை
மனோ ரதித்த பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை.

ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் –
‘இளைய பெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படை வீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாக
அன்றிக்கே –
கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.

இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி,
கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி ஏத்துவார்களே அன்றோ?

அங்ஙனன்றி,
இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று
பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.

‘விசேஞ்ஞர்கள் ஏத்துதலே யன்றி,
அவர்களில் சிலர் நெஞ்சிலே த்வேஷமும் கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் நித்ய கைங்கரியத்தைப் பெற்று,
அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-

கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை –
‘கிண்ணகத்திலே இழிவாரைப் போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற
ஸ்ரமஹரமான -சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், ஸ்ரமஹரமான சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை.

இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும்,
தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிற படியைக் கண்டு
அருளிச் செய்தமை தோற்ற ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல்போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன –
பர்யந்தங்களிலே -பக்கங்களிலே அலர்ந்த சோலையையுடைய திருநகரிக்கு-நிர்வாஹகராய் – உரியவராய் –
பரம உதாரரான – ஆழ்வார் அருளிச் செய்த.

பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
புஷ்பம் -மலர்கள் பரிமளத்தோடே -மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும்
வைத்துக் கொண்டு இப் பத்தையும்-அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.

வீடு இல போகம் எய்தி –
விச்சேத சங்கை -பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.

அமரர் மொய்த்து விரும்புவர் –
அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை-ததீயத்வ ஆகாரத்தாலே – அநுசந்திப்பார் நித்ய ஸூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம் பிறந்து அநுசந்திப்பதே!’
என்று ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே,
அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்தியஸூரிகள் ஆதலின்,
‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

———

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி கற்றார், பகவத் குண அநுசந்தானம் பண்ணினால்,-
அவிக்ருதராய் – விகாரம் இல்லாதவராய் -இருக்கைக்கு அடியான மஹா பாவத்தை
இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்,’ என்கிறார்.

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல –
‘பிராப்யப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;

அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகை யாவது,
அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,
க்ரியதாம் இதி மாம் வத-
‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே,
அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது.

ஆர்ந்த புகழ் அச்சுதனை –
குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
‘தன்னை -ஆஸ்ரயித்தாரை-அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.

அமரர் பிரானை எம்மானை –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்ய ஸூரிகளைக் கொள்ளும்
அடிமையைத் தன் பக்கல் -ஆசாலேசமும் -ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை.
இதனால், அடியார்களை நழுவ விடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே,
தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.

வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும்-அனுசந்திக்கையும் –
அவ்வனுசந்தானம் -அச்சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற
இவ்வளவேயன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் -அவிக்ருதராய் -விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும்,-
விக்ருதராய் – உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி
அவ்விஷயத்திலே-அவகாஹித்துச் மூழ்கிச்சொன்ன. வாய்கை – கிட்டுகை.

வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து.
தண்-குளிர்த்தி –
நேர்ந்த -சொன்ன என்றபடி –
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராய்க் கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.

அருவினை நீறு செய்யும் –
பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய்
இருக்கைக்கு அடியான மஹா பாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் அப்யஸிக்கவே பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வள நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் –
காணப் பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார்.
கண்களாற்காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி
நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்

இவர்க்குப் பிரிவாவது,-விஸ்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே – புறக் கண்களால் காண வேண்டும்
என்னும் நசையாலே- மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம்.
சம்ச்லேஷம் -கலவியாவது -ப்ரத்யக்ஷ சமானாகாரமான -புறக் கண்களால் நேரே காண்டலைப் போன்று-
ஞான சாஷாத்காரம் – உட் கண்ணால் காண்டல்.

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்ய ஸூரிகளுக்கு-அனுபாவ்யனானால்- அனுபவிக்கத் தக்கவன் ஆனால் போலே, சம்சாரிகள் என்று
வாசி வையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸூலபன் ஆனவனை.

பண்கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை;
முக் கோட்டை போலே காணும் சோலை இருப்பது.

வழுதி நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் –
திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த.

பண் கொள் ஆயிரம் –
வண்டுகளின் நினைவு இன்றியே அவற்றின் மிடற்றோசை பண் ஆனால் போன்று,
பகவானுடைய குணங்களை அனுபவித்த அனுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி.

இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமின்
எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்குப் பகவானிடத்தில் பத்தி;
இத் திருவாய் மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும்

பத்தராகக் கூடும் பயிலுமின்
பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,
சாஸ்திர ஞானமாதல்,
சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல்,
பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -பகவத் கடாக்ஷம் –
இவை யனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி
உண்டாகக் கூடும் என்பார், பத்தராகக் கூடும் பயிலுமின் . ’ என்கிறார்.

அவாப்த ஸமஸ்த காமனான ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி,
‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள் தோறும் புக்கு விட மாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விட மாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’
என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.

‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன,
அவ் விடத்தைத் தோண்டுவார்களே -கல்லுவர்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள்-அப்யசிப்பார்கள் – என்று அருளிச் செய்கிறார்.

————-

நிகமத்தில் ‘பாகவத சேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள்,
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’ என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய –
பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப் படுத்தியும், சூதிலே தோற்பித்தும்,
வன வாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே நிறைந்து -பல்கி –
ராஜ்யத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.

அன்று –
அவர்களாலே-நிரஸ்தரான – தள்ளப்பட்ட அன்று.

ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்கும் காணும் ஐவர்க்கு அருள் செய்கை.
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார்.

நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும்,
நாதிஸ் வஸ்த்தமநா ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே,
அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென் குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார்-பாகவத சேஷத்வ பர்யந்தமான – பாகவதர்களுக்கு அடிமைப் பட்டிருக்கும் அடிமையை எல்லையாக வுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேஸ்வரனுக்கு.

அடி ஆர்ந்த ஆயிரத்துள் –
இருக்கு வேதம் போலவும்,
பாத பத் ஸ்தோ அக்ஷர சம ‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற
ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள்-பூரணமான – நிறைவுற்ற ஆயிரம்.

அவன் தொண்டர் மேல் முடிவு இவை பத்து –
இதில் சர்வேஸ்வரனைச் சொன்ன இடங்கள் உப சர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை.

ஆரக்கற்கில் –
நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.

சன்மம் செய்யாமை முடியும் –
ததீய சேஷத்வ -அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல்-ஜென்ம அந்வயம் – அறும்.

————

நிகமத்தில் இத்திருவாய் மொழியில் -சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே
அனுபவிக்கலான -பரம பதத்தைச் செல்லப் பெறுவர் என்கிறார் –
( சொன்னாலே -–ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –)

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

புலம்பு சீர்ப்
இவர் புகழுமா போலே லோகம் அடைய புகழும்படி யாயிற்று அவன் குணங்கள் –

பூமி யளந்த பெருமானை
பூமியை அளந்து –அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வாதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்த்த –
சர்வ ஸ்வாமியை யாயிற்று இவர் கவி பாடிற்று –

நலங்கொள் சீர்-நன் குருகூர்ச் சடகோபன் சொல்
கரணங்களும் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தியை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு-
இவை எல்லாவற்றின் விருத்தியையும் தாம் ஆசைப்பட்டு-
இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் ஆகிற நன்மையையுடைய ஞானாதி குண விசிஷ்டராய்-
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்

வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
பிரதிபாத்யத்தை விளாக்குலை கொண்ட -என்னுதல்
ப்ரதிபாதந சாமர்த்யத்தை உடைய என்னுதல் -அத்விதீயமான இப்பத்து

இலங்குவான் யாவரும் ஏறுவர் இப் பத்தைச் சொன்னாலே-
இன்னார் இனையார் இல்லாத
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை யுடைய பரம பதத்தை பிராபிக்கப் பெறுவார்
ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து
அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசத்திலே பெறப் பெறுவர் – என்றபடி –

————-

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு –
தகுதியான மிக்க புகழை யுடையவனாய், நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய்,
அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷயத்வே- மனிதத் தன்மையிலே பரத்வத்தையுடையவன் தனக்கு.
மனுஷ்யத்வே ‘மனிதத் தன்மையில் பரத்வம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனுஷ்யத்வே- மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ?

ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும்படி யிருக்கிற ஆழ்வார் அருளிச் செய்த.

ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே -அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான
பரம் பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.

ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்-
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும் புகழை யுடைத்து. என்றது,
‘இவ்வாத்மாவினுடைய சொரூபத்துக்குச் அநனுரூபமாக -சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியாக -ப்ராப்தமான -அனுரூபமாக -அடையத் தக்க பரம் பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும்
சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.

சன்மம் இல்லை –
நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும் படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

———

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,
மேலே பரமபதத்திலே சென்றால்
தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

குரு கூர்ச் சடகோபன் சொன்ன –
ரகுவீர சரிதம் முனி ப்ரணீதம்
‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ் வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட.

பாடல் ஓர் ஆயிரம் –
பாட்யே கேயேச மதுரம் ‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே,
இசையோடே சேர்ந்த -யாயிற்றுப் பிறந்தது

ஆயிரத்துள். இவையும் ஒரு பத்தும் –
முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.

பயிற்ற வல்லார்கட்கு –
சொல்ல வல்லார்க்கு -பயிற்ற என்பதை -பயில என்று கொண்டு -அப்யஸிக்க கற்க வல்லவர்கட்கு.
‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று அந்வயம்

நாடு –
த்ரவ்ய -பொருளின் விசேஷத்தை அறியாத சாதாரண மக்கள். -அவிசேஷஞ்ஞர்

நகரம் –
த்ரவ்ய பொருளின் விசேஷம் அறிந்திருக்கும் பெரியோர்கள். -விசேஷஞ்ஞர்

நன்கு உடன் காண –
நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.

நலன் இடை ஊர்தி பண்ணி –
நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையாவது, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.

வீடும் பெறுத்தி –
பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.

தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் –
தன்னதான த்ரிவித -மூன்று விதமான-ஆத்ம வர்க்கத்துக்கும் – உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான்-
அத்விதீய – ஒப்பு அற்ற தலைவன்-நாயகன் – ஆம்படி பண்ணிக் கொடுக்கும்.

ஆயின், சர்வேஸ்வரனைப் போன்றவனோ இவனும்?’ எனின்,
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது,
இவனுக்கு ஐஸ்வர்யம் கொடா நிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அந்தர் பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: