ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-1—தன்னேராயிரம் பிள்ளைகளோடு—-

இத்திரு மொழியில் -இன்று முற்றும் -இன்று முற்றும் -என்றத்தை இவர் ஆதரிக்கிறது
சேற்றால் எறிந்து –
விண் தோய் மரத்தினால்
படும்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்து -என்றால் போலே
தீம்புகளைத் தவிர்க்க நினைத்து
இன்று முற்றும் -இன்று முற்றும் -என்று இவர் நியாம்யனாய் –
இன்று தலைக் கட்டும் என்று அத்யவசித்துச் சொல்லுகிறார் –

கீழே இன்று முற்றும் இன்று முற்றும் -என்று தாம் மீட்கப் பார்த்த அளவிலே
மீளாமல்-மீண்டும் தீம்பிலே கை வளர்ந்து செல்ல
தாமும் வயிறு பிடியோடே பின் சென்ற பிரகாரத்தை
யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(கௌசல்யை பார்யா சகோதரி போல் இவருக்கும் எல்லா பாவமும் உண்டே )

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய்  நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன்  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 – –

பதவுரை

தன் நேர்–(வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு–ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர் நடை இட்டு–தளர் நடை நடந்து
வருவான் -வருகின்ற கண்ணபிரானே!
பொன் ஏய்–(நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற
நெய்யோடு–நெய்யோடு கூட
பால் அமுது–போக்யமான பாலையும்
(இடைச்சேரியில் களவு கண்டு)
உண்டு–அமுது செய்து
(ஒன்றுமறியாத பிள்ளை போல்)
பொய்யே–கபடமாக
தவழும்–தவழ்ந்து வருகின்ற
ஒரு புள்ளுவன் ஒப்பற்ற கள்ளனே!
மின் நேர்–மின்னலைப் போன்று
நுண்–அதி ஸூக்ஷ்மமான
இடை–இடையையும்
வஞ்சம்–வஞ்சனையையுமுடையளான
மகள்–பூதனை யென்னும் பேய் மகள்
துஞ்ச–மாண்டு போம்படி
கொங்கை-(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே–நாயனே
உன்னை–(நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்–(அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
(ஆதலால் )
உனக்கு-உனக்கு
அம்மம் தர–முலை கொடுக்க
அஞ்சுவன்–பயப்படா நின்றேன்
அன்னே–அன்னே -அம்மே என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை

தன்னேராயிரம் பிள்ளைகளோடு இத்யாதி —
கிருஷ்ணன் திருவாய்ப்பாடியிலே அவதரித்த போது கிருஷ்ணனோடு ஓக்க ஆயிரம் பிள்ளைகள் சேரப் பிறந்தார்கள்
என்று சொல்லுவது ஒரு பிரசித்தியும் உண்டு இறே
பிறப்பாலும் வளர்ப்பாலும் வயஸ்ஸாலும் அந்யோன்யம் ஸ்நேஹத்தாலும் ஓரு புடை ஒப்புச் சொல்லலாய் இருக்கையாலே –
யேந யேந தாந தாந கச்சதி -பரம ஸம்ஹிதா -நித்ய ஸூரிகளும் உடன் வருவார்கள் அன்றோ –

ஊரும் நாடும் முஹூர்த்தமும் ஓக்க பிறந்தாலும் தளர் நடையும் ஒத்தால் தானே
தன்னேராயிரம் என்னலாம்

பால்யாத் பிரபர்த்தி சுஸ்நிக்த –போலே இறே

பொன்னே இத்யாதி
பொன் போலே நிறத்தை யுடைத்தான நெய்யோடு கூடி சர்வ சாதாரணமான
பால் அமுதை யுண்டு

ஓரு புள்ளுவன் பொய்யே தவழும்
புள்ளுவம் ஆவது மெய் போல் இருக்கும் பொய்

அநஸ்நனோ –என்று அஞ்சா நின்றேன்
அஸ்நாமி -என்பிக்கவும் மாட்டுகிறேன் அல்லேன்
தேவர்களுக்கு அம்ருதமும் மநுஷ்யர்களுக்கு அன்னமும் நியதம் அன்றோ –
அம்ருதாஸநர் அன்நாஸநர் ஆவாரோ
தேவத்வம் தோன்றா நின்றது -மேன்மை தோன்றுகையாலே
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னக் கடவது இறே
ஆழி பணி கொண்டானால் -என்று கீழில் திருமொழியில் மேன்மை தோன்றிற்று இறே

அம்மம் தரவே
தவழுகை பொய் என்றவோ பாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
அவன் சொலவை அனுகரிக்கிறார் —

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய்  நெய்யோடு
பொய்யே தவழும்
ஓரு புள்ளுவன்
வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–என்று அந்வயம்
கீழில் படர்க்கை எல்லாம் முன்னிலை –

———

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – –

பதவுரை

பொன் போல்–பொன்னைப் போல்
(உன் வடிவழகு விளங்கும்படி)
மஞ்சனம் ஆட்டி–(உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து
அமுது ஊட்டி–(அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு
போனேன்–(யமுனை நீராடப்) போன நான்
வரும் அளவு இப் பால்–(மீண்டு) வருவதற்குள்ளே
வல்–வலி வுள்ளதும்
பாரம்–கனத்ததுமாயிருந்த
சகடம்–சகடமானது
மிற–(கட்டுக் குலைந்து) முறியும்படி
சாடி–(அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி
(அவ்வளவோடும் நில்லாமல்)
வடக்கில் அகம்–(இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே
புக்கு இருந்து–போய் நுழைந்து
(அவ் வீட்டிலுள்ள)
மின் போல் நுண் இடையால்–மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான
ஒரு கன்னியை–ஒரு கன்னிகையை
வேறு உருவம் செய்து வைத்த–(கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த
அன்பர்–அன்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்;
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ;

பொன் போல் இத்யாதி –
அழுக்கு அற்று பிரகாசிக்கிற ஷோடஸ வர்ணியான பொன்னாலே திரு மஞ்சனம் செய்து
என்னிளம் கொங்கை அமுதமூட்டி யமுனை நீராடப் போனேன் –

வரும் அளவிப்பால்
இவ்விடத்தில் நான் வரும் அளவில்

வன் பாரச் சகடம் இறச் சாடி
வலிதாய் கனவிதாய் இருக்கிற சகடத்தை முடியும்படியாகத் திருவடிகளாலே நிரஸித்து

வடக்கில் அகம் புக்கு இருந்து

தனக்கு ஸ்நேஹியுமாய் மின் போலே நுண்ணிய இடையையும் யுடையவளாய்
உபமான ரஹிதையுமாய் நவ யவ்வநையுமுமாய் இருப்பாள் ஒருத்தியை

வேற்று உருவம் செய்து வைத்த –
(நாநா வ்ரணாயாணம் )நக வ்ரணாபரணம் செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்து கொண்டேன் –
கண்டது ஒன்றில் மேல் விழும்படியான ஸ்நேஹத்தை யுடையவனே –
உன்னை அறிந்து கொண்டேன்

வடக்கு -பக்தி – (நாயனார் -பக்தி சாதனாந்தரம்-வேற்று அகம் )

——–

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –

பதவுரை

(கண்ணபிரானே!)
கும்மாயத்தோடு–குழையச் சமைத்த பருப்பையும்
வெண்ணெய்–வெண்ணெயையும்
விழுங்கி–விழுங்கி விட்டு
குடம் தயிர்–குடத்தில் நிறைந்த தயிரை
சாய்த்து–(அந்தக் குடத்தோடு) சாய்த்து
பருகி–குடித்தும்
பொய் மாயம் மருது ஆன அசுரரை–பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய
அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை
பொன்று வித்து–விழுந்து முறியும் படி பண்ணியும்
நீ–(இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ
இன்று–இப்போது
வந்தாய்–(ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;
இம் மாயம்–இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை
வல்ல–செய்ய வல்ல
பிள்ளை–பிள்ளாய்!
நம்பி–(அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே!
உன்னை–(இப்படி யிருக்கிற) உன்னை
நின்றார்–(உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள்
என் மகனே என்பர்–என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;
(நானோ வென்றால் அப்படி நினையாமல்)
உன்னை அறிந்து கொண்டேன்–(இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்;
(ஆதலால்,)
அம்மா–ஸர்வேச்வரனே!
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்-

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி
கும்மாயத்தோடே கூட வெண்ணெயையையும் அமுது செய்து

குடத் தயிர் சாய்த்துப் பருகி–
பாத்ர கதமான தயிரை அத்தோடே சாய்த்து அமுது செய்த –

பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து –
பொய்யருமாய் -க்ருத்ரிமருமாய் மருத்தாய் நின்ற அஸூரர்களை முடியும்படி பண்ணி

இன்று நீ வந்தாய்
இப்போது ஒன்றும் செய்யாதாரைப் போலே வந்தாய்

இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ
இப்படிப்பட்ட க்ருத்ரிமங்களாலும்
பிள்ளைத் தனத்தாலும்
பூர்ணன் ஆனவனே

உன்னை என் மகனே என்பர் நின்றார்
உன்னை அறியாதார் என் மகனே என்று சொல்வார்கள் –

அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
என் மகன் அன்று என்றும்
எல்லார்க்கும் ஸ்வாமி என்றும்
அறிந்து கொண்டேன்

——————

மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்க்
கொய்யார் பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –

பதவுரை

மை ஆர் கண்–மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை–இடைப் பெண்களை
(உன் விஷயத்திலே)
மை யன்மை செய்து–மோஹிக்கப் பண்ணி
(அப் பெண்களுடைய)
கொய் ஆர் பூ துகில்–கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி–பிடித்துக் கொண்டு
அவர் பின் போய்–அப் பெண்களின் பின்னே போய்
தனி நின்று–தனி யிடத்திலே நின்று
பல பல குற்றம்–எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்–(நீ) பண்ணினாய்;
(என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)
(அதற்கு யசோதை சொல்கிறாள்;)
பொய்யா–(தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே!
உன்னை–உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள–ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ–சொல்லப் படுகின்றனவான
பல புறம்–பற்பல உன் சொற்கள்
கேட்டேன்–(என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா–அப்பனே
(உன்னை அறிந்து கொண்டேன்;)
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை
அஞ்சனத்தாலே ( அஞ்சனாதிகளாலே ) அலங்க்ருதமான கண்களையும்
ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தையும்
குடிப்பிறப்பையும் யுடையரான பெண்களை

மையன்மை செய்து
உன் பக்கலிலே ஸ்நேஹி களாய்
தாய்மார் முதலானவர்களுக்கு வச வர்த்திகள் ஆகாத படி உன்னுடைய ஸுந்தர்யாதிகளாலே பிச்சேற்றி
(என் சிறகின் கீழ் அடங்காப் பெண் -என்னும் படி பண்ணுவான் )

அவர் பின் போய்
அவர்களுடைய பின்னே போய்

கொய்யார் பூம் துகில் பற்றி
கொய்தல் ஆர்ந்து இருந்துள்ள அழகிய பரியட்டங்களின் கொய்ச்சகங்களைப் பிடித்துக் கொண்டு
அவர்கள் பின்னே போய் என்கை –

தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
ஏகாந்த ஸ்தலத்திலே நின்று
அவாஸ்ய கதமான வியாபாரங்களை அபரிகண நீயமாம் படி செய்தாய்

ஆவது என் -நான் ஒரு குற்றமும் செய்திலேன்-நீ மற்றுக் கண்டாயோ என்ன

பொய்யா
நீ பொய்யா என்றது மெய்யாமோ -என்ன

உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்-

கிருத்ரிமனே -உன்னைப் பொல்லாங்கு பலவற்றையும் பிறர் சொல்லுமவைகள்
ஒரு புஸ்தகம் நிறைய எழுதத் தக்கவை கேட்டேன்

அவர்கள் சொல்லுமதும்
நீ கேட்டதுமேயோ ஸத்யம்
நாம் சொன்னதோ அஸத்யம் என்ன

நீயே புறம் என்றாயே –என்ன –
ஐயா
இது என்ன தெளிவு தான் -என்று கொண்டாடுகிறாள்

அன்றிக்கே
ஐயா -என்று
க்ருத்ரிமர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே -என்கிறாள் ஆதல் –

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
இது என்ன தெளிவு தான் -என்று கொண்டாடுகிறாள் –

——————

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் யினோடு தயிரும் விழுங்கிக்
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த காலத்தோடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 5- –

பதவுரை

முப்போதும்–மூன்று சந்திப் போதுகளிலும்
கடைந்து–(இடையரால்) கடையப் பட்டு
ஈண்டிய–திரண்ட
வெண்ணெயினோடு–வெண்ணையையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கி–(களவு கண்டு) விழுங்கி,
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஆயர்கள்–அவ்விடையர்கள் (தம்முடைய)
கப்பால்–தோளாலே (வருந்திச் சுமந்து)
காவில்–காவடியில்
கொணர்ந்த–கொண்டு வந்த பால் முதலியவற்றை
கலத்தொடு–(அந்தப்) பாத்திரத்தோடே
சாய்த்து–சாய்த்து
பருகி–குடித்தும்
(அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து)
மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற–முலைப் பாலை உண்டு
(அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற
அப்பா–பெரியோனே!
(உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;)

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கிக்
எப்போதும் கறப்பன கடைவனவாய்ச் செல்லுமா போலே காணும் திருவாய்ப்பாடி –
அப்போது எல்லாம் கடைந்து ஈண்டிய வெண்ணெயோடே தயிரும் விழுங்கிச் செல்லும் போலே காணும்

கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தோடு சாய்த்துப் பருகி
ஆயர்கள் தோள்களாலே காவிலே கொடு வந்த (தயிர் எல்லாம்) பால்களையும்
நீ கொடு வந்த பாத்திரத்தோடு சாய்த்து அமுது செய்த

ஆயர்கள் காவில் கொணர்ந்த-
என்ற போதே பால் என்று பிரஸித்தம் இறே

மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற அப்பா
மெய்யே பால் உண்டு அது பெறாத போது அழும் பிள்ளைகளைப் போலே
பொருமிப் பொருமி அழுகின்ற அப்பா

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-
கீழே அன்னே என்றதும்
இங்கே அப்பா என்னும் இவருக்கு
அன்னையும் அப்பனும் அவன் போலே காணும் –

முன்னே பேய்ச்சி முலையின் பொய்ப்பால் உண்டது பின்னாட்டின படி —

————

கரும்பார் நீள் வயல் காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம்  கனி வீழ எறிந்த பிரானே
கரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 6- –

பதவுரை

நீள் வயல்–பரந்த வயலிலே
கரும்பு ஆர்–கரும்பு போலக் கிளர்ந்துள்ள
காய்–பசுங்காயான
கதிர்–கதிரையுடைய
செந்நெலை–செந்நெல் தாந்யத்தை
கன்று ஆ நிரை–கன்று களோடு கூடின பசுக்களின் திரள்
மண்டி தின்ன–விரும்பித் தின்னா நிற்கச் செய்தே
(அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான)
விரும்பா கன்று ஒன்று–(நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை
(அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து)
கொண்டு–(அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)
விளங்கனி–விளாமரத்தின் பழங்கள்
வீழ–உதிரும்படி
எறிந்த -(அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த
பிரானே–பெரியோனே!
சுரும்பு ஆர்–வண்டுகள் நிறைந்த
மென் குழல்–மெல்லிய குழலை யுடையனான
கன்னி ஒருத்திக்கு–ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக
சூழ் வலை–(எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை
வைத்து–(அவள் திறத்திலே விரித்து) வைத்து
திரியும்–(அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற
அரம்பா–தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

கரும்பார் நீள் வயல்
கரும்பு போலே எழுந்து விழுந்த வயல் என்னுதல்
துல்ய விகல்பம் (கரும்பா நெல்லா ) என்னுதல்

காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
காயைப் பற்றின கதிர் செந்நெலைக் கன்றுகளும் பசுக்களும் அதி ஸ்ரத்தையோடே சென்ற வளவிலே –

விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம்  கனி வீழ எறிந்த பிரானே
தின்னச் செய்தே விரும்பித் தின்னாக் கன்றைக் கொண்டு
அஸூர மயமாய் நின்ற விளாவின் பழத்தைச் சிதறி உதிரும்படி எறிந்த மஹா உபகாரகனே –

இத்தால் ப்ரஸன்ன ரூபிகளாய் (மறைந்த உருவம் ) இருப்பாரை எல்லா அவஸ்தையிலும் காணலாம் என்கிறது
மாயா ம்ருக வேஷத்தைக் கண்ட மிருகங்கள் ராக்ஷஸ வெறி நாடி வெருண்டு போயிற்றன இறே
(பாசி தூர்த்த –மானமிலா பன்றியாய் -எல்லாம் மேலே விழும் படி –
அவதாரத்தில் மெய்ப்பாடு -எந்நின்ற யோனியில் பிறந்து தன்மை பாவம் )
அஸூர மயமாய் நின்றபடியாலே இறே ருஷபங்களையும் நிரசித்தது
ஸர்வஞ்ஞனுக்கு தின்னது விரும்பாமை கண்டு நிரஸிக்க வேண்டாவாய் இருக்கச் செய்தேயும்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

அநு மித்து நிரஸித்த
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்தது தீமை வழக்கன்று (பூதம் -19) என்பாருக்கு
வழக்கு என்கைக்காகவே இறே
தீ விளவு -என்று நீரே நிர்ணயித்தீரே –
இக் கன்றின் தீமை விளவுக்கு யுண்டோ
அது காய்த்துப் பழுத்து நின்றது இல்லையோ
அது ஏதேனும் ஸூத்த ஸ்வ பாவமான பசுக்களோடே செந்நெல் தின்றதோ -தின்னாதே நின்றதோ –
பசுவின் முலையில் கவ்விற்றோ -கவ்வாதே இருந்ததோ -இப்படிப்பட்ட விபதங்கள் உண்டோ அந்த விளவில்–
ஆகையால் அது ஸன்னம்
இது ப்ரஸன்னம்

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

இது குழக்கன்று -அன்று -என்று அறிந்து காணும் செய்தோம் என்ன
இவரும் இது கர்தவ்யம் என்று தெளிந்து வழக்கு அன்று என்றும் இது பழி என்றும் தப்பச் சொன்னோம் –
அது தானே நமக்கு தோஷமாய்த்து என்று அநு தபித்து-இப்படி பழி பாவமான தப்புகளை கை யகற்றி (பூதம் -20)
அவனுடைய குண பாவத்தில் தோஷ தர்சனம் செய்யாமல் அவனை வழி பட்டு
வாழ்வார் வாழ்வாராம் என்று
அவன் குணத்தில் தோஷத்தை ஆரோபித்து அவனைக் கொண்டே நிர்தோஷம் ஆக்க
இதிலே தோஷ தர்சனம் செய்யாதார் பெருமையைச் சொல்லி
அநு தாப நிவ்ருத்தியும் பிறப்பித்துக் கொண்ட படியால்

இவரும்
சன்ன ரூபிகளை நிரசிக்கப் பெற்றோம் என்று
பிரானே என்று
உபகார ஸ்ம்ருதி பண்ணுகிறார் –

கரும்பார் மென் குழல் –இத்யாதி
வண்டுகளானவை பூவில் பரிமளத்தைத் த்யஜித்து
ம்ருது ஸ்வ பாவையான இவளுடைய குழலில் பரிமளத்தை மிகவும் புஜிக்கையாலே இறே -ஆர் -என்றது –
மென்மை -குழலில் மார்த்வம் ஆகவுமாம்
வண்டுகளைப் பொறுக்க மாட்டாத இவள் மருங்கில் மார்த்வம் ஆகவுமாம்

கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் அரம்பா
அத்விதீயையாய்
ஸ்த்ரீத்வமும் நழுவாத இவளுக்கு
சூழ் வலை வைத்துத் திரியும் அரம்பா
அவள் நெஞ்சை சூழும்படியான பார்வையை வலை என்கிறது –
கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு படுத்தி (நாச்சியார் )-என்னக் கடவது இறே
வலையிலே அகப்படும் அளவும் அந்நிய பரதை பண்ணி ஸஞ்சரிக்கிற தீம்பனே

அரம்பு-
நச்சினது ஓன்று தலைக்கட்ட வற்றாய் இருக்கை

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

——-

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 – –

பதவுரை

மருட்டு ஆர்–(கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள
மெல்–மெல்லிய (த்வநியை யுடைய)
குழல் கொண்டு–வேய்ங்குழலைக் கையிற் கொண்டு
பொழில்–(ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே
புக்கு–போய்ச் சேர்ந்து
(அந்த வேங்குழலை)
வாய் வைத்து–(தன்) வாயில் வைத்து (ஊத)
(அவ்வளவிலே)
ஆயர் தம் பாடி–இடைச்சேரியிலுள்ள
சுருள் தார் மெல் குழல்–சுருண்டு பூவணிந்த மெல்லிய குழலையுடைய
அக் கன்னியர்–(இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்
(குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்)
வந்து–(அச் சோலை யிடத்தே) வந்து
உன்னை–உன்னை
சுற்றும் தொழ–நாற்புறமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க
நின்ற–(அதனால்) நிலைத்து நின்ற
சோதி–தேஜஸ்ஸை யுடையவனே
எம் பெருமான்–எமக்குப் பெரியோனே!
உன்னை–(இப்படி தீம்பனான) உன்னை
பெற்ற–பிள்ளையாகப் பெற்ற
குற்றம் அல்லால்–குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது
இங்கு–இவ்வூரில் உள்ளாரோடொக்க
மற்று பொருள் தாயம் இலேன்–மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்;
அரட்டா–(இப்படிப்பட்ட) தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன் ; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து –
வண்டுகள் மாறாமல் பாடுகிற தாரை யுடைத்தான பொழிலிலே புக்கு
மருள் இந்தளத்தை விளைப்பதான அழகிய திருக்குழலை வாய் வைத்து என்னுதல்
யுவதிகளை மிகவும் மருட்டுவதான குழல் என்னுதல் –
தார் பொழில்
பூம் பொழில்

அவ்வாயர் தம் பாடி சுருட்டார் மென் குழல் கன்னியர்
தன் குழல் ஓசைக்கு வாராதாரையும் வருவிக்க வல்ல திருத்தோழன் மாரை அவ்வாயர் -என்கிறது என்னுதல்
ஆயர் தம் பாடியில் சுருட்டார் மென் குழல் கன்னியர் என்னுதல்
மார்த்தவமான பூக்களாலே அலங்க்ருதமாய்ச் சுருண்ட குழலை யுடைத்தான கன்னியர் என்னுதல்
அக்கன்னியர் தங்கள் குழல் அழகாலே அவனையும் மருட்டி வஸீ கரிக்க வல்லவர்கள் என்கிறது –

வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
சுற்றும் உன்னை வந்து தொழ நின்ற சோதி
சுற்றுதல் -சூழ்ச்சி
சோதி -தவ்ர்த்த்யமான-(தூர்த்தமான) தேஜஸ்ஸை யுடையவன்

பொருள் தாயம் இலேன் எம்பெருமான் –உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
உன்னாலே என்னை அலர் தூற்றுகிறது ஒழிய
இவ்வூராருடன் அர்த்த தாயப் பிராப்தி யுடையேன் அல்லேன்
உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய உன் பொருட்டாக பந்து வர்க்கம் கூடாதபடி யானேன் –
ஆயம் -நெஞ்சு பொருந்தின பந்துக்கள்

அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
மிடுக்காலே தீம்பு ஆனவன் –

——-

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு  திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

பதவுரை

வாளா ஆகிலும்–(நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும்
(உன் மினுக்குப் பொறாதவர்கள்)
காண கில்லார்–(உன்னைக்) காண வேண்டார்கள்;
(இப்படியிருக்கச் செய்தேயும்)
நீ–நீயோ வென்றால்
பிறர் மக்களை–அயற் பெண்டுகளை
மையன்மை செய்து–(உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி
(அவ்வளவோடு நில்லாமல்)
தோளால் இட்டு–(அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு
அவரோடு–அப் பெண்களோடு
திளைத்து–விளையாடி
சொல்லப்படாதன–வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை
செய்தாய்–(அவர்கள் விஷயத்திலே) செய்தாய்;
ஆயர் குலத்தவர்–இடைக் குலத்துத் தலைவர்கள்
இப் பழி–இப்படிப் பட்ட பழிகளை
கேளார்–கேட்கப் பொறார்கள்;
(இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்)
கெட்டேன்–பெரும் பாவியாயிரா நின்றேன்;
(இனி எனக்கு இவ் வூரில்)
வாழ்வு இல்லை–வாழ்ந்திருக்க முடியாது,
நந்தற்கு–நந்த கோபருக்கு
ஆளா–(அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்;
உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
நீ தீம்பு செய்யாது இருக்கிலும் இவ்வூரில் எனக்கு உறவானவர்கள் உன்னை வெறுமனே யாகிலும் காண வேண்டார்கள்
அதுக்கு மேலே பிறருடைய பெண்களை உன்னுடைய இங்கித சேஷ்டிதங்களாலே அறிவு கேட்டை விளைத்து
தோளாலே அணைந்திட்டு அவர்களோடே நீ தோற்றிற்றுச் செய்து விளையாடி
இன்னது செய்தேன் என்றும்
இன்னது செய்தாய் என்றும்
இன்னது செய்தான் என்றும் சொல்ல ஒண்ணாத ஜாதி யுசித தர்ம அதி க்ரமம் செய்தாய்
தோளால் இட்டவரோடு  திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்

கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி
இத் தீம்புகளை ஆயர் குலத்துக்கு நிர்வாஹகர் ஆனவருக்கு நான் அறிவித்தாலும்
என் பிள்ளையையும் பழிப்புச் சொல்லலாமோ என்று இப்பழி கேளார்

கெட்டேன் வாழ்வு இல்லை
இவரும் கேளாமல்
இவருக்கு பந்துக்களாய் நியாம்யர் ஆன ஆயர் குலத்தவரும் கேட்டு நியமியா விட்டால்
இப்பிள்ளையைக் கொண்டு -இவ்வூர் நடுவே எங்கனே வாழ்வேன்
வாழ்தல் -வர்த்தித்தல்
கெட்டேன் -விஷாத அதிசயம் –

நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
அவர் ஒருத்தரும் இறே உன் தோஷத்தைக் குணமாகக் கொள்ள வல்லவர் –
(இதுவே வாத்சல்யம் அன்றோ )
தோஷா குணா என்றால் போலே காணும் இவர் இருப்பது

காளாய்
பருவத்துக்குத் தக்கது அல்ல நீ செய்கிறது என்று நான் அறிந்து கொண்டேன் –

———–

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத்  திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3- 1-9 – –

பதவுரை
(பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு)
தாய்மார்–தாய்மாரானவர்
மோர் விற்க–மோர் விற்பதற்கு
போவர்–(வெளியூருக்குப்) போவர்கள்
தமப்பன்மார்–(அப் பெண்களின்) தகப்பன் மாரானவர்
கன்று ஆ நிரை பின்பு போவர்–இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள்
(அப்படிப்பட்ட ஸமயத்திலே)
நீ-;
ஆய்ப்பாடி–இடைச்சேரியில்
(தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற)
இள கன்னிமார்களை–யுவதிகளான பெண்களை
நேர் பட–நீ நினைத்தபடி
கொண்டு போதி–(இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்;
காய்வார்க்கு–(உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு
என்றும் உகப்பனவே–எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே
செய்து–செய்து கொண்டு
கண்டார் கழற திரியும்–(உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற
ஆயா–ஆயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
பெண்களை அகம் பார்க்க வைத்துத் தாய் மார் மோர் விற்கப் போவார்
இடையருக்கு ஐஸ்வர்யம் மிக யுண்டானாலும் இடைச்சிகள் மோர் விற்று ஜீவிக்கும் அதே இறே
தங்களுக்குத் தகுதியான ஜீவனமாக நினைத்து இருப்பது –
மோர் தான் விற்கை அரிதாய் இருக்கும் இறே
திருவாய்ப்பாடியிலும் பஞ்ச லக்ஷம் குடி இருப்பிலும் கறப்பன கடைவன குறைவற்று இருக்கையாலே –
இக்கால விளம்பத்தாலும் இவனுக்கு அவகாச ஹேதுவாய் இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அவகாசம் இறே
தகப்பான்மார் கற்றா நிரை பின்பு போவதும்
அது மேச்சல் உள்ள இடங்களிலே தூரப் போகையும்
இவர்கள் அவற்றை நியமியாமல் அவற்றின் பின்னே போகையும்
அவை மேய்ந்து வயிறு நிறைந்தால் அல்லது மீளாது ஒழிகையும்
அவை மீண்டால் அவற்றின் பின்னே இவர்கள் வருகையுமாய் இறே இருப்பது –

நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
வயஸ்ஸாலும் நெஞ்சாலும் ஜாதி உசிதமான தர்மத்தாலும் இளையவர்களை
உன்னுடைய இங்கித சேஷ்டிதங்களாலே
உனக்கு அபிமதமான ஸ்தலங்களிலே கொண்டு போதி

தாய்மார் தகப்பன்மார் போகையாலும்
கால விளம்பம் உண்டாகையாலும்
அவ்வகங்கள் தானும் அபிமத ஸ்தலங்களாக இருக்கச் செய்தேயும்
பிராமாதிகமாக யாரேனும் வரவும் கூடும் என்று இறே
ஸ்தலாந்தரங்கள் தேடிப் போக வேண்டிற்றும்

காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத்  திரியும் ஆயா
கம்சனும் கம்ச பரதந்த்ரரும் இன்றிக்கே
உன் குணத்திலே தோஷம் பண்ணிக் காய வல்ல சிசுபாலாதிகளுக்கும்
உகப்பான தீம்புகளைச் செய்து
காயாமல் உன்னைக் கொண்டவர்களும் பொறாமல் நியமித்துச் செல்லும்படி திரிகிற ஆயா –

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –

———-

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

பதவுரை

தொத்து ஆர்–கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள
பூ–புஷ்பங்கள் அணியப் பெற்ற
குழல்–கூந்தலை யுடைய
கன்னி ஒருத்தியை–ஒரு கன்னிகையை
தடஞ்சோலை–விசாலமானதொரு சோலையிலே
இரா–(நேற்று) இரவில்
கொண்டு புக்கு–அழைத்துக் கொண்டு போய்
(அவளுடைய)
முத்து ஆர்–முத்து வடமணிந்த
கொங்கை–ஸ்தநங்களோடு
புணர்ந்து–ஸம்ச்லேஷித்து விட்டு
மூ ஏழு நாழிகை சென்ற பின்–மூன்று யாமங்கள் கடந்த பிறகு
வந்தாய்–(வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்;
(நீ இவ்வாறு தீமை செய்கையாலே)
உன்னை–உன்னைக் குறித்து
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்–வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்;
(இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி)
உரப்ப–(உன்னை) சிக்ஷிக்க
நான்–(அபலையாகிய) நான்
ஒன்றும்–கொஞ்சமும்
மாட்டேன்–சக்தை யல்லேன்;
அத்தா–நாயனே!
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை
பல பூக்களால் அலங்க்ருதமான குழலை யுடையவளாய்
திருவாய்ப்பாடியில் உள்ள பெண்களைக் காட்டில் இன்னாள் என்று குறிக்கப் படுவாள் ஒருத்தியை
தொத்து -பூங்கொத்து

சோலைத் தடம் கொண்டு புக்கு
இடமுடைத்தான சோலை என்னுதல்
தடாகம் சூழ்ந்த சோலை என்னுதல்

கொண்டு புக்கு
வஸீ கரித்துக் கொண்டு புக்கு
புக்கு -என்கையாலே புறப்பட நினைவில்லை போலே காணும்
புக்கு என்கிற வர்த்தமானம் நல்லவிடம் நல்லவிடம் என்று சொல்லும் அத்தனை இறே –

முத்தார் கொங்கை புணர்ந்து
இரவு இருள் ஒதுங்கிப் போனால் போலே செறிந்த சோலை வெளியாம்பாடி நிலவைப் பரப்பி
முகம் பார்த்து அனுபவிக்க வற்று இறே முலை யார்ந்த முத்து

புணர்ந்து –
அந்த வெளியை இருள் ஆக்கும் இறே ஸம்ஸ்லேஷம் தான்
கண் புதைய வேண்டா இறே இருள் ஆகையாலே

இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
தான் பெண்களை மயக்கினால் தன்னையும் காலம் மயக்கிற்றாய்க் கொள்ளீர்
அத்தாலே இறே மூ வேழு சென்ற பின் வந்தாய் என்றது

ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
நான் நித்ரா பரவசனாகையாலே கால் தாழ்ந்தது என்றவாறே
பூர்வ கிரியை விஸ்மரித்துத் தங்களைப் போலவே
உன்னையும் நினைத்துத் தகுதி இல்லாதனவற்றைச் சொல்லுவார் காண்

உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
நீ நிர்தோஷன் ஆகையால் உன்னைக் கோபிக்க மாட்டேன்
நீ காலம் தாழ்த்து வருகையால் அவர்களை நியமிக்க மாட்டேன்

அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
அவர்கள் சொல்லுகிறவற்றுக்கு நான் நிருத்தரையாம்படி செய்து வந்தாய் என்று
விஷண்ணையாய்த் தீம்பன் என்று உன்னை அறிந்து கொண்டேன் –

உன்னை-காகாஷி நியாயம் கீழும் மேலும் அந்வயிக்கும் –

———

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –

பதவுரை

கார் ஆர்–மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து–திருமேனி நிறத்தை யுடைய
எம் பிரானை–கண்ண பிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி–வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்–”(எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை
இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்
(இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்)
அம்மம் தாரேன்–அம் மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்–என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன–அருளிச் செய்த,
பார் ஆர்–பூமி யெங்கும் நிறைந்துள்ள
தொல்–பழமையான
புகழான்–கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வாருடைய
பாடல்–பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை–இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை
வல்லார்–ஓத வல்லவர்கள்
இருடீகேசன்–ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவார்கள்.

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி

மேகத்தினுடைய நிறம் சேர்ந்த நிறத்தை யுடையனுமாய்
எனக்கு உபகாரகனுமாய் இருக்கிற

ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
ஆரா இன்னமுதுக்கு
இனிமையாலே அதிருப்த போக்யனுமாய்
சத்தா வர்த்தகனு மானவனுக்கு
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் -என்றும்
அது தான் தர அஞ்சுவன் தாரேன் -என்றும்
அவள் சொன்ன பிரகாரத்தை

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
பூமி நிறைந்த புகழை யுடையவன்
அன்றியே
பார் -உபய விபூதிக்கும் உப லக்ஷணமாய் உபய விபூதியும் நிறைந்த புகழை உடையவன் என்னவுமாம்
ஸ்வ ஸம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிற தேசம் பர ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிற
புகழாலே நிறைந்தது என்றால்
பர ஸம்ருத்திக்கே மங்களா ஸாஸனம் பண்ணுகை தானே ஸம்ருத்தியாய் இருக்கிற தேசம்
நிறைந்தது என்னச் சொல்ல வேண்டா இறே

புகழுக்குப் பழமை யாவது
கண்ணன் மூது வராம் விண்ணாட்டவராய்
பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துகிற நித்ய முக்தரோடே
இவர் அபிமான அந்தர் கதராய்
இவருடைய இன்னிசை மாலைகளை ஸ அபிப்ராயமாக அறிந்து
அனுஷ்டான பர்யந்தமாக வல்லார்களும் சென்று கூடுகை இறே

இதுக்குப் பழமையும் இது தானே இறே
அதாவது
அவனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யம் தலை எடாமல் சூழ்ந்து இருந்து ஏத்துகிற
அந்தப்புர பரிகரமாய் இறே நித்ய முக்தர் இருப்பது –

இவர்கள் தாங்களும்
தொல்லை இன்பத்து இறுதியான ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கு இறே மங்களா ஸாஸனம் செய்வதும்

அது தான் இவருக்கு
பூர்வ பாவியுமாய்
உத்தர பாகத்தில் பரம புருஷார்த்தமுமாய் இறே இருப்பது –

ஆகை இறே இவர் தாம்
அடியோமோடும் -என்பது
ஏழாட் காலம் பழிப்பிலோம் -என்பது
எந்தை தந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் என்று
ஆரோஹ அவரோஹ க்ரமத்தாலே அவருடைய புதுமையும் அடி (அடி யார்-அடி ) ஆராய்ந்தால்
பழமையாய் இறே இருப்பது
ஆகை இறே -பாரார் தொல் புகழான் -என்றது –

புதுவைக்கு நிர்வாஹகருமாய்
ப்ரஹ்ம சம்பந்திகளுமாய்
விஸிஷ்ட ருமான ப்ராஹ்மணருக்கு உபகாரகருமான
ஆழ்வார் அருளிச் செய்த பாடலாய்

பட்டர் பிரான் சொன்ன பாடல் ஏரார் இன்னிசை மாலை வல்லார்
அர்த்த அவஹாகனத்தில் அன்றிக்கே ஸப்த மாத்ரமும்
ஏரார் இன்னிசை மாலை யாய் இறே இருப்பது –
ஏர் -அழகு
ஆர்தல் -நிறைதல்
இன் -இளமை
நன்மையாலே நிறைந்து இனிதாய் இருக்கிற இசை மாலையை
இவர் அபிமான அந்தர் கதராய் ஸ அபிப்ராயமாக வல்லவர்

இருடீகேசன் அடியாரே
இவர்கள் இறே அடியார் ஆவார்
இருடீகேசன்-
ஹ்ருஷீகம் என்று இந்த்ரியங்களாய்
ஈசன் என்று நியாந்தாவாய்
இங்குள்ள இந்திரியங்களை நியமிக்கை அன்றிக்கே
அங்குள்ள இந்திரியங்களை ஆத்ம குணத்தால் நியமிக்கும் என்கை
அதாவது
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தைக் காட்டி அவர்களையும் தனக்கு பரதந்த்ரர் ஆக்குகை
அந்த பாரதந்தர்யம் தான் விநியோகத்திலே இறே
இத்தனை அவகாஹனம் உடையவர் இறே அடியார் ஆவார்

ஆரா இன்னமுத்து உண்ணத் தருவன் –என்று ஸமஸ்த பதமுமாய்
முலை தருவன் அம்மம் தாரேன் -என்னவுமாம் —

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: