ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-9–என் நாதன் தேவிக்கு–

கீழில் திருமொழியில் (3-8 )
கிருஷ்ணாவதாரத்தைப் பல இடங்களிலும் ப்ரஸ்துதமாக்கி
ஆச்சார்ய பரதந்த்ரன் ஈஸ்வரனைப் பற்றிப் போன பிரகாரங்களை அனுசந்தித்தார் –

போன சேதனன்
மேன்மையும் நீர்மையும் தோற்றின அவதார அபதான விசேஷ குணங்களையும்
நீர்மையே விஞ்சித் தோற்றின ராமாவதார விசேஷ குணங்களையும்
தன்னையும் இரண்டு வகையாக்கி அனுசந்தித்த பிரகாரத்தைத்

திருவாய்ப் பாடியில் உள்ள பெண்கள்
இரண்டு வகையாய் இரண்டு அவதாரத்தையும் புகழ்ந்து உரைத்து
விளையாடி
உந்தி பரந்த பாசுரத்தாலே அனுசந்தித்து
மங்களா ஸாசனத்தோடே சேர்த்துப் ப்ரீதர் ஆகிறார் –

இரண்டு வகையான குணங்களும் மங்களா வஹம் இறே
சேதனனுக்கு ஏக காலத்தில் இரண்டு சரீரமாகை கூடுமோ என்னில்
தேச விசேஷத்தில் அநேகதா பவதி -என்று நடவா நின்றது இறே
விண்ணுளாரிலும் சீரியர் என்று இங்குள்ளாரையும் ஸ்லாகியா நின்றால் எது தான் கூடாது

திருச் சாழலிலே( 11-5 ) இரண்டு பிராட்டிமார் அவஸ்தை
ஏக காலத்தில் கூடுமோ என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே
அநேகதா பவதி கண்டீரே -என்று அருளிச் செய்தார் என்று
ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –

—————–

ஒரு வகையில் உள்ளார் எல்லாரும் கிருஷ்ண அவதாரத்தில்
அவகாஹித்த பிரகாரத்தைச் சொல்லுகிறது –

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9-1-

பதவுரை

என் நாதன்–எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய
தேவிக்கு–தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இன்பம் பூ–மனோ ஹரமான கற்பகப் பூவை
அன்று–(அவன் விரும்பின) அக் காலத்தில்
ஈயாதாள் தன்–கொடாத இந்திராணியினுடைய
நாதன்–கணவனான தேவேந்திரன்
காணவே–கண்டு கொண்டு நிற்கும் போதே
தண் பூ மரத்தினை–குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை
வல் நாதம் புள்ளால்–வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே
வலிய–பலாத்காரமாக
பறித்து–பிடுங்கிக் கொண்டு வந்து
இட்ட–(அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின
என் நாதன்–என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய
வன்மையை–வலிவை
பாடி–பாடிக் கொண்டு
பற–உந்திப்பற;
எம் பிரான் வன்மையை பாடிப் பற–

என் நாதன் தேவிக்கு
பிராட்டிமாருடன் உண்டான சம பாவத்தாலும்
மிதுனச் சேர்த்தி ப்ராதான்யத்தாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்னுமா போலே
என் நாதன் -என்று
அவன் தனக்கு சேதன விசேஷண நிரூபகமான பின்பு இறே
நாதன் தேவிக்கு -என்றது

(பிரணவம் போல்-அகாரத்துக்கே மகாரம் – நாதனுக்கு அடியேன் என்னாமல் –
என் என்று முன்னே சொல்லி
அவனுக்கு சேதனன் சேஷபூதன் என்று நிரூபகம் என்கிறார் )

உன் திரு (மார்பத்து மாலை நங்கை -10-10-நாதன் தேவி )என்னுமா போலே
ஆகிய அன்பே -என்று
ஆஸ்ரயம் தோற்றியும் தோற்றாததுமாய் இரா நின்றது இறே

(கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
அன்பன் -என்றால் அன்பு வேறே அன்பு உடையவன் வேறே
என்றாகும் அன்பே வடிவாக உடையவன் என்று காட்ட வேண்டுமே )

அன்று
அவளுக்கு அபேஷா நிரபேஷமாக
ஓரு மஹா நிதி கைப்பட்ட அன்று

இன்பப் பூ ஈயாதாள்
போக்யமான பூ வர
அத்தைக் கண்டு நாய்ச்சியார் அபேக்ஷிக்கவும் பெற்று வைத்து
நிர் பாக்யை யாகையாலே நிரார்த்தமாக சில ஹேதுக்களைச் சொல்லி ஈயாதாள்
தானே அபேக்ஷித்துச் சாத்த ப்ராப்தமாய் இருக்க
அபேக்ஷிக்கவும் கொடாதாள்-

தன் நாதன் காணவே
இத்தை இறே அவள் தனக்குக் கனக்க
பலமாக நினைத்து இருக்கிறது

ஈயாதாள் தன் நாதன்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -என்றும்
உக்கமும் தட்டொளியும் –உன் மணாளனையும் தந்து என்றும்
அநிஷ்ட நிவ்ருத்தியும்
இஷ்ட பிராப்தியும்
பண்ணுமவள் அன்றே
இவளுக்குத் தகுதியாக இறே அவனும் இருப்பது –

ஸ்ரீ யபதி -என்றால் போலே இறே
இவளை யுடையோம் என்று அவள் நினைத்து இருப்பது கர்ம பாவனையில்
ஆகை இறே தன் நாதன் என்றது
நான் இந்திரன் அல்லேனோ
நான் ஸூரி நாயகன் அல்லேனோ என்று இறே அவன் நினைத்து இருப்பது

காணவே
அவன் கண்டு கொண்டு நிற்கவே

தண் பூ மரத்தினை
குளிர்ந்து பரிமிளிதமாய் இருக்கிற பூவை யுடைத்தாய்
கல்பக தரு என்று பிரஸித்தமாய் இருக்கிற வ்ருக்ஷத்தை

வன்னாத புள்ளால்
நாதப் பிரதான வேத மயனாய் இருக்கிற பெரிய திருவடியாலே
நாதத்துக்கு வலிமையானது
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாமை

வலியப் பறித்திட்ட
அவன் தன்னை அபேக்ஷித்துத் தரக் கொள்ளுகையும் இன்றிக்கே
அவன் அபேக்ஷித்துத் தரக் கொள்ளுகையும் இன்றிக்கே
அவனுடைய அசந்நிதியிலே பிடுங்குகையும் இன்றிக்கே
அவன் தான் பார்த்து நின்று
வஜ்ரத்தை வாங்கி விலக்கா நிற்கச் செய்தே
பிடுங்கிக் கொண்டு போர
பின்னையும் தொடர்ந்து வாங்குவானாக வந்தான் இறே
முன்பு போர ஆதரித்தவன்

இத்தால்
உபய பாவநா நிஷ்டருக்குப் பிறந்த பகவத் ப்ராவண்யத்தால் வந்த அறிவும் ஆஸ்திக்யமும்
நிலை நில்லாதது என்னும் அளவும் இன்றிக்கே
அபிமத ஸித்திக்கு ஹேதுவான ராக த்வேஷங்கள் க்ரியா பர்யந்தமானாலும் ஜீவிக்கை யாகாமல்
வ்ரீளை யோடே தலைக் கட்டும் என்று தோற்றுகிறது
இது தான் இவன் அளவே அன்றிக்கே
கர்ம பாவனையில் எல்லார் அளவிலும் சுருக்கம் ஒழியக் காணலாம் இறே

என் நாதன் வன்மையை பாடிப் பற
அவனுடைய ஆஸ்ரித பஷபாதத்துக்குத் தோற்று
என் நாதன் -என்கிறாள்

அவனுக்கு வன்மையாவது
ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலையானால்
ஸ்வ சங்கல்ப பரதந்திரரையும்
ஸங்கல்பம் தன்னையும் பாரான் இறே

மயங்க வலம் புரி –இத்யாதி
இங்கு ஸ்வ சங்கல்ப பரதந்திரர் என்றது
காம்ய தர்ம பரதந்த்ரரான புண்ய தர்மாக்களை
ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யம் அவன் தனக்கும் உண்டு இறே

சங்கல்பம் ஆவது
அகரணே ப்ரத்யவாய பரிஹாரம் இறே
நியாய ஹானி உண்டானால் நிரங்குச ஸ்வா தந்தர்யம் இவற்றைப் பாராது இறே
இவ் வன்மை யுள்ளது இவன் ஒருத்தனுக்குமே இறே
(பீஷ்மர் திரௌபதி பரிபவம் கண்டும் -நியாய ஹானி உண்டாக இருந்தும்
தனது சங்கல்பத்தால் கட்டுண்டு இருந்தாரே
இவனோ தனது வாக்கு பொய்த்துப் போனாலும் நியாய ஹானி பொறுக்காமல் கார்யம் செய்வான் அன்றோ )

எம் பிரான் வன்மையை பாடிப் பற
இவ் வன்மை மங்களா வஹமாகையாலே
எம் பிரான் என்கிறார்

பற -என்றது
லீலா ரஸ விசேஷ வியாபாரமாய்
ஒருவரை ஒருவர் மிகுத்துச் சொன்னதாய்த் தலைக் கட்டுகிறது –

———-

இப்படி மங்களா ஸாஸன பரர்க்கும்
ஜனகராஜன் திரு மகளுக்கும் உதவினதாய் இருக்கிறது –

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –

பதவுரை

என் வில் வலி கண்டு போ என்று–‘என்னுடைய வில்லின் வலியைக் கண்டு போ’ என்று சொல்லிக் கொண்டு
எதிர் வந்தான் தன்–எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு–வில்லையும்
தவத்தையும்–தபஸ்ஸையும்
எதிர்–அவன் கண்ணெதிரில்
வாங்கி–அழித்தருளினவனும்
முன்–இதற்கு முன்னே
வில் வலித்து–வில்லை வளைத்து
முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடகையினுடைய
உயிர்–உயிரை
உண்டான் தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய
வில்லின்–வில்லினது
வன்மையை–வலிவை பாடிப் பற
தாசரதி–சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை–ஸ்வபாவத்தை பாடிப் பற–

என் வில் வலி கொண்டு போ என்று எதிர் வந்தான்
பெருமாள் திரு மணம் புரிந்து (புணைந்து) மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஒரு சொத்தை வில்லை வளைத்தாய் -முரித்தாய் -என்றால் போல் சொல்லுகிறது
இது ஓர் ஏற்றமோ -என்று சில வன்மைகளைச் சொல்லித்
தன் தப பலமாய் இருபத்தொரு ஆவேச சக்தி விசேஷத்தாலே
எடுத்த கார்யம் பலித்துப் போந்த கர்வத்தாலே எதிரே வந்து
என் வில் வலி கண்டு போனாயானால் நீ சமர்த்தன் -என்ற பரசுராமனுடைய

தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
இது ஒரு தபஸ்ஸை வியாஜமாக்கி பல பிரதானம் பண்ணின அவனை அறியாமை இறே
தன் வில் -என்ன வேண்டிற்று
தபஸ்ஸைத் தானும் இவன் தன்னது என்று நினைத்து இருக்கிறது
(கர்த்ருத்வ மமதா பல தியாகம் மூன்றும் இருக்க வேண்டுமே )

வாங்கும் போது
ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க
வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று
தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே

எதிர் வாங்கி
அவன் பார்த்து நிற்க வாங்கி
அவை தான் நியாயம் கண்டால் கொடுக்கவும்
நியாய ஹானி கண்டால் வாங்கவுமாய் இருக்கும் இறே அவனுக்கு –

(52 படிக்கட்டு கோமதி த்வாரகையில் -52 கோடி யாதவர்களைக் குடி வைத்து
அவர்கள் அனைவரையும் நியாய ஹானி கண்டு அழித்தார் அன்றோ -அதே போல் )

இது தான் வாங்கும் போது
தபஸ் பல போக ஆரம்ப மத்யம நிகமன (முக் ) காலங்களில்
அத்யுத்கடம் (நியாயம் மீறும் செயல்கள் )ப்ரவ்ருத்தமானால்
வாங்கலுமாய் இருக்கும் இறே

அதி மானுஷ சேஷ்டைகளிலே ஸ்ரத்தாளுக்களாய் (ஈடுபாடு கொண்டவர்களாய் )-
ஈஸ்வர சக்தி ஆவேச பல ஸா பேஷராய்த்
தபஸ்ஸூ பண்ணி
தபஸ் பலமான ஆவேசம் நீங்கினாலும்
ஸ்வயம் க்ருத கர்வத்தாலே தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேணும் என்னும் பீதியாலே
ஸ்வரூப ஆவேச ஸா பேஷனாய்
ஸ்வ விரோதி நிரசன சமநந்தர காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ கர்மம் உண்டானாலும்
தத் ப்ரவ்ருத்தி பாப பலம் அனுபவிக்கக் கடவன் அல்லேன் -என்று
இதுக்கு ஈடான துஷ்கர தபஸ்ஸைப் பூர்வ மேவ செய்கையாலே இறே
இவனை தசாவதார மத்யே பரிகணித்து

ராமோ ராமஸ் ச ராமஸ் ச -என்று
அவதார ரஹஸ்யத்தை விளக்குவிப்பதாக இறே
முன்னும் இராமனாய் பின்னும் இராமனாயத் தானாய் -என்றதும் –

சக்த்யாவேசத்துக்கும்
கார்ய காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ புத்தி உண்டானாலும்
கார்ய கால சமனந்தரம்
நாம் செய்த தபஸ்ஸை வ்யாஜமாக்கி ஈஸ்வரன் செய்தான் -என்னும் புத்தி உண்டாய்த்தாகில்
தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேண்டா இறே

கார்ய சமனந்தரமாக ஸ்வ கர்த்ருத்வ கர்வம் உண்டானாலும்
தத் பாப பலம் அனுபவிக்க வேண்டா என்று இறே
ஸ்வரூப ஆவேச தபஸ்ஸை செய்ததும் –
இதுக்கு (ஸ்வரூப ஆவேசத்துக்கு) வாசி சரீர அவசானத்து அளவும் (ஆவேசம் )நிற்கை –

ஆனால் மத்யே விக்நம் வருவான் என் என்னில் –
தானாய் என்று அசாதாரண விக்ரஹவானான சக்ரவர்த்தி திருமகனுடைய ப்ரவ்ருத்தியில்
அஸஹமானான் ஆகையாலே –
எல்லாத்தாலும் அசாதாரண சந்நிதியிலே ஆவேசம் குலையும் இறே –

(இதனால் தான் ஸ்வரூப ஆவேச பலம் பலராமன் இடம் இருந்தது
பரசுராமன் இடம் இல்லாமல் போனது )

இவ் வர்த்தம் உபதேசித்த ருத்ரனும்
(அத்ரி அநஸூயை -அவளுக்கு மூன்று குழந்தைகள் –
தத்தாத்ரேயர் விஷ்ணு அம்சம் -ருத்ரன் நான்முகன் அம்சம் இருவர் பிறந்தார்கள்
பரசுராமருக்கு ருத்ரன் உபதேசித்தார் என்பர் )
அசாதாரண ப்ரவ்ருத்தியில் அஸஹமாநத்வம் சொல்லித்திலன் இறே

சொன்னான் ஆகிலும்
அரன் அறிவானாம் -என்பார்கள் இறே (ஆழ்வார்கள் அநாதாரம் தோற்ற )
மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன் ஆகையாலே சொல்லவும் கூடும் இறே –

இவன் தானும்
எடுத்த கார்யம் இவ் விஷயத்தில் பலியாமையாலே இறே –
தொடுத்த அம்பை என் தபஸ்ஸிலே விடும் -என்றதும் –

இவன் தான் என் தபஸ்ஸை லஜ்ஜையாலே கர்ஹித்து
அதிலே அம்பை விடுவித்தவன் ஆகையாலே
இனி இதில் மூளான்

மூண்டானாகில் –
ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -என்கிற
ந்யாஸ ஸப்த வாஸ்யமான அசத்தி யோக தபஸ்ஸிலே மூளும் அத்தனை —

முன் வில் வலித்து
தவத்தை எதிர் வாங்கி -என்கிற இதுக்கு முன்னே என்னுதல்
திருமணம் புணர்வதற்கு முன்னே
இரண்டுமாம் இறே
மாத்ரு வசன வ்யாஜத்தாலே விரோதி நிரசன அர்த்தமான வனவாஸ ப்ராப்திக்கு முன்னே என்னுதல்
வில் எடுத்து முந்துற முன்னம் வில் வலி காட்டிற்று இவன் தன்னோடே இறே
(இது தானே கன்னிப் போர் பெருமாளுக்கு )

முது பெண் உயிர் உண்டான்
முதிர்ச்சியாவது
ராக்ஷஸ ஸ்த்ரீகள் அஸூர ஸ்த்ரீகள் போலே அன்றிக்கே
அஸூர ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே
மிகவும் யஜ்ஜாதிகளையும் ப்ராஹ்மணரையும் தபஸ்விகளையும் நலிந்து போருவாள் ஒருத்தி
இவளை ஸ்த்ரீ என்னலாமோ கடுகக் கொல்லீர் -என்ற விச்வாமித்ர வசன பரிபாலன அர்த்தமாக
முந்துற முன்னம் இந்த முது பெண்ணுயிரை நிரசித்தவன் –

தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
வில்லின் வன்மை உண்டானாலும்
ஐயர் மகன் என்னும் பிரதிபத்தி குலையாமையாலே
தாசரதி தன்மையைப் பாடிப் பற -என்கிறது

அந்யோன்யம் அவதார விசேஷங்களில் பிரதானமான இரண்டு அவதாரத்தையும் குறித்து
நியந்த்ரு நியாம்ய பாவம் உண்டாய்ச் சொல்லா நின்றது இறே

தன்மை
கல்யாண குணங்களுக்கு வாசகம் –

——————————

ஜனகராஜன் திரு மகளுக்குச் செய்த ஓரம் சொல்லிற்றுக் கீழ்
இங்கு ருக்மிணிப் பிராட்டிக்குச் செய்த உபகாரத்தைச் சொல்கிறது –

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 -3- –

பதவுரை

உருப்பிணி நங்கையை–ருக்மிணிப் பிராட்டியை
தேரின்–(தனது) தேரின் மேல்
ஏற்றிக் கொண்டு–ஏற்றிக் கொண்டு
விருப்புற்று–ஆசையுடனே
ஏக–(கண்ணன்) எழுந்தருளப்புக,
அங்கு–அவ்வளவில்
விரைந்து–மிக்க வேகங் கொண்டு
எதிர் வந்து–(போர் செய்வதாக) எதிர்தது
செருக்கு உற்றான்–கர்வப்பட்ட ருக்மனுடைய
வீரம் சிதைய–வீரத் தனம் கெடும் படியாக
தலையை–(அவனது) தலையை
சிரைத்திட்டான்–(அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய
வன்மையை–வலிவை பாடிப் பற
தேவகி சிங்கத்தை–தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை
பாடிப்பற–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக விரைந்து
சிசு பாலனுக்கு என்று கல்யாணம் செய்து காப்புக் கட்டின ருக்மிணி
சிசுபாலன் என்னை வந்து தீண்டும் போது என் பிராணன் போக வேண்டும் என்றும்
இல்லையாகில் கிருஷ்ணன் வந்து அங்கீ கரிக்க வேண்டும் -என்றும் தைவத்தை வேண்டிக் கொள்ள

ஸாஷாத் தைவ ஸப்த வாஸ்யனான தான் திரு உள்ளம் பற்றி அருளி
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
மடுத்தூதிய சங்கொலி செவிப்பட்டுத் தரிக்கும் படி தன் வரவை அறிவித்து
ராஜ சமூகமும் சிசுபாலனும் லஜ்ஜித்து தேஜோ ஹானி பிறக்கும்படி பெண் ஆளானாய்
அங்கு அவளை விருப்புற்றுப் பாணி கிரஹணம் செய்து தேரிலே எடுத்து வைத்து
பெரிய விரைச்சலோடே எழுந்து அருளா நிற்க

எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான்
எதிர் பொருது மீட்ப்பானாக விரைந்து வந்த ருக்ம ராஜன் மகனைக் கொல்லில்
நாய்ச்சியார் திரு உள்ளம் பிசகும் என்று
தேர்க்காலோடே கட்டிச் செருக்கு அழித்து இவனை நீக்கிக் கொண்டு போய்

வன்மையை பாடிப் பற
உக்த லக்ஷணம் தவறாமல் சிசுபாலனை நோக்கிச் செய்த சடங்குகளையும் விசேஷ்ய பர்யந்தமாக நினைப்பிட்டு
(விசேஷண விசேஷ்ய பாவம் -சிஸூபாலன் கண்ணன் அன்றோ -சரீர சரீரீ பாவம் உண்டே )
சிசுபால விசிஷ்டாய என்று பின்புள்ள சடங்குகளையும் தலைக் கட்டி
பெண்ணாளன் பேணுமூர் அரங்கமே -என்னும்படி பிரசித்தமான போக மண்டபம் ஏற்றி வைத்ததிலும்
(கோயிலிலே இன்றும் சேவை சாதிக்கிறார் அன்றோ)
பெண்ணாளன் ஆனதிலும்

செருக்குற்றான் வீரம் சிதைத்துத் தலையை அழித்த விரோதி நிரசனம் ஒன்றையுமே
எல்லாமாக நினைத்து
பாடிப்பற -என்று
ஜாதி அபிப்ராயத்தாலே மற்ற வகையை நியமித்துச் சொல்லுகிறது

தேவகி சிங்கத்தைப் பாடிப் பற
இவனைப் பெறாப் பேறு பெற்று வளர்த்த யசோதை இளம் சிங்கம் என்பதிலும்
பெற்று வர விட்ட தேவகி சிங்கம் என்கிறது
அடி யுடைமை தோற்றுகைக்காகவும்
மாத்ரு வசன பரிபாலனத்துக்காகவும் இறே –

———

மாத்ரு வசனத்தை வியாஜமாக்கிப் பிராட்டி நினைவின் படி
ஏகாந்த போக ஸித்திக்கும்
தேவ கார்யம் தலைக் கட்டுகைக்காகவும் போன
வன பிரவேசத்தை அனுசந்திக்கிறார்

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –

பதவுரை
மாற்று தாய்–தாயானவள்-தாய்க்கு ஒத்த சுமத்தரையார் -நாலூர் பிள்ளை நிர்வாகம் இது
மாறு-மற்றை – -ஒப்பு -சுமத்தரை – =மாற்று -வேறான கைகேயி
சென்று–சென்று.
வனம் போகே-வனமே போகு என்றிட–‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க
ஈற்றுத்தாய்–பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து–(தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்-“என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழ–என்று கதறி அழ
கூற்று தாய் சொல்ல–யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போன–கொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானை–சீற்றமற்ற இராம பிரானை
பாடிப் பற;
சீதை மணாளனை–ஸீதைக்கு வல்லபனானவனை
பாடிப் பற–

மாற்றுத் தாய்
ஸத்ருவான தாய் என்னுதல்
மற்றைத் தாய் என்னுதல்
சக்கரவர்த்திக்கு ஸ பத்ன்யத்தாலே ஸ்ரீ கோசாலையாருக்கு மாறான தாய் என்னுதல்
குப்ஜை தாசியாகையாலே வேறு பட்ட தாய் -மாறான தாய் என்னுதல்
ஸ்ரீ பரதாழ்வான் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலும் -மாற்றுத் தாய் என்னுதல்
மாறு -என்று சொல்லி -தாய் -என்று சொல்ல வேண்டுகிறது பெருமாள் நினைவாலே இறே

சென்று வனம் போகே என்றிட
வனமே சென்று போக என்று நியமிக்க –

ராஜ போகத்தில் நெஞ்சு வையாதே படைவீடு நீங்கும் அளவும் சென்று
வானமே போக வேணும் என்று நியமிக்க –
வா என்கிறாள் அன்றே
இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ என்கிறாள் அன்றே
அன்றிக்கே
வானம் போகவே நியமிக்க என்றுமாம் –

ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
பெற்று எடுத்த தாயாரான ஸ்ரீ கௌசலையார்
என் நாயந்தே -நான் ஏக புத்ரையாய் இருப்பவள் -உம்முடைய விஸ்லேஷ வியஸனம் பொறுக்க மாட்டேன்
நீர் போன இடத்தில் உமக்கு வரும் வியாஸந யாப்யுதங்களும் நான் அறிய மாட்டேன் –
பிதாவினுடைய நியந்த்ருத்வம் உமக்கு உபாதேயமானவோபாதி –
என்னுடைய நியந்த்ருத்வமும் உமக்கு உபா தேயமுமாய்க் காணும் இருப்பது –
அங்கன் அன்றியே மாதாவே சொன்னாள் -என்பீராகில்
நானும் மாதா வாகையாலே என் வசனமும் கேட்க வேணும் காணும்
அந்த நியாய நிஷ்டூரத்திலும் (விருத்தம் பொருந்தாமை )இந்த நியாயம் பிரபலமாய்க் காணும் இருப்பது –

அதில் நிஷ்டூரம் உண்டோ என்பீராகில்
ஸஹ தர்ம சாரிணிக்கு பர்த்ரு ஸூஸ் ரூஷணம் ஒழிய
வர பிரதானமாகக் கொள் கொடை சேருமோ –
ப்ரீதி தானமாகச் சேரும் என்னிலும் உனக்கு எனக்கு என்கை மிகை அன்றோ
பாணி கிரஹண வேளையில் ஏக மனாக்களாக அன்றோ பிராமாணிகரான வர்களுடைய கொள் கொடைகள்
பிராமண விருத்தமாயோ இருப்பது
பிதாக்கள் வானவம் (வனத்துக்குச் செல்லுகையை ) தாமும் முகம் பார்த்து நியமித்தமை தான் உண்டோ –
எல்லாப் பிரகாரத்தில் என் வார்த்தையும் கேட்க வேணும் காண் -என்ன

அவர் நியந்த்ருத்வத்தால் வந்த அனுமதியாக இருப்பதால் நீரும் ஏற்க வேணும் என்ன

உம்மால் வந்த ஆபத்து உம்மால் ஒழிய தீருமோ என்ன

ராமோ த்விர் நாபி பாஷதே -என்று
அந்த ப்ரதிஜ்ஜா சம காலத்திலே வருவேன் என்று நினைக்கவே தேறலாம் காணும் என்று
அருளிச் செய்கிற அளவிலே

கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
ஸ்ரீ ஸூமித்ரையார் சென்று
நான் தகைந்தாலும் இனி நில்லார்
வசிஷ்டாதிகளையும் மாதாவையும் விஞ்சிப் போகிறவர்க்கு ஒரு அபிப்ராயம் உண்டாய் அன்றோ இருப்பது -என்று அறிந்து
போகலாகாதோ என்று நியமித்த பின்பு

இன்னாப்போடே இவரும் (ஸ்ரீ கௌசல்யையார் ) நியமிக்கப் பெற்றோம் –
ப்ரீதியோடே அவர் (ஸ்ரீ கைகேயியார் )நியமிக்கப் பெற்றோம் –
மிக்க கிலேசத்தோடே இவரும் ஐயரும் அனுமதி செய்யப் பெற்றோமே யாகிலும்
இவர் (ஸ்ரீ ஸூமித்ரையார் )சொன்னது மிகவும் உத்தேச்யம் என்று இறே போவதாக ஒருப்பட்டது

கூற்றுத் தாய் சொல்ல
கூறுபட்ட ஹவிஸ்ஸை ஜீவிக்கையாலே கூற்றுத்தாய் என்னுதல் –
சக்கரவர்த்திக்கு மூவரும் ஸஹ தர்ம சாரிணிகள் ஆகையாலே அம்ச பாக்த்வத்தாலே கூற்றுத் தாய் என்னுதல்
ஸ்ரீ கௌஸல்யாரைப் போலே நிஷேதித்து அனுமதி பண்ணாமல்
அஹம் மமதைகளாலும் அந்நிய சேஷத்வத்தாலேயும் ஒருத்தி எனக்கு என்றது உமக்கென்றிய என்று
இவள் சொன்னதை மிகவும் திரு உள்ளம் பற்றுகை யாலே விஸ்லேஷ பீருக்கள் அபிப்ராயத்தாலே
கூற்றம் போன்ற தாய் என்னுதல்
சாஷாத் கூற்றம் அவளே இறே
ஸ்ருஷ்டத்வம் வனவாசாயா
அயோத்யாம் அடவீம் வித்தி -என்று இளைய பெருமாளையும் ஒருப்படுத்தார் இவரே இறே

கொடிய வனம் போன
பொருந்தார் கை வேல் நுதி போலே துன்னு வெயில் வறுத்த
நாட்டுக்கு அஞ்சி காட்டிலே புகுந்த மிருகங்களும் -க்ருத்ரிமரும் -ரிஷிகள் முதலான வன சாரிகளும்
துர்க த்ரய ஸா பேஷரும் விரும்பாத கான் விருப்பமாகச் செல்லுகிறது
எல்லாரும் விரும்பின தேசத்தில் கொடுமையாலே இறே

அவன் விரும்பிப் போன காட்டைக் கொடிய வனம் என்றதும்
அவன் கைவிட்ட தேசத்தை விரும்பியவர்கள் அபிப்ராயத்தாலே இறே

கலையும் கரியும் பரி மாவும் திரியும் கானம் இறே (சாளக்கிராமம் பதிகம் ) த்யாஜ்ய தயா ஞாதவ்யமானதும் –
திரு அயோத்யையிலே ஸ்வ இச்சா மாத்ரமே இறே உள்ளது –
த்யாஜ்யம் என்னாலாவது விதி நிஷேதமானது இறே
விதி நிஷேதம் இரண்டும் உண்டாயத்துக் காட்டுக்கே இறே
வென்றிச் செருக்களம் இறே உபா தேயமானது
(பெருமாள் வீர தீர பராக்ரமங்கள் காணலாய் இருப்பதால் உபாதேயம் அன்றோ )

அன்றிக்கே
மாற்றுத்தாய் தன்னையே
மாற்றுக் கூற்றுத் தாய் என்னுதல்
கூற்று மாற்றுத் தாய் என்னுதல்

அதாவது
கூற்றம் போல் இருக்கிற மாற்றுத் தாய் என்னுதல்
கூற்றத்தின் கொடுமையை மாற்றும்படியான கொடுமை யுடைய தாய் என்றபடி –

சீற்றம் இலாதானைப் பாடிப் பற
உங்கள் ஐயர் சொன்னார் போம் என்ன

நீர் சொன்னதே போராதோ எனக்கு
(மன்னவர் பணி அன்றாகில் உம் பணி மறுப்பனோ )
நான் உம்மளவில் போந்த பொல்லாங்கு இறே இங்கனே சொல்ல வேண்டிற்று
ஆனாலும் அவர் இதுக்குப் பொருந்தாமை கிலேசித்துக் கிடக்கிறார் என்றீரே
அவருடைய கிலேச நிவ்ருத்தியைப் பிறப்பித்து நியாய அனுகூலமாக இசைவித்துப் போகலாமோ என்ன

அது ஒண்ணாது –
நான் அவரைத் தேற்றிக் கொள்ளுகிறேன்-
புத்தி பேதம் பிறவாமல் நீர் சடக்கென போம் -என்ன
நம்மை இங்கனே சங்கிக்க வேண்டிற்றே என்று தம்மை வெறுத்தார் இறே

பிறரை வெறுத்து மிகவும் கோபிக்கிற காலத்தில்
ஸ்ரீ பரத்தாழ்வான் சகல ஸாஸ்த்ர நிபுணனாய் இருக்கச் செய்தேயும்
மாத்ரு வதம் பிராப்தம் என்று அறுதி இட்டு எழுந்து இருந்து –
அவன் அது தவிர்ந்தது-
மாத்ரு காதகன் என்று பெருமாள் நம்மைக் கைவிடுவார் என்று இறே

பரிவர் (ஸூக்ரீவராதிகள்)-வத்யதாம் -என்ன
நத்யஜேயம் என்று கிலேசித்து
இவர்களையும் சீற மாட்டாமை இறே
கபோத வியாக்யானம் அருளிச் செய்ததும் –

இளைய பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானை அதி சங்கையாலே கொலை கருத துணிந்ததே போரும் இறே சீற்றத்துக்கு
அவரையும் கோபிக்க மாட்டாமல் உமக்கு ராஜ்ய ஸ்ரத்தை உண்டோ என்றால் போலே இறே அருளிச் செய்ததும்

ஸ்ரீ பரதாழ்வான் மீள வேணும் என்னும் நிர்பந்தத்தோடே
ஸீதாம் உவாஸ என்னாமல் பிரபத்தி பண்ணவும்
அது தான் பெருமாள் அபிசந்தி அறிந்து இருக்கச் செய்தேயும் செய்தது ஆகையாலே
கண்டக பிரபத்தியாய்த் தோற்றிச் சீற வேண்டும் காலத்திலே சில நியாயங்களை அருளிச் செய்து
மீள விட்டார் என்றவை முதலாகப்
பல இடங்களிலும்
சீற்றம் இல்லாமை ப்ரஸித்தமாய்த் தோற்றும் இறே

இல்லாதவன் என்றது
சீற்றம் உண்டாய் பொறுத்து இருக்கிறான் என்றது அன்று
ஆஸ்ரயத்தில் கிடப்பது கல்யாணம் ஆகையாலே
சீற்றத்துக்கு இடம் இல்லை
காலாக்நி ஸத்ருச -என்றதும் குணமாம் அத்தனை
க்ரோதம் ஆஹாரயத் -என்று அருளப் பாடிட்டுக் கொண்ட சீற்றம் இறே

சீதை மணாளனைப் பாடிப் பற
இதுக்கு எல்லாம் அடி இந்த சம்பந்தம் இறே
மணாளன் -மணவாளன் –

———-

கிருஷ்ண அவதாரத்தில் போகிறார் –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-

பதவுரை

பஞ்சவர்–பஞ்ச பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அத் துரியோதனநாதிகள் தன் சொற்படி இசைந்து வாராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து,
கஞ்சு உமிழ்–விஷத்தைக் கக்குகின்ற
காகம் கிடந்த–காளியன் கிடந்த
நல் பொய்கை புக்கு–கொடிய மடுவிலே புகுந்து
அஞ்ச (அக் காளியன்) அஞ்சும்படி–பணத்தின் மேல் (அவனது) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து நடமாடி அக் காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட
அஞ்சன வண்ணனை பாடிப்பற;
அசோதை தன் சிங்கத்தைப் பாடிப்பற–

பஞ்சவர் தூதனாய்
தர்ம புத்ராதிகளுக்குத் தூதனாய்
இவர்கள் ஐவரிலும் இவனை ஏவ உரியர் அல்லாதார் இல்லை போலே
தூதனாக வேணும் என்றே திரு அவதரித்தது
இன்னார் தூதன் என நின்ற பின்பு இறே அவதாரம் நிலை நின்றது
தூது விட்டு வரும் அளவும் பார்த்து இருந்த குறை தீர்ந்ததும் –

ஆய்
தூத க்ருத்யம் வந்தேறியாய்த் தோன்றுகை அன்றிக்கே
ஸ்வா பாவிகமாய் வந்த படி –

பாரதம் கை செய்து
பத்தூர் ஓரூர் பெறாமையாலே யுத்த உன்முகனாய்ப் போந்து
கையும் அணியும் வகுத்து நின்ற பக்ஷ பாதத்தாலே –
பாரதம் கை செய்தது -என்கிறது –

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
சலம் கலந்த பொய்கை-(திருச்சந்த )-என்னும்படி இறே
நஞ்சை உமிழ்ந்து பசுக்கள் தண்ணீர் குடியாதபடி பண்ணிற்று –

நற் பொய்கை புக்கு
பண்டு நல்ல தண்ணீர் ஆகையாலே நல்ல பொய்கை என்கிறது –

அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அதுக்கு உள்ளே குதித்து அது கிளம்பின அளவிலே -அதின் தலையிலே பாய்ந்து –

நீருக்குள் கிளம்பின பாம்பின் தலையிலே பாயும் போது தானும் நீருக்குள்ளே நின்றால் பாயப் போகாது இறே
ஆயிருக்க கரை மரத்திலே நின்று பாய்ந்தால் போலே இறே
அதன் தலையிலே அது அஞ்சும்படியாக இறே உடலை முறுக்கி
அதின் தலையிலே பாய்ந்திட்டு
இளைப்பித்துப்
பின்னே இறே அதுக்கு அருள் செய்தது –

அஞ்சன வண்ணனைப் பாடிப் பற-
அதுக்கு பின்பு இறே ஸ்வா பாவிகமான நிறம் தோன்றினதும் –

வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற
தேவகி சிங்கம் என்பதிலும்
தங்கள் அறிந்த பிறப்பிலே பாடிப் புகழுமதே நல்லது –

———-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

பதவுரை

முடி ஒன்றி–‘திருமுடி சூடி
மூ உலகங்களும்–பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு–பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று–தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும்” என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த–பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு–ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று–அக் காலத்திலே
அடி நிலை–ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை–அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற….;
அயோத்தியர்–அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை–அரசனானவனை,
பாடிப்பற–

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்து
முன்பு போலே ஆகாமல் ஒரு விக்நம் அறத் திரு அபிஷேகம் சாத்தி அருளி
முன்பு விக்நத்துக்கு ஹேது என்னுடைய அந்நிய பரதை அன்றோ -என்ன

எனக்குள்ள அளவாலே காணும் அது குலைந்தது
அது தான் குலைந்ததோ –
ஐயர் உமக்குத் தந்து போன ராஜ்ஜியம் அன்றோ –
அவருடைய ப்ரதிஜ்ஜை அனுமதிகளை நோக்கிப் பாரீர்

நானும் அவருடைய ப்ரதிஜ்ஜை அனுமதிகளை அன்றோ நோக்குகிறேன்-என்றால் போலே
சிலவற்றை அருளிச் செய்ய

ஐயர் உமக்கு
உமக்குப் பின்பு அன்றோ நான்

அவ்வளவேயோ
உம்முடைய சிஷ்யனும் அன்றோ நான்
வசிஷ்ட சிஷ்யர் நீரே அன்றோ
ப்ராதுர் சிஷ்யஸ்ய -என்கிற அளவேயோ

தாஸஸ்ய
உம்முடைய அடியான் அன்றோ நான் –
ராஜ்யஞ்ச ஸ அஹம் ஸ ராமஸ்ய -என்று அன்றோ என் ப்ரக்ருதி என்ன

உமக்குத் தனியே ஒரு பிரதி பத்தி உண்டோ –ஐயர் ஏவினது ஒழிய –
என்ற அளவிலே
என்னுடைய அந்நிய பரதையைப் பொறுத்து மீண்டு எழுந்து அருளீர் என்று
பின் தொடர்ந்து வந்து
பரதநம்பி யானவன் சரணம் புக –

பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
உம்முடைய மநோ ரதத்தாலே தம்பி என்றீர் ஆகில் தமையன் சொன்னதைச் செய்யும்
சிஷ்யன் என்றீர் ஆகில் ஆச்சார்யன் சொன்னதைச் செய்யும்
தாஸன் என்றீர் ஆகில் நாயன் சொன்னதைச் செய்யும்
இப்போது அருள வேணும் என்றீரே
சரணாகதன் என்றீர் ஆகில் சரண்யன் சொன்னதைச் செய்யும் -என்று
சில நியாயங்களை அருளிச் செய்து
காட்டில் இவரை ரமிப்பித்து இறே
திருவடி நிலை கொடுத்தது –

படியில் குணத்து பரத நம்பி
இவரும் இதுவே நமக்குத் புருஷார்த்தம் என்று கைக் கொண்ட பின்பு இறே
படியில் குணத்து பரத நம்பி ஆய்த்தும்

படியில் குணம் என்றது
பித்ரு வசன நிர்தேசத்திலே நின்றவருடையவும்
பித்ருத்வம் நோப லஷ்ய -என்றவருடைய
குணங்களும் ஒப்பு அன்று என்றதாய்த்து

திருவடி நிலைகளை பரித்த பின்பு இறே
அடி சூடும் அரசாய் -பரதனாய்த்தும்

நம்பி
இவற்றால் இறே பூர்ணன் ஆய்த்தும்
(உகார விவரணம் -நமஸ் அத்யந்த பாரதந்தர்யம் )

ஸ்ரீ சத்ருக்கனன் நினைவாலும்
இளைய பெருமாளைப் போலே ந ஸ அஹம் -என்னாத நினைவாலும்
வந்த பூர்த்தி என்னவுமாம்

இது தான் உகார விவரணம் இறே

அயோத்தியர் கோமானைப் பாடிப் பற
பரத வ்யாஜத்தாலே திருவடி நிலைகள் தாமே ராஜ்ஜியம் செய்கையாலே
திருவடி நிலை ஈந்தவன் தன்னையே அயோத்யைக்கு ராஜா என்னுதல்
பின்பு திரு அபிஷேகம் செய்கையாலே கோமான் என்னுதல் –

———-

இதுவும் நஞ்சு உமிழ் நாகம்(3-9- 5)என்ற பாட்டோடே சேர்த்தி –

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-

பதவுரை

காளியன் பொய்கை–காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க–கலங்கும்படி
பாய்ந்திட்டு–(அதில்) குதித்து
அவன்–அக் காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து–ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள–அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு–அக் காளியனுக்கு
அருள் செய்து–(ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்–லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய
தோள் வலி–புஜ பலத்தையும்
வீரம்–வீரப் பாட்டையும் பாடிப் பற;
தூ மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையவனை பாடிப் பற–

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன் நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
பொய்கையில் கிடந்த காளியன் நெஞ்சு கலங்கும்படி
கிளம்பின தலையிலே பாய்ந்து
தலை ஐந்திலும் நின்று நடித்து -(நடனம் ஆடி )

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்-
அவன் சரணம் புக்கவாறே அவனுக்குப் பிராணனைக் கொடுத்து
ஸமுத்ரத்திலே போய்க்கிட என்ற சாமர்த்தியத்தை யுடையவனுடைய –

தோள் வலி வீரமே பாடிப் பற
மந்த்ர பர்வதத்தை வாஸூகி சூழ்ந்தால் போல்
திருமேனி முழுக்கச் சுற்றின நாகத்தின் தலையிலே நிற்கச் செய்தே
சுற்று விடுவித்துத் தூக்கிப் பிடித்து எடுக்கையாலே
தோள் வலி -என்கிறது –
(ஆடின தாள் வலி என்னாமல் தோள் வலி என்கிறார் )

தூ மணி வண்ணனைப் பாடிப் பற
காளியன் போன பின்பு பசுக்களுக்கும் இடையருக்கும் விரோதி போகப் பெற்றதால்
தூய்தான நீல ரத்னம் போன்ற திருமேனி புகர் பெற்ற படி –

———

இதுவும் அடி நிலை ஈந்தான் என்கிறது பின்னாட்டுகிறபடி

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

பதவுரை

தார்க்கு–மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு
இள–(தகுந்திராத) இளம் பருவத்தை யுடையவனான
தம்பிக்கு–பரதாழ்வானுக்கு
அரசு ஈந்து–(அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து,
நூற்றவள்–(இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய
நூல் சாஸ்திரம் நூற்றவள் விசாரித்தவள் -தனக்கு கொடுத்த வரங்களையே விசாரித்தவள்
சொல் கொண்டு–சொல்லை ஏற்றுக் கொண்டு
தண்டகம்–தண்ட காரண்யத்துக்கு
போகி–எழுந்தருளி (அவ் விடத்தில்)
நுடங்கு இடை–துவண்ட இடையை உடையனான
சூர்ப்பணகாவை–சூர்ப்பணகையினுடைய
செவியொடு மூக்கு–காதையும் மூக்கையும்
அவள் ஆர்க்க அரிந்தானை–அவள் கதறும்படி அறுத்த இராம பிரானை
ராமஸ்ய தக்ஷிண பாஹு -ப்ரயுக்தமான ஐக்யத்தைப் பற்ற
பாடிப் பற;
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற–

தார்க்கு இள தம்பிக்கு அரசு தந்து
மாலையிட்டு ராஜ்ஜியம் பண்ணப் பிராப்தன் நீ என்று வசிஷ்டாதிகள் சொல்லச் செய்தேயும்
இவ் வம்சத்தில் தமையன் இருக்கத் தம்பிமார் மாலையிட்டு ராஜ்ஜியம் பண்ணினார் இல்லை என்று
நெஞ்சு இளகி சபா மத்யே கர்ஹித்து மறுத்தவனை
ஒரு நியாயத்தாலே இசைவித்து
அவனுக்குப் பொருந்திய அரசைக் கொடுத்து
(இவனுக்குப் பொருந்திய அரசை அன்றோ-அடி சூடும் அரசை ஈந்து அருளினார் )

தார் -என்று சதுரங்க பரிகரத்துக்கும் பேராய்
அவர்கள் அபிஷேகம் செய்து எங்களை (சதுரங்க பரிகரமும்) ஆள வேணும் என்ன
நெஞ்சு இளகி வார்த்தை சொன்னான் என்னவுமாம் –

அன்றிக்கே
தார் என்று மாலைக்குப் பேராய்
அத்தாலே ராஜ்யத்துக்கு உப லக்ஷணமாய்
இளந்தம்பி என்று பெருமாளுக்கு நேரே இளையவன் என்று காட்டுகிறது –

தண்டக நூற்றவள் சொல் கொண்டு போகி
ராஜ்யத்தை விடு வித்து
தண்ட காரண்யத்திலே போக விடக் கடவோம் என்று விசாரித்தவள் சொல்லை அங்கீ கரித்துக் கொண்டு
வசிஷ்டாதிகள் திருத் தாய்மார் நகர ஜனங்கள் சொலவை
மறுத்துப் போனவன்

போகி-என்றது
போய் என்னுதல்
போகிறவன் என்று திரு நாமம் ஆதல்
(சோறு ஆக்கி -தளிகைப் பண்ணுபவர் போல் போனவன் என்றவனையும் காட்டும் _
அவள் சொன்ன எல்லை அன்றிக்கே அவ்வருகும் போக வல்லவன் என்னுதல் –
(அவ்வருகும்-தண்ட காரண்யம் தாண்டி இலங்கை வரை எங்கும் திருவடி சாத்தி அருளினார் அன்றோ )

நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
கிருத்ரிம ரூபையான சூர்பணகி தான் வந்து தன் வடிவு அழகைக் காட்டி
என்னை விஷயீ கரிக்க வேணும் என்ன
தம்முடைய பொருந்தாமை தோன்ற இளைய பெருமாளைக் காட்டி உபா லம்பிக்க

அவளும் அது தன்னை அறிந்து க்ருத்தையாய் பழைய வேஷத்தைக் கொண்டு எடுத்துக் கொண்டு போகப் புகுந்த அளவிலே
பெருமாள் திரு உள்ளத்தை நேராகக் கண்டு -தம்மையும் கரணவத் சேஷமாகக் கண்டு –
அவள் செவியோடு மூவகைக் கதறிப் பதறிப் போம்படி அறுத்தவனை

அறுத்தானை என்னாதே
அரிந்தானை -என்கையாலே
அரிகிற போதை உணர்த்தி இல்லாமையும்
பின்பு மிகுதி காண உணர்ந்தமையும் தோற்றுகிறது –

அன்றியே
ஆர்த்தல் -கர்வமாகில்
அபிமத ஸித்தி பெற்றார் பாவனையும் தோற்றும் இறே
(பெருமாளை ப்ரத்யக்ஷமாகக் காணப் பெற்றாளே )
தருணா –இத்யாதி

ராமஸ்ய தஷினோ பாஹு
இது ஸாமாநாதி கரண்யம் அன்று
ஸாயுஜ்யம் ( யுகு -தாது -இரட்டை )

அப்ராக்ருதமான ஞான சக்த்யாதிகளை உபாதானம் பேதிக்க மாட்டாதே
ப்ராக்ருதரை இறே பேதிக்கலாவது
பேதிக்கும் போது கார்ய காலத்தில் ப்ரேரகாதிகள் வேண்டுகையாலே ஸாமாநாதிகரண்யம் வேண்டி வரும்
அல்லாத போது வையதி கரண்யமாய்
விசேஷ்ய பர்யந்த அபிதான நியாயத்தாலே வையதி கரண்யமே இறே ஸித்திப்பது

(கடல் ஞாலம் செய்தேனே யானே என்னும் -அநுகாரம் -விசேஷணம் விசேஷ்யம் பர்யவசாயம் -ஆகுமே
லஷ்மணன் எடுத்துக் கொண்ட திரு மேனி மூலம் செய்வதாக சங்கல்பம் மூலம் இவள் காதும் மூக்கும் அரிந்தது
பர்ணசாலை அமைக்க -கைங்கர்யம் சித்திக்க அப்படி இல்லையே-வையதிகரண்யம் ஆகுமே
நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய் -ஆய் என்பதால் சாமானாதி கரண்யம்
பின்ன பிரவ்ருத்தி ஸப்தானாம் ஏக ஆஸ்ரயம்
தண்டவான் புருஷன் -குண்டலி புருஷ -இவை பிரிக்க வாய்ப்பு உண்டு -ப்ருதக்த்வம்
ப்ருதக்த்வம் இல்லாத போது -சுக்ல படம் -வெண்மையான வஸ்திரம் -தனியாகப் பிரிக்க முடியாதே –
இரண்டுமே பிரதம வியக்தி -வெண்மை நிறம் உடைய வஸ்திரம் -விசேஷ பர்யந்த அபிதான நியாயத்தாலே )

அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
இதுவும் முன்பு போலே –

———–

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற – 3-9 -9-

பதவுரை

மாயம்–க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது–இரட்டை மருத மரங்களை
இறுத்து–இற்று விழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு–இடையர்களோடு கூட
போய்–(காடேறப்) போய்
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரக்ஷித்தும்
அணி–அழகிய
வேயின் குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதியும்
வித்தகன் ஆய் நின்ற விஸ்மயநீயனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை–இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற
ஆநிரை மேய்த்தானை பாடிப் பற–

(ஆ நிரை காத்து அணி-ரக்ஷணம்
ஆ நிரை மேய்த்தானை-திவத்திலும் ஆ நிரை மேய்ப்பு உகப்பானே
ஆகவே புநர் யுக்தி தோஷம் இல்லை )

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
கம்சன் வரவிட
மாயா ரூபிகளாய் வந்த அஸூரர்களை நிரஸித்து

ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
இடையரோடே போய் வ்யாக்ராதிகள் வர்த்திக்கிற காட்டிலுள் புகாமல் –
நாட்டில் மீளாமல் –
மேய்ச்சல் உள்ள இடங்களிலே போய் நின்று

வேயின் குழலூதி
பிரிந்து போனவையும் வந்து கூடும்படி அழகிய வேய்ங்குழலை யூதி

வித்தகனாய் நின்ற
எல்லாருக்கும் பிரதானனன் என்னுதல்
சமர்த்தன் -என்னுதல்

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
இடையருக்கு முன்னோடிக் கார்யம் பார்த்த மேனாணிப்பை யுடையவன்

ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற
இப்படிக் குழலூதிப் பசு மேய்த்தவனைப் பாடிப் பற–

————-

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

பதவுரை

கார் ஆர் கடலை–ஆழத்தின் மிகுதியால் கருமை பொருந்திய கடலை
அடைத்திட்டு–(மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி)
(அர்த்த ஸேது வழியாக)
இலங்கை–லங்கையிலிருந்து
புக்கு–(அவ் விடத்தில்)
ஒராதான்–(தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய
பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்–அழகிய தலைகள் பத்தையும்
நேரா–அறுத்துப் போகட்டு
அவன் தம்பிக்கே–அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே
நீள் அரசு ஈந்த–நெடுங்காலம் நடக்கும் படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின்
ஆரா அமுதனை–எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராம பிரானை
பாடிப்பற;
அயோத்தியர்–அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்க கடலை சீக்கிரமாக அடைத்து
அக்கரை ஏறி லங்கையில் வடக்கு வாசலிலே யுத்த உன்முகனாய் எழுந்து அருளி

ராக்ஷஸ வா அ ராக்ஷஸம் -(ஆரண்ய 44) -என்றும்
தான் போலும் -என்றும் –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்று
பெருமாள் ப்ரதிஜ்ஜையை நிரூபியாதே
யுத்த கண்டூதியோடே
நான் ராக்ஷஸ ராஜன் -அன்றோ என்ற கர்வத்தோடே கிளம்பினவனுடைய

ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
தாய் தலையான ஒன்றோடே உண்பதையும் சேர அறுத்து

ஓராதவன்
இவனுக்கு ஓராமை
வாலி வதம் -சேது நிபந்தனம் -லங்கா தஹனம் -முதலானவை எல்லாம் ஓராமை இறே

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ந து ராக்ஷஸ சேஷ்டித (சூர்பண கையே சொல்லுவது )
ராக்ஷஸா நாம் பலாபலம் -என்று
(பெருமாளே இஷ்வாகு குலத் தம்பியாக நினைத்துக் கேட்டது -நின்னோடும் எழுவர் ஆனோம் )
தம்முடைய தம்பியாக அங்கீ கரித்து இருக்கச் செய்தேயும்
(அவன் தம்பிக்கே-என்னலாமோ என்னில் )

ராவணன் பட்ட பின்பு
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப் யேஷ யதா தவ -என்றது
ராம அநு வ்ருத்தி புருஷார்த்தம் என்று வந்தவனுக்கு
ராஜ்ய பிராப்தி யுண்டாக்குவதாக்க திரு உள்ளம் பற்றி இறே

அன்றிக்கே
ராக்ஷஸர் வச வர்த்தியாம் போது அவனோடு ஒரு பிராப்தி உண்டாக வேணும் என்று
இவர் (பெரியாழ்வார் ) தாமும் அருளிச் செய்கிறார் -என்னுதல்

ராக்ஷஸ கந்தம் மாற மாட்டாதே என்னும் சங்கையாலும்
இளைய பெருமாளைப் போலே –
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி –
நவ ஸீதா -ந ஸ ஸீதா -என்றும்
அவன் நீக்க நினைத்தாலும் நீங்காமை அன்றிக்கே அவன் நீக்கின வழியே அவன் இசைந்து போகையாலும்
இவர் தாமும் -அவன் தம்பி -என்கிறார் –

நீள் அரசு ஈந்த
என்னிலங்கு நாமத்து அளவும் அரசு என்று ஈந்த
முன்பு அக்னி ஹோத்ராஸ் ச வேதாஸ் ச ராக்ஷஸாநாம் க்ருஹே க்ருஹே -என்று
விஷ்ணு வாதி நாமங்கள் நடந்து போரா நிற்கச் செய்தேயும்
தயா ஸத்யஞ்ச ஸுவ்சஞ்ச ராக்ஷஸா நாம் ந வித்யதே -என்று நடந்து போந்து இறே

அங்கன் ஆகாமல்
பரத்வாதி நாமங்களிலும் பிரகாசமாய் இருப்பது
ராமன் என்கிற திரு நாமம் ஆகையாலே இறே
என்னிலங்கு நாமம் -என்று விசேஷித்தது –

ஆராவமுதனைப் பாடிப் பற
ராவண வத அநந்தரம்
விரோதி போகப் பெற்றதாலே திரு மேனியில் பிறந்த புகர் தமக்குப் போக்யமாகத் தோற்றுகையாலே
ஆ திருப்த போகம் என்று மங்களா ஸாஸனம் செய்து
ஆராவமுதம் -என்கிறார் ஆதல்

விள்கை விள்ளாமை விரும்பி யுள் கலந்தார்க்கு ஓர் ஆரமுதே (திருவாய் )-என்கிறபடியே
அத்விதீயமான அம்ருதம் என்னுதல்

தாரா வாஹிக விஞ்ஞானத்தில் ( தைலதாராவத் -எண்ணெய் ஒழுக்கு )
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுது என்னுதல்

அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
அம்ருதத்தோடே உபமித்துத் (உபமானம் அருளிச் செய்தது )
தம்முடைய அமுதத்திலே சேராமையாலே
ஆஸ்ரயம் தன்னையே அருளிச் செய்கிறார் –

————

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9- 11- –

பதவுரை

நந்தன மதலையை–நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும்
காகுத்தனை–இராம பிரானையும்
நவின்று–(ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி
உந்தி பறந்து–உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்–அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய
சொல்–சொல்லி,
செம்தமிழ்–அழகிய தமிழ் பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த
ஐந்தினோடு ஐந்தும்–க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை–துன்பமொன்று மில்லையாம்–

நந்தன் மதலையை காகுத்தனை
நந்த கோப குமாரனை
காகுஸ்த்த குல உத்பவனை

நவின்று உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
ஒருவருக்கு ஒருவர்
மேன்மையும் நீர்மையுமான குணங்களை கிருஷ்ண அவதாரத்தில் தோன்றவும்
நீர்மையான குணம் ஒன்றையுமே ராமாவதாரத்தில் தோன்றவும்
சொல்லித் திருவாய்ப் பாடியிலே பெண்கள் இரண்டு வகையாக வகுத்து
உந்தி பறந்த பிரகாரத்தை வ்யாஜமாக்கி

செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஆர்ஜவ ரூபமான தமிழாலே
திருப் பல்லாண்டு பாடி
ஹித ரூபமான அடிமை செய்து இருப்பாராய்
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே
இரு வகையாகத் தோற்றச் செய்தேயும்
தர்மி ஐக்ய நியாயத்தாலே ஒரு வகையாகத் தோற்றின
ஐந்தினோடு ஐந்தும்
ஸ அபிப்ராயமாக வல்லார்க்கு
ஸங்கல்ப நிபந்தமான லீலா ரஸ வியசனம் இவ்வாழ்வார் பிரஸாதத்தாலே இனி உண்டாகாது

அல்லல் -ஆவது
பல பல மாய மயக்குகளால் இன்புறும் துன்பமும் இன்பமும் ஆகிய இவ் விளையாட்டு இறே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: