ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: