ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-10–ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை–

பிரவேசம்
கீழே பாகவத சேஷத்வத்தை அருளிச் செய்து நின்ற இவரைத் தன்னுடைய வ்யாபாரங்களைக் காட்டித் தன் பக்கலிலே ஆக்க
இவரும்
அவனுடைய லீலா ரசங்களிலே ஒருப்பட்டு அனுசந்திக்கிறார்
எம்மை ஆளும் பரமரே -என்று வைத்து
ஆளும் பரமனை -என்றால் போலே
கீழ் அவனுடைய நவநீத ஸுர்யாதிகளை அனுசந்தித்தார்
இதில்
நவ யவ்வனை களோடே அவனுக்கு உண்டான லீலா ரஸத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

—————————

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்   -2 10-1 – –

பதவுரை

ஆற்றில் இருந்து–யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை–விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து–சேற்றை விட்டெறிந்து
வளை–எங்களுடைய கை வளைகளையும்
துகில்–புடவைகளையும்
கைக் கொண்டு–(தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்–காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்–மிக்க வேகமுடையவனாய்
ஓடி–(அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு–(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)
மாற்றமும்–ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்–அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்–இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்–(தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்–(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்.

ஆற்றிலிருந்து –
பலரும் போவார் வருவாராய்
உனக்கு வர ஒண்ணாத ஸாதாரண ஸ்தலத்தில் அன்றோ நாங்கள் இருக்கிறது
நாங்கள் இருக்கிற இருப்புக்கும் உன் வாரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

விளையாடுவோங்களை
ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு விளையாடும் எங்களை
நாங்கள் ஏதேனும் பிரயோஜனத்தைக் கருதியோ ஆற்றில் இருந்தது
விளையாட அன்றோ
விளையாட்டுக்கும் ஒரு பிரயோஜனம் உண்டோ –
அது தானே அன்றோ பிரயோஜனம் –
சிற்றில் -சிறு சோறு -கொட்டகம் -குழமணன் -என்று நாங்கள் விரும்பி விளையாடுகிறதைக் கண்டு நின்று
அவற்றோபாதி நானும் உங்களுடைய லீலா உபகரணம் அன்றோ –
என்னையும் கூட்டிக் கொள்ளு கோள் -என்று அவன் புகுர–புகுந்தவாறே

சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
நாங்கள் எங்களுடைய லீலா உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு –
விமுகைகள் ஆன அளவிலே
எங்களைச் சேற்றில் இருந்து எங்கள் வளைகளையும் துகில்களையும் கைக் கொண்டு

காற்றில் கடியனாய் ஓடி
ஓடுகிற காற்றைப் பிடிக்கிலும் அகம் புக்கு
இவனைப் பிடிக்க ஒண்ணாதபடி தன்னகத்திலே சென்று புக்கு

மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
நாங்கள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தாலும் ஏன் என்கிறான் இல்லை –
ஏன் என்றாகில் இன்று முடியார்கள் இறே
ஏன்-என்னும் போது
அவன் குரலிலே தெளிவும் கலக்கமும் கண்டு தரிப்பர்கள் இறே –

வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்
ஏன் என்கை அரிதாய் உறவு அற்றாலும்
எங்கள் கையில் வளை -கலை -முதலாகத் தர வேணும் – என்று நாங்கள் பல காலும் சொன்னால்
அதுக்கு ஒரு உத்தரம் சொல்ல வேண்டாவோ தான் –

வளைத் திறம் பேசானால்-என்கையாலே
வளை பெறுவதிலும் பேச்சுப் பெறுவதில் காணும் இவர்களுக்கு அபேக்ஷிதம்
பிரணயினிகள் -வளை -கலைகள் -என்றால் போலே காணும் தம் தாம் அபிமதங்களைச் சொல்வது –

இன்று முழுக்க நின்று கூப்பிட்டாலும் ஒரு வார்த்தை அரிதாவதே
நான் உங்களுக்கு வளை தாரேன் -என்று சொல்லுகிறதே போதும்
தருவேன் என்று சொல்லவுமாம் –
நாங்கள் எங்கள் க்ருஹங்களிலே போம் படி நெடுக விசாரித்துத் தந்து விடவுவாம் –
இவற்றிலே ஓன்று செய்யானாகில் நாங்கள் முடிவுதோம் -என்கிறார்கள் –

இன்று முற்றும்-
பிழைத்தோம் என்றாதல்
முடிந்தோம் என்றாதல்
இரண்டத்து ஓன்று இன்று தலைக் கட்டும்

அவனோ உங்களுக்குத் தாரான்
நீங்கள் நின்று துவளாதே நான் வாங்கித் தருகிறேன் -என்று தாய்மார் வாங்கிக் கொடுத்து
நீங்கள் போங்கோள் என்றாலும் போகார் போலே காணும் இவர்கள் –
இவன் தன் பக்கலிலே சென்று –நீ அவற்றைக் கொடு -என்று சென்றாலும்
நான் கொடுக்கைக்கோ பஹு ப்ரயாசப்பட்டுக் கொண்டு வந்தது -என்று கணக்குச் சொல்லுமே அவன் –
அது தன்னைக் கேட்டவாறே -இவன் நியாயம் அறிந்தபடி பாரீர் என்று கொண்டாடும் அத்தனை இறே –
அவளும் ஸ்ரீ நந்தகோபரும் இவன் சொன்ன நியாயம் இறே பரமார்த்தம் என்பது –

இத்தால்
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய ஸாதந பரராய் – இருப்பாரையும் விஷயீ கரிக்கும் என்னும் அர்த்தம் தோற்றுகிறது

ஸாதனம் ஆகையாவது -அவனுடைய வ்யாமோஹ ஹேது -என்று இறே அறிவுடையார் நினைத்து இருப்பது –

சேற்றால் எறிந்து -என்கையாலே அவன் நீர்மையாலே தாங்கள் ஈடுபட்டார்கள் என்னும் இடம் தோற்றுகிறது –

எறிந்து -என்கையாலே அவன் ஈடுபாட்டிலன் என்னும் இடம் தோற்றுகிறது –
அடையாளம் குறித்துப் போனானாய் இறே அவன் இருப்பது –

வளை -துகிலைக் கொண்டு -என்கையாலே
சேஷத்வத்தையும் பாரதந்தர்யத்தையும் பறித்துக் கொண்டான் என்கிறது

சேஷத்வத்தை பறிக்கை ஆவது -தன வயிறு நிறைத்துப் போகை இறெ
பாரதந்தர்யத்தைப் பறிக்கை யாவது -இவர்களை அலைவலை -ஆக்குகை இறே

காற்றில் கடியனாய் ஓடி என்கையாலே
ஸ்பர்ச இந்திரிய க்ராஹ்ய துர்லபன் -என்கிறது

அகம் புக்கு என்கையாலே
ஸ்வ போக்த்ருத்வ நிபந்தமான ஸ்வ தந்தர்ய ஸ்தானத்திலே புக்கான் என்னும் இடம் தோற்றுகிறது

மாற்றமும் தாரானால் என்கையாலே
அவாக்ய அநாதர அம்ருத போகி -என்னும் இடம் தோற்றுகிறது

வளைத்திறம் பேசானால் -என்கையால்
விஷய அநுரூப ப்ராப்ய ப்ரகாசன் என்னும் இடம் தோற்றுகிறது

இன்று முற்றம் -என்ற இத்தால்
சரம அதிகாரம் நாசத்தை நிரூபித்தால் -உஜ்ஜீவனத்தில் நிரூபித்தால் ஒழிய நடுவு நிலை இல்லை என்று
நம்பி அருளிச் செய்த வார்த்தையும் தோற்றுகிறது –
அதாவது பர்வ க்ரமமாக நசிக்கிறான் என்னுதல் உஜ்ஜீவிக்கிறான் என்னுதல் செய்யாது என்றபடி –
தன்னுள் கலவாத எப்பொருளும் தான் இல்லையே –

——

கீழ் நின்ற நிலையிலே நின்று இரண்டத்து ஓன்று முடிவு கண்டால் ஒழிய பேர நில்லார்கள் இறே இவர்களும்
இவர்கள் நின்று தான் செய்வது என் என்னில்
இவனுடைய அவதாரங்களிலும் அபதானங்களிலும் முற்றீம்பால் உண்டான குண விசேஷங்களை அனுசந்தித்து
முறைப்பட்டுச் சொல்லலாம் இரே மேல் எல்லாம் –

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு
விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

பதவுரை

குண்டலம்–கர்ண பூஷணங்களானவை
தாழ–(தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்–திருக் குழல்களானவை
தாழ–(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்–திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ–(திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்–எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது–நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த–ஸ்தோத்ரம் பண்ணவும்
(இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்)
வண்டு அமர் பூ குழலார்–வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய
(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)
துகில்–புடவைகளை
கைக் கொண்டு–(தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்–ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;
வேண்டவும்–(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்–(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
குண்டலம் -காதுப்பணி
அது திருக்குழல் கீழ் தாழ்ந்து அசைய
திருக்குழல் தான் அசைய
திருக்கழுத்தில் சாத்தின விடு நாண் அசைய –

எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
எட்டுத் திக்கிலும் உண்டான தேவ மனுஷ்யாதிகள் எல்லாம்
பும்ஸாம் -என்கிறபடியே தொழுது இறைஞ்சி ஏத்த
அஞ்சலி ஹஸ்தராய் ப்ரஹ்வீ பவித்து மங்களா ஸாஸனம் செய்ய –

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு
வண்டு மாறாத பூக்களால் அலங்க்ருதமான குழல்களை உடையவர்களுடைய
கரையிலே இட்டு வைத்த பரி யட்டங்களைக் கைக் கொண்டு-
அவனைக் கைக்கொண்டான் என்றார்கள் இத்தனை ஒழிய இவர்களுக்கும் அபிப்ராயம் அது தானே இறே
இவர்களுக்கும் அது கைக்கொண்டால் போலே தங்களையும் கைக்கொள்ளுகை இறே அபிப்ராயம் –

விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
விண்ணிலே தோயும்படியான குருந்த மரத்திலே இருந்தானாகில் அவர்கள் பக்கல் வ்யாமோஹத்தாலே
இட்டீடு கொண்டு இருந்தான் என்னுமது – இன்றும் எங்கள் கார்யம் தலைக்கட்டும் -என்று போகிறார்கள் இல்லை –

வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
வேண்டவும் கொடானால்-என்னாதே -தாரானால்-என்கையாலே
தம்மையும் அவர்களோடே கூட்டி அனுசந்திக்கிறார் –
அவனுக்கும் அவர்களுக்கும் உண்டான பாவ பந்தம் எல்லாம் தம்முடைய பேறாகவே நினைக்கிறார் –
இந்த வ்யாமோஹம் தான் அவனுக்கு ஓர் இடத்திலே தான் உண்டாகப் பெற்றோம் -என்று இறே
இவர்கள் தான் இவ் வளைப்பு நிற்கிறது –

————-

தாங்கள் பெறுவார் இழப்பார் செய்கை அன்றிக்கே
காளியன் மேலே குதித்தான் -என்னாகப் போகிறதோ -என்று
அவனுக்குப் பரிகிறார்களாய் இருக்கிறது
அவன் தான் உண்டானால் இறே நாம் உண்டாவது என்று இறே இவர்கள் தான் இருப்பது

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-

பதவுரை

தடம் படு–இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை–தாமரைப் பொய்கையை
கலக்கி–உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு–விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை–காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து–வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு–படமெடுக்கப்பெற்று
பை–மெத்தென்றிருந்த
தலை மேல்–(அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு–கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை–(தன்) திரு மேனியை
அசைத்ததனால்–அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)
உச்சியில்–(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்–நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
இடமுடைத்தான தாமரைப் பொய்கை–என்று இறே ப்ரஸித்தம் –
காளியன் புகுவதற்கு முன்பு தாமரை படும் தடம் பொய்கை கலக்கி-
படுகை -உண்டாகை
இப்படிப்பட்ட பொய்கையை கலக்கி

விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
காளியன் சீறும் படி தான் வளையத்திலே வாலைப் பற்றி இழுத்து –
சலம் கலந்த பொய்கை என்னும்படி விடம் படு நாகம் இறே –
அதனுடைய தலையில் நன்றான படத்தின் மேலே விஷம் காக்கும் படி அதிரக் குதித்து
குதித்த இடத்திலும் சரியாமல் அது நின்றாட
அதுக்கு இளையாமல் நம்முடைய பாக்யத்தாலே அதன் மேலே நின்று ஆடினானாகில் -என்னுதல்
ஆடினான் -என்னுதல்

படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்டு –பொய்கை கலக்கி–விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து-
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்-உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
அது சலித்து மடிய
அதின் தலையிலே நின்று
தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் அஞ்சாதபடி அபய பிரதானம் செய்தானாகில்

இன்று முற்றும்
இன்று நம் கார்யம் தலைக்கட்டும் –

————

மலை எடுத்துக் கொண்டு நின்ற திருக் கைகளுக்கு பரிகிறார்கள்

தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் -2 10-4 – –

பதவுரை

தேனுகன்–தேநுகாஸுரனுடைய
ஆவி–உயிரை
செகுத்து–முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி–(ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட–(அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்–மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து–தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை–பசுக்களின் திரளை
காத்தானால்–ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
அவை–அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்

தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
கம்ஸனுக்குப் பர தந்தரனாய் இங்குத்தைக்கு விரோதத்தை விளைப்பானாய் -வந்த தேனுகனை நிரஸித்து
பனையாய் நின்று பழுத்து இருந்த அசூரனையும் அந்தப் பழம் தன்னாலே நிரஸிக்க வற்றாய்
இறுகிப் பெரிதான தோளாலே

வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
இந்திரனுக்கு இடுகிற சோற்றை
நாம் பிறந்து வளருகிற ஊரில் உள்ளாருக்கு அந்நிய சேஷத்வம் உண்டாக ஒண்ணாது என்று தகைந்து
இந்தச் சோற்றை இந்த அசேதனமான மலைக்கு இடுங்கோள்
புல்லும் தண்ணீரும் நம் பசுக்களுக்கு இந்த மலையிலே அன்றோ -என்ன
கோப ஜனங்கள் எல்லாம் பிரியப்பட்டு
ஸ்ரீ நந்தகோபரும் இந்த வார்த்தையைக் கேட்டு
இவன் சிறு பிள்ளையாய் இருக்கச் செய்தே இவனுக்கு உள்ள அறிவைப் பாரீர் -என்று கொண்டாடி –
இவன் சொன்ன மலைக்கு இட
அத்தைக் கேட்ட இந்திரனும் அத்யந்தம் குபிதனாய்க் கொண்டு -புஷ்கலா வர்த்தகம் முதலான மேகங்களை ஏவி –
இடையரூர் சமுத்திரத்திலே காணும் படி வர்ஷியுங்கோள் -என்று ஏவி விட
அந்த மலை தன்னையே எடுத்து அந்த மழையைக் காத்து –

ஆநிரை காத்தானால்
இடையரும் இடைச்சிகளையும் ரஷித்தான் என்னாதே -பசுக்களை ரக்ஷித்தான் -என்கையாலே
அவ்வூரில் அறிவுடையாரை ரக்ஷிக்க வேணும் போலே காணும்

இன்று முற்றும்
இன்று நம் கார்யம் தலைக்கட்டும்

அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
ஆநிரை காத்த அளவிலும் அவனுக்கு க்ருபா பாத்ரமாவரைக் காணாமையாலே
மீண்டும் அவை தன்னையே இறே உஜ்ஜீவிப்பித்ததும் –
ஆகையால் இன்று முற்றும் –

———-

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்க பிடி உண்டு
வேய்த் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடி உண்டு அழுதானால் இன்று முற்றும் – 2-10 -5-

பதவுரை

ஆய்ச்சியர் சேரி–இடைச் சேரியிலே
(இடைச்சிகள் கடைவதாக)
அளை–(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்–தயிரையும்
பால்–(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு–அமுது செய்து
(அவ் வளவோடு திருப்தி யடையாமல்)
பேர்ந்து–பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்–அவ் லிடைச்சிகள்
(ஒளிந்திருந்து)
கண்டு–(இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க–(இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட–(அவர்கள் கையில்) பிடிபட்டு
(அதற்கு தப்ப மாட்டாமல்)
வெண்ணை–வெண்ணெயை
கொள்ள மாட்டாது–(தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு–அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்–கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்
அடியுண்ட அமுதினால்–(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு
வெண்ணெய் படுவதற்கு முன்னே மத்தாலே தயிர் உடைத்த அளவிலே என்னுதல்
வடித்த-(பாத்ர கதமான ) தயிர் என்னுதல்
அன்றியிலே
அவன் தான் உள்ளளவும் காய் நீட்டி வெண்ணெய் போலே அளைந்த தயிர் என்னுதல்
இதுக்கு ஹேதுவான பால்
இவை எல்லாவற்றையும் ஆய்ச்சிகள் உடைய தெருக்கள் தோறும் –
திறந்த வாசல் படல் அடைத்த வாசல்கள் தோறும் –
புகுந்து அமுது செய்து –
கண்டு பிடிக்கப் போகிறார்களோ என்று மீண்டும் மீண்டும் போவது வருவதாய்
அவர்கள் இருக்கிறார்களோ -உணர்கிறார்களோ – என்று பார்க்கும் அது ஒழிய
வயிற்று நிறைவு பார்ப்பது இல்லை இறே

பிடிக்க பிடி உண்டு
பலகாலும் போக்கு வரத்துச் செய்கிற அடி ஓசையாலும்
உடை மணியில் உள்ளடை விழுந்து சப்திக்கை யாலும்
அவர்கள் கண்டு பிடித்த அளவிலே
நாம் ஓடினாலும் மணி ஓசையிலே ஓடிப் பிடிக்கத் தவிரார்கள் -என்றால் போலே நினைத்து
மணி நாக்கைப் பிடிக்கப் போகாது
அவர்கள் செவியை இவனால் புதைக்கப் போகாது
தன் செவியைப் புதைத்துக் கொண்டு நிற்கும் அத்தனை இறே
அவ்வளவில் அவர்கள் பிடித்தால் பிடி உண்ணும் அத்தனை இறே

வேய்த் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது
தங்கள் தோள் உள்ள உயர்த்தி அளவும் உயர வைத்த வெண்ணெயை எட்டிக் கொள்ள மாட்டாமல்
அளை தயிர் பாலால் பர்யாப்தி பிறவாமல் -வெண்ணெய் கொள்ளும் விரகு தேடி –
தான் பிடிக்க விரகு தேடும் வேய்ந்தடம் தோளினார் தன்னைப் பிடித்து இருக்கச் செய்தேயும்
வெண்ணெயை உண்டான நசையாலும்
அனுக்ரஹிக்கும் விரகுகள் விசாரிக்கையாலும்
இவன் நிஷ் க்ரியனாய் இருக்குமே
நின்ற போதே அவர்களுக்கு அது தானே இடமாக உலூகலத்தோடே பந்திக்கலாமே –

அங்கு ஆப்புண்டு இருந்தானால்
இவன் தானும் நானும் ஓர் இடத்திலே இருந்து வெண்ணெய் கொள்ளுகைக்கு
உபாய சிந்தனை பண்ணலாமே என்று அவ்விடம் தன்னிலே நிற்குமே –

இன்று முற்றும் அடி உண்டு அழுதானால் இன்று முற்றும்
என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் -என்ற போதே அழத் தொடங்கினான் –
ஸ்வ க்ருஹத்திலே போலே இறே புறம்பும் இவன் செய்வது —

———–

பூதனையை நிரஸித்த பிரகாரத்தை அனுசந்திக்கிறார் –

தள்ளித் தடர் நடை இட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால்  இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும் -2 10-6- –

பதவுரை
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)
தள்ளி தளர்நடை இட்டு–தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
(நடக்க வேண்டும்படியான)
இளம் பிள்ளையாய்–இளங்குழந்தையாய்
(இருக்கச் செய்தே)
கள்ளத்தினால்–(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த–(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை–பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி–(’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)
முலை–அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்–(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
துவக்கு அற–(அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்–(அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்

தள்ளித் தடர் நடை இட்டு இளம் பிள்ளையாய்
பருவத்தால் இளையனாய் தளர் நடை இடுகிற காலத்தில் –

உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால்  இன்று முற்றும்–
க்ருத்ரிம ரூபையாய் வந்த பூதனையினுடைய முலையையும் அவள் பிராணனையும்
அவள் நடுங்கிக் கூடாம் படி சுவைத்து நிரசிக்கக் கடவோம் –
என்று மிகவும் திரு உள்ளத்துக்கு உள்ளே ஒருவரும் அறியாமல் குறித்துக் கொண்டு
கண் வளர்ந்த அளவிலே அவள் வந்து எடுத்துத் திருப்பவலத்திலே முலையை வைத்த அளவிலே –
குறித்தால் போல் செய்து முடித்தான் இறே –

துவக்கற உண்டானால் இன்று முற்றும்
பேய்ச்சியுமாய் பிரசன்னையுமாய் நஞ்சு ஏறின முலையில் பாலுமானால் தத் கத தோஷம் தட்டாது இராது இறே –
ஆயிருக்க இவனுக்கு ஓர் அல்பமும் ஸ்பர்சித்தது இல்லை இறே –
தூய குழவியாய் பிள்ளைத் தனத்தில் புறை இல்லை என்னவுமாம் –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிச் செய்தான் -என்னவுமாய் இருந்தது இறே –

———–

விரோதி நிரசனத்து அளவேயோ
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின பிரகாரம் -என்கிறார் –

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

பதவுரை

மா வலி–மஹாபலியினுடைய
வேள்வியில்–யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று–பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று–(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து–யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை–இந்தப்பூமியை
(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)
ஓர் அடி இட்டு–(பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே–இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்–மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி)
தரணி அளந்தானால்–லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
மஹா பலியினுடைய யஜ்ஜ வாடத்திலே வாமன வேஷத்தைப்ப் பரிஹரித்துச் சென்று –
ஓரடி தாழ்வு கிடப்பதாகத் திரு உள்ளத்தில் கோலி
மூவடி தா என்று இரந்து பெற்ற இம் மண்ணை

இம்மண்
என்றது பதினாலு லோகத்தையும் இறே –

ஓர் அடி இட்டு –
அந்நிய சேஷத்வத்தை அறுத்து

இரண்டாம் அடி தன்னிலே
உபரிதந லோகத்தில் உல்லார்க்கு ஸ்வா தந்தர்யத்தால் வந்த செருக்கை
ஒழிக்கக் கடவோம் -என்று திரு உள்ளம் பற்றி –

தாவடி இட்டானால் இன்று முற்றும்
தாவுவதாகத் துடங்கினான் ஆனால்

தரணி அளந்தானால் இன்று முற்றும்
இப்படி இறே அளந்த படி

தரணி -எல்லா லோகத்துக்கு உப லக்ஷணம்
தாவடி
இவன் நினைவிலே சென்ற அடி என்னுதல்
நினைவு பின் செல்லச் சென்ற அடி என்னுதல்

————

ஸ்ரீ கஜேந்த்ரனுக்கும் மழுங்காத ஞானமான ஸங்கல்பம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
பர துக்க அஸஹிஷ்ணுவாய்
ரக்ஷித்தான் என்கை மிகையாய் இருக்கவும்
கார்யப்பட்டாலேயும் மிக்க கிருபையாலும் -ரக்ஷித்தான் -என்று கொண்டாடுகிறார் –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –

பதவுரை

தாழை–(கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்–(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்–மிகவும் பெரிய
பொய்கை வாய்–தடாகத்தினுள்ளே
வாழும்–வாழ்ந்து கொண்டிருந்த
முதலை–முதலையின் வாயாகிய
வலைப்பட்டு–வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்–துன்பமடைந்த
வேழம்–ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்–வருத்தம்
கெட–தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
(அப்பொய்கைக் கரையிலே சென்று)
ஆழி–சக்ராயுதத்தாலே
(முதலையைத் துணிந்து)
பணி கொண்டானால்–(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
அதற்கு–அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்–(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;

தாழை தண் ஆம்பல் வாய்
மொய்ம்மாம் பூம் பொழில் -என்னுமா போலே
தாழையும் கரை சூழ்ந்து கிடைக்கும் போலே காணும்

ஆம்பல் –
பூக்களுக்கும் உப லக்ஷணம்

தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை வலைப்பட்டு
ஆழத்தாலும் குளிர்த்தியாலும்
தடம் -அகலத்தால் வந்த இடமுடைமை
பெரும் பொய்கை–
நீளத்தால் வந்த பெருமையும் யுடைத்தான பொய்கைக்குள்ளே சஞ்சரித்து வாழுகிற
முதலையாகிற வலையில் அகப்பட்டு –

வாதிப்புண் வேழம் துயர் கெட
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே -என்னும்படி
அநேக காலம் கிலேசித்த ஸ்ரீ கஜேந்திரன் கிலேசம் கெடும் படி

விண்ணோர் பெருமானாய் ஆழி கொண்டானால் இன்று முற்றும்
விண்ணோர் பெருமான் ஆகைக்காக காரணத்வ நிபந்தமான திரு நாமத்தையும் –
நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய் -என்று திரு நாமங்களை சொல்லி அழைத்த படியாலும்
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று இறே
ஆழி தொட்டு கிலேசத்தைப் போக்கிற்றும் –

விண்ணோர் பெருமானாய் ஆழி கொண்டான் -என்ற போதே
ஸூரி போக்யத்வமும்
விஸ்வ பதார்த்த சத்தையும் அவனாலே இறே
இச்சாத ஏவ
அத்தாலே இறே இவன் முதலை வலையில் நெடும் காலம் கிடந்தது இருக்கச் செய்தேயும் சத்தை கிடந்தது –
திக் பலம் ஷத்ரிய பலம் -என்று பக்தி மார்க்கத்தை விட்டு
பிரபத்தி மார்க்கத்தில் -போந்து வாராய் -என்று அழைக்க வல்லவன் ஆயிற்றதும்

திரௌபதி சரணாகதையாய் இருக்கச் செய்தேயும்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் -என்று அழைத்து இலளே
மறையும் மறையும் -என்றார் இறே சிற்றாள் கொண்டார்

ஆழி பணி கொண்டான் என்கையாலே நித்யம் பூ
விட்டுப் போந்தவனைக் கொண்டிலன் தோற்றுகிறது

அதற்கு அருள் செய்தானால்
ஸ்வகத ஸ்வீகார ப்ரபத்தியில் துதிக்கை முழுத்த இதற்கு கிருபை செய்தானால் –

———–

ஸ்ரீ வராஹத்தினுடைய அதி மானுஷத்வத்தை அனுசந்திக்கிறார்

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம்மண்ணை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

பதவுரை

(கடலில் நீரை முகந்து கொண்டு)
வானத்து–ஆகாசத்திலே
எழுந்து–கிளம்பின
மழை முகில் போல்–வர்ஷிக்கப் புக்க மேகம் போல
(கறுத்த நிறத்தை யுடைய)
ஏனத்து உரு ஆய்–ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து–காடு நிலங்களில்
எங்கும்–எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து–(கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து–செருக்கடைந்து
விளையாடி–விளையாடி,
(பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று)
இடந்த–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை–இந்தப் பூமியை
தானத்தே–யதாஸ்தாநத்தில்
வைத்தானால்–(கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
தரணி–(இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்–கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;

வானத்து எழுந்த மழை முகில் போல்
ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த மேகம் போலே என்னும்படியான நிறத்தைச் சொல்லுதல் –
மேக்கத்தோடே ஒத்த உயர்த்தியைச் சொல்லுதல்
வானத்து மழை போல் உயர்ந்த
போல் என்கையாலே ஒப்பும்
எழுந்த -என்கையாலே மேகத்துக்கும் அவ்வருகான மஹா வராஹத்தினுடைய உயர்த்தியைக் காட்டுகிறது –

எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி
கானத்து எங்கும் மேய்ந்து
எங்கும் என்றது ஸிம்ஹ வ்யாக்ரங்களால் உண்டான தடை அற்ற அளவன்றிக்கே
மேய்ந்து செருக்குத் தோன்ற கர்வித்து விளையாடித் திரிகையாலே

ஏனத் துருவாய்  இடந்த இம்மண்ணை தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னுமா போலே முன்பு நின்ற ஸ்தானத்தில் வைத்தானாக

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
ஏனத் துருவாய்
தான்
இடந்தானால் இன்று முற்றும்
இடந்த இம்மண்ணை
தானத்தே வைத்து
கானத்து மேய்ந்து களித்து விளையாடினானால்
இன்று முற்றும்
என்று அந்வயம்

அன்றிக்கே
வானத்து எழுந்த மழை முகில் போல்
ஆகாசத்தில் கிளம்பின மழை முகில் போல்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே

எங்கும்
எல்லா இடத்தும்

கானத்து மேய்ந்து
சோலைகளில் மேய்ந்து

களித்து விளையாடி
பிரளய ஆர்ணவத்திலே முழுகிப் பெரிய கர்வத்தோடே விளையாடி

ஏனத் துருவாய்  இடந்த இம்மண்ணை
உபரிதந லோகங்களில் அடங்காத
மஹா வராஹ ரூபியாய்
அண்டபித்தியில் நின்றும் ஓட்டு விடுவித்து இடந்த எடுத்த இம் மண்ணை

தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
ஏழ் மண்ணும் –நான்றில தானத்தவே -என்னும்படி
தானத்தே வைத்தானால்

தரணி இடந்தானால் இன்று முற்றும்
இடந்த இம்மண் என்னும்படி
தரணி இடந்தானால் இன்று முற்றும்

மழை முகில் போல்
ஏனத் துருவாய்
வானத்து எழுந்த
கானத்து
எங்கும்
மேய்ந்து களித்து விளையாடி
தரணி இடந்தானால் இன்று முற்றும்
இடந்த இம்மண்ணை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
என்று அந்வயம்

———-

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-

அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம்  வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு  ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

பதவுரை

நல் மங்கைமார்கள் தாம்–(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்–அழகிய செந்தாமரைப் பூப்போன்ற
கண்ணன் தன்னை–கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து–அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு–(அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட–(தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை–அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
இங்கு–இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்–ஒரு வகைக் குற்றமும்
இல்லை–இல்லையாம்.

அங்கமலக் கண்ணன் தன்னை
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரை போலேயாய்
பரத்வ ஸூசகமான திருக்கண்களை உடையவனை

யசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம்  வந்து முறைப்பட்ட அங்கு அவர் சொல்லை
யசோதைக்குப் பருவத்தால் இளையராய்
கிருஷ்ணன் அளவிலே ஸ்நேஹிகளுமாய் இருக்கிறவர்கள்
அவளுடைய க்ருஹத்திலே வந்து முறைப் பட்ட சொல்லை –

புதுவைக் கோன் பட்டன் சொல் இங்கு இவை வல்லார்க்கு  ஏதம் ஓன்று இல்லையே
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அருளிச் செய்த சொல்லான இவற்றை
ஸாபிப்ராயமாக
இங்கேயே இருக்கச் செய்தேயும் இவற்றை அனுசந்திக்க நல்லவர்களுக்கு
பொல்லாங்கு என்னப் பட்டவை எல்லாம்
நிரன்வய விநாசமாகப் போகும் –

மங்கை நல்லார்கள்
அவர்
தாம்
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
அங்கு
வந்து முறைப்பட்ட
சொல்லை
புதுவைக் கோன் பட்டன் சொல்
இவை
இங்கும்
வல்லார்க்கு  ஏதம் ஓன்று இல்லையே
என்று அந்வயம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: