ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-6—நாவலம் பெரிய தீவினில்–

கீழில் திருமொழியில்
தேவதாந்த்ர அநு வர்த்தந அபாவத்தாலே வந்த தோஷங்கள் உண்டாயிற்றே ஆகிலும்
அவன் தானே பரிஹரிக்கும் என்றார் –
அது தன்னை விளைத்தானும் தானே யாகையாலே –
அவன் தன்னாலும் விளைக்கலாவது -அகைப்பில் மனிசரை-(நான்முகன்) இறே
(தேவதைகளுக்கு அந்தர்யாத்மாவாக இருந்து விளைத்து
தானே–ஸ்வேந ரூபேண -பரிஹரித்தவனும் இவனே
இதுக்கு த்ருஷ்டாந்தம் மேல் காட்டி அருளுகிறார் )

திண் மதியைத் தீர்ந்த மாத்ரத்தாலே அம்பரீஷாதிகளையும் விளைக்கலாய்த்து இல்லை இறே
(உண்டாக்க முடிந்தது அன்றோ
அம்பரீஷர் -இடம் இந்திரனாக வேஷம் பூண்டு தானே வந்தானே
திருமேனி காட்டி இப்பொழுது கேள் என்றதும்
பெற்றேனே -உமது திவ்ய மங்கள விக்ரஹ சேவை கிட்டியதே )

ஒரு மாவில் ஒரு மாவில் ஒரு மா தெய்வம் மற்று யுடையோமோ (திருவாசிரியம் -7-)என்பாரையும்
(மா -பெரிய -பகவானைப் போன்ற பெரிய -தேவதாந்த்ரங்கள் )
இம் மாத்திரத்தைக் கொண்டே தெய்வம் பிறிது அறியேன் -(பெரிய திருமொழி -6-3-6 )என்பாரையும்
இது தன்னிலும் திருவில்லாத தேவரைத் தேறேல் -என்பாரையும்
தேறி யுளது என்று இருப்பாரோடு உற்றிலேன் (பெரிய திருமொழி-8-10-3 )-என்பாரையும் சொல்ல வேண்டா இறே
(பரன் திறம் அன்றி மற்று ஒரு தெய்வம் இல்லையே)

ஒரு மாவைக் கீழ் ஒரு மாவில் ஓட வைத்து (அந்தராத்மாவாக இருந்து )
அங்க அங்கித்வமும் —
ஸாம்யமும் —
உபாஸகர்க்குத் த்யேய மான வாதித்யன் முதலான தேவதா யந்தர்யாமித்வமும்
சர்வ சாதாரணமான ஸ்வரூப அந்தர்யாமித்வமும்

இதில் விஹித அவிஹித ரூபேண வருகிற உபய காம்யத்வ பிரதிபத்தியும்
(விஹித–உபாசனம்
அவிஹித சாஸ்திரம் சொல்லாத வழி ரூபேண)
கேவல விஹிதமான விசேஷணத்தில் தேவதா பிரதிபத்தியும்
அந்ந தாதா பய த்ராதா –என்றால் போலே சொல்லுகிற விஹித விஷய துல்ய பிரதிபத்தியும்

ஏவம் பிரகாரமான தேவதாந்த்ர பிரதிபத்தி கழிந்ததாவது —
தன் பக்கல் யுண்டான ஸ்வ ஸ்வா தந்தர்ய லேசமும் பொறாத படியானால் இறே –

இந்தப் பொறாமை தான் தோன்றுவது –
சதுர்த்தி உகார மகார நமஸ்ஸூக்களிலும் –சரம நமஸ்ஸிலும் –அஹந்தா விலும்
பிரதி பத்தி அனுஷ்டான பர்யந்தம் ஆனால் இறே
(லுப்த சதுர்த்தி -தாதார்த்தம் -அவனுக்கே -அநந்யார்ஹத்வம் -எனக்கு நான் அல்லேன் -எனது ஆனந்தத்துக்கு அல்லேன் )

இப் பிரதி பத்தி விளைக்கும் போது
ஓர் ஆச்சார்யன் முகத்தால் அல்லது விளைக்க ஒண்ணாது என்று
திருக்குழலூதினது என்கிற வ்யாஜத்தாலே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் எல்லாம் நெஞ்சு இளகி உருகி
வச வர்த்தியாம்படி ஆசரித்துக் காட்டினான் இறே

இப்படித் தானே காட்ட வேண்டிற்று –
தானே தோஷ தரிசனத்தையும் விளைத்து மலை எடுத்துப் பரிஹரித்தாலும்
தனக்காட் பற்றாமல்
த்வம் மே அஹம் மே -என்னும்படி விளையும் என்று திரு உள்ளம் பற்றி இறே
திருக் குழலூதுகிறது

————–

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –

பதவுரை

அம்–அழகிய
பெரிய–விசாலமான
நாவல் தீவினில்–ஜம்பூத்வீபத்தில்
வாழும்–வாழா நின்றுள்ள
நங்கைமீர்கள்–பெண்காள்!
ஓர் அற்புதம் இது–ஒரு ஆச்சரியமான இச் சங்கதியை
கேளீர்-செவி கொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;)
தூ–சுத்தமான
வலம்புரி உடைய–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய
திருமால்–ச்ரியபதியான கண்ண பிரானுடைய
தூய வாயில்–அழகிய திருப் பவளத்தில் (வைத்து ஊதப் பெற்ற)
குழல்–புல்லாங்குழலினுடைய
ஓசை வழியே–இசையின் வழியாக,
கோவலர் சிறுமியர–இடைப் பெண்களினுடைய
இள கொங்கை–இள முலைகளானவை
குதுகலிப்ப–(நாங்கள் முன்னே போகிறே மென்று நெறித்து) ஆசைப்பட
உடல்–சரீரமும்
உள்–மநஸ்ஸும்
அவிழ்ந்து–சிதிலமாகப் பெற்று
எங்கும்–எங்குமுள்ள
காவலும்–காவல்களையும்
கடந்து–அதிக்ரமித்து விட்டு
கயிறு மாலை ஆகி வந்து–கயிற்றில் தொடுத்த பூமாலைகள் போல (த் திரளாக) வந்து
கவிழ்ந்து நின்றனர்–(கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ் தலையிட்டு நின்றார்கள்;
[இதிலும் மிக்க அற்புதமுண்டோ]

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
ஐம்பூத்வீபம் என்கிற ப்ரஸித்தி யுடையதான இதில்
தெற்கில் முடிந்த ஒன்பதாம் கூறு இறே பெரிய த்வீபம் ஆவது என்னுதல்
ஓன்பதையும் கூட்டிப் பெரிய த்வீபம் ஆவது என்னுதல்
இது ஒன்றால் இறே எட்டுக்கும் பெருமை யுண்டாயிற்று -அதாவது

1-எட்டும் போக ப்ரதான ஸ்தலங்களாகையாலும் –
2-அந்த ஸ்தலங்களில் போ கங்களுக்கும் உபரிதன ஸ்தலங்களில் போகங்களுக்கும்
ஆர்ஜன ரூபேண சாதன ப்ரதானம் இங்கே யாகையாலும்
3-இது தன்னிலே சாதன ஸாத்யங்கள் உண்டாகையாலும்
4-ஸாஷாத் கார பரரும் ஸத் ஸம்ப்ரதாய முமுஷுக்களும் இங்கே யாகையாலும்
5-அசாதாரண விக்ரஹ பிரதாந்யங்கள் இங்கே யாகையாலும்
6-இங்கு நின்றும் சென்றவர்களை அங்குள்ள நித்ய முக்தர்களும் ஈஸ்வரனும் ஆதரிக்கையாலும்
இதுவே பெருஞ் த்வீபம் என்ன வேணும்
மிக்க நாவலாலே உப லஷிதமான த்வீபங்களில் பெரிய த்வீபம் என்றதாயிற்று –
(அளவிலே சிறியதாக இருந்தாலும் பெருமையால் மிக்கது என்றவாறு )

(பிரியவர்தன் பிரித்தது ஏழு த்வீபங்கள்
அவன் பிள்ளை பிரித்தது ஒன்பது கண்டங்கள் )

வாழும் நங்கைமீர்கள்
வாழாட் பட்டு நின்றீர் -என்னுமா போலே
ஸாத்யம் ஸாத்யாந்தரத்திலே மூட்டுகை இறே வாழ்வாவது
இவ் வாழ்வு தானே இவர்கள் குண பூர்த்திக்கும் ஹேது

இதோர் அற்புதம் கேளீர்
இஃதோர் ஆச்சர்யம் கேளி கோள்

தூவலம் புரி உடைய திருமால்
தூயதான வலம் புரியை யுடையவன் ஆகையாலும்
திருமாலாகையாலும்

பிரதிகூலரை நிரசிப்பிக்கவும்
அனுகூலரை சேர்ப்பிக்கவும்
வல்ல பரிகரத்தை யுடையவன் –

வலம் புரிக்குத் தூய்மை யாவது
தேஹ குண சுத்தியும் –
ஆத்ம குண சுத்தியும்

மேல் தாவள்யமாய் (வெளுப்பாய் ) உள்ளும் மண்ணீடாய் இராத அளவன்றிக்கே
ஸ்வார்த்த கந்த ரஹிதமாய்ப் பரார்த்தமேயாய் இருக்கை
(இதுவே தேஹ சுத்தியும் ஆத்ம சுத்தியும் )

சதிரையும் இளமையும் மடப்பத்தையும் தாட்சியையும் மதிப்பையும் மதியாதே
புதியது ஏத்த வாருங்கோள் (திருவாய் -2-10 )-என்று தானே அதிரவற்றாய் இருக்கை

மடுத்தூதிய சங்கொலியும்
படைப்போர் புக்கு முழங்குதலுமாய் இறே இருப்பது –

தூய வாயில் குழலோசை வழியே
திருப் பவளத்துக்குத் தூய்மை யாவது –
நிஷேத அபாவ ஸ்த்தித்யர்த்த ப்ரகாஸமான திருக் குழல் ஓசை வழியாலே ஸகலரையும் வஸீ கரிக்கை இறே
(விலக்காமல் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுவதில் உறுதியாக இருப்பவன் என்பதைக் காட்டி )
ராமோ த்விர் நாபி பாஷதே -என்கிற மாத்திரமே அன்றே –
(நத்யஜேயம் -ஸமஸ்த கிஞ்சித்காரமும் கொள்ள- ஏவியும் பணியும் கொள்வேன் என்றும் சொல்ல வேண்டுமே )

கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப
கோ ரக்ஷணத்தில் சமர்த்தராய் இருக்கிறவர்களின் சிறுப்பெண்களையுடைய அங்குர மாத்ரமே யன்றிக்கே
விஷய ஸா பேஷமான முலைகள் கௌதூஹலம் செய்ய
குதுகுலத்தல் -த்வரா அதிசயத்தால் வந்த கிளப்பம்

வுடல் உள் அவிழ்ந்து
கொங்கை அளவோயோ
பேர் இளம் கொங்கையினார் அழலாலே உடலும் வெதும்பி உருகி நெஞ்சில் வ்யவசாயமும் குலைந்து

எங்கும் காவலும் கடந்து
1-மாதா பிதா பிராதாக்கள் முதலான ஸ்வ ஜன லஜ்ஜையும்
2-கவாட பந்தனம் முதலான அரணும்
3-தோழிமார் ஆனவர்களுடைய நியந்த்ருத்வத்தையும் கடந்து –

கயிறு மாலையாகி
கயிற்றில் ஒழுங்கில் அகப்பட்டாரைப் போலே
நேச பாச லேசம் எத்திறத்திலும் அற்று
பத்துறுத்த பாசமான குழல் ஓசை வழியே

வந்து
சென்று

வந்து
அவ்விடத்தில் தம்முடைய நியந்த்ருத்வம் தோன்ற அங்கே நிற்கிறார் போலும் காணும்
(கண்டவாற்றால் தனதே உலகு என்று நிற்பதைக் கண்டார்கள் )
கண்ணன் என்னும் நெடும் கயிறும் சமீப க்ராஹி என்னும்படி
குழல் ஓசை தூர க்ராஹியாய்-( நெடு நெடும் கயிறு) இருக்கும் இறே
எட்டினோடு இரண்டு என்னும் கயிறு அபலைகளை என் செய்யாதது தான்

கவிழ்ந்து நின்றனரே
கயிறு மாலை வழியே வந்து இந்தத் த்வனியினுடைய ஆஸ்ரயத்தைக் கண்ட பின்பு
நவோடைகள் ஆகையாலே வ்ரீளை குடி புகுந்து நிலம் பார்த்து நின்றார்கள் என்னுதல்
எதிர் செறிக்க மாட்டாமல் நின்றார்கள் என்னுதல் –

இத்தால்
ஸதாச்சார்ய யுக்தி விசேஷமான
ஸப்த அக்ஷர ப்ரகாஸ உபதேசத்தாலே
கேவல பிராமண அபிப்ராய அஜ்ஞாத தர்க்க சாமர்த்திய அபிமான ரஹித வச வர்த்திகளாய்
ஞான பக்தி வைராக்யங்களோடே
நின்ற பிரகார விசேஷங்களைக் காட்டுகிறது –

(ஸதாச்சார்ய-திருக்குழல்
முனிவரை இடுக்கியும் தானே வெளியிட்டும்
தத்வ தர்சி வசனம் ஏற்றம் உண்டே
அஷ்டாக்ஷர -பிரணவம் விட்டு -சப்த அக்ஷரம் -சப்த ஸ்வர ஸ்தானம்
நமஸ் பாரதந்தர்யம்
நாராயணன் போக்யதை காட்டும்
இவையே போதுமே
ஆச்சார்யர் சொல்வதே போதும்
தர்க்கம் வைத்து வாதம் பிரதிவாதம் செய்ய மாட்டோம்
ராமானுஜர் ஈசான மூலை யைக் காட்டினாலும் அங்கே ஆஸ்ரயிப்போம்
இளம் கொங்கை பக்தி
உடல் உள்ளம் அவிழ்ந்தது வைராக்யம் )

———

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர்கையால் துகில் பற்றி யோல்கியோட அரிக்கண் ஓட நின்றனரே – 3-6-2- –

பதவுரை

கோவிந்தன்–கண்ணபிரான்
இட அணர–(தனது) இடப்பக்கத்து மோவாய்க் கட்டையை-மஸ்று ஸ்தானம் மீசை உள்ள இடம்
இடத் தோளொடு சாய்ந்து–இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து
குடம்பட–திரு வயிறு குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும்
வாய்–வாயானது
கடை கூட–இரண்டருகுங்குலியவும் (இவ்வறான நிலைமையாக)
குழல் கொடு–வேய்ங்குழலைக் கொண்டு
ஊதின போது–ஊதின காலத்திலே
மடம் மயில்களொடு–அழகிய மயில்களையும்
மான் பிணை போலே–மான் பேடைகளையும் போன்றுள்ள
மங்கைமார்கள்–யுவதிகள்
இரு கை–இரண்டு திருக்கைகளும்
கூட–(குழலோடு) கூடவும்
புருவம்–புருவங்களானவை
நெரித்து ஏற–நெறித்து மேலே கிளறவும்
வயிறு–வயிறானது
மலர் கூந்தல்–(தங்களுடைய) மலரணிந்த கூந்தல் முடியானது
அவிழ–அவிழ்ந்து அலையவும்
உடை–அரைப் புடவையானது
நெகிழ–நெகிழவும்
துகில்–(நெகிழ்ந்த) அத் துகிலை
ஓர் கையால்–ஒரு கையாலே
பற்றி–பிடித்துக் கொண்டு
ஒல்கி–துவண்டு
அரி ஓடு கண் ஓட நின்றார்–செவ்வரி, கருவரிகள் ஓடாயின்ற கண்கள் (கண்ணபிரான் பக்கலிலே) ஓடப்பெற்றனர்-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக் குட வயிறு பட வாய் கடை கூட
இடப் பார்ஸ்வத்திலே ஸ்மஸ்ரு ஸ்தானத்தை இடத் திருத் தோளோடே சாய்த்து
இரண்டு திருக்கையையும் திருக் குழலோடே சேர்த்து
திருப் புருவங்களானவை நெளித்து
திருக் குழலை நோக்கித்
திரு வயிற்றிலே வாயுவைப் பூரித்து நிறுத்தித்
திருப் பவளத்தாலே க்ரமச க்ரமச விட்டூத வேண்டுகையாலே திரு வயிறு குடம் போலே தோற்றத்
திருப் பவளம் இரண்டு அருகும் குவித்துத் திருக் குழல் துளைக்கு அளவாக –

கோவிந்தன் குழல் கொடூதின போது
கோ ரக்ஷணத்தில் ஒருப்பட்டு
அவை விலங்காமைக்கும் –
மேய்க்கைக்கும் –
மீளுகைக்கும் -தகுதியாக
ஊத வல்லவன் ஆகையாலே கோவிந்தன் என்கிறது –
அறியாதவன் ஊதினாலும் குழல் வாய்ப்புத் தானே போரும் காணும்

மட மயில்களோடு மான் பிணை போலே
பவ்யதை யுடைத்தான மயில் போலேயும்
நோக்கத்தை யுடைத்தான மான் பேடை போலேயும்

மங்கைமார் கண் மலர்க் கூந்தல் விழ
யுவதிகளான ஸ்த்ரீகள் புஷ்பாதிகளாலே அலங்க்ருதமான குழல்கள் நெகிழ்ந்து அலைய

உடை நெகிழ
ஒப்பித்து உடுத்த பரியட்டும் நெகிழ

வோர் கையால் துகில் பற்றி யோல்கி யோட
அரை குலையத் தலை குலையக் குழல் ஓசை வழியே ஓடிச் சென்று
ஸ்த்ரீத்வம் பின்னாட்டிய படியால் ஒடுங்கி
ஒல்குதல் -ஒடுங்குதல்
நெகிழ்ந்த உடையை ஒரு கையாலே தாங்கி –

அரிக்கண் ஓட நின்றனரே
ஓட அரிக் கண்ணோடே நின்றனர்
ஸ்த்ரீத்வம் பின்னாட்டினாலும் ஓடுகிற கண்ணை நிஷேதிக்கப் போகுமோ
பிறட்சியையும் ரேகையையும் யுடைத்தான கண்ணோடே
நின்றனரே
ஒல்கி நின்றனரே –

————–

வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது
வானிளம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்பச்
தேனளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3-6-3-

பதவுரை

வான்–பரம பதத்துக்கு
இள அரசு–யுவராஜனாயும்
வைகுந்தர்–அப் பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
குட்டன்–பரிந்து நோக்க வேண்டும்படியான பருவத்தை யுடையானாயும்
வாசுதேவன்–வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும்
மதுரை மன்னன்–வட மதுரைக்கு அரசனாயும்
நந்தர்கோன் இள அரசு–நந்தகோபர்க்குப் (பிள்ளையாய் வளர்ந்து) இளவரசனாயும்
கோவலர் குட்டன்–இடையர்களுக்கு பரிந்து நோக்க வேண்டும்படியான பிள்ளையாயுமுள்ள
கோவிந்தன்–கண்ண பிரான்
குழல் கொடு ஊதின போது;
வான்–ஸ்வர்க்க லோகத்திலுள்ள
இள படியர்– போகத்துக்கு உரிய சரீரத்தை யுடையரான மாதர்
(ஸ்ரீப்ருந்தாவனத்திலே)
வந்து வந்து ஈண்டி–திரள் திரளாக வந்து குவிந்து
மனம் உருகி–(தங்கள்) நெஞ்சு உருகப் பெற்று
மலர் கண்கள்–குவளை மலர்போலழகிய கண்களினின்றும்
பனிப்ப–ஆநந்த நீர் துளித்து விழ
தேன் அளவு–தேனோடு கூடின
செறி கூந்தல்–செறிந்த மயிர் முடியானது
அவிழ–அவிழ
சென்னி–நெற்றியானது
வேர்ப்ப–வேர்வை யடைய
(இவ் வகை விகாரங்களை யடைந்து)
செவி–(தமது) காதுகளை
சேர்த்து–(அக் குழலோசையிலே) மடுத்து
நின்றனர்–திகைத்து நின்றார்கள்-

வானிளவரசு
இளவரசாக்கி மூதுவர் தொழுகையாலே வான் இளவரசு -என்கிறது –

வைகுந்த குட்டன்
அவர்கள் அத்யந்தம் சிசு ஸ்த நந்த்யனாகவே நினைத்து
மங்களா ஸாஸனராய்ச சூழ்ந்து இருந்து ஏத்துவர்களுக்கு அத்யந்த பவ்யனாய் இருக்கையாலே
வைகுந்த குட்டன் -என்கிறது

வாசுதேவன்
வாஸூ தேவ புத்ரன் வாசு தேவன்

மதுரை மன்னன்
மதுரைக்கு மன்னனாய் இருந்தவனை நிரசிக்கையாலே -மதுரை மன்னன் -என்கிறார் –
உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்து-மதுரைக்குக் கேள்வியாக வைத்த அளவே இறே உள்ளது
அத்தாலும் மன்னன் தானே இறே –

நந்தர் கோனிளவரசு
பஞ்ச லக்ஷம் குடிக்கு அரசு நந்தகோபன் ஆகையால்
நந்தன் மைந்தனாக ஆகும் நம்பி -(பெரிய திருமொழி -2-2)
நந்தகோபன் குமரன் (திருப்பாவை )
நந்தன் பெற்றனர் நங்கள் கோன் பெற்றிலன்-(பெருமாள் -7 )என்கையாலே
கோ ரக்ஷணத்துக்கும் கோப்பிற்கும் ரக்ஷகன் தானேயாய்
இவர்கள் காலில் ஒரு முள் பாய்ந்தால் இடறுதல் செய்தால்
நோவுபடுவான் தானே யாகையாலே இளவரசாய் நின்று ரக்ஷிக்குமவன்
மைந்தனாகப் பெற்றோம் என்கையாலே நம்பி என்றதும் –

கோவலர் குட்டன்
தன்னே ராயிரம் பிள்ளைகளோடு ஒத்தவன்
அவர்களுக்கும் ரஷ்யம் ஆனவன்
அவர்கள் தாங்களும் இவனை நோக்கிச் சென்று செறுச் செய்யுமவர்கள்

கோவிந்தன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்

குழல் கொடூதின போது
வஸீ கர பரிகரமான குழல் கொடுதீதன போது

வானிளம்படியர் வந்து வந்தீண்டி
வானிலே வர்த்திப்பவராய்
அந்த லோகத்தில் உள்ளதனையும் ஜரா மரணம் இன்றியிலே இருக்கிற மாத்ரமே அன்றிக்கே
போக யோக்யமான சரீரங்களை யுடைய ஸ்த்ரீகள்

படி -சரீரம்

வந்து வந்தீண்டி-
குழல் ஓசை வழியே வந்து சூழ்ந்து நெருங்கி

மனமுருகி
மனஸ்ஸூ நிர்ப்பண்டமாக உருகி
ஆனந்த அஸ்ருக்கள்

மலர்க் கண்கள் பனிப்பச்
விகஸிதமான கண்களாலே பிரவஹிக்க

தேனளவு செறி கூந்தல் அவிழ
ஓடி வந்த விசையாலே புஷ்பாதிகள் உதிர்ந்தாலும் தேனை உதிர்க்கப் போகாதே
மதுவால் நனைந்து இறே குழல் இருப்பது
மீண்டும் மீண்டும் விழா நின்றால் வீழ்ந்தது அறியில் இறே சொருகலாவது

சென்னி வேர்ப்பச்
தேனுக்கும் வேர்ப்புக்கும் வாசி தெரியுமோ தான்

செவி சேர்த்து நின்றனரே
ஆஸ்ரயாந்தரத்தாலே போகாத படி
என்னை நோக்கி ஊதினான் -என்று செவி நிறையும் அளவும் சேர்த்து அதுவே புருஷார்த்தமாக நின்றார்கள் –

—————

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்ப பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி யுலாவி யுலாவிக் கரும் சிறுக்கன் குழலூதின போது
மேனகையோடு திலோத்தமை அரம்பை யுருப்பசி அரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி யாடல் பாடல் இவை மாறினார் தாமே -3-6-4 –

பதவுரை

தேனுகன்–தேநுகாஸுரன்
பிலம்பன்–ப்ரலம்பஸுரன்
காளியன்–காளிய நாகம்
என்னும்–என்று சொல்லப் படுகிற
தீப்பபூடுகள் அடங்க–கொடிய பூண்டுகளை யெல்லாம்
உழக்கி–தலை யழித்துப் பொகட்டு
கான் அகம்–காட்டுக்குள்ளே
படி–இயற்கையாக
உலாவி உலாவி–எப்போதும் உலாவிக் கொண்டு
கரு–கரிய திருமேனியை யுடைய
சிறுக்கன்–சிறு பிள்ளையான கண்ணன்
குழல் ஊதின போது;–
மேனகையொடு–மேனகையும்
திலோத்தமை–திலோத்தமையும்
அரம்பை–ரம்பையும்
உருப்பசி–ஊர்வசியும் (ஆகிற)
அரவர்–அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
(அக் குழலோசையைக் கேட்டு)
மயங்கி–மோஹமடைந்து
வெள்கி–வெட்கப் பட்டு
வான் அகம்–தேவ லோகத்திலும்
படியில்–பூ லோகத்திலும்
வாய் திறப்பு இன்றி–வாயைத் திறவாமல்
ஆடல் பாடல் இவை–ஆடுகை பாடுகை என்கிற இக் காரியங்களை
தாமே–தாமாகவே
மாறினர்–விட்டொழிந்தனர்-

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
வச வர்த்தி யாகாதே அஸூர வர்க்கத்தை நிரசித்த அளவில்
இவர்களில் குறைந்து இருப்பார் இல்லாமையாலே
திருக் குழல் ஓசையாலே வசீகரிப்பதாக இறே ஊதத் தொடங்கிற்று

தீம்ப பூடுகள் அடங்க உழக்கிக்
முளைக்கிற போதே காஞ்சொறி எரி புழு சர்பாதிகள் போலே பிரஸித்தமான
ஆஸூர வர்க்கம் அடையச் செருக்கு வாட்டி நிரசித்தது
இவை தான் விஷப் பூடுகள் இறே

தீப்பப் பூடு
தீம்பிலே ஒருப்பட்ட த்ரிவித கரணங்களையும் யுடையவர்கள்

கானகம் படி யுலாவி யுலாவிக் கரும் சிறுக்கன் குழலூதின போது
காட்டிடத்திலே வல்லார் ஆடினால் போலே இறே உலாவுவது

இப்படி ந்ருத்தம் குன்றாமல் உலாவி உலாவி இறே குழலூதிற்று –
கரிய திருமேனியையும் பருவத்தால் வந்த இளமையையும் யுடையவன் –

மேனகையோடு திலோத்தமை அரம்பை யுருப்பசி அரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி யாடல் பாடல் இவை மாறினார் தாமே

லஜ்ஜித்து –
லஜ்ஜை யினுடைய முதிர்ச்சியாலே
மயங்கி 

அவை -பிரசித்தம்

தாமே
தாங்களே தவிர்ந்து விட்டார்கள் –
அவர்களுக்கும் இவனுக்கும் வாசி அறிந்த மத்யஸ்தர்
பூமியில் உண்டான வீத ராகரை ஆசை துறந்தாரை
உங்களுக்கு அதிகாரம்
என்னாமல்
தாங்களே

தர்ம தாரதம்யம் அறிந்தவர்கள் தர்மாபாசம் தர்மம் என்று
தர்மி -அவன் -அவனே தர்மம் என்று அறிந்து -ஆச்ரயமான அவனே தர்மம்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்
அந்த தர்மம் தானே -அவற்றை தர்மமாக நினைத்து ப்ரவர்த்தியுங்கோள் என்றாலும் செய்ய மாட்டார்களே
பிரவர்த்திக்கா விட்டாலும் பாபம் வரும் என்றாலும் செய்ய மாட்டார்களே

அதே போல் மத்தியஸ்தர் ஆட பாட சொன்னாலும் செய்யார்
வாசனையோடு தாங்களே விட்டவர்கள் –
இனி இசையை மாட்டார்களே –
தாங்களே
அங்கு சொல்லி இறே தவிர்ந்து -கண்ணன் சொல்ல அர்ஜுனன் தவிர்த்தான்
இங்கு தாமே விட்டார்கள்

மயர்வற்றவர்களை சாதன தர்மங்களை பண்ண சொன்னாலும் இசையார் அன்றோ
நோற்ற நோன்பு இலேன்
ஒழித்திட்டேன் நின் கண் பக்தனும் இல்லை -திருமாலை
ந தர்ம நிஷ்டோமி
என்பாரோடே இவர்களையும் ஏக த்ருஷ்டாந்தமாக சொல்லலாம் அன்றோ
சொல்லி விடாமல் இருப்பதால் ஏக தேச சாத்ருசம் இங்கு

அவன் தானே பிரபஞ்ச அவலம்ப நியாயம் நடக்க வேணும் -என்று
சம்சாரம் நடக்க -ஆடல் பாடலை-மத்தியஸ்தர் கூட்டிக் கொண்டாடினாலும்
உனக்கு வேண்டுவாரை இட்டு நடத்திக் கொள்
நாங்கள் இவயிற்றின் பெயரையும் மறந்தோம் என்னவும் வல்லார் அவர்
பண்ண கூடாது ஸ்வரூபத்துக்கு விரோதம் -பிரபன்னர் நிஷ்டை

இப்படி அறிந்து மீண்டும் அவர்கள் வியாபாரிக்கிறார்களே
ப்ரஹ்ம பாவனை நித்யமாக இருக்காதே
கர்ம பாவனை தலை எடுப்பதால்
ப்ரஹ்ம பாவனை வரும் பொழுது தாஸோஹம் நைந்து உருகியும்
கர்ம பாவனை தலை எடுத்து சோகம்-சஹா அஹம்
துக்கமே வரும்
கூடிற்றாகில் நல் உறைப்பு அன்றோ

———–

அங்குள்ள அபலைகள் வசீகரிக்கப்பட்ட அளவு மட்டும் அன்றிக்கே
லோகத்தையே இந்த கான நிருத்தங்களில் குசலராய்
அவற்றால் எல்லா லோகங்களையும் வஸீ கரிக்கவும் வல்லராய்
தாங்களும் தங்கள் கான ந்ருத்தங்களில் வசமாய்த் தங்களைக் கொண்டாடி
புமான்களாய் இருக்கிறவர்களுடைய ஸ்தைர்யத்தையும் சொல்லுகிறது இப்பாட்டில் –

முன் நரசிங்கமதாகி யவுணன் முக்கியத்தை முடிப்பான் மூஉலகின்
மன்னரஞ்ச மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – 3-6-5- –

பதவுரை

முன்–முற்காலத்திலே
நரசிங்கம் அது ஆகி–நரஸிம்ஹ ரூபங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
முக்கியத்தை–மேன்மையை
முடிப்பான்–முடித்தவனும்
மூ உலகில் மன்னர்–மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள்
அஞ்சும்–(தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான
மதுசூதனன்–கண்ணபிரானுடைய
வாயில்–வாயில் (வைத்து ஊதப் பெற்ற)
குழலின்–வேய்ங்குழலினுடைய
ஓசை–ஸ்வரமானது
செவியை–காதுகளை
பற்றி வாங்க–பிடித்திழுக்க
நல் நரம்பு உடைய–நல்ல வீணையைக் கையிலுடைய
தும்புருவோடு–தும்புரு முனிவனும்
நாரதனும்–நாரத மஹர்ஷியும்
தம் தம்–தங்கள் தங்களுடைய
வீணை–வீணையை
மறந்து–மறந்து விட
கின்னரம் மிதுனங்களும்–கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும்
தம் தம் கின்னரம்–தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை
தொடுகிலோம் என்றனர்–’(இனித் தொடக் கடவோமல்லோம்’ என்று விட்டனர்–

முன் நரசிங்கமதாகி
ஆத்யநாதியைச் சொல்லுதல்
அது தன்னையே மாறாடிச் சொல்லுதல்
அதாவது
பண்டு முன் ஏனமாகி -என்றும்
பண்டும் இன்றும் மேலுமாய் -(திருச்சந்த -22-)-என்றும் அருளிச் செய்கையாலே
முன் என்கிறது
அநாதி ப்ரஸித்தியும் கூட்டும் இறே

ஹிரண்யனுடைய வர பிரதானங்களையும் நோக்க வேண்டுமாகையாலே நர மிருகமாய்

அதாகி –
தன்னுடைய ஞான சக்த்யாதிகள் குன்றாமல்
(ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -பெருமைகளில் ஒன்றும் குன்றாமல் )

யவுணன் முக்கியத்தை முடிப்பான்
அனுகூல பிரதிகூலனாய் அஸூர ஜென்மத்தில் பிறந்தவன்
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளாலே
வந்த வர பல புஜ பலங்களாலே வந்த கர்வத்தை முடிப்பதாக

மூ உலகின் மன்னரஞ்ச மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க
மூன்று லோகத்தில் உண்டான ராஜாக்கள் அஞ்சி வயிறு பிடிக்கும் படி வர்த்திக்கிற மதுவை
நிரசித்தவன் என்னுதல்

அபிமான பங்கமாய் வருகையாலே
மன்னர் அஞ்சுவதும் இவன் தனக்கு என்னுதல் –

இவன் தானே ஸ்வரூப ஆவேச ராமனுமாய்

மழுவினால் மன்னராருயிர் வவ்வினதனைக் கண்டு சக்கரவர்த்தி முதலானோர்க்கு
பய அபய ப்ரதானம் செய்தானும் இவன் தானே என்னவுமாம்

ஆனால் கிருஷ்ணன் தானோ சக்கரவர்த்தி திரு மகனும் ஆனானோ என்னில்
தர்மி ஐக்யத்தால் அதுவும் கூடும் இறே –

முன்னோர் தூதில் அடைவன்றே என்னிலும்
வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் ஊழி தோறு ஊழி வேறு அவன் -(7-3-11)-என்கிற
நேரால் கூடவுமாம் இறே

வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க –
ஸ்ரீ கீதை ஸ்ரீ அபய ப்ரதான ஸாஸ்த்ரங்களை
அவாக்ய அநாதர -என்னாமல்
ஸ ஹ்ருதயமாக அருளிச் செய்த வாயில்
குழலின் ஓசைக்கும் வஸீ க்ருதர் ஆகாதார் உண்டோ
உண்டானாலும்
செவியைப் பற்றி வாங்கி நின்றால் தரிக்க வல்லார் உண்டோ

நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும்
செவி படைத்தார் எல்லாரையும் வஸீ கரிக்க வற்றாய்த் தமக்கும் அபிமதமான வீணை நரம்பை யுடையவர்கள் –
தங்களுக்கு உடைமையாக நினைத்து இருப்பதும் இவ்வளவே இறே
கான வித்யைக்கு -தும்புரு -நாரதர் -இருவரும் ப்ரஸித்தராய் இருக்கும் இறே –

தம் தம் வீணை மறந்து
இவர் தங்களில் மைத்ரமானாலும்
என்னது என்னது என்று போருகையாலே
தம் தம் வீணை என்றது –

மறந்து
நன் நரம்புடைய வீணையை மறந்து –

கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே
இவர்களை போலே கின்னர மிதுனங்களும்
தம் கின்னரங்களை மறந்து
யாரேனும் நினைப்பிக்கிலும்
இனித் தொடக் கடவோம் அல்லோம் என்று செவியைப் பற்றி வாங்கின ஓசை வழியே
இழுப்புண்டு போனார்கள் என்னுதல் –
அன்றியே
ஸ்வ வசராய் ப்ரீதியோடே போனார்கள் என்னுதல்

ஆஸ்ரயித்த அளவும் செல்லுமது ஒழிய மீளப் போகாது இறே
(குழலுக்கு ஆஸ்ரயம் கண்ணன் அளவும் போகுமே )
பரி த்யக்தா மயா லங்கா
ராவனோ நாம துர் வ்ருத்த
அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீ மான்
என்றவன் மீண்டாலும்
இவர்கள் செவி உள்ளதனையும் மீளார்கள் இறே
மீளில் கர்ம பாவனை இறே —

———-

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு
நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6 –

பதவுரை

செம்பெரு தடங் கண்ணன்–சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களை யுடையனாய்
திரள் தோளன்–பருத்த தோள்களை யுடையனாய்
தேவகி சிறுவன்–தேவகியின் பிள்ளையாய்
தேவர்கள் சிங்கம்–தேவ சிம்ஹமாய்
நம் பரமன்–நமக்கு ஸ்வாமியான பரம புருஷனாயிரா நின்ற கண்ணபிரான்
இந் நாள்–இன்றைய தினம்
குழல் ஊத–வேய்ங் குழலை ஊத
கேட்டவர்கள்–(அதன் இசையைக்) கேட்டவர்கள்
இடர் உற்றன–அவஸ்தைப்பட்ட வகைகளை
கேளீர்–(சொல்லுகிறேன்) கேளுங்கள்
(அந்த இடர் யாதெனில்)
அம்பரம்–ஆகாசத்திலே
திரியும்–திரியா நின்ற
காந்தப்பர் எல்லாம் -காந்தருவர் அனைவரும்
அமுதம் கீதம் வலையால் -அமுதம் போல் இனிதான குழலிசையகிற வலையிலே
சுருக்குண்டு–அகப்பட்டு
நம் பரம் அன்று என்று–(பாடுகையாகிற) சுமை (இனி) நம்முடையதன்றென்று அறுதியிட்டு
(முன்பெல்லாம் பாடித் திரிந்ததற்கும்)
நாணி–வெட்கப்பட்டு
மயங்கி–அறிவழிந்து
நைந்து–மனம் சிதிலமாகப் பெற்று
சோர்ந்து–சரீரமுங் கட்டுக் குலையப் பெற்று
கை மறித்து நின்றனர்–(இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமலோம் என்று) கையை மடக்கிக் கொண்டு நின்றார்கள்-

செம் பெரும் தடம் கண்ணன்
சிவந்து மிகவும் பெருத்த திருக் கண்களை யுடையவன்

திரள் தோளன்
ஆஜானு பாஹு -என்கிறபடியே
உருண்டு அழகிய திருத் தோள்களை யுடையவன்

தேவகி சிறுவன்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே பக்வனான பின்பு மாத்ரு வசன பரிபாலனம் செய்தவன்
அல்லாமல் அவதரித்த அன்றே செய்தவன்

தேவர்கள் சிங்கம்
தேவர்களுக்காக அஸூர நிரஸனம் செய்யும் இடத்தில் ஸிம்ஹ புங்கவம் போலே
அநபிபவ நீயனாய் நின்று ரஷிக்குமவன் –

நம் பரமன்
நாங்கள் ஸர்வ ஸ்மாத் பரனே என்று அறுதியிட்டு இருக்குமவன்

இந் நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
குழலாலே லோகத்தை வஸீ கரிக்கக் கடவோம் என நாரதாதிகளும்
வீணை மறத்தல் கை கண்ட இந்நாள் குழலூத

இந் நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
கேட்டவர்கள் பூர்வ அபிமான நிவ்ருத்தி மாறுபாடுருவி கிலேசித்தன கேளிகோள்

அவர்கள் தான் ஆர் என்னும் விவஷையில் சொல்லுகிறது மேல்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு
அம்பரத் தலத்திலே வர்த்திப்பாராய்
பரத ஸாஸ்த்ர வாத்ய கோஷங்களில் வாசி அறிந்தகவர்கள் எல்லாம்
இந்த வாக் அம்ருத கீத வஸீ கார வலையாலே தங்கள் பூர்வ க்ருத கர்வம் எல்லாம்
செவி வழி சுருக்குண்டு

நம் பரபரமன்று என்று நாணி
இனி வாத்ய கோஷ ப்ரகாஸ பிரஸித்தி நமக்குப் பரமோ என்று பூர்வ ஸ்ம்ருதியாலே லஜ்ஜித்து

மயங்கி
அந்த லஜ்ஜா பரிபாகத்தாலே அறிவு கெட்டு

நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே
இனி நாரதாதிகள் வீணை நினைத்து எடுத்தார்கள் ஆகிலும்
சிதில அந்தக்கரண பல ஹானியாலே
நாங்கள் நினைக்கவும்
வாத்தியங்கள் எடுக்கவும் மாட்டோம் என்று கை மறித்து நின்றனரே –

நாங்கள் ஆடுதல் பாடுதல் செய்யும் போது நீங்கள் வாத்யம் எடுக்க வேண்டாவோ
நாங்கள் மறந்து பொகட்ட வீணை முதலானவை நினைத்து எடுத்தோம் என்று
அவர்கள் வந்து அனு வர்த்தித்தாலும்
உங்களுக்கு நாங்கள் வேணுமோ
உங்கள் ந்ருத்த கீதங்கள் தான் போராதோ
உங்கள் மனஸ்ஸாலே செவி யுண்டாய்ப் பார்த்தி கோளாகில்
எங்களைப் போலே கை மறித்து நிற்கை உங்களுக்கும் கர்தவ்யம் என்றால் போலே
நிர்ப் பரத்வ அநு சந்தானத்திலே நிலை நின்றனரே -என்று ஆச்சர்யப்படுகிறார் –

———

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
அவி உணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – 3-6-7- –

பதவுரை

புவியுள்–பூமியிலே
நான் கண்டது ஓர் அற்புதம்–நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் (சொல்லுகிறேன்)
கேளீர்–கேளுங்கள்; (அது யாதெனில்)
பூணி-பசுக்களை
மேய்க்கும்–மேய்க்கா நின்ற
இள கோவலர்–இடைப் பிள்ளைகள்
கூட்டத்து அவையுள்–திரண்டிருக்கின்ற ஸபையிலே
நாகத்து அணையான்–சேஷ சாயியான கண்ண பிரான்
குழல் ஊத–குழலூதினவளவிலே, (அதன் ஓசையானது)
அமார் லோகத்து அளவும் சென்று–தேவ லோகம் வரைக்கும் பரவி
இசைப்ப–(அங்கே) த்வனிக்க (அதைக் கேட்ட)
வானவர் எல்லாம்–தேவர்களனைவரும்
அவி உணா–ஹவிஸ்ஸு உண்பதை
மறந்து–மறந்தொழிந்து
ஆயர் பாடி நிறைய புகுந்து–இடைச்சேரி நிறையும்படி (அங்கே) வந்து சேர்ந்து
ஈண்டி–நெருங்கி
செவி உள் நா–செவியின் உள் நாக்காலே
இன் சுவை–(குழலோசையின்) இனிய ரஸத்தை
கொண்டு–உட் கொண்டு
மகிழ்ந்து–மனங்களித்து
கோவிந்தனை–கண்ண பிரானை
தொடர்ந்து–பின் தொடர்ந்தோடி
என்றும்–ஒரு க்ஷண காலமும்
விடார்–(அவனை) விடமாட்டாதிருந்தனர்-

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் –
காரு காலிலே கரு முகை பூத்தால் போலே
இயல் இசை பண் -என்றால் அறியாத இந்த லோகத்திலே இவற்றின் ஆஸ்ரயத்தோடே சேர்ந்து அறிந்த நான்
இவை மற்ற ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாது
இவ்வாஸ்ரயத்தில் கிடந்தால் அல்லது நிறம் பெறாது என்று அறிந்த நான்

கண்டது
கேட்ட அளவே அல்ல
நெஞ்சு புடை போகாமல் பொருந்தக் கண்டதாய்
நித்ய அபூர்வ போக்யமாய் அத்விதீயமான ஆச்சர்யம் கேளீர்

பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து அவையுள்
கற்றாக்களும் கன்றுகளும் மேய்க்கிற இளம் காலிகளான இடையர் திரண்ட திரளிலே

நாகத் தணையான் குழலூத
திருவனந்த ஆழ்வான் அந வரத பரிசர்யை பண்ணக் கண் வளர்ந்து அருளினவன் குழலூதின ஓசை

அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
நித்ய விபூதி அளவாகச் சென்று பொருந்த

அவி உணா மறந்து
இந்த விபூதியில் உள்ள தேவர்கள் எல்லாரும் யாகாதிகளிலும் ஹவிஸ்ஸூ கொள்ளுகை மறந்து

இவர்களுக்கு தாரகாதிகள் எல்லாம் அம்ருதமாய் இருக்க அது மறந்தார்கள் என்னாது ஒழிந்தது
அபிமான போக கௌரத்தால் இறே

அழைப்பும் அப்பொழுது ஒழியுமது ஒழிய இப்போது ஒழிய ஸஹியார்கள் இறே
மறந்தால் செய்யலாவது இல்லையே

வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து
அங்குள்ளாரும் இங்குள்ளாரும் திருவாய்ப்பாடி நிறையப் புகுந்து

ஈண்டி
இதுக்குள் அடங்காமல் ஈண்டியும்

செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து
செவியாலும் நெஞ்சாலும் நாவால் கொள்ளுகிற ரஸத்தைக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்னுதல்

அன்றிக்கே
செவிக்குள்ளாலே யஹ்ருதயமாகக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்னுதல்

இந்திரியம் இந்த்ரியாந்தரத்தை பஜிக்கும் இறே சிலருக்கு
சிலருக்கு புண்ய லப்த ஞானத்தால் ப்ரார்த்தநா ரூபமாக யுண்டாதல்
இத் திருக்குழல் ஓசை தானே அபேஷா நிரபேஷா கந்துகமாக பிரதிபந்த நிவ்ருத்தியையும் தானே உண்டாக்கி
நாவில் சுவையை செவியில் பிறப்பிக்கும் என்னுதல்

கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே
வாசி அறியாதே பசுக்களும் கன்றுகளும் வாடையில் தொடர்ந்து திரியா நின்றால்
வாசி அறிந்தவர்கள் ஸுலப்யாதி குணங்களில் ஸுகுமார்யாதி குணங்களில் அவன் வியாபாரங்களில்
ஒன்றும் விடாமல் மகிழ்ச்சிக்கு உறுப்பாகையாலே
அவன் போம் இடம் எல்லாம் தொடர்ந்து போவாகாதார் உண்டோ –

————-

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – –

பதவுரை

சிறு விரல்கள் -(தனது) சிறிய கை விரல்கள்
தடவி –(குழலின் துளைகளைத்) தடவிக் கொண்டு
பரிமாற —(அக் குழலின் மேல்) வியாபரிக்கவும்
செம் கண் -செந்தாமரை போன்ற கண்கள்
கோட -வக்ரமாகவும்–வளையும்படியாகவும்
செய்ய வாய் -சிவந்த திருப்பவளம்
கொப்பளிப்ப -(வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும்
குறு வெயர் புருவம் -குறு வெயர்ப் பரும்பின புருவமானது
கூடலிப்ப -மேற் கிளர்ந்து வளையவும்
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
(அக் குழலோசையைக் கேட்ட)
பறவையின் கணங்கள் -பக்ஷிகளின் கூட்டங்கள்
கூடு துறந்து -(தம் தம்) கூடுகளை விட்டொழிந்து
வந்து -(கண்ணனருகில்) வந்து
சூழ்ந்து -சூழ்ந்து கொண்டு
படு காடு கிடப்ப -வெட்டி விழுந்த காடு போலே மெய் மறந்து கிடக்க
கறவையின் கணங்கள் -பசுக்களின் திரள்
கால் பரப்பிட்டு -கால்களைப் பரப்பி
கவிழ்ந்து இறங்கி -தலைகளை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு
செவி ஆட்ட கில்லா -காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன–

சிறு விரல்கள் தடவி பரிமாற
சிறு விரல் தொடக்கமான விரல்கள் என்னுதல்

கரும் கிறுக்கன் குழல் கொடூதின போது -என்கையாலே
பருவத்துக்குத் தகுதியான விரல்கள் என்னுதல்

செம்கண் கோட
இட வணரை இடத்தோளோடே சாய்க்கையாலே அர்த்த கடாக்ஷம்
(அர்த்த கடாக்ஷம் பாதி கண் பார்வை -ஒரு கண்ணை இங்கே வை போல் )
குழலின் நுனியிலே செல்ல
சிவந்த திருக் கண்கள் வக்கரிக்க
கோடுதல்-வக்ரிதல்

செய்ய வாய் கொப்பளிக்க
திருக் கண்களுக்குச் சிவப்பு ஸ்வா பாவிகம் ஆதல்
ஊன்ற கடாஷிக்கையாலே யாதலாம் இறே

திருப் பவளத்துக்கு சிவப்பு ராக நாம ஸாம்ய ப்ரவாஹத்தாலே யாதல்
(ராகம் -சாடு -பண் -சிகப்பு _
ஸ்வா பாவிகமான சிகப்பாதல்
ஒப்பணிதலில் (பூசு சிகப்பு-செயற்கைச் சாயம் ) சிகப்பாதல்

கொப்பளிக்கை யாவது –
குழிழ்கை -அதாவது
பூரக அநில ஸ்புரத்தை -(அநிலம் -காற்று )

குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப
திரு முக மண்டலத்தைத் தாழ்த்துத் தன் திருப் புருவங்களை மேலே நெளித்தெடுத்து
கானகம் படி யுலாவி யூதுகிற யாசத்தாலே ஸ்வேத பிந்துக்கள்
முத்து அரும்பினால் போலே மிகவும் தோன்ற

கோவிந்தன் குழல் கொடூதின போது
கோ ரக்ஷணார்த்தமாக இறே குழலூத வேண்டிற்று
மேல் அருளிச் செய்தவை எல்லாம் யாதிருச்சிகமாக யுண்டானது இறே

பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
பக்ஷி ஜாதங்கள் தம்தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டுக்
குழலோசை வழியே வச வர்த்திகளாய்
ஆஸ்ரயத்து அளவும் வந்து சூழ்ந்து எதிர் செறிக்க மாட்டாமல்
க்ருஹீத அம்சத்து அளவே கொண்டு
வேர் அற்று விழுந்த மரங்கள் போலே அவசமாய்க் கிடக்க –

கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே
கவிழ்ந்து நிலம் பார்த்து இறங்கி
கால் பரம்ப விரித்து
இட்ட கால் இட்ட கை -என்னுமா போலே
செவி அசைக்கில் இசைக்கு பிரதிபந்தகமாம் என்று –

(இங்கு பலராமாநுஜர் குழல் ஓசைக்கு வசமாக கறவைக் கணங்களும் பறவைக் கணங்களும் )

உடையவர் முதலான நம் பூர்வாச்சார்யர்கள் அர்த்த விசேஷங்களைக் கேட்டவர்கள்
பூர்வ அவஸ்தையும் குலைந்து
வாஸனையும் மறந்து
உபகார ஸ்ம்ருதியாலே சிரஸ் கம்பமும் செய்ய மாட்டாமல்
ஸ்வ யத்ன நிவ்ருத்தியிலே நெஞ்சாய்க் கிடக்குமா போலே இறே
இவை தான் கிடக்கிற பிரகாரம் –

———–

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –

பதவுரை

திரண்டு எழு–திரண்டுமேலெழுந்த
தழை–தழைத்திராநின்ற
மழை முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–வடிவுடைய கண்ணபிரான்
செம் கமலம் மலர் சூழ்–செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள
வண்டு இனம் போலே–வண்டுத் திரளைப் போன்று
சுருண்டு இருண்ட–சுருட்சியையும் கறு நிறத்தையுமுடைய
குழல்–திருக் குழல்களானவை
தாழ்ந்த–தாழ்ந்து அலையப் பெற்ற
முகத்தான்–முகத்தை யுடையவனாய்க் கொண்டு
ஊதுகின்ற–ஊதுகிற
குழல் ஓசை வழியே–குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு)
மான் கணங்கள்–மான் கூட்டங்கள்
மருண்டு–அறிவழிந்து
மேய்கை மறந்து–மேய்ச்சலையும் மறந்து
மேய்ந்த–வாயில் கவ்வின
புல்லும்–புல்லும்
கடைவாய்வழி–கடைவாய் வழியாக
சோர–நழுவி விழ,
இரண்டு பாடும்–முன் பின்னாகிற இரண்டு அருகிலும்
துலுங்கா–(காலை) அசைக்காமலும்
புடை–பக்கங்களில்
பெயரா–அடியைப் பெயர்ந்து இட மாட்டாமலும்
எழுது சித்திரங்கள் போல நின்றன-(சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமை போலத் திகைத்து நின்றன-

திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால்
பசும் தழை செறிந்தால் போலேயும்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலேயும்
விளங்கா நின்ற திரு நிறத்தை யுடையவன்
அலர்ந்து சிவந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து இருந்தால் போல்
குழல் இருந்து சுருண்டு தாழ்ந்த முகத்தான்

ஊதுகின்ற குழலோசை வழியே
ஊதா நின்றுள்ள திருக் குழல் ஓசை செவிப்பட்ட வழியே

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
மான் கணங்கள் மருண்டு மேய்கை மறந்து
மான் திரள்கள் அறிவு கெட்டு
ஸஜாதி விஸஜாதி பஷ்ய அபஷ்யம் பாத்ய பாதகங்கள் என்கிற வெல்லாம் வாஸனையோடே கெட்டு
ஒன்றுக்கு ஓன்று முலை கொடுப்பது
ஒன்றின் முலையை ஓன்று உண்பது
பின்னையும் புல்லில் மேய்வதாய்
அது தன்னையும் மறந்து கவ்வின புல்லும் இறக்குதல் உமிழ்தல் செய்ய மாட்டாத
அவஸ்தா அதிசயத்தாலே கடை வாய் வழியே சோர

இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா
முன்னும் பின்னும் இரண்டு பக்கமும் அசையாமல்

வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே
சித்திரத்தில் எழுதினவற்றுக்கு ஸ்புரத்தை-அசைவு- உண்டாகிலும் இவை ஒருப்படவே நின்றன
உலாவி உலாவி ஊதின குழல் ஓசை வழியே செல்லவும் கூடும் இறே

இத்தால்
ஆச்சார்ய உபதேச மார்க அநு சாரிகளாய் –
பூர்வ அவஸ்தையில் ஸ்வாபாவிகமான ஜாதி வர்ணத்தில் விரோதிகளாய் போந்தவற்றில் மருட்சியும்
ஸ்வ யத்ன போகத்தில் விஸ்ம்ருதியும்
ஸ்வ யத்ன ஸித்த அபிமான போஜ்யத்தில் உதாஸீனமும்
பூத காலத்தில் ப்ராப்த புருஷார்த்தம் ஸ்வ யத்ன ஸாத்யம் அல்லாதாப் போலே
பவிஷ்ய காலத்திலும் ப்ராப்த புருஷார்த்தம் ஸ்வ யத்ன ஸாத்யம் அன்று என்றும்
ஞான அனுஷ்டான ஸித்தியும்

(முன்னும் பின்னும் போகாமல் பக்க வாட்டிலும் போகாமல் இருந்து மேய்கை மறந்தது போல் )

தத்வ தர்சனத்தில் காரண வாக்ய விகல்பங்களில் ஸம்ப்ரதாய அபாவத்தால் வருகிற
வியாப்ய வியாபக வ்யுத்பத்தி ப்ரஸித்திகளில் அஞ்ஞராய்
விஹித அவிஹித கர்ம காமநை களில் –
ஸ்வ ஸ்வாதந்தர்யம் –
அந்நிய சேஷத்வம் -என்கிற புடைகளில் சலியாமையும்
இவை தான் பிரணவ நமஸ்ஸூக்களாலே கழிந்தது ஆகிலும்
தேஹ இந்த்ரியங்களைப் பற்றி வருகிற ஆஹார ஸுவ்ஷ்டவ ப்ராவண்யம் கழிகை அரிது இறே

இதுக்கு
பெரியவாச்சான் பிள்ளை –
இவ் வன்ய சேஷத்வம் கழிவது என் -என்று அருளிச் செய்தார்

வடக்குத் திரு வீதிப்பிள்ளையும்
இந்திரிய கிங்கரத்வமும் சேர வந்ததே -என்றும் அருளிச் செய்தார் இறே

ஸ்ருஜ்யமான சைதன்ய அபாவ வ்யக்திகளுக்கு ஸ்ப்புரத்தை யுண்டாக்கிலும்
(ஞானம் இல்லாத மரங்கள் அசைந்தாலும் )
ஆச்சார்ய உபதேச பாரதந்தர்ய பிரதானமான
ஞான அனுஷ்டானங்களிலே ஸ்த்திதரானவர்களுக்கு
ஸ்வாதீந ஸ்ப்புரத்தை இல்லை என்று காட்டுகிறது –

பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கினான் -என்று இறே
இவர்கள் நினைத்து இருப்பது –
(ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்றே இருப்பார்களே )

———

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதகவாடை
அரும் கல வுருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3 6-10 –

பதவுரை

கருங்கண்–கறுத்த கண்களையுடைய
தோகை–தோகைகளை யுடைய
மயில் பீலி–மயில்களின் இறகுகளை
அணிந்து–(திரு முடி மேல்) அணிந்து கொண்டு
நன்கு கட்டி உடுத்த–நன்றாக அழுந்தச் சாத்தின
பீதகம் ஆடை–பீதம்பரத்தையும்
அரு கலம்–அருமையான ஆபரணங்களையும்
உருவின்–திரு மேனியை யுடையனான
ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;
மரங்கள்–(அசேதநமான) மரங்களுங் கூட
நின்று–ஒருபடிப்பட நின்று
(உள்ளுருகினமை தோற்ற)
மது தாரைகள்–மகரந்த தாரைகளை
பாயும்–பெருக்கா நின்றன;
மலர்கள்–புஷ்பங்களும்
வீழும்–(நிலை குலைந்து) விழா நின்றன;
வளர்–மேல் நோக்கி வளர்கின்ற
கொம்புகள்–கொம்புகளும்
தாழும்–தாழா நின்றன;
இரங்கும்–(அம்மரங்கள் தாம்) உருகா நின்றன
கூம்பும்–(கை கூப்புவாரைப் போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன;
(இவ்வாறாக)
அவை–அந்த மரங்கள்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி–கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப் பக்கங்களை நோக்கி,
செய்யும் குணம் ஏ–செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்!
[என்று வியக்கிறபடி]-

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதகவாடை
கருகின தலைச் சுழிக் கண்ணை யுடைத்தான தோகை மயில் பீலியைத் திருமுடியில் சாத்தி
நன்றாக திருவரை பூத்தால் போலே அழுத்தச் சாத்தின திருப் பீதாம்பரமும் –

அரும் கல வுருவின் ஆயர் பெருமான்
பெறுதற்கு அரிதான திரு ஆபரணங்களும்
அவற்றின் இடையில் கரு மாணிக்கம் போலே தோன்றுகிற திருமேனியில் காட்டிலும்
மிகவும் பிரகாசிக்கிற நீர்மையை யுடையவன்

அவன் ஒருவன்
ப்ரசித்தவனுமாய்
அத்விதீயனுமானவன்
நீர்மையில் மேன்மை தரை காண ஒண்ணாதவன்

குழலூதின போது
தனக்குத் தகுதியான குழலை அபிமானித்து ஊதின போது

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
தேவ திர்யக் மனுஷ்யாதி ஜாதிகள் வச வர்த்திகள் ஆகிற அளவே அன்றிக்கே
ஞான கர்ம இந்திரியங்கள் மிகவும் குறைந்த வ்ருக்ஷங்களும் நீர்ப் பண்டமாம் படி
உடலுருகி மதகு திறந்தால் போலே ப்ரவஹியா நின்றன

மலர்கள் வீழும்
புஷ்பாதிகள் எல்லாம் மதுஸ்யந்திகளாய்
ஆஸ்ரயத்தையும் நெகிழ்ந்து பதிதமாகா நின்றது

வளர் கொம்புகள் தாழும்
ஊர்த்வ கதியைப் பிராபிக்கிற சாகைகள் எல்லாம் ஆஸ்ரயத்தோடே தாழா நிற்கும்

இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே
1-காவலும் கடந்து சூழ்ந்த கோவலர் சிறுமியர் போலவும்
2-வானிளம் படியர் போலவும்
3-மகிழ்ந்து தொடர்ந்து விடாத தேவ ஜாதி போலவும்
4-குழல் ஓசை வழியே வந்து இரண்டு பாடும் துலங்காத ம்ருக ஜாதி போலவும்
5-கூடு துறந்து வந்து படுகாடு கிடந்த பக்ஷி ஜாதி போலவும்

கத்யாதிகளால் வந்த யோக்யதா பாவத்தாலே குழல் ஓசை ஒழிய
ஆஸ்ரயித்து அளவும் செல்லப் பெறாமல் ஈடுபடுவது

இரக்கம் -ஈடுபாடு

உலாவி உலாவி நின்று ஊதின குழல் ஓசை வழியே அவன் நின்ற பக்கம் நோக்கித்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணிவாரைப் போலே
தாழ்ந்த கொம்புகளும் தன்னிலே குவியா நின்றன
அவை செய்யும் குணமே என்று ஆச்சர்யப்படுகிறார்

இசை வழியே கல் உருகா நின்றால்
மரம் உருகச் சொல்ல வேணுமோ

இத்தால்
தேவாதி பதார்த்தங்களில் ஆச்சார்ய வசனத்துக்கு உருகாதார் இல்லை என்றதாயிற்று –
பிள்ளை லோகாச்சார்யார் -பெருமாள் உம்முடன் அன்வயம் உள்ளார் எல்லாருக்கும்
நம் வீடு கொடுக்கக் குறையில்லை என்று திரு உள்ளமான பின்பு
தூரஸ்தமான வ்ருக்ஷங்களை எல்லாம் கடாக்ஷிப்பது
ஆஸன்னமான வ்ருக்ஷங்களை எல்லாம் திருக் கைகளால் ஸ்பர்சநாதிகளை யுண்டாக்குவது
நித்ய சம்சாரிகளுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
தம்மோடே அந்வயம் உண்டாம்படி செய்து அருளினார் -என்று பிரஸித்தம் இறே –

————-

நிகமத்தில் இத் திருமொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –

பதவுரை

இருண்டு சுருண்டு ஏறிய–கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த
குழல் குஞ்சி–அலகலகான மயிர்களை யுடையனான
கோவிந்தனுடைய–கண்ண பிரானுடைய
கோமள வாயில்–அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற)
குழல்–வேய்ங்குழலினுடைய
முழஞ்சுகளினூடு–துளைகளிலே
குமிழ்த்து–நீர்க் குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று)
கொழித்து எழுந்த–கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின
அமுதம் புனல் தன்னை–அம்ருத ஜலத்தை
குழல் முழவம் விளம்பும்–குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும்
புதுவை கோன்–ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரிந்த–விஸ்தாரமாகக் கூறிய
தமிழ்–இத் தமிழ்ப் பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி–திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித்
தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய்
சாது கோட்டியுள்–ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில்
கொள்ளப் படுவார்–பரிக்ரஹிக்கப் படுவார்கள்–

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் -சுருட்சி
இருள் -கருமை –
குஞ்சி -மயிர்
ஏறிய -பொருந்திய
கோவிந்தன் -ஸூலபன்
கோவிந்தனுடைய கோமள வாயில்
மஹார்க்கமான மாணிக்கம் போலே சிவந்த திருப் பவளம் என்னுதல்
நன்மை யுடைத்தாய் விளங்கா நின்றது என்னுதல்

குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை குழல் முழவம் விளம்பம்
குழலினுடைய ஸூ ஷிகளோடே சிறு திவலைகளாய்
ஸப்த த்வாரங்களாலே கிளம்பி
இழிந்த வாக் அம்ருதப் புனல் தன்னை
அதில் கிளம்பின ஸ்வர வசன வ்யக்திகளினுடைய ஓசை தன்னை

தன்னை -என்றத்தாலே
இவை பிரதிபத்தி பண்ணிச் சொல்லுதலில் உண்டான அருமையும் தோற்றுகிறது

புதுவைக் கோன்
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

விட்டு சித்தன்
வட பெரும் கோயிலுடையான் உடைய சித்தத்தில் வர்த்திக்கிறவர் என்னுதல்
தம்முடைய சித்தத்தில் அவன் தன்னை யுடையவர் என்னுதல்
இது இறே நாராயண சப்தத்தில் ஸமாஸ த்வய த்தாலும் தோற்றுவதும் –

விரித்த தமிழ் வல்லார்
இவர் தாம் தம் அளவில் பிரதிபத்தி பண்ணி இராமல் திரு மாளிகையில் எல்லாரும் ஓதி –
ஓதுவித்து அறியும்படி சிஷ்ய ஆச்சார்ய க்ரமத்தை விரித்த தமிழ் வல்லார்
குழல் -என்றது வ்யாஜ்யம் இறே
இதை ஸ அபிப்ராயமாக வல்லவர்

குழலை வென்ற குளிர் வாயினராகி
குழலில் ஸ்வர வசன
வ்யக்திகளால் வந்த குளிர்ச்சியும் உஷ்ணம் என்னும்படி குளிந்த மிருது பாஷிகளாகி

சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே
சதாசார்ய உபதேஸ பாரதந்தர்ய தத் பரரானவர்களுடைய திரளுக்குள்ளே கொள்ளும் படி அங்கீ க்ருதராவார்

சாதி கோட்டிப் படுவாரே
அவர்களுடைய சமீபத்தில் சென்றால் இறே இவர்களுடைய ஸத் பாவம்

சாதி கோட்டி கொள்ளப் படுவாரே
அவர்கள் அங்கீ கரித்தால் இறே இவர்கள் அதிகாரிகள் ஆவது

சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே
இக் கூட்டம் பிரிந்து போய் தம் தாம் திரு மாளிகையிலே புகுந்தாலும்
இவர்கள் நெஞ்சால் மறக்க மாட்டாமல் கொண்டாடுவதும் இவர்கள் அதிகார பாகம் இறே

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: