ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -61-70–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்கா நின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
ஈஸி ஈஸித்வய -நியமனத்துக்கு உட்பட்ட -சம்பந்தம் உண்டே
மண் அளந்த அந்நாள்–தனது உடைமையான உலகளந்த அக் காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி-ஓன்று சேர்ந்து –
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
ஈஸ்வரனான முறையாலே திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளிலே

மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தேவர்கள் வேதம் சொன்ன முறையாலே திரு உலகு அளந்து அருளின திருவடிகளிலே

முறை முறையின் –
முறை முறையாக -வரிசை யடைவே

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
உஜ்ஜ்வலமான புஷ்பங்கள் தெளித்தால் போலே யன்றோ
ஒத்த விசும்பின் மேல் கிடக்கிற நக்ஷத்திரங்கள் இருக்கிறது
(விசும்பு -விஷ்ணு பதம் ஆகாயம் இடம் திருவடி மூன்றுமே பதார்த்தம் )

இறை முறையான் சேவடி மேல்
வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி
முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்
என்று அந்வயம் –

—————

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் கம்பில்–நக்ஷத்திரங்களாகிற கம்புகளை யுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்திரனாகிற வெள்ளிக் குழையை யுடையதும்
நக்ஷத்ர பதி சந்திரனும் வெள்ளி சுக்ரனும் -இவர்கள் தலைவர்கள்
இவர்களுக்கு அடங்கி தானே நக்ஷத்திரங்கள்
குழை -வளைந்த கம்பி போல் குடையைத் தங்கி இருக்குமே
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
முதலில் படைக்கப்பட்டு இறுதியில் அழிக்கப் படுவதே தானே ஆகாசம்
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான்குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான்
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்
உடு பதி என்னுமா போலே
நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான
நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு
நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து
பூமியை அளந்தான்
(நக்ஷத்ராணாம் அஹம் சசி -கீதை )

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

மண் அளந்த அபதானத்துக்குக் குடையும் காம்புமாக்கி நிரூபிக்கிறார்
வெறி -சந்திரன் -தாராபதி
வெள்ளி -சுக்ரன்
வேய் என்று குடையில் அடியிலே இருக்கிற மூங்கில் குழல்

———————

(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல் கொண்டல்–பின்பற்றித் தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காள மேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–வீர வெற்றி லஷ்மி கொண்ட அழகிய சிவந்த சக்கரத்தை யுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செவியும்–பருத்த காதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின்னே துரக்கிற காற்றை இழந்த சூல் கொண்டல்
திரியட்டும் கடலிலே புக்குக் கிடந்த வாய்மையன் -மெய்யான ஒப்பாய் உடையன் என்று

வாய்மைத்து என்றத்தை
வாய்மையின் என்று வசனத்தை மாறாடிக் கொள்ளவுமாம்

வசனத்தை மாறாடுகை –
வாய்மைத்து என்ற நபும்சகத்தை
வாய்மையன் என்று புல்லிங்க மாக்குகை

படி என்று ஸ்வ பாவமாய்
அத்யா ஹார்ய பக்ஷத்தில் லிஙகவ்யத்யயம் வேண்டா –

பருச்செவியுமீர்ந்த பரன் படி என்று அத்யா ஹரித்துக் கொள்ளவுமாம்

ஒன்றுக்கு வசந வ்யத்யயம் பண்ண வேணும்

ஒன்றுக்குப் படி என்று அத்யாஹரிக்க வேணும்

இரண்டு மிறுக்கும் ஒழிய
உபமான உபமேயங்களை மாறாடாதே
நேரே யோஜிக்கப் போம் என்று நம் ஜீயருக்கு (நம்பிள்ளை )விண்ணப்பம் செய்தபடி

பின் திறக்கும் காற்று இழந்து சூல் கொண்டல்
பெருமாள் ராவண விஜயம் பண்ணி
திரியட்டும் திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தால் போலே இருந்தது

(லக்ஷணையால் ராவண வதம் பர்யந்தம் கொள்ள வேண்டும்
தேவ பிரார்த்தனை முடித்த பின்பே திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தார் )

மேகத்தின் ஸ்வபாவம் போலே இருக்கிற பெருமாள் படி என்றால் மிறுக்கு உண்டு
பெருமாளுடைய ஸ்வபாவம் போலே இருக்கிற மேகத்தின் படி என்றால் மிறுக்கு இல்லை என்று கருத்து

மேகமானது
ராவண வதம் பண்ணித் திருப்பாற் கடலிலே அளைந்த வாய்மைத்து -ஸ்வபாவத்தை
யுடைத்து என்று பலிதம் –

—————

(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்த ஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன
இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;)
ஸாக்ஷாத் பரம புருஷரே யாவர்’ என்கிற விஷயத்தை
உரனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களே யானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்று சேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரன்
மனுஷ்யத்வே பரத்வத்தை அனுசந்தித்தார் ஆகில்
பரம பதம் என்று வேறே ஆஸ்ரயணீய ஸ்தலம் வேணுமோ என்கிறது

உரன் என்று உரஸ்ஸாய் –
அத்தாலே நெஞ்சைச் சொல்லுகிறது

பரன் இத்யாதி
மனஸ்ஸாலே மூன்று போது அவன் பரன் என்று அனுசந்திப்பராகில்
ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணினவனையே
அபிமானிகளான தேவர்களுடைய கையும் கலந்து தொழும் இறே
அபிமானத்தாலே தங்களோடு ஸஜாதீயனாக புத்தி பண்ணி அநர்த்தப் படுகிறார்கள் இறே

பாவிப்பாராகில் -என்கையாலே
அனுசந்தித்தால் தொழுவர்கள்
அநுஸந்தியாமையாலே தொழார்கள் என்றபடி –

———————–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய் மனமே!
கலந்து-நம்மோடு கூடவே யிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக் குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வ காலமும்
சூட்டு–ஸமர்ப்பி.

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

ஸ்ரீ ஸூக்தி -சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –

(வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை
அவனோ பராத்பரன்
நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு
நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால்
வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே )

—————

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூ தர்சன அம்சம் தானே )

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியை யுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப் படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறி கொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத் துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன் உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு ராவணன் கும்ப கர்ணன் சிசுபாலன் தந்தவக்கரன் -தொன்மையான அரக்கன்
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறி கண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்ல வொண்ணாத அப்படிப்பட்ட இவ் விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
(ராஜ வித்யை ராஜ குஹ்யம் போல் இங்கும் )

சூட்டாய நேமியான்
விரோதி நிரசனம் பண்ணுகை அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவன்

தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை –
ராவணன் பேணிப் போந்த உயிரை
அருகே ஸ்ம்ருதி விஷயமாய் நின்று முடித்த
ஆச்சர்ய பூதனை
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர (விவ்யதே -நினைந்து இருந்து நடுங்கிக் கொண்டே இருந்தானே )
ஆண்ட படை எல்லாம் பெருமாள் என்று எழுத்து வெட்டின திருச் சரங்களை நினைத்துக் கிடந்தது
குலைக்கும் போது அவிகைக்கு உடலானது அத்தனை

(ராம பெயரைக் கண்ணுற்றானே வாலியும் பாணத்தில் )

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்
வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை
நெஞ்சே
அறி கண்டாய்
சொன்னேன் உனக்கு அத்தை

1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்
2-போக்யனுமாய்
3-வகுத்தவனுமானவனை
அறி என்று சொன்னேன்
இது சிலருக்குச் சொல்லுமது அன்று
இத்தைப் புத்தி பண்ணு

———————-

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மட நெஞ்சே–அறிவு கெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக் கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக் கடவாய்.

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர் பொருள் இல்லை
கண் கண்டது ஒழியப் போகை அரிது
இது பொல்லாது என்று -பரம பதம் வேணும் என்று இருக்கில்
அவன் உகப்பதாகையாலே அது தருகையில் அவனுக்குப் பொருள் இல்லை

(கண் காண முடியாத வானவர் நாடு -இதுவோ கண்ணால் காணலாம்
இது -சம்சாரம் பொல்லாது என்று எண்ணி
அவனோ உன் அடியார்க்கு என் செய்வோம் என்றே இருப்பவன் )

அன்றே அது ஒழிந்து மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும்
அது ஒழிய
பூமியை ஆள்வோம் என்று நினைக்கும் அதுவும் தரும்

மட நெஞ்சே
பவ்யமான நெஞ்சே

அவனுக்கு அது தருகையில் குறை இல்லை
நம்முடைய ஆபி முக்யம் அரிது
ஆசைப்பட்டு போகை அரிது
காணானதை ஆசைப் பட்டாலும் தரும் என்றபடி

அது என்கையாலே
அதுக்குப் பிரதி கோடியாய் இது ஸம்ஸாரம்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்
ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்
அவன் உபய விபூதியும் தந்தாலும்
நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப்
போது போக்குவதையே கல் என்றபடி –

(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே –
இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )

————-

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரிய வராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிக வுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ண பிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தை விட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கட மலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
புல் மண்டி -புல்லிய -தாழ்ந்த என்றும்
ஏ பாவம்–ஐயோ பாவம்!பாபம் வர ப்ரசக்தியே இல்லையே என்ன வியப்பு என்றவாறு

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்
திருமலையை கல் என்றும்
திரு அனந்தாழ்வானை பாம்பு (நாச்சியார் -10-3)என்றும்
தன்னை மாணியாய் மண் அளந்தாய் என்றும்
சொல்லலாம் படி உறவுடைமை இருக்கிறபடி

(வெற்பு என்று வேங்கடம் பாடினேன் என்பார்களே
அடே போடா வா என்னலாமே நெருக்கமாக இருப்பவரை )

திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்
அளவாகவுமாம்
இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்

அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் –
என்னோடே கலந்த பின்பு

ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில்
தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க
என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு
வேறே ஒரு குறையில்லை என்று
சொன்னால் போலே
இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்

புல் என்று
புல்லியதாய் -குறையாக நினைத்து என்றபடி

ஏ பாவம்
பாபத்தினுடைய பிராசர்யத்தைச் சொல்லுகிறது
வி லஷிதார்த்தமாக ஒரு ஸப்தத்தைப் பிரயோகியாமையாலே
(பாபம் சப்தம் சேராதே -ஹந்த- வியப்பு என்றபடி )

வெல்ல நெடியான்
கடக்க நெடியான்
இனி நெடியான் இல்லை என்னும்படி நெடியவன்

வெல்ல –
ஜெயிக்க எண்ணுதல் –
மிகவும் என்னுதல்

நிறம் கரியான்
குணங்கள் இல்லை என்னிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்
புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்

(நீங்கினால் தாரகம் இல்லை என்று இருப்பவன்
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்
நாராயனோ வசதி சங்கு சக்ர )

—————–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்த -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல் வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடி யிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையு டையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றன வல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி
முதலியாராய் வர்த்தித்த நம் பாபத்தினார்
கோபத்தினால் சிவந்த கண்ணை யுடையராய்
செருக்கராய்த் திரிந்த நாம் இப்படி படுவதோ என்று முக்கி முகம் கீழ்ப்பட்டு
இழப்புண்டு சிதைந்த முகமுமாய்த் திரியும் அத்தனை இறே

மிகும் திரு மால் சீர்க் கடலை யுள் பொதிந்த
குணா நாமா கரோ மஹான் -என்று
அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன்
(கிஷ்கிந்தா தாரை வார்த்தை குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் என்கிறாள்
உள் பொதிந்த என்கையாலே பரிச் சின்னம் ஆக்கினேன் என்கிறது )

சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
இனி என்னைப் பரிச்சின்னர்க்குப் புகுந்து நலியப் போமோ

(செவ்வே அடர்த்து ஆர்க்கு அடலாம் –
என்னை ஒருத்தருக்கும் அடர்க்கப் போகாது என்றபடி )

————

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

பதவுரை

அடர் பொன் முடியானை–அடர்ந்த பொன் மயமான திருவபிஷேகத்தை யுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ர நாமங்களால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களை யெல்லாம் வென்று விளங்குகின்ற
திருவாழியை யுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்க வல்ல தாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனி மேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
தர்சநீயமாய்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை யுடையவனை
இவ் வழகுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவனை

(ஸ்வரூப ப்ரதிபாத்யமான திரு நாமங்களை விட ரூப
அழகுக்கு ப்ரதிபாத்யமான திரு நாமங்கள் ஆழ்வாருக்கு உகந்தது
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று –
ஸுலப்ய ஸ்ரீ யாபதித்தவம் பரத்வம் ஒவ் வொன்றுக்கும் சஹஸ்ர நாமங்கள் உண்டே )

அடர் –
எல்லாரையும் அடர்க்கிற முடி என்றபடி

சுடர் கொள் சுடர் ஆழியானை
விரோதி நிரசனத்துக்கு அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவனை

இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே யினி
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார்
இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்

யாதாகில் யாதேயினி
இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என்
பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: