ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-4–தழைகளும் தொங்கலும் ததும்பி—

கீழே
நாளைத் தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு -என்கையாலே
ஏழு நாளும் இருந்து
திருவோண திரு நக்ஷத்ரமும் கொண்டாடி விட்ட பின்பும்
பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கப் போய்
அவை மேய்ந்த ப்ரீதியாலே தன்னை நாநா பிரகாரமாக அலங்கரித்துக்
குழல் ஊதுவது
இசை பாடுவது
ஆடுவதாய்க் கொண்டு
தானும் தன்னே ராயிரம் திருத் தோழன்மாருமாகப் பெரிய மேநாணிப்போடு
எழுந்து அருளி வருகிற பிரகாரத்தைக் கண்டு

திருவாய்ப்பாடியில் பெண்கள் இவன் பக்கலிலே அத்யந்த ஸ்நேஹத்தோடே விக்ருதைகளாய்
ஒருவரை ஒருவர் அழைத்துக் காட்டியும்
நியமித்தும்
நியாம்யைகள் ஆகாதாரை எதிர் நின்று பட்ட மெலிவு கண்டும்
சொன்ன பாசுர விசேஷங்களை

வியாஜ்யமாக்கித் தாமும் அனுபவித்து இனியராய்
தாம் அனுபவித்த பிரகாரத்தை ஸ அபிப்ராயத்தோடே பாடி அனுபவிப்பாருக்குப்
பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

——-

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலிக்
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – 3-4-1-

பதவுரை

தழைகளும் தொங்கலும்–பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள்
எங்கும் ததும்பி–நாற் புறங்களிலும் நிறைந்து
தண்ணுமை–ம்ருதங்கங்களும்
எக்கம் மத்தளி–ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும்
தாழ் பீலி–பெரிய விசிறிகளும்-மயில் தோகைக் கட்டிய திருச்சின்னங்களும் –
குழல்களும்–இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்
கீதமும்–இவற்றின் பாட்டுக்களும்
எங்கும் ஆகி–எங்கும் நிறைய
(இந்த ஸந்நிவேசத்துடனே)
கோவிந்தன்–கண்ணபிரான்
வருகின்ற–(கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற
கூட்டம்–பெரிய திருவோலக்கத்தை
கண்டு–பார்த்து
மங்கைமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி–‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து
சாலகம் வாசல் பற்றி–ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி
நுழைவனர் நிற்பனர் ஆகி–(வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும்,
(சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி
எங்கும்–கண்ணபிரான் நடந்த வழி முழுவதும்
உள்ளம் விட்டு–தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு
ஊண்–ஆஹாரத்தை
மறந்தொழிந்தனர்–மறந்து விட்டார்கள்.

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமும் ஆகி
தழை -குடை
தொங்கல் -பீலி தாழ் குடை
ததும்புதல் -கிளப்பம்
தண்ணுமை –திருவரையில் சாத்தின சிறுப்பறை
எக்கம் -என்று ஏகமாய் ஒருதலைப் பறை -என்றபடி
மத்தளி –பெரு முழக்க வாத்யம்
தாழ் பீலிக்–தூக்கின சின்னம் என்னுதல் -பீலி தாழ்ந்த வாத்யம் என்னுதல்
குழல்களும் -இலைக்குழல் -வேய்ங் குழல் முதலானவை
கீதமும் ஆகி –ஜாதி உசிதமான பாட்டுக்களும்
ந்ருத்த விசேஷங்களும் எங்கும் உண்டாக்கி –

தழைகள் -என்று
கொம்பு செறிந்த பசுந்தழைகள் –
சாத்தின பீலித் தழைகள்

தொங்கல் –
குடை மேல் மாலைகள் ஆதல் –
சாத்தின இலைத் துடையல் ஆதல்

எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
பிள்ளைகளும் தானுமாக கோவிந்தன் தன்னே ராயிரம் பிள்ளைகளான கூட்டத்தோடே
மிகவும் ஆரவாரித்துக் கொண்டு வருகிற பிரகாரத்தைக் கண்டு

கோவிந்தன்
கோக்களை ரக்ஷிக்குமவன்
கோக்களை யுடையவன்
(காம் விந்ததி காம் பாலயதி )
இந்திரியங்களை இதர விஷயங்களில் போகாமல் த்ருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ண வல்லவன் –

மழை கொலோ வருகிறது என்று சொல்லி மங்கைமார்
மேக ஸமூஹங்களோ தான் தரை மேலே நடந்து வருகிறது என்று –
இது ஓர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று
யுவதிகள் ஆனவர்கள் மிகவும் கொண்டாட்டத்தோடே சொல்லி

சாலக வாசல் பற்றி
பலகணி த்வாரங்களைப் பற்றி நின்று

நுழைவனர் நிற்பனராகி
வ்யாமோஹத்தாலே சென்று மேல் விழுவதாக நுழைவாரும்
ஜாலக பிரதிபந்தத்தாலும்
பந்து வர்க்க பீதியாலும்
ஸ்த்ரீத்வ அபிமான பாஹுள் யத்தாலும்
நிற்பாருமாகி

எங்கும் உள்ளம் விட்டு
அவன் போம் வழி எங்கும் நெஞ்சுகளைப் போக விட்டு

ஊண் மறந்து –
1-நெஞ்சு இல்லாதாருக்கு உண்ணலாமோ
2-பூத காலத்தில் உண்டத்தை நினைக்கலாமோ
3-இப்போது உண்டு நிறைந்தவர்களுக்கு உண்ணலாமோ
(பரமன் அடி பாடி நெய் உண்ணோம் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் )

ஒழிந்தனரே
இனி காலாந்தரத்திலும் ஜீவன ஸா பேஷைகள் ஆக மாட்டார்கள் என்று
தோற்றும்படி வேறு பட்டார்கள் இறே –

——–

அவன் வரவு கண்டு நெஞ்சு இழந்தவர்கள்
அவன் வரும் போது எதிரே நில்லாதே கொள்ளுங்கோள்
என்று நிஷேதிக்கிறார்கள் –

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திரு வரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக வுடை வாள் சாத்தி பணைக் கச்சு உந்திப் பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழா நடுவே
எல்லியம் போதாக பிள்ளை வரும் எதிர் நின்று அங்கு இன வளை இழவேல்மின் – 3-4- 2-

பதவுரை

பிள்ளை–நந்த கோபர் மகனான கண்ணன்,
வல்லி–கற்பகக் கொடியினது
நுண்–நுட்பமான
இதழ் அன்ன–இதழ் போன்று ஸுகுமாரமான
ஆடை கொண்டு–வஸ்த்ரத்தைக் கொணர்ந்து
திரு அரை (தனது) திருவரையிலே
வசை அற–ஒழுங்காக
விரித்து உடுத்து–விரித்துச் சாத்திக் கொண்டு
(அதன்மேல்)
பணை கச்சு–பெரிய கச்சுப் பட்டையை
உந்தி–கட்டிக் கொண்டு
(அதன் மேல்)
உடை வாள்–கத்தியை
பல்லி நுண் பற்று ஆக சாத்தி–பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு
நல்–அழகியதும்
நறு–பரிமளமுள்ளதுமான
முல்லை மலர்–முல்லைப் பூவையும்
வேங்கை மலர்–வேங்கைப் பூவையும் (தொடுத்து)
அணிந்து–(மாலையாகச்) சாத்திக் கொண்டு
பல் ஆயர்–பல இடைப் பிள்ளைகளுடைய
குழாம் நடுவே–கூட்டத்தின் நடுவில்
பல தழை நடுவே–பல மயில் தோகைக் குடை நிழலிலே
எல்லி அம் போது ஆக–ஸாயம் ஸந்த்யா காலத்திலே
வரும்-வருவன்;
அங்கு–அவன் வரும் வழியில்
எதிர் நின்று–எதிராக நின்று
வளை இனம்–கை வளைகளை
இழவேல்மின்–இழவாதே கொள்ளுங்கள்-என்று தோழிமார்கள் சொல்லிக்  கொள்ளும் பாசுரமாக சொல்கிறது

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திரு வரை விரித்து உடுத்து
திருவரைக்குத் தகுதியாய்
மார்த்தவமான திருப் பரியட்டத்தைக் கொண்டு வசைவும் முசிவும் அற விரித்துச் சாத்தி

வல்லி -என்று
கல்பத்தில் படர்ந்த கொடியில் பூப் போலே மார்தவமான திருப் பரியட்டும்-என்னவுமாம்
உடை வாய்ப்பும் -திருவரை பூத்தால் போலே

பல்லி நுண் பற்றாக வுடைவாள் சாத்தி பணைக் கச்சு உந்திப்
திருவரையில் சாத்தின பரியட்டத்துக்கு மேலே
முசிவற விரித்து நெறித்துச் சாத்தின பெரிய கச்சைக் கிளப்பித்
திருக் குற்றறுடை வாளைத் திருவரையிலே வேர் விழுந்தால் போலே சாத்தி
பல்லி -என்றது வேர் பற்று
பல்லி தான் ஆகவுமாம்

பல தழை நடுவே
பல குடை என்னுதல்
பல தழைக்கொம்பு என்னுதல்
இவை பிடித்து வருகிற திருத் தோழன்மார் நடுவே

முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து
ஜாதி உசிதமாய் -செவ்வி குன்றாமல் -பரிமளிதமாய்
விகசிதமான முல்லை மலர் வேங்கை மலர் தொடுத்துச் சாத்தி

பல்லாயர் குழா நடுவே
தழை எடுத்து வருகிறவர்களையும் இவன் தன்னையும் சூழ்ந்து
ஒத்த தரத்தராய் வருகிற அநேகமான
ஆயர்கள் நடுவே

எல்லியம் போதாக பிள்ளை வரும்
எல்லி -மாலைக் காலம்
அஸ்தமித்த பின்பாக நந்தன் மைந்தனாக வாகு நம்பி வரும்

வரும்
ஸூரி சங்க மத்யே வனமாலை அடையாளமாகத் தன்னைத் தோற்றுவிக்குமா போலே
முல்லை மாலையாலே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு ஆயர்கள் நடுவே வரும்

எதிர் நின்று அங்கு இன வளை இழவேல்மின்
எதிரே நிற்கை என்றும்
வளை இழக்கை என்றும்
இரண்டு இல்லை போலே காணும்
எதிர் நின்றவர்களில் இன வளைகளிலே ஒரு வளை நோக்க வல்லார் உண்டோ –

———–

தாயாரானவள் பெண் பிள்ளைக்கு வந்த பழி சொல்லு
பரிஹரிக்கிறதாய் இருக்கிறது இப் பாட்டு –

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 4-3 –

பதவுரை

தோழன்மார்–தன்னேராயிரம் பிள்ளைகள்,
சுரிகையும்–உடை வாளையும்
தெறி வில்லும்–சுண்டு வில்லையும்
செண்டு கோலும்–பூஞ்செண்டு கோலையும்
மேல் ஆடையும்–உத்தராயத்தையும்
(கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக)
கொண்டு–-கையிற்கொண்டு
ஓட–பின்னே ஸேவித்து வர,
ஒருவன் தன்–ஒரு உயிர்த் தோழனுடைய
தோளை–தோளை
ஒரு கையால்–ஒரு திருக் கையினால்
ஊன்றி–அவலம்பித்துக் கொண்டு
(ஒரு கையால்)-மற்றொரு திருக் கையினால்
ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்–(கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை
(ஊன்றி)–ஏந்திக் கொண்டு
வருகையில்–மீண்டு வருமளவில்
வாடிய–வாட்டத்தை அடைந்துள்ள
பிள்ளை கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய
மஞ்சளும் மேனியும்–பற்று மஞ்சள் மயமான திருமேனியையும்
வடிவும்–அவயவ ஸமுதாய சோபையையும்
அருகே நின்றாள் என் பெண்–(அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்
கண்டாள்–(முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;
(பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்)
நோக்கி கண்டாள்–கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;
அது கண்டு–அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு
இ ஊர்–இச்சேரியிலுள்ளவர்கள்
ஒன்று புணர்க்கின்றது–(அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;
ஏ–இதற்கு என் செய்வது!

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும்
சுரிகை- என்பது ஓர் ஆயுத விசேஷம்
கீழே திருக்குற்றுடை வாள் சாத்தி என்றாள்

இப்போது சரிகை என்கையாலே –
சென்று செருச் செய்யுமவர்கள் ஆகையாலே ஆயுதமும் வேணும் இறே

மேலே லீலா ரஸ ஹேதுவான சுண்டு வில்லும் செண்டு கோலும் வருகையாலே
சுரிகையும் விளையாட்டுப் பத்திரம் என்னவுமாம் இறே

மேலாடையும்
பசு மேய்த்து வரும் பொது திருவரைக்குத் தகுதியாக முன்பு சாத்தின
பரியட்டத்துடனே சாத்தத் தகுதியான மேல் சாத்தும்

தோழன்மார் கொண்டோட
உகந்து தோழன் நீ என்று தான் உகந்த அளவன்றிக்கே
அவன் தன்னை உகந்த தோழன்மார்
இவை தானே புருஷார்த்தமாகக் கொண்டாட

ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி
தோழன்மாரில் வ்யாவ்ருத்தனாய்
அவன் தன்னை உகந்த அளவன்றிக்கே
அவன் தானும் உகந்தவனாய்
அவர்களை போலவே ப்ரிய பரனாய் இருக்கை
ஹிதத்தையும் பிரியமாக்க வல்லவனுமாய் இருக்கிறவன் தோளை ஒரு திருக்கையாலே ஸ்பர்ஸித்து

ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம்
வலத் திருக்கையாலே -ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கத்தைப் பிடித்து வருகையால் என்னுதல்
ஆநிரை இனம் மீளச் சங்கம் குறித்த கண்ணன் வருகையால் என்னுதல்

சங்கம் குறிக்கும் போது
ஆநிரையினம் மீள ஊதினதும்
விலங்காமைக்கு ஊதினதும்
மேய ஊதினதும்
ஊரில் வரும் போது ஆநிரை முன்னே நடக்கும் படியாகவும் இறே ஊதிற்று

இவ் வாசி ஆநிரைகள் எல்லாம் அறியும்படி அவனூதின வாஸனையாலே –
அந்த த்வநி அடங்காமல் பசு ப்ராயரை எல்லாம் –
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாதே வாருங்கோள் -என்று
அதிருகை நித்யமாய்ச் செல்லா நின்றது இறே

இந்த த்வநி தான் –
பூங் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலி போலே
திருவாய்ப்பாடியில் பெண்களுக்குத் தன் வரவை உணர்த்தா நின்றது இறே

இத்தால் பசு ப்ராயரான ஸம்ஸாரிகளை
ஸூத்த ஸ்வ பாவனுமாய்( வெண் சங்கு )
வார்த்தை அறியுமவனாய்
ஆச்சார்ய பரதந்த்ரனுமாய்
பர உபகார சீலனுமாய்
அநவரத ஹித பரனுமான ஆச்சார்யனை முன்னிட்டால் அல்லது
அவன் தன்னாலும் ஸ்ரீ கீதை -அபயப்ரதாநம் -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் முதலானவற்றாலும்
திருத்தித் தலைக்கட்ட அரிது என்கிறது –

ஆகை இறே
வணங்கும் துறையும் பிணங்கும் ஸமயமும் அணங்கும் பல பலவாக்கி மூர்த்தி பரப்பின இடத்திலும்
மதி விகற்புத் தணிந்து திருந்தாதரையும்
நின் கண் வேட்கை எழுவிப்பன் ( திரு விருத்தம்) -என்றதும்
பட்டர் -ம்ருக்ய மத்த்யஸ்தவத் த்வம் -என்றும் அருளிச் செய்ததும்
ஆகை இறே வாட வேண்டிற்றும் –

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
பெண்களைக் காணாமையாலே வந்தவன் திரு மேனியில் வாட்டமும்
மஞ்சளும் மேனியும் வடிவும் போலே இவர்களுக்கு அபி நிவேச ஹேதுவாய் இருக்கும் இறே
இவன் யுவா குமாரன் ஆனாலும்
என் பெண் என்று இவளுக்கு சிறுப்பிள்ளையாய் இறே தோற்றுவது
ஊரலர் பரிஹரிக்கத் தேடுகிறவள் ஆகையாலே

கண்ணன் -ஸூலபன்
பற்று மஞ்சள் பூசும்படி ஸூ லபனாகையாலே அவர்கள் பூச பட்டுப்படாத மஞ்சளும்
அந்த மஞ்சளுக்குப் பரபாகமான திரு மேனியின் நிறமும்

வடிவும் –
திவ்யமான அவயவ ஸமுதாய சோபையும்

அவன் வருகிற வழிக்கு அருகே நின்று என் பெண்
அபூர்வ தர்சன ஸா பேஷையாய்க் கண்டாள்

அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள்
விளையாடப் போகிறவள் புரிந்து நோக்கிக் கண்டாள்

அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே
இவள் கண்டது கண்டு இவ் வூராரும் தங்களைப் போலே என் பெண்ணான இவளும் கண்டாள் -என்று
வசை பாடத் தொடங்கி
இவ்வளவே உள்ளுறையாக நடத்தா நின்றார்கள்
இவ் வூரார் புணர்ப்புக்கு எல்லாம் இப் பெண்ணும் இப் பிள்ளையுமோ விஷயம்
இது தான் ஐய புழுதிக்கு ஹேதுவுமாய் இருக்கிறது –

இத்தால்
ஆச்சார்ய அபிமான அந்தர் கதராய் இருப்பார்க்கு
பகவத் வை லக்ஷண்ய தர்சனம் அஸஹ்யம் என்று தோற்றுகிறது

———-

இவன் வருவதைக் கண்டு ஒருவருக்கு ஒருவர் அழைத்துக் காட்டிச் சொல்கிறது –

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அல்லவே -3-4-4 – –

பதவுரை

நங்காய்–பூர்த்தியை யுடையவனே!
ஏடி–தோழீ!
இவனை ஒப்பாரை–இவனைப் போன்றுள்ள வ்யக்தியை
என்றும்–எந்த நாளிலும்
கண்டு அறியேன்–(நான்) பார்த்ததில்லை;
வந்து காணாய்–(இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க,
அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;)
கோவலன் ஆய்–இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க)
(பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது)
குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்த–ரக்ஷித்தருளின
பிரான்–உபகாரகனும்
குழல்–குழலை
ஊதி ஊதி–பல கால் ஊதிக் கொண்டு
கன்றுகள்–கன்றுகளை
மேய்த்து–(காட்டில்) மேய்த்து விட்டு
தன் தோழரோடு உடன் கலந்து–தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு
தெருவில்–இவ் வீதி வழியே
வருவானை–வருபவனுமான கண்ணபிரானை
கண்டு–நான் கண்ட வளவிலே
துகில்–(எனது அரையிலுள்ள) புடவை
கழன்று–(அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய
வளை–கை வளைகளும்
ஒன்றும் நில்லா–சற்றும் நிற்கின்றனவில்லை;
ஏந்து–(என்னால்) சுமக்கப் படுகின்ற
இள முலையும்–மெல்லிய முலைகளும்
என் வசம் அல்ல–என் வசத்தில் நிற்கின்றனவில்லை.

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கோவலனாய் குழலூதி ஊதி–குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான்–
குன்று எடுத்ததோடு
குழல் ஊதிதனோடு
ஆநிரை காத்ததோடு
கன்றுகள் மேய்த்ததோடு
வாசி அற பரிவரானார் ஈடுபடாத படி அநாயாஸம் தோன்ற இறே குழலூதிற்றும் –

அன்றாகில்
குன்று எடுக்கைக்கும்
குழலூதினதுக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பரிவரானவருக்குக் குழலூதுகிற த்வனியிலே தோற்றும் இறே அநாயாஸத்வம்
அநாயாஸத்வம் தனக்கும் ஹேது ரஷ்ய வர்க்கத்தில் தவறுதல் இல்லாமை இறே
அதாவது
பஞ்ச லக்ஷம் குடி இருப்பிலும் தம் தாமுக்கு என்று ஒரு படல் கட்டாமை இறே
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் (திருவாய் )-என்னக் கடவது இறே

கோவலன் ஆனால் இறே குன்று எடுக்கவும் குழலூதுவதும் ஆவது –
சக்ரவர்த்தி திருமகன் ஆனால் இவை செய்ய ஒண்ணாது இறே

ஊதி ஊதி-என்கிற வர்த்தமானத்தால்
பாவனை அல்ல என்னும் இடம் தோற்றுகிறது

கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
கன்றுகள் ஓன்று போல் ஓன்று இராமையாலே கலந்து மேயும் போது உருத் தெரியுமே
இவன் தன்னே ராயிரம் பிள்ளைகளோடே கலந்து வருகையாலே குறித்துக் காண்கையில் உண்டான அருமையாலே
கண்டு என்கிறது
கண்டு -கெடுத்த பொருள் கண்டால் போலே
தெருவில் கண்டு -இது இறே குறை
வீடே போதீர் -என்ன மாட்டாளே

என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
நாள் தோறும் கன்றுகள் மேய்த்து வரக் காணா நிற்கச் செய்தேயும் -ஒரு நாளும் கண்டு அறியேன் என்னும் போது
விஷயம் நித்யம் அபூர்வம் என்னுமது தோற்றும் இறே

என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்-என்கையாலே
உபமான ராஹித்யம் தோற்றும் இறே

நங்காய் -யேடி -என்கையாலே
உத்தேஸ்யை -என்றும்
வச வர்த்திநீ -என்றும் தோற்றுகிறது –
நினைத்த கார்யம் தனக்குத் தலைக்கட்டித் தர வல்ல குண பூர்த்தியை யுடையவள் என்றும்
தனக்கு அவளோடு உண்டான ஐக்யமும் -தோற்றுகிறது –

வந்து காணாய்-என்றது -எனக்காக வந்து காணாய் -என்றபடி
எனக்காக என்றது -உனக்காக என்றபடி
ஏடி -என்றது ஏடீ என்றபடி -(சம்போதனம் நெடிலாக வேணுமே )

ஓன்று நில்லா வளை கழன்று துகில்
துகில் கழன்று வளை நில்லா

ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே
அவன் தான் நிற்கிலும் வளையும் கலையும் நில்லா
பாகனை விசாய்ந்த யானை நிற்கிலும்
கச்சு விசாய்ந்த இவை என் வசத்தில் நிற்கின வில்லை –

———–

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5-

பதவுரை

ஆயர்–இடைப் பிள்ளைகள்
சுற்றி நின்று–(தன்னைச்) சூழ்ந்து கொண்டு
தழைகள்–மயில் தோகைக் குடைகளை
இட–(தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர,
சுருள் பங்கி–(தனது) சுருண்ட திருக் குழல்களை
(எடுத்துக் கட்டி)
நேத்திரத்தால்–பீலிக் கண்களாலே
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
ஆயர் கடைத்தலை பற்றி நின்று–இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு
பாடவும் ஆடவும் கண்டேன்–பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்;
பின்–இனி மேல்
அன்றி–அவனுக்கொழிய
மற்று ஒருவற்கு–வேறொருவனுக்கு
என்னை பேசல் ஒட்டேன்–என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;
(ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?)
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற
எம் மாயற்கு அல்லால்–எனது தலைவனுக்கொழிய
(மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)
(ஆகையினால், தாய்மார்களே!)
இவள்–(‘நம் மகளான) இவள்
கொற்றவனுக்கு–அத் தலைவனுக்கே
ஆம்–உரியள்’
என்று எண்ணி–என்று நிச்சயித்து விட்டு
கொடுமின்கள்–(அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்;
கொடீர் ஆகில்–(அப்படி) கொடா விட்டீர்களே யானால்
கோழம்பமே–(உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து-
திருத் தோழன்மார் ஆனவர்கள் அத்யந்த ஸ்நே ஹிகளாய்ச் சூழ்ந்து கொண்டு நின்று
வர்ஷ ஆதாப பரிஹாரமான குடைகளைக் கொண்டு நிற்க என்னுதல் –
தழைத்த கொம்புகளைக் கொண்டு நிற்க என்னுதல்
சுருண்ட திருக் குழலை எடுத்துக் கட்டி சூழப் பீலீத் தழையாலே அலங்கரித்து

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன்
ஆயர் தலைக் கடையில் -நெஞ்சு பொருந்தி நின்று -பாடவும் ஆடவும் கண்டேன் –
ஆயர் தலைக் கடை-என்றது
எங்கள் தலைக்கடை -என்றபடி

அன்றிப்பின் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன்
இப்படிப்பட்ட இவனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன்
நீங்கள் நினைத்து இருக்கில் செய்யலாவது இல்லையே
நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-
ஆனால் நீ தான் குறித்தது யாரை என்ன
அவனுக்கு ஓர் அடி யுடைமை சொல்ல வேண்டி

மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
மாலிருஞ்சோலை போலே என்னையும் தனக்கு அசாதாரணை யாகவுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனுக்கு அல்லால் என்கிறாள்
திருவாய்ப்பாடியிலும் காட்டில் திருமாலிருஞ்சோலை அவனுக்கு அசாதாராணம் போலே காணும்

ஆயற்கு அல்லால்
அந்நிய சேஷம் அறுத்து ஆள வல்லவன் வர்த்திக்கிற இடம்
அவதாரங்களில் உத்தேச்ய ஸ்தலம் சொல்லும் போது பரமபதம் என்ன ஒண்ணாதே
மாலிருஞ்சோலை என்ன வேணுமே
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி(நாச்சியார் ) -என்று குண பூர்த்தி உள்ளதும் இங்கே இறே
மாலிருஞ்சோலை நம்பிக்கு வாய் நேர்ந்து பராவி வைத்தேன் (நாச்சியார் )-என்கிற இடத்தே
என்னையும் சேர்க்கப் பாருங்கோள் என்கிறாள்
அவர்கள் கிருஷ்ணனுக்கு என்றாலும்
இவர் தாம் மாலிருஞ்சோலை என்று இறே அருளிச் செய்வது –

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள்
கொற்றம் -வெற்றி
நீங்கள் கொடுத்திலி கோளாகிலும் தனக்கு என்றது விடாதவன் –
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்தவன் (நாச்சியார் )–இறே
சிசுபால விஸிஷ்டாய –
தனி வழியே போயினாள் என்னும் சொல் வாராதபடி –இவளாம் என்று எண்ணிக் கொடுமின்கள்-

துல்ய சீலோ வயோ வ்ருத்தாம் –
இயம் ஸீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் –
தன்னை ஒரு ஜனக குலத்தில் பிறந்தாளாகவும் –
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தாளாகவும் நினைந்து இருக்கிறாள்
அவனைக் கண்ட பின்பு திருவாய்ப்பாடியில் பிறப்பை மறந்தாள் போலே காணும்

கொடீராகில் கோழம்பமே
நீங்கள் குழம்பினி கோளாம் அத்தனை
நான் போகத் தவிரேன்
குரு தரிசனத்தில் முடிந்த சிந்தயந்தியைப் போலேயும் இருப்பாள் ஒருத்தி காணும் இவள்
ஸர்வான் போகான் பரித்யஜ்ய (ஸூந்தர -16-)-என்றும்
நிரயோ யஸ் த்வயா விநா -என்றும்
உங்கள் குழப்பம் நிஷ் பிரயோஜனம்
முடிவோடே தலைக்கட்டும் –

—————

வேறே ஒருத்தி இனி ஸ்த்ரீத்வம் பேணி இருக்க மாட்டேன் என்கிறாள் –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

பதவுரை

தோழீ–வாராய் தோழீ!
தன்–தன்னுடைய
திரு நெற்றி மேல்–திரு நெற்றியில்
சிந்துரம்–சிந்தூரமும்
திருத்திய–(அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்–திலகப் பொட்டும்-பொன் பட்டயம்
திரு குழலும்–(அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க–விளங்கவும்,
அந்தரம்–ஆகாசமடங்கலும்
முழவம்–மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை–பீலிக் குடைகளாகிற
தண்–குளிர்ந்த
காவின் கீழ்–சோலையின் கீழே
வரும்–(தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்–இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச–வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத–(அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து–தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி–இத் தெரு வழியே
போதும் ஆகில்–வருவானாகில்
(அவனை)
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து–‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு
போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
(அவனுடைய)
பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்–புன் சிரிப்பையும்
காண்போம்–நாம் கண்டு அநுபவிப்போம்.

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கொறம்பும் திருக் குழலும்
மிகவும் சிவந்த சிந்தூரப் பொடியைத் திரு நெற்றியிலே சாத்தி
சிந்தூரச் செம்பொடி போல் (நாச்சியார் )
அதுக்கு மேலாகத் தனக்குத் தகுதியாகச் சமைந்த திருக் கோறம்பும் சாத்தி
அதுக்குப் பரபாகமான திருக்குழலும்
ஒரு நீல ரத்ன மாலை போலே தோன்ற

அந்தரம் முழவத்
ஆகாசம் எல்லாம் வாத்ய கோஷங்களால் முழங்க
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத வருகின்றான் (நாச்சியார் ) -என்றது ஸ்வப்னம்
இது ப்ரத்யக்ஷம்

தண் தழை காவின் கீழ்
தழை -குடை
அன்றியே
குளிர்ந்த பசுத்த நடைக் காவின் கீழே

வரும் ஆயரோடு உடன் –
வருகின்ற தன்னேராயிரம் திருத் தோழன் மாரோடு கூட

வளை கோல் வீச
ஒருவருக்கு ஒருவர் வெற்றி காட்டி வளை தடி எறிந்து கொள்ள

அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை
பிள்ளைத் தனத்தில் முடிவு ஒரு வகையாலும் காண ஒண்ணாத இடைப் பிள்ளை
அவதாராந்தரங்களையும் பரத்வாதிகளையும் பரிச்சேதித்தாலும்
இவனுடைய பால சேஷ்டிதங்களில் ஓர் ஒன்றை முடிவு காணப் போகாது –
அதாவது
இவன் இவன் செய்தவை எல்லாம் அபிமதமாகத் தோற்றுகை இறே
இவன் தான் இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் (நாச்சியார் ) என்றால் போலே காணும்
இவன் வரும் ஆயர் திரளை நினைத்து இருக்கிறது –
அவளுக்கு இது ப்ரார்த்த நீயம் -ஆய்ப்பாடிக்கு என்னை உய்த்திடுமின் (நாச்சியார் ) -என்கையாலே

அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்-
தன்னை ஒழிய எனக்குச் செல்லாமையும்
என்னை ஒழியத் தனக்குச் செல்லும்படியான தீம்புகளையும் அறிந்து அறிந்து
மநோ ரத சமயத்திலும் ப்ரணய ரோஷம் நடவா நின்றது இறே -மார்த்வாதி அதிசயத்தாலே –

பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து
அசங்கதங்களைச் சொல்லி வளைத்து வைத்து
கழகம் ஏறேல்-என்பன்

அன்றியே
நாங்கள் விளையாடுகிற போது எங்கள் விளையாட்டுப் பந்தைப் பறித்துக் கொண்டு போனாய் -என்பன் என்னவுமாம்
இதுவும் அவனோடே இட்டீடு கொள்ளுகைக்கு ஹேதுவாம் அத்தனை இறே

அன்றிக்கே
தன் கையில் பந்தை அவன் மடியில் எறிந்து சொல்லுகிறாள் என்னவுமாம் –

பவள வாய் முறுவலும் காண்போம் தோழி
நாம் காணாதவை எல்லாம் காண்போம்
நமக்கு ஒரு அபூர்வ தர்சனமும் உண்டாம்
அந்த மந்த ஸ்மித்துக்கு இடம் கொடுக்கக் கடவோம் அல்லோம்
நீர் எங்களை ஆராக நினைத்துத் தான் மந்த ஸ்மிதம் செய்கிறீர்
இது எங்கள் வீதி காணும்
நீர் பிரமித்தீரோ -என்று சொல்லக் கடவோம் என்று மநோ ரதிக்கிறாள் –
இந்த மநோ ரதம் மெய்யானால் இறே இவள் பிரதிஜ்ஜை நிலை நின்றதாவது –

———–

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திரு மேனி நின்று ஒளி திகழ
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல்லாயர் குழா நடுவே
கோலச் செம் தாமரைக் கண் மிளிரக் குழலூதி இசைபாடிக் குனித்தாயாரோடு
ஆலித்து வருகின்ற ஆயப்பிள்ளை அழகு கண்டேன் மகள் அயர்க்கின்றதே – 3-4 -7- –

பதவுரை

சால பல் நிரை பின்னே–பற்பல பசுத் திரளின் பின்னே
தழை–பீலிக் குடைகளாகிற
காவின் கீழ்–சோலையின் கீழே
தன்–தன்னுடைய
திருமேனி–திருமேனியானது
ஒளி திகழ நின்று–பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்–நீல நிறத்தை யுடைத்தாய்
நல்-சுருட்சி, நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு–பரிமளம் வீசா நின்றுள்ள
குஞ்சி–திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே–பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர–அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று
குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதிக் கொண்டும்
இசை–(அதுக்குத் தக்க) பாட்டுக்களை
பாடி–பாடிக் கொண்டும்
குனித்து–கூத்தாடிக் கொண்டும்
ஆயரோடு–இடைப் பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற–மகிழ்ந்து வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
அயர்க்கின்றது–அறிவு அழியாநின்றாள்.

சாலப் பல் நிரைப் பின்னே
மிகவும் பல நிரைப் பின்னே-
ஒரு திறம் ஒன்றாக எண்ணிலும் பரி கணிக்க ஒண்ணாத நிரைப் பின்னே

தழைக் காவின் கீழ் தன் திரு மேனி நின்று ஒளி திகழ
தேவும் தன்னையும்-( 2-7-4 ) என்கிற திருமேனி நின்று ஒளி திகழ –
(தேவும் தன்னையும்–பரத்வம் ஆஸ்ரித பரதந்த்ரம் )
தழை நிறமும் தன் நிறமும் விகல்பிக்கலாம் படியாக

நீல நல நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து
நெய்த்துக் கருகிப் பரி மளிதமான திருக் குழலைப் பீலிக் கண்ணாலே அலங்கரித்து

பல்லாயர் குழா நடுவே கோலச் செம் தாமரைக் கண் மிளிரக்
அநேகமான ஆயர் திரளுக்கு நடுவே சிவந்து தர்ச நீயமாய் இருக்கிற திருக் கண்கள்
திருத் தோழன்மாரோடே உறவு தோன்ற மிகவும் கடாக்ஷிக்க

குழலூதி இசை பாடிக் குனித்து
திரு வாயர் பாடியிலே பெண்களோடு உண்டான பாவ பந்தம் தோன்றவும்
ப்ரணய ரோஷ பரிஹாரமாகவும்
திருக்குழலூதி
அதுக்குச் சேர்ந்த இசைகளையும் பாடி
அதுக்குச் சேர்ந்த கூத்துக்களையும் ஆடித்

ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு
ஆயரோடே கூட மேனாணிப்பு தோற்ற
கர்வித்து வருகின்ற இடைப் பிள்ளை யுடைய
ஸுந்தர்ய பூர்த்தியைக் கண்டு

என் மகள் அயர்க்கின்றதே
தன்னுடைய குடிப் பிறப்பையும் ஸ்த்ரீத்வத்தையும் மறந்து
என்னுடைய நியந்த்ருத்வத்தையும் மதியாமல் ஈடுபடுவதே

இந்த அயர்ப்புக்கு நிதானம் யாது ஓன்று
அது தானே பரிஹாரமாம் அத்தனை இறே –

———

சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

பதவுரை

சிந்துரம் பொடி கொண்டு–ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து
தன்–தன்னுடைய
சென்னி–திரு முடியிலே
சிப்பி–அப்பிக் கொண்டும்,
அங்கு–திரு நெற்றியில்
ஓர் இலை தன்னால்–ஒரு இலையினாலே
திரு நாமம் இட்டு–ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும்
நெறி–நெறித்திரா நின்றுள்ள
பங்கியை–திருக் குழலை
அழகிய–அழகிய
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அந்தரம் இன்றி அணிந்து–இடைவெளி யில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்,
இந்திரன் போல்–ஸாக்ஷாத் தேவேந்திரன் போல-திருஷ்ட்டிக்கு கரி பூசுகிறார் –
வரும்–(ஊர்வலம்) வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு
எதிர் அங்கு–எதிர்முகமான இடத்தில்
நின்று–நின்று கொண்டு
வளை இனம்–கை வளைகளை
இழவேல்–நீ இழக்க வேண்டா”
என்ன–என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்
நங்கை–(எனது) மகளானவள்
சந்தியில் நின்று–அவன் வரும் வழியில் நின்று
தன் துகிலொடு–தனது துகிலும்
சரி வளை–கை வளைகளும்
கழல்கின்றது–கழன்றொழியப் பெற்றாள்.
ஏ–இதென்ன அநியாயம்!

சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
சாதி லிங்க பொடி கொண்டு -திரு முடியிலே சாத்தி
அழகிய-இலையாலே- திரு நெற்றியிலே பற்றும்படி அத்விதீயமான திரு நாமமாக இட்டு
அங்கு -என்றது -திரு நெற்றியிலே
சாதி லிங்கத்தை ஆஸ்ய ஜலத்தோடே திரு நெற்றியிலே பற்றும்படி இட்டு

அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
நெறி பிடித்த திருக்குழலை இடைவிடுதி யற
அழகிய பீலிக் கண்களாலேயும்
யுவதிகள் கண்களாலேயும் அணிந்து
(இவர்கள் பார்வையே அலங்காரமாக என்றவாறு )

இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை
இந்திரன் போலே மேனாணிப்பு தோற்ற கர்வித்து வருகிற இடைப்பிள்ளை

அன்றிக்கே
தனக்கு இட்ட சோறு தான் உண்ண மாட்டாத இந்திரனைப் போலே
தன்னை ஒழியச் செல்லாமை பிறந்தாரை
உபேக்ஷிக்க வல்லன் என்று ஏக தேச த்ருஷ்டாந்தம் ஆகிலுமாம்

அன்றிக்கே
இந்த்ர ஸப்தம் -விசேஷ்ய பர்யந்தமாய் அசாதாரணான இவன் தன்னையே
தானே தனக்கு முவமன் -(மூன்றாம் திருவந்தாதி ) -என்கிற
உபமான ராஹித்யத்தாலே ஸர்வ ஸ்வாமி என்னவுமாம்

எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
அவன் வரவுக்கு எதிர் நின்று உன் ஸ்த்ரீத்வத்தை அழித்துக் கொள்ளாதே கொள் -என்ன-
எதிர் நின்று அவன் ஸுந்தர்ய தரங்க வீச்சாகிற பெரும் காற்றை எதிர் செறிக்க ஒண்ணாது என்ன –

சந்தியின் நின்று கண்டீர்
ஊர்ப் பொதுவானவன் வருகிற ஸ்தலத்திலே நின்று

நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே –
வினவப் புகுந்தவர்களுக்கு பெண் பிள்ளையுடைய பிரகார விசேஷ விருத்திகளைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது
தனக்கு நியாம்யை இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –
நங்கை -என்று அவள் குண பூர்த்தியையே சொல்லுகிறது
விஷய தோஷத்தால் வருமவை அவர்ஜ நீயங்களாய் -இன்றியமையாமை – இருக்கும் என்று இறே
நங்கை என்கிறது
தன் -என்று இவளுடைய மதிப்பைக் காட்டுகிறது

துகிலோடு கூட வளையும் கழலா நின்றது
ஸ்த்ரீத்வத்தோடே அபிமானமும் பேண ஒண்ணாத படி கை கழலா நின்றது –
இவை விம்மிதல் முறிதல் செய்யாமைக்கு அடி அவனுடைய அநாதரம் இறே
(அவன் ஆதரித்து இருந்தால் புஷ்டியாய் இருப்பாள் -வளையல்கள் முறிந்து இருக்குமே )

என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே-என்னுமா போலே
விஸ்லேஷத்திலும் கழலுகை அன்றிக்கே
ஸம்ஸ்லேஷத்திலும் தொங்காத படி யாயிற்று என்னுமா போலே —

——–

இதுவும் ஒரு அலங்கார விசேஷமாய்ச் செல்லுகிறது

வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய் மடுத்தூதி ஊதி
அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-

பதவுரை

வலங்காதில்–வலது காதில்
மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும்
வனம் மல்லிகை மாலை–(திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும்
மௌவல் மாலை–மாலதீ புஷ்ப மாலையையும்
அணிந்து–அணிந்து கொண்டு,
சிலிங்காரத்தால்–அலங்காரமாக
குழல்–திருக் குழல்களை
தாழ விட்டு–(திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு
தீம் குழல்–இனிமையான வேய்ங்குழலை
வாய் மடுத்து–திருப் பவளத்தில் வைத்து
ஊதி ஊதி–வகை வகையாக ஊதிக் கொண்டு,
அலங்காரத்தால்–(கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே
வரும்–வாரா நின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
ஆசைப்பட்டு–(அவனிடத்தில்) காமங் கொண்டு,
(இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,)
விலங்கி நில்லாது–(அப்படி) வழி விலங்கி நில்லாமல்
எதிர் நின்று–(அவனுக்கு) எதிர் முகமாக நின்று
வெள் வளை கழன்று–(தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று
மெய் மெலிகின்றது–உடலும் இளைக்கப் பெற்றாள்.

வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வனமாலை மௌவல் மாலை
ஜாதி உசிதமான அலங்காரம் இறே தம் தாம் கண்ணுக்கு நன்றாக உள்ளது
கண்ணுக்கு நன்றாக இருக்கிற மேல் தோன்றிப் பூவை வலத் திருக் காதில் சாத்தி
மேல் தோன்றி -செங்காந்தள்
மற்றைக் காதுக்கு ஒன்றும் சொல்லாமையாலே அது தானே யாதல்
மல்லிகை மாலையைக் கண்ட ப்ரீதியினாலே மறந்தான் ஆதல்
மறந்தாள் ஆதல்
ஒரு திருக் காதிலே சாத்தினதே அமையும் என்றது ஆதல்
காட்டு மல்லிகை என்னுதல்
வனமாலையாகக் காட்டு மல்லிகை மாலை தன்னையே விரும்பினான் ஆதல் –
அன்றியே
வன மாலை மினுங்க நின்று விளையாட (நாச்சியார் )-என்னுமா போலே
அசாதாரணமான வன மாலை தான் ஆதல் –
மௌவல் மாலை-வன மாலை
வனப்பு -அழகாதல் -நாநா வர்ணம் ஆதல்
வன முலை என்னக் கடவது இறே

சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு
சிலிங்காரம் -ஸ்ருங்காரமாய் -அத்தாலும் -அலங்காரம் என்றபடி –
மாலை சாத்தின திருக் குழலைத் திரு முதுகிலே தாழ விட்டுத்
திரு மார்பிலும் இவை தன்னையே இறே சாத்துவது –

தீம் குழல் வாய் மடுத்தூதி ஊதி
தனக்கு இனிதான குழல் என்னுதல்
ப்ரணய ரோஷ பரிஹாரமாக வூதுகிற குழல் ஆகையாலே ப்ரணயிநிகளுக்கு இனிய குழல் என்னுதல்

ஊதி ஊதி என்கிற வர்த்த மானத்தாலே
தேவ மனுஷ்யாதி பேதமற எல்லாருக்கும் இனியதாய்
சித்த அபஹார சாமர்த்தியத்தை யுடைத்தாய் இருக்கை

வாய் மடுத்து
இக் குழலாகப் பெற்றிலோமே
இதுக்கு என்ன மெலிவுண்டு தான்
இத்தால் அஞ்ஞான ஞாபன -வாக்மித்வத்தைக் -வாஸித்வத்தைக் -காட்டுகிறது –

அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை –
ஏவம் பிரகாரங்களான அலங்காரங்களோடு வரும் இடைப் பிள்ளை உடைய –

பிள்ளை -என்கையாலே –
யுவாகுமாரா -என்கிற பருவத்தை சொல்கிறது

அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
மேலீடான ஸுந்தர்ய பூர்த்தியைக் கண்டு மிகவும் விரும்பி

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்
விலங்கி நில்லா விட்டால் மத்த கஜத்தின் முன்னே நிற்பாரைப் போலே பிராப்தி அளவும் செல்ல ஒட்டாத அளவே அன்றிக்கே
ரக்ஷகத்வாதி குணங்கள் அளவும் செல்ல ஒட்டாத சவுந்தர்யத்தின் முன்னே விரும்பி நின்று ஆசைப்படுவாரும் உண்டோ –

வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே
என்னுடைய நியந்த்ருத்வத்தையும் மறுத்தால் தான் தன்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானம் தான் நோக்கலாய் இருக்கிறதோ
மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய் சுத்தமுமான வளைகள் கழன்றோ தான் உடம்பு மெலிவது –
வளை கழலத் தக்கது அமையாதோ மெலிய
மெலிகின்றதே என்ற வர்த்த மானத்தாலே –
இனி வளைக்கு ஆஸ்ரயம் இல்லையோ என்று தோற்றா நின்றதே என்னுதல் –

வளை –தோள் வளை யாகையாலே
பலகாலும் கழலுவது அணிவதாய்ப் போருகையாலே அதுவோ என்று இருந்தாள்
எடுத்து அணியத் தொங்காமையாலே -மெலிவு கண்டாளாய்
கண்ட பிரகாரத்தைச் சொன்னாள் ஆதல் –

——–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

பதவுரை

விண்ணின் மீது–பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே
அமரர்கள்–நித்ய ஸூரிகள்
விரும்பி–ஆதரித்து
தொழ–ஸேவியா நிற்கச் செய்தேயும்
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா
மறைத்து–(அவர்களை மதியாமல்) மேனாணித்து
ஆயர் பாடியில்–திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து)
வீதி ஊடே–தெருவேற
காலி பின்னே–பசுக்களின் பின்னே
எழுந்தருள–எழுந்தருளா நிற்க,
(அவ்வழகை)
இள ஆய் கன்னிமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
கண்டு–பார்த்து
காமுற்ற வண்ணம்–காம லிகாரமடைந்த படியை,
வண்டு அமர் பொழில்–வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
இன்பம் வர–இனிமையாக
பண்–பண்ணிலே
பாடும்–பாட வல்ல
பக்தருள்ளார்–பக்தர்களா யிருக்குமவர்கள்
பரமான–லோகோத்தரமான
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவர்–அடையப் பெறுவார்கள்.
மிறைத்து -அவர்களை அநாதரித்து

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ
1-விண்ணில் அமரர்கள் தம் தாம் ப்ரயோஜனங்களை நச்சித் தொழ
2-மீது அமரர்கள் தொழுகை தானே பிரயோஜனமாக தொழ

மிறைத்து
1-இரண்டு திறத்தாரையும் அநாதரித்துக் காலித் திரளை ஆதரித்து என்னுதல்
2-தொழுகிற விண்ணில் அமரரை அநாதரித்து
தொழுகை தானே பிரயோஜனமான விண்ணின் மீது அமரரையும்
மண்ணின் மீது உண்டான பசுத் திரள்களின் பின்னே போகையும் ஆதரித்து என்னுதல்

ஆயர் பாடியிலே வீதி யூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு
திரு ஆயர் பாடியிலே தெருவின் நடுவே கண்ணன் எழுந்து அருளக் கண்டு

இள ஆய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனராகி -என்றது முதலாக
வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே -என்றது முடிவாக சொன்னபடியே
யுவதிகளான இடைப் பெண்கள் ஆசைப்பட்டு விகர்தைகளான பிரகாரங்களை

யுவதிகளாகா நின்ற இடைப்பெண்கள் ஆசைப் பட்டு விக்ருதைகளான பிரகாரங்களை வ்யாஜமாக்கித்
தம்முடைய மங்களா சாசனத்தோடே சேர்த்து அனுசந்தித்த பிரகாரங்களை

இவை மங்களா ஸாசனத்தோடே சேருமோ என்னில்
அவனுக்கு ஊராகத் தோற்று சித்த அபஹ்ருதைகள் ஆகையாலும்
அவன் இவர்கள் அளவில் நெஞ்சு பறி கொடாமல் ஜய சீலனாய்ப் போருகையாலும்
தே ஜிதம் என்று அவனுடைய வெற்றிக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகையிலே சேரும் –

அவன் அநஸ்நன் இறே
யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத்
தத்கத தோஷர் அஸம்ஸ்ப்ருஷ்ட
அவனுக்கு லீலா ரஸம் இறே இவற்றில் உள்ளது
இன்புறும் இவ்விளையாட்டு இறே
ஆகையால் அவனுடைய லீலா போகமும் இவருக்கு உத்தேச்யம் இறே
சிந்தையந்தியும் சிசுபாலனும் லீலா ரஸ வர்த்தகர் இறே

வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
திரு மாளிகையில் திருச் சோலையில் மது பாநம் பண்ணின வண்டுகள் மற்றும் உண்டான சோலைகளை
இஷுரகமாக நினைத்து இறே இங்கே அமருவது –
ஏவம் பிரகாரமான திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

விட்டு சித்தன்
விஷ்ணு ஸப்த வாஸ்யனான வட பெரும் கோயில் உடையானைத் தம் திரு உள்ளத்திலே யுடையவர் என்னுதல்
அவனுடைய திரு உள்ளத்துக்கு விஷய பூதர் ஆனவர் என்னுதல்
அவனுடைய வியாப்தியையும் திருந்த உள்ளம் பற்றுகிறவர் என்னுதல்

சொன்ன மாலை பத்தும்
காமுற்ற வண்ணத்தை விஷ்ணு சித்தன் சொன்ன மாலை யாகையாலே இப் பத்தையும் –

பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
கேட்டவர்கள் பக்கலிலே இன்பம் செல்லுகை அன்றிக்கே
இன்பம் பாடினவர்கள் பக்கலிலே வரும்படியாகப் பாடுகிற பத்தர் உள்ளார்

பரமான வைகுந்தம் நண்ணுவரே
மேலானதுக்கும் மேலாய்
அபுநா வ்ருத்தி லக்ஷணமான பரமபதத்திலே
பரமாத்மாவைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்கிறபடியே
செல்லப் பெறுவர் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: