ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –
தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-
1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே
3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே
4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே
5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்
6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–
9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே
10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-
———
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-
———–
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-
——–
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-
————
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-
——–
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
——–
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-
———
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-
————
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-
———
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-
———
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-
———
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -92-பாசுரம்–
அவதாரிகை
இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-
——————————————————–
கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-
கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –
———————————————————–
வியாக்யானம்–
கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-
அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –
படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply