ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-3–சீலைக் குதம்பை ஒருகாது—

கீழில் திருமொழியில்
அவன் தானே லீலா ரசத்தாலே கன்றுகளின் பின்னே போக
போனவன் தானே வரும் -இது ஜாதி உசித தர்மம் என்று ஆறி இருக்க மாட்டாமல்
நாம் பேணி வளர்த்து முகம் கொடுத்துக் கொண்டு போராமை அன்றோ அவன் நினைவு அறியாத
கன்றின் பின்னே போக வேண்டிற்று -என்று
தான் போக விட்டாளாகவும் –
போன இடத்தில் வரும் அபாய பரம்பரைகளையும் நினைத்துத்
தன்னுடைய க்ஷண கால விஸ்லேஷ அஸஹத்வத்தாலே
யசோதை ஈடுபட்ட பிரகாரத்தாலே அநுசந்தித்தாராய் நின்றார்

இனி அந்த கிலேசம் எல்லாம் பின்னாட்டாமல் போம்படி
கன்றுகள் முன்னாக
அவன் வந்து முகம் காட்டக் கண்டு
அத்யந்தம் ப்ரீதையாய்
பலருக்கும் காட்டிச் சொல்லிச் சென்ற பிரகாரத்தாலே அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார் –

——

தான் ஒப்பித்து விட்ட பிரகாரத்தையும்
அவனும் ஒப்பித்துக் கொண்டு வந்த பிரகாரத்தையும்
கண்டு தானும் உகந்து
உகப்பாருக்கும் காட்டுகிறாள் –
(ருசி உடையவருக்குத் தானே பகவத் விஷயம் அருளிச் செய்ய வேண்டும் )

(முதல் பாசுரம் பிறரைப் பார்த்து சொல்வது
மேலே அவன் இடம் நேராக -வாசி கண்டு கொள்வது )

சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- –

பதவுரை

நங்கைமீர்–பெண்காள்!,
ஒரு காது–ஒரு காதிலே
சீலைக் குதம்பை–சீலைத் தக்கையையும் (துணித்திரி )
ஒரு காது–மற்றொரு காதிலே
செம் நிறம் மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு)
கூறை உடையும்–திருப் பரியட்டத்தின் உடுப்பையும்
(அது நழுவாமைக்குச் சாத்தின)
கோலம்–அழகிய
பணை–பெரிய
கச்சும்–கச்சுப் பட்டையையும்
குளிர்–குளிர்ந்திரா நின்றுள்ள
முத்தின்–முத்தாலே தொடுக்கப் பெற்று
கோடு–(பிறை போல்)வளைந்திருக்கின்ற
ஆலமும்–ஹாரத்தையும்
(உடையனாய்க் கொண்டு)
காலி பின்னே–கன்றுகளின் பின்னே
வருகின்ற–(மீண்டு)வாரா நின்ற
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய
வேடத்தை–வேஷத்தை
வந்து காணீர்–வந்து பாருங்கள்;
ஞாலத்து–பூ மண்டலத்திலே
புத்திரனை–பிள்ளையை
பெற்றார்–பெற்றவர்களுள்
(’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்)
நானே–நான் ஒருத்தியே யாவேன்;
மற்று ஆரும் இல்லை–வேறொருத்தியுமில்லை.

சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
இரு காதிலும் சீலைக் குதம்பை இட்டு விட்டாள் போலே காணும்
ஒரு காது என்று உரைக்கையாலே
மற்றைக் காதில் இவள் இட்டத்தை வாங்கி –
காட்டிலே மலர்ந்து சிவந்த மேல் தோன்றியைச் சாற்றிக் கொண்டு
வந்த பிரகாரத்தைக் காண்கையாலே
ப்ரீதி அப்ரீதி ஸமமாய்ச் செல்லும் இறே இவளுக்கு
அதாவது
காதில் அத்தை வாங்கும் போதும்
மற்ற ஒன்றை இடும் போதும் புண் படக் கூடும்-(கூப்பிடும் ) என்று நினைக்கையாலும்
அது தான் அனுபாவ்யமாய் இருக்கையாலும் கூடும் இறே –

கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் –
திரு மேனிக்குத் தகுதியாகச் சாத்தின பரி யட்டமும்
அது நழுவாமல் சாத்தப்பட்டு தர்ச நீயமாய் பெரிதான கச்சும்
இவையும் கன்றுகளின் பின்னே ஓடுகையாலே குலைந்ததாய் மீண்டும் சாத்தினான் என்னுதல்
குலைத்துச் சாத்தினான் என்னுதல்
குலையாமல் இவள் ஒப்பித்து விட்டால் போலே அடைவு குலையாமல் வந்தான் என்னவுமாம் இறே

குளிர் முத்தின் கோடாலாமும்
நீர்மையுடைய முத்தாலே சமைக்கப்பட்டு
திருக் கழுத்திலே சாத்தி நடக்கும் போது இடம் வலம் கொண்டு
மிகவும் அசைவதான முக்த ஆபரணமும்

ஆலம் -மிகுதி
லகரம் ரகரமாதல் -ஆரம் -என்று பாடம் ஆதல்

முத்தின் என்கையாலே
நன்றாய் குளிந்த முத்து என்னவுமாம்

அன்றிக்கே
கோடாலம் என்று
முத்துப் பணிக்கு முழுப் பேராகவுமாம்

அன்றியே
கோடாலம் என்று
முத்துக் கடிப்பு (காது அணி ) என்பாரும் உண்டு —
அது இவ்விடத்தில் சேராது –
இரண்டு காதுக்கும் ஒப்பனை வேறே உண்டாகையாலே

காலிப் பின்னே வருகின்ற
காலி என்று இளம் காலியாய்
மேய்க்கக் கொண்டு போன கன்றுகளைச் சொல்லிற்று ஆதல்

அன்றியே
கன்றுகளும் பசுக்களும் கூடுகையாலே காலி என்றாதல்

அன்றியே
இவன் தன் தீம்பாலே கன்றுகளைப் பசுக்களோடே கூட்டிக் கொண்டு வருகையாலே
காலி என்னுதல்

கடல் வண்ணன் வேடத்தை காண வாரீர்
சமுத்திரம் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையவன் வருகிற பிரகாரத்தை
உந்தாம் பிள்ளைகளை உகக்கிற நீங்கள் வந்து காணீர்

ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை
பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ணமான அண்டத்துக்கு உட்பட்ட பதினாலு லோகத்திலும்
என்னைப் போலே பிள்ளை பெற்றார் உண்டோ
மீண்டும் மீண்டும் நானே இறே பெற்றேன்
நல்ல பிள்ளைகளைப் பெற்ற ப்ரீதியாலே வாசி அறிந்து பூர்ணைகளாய் இருக்கிறவர்களே
வேறு என்னைப் போலே -இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -என்று கொண்டாடும்படி இருப்பாரும் உண்டோ
இக் கொண்டாட்டம் தான்
த்வயா புத்ரேண -என்றால் போலே அன்று இறே –

(த்வயா புத்ரேண-பர்ணசாலை கட்டிய அழகைப் பார்த்து பெருமாள் புகழ்ந்தது –
உன்னை பிள்ளையாக வைத்து -எனக்கு தகப்பனார் மரிக்க வில்லை
இங்கு பெற்றதுக்கே கொண்டாட்டம் )

——-

கன்று மேய்த்து வந்த பிள்ளையை மடியில் வைத்து உகக்கிறாளாய் இருக்கிறது இப்பாட்டில் –

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

பதவுரை

கன்னி–அழிவற்ற
நல்–விலக்ஷணமான
மா மதிள்–பெரிய மதிள்களாலே
சூழ் தரு–சூழப்பட்டு
பூ பொழில்–பூஞ்சோலைகளை யுடைய
காவிரி–காவேரி நதியோடு கூடிய
தென் அரங்கம்–தென் திருவரங்கத்தில்
மன்னிய–பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற
சீர்–கல்யாண குண யுக்தனான
மது சூதனா–மதுஸூதநனே! [கண்ணபிரானே!]
கேசவா–கேசவனே!
பாவியேன்–பாவியாகிய நான்
வாழ்வு உகந்து–(நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி
உன்னை–(இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை
சிறுகாலே–விடியற்காலத்திலேயே
ஊட்டி–உண்ணச் செய்து
இள கன்று மேய்க்க–இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக)
ஒருப்படுத்தேன்–ஸம்மதித்தேன்;
(இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த)
என்னில்–என்னிற்காட்டில்
மனம் வலியாள்–கல் நெஞ்சை யுடையளான
ஒரு பெண்–ஒரு ஸ்த்ரீயும்
இல்லை-(இவ் வுலகில்) இல்லை;
என் குட்டனே–எனது குழந்தாய்!
முத்தம் தா–(எனக்கு) ஒரு முத்தம் கொடு.

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித்
அழியாதாய் இருப்பதாய்
ஸர்வ ஜன மநோ ஹரமாய்
மஹத்தாய் இருக்கிற
திரு மதிள்களாலும்
புஷ்பாதிகளை உபகரிப்பதாய் இருக்கிற திருச் சோலை களாலும்
அந்தத் திருச் சோலை களுக்கு தாரகாதிகளை யுண்டாக்குகிற திருக் காவேரியாலும்
சூழப்பட்டு இருப்பதாய்

தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா கேசவா
பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

தென் -என்று அழகு ஆகவுமாம்

பாவியேன் வாழ்வு உகந்து
உன்னுடைய சீர்மை பெருமை அறியாத பாவியேன்
பழுதே பல பகலும் போயின
அளவில் பிள்ளை இன்பத்தைப் போக விட்டு இழந்த பாவியேன்
ஜாதி உசிதமான தர்ம ஆபாஸத்தை பிரயோஜனமாக விரும்பி
(கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் )

உன்னை
மடியில் வைத்துத் திரு முக மண்டலத்தைப் பார்த்து
உன்னை -என்கிறாள்

இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
அள்ளி யுண்ண அறியாத யுன்னைப் போலே
பறித்து கசக்கித் தீத்த வேண்டும்படியாய்
அது இறக்கினால் இனிது உகந்து மேய்க்க வல்லை என்று சிறுகாலே ஊட்டி

ப்ராஹ்மணர் ஸ்வ தர்ம அனுஷ்டானம் செய்கைக்கு ஸத்வ உத்தர காலத்திலே எழுந்து இருக்குமா போலே –
உணர்ந்தாளாகில் இவனை ஊட்டுகை இறே இவளுக்கு வியாபாரம்

ஒருப்படுத்தல் –
போக்குதலாய் -உன்னைப் போக விட்டேன் என்றபடி –

ஊட்டி –என்று
அநஸ்நன் –ஆகையாலே தானாக உண்ணான் என்கிறது
ஏன் -உண்டிலனோ
(சம்யக் ச குண ஸஹ போஜனம் -சபரி விதுரர் திருவடி-மூன்றும் உண்டே )
வாரி வளைத்து உண்டு (பெரிய திருமொழி -10-7)–என்றும்
வானவர் கோனுக்கு இட்ட வடிசில் உண்டான் -என்றும்
பல இடங்களிலும் நின்றதே -என்னில்
அது தன்னால் இறே அர்ச்சாவதாரத்திலே திருக்கை நீட்டாமல் அள்ளி இடவும் ஊட்டி விடவும் வேண்டி இருக்கிறது
ஊட்டுவார் ஊட்டினால் உண்பன் –என்று இறே அஸ்நாமி -(கீதையில் )-என்றதும் –
ஊட்டுவாரை யுண்டாக்குகைக்காக இறே -வெண்ணெய் யுண்ட வாயன் -என்று வெளிப்படும் படி ஒளித்து உண்டதும்
உகந்து அருளின தேசங்களிலே அந்ய சேஷத்வம் புகுராமைக்கு இறே வெளியிலே ஊட்டாமல் உண்டதும்

இவ்விடத்தில் பெரிய திருமலை நம்பி அந்திம தசையில் வார்த்தை
அதிகாரிகள் துர் லபர் என்று இறே என் போல்வாரை நாடாய் -(திருவாய் -1-4-8)-என்றதும் –

என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை –
புத்ர ஸ்நேஹம் அதிசயித்து இருக்கச் செய்தேயும்
குணவத் புத்ரர்களைப் போக்கி வரும் அளவும் ஆறி இருந்த
கௌசல்யையார் ஸூமித்ரையார் தாங்கள் எனக்கு ஸத்ருசரோ

என் குட்டமே
குட்டனே -என்று அபிமானிக்கிறாள்
கீழே -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கைமார் நானே -என்றாளே
அது பின்னாட்டி என் குட்டனே -என்கிறாள் –
குட்டன் -பிள்ளை

முத்தம் தா
இனி கன்றின் பின் போகாதே எனக்கு ப்ரீதியை உபகரிக்க வேணும் என்று பிரார்திக்கிறாள் –

——–

முன்பே ஊட்டி ஒருப்படுத்தாள்
இப்போது கன்று மேய்த்து வந்த ஆயாஸமும்
திருமேனியில் கற்றுத் தூளியும் போம்படி திருமஞ்சனம் செய்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்திக்கிறாள் –

காடுகளூடு  போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் -3 3-3 –

பதவுரை

காடுகள் ஊடு போய்–(பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து
(கன்றுகள் கை கழியப் போகாத படி)
மறி ஓடி–(அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி
கன்றுகள் மேய்த்து–(அக்) கன்றுகளை மேய்த்து
கார் கோடல் பூ சூடி–பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு
வருகின்ற–(மீண்டு) வருகின்ற
தாமோதரா–கண்ணபிரானே!
உன் உடம்பு–உன் உடம்பானது
கன்று தூளி காண்–கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்;
மயில் பேடை–பெண் மயில் போன்ற
சாயல்–சாயலை யுடைய
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மாணாளா–வல்லபனானவனே!
(இந்த உடம்பை அலம்புவதற்காக)
நீராட்டு அமைத்து வைத்தேன்–நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்;
(ஆகையால் நீ)
ஆடி–நீராடி
அமுது செய்–அமுது செய்வாயாக;
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
உண்பான்–உண்ண வேணுமென்று
அப்பனும்–(உன்) தகப்பனாரும்
உண்டிலன்–(இதுவரை) உண்ணவில்லை.

காடுகளூடு  போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற்பூச் சூடி வருகின்ற தாமோதரா
கன்றுகள் வழியே போனாலும்
காடுகள் நடுவே போய்க் கன்றுகளுக்குப் புல்லும் தண்ணீரும் உள்ள இடம் பார்த்து இறே மேய்ப்பது
பின்னையும் கன்றுகள் கை கழியப் போகுமாகில் துஷ்ட மிருக பரிஹார அர்த்தமாக மறித்து ஒட்டி

கன்றுகள் வயிறு நிறைந்த ப்ரீதியினாலே நிர்ப்பரனாய்
கார்க்கோடல் பூ முதலானவற்றாலே தன்னையும் அலங்கரித்துக் கொண்டு வருகிறவனை

வருகின்ற தாமோதரா
போது அறிந்து வரவு பார்த்து இருந்து வருகிற பிரகாரத்தைக் கண்டு கொண்டாடி
வருகின்ற தாமோதரா-என்கிறாள் –

தாமோதரா
என்று தனக்கு நியாம்யனான பந்தத்தையும் பேசி உகக்கிறாள்

கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
நீல ரத்னத்திலே ஏற்றின வார்ப்புப் போலே -ஜாதி உசிதமான தர்மம் ஆகையாலே
தனக்கு மநோ ஹரமாய் இருக்கிலும்
நப்பின்னை காணில் சிரிக்கும் இறே என்று
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்துக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்-என்கிறாள் –
மயில்
பேடை போலே சாயை யுடைய நப்பின்னைக்கு நாயகன் ஆனவனே –
நீராட்டு -நீராடும் பிரகாரம்
அமைத்தல் -சமைத்தல்

ஆடி அமுது செய்
நீராடி
அமுது செய்ய வேணும் -என்று பிரார்திக்கிறாள்

அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்
உன்னோடே உடனே உண்ண வேணும் என்று உங்கள் தமப்பனாரும் உண்டிலர்
சேதன பரம சேதனர்களுக்கு ஒரு கலத்தில் ஊணாய் இறே இருப்பது –
கோதில் வாய்மை யுடையவனோடே யுண்ண வேணும் (5-8-2)-என்று இறே
அவன் தானும் பிரார்த்தித்ததும் –
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ -என்றது
இங்கே காணலாம்படி இருக்கிறது இறே –

(ஸம்யக் -ஸ குண -ஸஹ-போஜனங்கள் -சபரி-விதுரர் – -திருவடி
ஸஹ–ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ-தைத்ரியம் – இதில் இருந்து நாயனார் )

———

நாள் தோறும் கன்று மேய்க்கப் போகையும்
இவள் வரவு பார்த்து இருக்கையும்
வந்தால் ஈடுபடுகையும்
இவளுக்கு நித்யமாய்ச் செல்லா நின்றது இறே –

கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை  கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

பதவுரை

கடி ஆர்–(மலர்களின்) பரிமளம் நிறைந்த
பொழில்–சோலைகளை யுடைய
அணி–அழகிய
வேங்கடவா–திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
போர்–யுத்தஞ்செய்ய முயன்ற
கரு ஏறே–காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே!
மாலே–(கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே!
எம்பிரான்–எமக்கு ஸ்வாமி யானவனே!
நீ உகக்கும்–நீ விரும்புமவையான
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
குழலும்–வேய்ங்குழலையும்
தருவிக்க–(நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும்
கொள்ளாதே–(அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல்
போனாய்–(கன்றுகளின் பின்னே) சென்றாய்;
கடிய வெம் கான் இடை–மிகவும் வெவ்விய காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போன–தொடர்ந்து சென்ற
சிறு குட்டன்–சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய
செம் கமலம் அடியும்–செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும்
வெதும்பி–கொதிக்கப் பெற்று
உன் கண்கள்–உன் கண்களும்
சிவந்தாய்–சிவக்கப் பெற்றாய்;
நீ;
அசைந்திட்டாய்–(உடம்பு) இளைக்கவும் பெற்றாய்-

கடியார் பொழில் வேம்கடவா
நறு நாற்றம் ஆர்த்து இருந்த பொழிலாலே சூழப்பட்டு
அழகியதாய் இருக்கிற திருமலையிலே நித்ய வாஸம் செய்கிறவனே

கரும் போரேறே –
பெரிதாய்
செருக்குத் தோன்ற எதிர் பொருது ஸ்வைரத்திலே ஸஞ்சரிக்கிற ரிஷபம் போலே
திருவாய்ப்பாடியை மூலையடியே நடத்தி மேனாணிப்பு தோற்ற ஸஞ்சரிக்குமவனே
வசிஷ்டாதிகள் கீழே ஒதுங்கி வர்த்திக்க வேண்டா இறே
இடக்கை வலக்கை அறியாத வூர் இறே

அன்றிக்கே
கருமை என்றது கருமை தானாய்
பொரா நின்ற நீல வல் ஏறு என்னவுமாம்
அப்போது
பொருது நீ வந்தாய் -என்கிறது போரச் சேரும் இறே
மல்லர் முதலான சத்ருக்களோடே பொருதமை உண்டு இறே

நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
வர்ஷ ஆதப பரிஹாரமான விரியோலையும்
கண்டக அக்ர பரிஹாரமான திருவடி நிலையும்
கன்றுகள் வயிறு நிறைந்தால் அழைத்தூதும் குழலும்

நிவாஸ இத்யாதி
சென்றால் குடையாம் இத்யாதி
அஞ்ஞாத ஜ்ஞாபன முகத்தாலே அவர் தாமே குழலும் ஆவார் இறே

கன்றுகளை மிகவும் உகக்கிற த்வரையாலே இறே முன்பு
உகந்தவற்றை அநாதரித்துப் போக வேண்டிற்று
அத்தாலே இறே மாலே என்றது

கடிய வெம் காநிடை  கன்றின் பின் போன சிருக் குட்ட
இவனை அணைத்து மடியில் வைத்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
கன்றின் பின் போன த்வரை இறே பின்னாட்டுகிறது –
மிகவும் வெம்மை யுடைத்தான கானிடை என்கையாலே பாலை நிலம் என்று தோற்றுகிறது
இப்படிப்பட்ட காட்டிடையிலே போன சிறுப் பிள்ளாய்

செம் கமல வடியும் வெதும்பி
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரை போலே இருக்கிற திருவடிகளும் வெதும்பி
காட்டில் வெம்மையை நினைத்து அஞ்சினவள் ஆகையாலே
செங்கமல அடி என்றாலும் இவள் கைக்குக் கொதித்துத் தோற்றும் இறே

உன் கண்கள் சிவந்தாய்
கன்றுகளுக்கு மேய்ச்சல் தலை பார்க்கையாலும்
அவற்றின் வயிறு குறைவு நிறைவு பார்க்கையாலும்
காட்டிலே அதிர ஓடிக் கன்றுகள் மறிக்கையாலும்
திருவடிகளின் வெம்மை திருக்கண்களிலே வருகையாலும்
சிவந்து இருக்கும் இறே

அசைந்திட்டாய்
போரச் சலித்தாய் -எழுந்து இருந்து பேசு -என்பாரைப் போலே
அசைந்திட்டாய் -என்கிறாள்

நீ
உன் அருமை அறியாத நீ

எம்பிரான்
இப்படிப் போயோ எங்களுக்கு ரக்ஷகனாய் உபகாரகனாய் இருக்கிறது –

————

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3- 3-5 –

பதவுரை

முன்–(பாரதப் போர் செய்த) முற் காலத்தில்
பற்றார்–(உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்
நடுங்கும்–நடுங்கும்படி
பாஞ்ச சன்னியத்தை–சங்கத்தை
போர் ஏறே–போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-
என்-எனக்கு விதேயனாய்–
சிறு ஆயர் சிங்கமே–சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே!
சீதை–ஸீதாப் பிராட்டிக்கு
மணாளா–வல்லபனானவனே!
சிறு குட்டன்–சிறு பிள்ளையாயிருப்பவனே!
(இப்படியிருக்கச் செய்தேயும்)
செம் கண் மாலே–செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே!
நீ;
சிறு ஆடையும்–(உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும்
சிறு பத்திரமும் இவை–குற்றுடை வாளுமாகிற இவற்றை
(காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே)
கட்டிலின் மேல் வைத்து போய்–(கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய்
கன்று ஆயரோடு–கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே
கன்றுகள் மேய்த்து–கன்றுகளை மேய்த்து விட்டு
(மீண்டு மாலைப் பொழுதிலே)
கலந்து உடன்-(அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து
வந்தாய் போலும்–(வீட்டுக்கு) வந்தாயன்றோ?.

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சத்ருக்கள் நடுங்கும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்தில் வைத்து
அத்தாலே கர்விதனான பிரகாரத்தைக் கண்டு
பிரதிகூலர் முடியவும் அனுகூலர் தழைக்கவுமாம் படி நின்ற புருஷ ரிஷபனே

சிற்றாயர் சிங்கமே
தன்னேராயிரம் பிள்ளைகள் -என்றபடி சிறுப் பிள்ளைகளோடு ஸிம்ஹக் கன்று போலே
மேனாணிப்புத் தோன்ற விளையாடித் திரிகிறவனே

சீதை மணாளா
ஸஹ தர்ம சரீதவ
வைதேஹீ பர்த்தாரம் -என்கிறபடியே
சீதை மணாளா என்கிறாள்

இப்பொழுது இவளை நிரூபகமாகச் சொல்கிறது –
ஸ்ரீ யபதி -என்று தர்மி ஐக்யம் தோற்றுகைக்காக -இறே
கீழேயும் பின்னை மணாளா என்றாள் இறே

சிறுக்குட்டச் செம் கண் மாலே
நீர்மையும் மேன்மையும் ஸூசிப்பிக்கிற சிவந்த திருக்கண்களை யுடையவனே

சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
உனக்குத் தகுதியான திருப்பரி யட்டமும்
உன் திருக்கைக்கு அடங்கின விளையாடு பத்திரமும்
தரக் கொண்டு எழுந்து அருளாமல்
கன்று மேய்க்கிற த்வரையாலே கிடக்கைப் பாயிலே பொகட்டுப் போவாரைப் போலே கட்டில் மேல் வைத்து மறந்து

கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் –
கற்றினம் மேய்க்கிற இடையரோடே கன்றுகளையும் கூட்டிக் கொண்டு
கற்றினத்தோடே கூடிப் போகிற கன்றுகளைப் பிரித்து மேய்த்துக் கொண்டு வந்தாயோ தான் என்று உகக்கிறாள் –

————

வெறுப்பார் உகந்தது செய்தாய் -என்று போன காலத்தில் வந்த அபாயத்தைத்
தத் காலம் போலே அனுசந்தித்து ஈடுபடுகிறாள் –

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ  பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் -3 3-6 –

பதவுரை

அம் சுடர்–அழகிய ஒளியை யுடைய
ஆழி–திருவாழி யாழ்வானை
கை அகத்து–திருக் கையிலே
ஏந்தும்–தரியா நின்றுள்ள
அழகா–அழகப் பிரானே!
நீ;
பொய்கை–(காளியன் கிடந்த) பொய்கையிலே
புக்கு–போய்ப் புகுந்து
(அவ் விடத்தில்)
பிணங்கவும்–சண்டை செய்த போதும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்–நான் ஜீவித்திருந்தேன்;
என் செய்ய–ஏதுக்காக
என்னை–என்னை
(இப்படி)
வயிறு மறுக்கினாய்–வயிறு குழம்பச் செய்கின்றாய்;
ஏது ஓர் அச்சம் இல்லை–(உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே;
காயாம் பூ வண்ணம் கொண்டாய்–காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே!
கஞ்சன்–கம்ஸனுடைய
மனத்துக்கு–மநஸ்ஸுக்கு
உகப்பனவே–உகப்பா யுள்ள வற்றையே
செய்தாய்–செய்யா நின்றாய்.

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா
அழகிய புகரை யுடைத்தான திருவாழியை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான உன் திருக்கையிலே தரித்த அழகை யுடையவனே –
பய நிவர்த்தகமானதும் அழகுக்கு உறுப்பாகா நின்றது இறே –

நீ  பொய்கை புக்கு
நீ உன்னுடைய மார்த்வத்தை நினையாதே பொய்கையிலே
புக்கு
சலம் கலந்த பொய்கை -(திருச்சந்த )-என்கிற பொய்கையிலே இறே புக்கது –

நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்
நஞ்சை உமிழா நின்ற கொடிய நாகத்தோடே நீ பிணங்கின போதும்
நான் பிராணனோடு இருந்தேன் இறே
பொய்கையில் ஜலம் அனுமேயாய் —
விஷம் ப்ரத்யக்ஷமாம் படி இறே உமிழ்ந்து போந்த படி —

என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்
(இந்த வ்ருத்தாந்தம் கேட்டும் )போகாதே பிராணனோடு இருக்கிற என்னை
என் செய்வதாகத் தான் என்னை வயிறு எரியும்படி பண்ணினாய்
வஸ்துவை மடியிலே வைத்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
போன காலத்துக்கு மீண்டும் மீண்டும் வயிறு எரிகை இறே -மறுக்குதல்

ஏதுமோர் அச்சம் இல்லை
ஸ்வ அநர்த்தத்தை நினைத்து அஞ்சுதல்
பர அநர்த்தத்தை நினைத்து அஞ்சுதல்
ஸாஹஸ ப்ரவ்ருத்தி -லோகம் பொறாது என்று அஞ்சுதல்
என்னைப் பார்த்து அஞ்சுதல் இல்லை இறே

கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்
ஆனாலும் இந்த சாஹாஸம் கம்ஸாதிகளுக்குப் ப்ரயோஜனமாம் அத்தனை இறே

காயாம் பூ வண்ணம் கொண்டாய்
காயாம் பூவில் செவ்வி நிறத்தை அபஹரித்தவனே –
திருமேனியில் சமுதாய சோபையையும்
ஸுகுமார்யத்தையும் பார்த்து
இவற்றில் ஒரு குறை வாராமல் என் பாக்யத்தால் பிழைக்கப் பெற்றேன் என்கிறாள் –

—————

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3- 3-7 –

பதவுரை

பன்றியும்–மஹா வராஹமாயும்
ஆமையும்–ஸ்ரீகூர்மமாயும்
மீனமும்–மத்ஸ்யமாயும்
ஆகிய–திருவவதரித்தருளின
பால் கடல் வண்ணா–பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே!
உன் மேல்–உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால்
கன்றின் உரு ஆகி–கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு
மேய் புலத்தே வந்து–(கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த
கள்ளம் அசுரர் தம்மை–க்ருத்ரிமனான அஸுரனை
(அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து)
சென்று–(அக்கன்றின் அருகிற்)சென்று
சிறு கைகளாலே–(உனது) சிறிய கைகளாலே
பிடித்து–(அக்கன்றைப்) பிடித்து
விளங்காய்–(அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி
எறிந்தாய் போலும்–விட்டெறிந்தா யன்றோ;
என் பிள்ளைக்கு–என் பிள்ளையான கண்ணபிரானுக்கு
தீமை செய்வார்கள்–தீமைகளை உண்டு பண்ணுமவர்கள்
என்றும்–என்றைக்கும்
அங்ஙனம் ஆவார்கள்–அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள்.
கை நெரித்து சீறிச் சொல்லுகிறாள்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே-(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது
ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்-(திருவாய் -1-8-) என்பது
இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது
மீனோடு ஆமை கேழல் -(8 -10-10-)என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –
யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்
வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற
அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

பாற் கடல் வண்ணா
பாலின் நீர்மை செம் பொன் நீர்மை என்கிற யுக வர்ண க்ரமம் ஆதல் –

பாக்ர் கடல் வண்ணா
பார் சூழ்ந்த கடல் -என்று இந்தக் கடல் தன்னை யாதல்

உன் மேல் கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
கன்றுகள் மேய்கிற இடத்தில் கிருத்ரிம ரூபிகளான அஸூரர்கள் கன்றின் உருவாகி உன் மேல் வந்த போது

சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
அவர்கள் தின்ன விரும்பாத க்ருத்ரிமத்தை அறிந்து சென்று பிடித்துத் தூக்கிச் சுற்றி
அஸூர மயமான விளங்காய் எறிந்தாயோ தான் என்றவாறே
எறிந்தேன் என்னக் கூடும்

என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே
என்று பிரியப்படுகிறாள்
இவள் நெஞ்சில் ஓடுகிற தசை ஸ்வரம் கொண்டு அறியும் அத்தனை
பிரதிகூலித்துக் கிட்டினவர்கள் நிரன்வய விநாஸத்திலே அந்வயிக்கும் அத்தனை இறே –

————

பிரதிகூலர் விரோதித்த அளவில் நிரசிக்கலாய் இருந்தது –
அனுகூலர் விரோதித்த அளவிலே நிரசிக்கையில் யுண்டான அருமையாலே
(எதிர்த்த அஹங்காரம் –செருக்கு –மட்டும் வாட்டி )செருக்கு வாட்டி விடும் அத்தனை இறே –
(குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி )

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

பதவுரை

கேசவா–கண்ணபிரானே!
கேட்டு அறியாதன–(உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை
கேட்கின்றேன்–(இன்று) கேட்கப் பெற்றேன்;
(அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;)
கோவலர்–கோபாலர்கள்
இந்திரற்கு–இந்திரனைப் பூஜிப்பதற்காக
காட்டிய–அனுப்பிய
சோறும்–சோற்றையும்
கறியும்–(அதுக்குத் தக்க) கறியையும்
தயிரும்–தயிரையும்
உடன் கலந்து–ஒன்று சேரக் கலந்து
உண்டாய் போலும்–உண்டவனன்றோ நீ;
(இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை)
ஊட்ட–(நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க)
முதல் இலேன்–கைம் முதல் எனக்கில்லை;
உன் தன்னை கொண்டு–உன்னை வைத்துக் கொண்டு
ஒரு போதும்–ஒரு வேளையும்
எனக்கு அரிது–என்னால் ஆற்ற முடியாது;
வாட்டம் இலா–(என்றும்) வாடாத
புகழ்–புகழை யுடைய
வாசு தேவா–வஸுதேவர் திருமகனே!
இன்று தொட்டும்–இன்று முதலாக
உன்னை–உன்னைக் குறித்து
அஞ்சுவன்–அஞ்சா நின்றேன்.

கேட்டு அறியாதன கேட்கின்றேன்
உனக்கு இங்கு ஏது குறையாய்த் தான்
அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன தனை எல்லாம் முற்ற வாரி
வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-என்று
பலரும் வந்து உன் மகன் உன் மகன் என்று சொல்ல
இதுக்கு முன்பு இப்படி கேட்டு அறியேன்
இன்று கேளா நின்றேன்
கோவர்த்தநோஸ்மி -என்ற ஒரு மஹா பூதம் வந்து உண்டு போக
உன் மகன் உண்டான் என்று சொல்லா நின்றார்கள் –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
திருவாய்ப்பாடியில் உள்ள எல்லாரும் தம் தாம் வாசல்கள் தோறும் எடுத்த பஞ்ச லக்ஷம் குடிகளில் சோறும்
வந்தேறு புதுக்குடியானவர்கள் வாசல்கள் தோறும் எடுத்த சாடுகளில் சோறும்
கோபாலர் இந்த்ரனுக்குக் காட்டிக் கொடுத்த அளவிலே

இது ஆர்க்கு இடுகிறிகோள் என்று கேட்டானாகவும் –

அவர்கள் இந்திரனுக்காக இடுகிறோம் என்று சொன்ன அளவிலே

நீங்கள் ஏது என்று அறிந்தி கோள் –
இந்தப் பர்வதத்தில் அன்றோ நமக்கும் நம் பசுக்களும் தண்ணீரும் புல்லும் விறகும்
ஒதுங்கும் இடமும் என்று நீ சொன்னாயாகவும்

இத்தைக் கேட்டவர்களும் ரமித்து உங்கள் தமப்பனாரும்
இவன் வயஸ்ஸூக்குத் தக்க அறிவில்லா -மிகவும் அறிவுடையனாய் இருந்தான் –
இவன் சொன்னதே கார்யம் என்று அவரும் கொண்டாடுகிற அளவில்
அந்தப் பர்வத தேவதை வந்து ஜீவித்துப் போக
அவர்கள் ஒருவனுக்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாயாகச் சொல்லா நின்றார்கள் –
(ஸர்வ அந்தராத்மா நீயே அன்றோ )

ஊட்ட முதல் இலேன்
ஒருவனுக்கு இட் ட சோற்றை ஒருவன் உண்டான் என்கை போர அவத்யமாய் இறே இருப்பது –
ஆயிருக்கச் செய்தேயும் இப்படி ஒரு போதாகிலும் ஊட்ட முதலுடையேன் அல்லேன்

உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
உன் என்று வடிவில் சிறுமையும்
தன்னை என்று ஊணில் பெருமையும் நினைத்து
உன் தன்னைக் கொண்டு எனக்கு ஆற்ற அரிது -என்கிறாள் ஆதல்
நித்யம் இப்படி ஊட்டி வளர்க்கப் பெறுகிறேன் இல்லை என்று பரிவாலே தன் குறை சொன்னாள் ஆதல்

வாட்டமிலா புகழ் வாசுதேவா
இவன் தான்
நாம் பிறந்து வளருகிற ஊரில் உள்ளவர்களுக்கு அந்நிய சேஷத்வம் வர ஒண்ணாது என்று
தேவதாந்த்ர பூஜையை விலக்கின பிரகாரத்தை
ஆக்கியாழ்வான் நிமித்தமாகப் பரமாச்சார்யாரும் தாம் பிறந்த ஊருக்கு அந்நிய சேஷத்வம் பரிஹரித்தார் –
என்று ப்ரஸித்தம் இறே

இப்படி அந்நிய சேஷத்வம் தவிர்ந்த பின்பு இறே
வாட்டமில்லா புகழ் வாஸூ தேவன் ஆயிற்று -என்னுதல்
இப்படி உண்கிறவன் தான் ஊட்டின அளவு கொண்டு வாடாமல் போந்தான் என்னுதல்

திவ்ய தேசங்களில் இருக்கிற நாமும் தேவதாந்த்ர பூஜையை விலக்கினால் அவர்கள் அறியாத்தனங்களாலே
வந்த அநர்த்தங்கள் உண்டாயிற்றே ஆகிலும்
தான் முன்பே உங்களை ரஷிக்கும் என்ற மலை தன்னை எடுத்து ஒற்கம் இன்றி நின்ற அளவிலே
இந்திரன் பசிக் கோபம் தவிர்ந்து ப்ரஹ்ம பாவனையும் பிறந்து வந்து இம்மலையை வைத்து அருள வேணும் என்ன
இந்நிலை குலைய ஒண்ணாது காண் -நீ பலவான் –
இவர்கள் தம் தாமுக்கு என்று ஒரு படல் கட்டி ரஷித்துக் கொள்ள மாட்டாத சாதுக்கள்
உனக்கு இன்னம் கோபம் கிளராது இராது -அப்போதாக மீண்டும் இந்த மலையை எடுத்து ரக்ஷிக்க வேண்டி வரும்
அதில் இந்நிலை தான் எனக்கு இளைப்பு அற்று இருந்தது என்றால் போலே சில ஷேப யுக்திகளை செய்த
பிரகாரங்களை நினைத்து நமக்கும் அஞ்ச வேண்டா என்கிறது –

வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்
நீ பிறந்து படைத்த புகழுக்கு வட்டம் வருகிறதோ என்று கேட்டு அறியாதன கேட்ட இன்று முதலாக
நான் உன்னைக் கண்ட போது எல்லாம் அஞ்சா நின்றேன் என்னுதல்
விபக்தியை -பக்தியை -மாறாடி-உனக்கு அஞ்சா நின்றேன் என்னுதல்

————–

கன்றின் பின் போகையை விலக்குகிறாள் –

திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -3 3-9 –

பதவுரை

திண் ஆர்–திண்மை பொருந்திய
வெண் சங்கு–வெண் சங்கத்தை
உடையாய்–(திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே!
கண்ணா–கண்ணபிரானே!
திருநாள்–(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்–திருவோண க்ஷத்திரம்
இன்று–இற்றைக்கு
ஏழு நாள்–ஏழாவது நாளாகும்;
(ஆதலால்,)
முன்–முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை கூவி–பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து
முளை அட்டி–அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்–மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய–(திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு
கறியும்–கறி யமுதுகளையும்
அரிசியும்–அமுது படியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்–பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ-;
நாளைத் தொட்டு–நாளை முதற்கொண்டு
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போகேல்–(காட்டுக்குப்) போக வேண்டா;
கோலம் செய்து–(உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு
இங்கே இரு–இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக.

திண்ணார் வெண் சங்கு உடையாய் –
பிரதிகூல நிரசனத்தாலும் -அனுகூல ரஷணத்தாலும் வந்த திண்மையையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் யுடையவன் என்னுதல்
இந்தத் திண்மையையும் ஸூத்த ஸ்வ பாவத்தையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவன் என்னுதல்

திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
திருவோணத் திரு நாள் இற்றைக்கு ஏழா நாள் -என்று
பக்தி ரூபா பன்ன ஞான அனுஷ்டான ப்ரகாஸ ஹேதுவான திரு விசாகத் திரு நக்ஷத்ரம்
திருவோண திரு நக்ஷத்ரத்துக்கு முன் ஏழா நாளான இன்று என்று
அத்தத்தின் பத்தா நாள் என்றால் போலே திரு நக்ஷத்ரத்தை மறைக்கிறார்

பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
அஹம் த்வமாதி பேதத்தாலே வார்த்தை சொல்லும் போதும் பண்ணிலே சேர்த்து
தத்வ ஞான ப்ரகாசமுமான மொழி யுடையாரை அழைத்துப்
பல்லாண்டு கூறி முளை யட்டி வைத்தேன் -திரு முளை சாத்தி வைத்தேன்
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மனமும் கொண்மின் -என்னுமா போலே

நம்பெருமாள் பெரிய திரு நாளை க்குத் திரு முளை சாத்தும் போது
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர்
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆப்பான் திரு வழுந்தூர் அரையர்
முதலான தம்பிரான்மாரை அழைப்பித்து உகப்பித்துத் திருப்பல்லாண்டு பாட
அவர்களும் தாங்களுமாக நம் பூர்வாச்சார்யர்கள் திரு முளை சாத்துமா போலே இறே

கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
திருவோணத் திரு நாளைக்குத் திருக்கல்யாணம் செய்வதாக
அதுக்குத் தகுதியாக பலவகைப்பட்ட கறி அமுதுகளும்
அதுக்குத் தகுதியான அமுது படிகளும்
நாநா வான கலங்களிலே சேர்த்து வைத்தேன்
முன்பே செந்நெல் அரிசி சிறு பருப்பு முதலான பதார்த்தங்கள் சேர்த்து பன்னிரண்டு திருவோணத்
திருக்கல்யாணம் செய்த வாசனையால் இப்போதும் செய்கிறாள்

கண்ணா
கண்ணே
கருத்தே (9-4-1)
என்னுமா போலே இவருக்குக் கண்ணும் கருத்தும் அவனே ஆவான் இறே

நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல்
உன் அருமையையும்
கன்றுகளின் எளிமையையும் அறிந்து
நீ கன்றின் பின் போகேல்

கன்றுகளுக்கு எளிமையாவது –
தும்பிலே ஏறிட்டு வைத்தால் கிடைக்கையும்
கறக்கும் போது நில் என்றால் நீங்கி நிற்கையும்
மேயப்போன இடத்திலே அவன் திருக்குழல் ஓசை வழியே போகையும் வருகையும்

இன்று மேய்த்து வந்தவன் ஆகையாலே
நாளை முதலாக மேல் உள்ள காலம் எல்லாம் போகாதே கொள் என்று நியமித்தாள்

அவன் அதுக்கு இசையாமையாலே
திருவோணத் திருநாள் உள்ளவாகிலும் போகாதே கொள் என்கிறாள்

கோலம் செய்து இங்கே இரு
கோலம் செய்தால் இங்கே இரு என்று ஒப்பனையில் உபக்ரமிக்கிறாள் –

———–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார்

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு  உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –

பதவுரை

புற்று–புற்றிலே (வளர்கின்ற)
அரவு–பாம்பின் படத்தை ஒத்த
அல்குல்–அல்குலை உடையளாய்
அசோதை–யசோதை யென்னும் பெயரை யுடையளாய்
நல்–(பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான
ஆய்ச்சி–ஆய்ச்சியானவள்
தன் புத்திரன்–தன் மகனான
கோவிந்தனை–கண்ணபிரானை
கன்று இனம் மேய்த்து வரக் கண்டு–கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு
உகந்து–மன மகிழ்ந்து
அவள்–அவ் யசோதை
(அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)
கற்பித்த–நியமித்துக் கூறிய
மாற்றம் எல்லாம்–வார்த்தைகளை யெல்லாம்;
செற்றம் இலாதவர்–அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ் தரு–வாழுமிடமான
தென்–அழகிய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
கற்று–(ஆசார்ய முகமாக) ஓதி
பாட வல்லார்–(வாயாரப்) பாட வல்லவர்கள்
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய
கழல் இணை–திருவடி யிணைகளை
காண்பார்கள்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி
தன் நிலத்தில் மிடியற வளருகையால் வந்த ஒளியையும் கொழுப்பையும் யுடைத்தான அரவினுடைய
பணம் போலே இருக்கிற நிதம்ப பிரதேசத்தை யுடையளாய்
யசோதை என்கிற வியக்தி திரு நாமத்தை யுடையளாய்
புத்ர விஷயத்தில் அத்யந்த ஸ்நேஹத்தை யுடையளாய் இருக்கிற ஆய்ச்சியானவள் –

தன் புத்திரன் கோவிந்தனை
தன் புத்ரனான கோவிந்தனை
இவளுக்கு புத்ர திரு நாமமும் பின்பு இறே தோற்றுகிறது
இவள் வயிற்றில் பிறப்பால் இறே கோவிந்தனாய்த்ததும்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி (கலியன் ) என்றால் போலே

கற்றினம் மேய்த்து வரக் கண்டு  உகந்து
கற்றினம் -கன்றுத் திரள்
அத்திரளில் தானும் ஒருத்தனாய்
அவை ஓன்றை ஓன்று பிரியாதாப் போலே
தானும் அவற்றோடு நெஞ்சு பொருந்தி இறே மேய்ப்பது

மேய்த்து
பறித்துத் தின்ற வல்ல கன்றுகள் வயிறு நிறைந்தாலும் பறித்துக் கொடுத்தாலும் மென்று
இறக்க மாட்டாத வற்றுக்குக் கசக்கிக் கொடுத்து வயிற்றை நிறைத்தால் இறே
இவன் தான் மேய்த்தானாக பிரதிபத்தி பண்ணுவது

இப்படி மேய்த்து வரக் கண்டு
மேயாதே வரிலும்
வரவு தானே போரும் காணும் இவள் உகப்புக்கு

அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
இனி ஒரு நாளும் மேய்க்கப் போகக் கடவை யல்லை என்று அவள்
பல்காலும் கற்பித்து
நியமித்த பிரகார வியாஜம் எல்லாத்தாலும்

செற்றம் இலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
மங்களா ஸாஸன பர்யந்தமாய் ஸகல பிராமண அனுகூலமான இவருடைய வியாபாரங்களும்
எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் என்கிற வைராக்ய ப்ரதான உபதேஸங்களும் கேட்டால்
அந ஸூயவே -என்னுமா போலே
அத்யந்த அஸஹ மானராய் இராதவர்கள் வர்த்திக்கை தானே அத்தேசத்துக்கு வாழ்வாக
இருந்த வூரில் இருக்கும் மானிடர் (பெரியாழ்வார் திருக்கோட்டியூர் பதிகம் )-என்னுமா போலேயும்
திரிதலால் தவமுடைத்து (குலசேகரர் )-என்றால் போலவும் நினைத்து அருளிச் செய்கிறார் –

தரு -என்கையாலே
பூர்வ வாக்கியத்தில் உத்தமனால் வந்த கிரியா பத (ப்ரபத்யே )வர்த்தமானம் போலே
நிலைக்கு நிலை மேலே போகிற பரிபாக யோக்யர் என்று காட்டுகிறது –
அது இறே அத்தேசத்துக்கு வாழ்வை உபகரிக்கிறது
ஆகையாலே தென் புதுவை விட்டு சித்தன் சொல்-என்கிறார்

ஸ்ரீ வில்லிபுத்தூரான திரு மாளிகை -தெற்குத் திக்கிலே ப்ரதானமாய் இறே இருப்பது –
ஆழ்வார்கள் எல்லாருக்கும் திரு மகளாராய் நாய்ச்சியார் அவதரிக்கையாலும்
தம்மை அடிமை கொண்டு மயர்வற மதி நலம் அருளின வட பெரும் கோயிலுடையான் கண் வளர்ந்து அருளுகையாலும்
பெரிய பெருமாள் அன்போடு திருக்கண் நோக்கின திரு நகரி போலே
தெற்குத் திக்கில் பிரதானமாய் இறே திருமாளிகை இருப்பது

விட்டு சித்தன் -என்றது
விஷ்ணுவை சித்தத்தில் யுடையவன் என்றபடி –
அதாவது
அசாதாரணமான விக்ரஹ நாநா வத்துக்கும்
குண நாநா வத்துக்கும்
அனுபிரவேச வியாப்தியும் மிகையான நித்ய விபூதிக்கும்
ஸ்வரூப வியாப்திக்கும் மங்களா ஸாஸனம் பண்ணுகையாலே –

சொல் கற்று இவை பாட வல்லார்
இவருடைய மங்களா ஸாஸன சொற்கள் ஒரு ஆச்சார்யர் ஸ்ரீ பாதத்தில்
இயல் முன்னாகக் கற்று
கற்ற பிரகாரத்திலே இவை என்று தரிசித்து
ஸ அபிப்ராயத்தோடே பாட வல்லவர்கள்

கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே
கடல் நிறம் போலே திரு மேனியை யுடையவன் என்னுதல்
கடல் போலே ஸ்வ பாவத்தை யுடையவன் என்னுதல்

வண்ணம் -ஸ்வ பாவம்

ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளைத் தாம் கண்டால் போலே
சேவடி செவ்வி திருக்காப்பு -என்று
காணப் பெறுவார்கள் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

One Response to “ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-3–சீலைக் குதம்பை ஒருகாது—”

  1. Sudha Says:

    adiyen Ramanuja daasi
    I read about rare works in Tamil by various acharyas on Andal Nachiyar, through an article posted on this blog site. I would like to seek author’s feedback on where we can find those slokas, if any available online or from other personal collections/ sources.
    Grateful for your response, thank you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: