ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —3-2—அஞ்சன வண்ணனை—

கீழே
ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் -என்றும்
மெய்ப் பால் உண்டு அழு பிள்ளைகள் போல் பொய்ப்பால் உண்டு அழும் என்றும்
வடக்கில் அகம் புக்கு வேற்று உருவம் செய்து வைத்த அன்பா -என்றும்
சூழ் வலை வைத்துத் திரியும் அரம்பா -என்றும்
இவள் பூதனா சகட யாமளார்ஜுன நிரஸித்த பிரகாரங்களைப் பல இடங்களிலும்
கண்டு
பேசி
இவனுடைய படிகள் ஒருபடிப்பட்டு இராமையாலே வஸ்து நிர்த்தேசம் பண்ண மாட்டாமல்

இவன் பொய்யே தவழ்ந்து
அம்மம் தா -என்கையாலே
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -என்று பலகாலும்
இவனுடைய தோஷங்களையும் – குண ஹானிகளையும் – சொல்லி (முலைப் பால் )கொடாமையாலே

இவனும் இழவோடே –
அவள் தந்த போது காண்கிறோம்
அவ்வளவும் நமக்கு ஜாதி உசிதமாய்
நம் பருவத்துக்குத் தகுதியான கன்றுகளை மேய்த்து வருவோம் என்று இவன் போன அளவிலே

அவன் படிகளைச் சொல்லி
அவனைப் போக விட்டேன் நானே அன்றோ என்று இவள் பலகாலும் சொல்லி
ஈடுபட்ட பிரகாரத்தைத் தாமும் பேசி மிகவும் அனுபவிக்கிறார் –

(இத்த²ம்ʼ விதி³ததத்த்வாயாம்ʼ கோ³பிகாயாம்ʼ ஸ ஈஶ்வர꞉ .
வைஷ்ணவீம்ʼ வ்யதனோன்மாயாம்ʼ புத்ரஸ்னேஹமயீம்ʼ விபு⁴꞉ ஸ்ரீ மத் பாகவதம் 10-8-43
ஸத்³யோநஷ்டஸ்ம்ருʼதிர்கோ³பீ ஸா(ஆ)ரோப்யாரோஹமாத்மஜம் .
ப்ரவ்ருʼத்³த⁴ஸ்னேஹகலிலஹ்ருʼத³யா(ஆ)ஸீத்³யதா² புரா –ஸ்ரீ மத் பாகவதம் 10-8-44
வாயில் வையம் கண்டு பின்பு மறந்தத்தைச் சொல்லும்
மண் தின்ற போது விஸ்வரூபம் கண்டு -பின்பு கிருஷ்ணன் தன் மாயையால் மறைப்பித்து
புத்ரத்வ ஸ்நேஹம் காட்டும்படி பண்ணினான்
அப்பொழுது தானே அவதார பிரயோஜனம் பெறுவான் –
அதே போல் இங்கும் மறப்பித்து தன இடத்தில் ஸ்நேஹத்தை விளைத்தான் என்று கருத்து )

இத்தால்
ஸ்வ தேஹ ரக்ஷணத்தில் அஸக்தராய் இருக்கிற ஸம்ஸாரிகளை ரக்ஷிக்க வேணும் என்று
அதிலே ஒருப்பட்டு அவன் போக
போன இடத்தில் உண்டான வியஸன பரம்பரைகளை நினைத்து
அதுக்கு ஹேது பூதர் தாமாகவே அனுசந்தித்துப் பேசி
மங்களா ஸாஸன ரூபமாக ஈடுபடுகிறார் –

——-

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின்
என் செய்ய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே -3 2-1 – –

பதவுரை

அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்–இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை–(அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை–(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்–(தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே–(இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி–(காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை–கம்ஸனை
காய்ந்த–சீறி யுதைத்த
கழல்–வீரக் கழலை அணிந்துள்ள
அடி–திருவடிகள்
நோவ–நோம் படியாக
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்–ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே–மஹாபாபம்! மஹாபாபம்.

அஞ்சன வண்ணனை
வெளிறு கழற்றின அஞ்சனம் போலே இருக்கிற திரு மேனியை யுடையவனை
அஞ்சனம் -மை

ஆயர் கோலக் கொழுந்தினை
கன்றின் பின்னே போகிற போதை த்வரையும் –
திரு மேனியில் குறு வேர்ப்பும் –
அலைந்த திருக்குழலும் –
திருக் கையிலே பிடித்த பொற்கோலும்
ஆயரும் கொண்டாடும்படியாக -தர்ச நீயமாகையாலே கோலம் என்கிறது –

ஆயருக்கு முன்னோடிக் கார்யம் பார்க்க வல்லவன் என்று தோற்றுகையாலே கொழுந்து என்கிறது
அதாவது
கிருஷ்ணா கன்றுகளை மறித்துத் தவறாமல் மேய் – என்று அவர்கள் சொல்லுவதற்கு முன்பே
அவர்கள் கொண்டாட்டமும் மிகை என்னும்படி தன் பேறாக மேய்க்க வல்லனாய்
கன்றுகள் வயிறு நிறைதல் செய்தால் பேறு இழவு தன்னதாய் இருக்கை —

மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
முன்பு சொன்ன போதை குண ஹானிகளை மறந்து
திரு மஞ்சனம் செய்த போதை பிறக்கும் புகரையும் ஸுந்தர்யத்தையும்
கன்றுகளை மேய்த்து (தன் மனை போலவே )பிறர் மனைகளிலே ஸஞ்சரிக்கிற நடை அழகையும் கண்டு
தத் அநுபவம் பெறாத இழவு அன்றிக்கே

கஞ்சனை காய்த்த கழல் அடி நோவ
கம்சனுடைய அரக்கு என்ற மார்பிலே மாளிகைத் தளமாகவும் அரணாகவும்
அவன் உயர இருந்த இடத்திலே எழுப் பாய்ந்து
கஞ்சனும் வீழச் செற்றவன் (பெரிய திருமொழி )என்னும்படி
இந்த மாளிகைத் தளத்திலும் வரக்கு என்றவன் மார்பிலே பாய்ந்து நொந்தத் திருவடிகள் மிகவும் நோம் படி

கன்றின் பின் என் செய்ய பிள்ளையை போக்கினேன்
இவன் பக்வனாய் சத்ரு ஜெயம் பண்ண வல்லவன் ஆனாலும் பிள்ளை என்று இறே இவள் சொல்லுவது –
எந்த ப்ரயோஜனத்துக்ஜகாக
இவன் எது செய்ய வல்லவனாகப் போக விட்டேன் –

எல்லே பாவமே
ஐயோ ஐயோ இது ஒரு பாபம் இருந்த படி என் தான்
மத் பாபம் ஏவ -என்னக் கடவது இறே
எல்லே என்றது என்னே என்றபடி –

——–

பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும்  தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – 3-2 2-

பதவுரை

பாடியில்–திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி–பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து–(அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்–எல்லா விடங்களிலும்
தீமை செய்து–தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு–அவ் விடைப் பெண்களோடே
திரியாமே–திரிய வொட்டாமல்,
கன்று–கன்றுகளினுடைய
தூளி உடை–தூள்களை யுடைத்தாய்
வேடர்–(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை–காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை–என் மகனை
எற்றுக்கு போக்கினேன்–ஏதுக்காக அனுப்பினேன்!

பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
திருவாய்ப்பாடியில் உள்ளார் எல்லாரும் மஞ்சள் அரைப்பார்கள் இறே
அவ்வோர் இடங்களிலே இவன் சென்று நிற்குமே
கிருஷ்ணா வா என்பார்கள் இறே
இவர்கள் நம்மை அழைக்கப் பெற்றோமே
கிருஷ்ணன் ஆகில் தீம்பன் என்கிற தேசத்திலே கிட்டச் செல்லுமே –

அவர்களும் நாலு இரண்டு குளிக்கு நிற்கும்படி நோவ-நேர – அரைக்கிறவர்கள் ஆகையாலே
தங்கள் உடம்பில் இழுசிக் கழுவிப் பார்த்தால் மஞ்சள் பற்றாது இருக்குமாகில் பின்னைப் பூசிக் குளித்தாலும்
கழுவின இடத்தில் பற்றாது என்று இவன் உடம்பிலே இழுசிக் கழுவிப் பார்ப்பார்கள்

பலரும் ஒருவர் இழுசின இடத்தில் ஒருவர் இழுசாமல் உடம்பு எங்கும் இழுசிக் கழுவிப் பார்க்கையாலே
உடம்பு எங்கும் இவர்கள் கையால் மஞ்சள் பூசப் பெற்றோமே
குளிக்கப் பெற்றோமே என்று இருக்கச் செய்தேயும்
நானும் உங்களோடு நீங்கள் பூசுகிற பற்று மஞ்சளும் பூசிக் குளிக்க நானும் கூடப் போருவேன்
என்னையும் கொண்டு போங்கள் என்றால் போலே சொல்லும் இறே -இவர்கள் பக்கல் நசையாலே –

இவர்களும் இவன் தீம்பன் -நம் பின் வர ஒண்ணாது -என்றும் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்ற ஊரார் பழிக்கு அஞ்சி இவனை நீக்கிப் போரு வார்களே
இவர்கள் கூட்டிக் கொள்ளாத வெறுப்பாலே –

சிற்றில் சிதைத்து எங்கும்  தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி உடை
தெருவிலே கொட்டகம் எடுத்து விளையாடுகிற பெண்களோடு
நானும் கொட்டகம் எடுத்து விளையாடுவேன் என்று சொல்லக் கூடுமே

சென்றவாறே அவர்களும்
இவன் கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாயும் தீம்பன்
என்று கூட்டிக் கொள்ளார்களே

அவர்கள் கூட்டிக் கொள்ளாமையால்
அவர்கள் சிற்றிலையும் அழித்துத்
தான் ஸ்வைர ஸாரியுமாய்த் திரிகிறதும் காணப் பெறாத வெறுப்புக்கு மேலே
கற்றாக்களை மறித்து ஓடுகிற தூளியிலே மறையப் பட்ட வேஷத்தை யுடைய வேடர் வர்த்திக்கிற
காட்டிடையிலே போய் மேய்க்கிற கன்றின் பின்னே
வேடர் -நிரை கொள்ளுவார் ஆகவுமாம்

கானிடைக் கன்றின் பின் எற்றுக் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே
இவனைப் போக்கினதால் எனக்கு என்ன பிரயோஜனம்
கன்றுகளுக்கு என்ன பிரயோஜனம்
பிள்ளை தனக்கு என்ன பிரயோஜனம்
தமப்பனாருக்கும் இவ் வூருக்கும் என்ன பிரயோஜனம்
இவனை ஒழிய வேறே மேய்ப்பார் இல்லையோ
இவன் போகிற போது கண்டேன் ஆகில் நியமித்து மீட்கலாய்த்து இறே
அது செய்யப் பெற்றிலேன் ஓ ஓ இது என்ன கொடுமை தான் –

இப்பற்று மஞ்சள் பூசுகிற பிரகாரத்தை ஆழ்வார் திருமகளாரும்
மன்னனார் திரு மேனியில் பூசிக் கழுவவும் கண்டு போரா நின்றோம் இறே

சாத்தி திரு மஞ்சனம் செய்ய என்னாது ஒழிந்தது
அந்தப்புர பரிகரமானார் சொல்லும் வார்த்தையாக வேணும் என்று இறே
ஆழ்வார் தாமும் உற்ற தசையில் நாய்ச்சியார் கோடியிலே ஆவார் இறே —

———–

நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தோறும்
பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன் மணி நின்றதிர்  கானத ரிடைக் கன்றின் பின்னே
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே – 3-2- 3-

பதவுரை

என்–என் மகனான
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்–லோகோத்தரமான
மணி–நவ மணிகள் பதித்த
மேகலை–மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு–சவுந்தர்ய பூர்த்தியுடைய யுவதிகளோடு கூட
நாள் தொறும்–தினந்தோறும்
பொன் மணி மேனி–அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி–புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே–திரிய வொண்ணாதபடி
கான்–காட்டிலே
(இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்)
கல்–மலையிலே
மணி நின்று அதிர்–மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை–வழியிலே
(வருந்தும்படியாக)
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போக்கினேன்–போக விட்டேனே!
எல்லே பாவமே!

நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தோறும்-
நன்றாய் அழகியதாய் மங்களா பரணத்தையும் யுடையராய் –
ஜாதி உசிதமான குண பூர்த்தியும் யுடையரான ஸ்திரீகளோடே நாள் தோறும் நாள் தோறும் –

பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே–
பொன்னுருவாய் மணி யுருவில் பூதம் ஐந்தாய் -என்னுமா போலே
பொன் மணி மேனி-என்று இவர் அருளிச் செய்த படி பாரீர் –
(வேதாந்த பரம் அங்கு -இங்கு ஓலைப்புரம் கேட்டே போகாமல் ப்ரத்யக்ஷம் )

நாள் தோறும்-என்று
கன்று மேய்த்து வரும் அளவில் இவருக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய்ச் செல்லுகிறது இறே

கன் மணி நின்றதிர்  கானத ரிடைக் கன்றின் பின்னே
மாணிக்கல் -மாணிக்க மலை
தூறுகள் வ்ருக்ஷங்கள் உண்டாம் படி மண் செறிந்த மலை அன்றிக்கே இருக்கும் மலைகளை மணி மலை என்னக் கடவதாய்
அது தான் இவன் கன்று மறித்து ஓடுகிற அதிர்த்தியாலும்
ஜாதி உசிதமாக அவை மீளும்படி அழைக்கிற சப்த விசேஷங்களாலும்
கன்றுகள் வேலுண்டு கத்துகையாலும்
பிரதி த்வனி எழும்படியான மணி மலையை யுடைத்தான காட்டுள் வழி இடங்களிலே என்னுதல்
திருவரையில் சாத்தின ரத்நக் கோர்வையில் சேர்ந்த கிண்கிணியில் பிரதி த்வனி யாதல்
ஏவம் பிரகாரமான காட்டில்

என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே
நீல ரத்னம் ஏக தேச உபமானம் என்னும்படியான
மிக்க நிறத்தை யுடையவனைப் போக்க விட்டேன் –

———-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 –

பதவுரை

கண்ணுக்கு இனியானை–கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை–(இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்–இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து–பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்–அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்–பெண் பிள்ளைகள்
வந்து–(தாயாகிய என்னிடம்அரை குலைய தலை குலைய ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி–பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கான் அதர் இடை–காட்டு வழியிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்–அனுப்பினேனே!
எல்லே பாவமே!

வண்ணக் கரும் குழல் மாதர்
நாநா வர்ண ரத்ன ஆபரணங்களாலே அலங்க்ருதமான குழலை யுடைய ஸ்த்ரீகள் என்னுதல்
வண்ணம் -வர்ணமாய் -ஜாதி இடைச்சிகள் என்னுதல்

வந்து அலர் தூற்றிடப்
தாம்தாம் க்ருஹங்களிலே பிள்ளை தீம்பு கண்டால் சிஷா ரூபமாகச் சொல்லி ஆறி விடுகை
இங்கு நின்றும் சென்றவர்களுக்குச் சொல்லி வெறுத்து ஆறி விடுகை அன்றிக்கே
இவன் தீம்புகளை ஒருவருக்கு ஒருவர் சொல்லி தரிக்கையும் அன்றிக்கே
நான் இருந்த இடம் தேடி இவர்கள் வந்து அலர் தூற்றும்படி பண்ணினான் இவன்

பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
அவை எல்லாம் செய்ய வல்லனோ என்னாத படியாகவும்
அலர் தூற்றுகிற இவர்கள் தங்களால் சொல்லி முடிக்க ஒண்ணாத படியாகவும்
பல தீம்புகளைச் செய்து இந்த ஊர் எங்கும் திரிகையும் கேட்க்கிற மாத்ரமும் போதுமோ
காணப் பெறாத நிர்பாக்யையான நான் –

கண்ணுக்கு இனியானை
மனதுக்கு இனியான் -என்பது பின்னை இறே
பும்ஸாம் த்ருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம் –
கண்ணுக்கு இனிமை கொடுப்பான் கரு முகில் வண்ணன் இறே
கண்ணுக்கு இள நீர் குழம்பு முதலானவை இவன் நிறம் போலே காணும்
கண் போன வழியே நெஞ்சும் போகையாலே இவன் தோஷம் எல்லாம் குணமாய்த் தோற்றும் இறே
தோஷா குணா

கானதரிடைக் கன்றின் பின்
காட்டில் சிற்றடிப் பாடான வழிகளிலே அதி மார்த்வமான திருவடிகளைக் கொண்டு
கன்றின் பின்னே திரியும் படி –

எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே
தம்தாம் யத்னங்களாலே ஸாதனங்களை அனுஷ்ட்டித்தால்
அவை தானே பல வ்யாப்தமாய்
அவன் கிருபையாலும் அன்றிக்கே ஸித்திக்கும் என்று எண்ணுபவர்களுக்கு
எண்ணத்தின் படி ஆக்காதவனை

எண்ணும் எண்ணகம் அகப்படாய் கொல் (திருச்சந்த ) -என்றும்
எண்ணிலும் வரும் -(1-10-)-என்னச் செய்தே இறே
எண்ணற்கு அரியன் என்கிறது –

———

அவ்வவிடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்யாமே
எவ் வுஞ்சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே -3-2-5- –

பதவுரை

தெய்வம்–தேவர்களுக்கு
தலைவனை–நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு–(மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு–(அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்–அந்தரங்கனாய்
(அவர்களுக்கு)
கொவ்வை கனி–கோவைப் பழம் போன்ற
வாய்–(தன்) அதரத்தை
கொடுத்து–(போக்யமாக-ஜீவனமாக ) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே–கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்–துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை–வில்லை(க்கையிலே) உடைய
வேடர்–வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

அவ்வவிடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
முற்றத்தோடும்
சிற்றில் தெருவிலும்
மச்சோடு மாளிகைகளிலும்
இப் பொய்கைகளிலும்
மார்கழி நீராடும் இடங்களிலும்
சோலைத் தடங்களிலும்
கடைவார் இடங்களிலும்
நிலவறைகளிலும்
புக்கு -அவ்வவ இடங்களில் இருந்த ஆயர் பெண்களுக்கு அந்தரங்கமான அடியானாய்

கொவ்வைக் கனிவாய் கொடுத்து
கோவைக் கனி போலே இருக்கிற திரு அதரங்களிலே அவர்களை ஜீவிப்பித்து

கூழமை செய்யாமே
கிருத்ரிம வியாபாரங்களைச் செய்து திரிகிறது காணப் பெறாமே
நாரணன் போம் இடம் எல்லாம் -( திருவாய் -3-7-5 )-என்றும்
இவள் நுழையும் சிந்தையள் (திருவாய் 6-5 )-என்றும்
அருளிச் செய்வது போலே இறே அவ்வவ்விடம் புக்குத் திரிவது

கூழமை -யாவது
உன்னை அல்லது அறியேன் -உன்னை அல்லது தரியேன் -என்று
கரு மலர்க் கூந்தல் படியே (பெருமாள் திருமொழி )-வாயது விரல் மார்பது வளை -என்றால் போல் சொல்லுகை இறே –

எவ் வுஞ்சிலை உடை வேடர் கானிடைக்
எவ்வு என்று ஏவாய்
ஏ என்று அம்புக்குப் பேராய்
அம்பும் வில்லும் யுடையராய் இருக்கிற வேடர் ஸஞ்சரிக்கிற காட்டின் நடுவே

கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே
இமையோர் தலைவன் -(திரு விருத்தம் )
இன வாயர் தலைவன்–(திருவாய் -5-6-)என்னுமா போலே –

———-

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி  கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3- 2-6 –

பதவுரை

என் பிள்ளையை–என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்–வெண்ணெயை
மிடறு–கழுத்திலே
மெழுமெழுத்து ஓட–(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி–விழுங்கி விட்டு
போய்–(பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு–பல கள்ள வேலைகளை
செய்து–செய்து கொண்டு
இ பாடி எங்கும்–இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே–திரிய வொட்டாமல்
பல கடிறு திரி–பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை–காட்டு வழியிலே
இடற–தட்டித் திரியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் -(கலியன் -10-6)-என்னும்படி
இடமுடைத்தான மிடறு உள் நெருங்கி வெண்ணெயாலே மெழு மெழுத்தது இறே
வாயில் வெண்ணெய் கொப்பளித்தால் போம்
கையில் வெண்ணெய் கழுவுதல் தலையிலே துடைத்தல் செய்யலாம் –
மிடற்றில் மெழு மெழுப்பு தெரியாது
ஆகையால் கிருத்ரிமம் நித்யமாகச் செல்லும் இறே

ஓட-என்றது
மிடற்றில் அடங்காத படி வாய் நிறைய அமுது செய்தாலும்
வருத்தம் அற உள்ளே இறக்குகை –

போய்ப் படிறு பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
போனால் செய்யும் தீம்புகளை இன்னது இன்னது என்று வஸிக்க -சொல்ல -வகுக்க -ஒண்ணாமையாலே
பல படிறு என்கிறார்
படிறு -தீம்பு

இப் பாடி எங்கும் திரியாமே
ஒரு தெரு இரண்டு தெருவோ
ஒரு முடுக்கு இரண்டு முடுக்கோ
ஓர் அகம் இரண்டு அகமோ
பஞ்ச லக்ஷம் குடி இருப்பும் இவன் அவதரித்த பின்பு ஒரு கோல் ஒரு மனை யாம்படியாக யுண்டான
இப்பாடி எங்கும் திரியாமே –

கடிறு பல திரி  கானதரிடைக் கன்றின் பின் –
துஷ்ட மிருகங்கள் பலவும் ஸஞ்சரிக்கிற காட்டு வழிகள் தோறும் திரிகிற கன்றுகளின் பின்னே
அன்றியே
கடிறு -களிறு ஆகவுமாம்
கானதர்–சிறு வழி யாகையாலே விலங்கி மறிக்க ஒண்ணாதே –
அத்தனை விரகு அறியாத முக்த்தனுமே –
கன்றின் பின் போகா நின்றால் காட்டதர் (காட்டு வழி )ச அவதியும் இன்றியே
என்று வயிறு பிடியாய்ச் செல்கிறது –

இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
ஓட இடறும்படி என் பிள்ளையைப் போக்கினேன்-

————

வள்ளி நுடங்கு இடை மாந்தர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெம் கானதரிடை கன்றின் பின்
புள்ளின் தலைவனை  போக்கினேன் எல்லே பாவமே 3-2 -7- – –

பதவுரை

புள்ளின் தலைவனை–பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி–கொடி போன்று
துடங்கு–துவளா நின்றுள்ள
இடை–இடையை யுடைய
மாதர்–இடைப் பெண்கள்
வந்து–(தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட–பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
(அதை ஒரு பொருளாக மதியாமல்)
துள்ளி–(நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு–(தன்) தோழர்களோடு கூட
விளையாடி–விளையாடிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கள்ளி–(மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு–(பால் வற்றி) உலரும் படியாய்
வெம்–மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை–காட்டு வழியிலே

வள்ளி நுடங்கு இடை மாந்தர் வந்து அலர் தூற்றிட
வள்ளி -ஜாதிக்கொடி
ஒரு புடை ஒப்பாகப் போராமையாலே -நுடங்கு இடை-என்றது

மாதர் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்னுமா போலே
எல்லாத்தாலும் இவனுக்குத் தகுதியானவர்கள் –

நுடங்கு இடை-
கிருஷ்ணனை நாலு இரண்டு பட்டினி கொள்ள வல்லரான பெரு மதிப்பை யுடையவர்கள்

வந்து அலர் தூற்றிட
அபிமதைகள் ஆகையும் அலர் தூற்றுகையும் என்ன சேர்த்தி தான் –
இவன் பொருந்து வர்த்தித்தாலும் அவர்களுக்குப் பொருந்தாமை தோற்றும் இறே பலர் ஆகையாலே
இவர்கள் க்ஷண கால விஸ்லேஷ அஸஹைகள் ஆகையாலே
குணங்கள் எல்லாம் தோஷங்களாகத் தோற்றும் இறே
இவர்கள் தங்களுக்குத் தாரகமும் இது தானே இறே

இது தான் கிருஷ்ணன் என்றும் பெண்கள் என்றும் பழி சொல்லுகிற ஊர் ஆகையாலே
தங்கள் பக்கல் பாவ பந்தம் இல்லாமை தோற்ற அலர் தூற்றுகிறார்கள் -என்னுதல்
வள்ளி மருங்குல் என் தன் மட மானினை –(கலியன் –3-7-1) என்ற இடத்தில் அவன் வரவு பொறுத்தது இறே
அவ்வளவும் பொறாமல் இறே இவர்கள் இடை படைத்து வந்து அலர் தூற்றுகிற படி –
நப்பின்னைப் பிராட்டியும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளும் -வில் -எருது -என்றால் போலே
அவன் வரும் அளவும் பொறுத்தார்கள் இறே

(நம இடைச்சொல் -கை கூப்பி தொழுது -நிதானம்
எனக்கு நான் அல்லேன் -நீ தாமதமாக வருவது பொறுக்காமல் ஊடல்-ப்ரணய ரோஷம் )

துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
இப்படி இவர்கள் நம்முடைய தோஷ குண ஹானிகளைத் தங்களுக்கு தாரகமாகச் சொல்லி அலர் தூற்றப் பெற்றோம்
என்கிற கர்வத்தால் வந்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே
தாய் முலைப்பாலாலே வயிற்றை நிறைத்து தன் இஷ்டத்தோடு இனம் சேர்ந்து விளையாடும் கன்றுகளைப் போலே
தன்னேராயிரம் பிள்ளைகளோடே துள்ளி விளையாடித் திரியாமே –

கள்ளி உணங்கு வெம் கானதரிடை கன்றின் பின்
அ நாவ்ருஷ்டியிலும் பசுமை குன்றிப் பால் மாறாத கள்ளிகளும் குருத்து வற்றி உலரும்படி இறே
காட்டில் வெம்மை தான் தோற்றுவது
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் (பெரிய திரு மடல்- 50 )-என்னக் கடவது இறே –

அதாவது
வெய்யிலாலே வெம்மை உண்டாகை இன்றிக்கே வெய்யில் உஷ்ணம் தணிந்தாலும்
வெய்யிலுக்கும் வெம்மை கொடுக்க வற்றாய் இறே காட்டில் பருக்கை தான் இருப்பது –
இப்படி இருக்கிற காட்டு வழிகளிலே போகிற கன்றுகளின் பின்னே
இவ்வழியிலே ( வைதேகி நடந்ததை பெரிய திருமடல் ) ஜனக ராஜன் திருமகள் நடந்தாள் என்றால்
கிருஷ்ணனுக்கும் கன்றுகளுக்கும் சொல்ல வேணுமோ

புள்ளின் தலைவனை  போக்கினேன் எல்லே பாவமே
வேதமயனாய் -மநோ ஜவனான பெரிய திருவடி கருத்து அறிந்து நடத்துகிறவனைக்
கால் நடையே போக்கினேன்
புட் பாகன் -(திருவாய் -8-10)
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் (திரு நெடும் தாண்டகம் )–என்னக் கடவது இறே –

———

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என் இளம் கொங்கை அமுதமூட்டி எடுத்தி யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே 3-2-8- –

பதவுரை

என் இள சிங்கத்தை–எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்–பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்–(என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்–(தாயாகிய) நான்
என்–என்னுடைய
இள–குழைந்திரா நின்றுள்ள
கொங்கை–முலையிலுண்டான
அமுதம்–பாலை
ஊட்டி–(அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து–வளர்த்து
(இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை)
புலரியே–(இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ–அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
பொன் -மென்மையால் வந்த மதிப்பு
கானில்–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;
எல்லே பாவமே!

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
கர்ம நிபந்தனமாக சர்வரும் பத்து மாஸம் கர்ப்ப வாஸம் செய்யா நிற்க
இவனுக்கு அநுக்ரஹ நிபந்தனம் ஆகையாலே பன்னிரண்டு மாஸம் கர்ப்ப வாஸம் செய்தான் இறே
இவள் தானும் பன்னிரண்டு மாசமும் தானே சுமந்து பெற்றாளாக இறே நினைத்து இருப்பதும் –

மத்யஸ்த்தரும் –
(தத்துக் கொண்டாள் கொலோ) தானே பெற்றாள் கொலோ என்று சம்சயித்து
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -என்று இறே நிர்ணயிப்பது
பெற்றவள் ஒன்றும் பெற்றிலள் -பெறாதவள் எல்லாம் பெற்றாள் -என்பது –
நந்தன் பெற்றனன் -நங்கள் கோன் பெற்றிலன் -என்று அவள் தானும் சொன்னாள் இறே

அப் பாங்கினால்-
தான் பிள்ளைக்கு அனுகுணமாக வர்த்தித்த பிரகார விசேஷங்களாலே நோவு பட்டாளும் தானாக இறே நினைத்து இருப்பது –
இரண்டு மாசம் ஏற வேண்டிற்று யசோதைப் பிராட்டி தன் பிள்ளை என்று அபிமானித்துப் பேணி வளர்க்க வேணும்
என்னும் ப்ரஸித்திக்கும் லோக ப்ரஸித்திக்குமாக இறே
இவள் தான் பெற்றாள் தானாகவும்
பிறந்தான் அவனாகவும் -சொன்னாள் ஆகிறாள் –

இவர் தாம் இங்கன் அருளிச் செய்கைக்கு அடி
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் –என்கிற இடத்தில்
தம்முடைய பக்தி பாரவஸ்யத்தை அவளுடைய பாவனையாலே அருளிச் செய்கையாலும்
கம்சனும் போய் காலமும் அதீதமாய் இருக்கச் செய்தேயும்
கம்ஸ பயம் தத் காலம் போலே தோன்றுகையாலே வெளியிட மாட்டாரே –
இது வெளியிட வல்லார் –துர்கை தான் ஆதல் -ஸ்ரீ நாரத பகவான் போல்வார் ஆதல் இறே
பெரிய பாரதம் கை செய்து ஐவருக்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் என்று வெளியிட்டவரும்
இது வெளியிடாமல் பிறந்தவாறும் வளர்ந்தவாறும் – என்றார் அத்தனை இறே

ஐவருக்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்தவற்றையும் குண கத மாயம் என்றவர் –
இது தன்னையும் வெளியிட்டு மாயம் என்னக் குறை என் என்னில்
அது சக்தி ஜீவிக்கிற காலம் ஆகையாலே வெளியிட்டு மாயம் என்னவுமாம் –
இது அசத்தி ஜீவிக்கிற காலம் ஆகையாலும் -அவன் வெளியிட்ட அவற்றையும் மறைக்கிறவர்கள் ஆகையாலும்
வெளியிட மாட்டார்கள் இறே
ஆனாலும் இவர்கள் -ந ப்ரூயாத் -என்று பேசாது இருக்கை இறே அடுப்பது –
அங்கன் இன்றியே பூத ஹிதங்களான கார்யங்களை அவன் தான் செய்தாலும் வெளியிடாமை
அவனுக்குப் பிரியமானால் வெளியிடாமை இறே ஆவது –
வெளியிட்டவர்களும் வெளியிட்டது -ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -என்று இறே
இவர்கள் தன்னை வளையம் அசையாமல் நோக்கும்
அந்தர்யாமித்வ பரருக்கும் போலி என்னலாம் இறே –

என் இளம் கொங்கை அமுதமூட்டி எடுத்தி யான்
பிள்ளை முழுசி முலை நெருடும் காலத்து -வரக்கு-என்று இருக்கை அன்றிக்கே
குழைந்து முலை சுரக்கையாலே-என் இளம் கொங்கை -என்கிறாள்
இவள் முலையில் சுரக்கிற பாலில் -வண்மை -உண்டாகிலும்
முலையில் வன்மை அற்று இளகிப் போலே காணும் இருப்பது –

நான் எடுத்து அணைத்து அமுதமூட்டி இருக்கச் செய்தேயும்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
தண் போது கொண்ட தவிசு -நெரிஞ்சி -என்னும்படி மார்தவமாய் ஸ்ப்ருஹ அவஹமுமான திருவடிகள்
உளைந்து நோம்படி சிறுகாலே காட்டிலே கன்றின் பின்னே என் இளம் சிங்கத்தைப் போக்கினேன்

என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே
என்னிளம் சிங்கம் -ஸிம்ஹ கன்று
தன் இஷ்டத்திலே ஸஞ்சரிக்கிற சிம்ஹக் கன்று போலே இருக்கிறவனைப் போக்கினேன்

————

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 2-9 –

பதவுரை

என் பிள்ளையை–என் மகனான
தாமோதரனை–கண்ணபிரானை,
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
கொடாதே–(அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் -கொடியவளாகிய நான்
உடையும்–(ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன–கூரியனவாய்க் கொண்டு
ஊன்று–(காலிலே) உறுத்துவனவாய்
வெம்–(இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை–பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்–அத்யுஷ்ணமான
கான் இடை–காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்
எல்லே பாவமே!

குடையும் செருப்பும் கொடாதே –
வர்ஷ வாத ஆதப பரிஹாரமாய் இருக்கிற குடையும்
கண்டகாக்ர பரிஹாரமுமாய்
வெம் மணல் வெம் புழுதி வெம் பருக்கைகளுக்குப் பரிஹாரமுமாய் இருக்கிற பாதுகமும்
கொடுத்துப் போலே காணும் எப்போதும் போக விடுவது
சென்றால் குடையாம் நின்றால் மரவடியாம் வஸ்துவுக்கு இறே இவள் உபகரிக்கிறது –

தாமோதரனை நான்
தனக்கு கட்டவும் அடிக்கவும் எளியனாய் பவ்யனுமாய் போரு கையாலே தாமோதரன் என்கிறாள்
பரமபத மத்யே அதிபதியாய் அப்ரகம்ப்யனாய் இருக்கிறவன் இறே இங்கனே எளியன் ஆனான் –

உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக் கடிய வெம் கானிடைக் காலடி நோவக்
வெம்மையாலே தான் உடைவதாய்-உடைந்தாலும் கூர்மை கெடாமல் ஊன்றுவதாய்
அது தன்னை வருந்திக் கடந்து ஒத்த நிலத்திலே மிதித்தாலும் நெருப்புத் தகட்டிலே மிதித்தால் போலே இருப்பதாய்
வெம்மை ஆற்றுகைக்கு ஓர் இடமும் இன்றிக்கே ஜல வர்ஜிதமான கொடிய காட்டிலே –

அன்றிக்கே
உடை என்ற இதை
குடையும் செருப்பும் என்றத்தோடே அந்வயிக்கவுமாம்
பரியட்டும் உடைத் தோலாய் இருக்கை ஜாதி உசிதம் இறே

கன்றின் பின்
கன்றுகள் கத்யாகதி (கதி ஆகதி போகும் வரும் வழி ) அறியாமல் கொடிய காட்டிலே துள்ளிப் போகா நின்றால்
கன்றுகள் நோவு அறியும் ஒழியத் தன் திருவடிகள்
பிடிக்கும் மெல்லடி –
தளிர் புரையும் திருவடி -என்னும் அது அறியானே –

கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
அக்காடு நீர் நிழல் என்னும்படி நான் கொடியேன் என்கிறாள்
கொடியேனான நான்
பிள்ளை யுடைய அருமையும் பெருமையும் சீர்மையும்
என் பிள்ளை என்கிற அபிமானமும் போக்கின பின்பு போலே காணும் என்கிறாள் —

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார்-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே -3 2-10 –

பதவுரை

என்றும்–‘எப்போதும்
எனக்கு–(தாயாகிய) எனக்கு
இனியானை–இனிமையைத் தருமவனாய்
என்–என்னுடைய
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று–கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை–யசோதைப் பிராட்டி
கழறிய–(மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்–அருளிச் செய்த
பொன்–பொன் மயமாய்
திகழ்–விளங்கா நின்றுள்ள
மாடம்–மாடங்களை யுடைய
புதுவையர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
இன்–போக்யமான
தமிழ் மாலைகள்–தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–(ஒரு காலும்) துன்பமில்லையாம்.

என்றும் எனக்கு இனியானை
ப்ரவாஹ ரூபேண அன்றிக்கே -கால தத்வம் உள்ளதனையும்
என்னளவில் வ்யாமோஹ நிபந்தநமான ரஷ்யத்வம் மாறாதவனை
இத்தாலே இறே இவருக்கு இனிமை பிறப்பிக்கலாவது –

என் மணி வண்ணனைக்
நீல ரத்னம் போன்ற தன் விக்ரஹ வை லக்ஷண்யத்தாலே
என்னை சித்த அபஹாரம் பண்ன்னு மவனை

கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
விளைவது அறியாதே கன்றின் பின் போக விட்டேன் என்று யசோதை கிலேசித்துச் சொன்ன பிரகாரத்தை
இவர் என்றும் என்றதில் –
இவளுக்கும் தமக்கும் உள்ள தூரம் போரும் காணும்
எனக்கு இனியான் என்றதும்
இவளுடைய என்றும் இனிமையும் ஓவ்பாதிகம் இறே

(எப்போதும் இனியவனாயும் இனிமையில் உயர்த்தியும்
பெரியாழ்வாருக்கு யசோதை விட ஏற்றம் உண்டே
இவருக்கு நிருபாதிகம் -அவளுக்கு ஓவ்பாதிகம் )

கன்றின் பின் போக்கினேன் என்றதும்
பூர்வவத்

பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
நன்றான பொன்னாலே செய்யப்பட மாடங்களை யுடைத்தான திருப்புதுவைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே
இனிதான தமிழாலே செய்யப்பட்ட இப்பத்துப் பாட்டையும் ஸ அபிப்ராயமாக சொல்ல வல்லவர்களுக்கு

தமிழுக்கு இனிமையானது –
தாது விபக்திகளாலே அதி வியாப்தியும்
ப்ரக்ருதி மாத்ரத்தாலே அவ்யாப்தியுமான விகல்பங்கள் இன்றிக்கே
ஸ்ருத மாத்ரத்தாலே
நடை விளங்கிப் பொருள் தோன்றி இனிதாய் இருக்கை –

(சைந்த்யம் -உப்பு குதிரை -லவணம் -சமஸ்க்ருதம் சற்று குழப்பும் -தாதுவால் வந்த குழப்பம் -அதி வியாப்தி
ராமேன் பானே ந ஹத ராவணனைக் கொன்றான்
மூன்றாம் வேற்றுமை கர்த்தா கருவி இரண்டுக்கும் உண்டே
ராமனால் பானத்தால் -விபக்தியால் வரும் குழப்பம் -அதி வியாப்தி-
கர்த்ரு கரண சம்பந்தம் அறிய வேண்டுமே -)

இடர் இல்லையே
அவனுடைய விஸ்லேஷத்தால் வரும் துக்கம் என்னைப் போலே அனுபவிக்க வேண்டா என்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: