ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-5–அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்—

கீழே –
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி-என்ற
அதி மானுஷம் உள்ளத்தில் ஊன்றிய படியால்
அந்த மலையில் உண்டான விசேஷங்களையும்
அந்த மலையினுடைய ஆயாம விஸ்தீர்ணத்தையும்
அதனுடைய கனத்தையும்
அதில் எடுக்கையில் உண்டான அருமையையும்
அதை பிடுங்கி எடுத்த அநாயஸத்வத்தையும்
அது எடுக்க வேண்டிய ஹேதுக்களையும்
அந்த ஹேதுக்களால் வந்த ஆபத்துக்களை போக்கின பிரகாரத்தையும்
அனுசந்தித்து
இவனே ஆபத் விமோசகன் என்று நிர்ணயிக்கிறார் –

——

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 –

பதவுரை

குற மகளிர்–குறப் பெண்கள்,
வட்டம் தட கண்–வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும்
மடம்–(தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான
மான் கன்றினை–மான் குட்டியை
வலை வாய்–வலையிலே
பற்றிக் கொண்டு–அகப் படுத்தி
(பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு)
கொட்டை–பஞ்சுச் சுருளின்
தலை–நுனியாலே
பால்–பாலை
கொடுத்து–எடுத்து ஊட்டி
வளர்க்கும்–வளர்க்கைக்கு இடமான
கோவர்த்தனம் என்னும்–‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும்
கொற்றம்–வெற்றியை யுடையதுமான
குடை–குடையானது (யாதெனில்?)
அட்டு–சமைத்து
குவி–குவிக்கப் பட்ட
சோறு–சோறாகிற
பருப்பதமும்–பர்வதமும்
தயிர்–தயிர்த் திரளாகிற
வாவியும்–ஓடையும்
நெய் அளறும்–நெய்யாகிற சேறும்
அடங்க–ஆகிய இவற்றை முழுதும்
பொட்ட–விரைவாக (ஒரே கபளமாக)
துற்றி–அமுது செய்து விட்டு,
(இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக)
மாரி–மழையாகிற
பகை–பகையை
புணர்த்த–உண்டாக்கின
பொரு மா கடல் வண்ணன்–அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான்
பொறுத்த–(தனது திருக் கைவிரலால்) தூக்கின
மலை–மலையாம்.

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
கோப ஜனங்கள் வர்ஷ அர்த்தமாக இந்திரனை ஆராதிப்பதாகவும்
அவனாலே தங்கள் ரக்ஷை படுவதாகவும்
அவனை அவ்வூரில் முன்புள்ளார் ஆராதித்திப் போந்த பிரகாரங்களிலே தாங்களும் அவனை
மந்திர வீதியில் பூசனை செய்யக் கடவோம் (கலியன் )-என்று
வாசல் வரி வைத்து

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
வாசல்கள் தோறும் இந்த்ரனுக்குத் தகுதியாகப் பேணிச் சமைத்துத் தகுதியாக
துன்னு சகடத்தால் இழுத்துக் குவித்த சோற்று மலையும்

அதுக்குத் தகுதியாக மேல் செய்த உபதம்ஸங்களும்
சோற்று மலைத் தலையிலே தொட்டி வகுத்து விட்ட தயிர் வெள்ளமும்
வெண்ணெய் நெய்யாகிற உள் சேறுகளும்

பருப்பதமும் -பருப்புச் சோறு என்னவுமாம்
அப்போது பருப்புப் பதமாய்
ஒண் சங்கை போலே யாம் இறே (கடை குறை )
பதம் -சோறு -முத்க அன்னம் குட அன்னம் முதலானவை எல்லாம்
அட்டுக்குவி சோறு -என்ற போதே காட்டும் இறே

பருப்பதம் -என்று
செவ்வையாய் பருப்பு முதலாக ஜீவிக்கப்படும் எல்லாத்தையும் காட்டும் இறே –

அடங்கப் பொட்ட துற்று
ஸ்வ தந்த்ரர்க்கு இட்ட இவை ஒன்றும் தொங்காத படி சடக்கென அமுது செய்து –
ஸ்வ தந்த்ர சேதனர்க்கு இடுமதில் பரதந்த்ரமான அசேதனத்துக்கு இடுமது கார்ய கரம் ஆகக் கூடும் என்று
ஏற்கவே கற்பிக்கவே -அந்த கோப ஜனங்களும் கைக்கொண்டு இருக்கச் செய்தேயும்
இன்னமும் இவர்கள் நாங்கள் முன்பு செய்து போந்த மரியாதை செய்ய வேணும் என்று விலக்கவும் கூடும்
என்று த்வரையோடே
கோவர்த்தனோஸ்மி -என்று அமுது செய்தான் இறே –

அடங்க
ஒன்றும் தொங்காமல்
தேவதாந்தரங்களுக்கு என்று கல்பித்தவை தான் ஆதரிக்கலாம் இறே –
அனுபிரவேசிக்கவும் தேவதாந்த்ர அந்தர்யாமியாகவும் வல்லவன் ஆகையால் –
அது தனக்குப் பரதந்த்ரர் ஆனவர்களுக்கும் தான் அவதரித்த அவ்வூரில் உள்ளவர்களுக்கும் ஆகாது என்று இறே
தானே அடங்க அமுது செய்தது –

ஆகையிறே –
அட்டு -என்றும் –
சோறு -என்றும் -சொன்னவை இன்றும் நம்முள்ளார் வர்ஜித்துப் போருகிறதும்

மாரிப் பகை புணர்த்த
இந்திரன் பசிக் கோபத்தாலே ஏவின மாரிப் பகையை விளைக்கும் படி விளைத்த

பொரு மா கடல் வண்ணன்
திரை பொருகிற கடல் போல் ஸ்ரமஹரமான திரு மேனியை யுடையவன் –
பூசல் விளைக்கையாலே -பொரு மா கடல் வண்ணன் -என்கிறது
அன்றிக்கே
பொரு மாரிப்பகை புணர்த்த மா கடல் வண்ணன்-என்னவுமாம்
மா கடல் வண்ணன்–என்கையாலே
துர் அவகாஹமான சமுத்திரத்தை அளவிட்டாலும்
ரஷ்யத்து அளவில்லாத ரக்ஷகத்வம் அளவிட ஒண்ணாது என்கிறது

பொறுத்த மலை
ஒரு படி வருந்தி எடுத்தாலும்
இந்திரன் கோபம் தணிந்து ப்ரஸன்னனாய் வரும் அளவும் பொறுத்து நின்ற அருமை சொல்லுகிறது –

வட்டத் தடம் கண் மடமான் கன்றினை
வ்ருத்த ஆகாரமாய் இடமுடைத்தான கண்ணையும்
தாயினுடைய இங்கித சேஷ்டிதாதிகளுக்கு பவ்யமான மடப்பத்தையும் யுடைத்தான மான் கன்றுகளை –

வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
அம் மலை மேல் வர்த்திக்கிறவர்கள் சூழ் வலைக்குள் ஆக்கிப் பிடித்துக் கொண்டு போய்த் தங்கள் இடங்களிலே
குறப் பெண்கள் கையிலே காட்டிக் கொடுக்க அவர்கள்

கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
ரஷியா நிற்பார்கள் ஆயிற்று
கொட்டை -பஞ்சுச் சுருள்
பஞ்சுச் சுருளைப் பாலில் தோய்த்து முலை என்று கொடுப்பார்கள் ஆயிற்று –

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
புல்லாலும் தண்ணீராலும் நில வாசியாலும் கோக்களை வர்த்திப்பிக்கிற ப்ரஸித்தியை யுடைத்தான பர்வதம்

கேவலம் வர்ஷம் இன்றிக்கே கல்லும் தீயுமாகச் சொரிகிற மாரி காக்கைக்கும் உபகரணமாய்
ரஷ்ய வர்க்கத்துக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் செய்து
அவ் வர்ஷத்தை ஜெயிக்கையாலே
கொற்றக் குடை என்கிறது –

வர்ஷத்தைப் பரிஹரிக்கையாலே
குடை என்கிறார்

ஏவகாரம்–ஆச்சர்யத்தாலே –

வட்டம் இத்யாதி –
வர்ணாஸ்ரம வ்ருத்தாந்தத்திலே மிக்க ஞானத்தையும் -(வட்டத் தடம் கண்)
அத்தை உபதேசித்த ஆச்சார்யர் அளவில் பவ்யத்தையும் -(மடமான்)
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியையும் யுடையனாய் இருப்பான் ஒருவனை -(கன்றினை)
(சிஷ்யனுக்கு இம் மூன்றும் சொல்லி )

கடல் வண்ணன் -என்கிற ரூடியும் யோக வியாப்தியும் யுடைத்தாய்
பேர் அளவுடையாரும் வாஸுதேவன் வலையுள் அகப்பட்டு என்னும்படி யானவன்
(கமலக்கண்ணன் என்னும் நெடும் கயிற்றில் அகப்பட்டு-வலை வாய் பற்றிக் கொண்டு )
ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு வாசகமான நாராயண வாசக சப்தத்தாலே
கால த்ரய தர்சிகள் சூழ்ந்து (ஆச்சார்யர்கள் )

தங்கள் வாக்மித்வத்தைக் காட்டி மருவுவித்துப் பிடித்துத்
தங்கள் பரதந்த்ரர் கையில் காட்டிக் கொடுத்து (குற மகளிர்)

தந்து காரணமான பஞ்சிலே (நூலுக்கு காரணம் பஞ்சு ) பால் பால் தோய்த்து வளர்க்கும் -என்கையாலே
ஸகல வேத ஸாஸ்த்ர தாத்பர்யமான (திருமந்திரம் )
சரம பத ( நாராயண )ஸங்க்ரஹ ப்ரக்ருத்யர்த்தமானவனுடைய
ஸர்வ ஸுஹார்த்தத்தை உபதேசித்து ரக்ஷிப்பாருக்குப் போலியாய் இரா நின்றது –
(ப்ரக்ருத்யர்த்தமானவனுடைய -அகாரம் அவ ரக்ஷணம் -ரஷிப்பான்
சாலப் பல நாள் உகந்து அனைவரையும் எப்பொழுதும்
பால் -ஸுஹார்த்த திரு உள்ளம் )

——-

பொறுத்த மலை என்றது பின்னாட்டி
ஏழு நாள் என்கிறது –

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5 -2-

பதவுரை

(இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்)
ஒன்றும் வழு இல்லா செய்கை–ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய
வானவர் கோன–தேவேந்திரனுடைய
வலி பட்டு–பலாத்காரத்துக்கு உள் பட்டும்
முனிந்து விடுக்கப்பட்ட–(அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள
மழை–மேகங்களானவை
வந்து–(அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து
ஏழு நாள் பெய்து–ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து
மா தடுப்ப–பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய
மதுசூதன்–கண்ணபிரான்
எடுத்து–(ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து
மறித்த–தலை கீழாகப் பிடித்தருளின
மலை–மலையானது (எது என்னில்;)
இள சீயம்–சிங்கக் குட்டியானது
தொடர்ந்து–( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து
முடுகுதலும்–எதிர்த்த வளவிலே,
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி–(தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது
குழவி–(அந்தக்) குட்டியை
கால் இடை இட்டு–(தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு
எதிர்ந்து–(அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து
பொரும்–போராடப்பெற்ற
கோவர்த்தனம் –குடையே-.

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு
அ கரேண ப்ரத்ய வாய பரிஹாரமான யோக்யதா பூர்வகமான ஸாதனத்தை –
பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வ அங்கமாக
த்ரவ்ய மந்த்ர க்ரியா லோபம் வாராமல் அனுஷ்ட்டித்து
இந்த்ர பதத்தைப் பெற்று அனுபவிக்கிற காலத்திலும்
ஆஜ்ஜாதிலங்கன பரிஹாரத்தில் வழுவில்லா செய்கையும் யுடையவனாய்
தேவ தேவன் என்ற ப்ரஸித்தியும் யுடையவனாய் வலி இறே இவனுக்கு உள்ளது
(கோவிந்த பட்டாபிஷேகம் பரிஹாரமாக செய்தானே )

வலிப்பட்டு –
அவனுடைய வலியில் அகப்பட்டு

முனிந்து விடுக்கப்பட்ட
பலத்துக்கு மேலே பசிக் கோபத்தாலே தாமரைக் காடு வெடித்தால் போலே
ஆயிரம் கண்ணும் சிவக்கும் படி கோபித்து
ஆயிரம் கண்ணுடை இந்த்ரனார் -(கலியன் )-என்னக் கடவது இறே

விடுக்கப்பட்ட –
ஏவப்பட்ட

மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப
ஏழு நாள் மாத்தடைப்ப மழை பெய்து
ஏழு நாள் இடைவிடுதி யற மழை பெய்து

மது சூதன் எடுத்து மறித்த மலை
விரோதி நிரசன சீலனாவன் எடுத்துத் தலைகீழாக மறித்த மலை –

இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி
தன் கன்றின் பக்கலிலே ஸ்நேஹ அதிசயத்தாலே ஈன்ற பிடியானது

இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
வயஸ்ஸாலே இளைய ஸிம்ஹமானது
அவ் வானைக் கன்றைத் தொடர்ந்து வந்து கிட்டப் புகுந்த அளவிலே
அந்தக் கன்றைத் தன் காலுக்குள்ளே இட்டு
அந்த ஸிம்ஹக் கன்றோடே பொரா நிற்கிற மலை
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே

(ஆச்சார்யன் ஸிஷ்யனை தனது திருவடிக்கீழ் இட்டு
வாசனைகளால் வரும் கர்ம ப்ரவ்ருத்தி ஸிம்ஹக் கன்று இடம் இருந்து
ரக்ஷணம் செய்து அருளுவதைச் சொன்னவாறு )

——-

அம் மை தடம் கண் மட வாய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று
கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5- 3-

பதவுரை

அம்–அழகிய
மை–மை அணிந்த
தட–விசாலமான
கண்–கண்களையும்
மடம்–‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய
ஆய்ச்சியரும்–இடைச்சிகளும்
ஆன் ஆயரும்–கோபாலர்களும்
ஆநிரையும்-பசுக்கூட்டமும்
அலறி–(மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு
எம்மை சரண் என்று கொள் என்று–(‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று
இரப்ப–பிரார்த்திக்க,
(அவ்வேண்டுகோளின்படியே)
இலங்கு–விளங்கா நின்ற
ஆழி–திருவாழி ஆழ்வானை
கை–கையிலே உடையனாய்
எந்தை–எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான்
எடுத்த–(அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த
மலை–மலையாவது (எது என்னில்?);
கொம்மை புயம்–பருத்த புஜங்களை யுடைய
குன்றர்–குறவர்கள்,
தம்மை–தங்களை
சரண் என்ற–சரணமென்று பற்றியிருக்கிற
தம் பரவையரை–தங்கள் பெண்களை
(கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து)
புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று–‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற
மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி-போதரிக் கண்ணினாய் -மான் போன்ற போல் )
(அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக)
சிலை–(தமது) வில்லை
குனிக்கும்–வளையா நின்றுள்ள

அம் மை தடம் கண் மட வாய்ச்சியரும்
அஞ்சன அலங்க்ருதமான அழகிய பெரிய கண்களையும்
ஸ்வா பாவிகமான மடப்பத்தையும் யுடையரான இடைச்சிகளும்

ஆன் ஆயரும்
கோ ரக்ஷணத்தில் குசலரான இடையரும்

ஆநிரையும்
அவர்களுக்கு வச வர்த்தியான பசுக்களும்

அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப
வர்ஷ வேகத்தாலே கிலேசிக் கூப்பிட்டு -எங்களை நாங்கள் ரஷிக்கக் கடவோம் அன்று என்று கொள் –
நீயே எங்களுக்கு ரக்ஷகன் -என்று பிரார்த்திக்க

இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை
அதி பிரகாசமான திருவாழி ஆழ்வானாலே
ஜலதத்வம் எல்லாத்தையும் சோஷிப்பித்துக் கார்யம் கொள்ள வல்லனாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் த்வராதிசயத்தாலே இறே மலையை எடுத்தது –
ஆழ்வானுக்கு பிரகாசம் -கருதும் இடம் பொருகை இறே

எந்தை
இந்த மலையை எடுத்த பின்பு இறே அவர்கள் ஸ்ருஜ்யர் ஆய்த்து –
ஆகை இறே எந்தை என்கிறது

எந்தை -காரண பூதன்

தம்மை சரண் என்ற தம் பாவையரை
தங்களை சரணம் புக்குத் தங்களுக்குப் பரதந்த்ரை ஆனவர்களுக்கு

புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும்
புனத்தை அழித்து மேய்கிற மான் திரள்களை
நாங்கள் மேய்கிற புல்லோடே பட்டு விழும்படி எய்யப் புகுகிற படியைப் பார்த்து நில்லுங்கோள்
என்று சொல்லி பெரிய தோளை யுடையராய்
அம் மலை மேலே வர்த்திக்கிற குன்றுவர் விற்களை வளையா நின்றுள்ள –

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே

இத்தால்
பெரு மதிப்பனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த மாத்ரம் அன்றிக்கே
அவன் நம்முடையவன் என்னும்படி அபிமானத்திலே ஒதுங்கி
அவனுக்குப் பரதந்த்ரரானவர்களை அஞ்ஞாத ஞாபநம் பண்ணும் பிரகாரத்தை
அனுஷ்டான பர்யந்தமாக பிரகாசிப்பித்தாக நினைத்து
ஆஸ்ரயண மாத்ரத்தில் நின்று ஆச்சார்ய வசன பரிபாலனமே ஒழிய அறியாதவர்களை
பாஹ்ய குத்ருஷ்ட்டி மத அநு சாரிகளானவர்கள் தங்கள் வாக்மித்வங்களாலே நலிகிற அளவைக் குறித்து
யூயம் இந்திரிய கிங்கர –இத்யாதி (வில்லி புத்தூர் பகவர் வார்த்தை )
எங்கள் குழுவினால் புகுதல் ஒட்டோம் என்னச் செய்தேயும் மதியாமல் புகுந்து நலிகிறவர்களை
மங்களா ஸாஸன பரிகரமான தாந்த ரூப ஞான விசேஷண ப்ராமண சரங்களாலே
நிரசிப்பார்க்குப் போலியாய் இரா நின்றது –
(சாந்தி தாந்த -புலன் அடக்கம் –
ஞான விசேஷ பிரமாணங்கள்-சரங்கள் – சொல்லி நிரசிப்பார்கள் )

———–

மலை எடுத்த அநாயாஸத்வம் சொல்லுகிறது –

கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல்
அடி வாய் உற கை இட்டு எழ பறித்திட்டு அமரர் பிரான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப் பட நீர் முகந்து எறி எங்கும்
குட வாய்ப்பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-4- –

பதவுரை

கடுவாய்-பயங்கரமான வாயையும்
சினம்–மிக்க சீற்றத்தையும்
வெம் கண்–தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய
களிற்றினுக்கு–ஒரு யானைக்கு
கவளம்–சோற்றுக் கபளத்தை
எடுத்து–திரட்டி யெடுத்து
கொடுப்பான் அவன் போல்–கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல,
அமரர் பெருமான்–தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான்
(யானை மேகம் -கவளம் மலை -பாகன் கண்ணன் போல் )
கை–(தனது) திருக் கைகளை
அடிவாய் உற இட்டு–(மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து)
எழ பறித்திட்டு–கிளரப் பிடுங்கி
கொண்டு நின்ற–(தானே) தாங்கிக் கொண்டு நின்ற
மலை–மலையாவது (எது? என்னில்;)
மேகம்–மேகங்கள்
கடல் வாய் சென்று–கடலிடத்துச் சென்று
இறங்கி கவிழ்ந்து–(அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து
கதுவாய்ப்பட–(கடல்) வெறுந்தரையாம்படி
நீர்–(அங்குள்ள) நீர் முழுவதையும்
முகந்து–மொண்டு கொண்டு
ஏறி–(மீண்டும் ஆகாசத்திலே) ஏறி
எங்கும்-எல்லாவிடத்தும்
குடம் வாய்ப்பட நின்று–குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே
மழை பொழியும்–மழை பொழியா நிற்கப் பெற்ற
கோவர் – குடையே-.

கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு
கடிய வாயையும்
மிக்க கோபத்தையும்
நெருப்பு பரந்த கண்களையும்
யுடைய யானைக்கு

கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல்
கவளத்தைத் திரட்டி எடுத்துக் கொடுக்கிற பாகனைப் போலே

கடு வாய்
மேகம் முழங்குமா போலே பிளிறுதலையும் வேகத்தையும்

வெம் கண்
மின் போலவும் இடி நெருப்புப் பரந்தாப் போலவும் பொறி பரந்த கண்ணையும் யுடைத்தான
களிற்றினுக்கு –

ஆனை யினுடைய ஸ்தானத்திலே மேகம் ஆகவுமாம்
கரிய மா முகில் –கவளத்தினுடைய ஸ்தானத்திலே மலை ஆகவுமாம்
பாகனுடைய ஸ்தானத்திலே கிருஷ்ணன் ஆகவுமாம் –

அடி வாய் உற கை இட்டு
மலையினுடைய வேர் நின்ற இடத்தே திருக்கையை உறச் செல்லும் படி

எழ பறித்திட்டு
மற்றத் திருக்கையாலே கிளறும்படியாகப் பறித்து

அமரர் பிரான் கொண்டு நின்ற மலை
இந்திரன் பேர் மாறினபடி யாதல்
ஸூரி நிர்வாஹகன் என்னுதல்
ஸூரி நிர்வாஹகன் தரித்து நின்ற மலை

கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப் பட நீர் முகந்து எறி எங்கும்
கடல் இடம் எங்கும் மேகங்கள் மிகவும் தாழ்ந்து பிபாஸை வர்த்தித்தாரைப் போலே நீர் முகந்து ஏறி என்னுதல்
இந்திரன் கன்றிச் சொன்னது செய்ய வேணும் என்றாதல்
தீ மழை யாகையாலே பட்டவிடம் வேம்படி வெந்நீர் சொரிந்தால் போலே என்னுதல்

அன்றியே
கது -என்று க்ரதுவாய்
அவற்றை ப்ரவாஹ ஜலம் எடுக்கும்படி என்னுதல்

குட வாய்ப்பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
குடுத்து இட்டுச் சொரிந்தால் போலே
ஏழு நாள் நின்று மழை சொரிய
மழை வந்து ஏழு நாள் -என்னக் கடவது இறே

இத்தால்
ஸம்ஸாரத்தில் ஸ்வார்த்தமான எப்பேர்ப்பட்ட ருசிகளும் அற்று
அந்தரிக்ஷத என்னுமா போலே
ஸம்ஸார ஸாஹரத்தில் உண்டான நீர்மையை மிகவும் தாழ்ந்து அங்கீ கரித்து
அந்த அங்கீ காரத்தைத் தங்கள் அதிகாரம் குன்றாமல்
(மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் )
மீண்டும் அந்தரிக்ஷத்தில் ஏறி
தங்கள் பற்று அறுதியையும்
தங்கள் அங்கீ கரித்த நீர்மையையும்
ஸ்வரூப ப்ரகாஸ ப்ரதானமாகவும்
லோக ஸங்க்ரஹ தயா கர்தவ்யமாகவும்
வ்யவசாய ஸ்தலங்களிலே உபகரிக்கும் அவர்களுடைய பெருமையைக் காட்டும்படியான
மேகங்கள் இறே முன்பு

அது துர்மான புருஷர்களுக்கு வச வர்த்தியாய்
பகவத் பரதந்த்ரரை நலிவதாக
ஸம்ஸார ஸாஹரத்தில் ஊஷர ஜலத்தைப் பானம் பண்ணி
பாஷாண அக்னிகளோடே வர்ஷியா நின்றது இறே

இதுக்கு அடி அந்நிய சேஷத்வம் இறே
அது தனக்கும் அடி முன்பு போந்த பகவதாஜ்ஞாதிலங்கனம் இறே –

(த்ரேதா யுகத்தில் பெருமாள் -ஆணை இட்டு சரண் அடைந்து –
வருணன் -மேகம் -கடல் அரசன் -ஒன்றே தானே
அபசாரம் பட்டதால்
இந்திரனுக்கு வசப்படும்படி ஆனது )

———

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-5 –

பதவுரை

ஏனத்து உரு ஆகிய–(முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின
ஈசன்–ஸ்வாமியாயும்
எந்தை–எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான்,
வானத்தில் உள்ளீர்–“மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்)
வலியீர் உள்ளீர் எல்–(என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில்
அறையோ–அறையோ அறை!!
வந்து–(இங்கே) வந்து
வாங்குமின்–(இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்”
என்பவன் போல்–என்று, சொல்லுகிறவன் போல
இடவன்–ஒரு மண் கட்டி போலே
எழ வாங்கி–(அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி
எடுத்த மலை–எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது;
கானம்–காட்டு நிலங்களில்
களி–செருக்கித் திரியக் கடவதான
யானை–ஒரு யானையானது
(கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த)
தன் கொம்பு–தன் தந்தத்தை
இழந்து–இழந்ததனால்
கதுவாய்–அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே
மதம்–மத நீரானது
சோர–ஒழுகா நிற்க
தன் கை–தனது துதிக்கையை
எடுத்து–உயரத் தூக்கி
(ஆகாசத்தில் தோற்றுகின்ற)
கூன் நல் பிறை–வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து)
வேண்டி–(அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி
அண்ணாந்து நிற்கும்–மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற
கோவா — குடையே-

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
இதுவும் ஒரு உத்ப்ரேஷையான உப மானம்
உபரிதன லோகங்களிலே வஸிக்கிறோம் என்கிற பலத்தை யுடையவர்களே
அதுக்குத் தகுதியான வர பல புஜ பலங்களை யுடையீர்
என்னைப் போலே வல்லி கோளாகில் என் கையில் மலையை வாங்கிப் பொறுத்து
இவ்வூரை ரஷியுங்கோள் -என்னுமா போலே
அரஷகர் இறே உள்ளது –

ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
ஈசன் -நியந்தா
எந்தை -காரண பூதன்

இத்தால்
ஞானமும் சக்தியும் பிராப்தியும் யுடையவனாய்
பாதாள கதையான பூமியை ஓட்டு விடும்படி இடந்து
எழும்படி குத்தி எடுத்த மஹா உபகாரகனுக்கு
இம் மலையை ஒரு கட்டி இடந்தால் போலே எடுத்தது பெரியது ஒன்றோ –
அந்தப் பாரத்தை எடுத்து சாதித்தவன் ஆகையாலே இந்தப் பாரம் எடுக்கையும் சேரும் இறே –
(இவனே ஸம்ஸார பாரம் எடுத்து உத்தரிக்க வல்லவன் )

கானக் களியானை தன் கொம்பு இழந்து
தன்னிலமான காட்டிலே களித்து வர்த்திக்கிற ஆனையானது
ஸிம்ஹத்தின் கையில் தன் கொம்பைப் பறி கொடுத்து
அவ்விழவாலே

கது வாய் மதம் சோர தன் கை எடுத்து
அதனுடைய பெரிய வாயாலே அருவி சொரியுமா போலே ரக்தம் சொரிகையாலே மும் மதமும் சுவறும் இறே
கதுவுதல் -பெருமை
சோருதல் -சுவறுதல்

தன் கை எடுத்து
தன் ஆற்றாமையாலே கை எடுத்து

கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
ஆகாசத்திலே பார்த்தவாறே அங்கே வளை ஒளிப் பிறையைக் கண்டு தான் இழந்த கொம்பாகப் பிரமித்து
அத்தை விரும்பி அபேக்ஷித்து ஊர்த்வ த்ருஷ்டியாய் நில்லா நிற்கும் –
ஒரு கொம்பு போலே காணும் இழந்தது –

இத்தால்
சம்சாரம் ஆகிற செடியிலே களித்து வர்த்திக்கை தானே ப்ரார்த்த நீயமான ஆசைக் களிற்றின் மமதை யாகிற கொம்பை
(சம்சாரமே காடு -ஆசையே யானை -மமதையை கொம்பு )
ப்ரதிபக்ஷ நிரஸனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்ய வல்லவர்கள்

வேதாந்த பிராமண அனுகூலமான நியாய தர்க்கங்களாலும்
ப்ரக்ருதி ப்ரத்யய தாது விசேஷ பலத்தாலும் உபகார பர்யந்தமாக
(மமதை யாகிற கொம்பை )நீக்கின அளவிலே

(ப்ரக்ருதி தாது -அவ ரஷனே- தாது -அவனே ரக்ஷகன் காரணன் –
ப்ரத்யயம் தாது -ஆய-தாதார்த்ய -சேஷத்வம்
வலி மிக்க சீயம் இவற்றைக் கொண்டே மமதை போக்கி )

பூர்வமேவ உண்டான கர்வம் எல்லாம் போய்
ஊர்த்வ கதியை நோக்கி
இன்னமும் ஸ்வ யத்ன பலத்தாலே உஜ்ஜீவிப்பதாகக் கோலி
அந்த ஸ்வ யத்னக் கையை எடுத்து

பத த்ரய நிஷ்டராய் ஆந்த ராளிகர் ஆனவர்களுடைய
ப்ரக்ருதி ஆத்ம விவேக ஞான மாத்ரத்தைக் கண்டு
அபேக்ஷித்த அளவைக் காட்டுகிறது –
இது மகாரார்த்தம் –

(ப்ரக்ருதி விட ஆத்மா உயர்ந்தவன் என்கிற ஞானமே
தானே ஸ்வ தந்த்ரன் என்கிற எண்ணம் வரக் காரணம் ஆகுமே
அத்தையும் போக்கி அருள வேணுமே
நம் ப்ரயத்னத்தால் போகலாம் என்ற எண்ணத்தையும் போக்க வேணுமே
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயம் போக்க வேணுமே
இது தான் அது -சந்திரனே கொம்பு -விபரீத ஞானம் -இத்தையும் போக்க வேண்டுமே

சந்திரன் -மதி -நல்ல ஞானம் உடையவர்கள்
பத த்ரய நிஷ்டர்கள்
அநந்யார்ஹ சேஷத்வம்
அநந்ய சரண்யத்வம்
அநந்ய போக்யத்வம் -அறிந்தவர்கள்
பத த்ரயம் மூன்றாம் பிறை சந்திரன் )

———-

செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-6-

பதவுரை

செப்பாடு உடைய–செவ்வைக் குணத்தை யுடையனாய்
திருமால் அவன்–ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்
தன்–தன்னுடைய
செம் தாமரை கை–செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள
விரல் ஐந்தினையும்–ஐந்து விரல்களையும்
கப்பு ஆக மடுத்து–(மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து
மணி நெடு தோள்–அழகிய நீண்ட திருத் தோள்களை
காம்பு ஆக கொடுத்து–(அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து
கவித்த மலை–தலை கீழாகக் கவித்த மலையாவது,
எப்பாடும்–எல்லாப் பக்கங்களிலும்
பரந்து இழி–பரவிப் பெருகா நின்ற
தெள்ளருவி–தெளிந்த சுனை நீரருவிகளானவை
இலங்கு மணி முத்துவடம் பிறழ–விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க
குப்பாயம் என நின்று–(கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக,
காட்சி தரும்–காணப்படப் பெற்ற
கோவர் — குடையே

செப்பாடு உடைய திருமால் அவன்
செப்பாடு ஆவது -செம்மை -அதாவது -ஆர்ஜவ குணம் –
அது தான் ஆவது
சிதகுரைத்தாலும் நன்று செய்தார் என்கை

அவன் –
அந்த வ்யாமோஹத்தை யுடையவன் –

தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்-
புஷ்ப ஹாஸ ஸூ குமாரமான திருக்கை விரல் ஐந்தினையும்

கப்பாக மடுத்து
மலையாகிய குடைக்குக் காம்பாகச் சேர்த்து
கப்பு -காம்பு –

மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
அந்தக் குடைக்குக் காம்பு அழகியதாய் ஒழுங்கு நீண்ட திருத் தோள்களாகக் கொடுத்துக் கவித்த மலை
பஞ்ச லக்ஷம் குடியில் உள்ளாருக்கும் பசுக்களுக்கும் மழையால் நலிவு வாராத படியாகவும்
பசுக்களுக்குச் சுவடு படாத புல்லும் தண்ணீரும் உண்டாகும் படியாகக் கவித்த மலை

எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயம் என நின்று
காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
அவனை சூழ இடைவிடாமல் தொங்குகிற தெளிந்து பிரகாசியா நின்ற சுனை நீர்களானவை அவன் தனக்கு
இலங்கு மணி முத்து வடத்தின் குப்பாயம் என்று சொல்லிக் காணலாம் படி தோற்றா நின்றன –

———–

சேஷன் ஜெகதாதாரனாய்க் கிடந்ததும்
ஸபலமாய்த்து இன்று என்கிறார் –
(திருஷ்டாந்தம் ஆழ்வாரால் சொல்லப் பட்ட பிரயோஜனம் பெற்றானே )

படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரை தான்
அடங்க சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை
குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-7 – –

பதவுரை

படங்கள் பலவும் உடை–பல படங்களை யுடைய
பாம்பு அரையன்–ஆதிசேஷன்
படர் பூமியை–பரம்பின பூமியை
தாங்கி கிடப்பவன் போல்–(தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல,
தாமோதரன்–கண்ணபிரான்
தடங்கை–(தனது) பெரிய திருக் கைகளிலுள்ள
விரல் ஐந்தும்–ஐந்து விரல்களையும்
மலர வைத்து–மலர்த்தி (விரித்து)
(அவற்றாலே)
தாங்கு–தாங்கப் பெற்ற
தடவரை–பெரிய மலையாவது;
மந்திகள்–பெண் குரங்குகளானவை,
இலங்கையை சென்று–லங்காநகரத் தேறப்போய்
அடங்க–அவ்வூர் முழுவதையும்
ஈடு அழித்த–சீர் கெடும்படி பங்கப் படுத்தின
அனுமன்–சிறிய திருவடியினுடைய
புகழ்–கீர்த்தியை
பாடி–பாடிக் கொண்டு
தம் குட்டன்களை–தமது (குரங்குக்) குட்டிகளை
குடங்கைக் கொண்டு–கைத் தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு
கண் வளர்த்தும்–(சீராட்டி) உறங்கப் பெற்ற
கோவர் — குடையே-.

படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
அநேகம் சிரசை யுடையனாய்
நாகராஜா என்கிற பிரசித்தியையும் யுடையனாய்
அத்யந்தம் விஸ்திருதமான பூமியைத் தரிக்க வல்ல சக்தியும் யுடையனானவன்
அந்த சக்தியால் அந்த பூமியைத் தரித்துக் கிடக்கிற பாவனை போலே

தடம் கை விரல் ஐந்து மலர வைத்து
இடமுடைத்தான திருக்கையில்
ஐந்து திரு விரல்களையும் பரம்ப வைத்து

தாமோதரன் தாங்கு தட வரை தான்
ஒரு அபலை கையாலே கட்டவும் அடிக்கவுமாம் படி எளியவனுமாய் அசக்தனுமாய் இருந்தவன் இறே
இடமுடைத்தான மலையைத் தரித்துக் கொடு நிற்கிறான்

தான்
அதின் கனத்தையும்
அதன் மேலுண்டான வ்ருக்ஷங்களையும் மிருக விசேஷங்களை தத் துல்யரையும் காட்டுகிறது –

அவன் அநேகம் தலையால் பூமியைத் தரிக்கும் போது
பூர்வ க்ருத கர்மமும் பர நியோகமும் தத் ஸஹாயமும் பிரார்த்தித்துப் பெற வேணும்
இவனுக்கு இந்த ஐந்து விரலுமே காணலாவது –
(த்ருஷ்டாந்தத்தில் ஸர்வதா ஸாம்யம் இல்லை -என்றவாறு
நமக்கு அஞ்சு வேணும்
அதிஷ்டானம் -சரீரம் இந்திரியங்கள் பிராணன் ஆத்மா பரமாத்மா இவை ஐந்தும்
இவனுக்கு அஞ்சு விரல்களும் போதுமே )

அடங்க சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை
இலங்கையை அடங்க சென்று ஈடு அழித்த
இலங்கையிலே சென்று சிலரை ஈடுபடுத்தியும்
சிலரை நிரசித்தும்
சிலரை பீதி மூலமாக வச வர்த்திகள் ஆக்கியும்
நியாய அனுகூலமான சக்தியாலும் ஷமையாலும் வாக்மித்வத்தாலும் செய்த
ராம அனுவ்ருத்தி இறே புகழாவது

ஓத மா கடல் (பெரிய திருமொழி )இத்யாதி
உல்லங்க்ய ஸிந்தோ சலீலம் சலிலோ —
கோஷ்பதீ க்ருதே –இத்யாதி (கடலை குளப்படி ஆக்கி )

தம் குட்டங்களை
தம்தாமுடைய குட்டிகளை
குட்டன் -என்கிறது ப்ரீதியாலே

குடம் கை கொண்டு
தம்தாம் கையிலே அணைத்துக் கொண்டு
ராம அனுவ்ருத்தி செய்தார் பலரும் உளராய் இருக்க
(அகில காரணம் அத்புத காரணம் )நிஷ் காரணாய -என்று விசேஷிக்கையாலே
அனுமன் புகழ் பாடி என்கிறது –

மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
மந்திகள் இப் புகழைப் பாடி உறங்கா பண்ணா நிற்கும்

என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே (3-3 )என்ற இவருக்கு
திருவடி விரோதி நிரஸனம் செய்தது எல்லாம்
தமக்கு மங்களா வஹமாய் இருக்கையாலே
ஜாதி நிபந்தனமாக திருவடி புகழையும்
புள்ளரையன் புகழ் குழறும் –என்னுமா போலே பாடுகையாலே
தாம் கொண்டாடிக் கண் வளர்த்தும் என்று அருளிச் செய்கிறார்
மந்தி -பெண் குரங்கு –

இத்தால்
ஒருவனுக்கு ஆச்சார்ய பிராப்தி அநு வ்ருத்தி கண் அழிவு அற்றால்
அவன் வம்ஸஜரும் –
அவன் இருக்கும் ஊரில் உள்ளாரும்
அவன் இருந்து போன ஊரில் உள்ளாரும்
தஜ் ஜாதீயரும்
உத்தேச்யமாய்க் இருக்கக் கடவது இறே

கண் வளர்த்தும் என்கிற இத்தால்
அவ் வாச்சார்யன் தான் தன்னை இவ் வவஸ்தா பன்னமாக்கி விஷயீ கரித்த பிரகாரத்தைச் சொல்லி
தான் உபதேசிப்பாருக்கும் -த்யஜ வ்ரஜ மாஸூச என்று -நிர்பரத்வ அனுசந்தான பர்யந்தமாக
உபதேசிக்கும் அவர்களையும் உப லஷிக்கிறது –

(வாழும் சோம்பர்
துயில் அணை மேல் கண் வளரும்
பெரும் துயில் தான் தந்தானோ
இது தான் இங்கு கண் வளர்த்தும் )

———–

சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3-5-8 –

பதவுரை

சலம் மா முகில்–நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய
பல் கணம்–பல திரளானது,
எங்கும்–இடைச்சேரி யடங்கலும்
பூசல் இட்டு–கர்ஜனை பண்ணிக் கொண்டு
போர் களத்து சரம் மாரி பொழிந்து–யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து
நலிவான் உற–(ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே
நாராயணன்–கண்ண பிரான்
கேடகம் கோப்பவன் போல்–கடகு கோத்துப் பிடிக்குமவன் போல
(குடையாக எடுத்துப் பிடித்து)
முன்–முந்துற வருகிற
முகம்–மழையினாரம்பத்தை
காத்த–தகைந்த
மலை–மலையாவது,
கொலை வாய்–கொல்லுகின்ற வாயையும்
சினம்–கோபத்தையுமுடைய
வேங்கைகள்–புலிகளானவை
இலை வேய் குரம்பை–இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில்
தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று–இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர
(அங்குள்ள ரிஷிகள்)
அணார் சொறிய–(தமது) கழுத்தைச் சொறிய
(அந்த ஸுக பாரவச்யத்தினால், அப் புலிகள்)
நின்று உறங்கும்–நின்ற படியே உறங்கப் பெற்ற
கோவர் – குடையே-.

சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
அர்ஜுனன் முதலானோர் கையில் அம்பு முன்பு ஒன்றாய்
பின்பு பலவாய்ச் சொரியுமா போலே
சொரிவதான யுத்த பூமியிலே

ஒரு சமர்த்தன்
கடகு பிடித்துத் தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தில்
ஒருவர் மேல் ஒருவர் அம்பு படாதபடி ரஷித்தால் போல்

பல திரளாய்க் கடலை வரளப் பருகி நீர் கொண்டு எழுந்த பெரிய மேகங்கள்
திருவாய்ப்பாடியில் பசுக்கள் மேய்க்கிற இடங்கள் எங்கும் எங்களைப் தப்ப வல்லார் உண்டோ
என்று இடித்து முழங்கிப் பூசல் இட்டு இடைவிடாமல் ஒரு துளி ஓர் அம்பு போலே அம்பு மாரி பொழிந்து
ஓர் உயிரான தன்னையும்
தன் ரஷ்ய வர்க்கத்தையும்
நலிவதாக ஒருப்பட்ட அளவில்

தாத் வர்த்த விவரணமான நாராயணன்
ரஷ்ய வர்க்கத்தினுடைய அபேஷா மாத்ர வ்யாஜத்துக்கு முற்கோலி
அது வேகித்துச் சொரிகிற முகத்திலே
அதின் முகம் கருக எடுத்து ரஷித்த மலையானது –

இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
சுஷ்கமான பர்ணங்களாலே வேய்ந்த இடங்களிலே மஹா தபஸ்ஸுக்கள் பண்ணுகிற
மனந சீலர் இருந்த இடங்களிலே நீள் எரி வாய்ச் சுவடு பார்க்கும்

கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
கொல்லுகிற வாயையும் கோபத்தையும் யுடைய புலிகளானவை
இவர்கள் நடுவே சென்று நின்று சொறி நுணாவி உறங்கா நிற்கும் -என்னுதல்
அவர்கள் தாங்கள் சொறியா நிற்கும் என்னுதல்

ஆனால் தபஸ்ஸூ கை வந்தவர்கள் சொறியக் கூடுமோ என்னில்
தங்களுக்கு தபஸ்ஸூ கை வந்ததாவது –
பாத்ய பாதகம் அற்றால் என்னும் நினைவாலே சொறியவும்
அவை வந்து இழுகவும் கூடும் இறே பரீஷார்த்தமாக

அணார்-கழுத்து
மலை -கொற்றக் குடை
அம் மலை இவன் பிடுங்கி எடுக்கும் என்னும் இடம் அறியார்கள் இறே
தங்கள் தபஸ்ஸில் த்வரையாலே

(மறித்து எடுக்க மிருகங்கள் போல் விழுந்தார் ஆகில்
அவனைக் காணலாமே
தபஸ்ஸூ பலம் பலித்தது ஆகுமே
திவ்ய சவுந்தர்யங்கள் காணலாமே குழல் ஓசை கேட்கலாமே
விழத்தான் வேணுமே
குழல் ஓசை கேட்க்கும் மான் போல் நின்றார்களோ
விழுகையே தபஸ்ஸூ பலம் காது கண்ணை பொத்திக் கொண்டார்களோ
ரிஷி பத்தினிகள் தானே உணவு கொடுத்தார்கள்
அங்கும் ரிஷிகள் தபஸ்ஸூ ஆழ்ந்து இருந்தார்களே )

———

வன் பேய் முலை உண்டதோர் வாயுடையன் வன் தூண் என நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களைக்
கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- –

பதவுரை

வல் பேய்–கல் நெஞ்சளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
உண்டது ஓர் வாய் உடையன்–(உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான
தாமோதரன்–கண்ண பிரான்
தன் பேர்–(கோவர்த்தநன் என்ற) தனது திரு நாமத்தை
இட்டுக் கொண்டு–(மலைக்கு) இட்டு,
வல் பரத்தை நின்றது ஓர் வன் தூண் என–பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டு நின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று
தரணி தன்னில்–இந்நிலவுலகத்தில்
(உள்ளவர்கள் காணும்படி)
தான் தாங்கு–தான் தாங்கிக் கொண்டு நின்ற
தடவரை–பெரிய மலையாவது;
முசு கணங்கள்–முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள்
(தம் குட்டிகளுக்கு)
முன்பே–ஏற்கனவே
வழி காட்ட–ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக
தம்முடை குட்டன்களை–தம் தம் குட்டிகளை
முதுகில் பெய்து–(தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய்
கொம்பு–மரக் கொம்பிலே
ஏற்றி யிருந்து–ஏற்றி வைத்து
குதி பயிற்றும்–அக் கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற
கோவர் — குடையே-.

வன் பேய் முலை உண்டதோர் வாயுடையன்
வலிய பேயினுடைய முலையை யுண்ட வாயை யுடையவன்-என்னுதல்
பேயின் முலையை யுண்ட வலிய வாயை யுடையவன் -என்னுதல்

பேய்க்கு வலிமையாவது
கம்சனால் பாதிக்க ஒண்ணாத விஷயத்தை தானே சாதிப்பதாக வந்த நெஞ்சில் வலிமை யாதல்

நஞ்சு ஏற்றின முலையின் வலிமை யாதல்
இவள் முலையின் பால்
மற்ற ஒரு பேயின் உடம்பில் சிறு திவலை தெறிக்கிலும் முடிக்க வற்றாய் இருக்கை

வாய்க்கு வலிமையாவது
பிரதிகூலித்துக் கிட்டினார் அம்ருதத்தைக் கொடுத்தாலும் முடியும் படி இறே விஷய ஸ்வபாவம்

ஆயிருக்க அவள் கிருத்ரிம அநுகூலை யாய் வர
தானும் கள்ளக் குழவியாய் உண்ணக் கடவோம் என்று நெஞ்சிலே கோலினாலும்
வாய் பொறாது இறே
ஆகையால் அத்தைப் பொறுக்கையாலே சொல்லலாம் இறே

ஓர் வாய்
அத்விதீயமான வாய்
காள கூட விஷம் பொறுத்த வாயுடையாரில் வ்யாவ்ருத்தி
அவன் தான் நாநா வான நஞ்சு தரித்துப் பக்வமான பின்பு அது அவள் தன் வாயிலே
ஒரு திவலை தெறிக்கிலும் வெந்து விழும்படி பண்ணவற்றாய் இறே இருப்பது –

வன் தூண் என நின்றதோர் வன் பரத்தை
வலியது ஒரு தூண் என்னும்படி தான் நின்று அந்த அத்வதீயமான பாரத்தை -பர்வதத்தை

தன் பேரிட்டுக் கொண்டு
கோ வர்த்தனன் என்கிற தன் பேரை அந்தப் பர்வதத்துக்கு இட்டு

தரணி தன்னில்
தேசாந்தரங்களில் வ்யாவ்ருத்தி
அதாவது
இடையர் இடைச்சிகள் முதலாக பிரம்மா ஈஸா நாதிகள் முடிவாக மற்றும் உண்டான எல்லாரும் காணும்படி

தாமோதரன் தாங்கு தடவரை தான்
மாத்ரு வசன பரிபாலனம் செய்து நியாம்யராய்ப் போரு கிற பிள்ளைகளில் வ்யாவ்ருத்தி
அதி சஞ்சல சேஷ்டித-என்றாள் இறே
அவள் கட்டின புண் ஆறுவதற்கு முன்னே இறே மலை தாங்கிற்று
வயிற்றில் புண்ணும்
மலை தாங்குகையும்
பிள்ளைப் பருவமும்
என்ன சேர்த்தி தான்

தட வரை -இடமுடைத்தான மலை

முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
அம்மலையில் வர்த்திக்கிற முசுக்கணங்களுக்கு பிரபலமாய் இருபத்தொரு முசு முன்னே வழி காட்ட என்னுதல்
அன்றிக்கே
முசுக் கணங்கள் வானர ஜாதி எல்லாவற்றுக்கும் வழி காட்ட -என்னுதல்

முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களை-கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
தம்முடைக் குட்டங்களை முதுகில் பெய்து
தம் தாமுடைய குட்டிகளை முதுகு களிலே கட்டிக் கொண்டு
பணையிலே ஏறி உயர்ந்த கொம்புகளிலே அவற்றை ஏற்றித்
தம் தாமுடைய குட்டிகளுக்கு அவை தான் குதித்துக் காட்டி பயிற்றுவியா நிற்கும்

இத்தால்
நம் பூர்வாச்சார்யர்கள் தங்கள் அபிமானித்த சிஷ்ய வர்க்கத்தைத் தங்கள் அணைத்துக் கொண்டு
வேத ஸாகா தாத்பர்யமான பத த்ரய அன்வேஷிகளாக்கி
அந்தப் பத த்ரயத்திலும் மந்த்ர த்ரயத்திலும் உண்டான அர்த்த விசேஷங்களை
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸாதிகளாலும் காணலாம் படி
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபேணவும்
ஆஸரீத் யாசார்ய -என்கிற நேரிலே ஆசரித்துக் காட்டி
அவர்களுக்கும் ஞான அனுஷ்டானங்களைப் பழுதற கற்பிப்பாருக்குப்
போலியாய் இரா நின்றனவாய்த்து –

———–

மலையும் வைத்து ஆறி நிற்கிற அளவிலே தாம் சென்று
நடந்த கால்கள் நொந்தவோ (திருச்சந்த ) -என்னுமா போலே
திருக் கைகளில் உளைவு உண்டோ -என்று பார்த்து
உளைவு இல்லாமையாலே –
இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்று ப்ரீதர் ஆகிறார் –

கொடி ஏறு செம் தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவேறு திரு உகிர் நொந்தும் இல மணி வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடியேறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போலே எங்கும்
குடி யேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-10 –

பதவுரை

கொடி ஏறு–(ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய
செந் தாமரை கை– செந் தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக் கையும்
விரல்கள்–(அதிலுள்ள) திரு விரல்களும் (ஏழு நாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்)
கோலமும் அழிந்தில–(இயற்கையான) அழகும் அழியப் பெற வில்லை;
வாடிற்றில–வாட்டமும் பெற வில்லை;
வடிவு ஏறு–அழகு அமைந்த
திரு உகிரும்–திரு நகங்களும்
நொந்தில–நோவெடுக்க வில்லை;
(ஆகையால்)
மணி வண்ணன்–நீலமணி போன்ற நிறத்தனான கண்ண பிரான்
(எடுத்தருளின)
மலையும்–மலையும்
(அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்)
ஓர் சம்பிரதம்–ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது;
(அந்தமலை எது? என்னில்;)
முடி ஏறிய–கொடுமுடியின் மேலேறிய
மா முகில்–காளமேகங்களினுடைய
பல் கணங்கள்–பல ஸமூஹங்களானவை
எங்கும் மழை பொழிந்து–மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்)
முன் நெற்றி நரைத்தன போல–(அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி
குடி ஏறி இருக்கும்–(கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற
கோவர் –குடையே-.

கொடி ஏறு செம் தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
ஸாமுத்ரிகா லக்ஷணத்தாலே மங்களா வஹமாக
த்வஜம் அங்குசம் சங்கு தாமரை -என்றால் போலே சொல்லுகிறவை அலங்காரங்களாய்
முன்பே பார்த்துக் குறி வைத்தவர் ஆகையாலே -மலை வைத்த பின்பும் சென்று பார்த்து
அவை ஒத்து இருக்கையாலும் உளைவு இல்லாமையாலும் க்ருதார்த்தர் ஆகிறார்

அன்றிக்கே
பெரிய பிராட்டியாருக்கு ஜன்ம பூமியான தாமரை போலே இருக்கிற திருக் கைகள் என்னுதல்
ஏறுதல்-தோற்றுதல்
(கொடி -பொற் கொடி- கனக வல்லி- கோமள வல்லி -என்ற அர்த்தத்தில் )

அன்றிக்கே
செந் தாமரைக் கொடிக்கு ஏறின திருக் கைகள் என்னுதல்
இத் திருக் கையில் மார்த்வம் கண்ட பின்பு
அது த்யாஜ்யதயா ஞாதவ்யமாய்த் தோற்றும் இறே

இப்படி இருக்கிற திருக்கையும் திரு விரல்களும் வெறும் புறத்திலும் தர்ச நீயமாய்த் தோற்றுகையாலே
கோலமும் அழிந்தில -என்கிறார் –

வாடிற்றில
உப மானத்தில் வாட்டம் உப மேயத்தில் காணாமையாலே வாடிற்றில என்கிறார் –

வடிவேறு திரு உகிர் நொந்தும் இல
அழகு ஏறி வாரா நின்றுள்ள திரு வுகிரில் யுளைவு யுண்டோ என்று பார்த்து
உளைவு இல்லாமையால் நொந்துமில என்கிறார் –

மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை யுடையவன் எடுத்த மலையும் கேவல நிரூபகருக்குச் சம்ப்ரதம்
அதாவது இந்த்ர ஜாலம்
அது தான் க்வசித் பாஹ்ய கரணங்களும் அந்தக் கரணமும் கூடாமல்
சஷுர் இந்திரிய பிரதானமாக சிலர் காட்டக் காணும் வித்யா விசேஷங்கள் போலே இரா நின்றது
சம்ப்ரதம் -கண் கட்டு வித்தை –

முடியேறிய மா முகில் பல் கணங்கள்
அம் மலையினுடைய தலையிலே ஏறின மஹா மேக ஸமூஹங்கள் ஆனவை

முன் நெற்றி நரைத்தன போலே எங்கும் குடி யேறி இருந்து மழை பொழியும்
அதனுடைய முன் நெற்றி நரைத்தால் போலே
சூழக் குடி இருந்து லோகத்துக்கு எல்லாம் ப்ரவாஹ ஸம்ருத்தி உண்டாகும்படி
ஸ்த்தாதியாய் இருந்து வர்ஷியா நிற்குமாய்த்து
லோகம் எங்கும் போய் வர்ஷித்து வெளுத்து வந்தும் வஸ்தவ்ய பூமி அம் மலைத் தலையோரம் ஆகையாலே –
முன் நெற்றி நரைத்தன போலே என்கிறது –

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே

இத்தால் –
ஆந்தராளிகராய் இருக்கச் செய்தேயும் (இடைப்பட்ட முமுஷுக்கள் )
நிஷேத அபாவ வ்யவசாய ஸூத்தராய் (மஹா விஸ்வாசம் கொண்டவர்கள் )
அது தானே வஸ்தவ்ய பூமியாய் ( திவ்ய தேசமே வஸ்தவ்ய பூமி )
அதுக்குத் தகுதியான உதார குண பிரகாசகராய் இருப்பார்க்குப் போலியாய் இரா நின்றது
(மேகம் கை ஒழிந்து -ஸ்வ ரஷணம் இல்லாதாருக்கு -மலை இடம் கொடுத்ததே )

மழை பொழிகிற மலை தானே இறே
வர்ஷ பரிஹாரமான வெற்றிக் குடை யானதும் –

———–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –

பதவுரை

அரவில்–திருவனந்தாழ்வான்மீது
பள்ளி கொண்டு–(பாற் கடலில்) பள்ளி கொள்பவனும்
(அதை விட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து)
அரவம்–காளிய நாகத்தை
துரந்திட்டு–ஒழித்தருளினவனும்
அரவம் பகை ஊர்தி–ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய,
குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்–குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து அமைந்திருக்கப்பெற்ற
கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்–கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக,
கொற்றம் -மழை தடுத்த வெற்றியை உடைத்தான
திருவில்–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே
பொலி–விளங்கா நின்றுள்ள
மறைவாணர்–வைதிகர்கள் -வேதத்துக்கு வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள் -இருக்குமிடமான
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில்
பட்டர் பிரான்–பெரியழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பரவும் மனம்–அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை
நன்கு உடை–நன்றாக உடையரான
பத்தர் உள்ளார் –பக்தர்களாயிருப்பார்
பரமான வைகுந்தம்–பரம பதத்தை
நண்ணுவர்–அடையப் பெறுவர்.

அரவில் பள்ளி கொண்டு
தூங்கு மெத்தை போலே திருவனந்த ஆழ்வான் மூச்சாலே அசைக்க இறே
ஷீராப்தி தன்னிலே பள்ளி கொண்டு அருளுவது –

அரவம் துரந்திட்டு
அவன் தானே வந்து அவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்து அருளுகிற காலத்தில்
ஜாதி உசிதமாக மேய்க்கிற பசுக்கள் தண்ணீர் குடிக்கிற மடுவை
சலம் கலந்த பொய்கை-(திருச்சந்த )-என்னும்படியான காளியனை
அங்கு நின்றும் ஒட்டிவிட்டு பிரகாரங்களை அனுசந்திக்கிறார் –

(அரவம் துரந்திட்டு
திருவனந்த ஆழ்வான் படுக்கையை விட்டும்
காளியனை துரந்திட்டும் -என்று இரண்டையும் சொன்னவாறு )

அரவப் பகை ஊர்தி அவனுடைய
அரவம் என்கிற ஜாதிக்கு எல்லாம் பகையான பெரிய திருவடியை வாஹனமாக நடத்துகிறவனுடைய
கொற்றக் குடை என்னும் ப்ரஸித்தியை யுடைத்தாய்

குரவில் கொடி முல்லைகள்
அதின் மேலே குரவு முல்லை முதலான வ்ருஷ லதைகளை யுடைத்தான கோவர்த்தன கிரி மேலே
அது விஷயமாக

நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
வர்ஷ அபாவத்தாலே வாடி யுறங்குகையும்
வர்ஷ ஸம்ருத்தியாலே தழைக்கவும்
வ்ருஷ ஜாதிக்கு குணம் இறே

வர்ஷ அபாவத்தாலே இறே திருவாய்ப்பாடியில் உள்ளார் தேவதாந்த்ர பூஜை செய்தும்
வர்ஷம் உண்டாக்கியும் போருவது –
ஆகையால் வாடவும் தழைக்கவும் கூடும் இறே

அத்தாலே இறே
வாடாமல் நின்றும் வாடி யுறங்கியும் என்கிறது –

அரவப் பகை என்கிறதும்
இந்த லோகத்தில் பிரஸித்தம் –

திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யாலே மிக்கு
மங்களா ஸாஸன ப்ரதிபாதகங்களான ரஹஸ்ய வேத ஸாஸ்த்ரங்கள் பொலியும்படியானவர்கள்
நித்ய வாசம் பண்ணுகிற திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

சொன்ன மாலை பத்தும் பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார்
அருளிச் செய்த இத் தமிழ் தொடை மாலை பத்தும்
அதாவது
ஸ்ரீ கீதை முதலாக அவன் அருளிச் செய்த ஸாஸ்த்ர விசேஷங்களைக் கேட்ட மாத்ரத்தாலே
தத் பரராய்
முன்பு செய்து போந்த தேவதாந்த்ர பூஜை தவிர்ந்தால்
அவர்களால் வரும் அநர்த்த பரம்பரைகளையும்
அவன் தானே பரிஹரிக்கும் என்னும் பிரகாரத்தை அருளிச் செய்த இப் பத்தையும்
அனுசந்திக்கை தானே புருஷார்த்தம் என்னும்படி நல்ல மனசை யுடையராய்
மங்களா ஸாஸன பர்யந்தமான பக்தியை யுடையவர் ஆனவர்கள் –

பரமான வைகுந்தம் நண்ணுவரே
இங்கே இருக்கச் செய்தே தேவதாந்தரங்களை அனுவர்த்தித்து அந்நிய சேஷ பூதராய்ப் போருவது
பகவத் வாக்யங்களாலே அவர்களை நிஷேதிப்பது
அவர்களும் நிஷேத புருஷார்த்தத்தை அங்கீ கரிக்கையாலே கர்ம பாவனை தலையெடுத்து
பகவத் அபிமானத்திலே ஒதுங்கினவர்களை நலியத் தேடுவது
அவன் அதி மானுஷ சேஷ்டிதங்களாலே பரிஹரிக்க இங்கே இருந்து வியஸனப்படாதே

அவனுடைய சர்வ ஸ்மாத் பரத்வம் பழுதற ப்ரகாசிக்கிற தேசத்திலே போய்
அவன் பாத பீடத்திலே அடியிட்டு மடியிலே ஏறப் பெறுவார்கள் என்னுதல்

கோஸி –வாக்ய சமனாந்தரமாக
அவனுடைய அனுமதியோடே
சூழ்ந்து இருந்து ஏத்துவர்களோடே சேரப் பெறுவார்கள் -என்னுதல் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: