ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-9–வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை–

பிரவேசம்
கீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி –
தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –
தன்னுடைய கிருஹ கார்யத்திலேயும் ஒருப்பட்டவளாய் நிற்க

போது விடுகிற அளவிலே
இவன் இராச் செய்த தீம்புகளைச் சொல்லி
ஊரில் உண்டான பக்வைகளான ஸ்த்ரீகளும் வந்து முறைப்படா நிற்கச் செய்தேயும்
பகல் போது தானும் லீலா ரஸ பரவசனாய்த் தீம்புகள் செய்யா நின்றான் -என்று பலரும் வந்து வந்து முறைப்பட
இவளும் வேண்டா வேண்டா என்று அழைக்க அழைக்க
தீம்பு மாறாமல் நடந்த பிரகாரத்தை அனுசந்தித்துக் கொண்டு சென்று
பாகவத சேஷத்வத் தோடே தலைக்கட்டுகிறார் —

—–

ராத்திரி இவன் உறங்குகிறான் -என்று இருந்தாள் இவள் –
அவன் போய் இராவெல்லாம் ஊரை மூலையடி நடத்திச் சிலுகு விளைத்த பிரகாரத்தைச்
சிலர் சிறுகாலே வந்து பலவாக முறைப் பட்டுச் சொல்லுகிற பிரகாரத்தை அனுசந்திக்கிறார் –

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –

பதவுரை

வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–(நிச் சேஷமாக) விழுங்கி விட்டு
வெறுங் கலத்தை–(பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை
வெற்பிடை இட்டு–கல்லிலே பொகட்டு
அதன் ஓசை–அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை
கேட்கும்–கேட்டுக் களிக்கின்ற
கண்ண பிரான்–ஸ்ரீக்ருஷ்ண பிரபு
கற்ற–படித்துள்ள
கல்வி தன்னை–(தஸ்கர) வித்தையைக்
காக்க கில்லோம்–(எங்களால்) காக்க முடியாது;
(ஆகையால்)
உன் மகனை–உன் பிள்ளையை
காவாய்–(தீம்பு செய்யாமல்) தடுப்பாயாக;
புண்ணில்–புண்ணின் மேலே
புளி பெய்தால் ஒக்கும்–புளியைச் சொரிந்ததைப் போன்ற (தீவிரமான)
தீமை இவை–இப்படிப்பட்ட தீம்புகளை
புரை புரை–வீடு தோறும்
செய்ய வல்ல–செய்வதில் ஸமர்த்தனாகி
அண்ணல் கண்ணான்–ஸ்வாமித்வ ஸூசகமான கண்களை யுடையனான
ஓர் மகனை–ஒரு புத்திரனை
பெற்ற–பெற்ற
அசோதை நங்காய்–யசோதைப் பிராட்டி;
உன் மகனை–உன் பிள்ளையை
கூவாய்–அழைத்துக் கொள்வாயாக.

வெண்ணெய் விழுங்கி
செவ்வி குன்றாமல் கடைந்து பாத்ர கதமாக்கிச் சேமித்து வைத்த வெண்ணெய்களை விழுங்கினான்
என்னும் இடம் வாயது கையதுவாக காணலாம் என்னும் இடமும் கொடு வந்து காட்டி
விழுங்கின அளவேயோ –

வெரும் கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
வெறும் கலன்களை கல்லிலே இட்டு உடைத்தான் காண் -என்ன
வெண்னையயைத் தானே விழுங்கினான் ஆகிறான் –
வெரும் கலத்தை வெற்ப்பிடை இட்டு உடைத்தான் -என்கிற
நிஷ் ப்ரயோஜனமான வியாபாரம் சேர்ந்து இருக்கிறது இல்லையீ என்ன
பிரயோஜனம் அதன் ஓசை கேட்க்கை அன்றோ அவனுக்கு வேண்டுவது
பிரயோஜனம் -தன் மேல் துடராமைக்கு அந்நிய பரதை பண்ணுவிக்க -என்னுதல்

ஆனால் உங்களை அடைத்து நோக்கிக் கொள்ளுங்கோள் -என்ன
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம்
என்னை இவர்கள் பொய்யே சொல்கிறார்கள் –என்று கண்ணைப் பிசைந்து அழவும் கூடும் இறே –
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்ன
என்னை அன்றோ சொல்லிற்று -என்று சீற்றத்தோடே அடிப்புடைக் கொட்டி அழுதவன் இறே

உந்தம் க்ருஹங்கள் –நீங்கள் காக்க மாட்டீ கோளாகில் ஆர் காப்பார் என்ன
உன் மகனைக் காவாய்–
உன்னை ஒழியக் காப்பார் யார்
இவன் கற்ற க்ருத்ரிமம் எங்களால் காக்கப் போகாது காண் -என்ன

புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை
இவன் செய்கிற தீம்புகள் உளறல் புண்ணிலே ஷாரம் வைத்தால் போலே காண் இருப்பது –

புரை புரையா இவை செய்ய வல்ல
நீங்கள் ஒருத்தரும் அன்றோ சொல்லுகிறி கோள் -என்ன
புரை இடம் தோறும் புரை இடம் தோறும் இந்த க்ருத்ரிமம் செய்ய வல்லவன் இறே
புண் புரை என்னவுமாம் –

அண்ணற்கு அண்ணான்  
அண்ணல் -ஸ்வாமி வாசகம் –
க்ருத்ரிமத்துக்கு எல்லாம் அக்ர கண்யன் என்னும் இடம் கண்ணிலே தோன்றும் இறே –

அண்ணற்கு அண்ணான்  
நம்பி மூத்த பிரானுக்கும் நியாம்யன் ஆகாதவன் என்னவுமாம் –

ஓர் மகனைப் பெற்ற வசோதை நங்காய்
இப்படி அத்விதீயமான பிள்ளை பெற்ற பூர்த்தியை யுடையவளே

உன் மகனைக் கூவாய்
இது இங்கனே நடவா நிற்க
வேறே சிலர் –
எங்கள் அகங்களிலே இப்போது செய்கிற தீம்புகளைப் பாராய் என்று முறைப் பட்டு
உன் மகனை அழையாய் -என்கிறார்கள் –

இத்தால்
முமுஷுக்களை அங்கீ கரித்து
மோக்ஷ ருசி இல்லாதாரை சங்கல்ப வ்யவசாய ஸஹஸ்ர ஏக தேசத்திலே தள்ளி அழிக்கையே
பிரயோஜனமான பிரகாரத்தை யுடையவன் என்று தோற்றுகிறது –

——–

இவன் செய்த தீம்புகளைச் சொல்லி வேறே சிலர் வந்து முறைப்பட
அது பொறுக்க மாட்டாமல் இவனை அழைக்கிறாள் –

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்  அஞ்சன வண்ணா அசலகத்தார்
பரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –

பதவுரை

இங்கே–இவ்விடத்திலே
வருக வருக வருக–சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;அபிமதம் பெற்று பூர்ணன் ஆன நம்பி
கரிய குழல்–கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்–செந் நிறமான வாயையும்
முகத்து–(ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ–இராம மூர்த்தி!
இங்கே வருக-;
(என்று கண்ணனை யழைத்து, தன் பிள்ளை மேல் குற்றம் சொன்னவளை நோக்கி யசோதை
உன் பிள்ளையை புகழ்ந்து கூப்பிட்டு அல்லது அச்சம் படும்படி கடிந்து பேசுகிறாய் அல்லாய்
என்பவளைக் குறித்து நங்காய் )
நங்காய்–குண பூர்ணை யானவளே!
இவன்–இந்தப் பிள்ளை
எனக்கு–எனக்கு
இன்று–இப்போது
அரியன்–அருமையானவனாயிற்றே;
(என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி)
அஞ்சனம்–மை போன்ற
வண்ணா–வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்–அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச–(உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்–பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு–(இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
(இவ் வருத்தந் தீர)
இங்கே போதராய்–இங்கே வாராய்
(என்று யசோதை கண்ணனை யழைக்கிறாள்.)

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
ஒரு கால் அழைத்தால் வாராமையால் பல காலும் அழைக்கிறாள் –
உனக்கும் அவத்யம் –
எனக்கும் அவத்யம் –
உங்கள் தமப்பனாருக்கும் அவத்யம் –
நீ பிறந்த ஊருக்கும் அவத்யம் –
உன் அளவில் வெறுத்து இருக்கும் கம்ஸ சிசுபாலாதிகளுக்கு பிரியம்
ஆகையால் இவன் வரும் அளவும் வருக வருக வருக என்னும் அத்தனையே இறே இவளுக்கு

இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே
நீ வாமன நம்பி அன்றோ -குண பூர்த்தியை யுடையவன் அன்றோ வாராய் -என்று குணம் கொள்கிறாள் –
தாய் சொல்லு கேட்க வேணும் காண் –
தாய்க்கு இல்லாதான் ஊருக்கு உண்டோ -வாராய் -என்கிறாள்
பல காலும் அழைக்க நியாம்யனாய் வாராமையாலே
குணம் கொண்டு அழைக்கிறாள்

கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
வாமன நம்பி வருக என்றவாறே அணுக வந்தான்
வந்தவாறே இவனை ஏறப் பார்த்தாள்
பார்த்த அளவிலே கரிய குழலையும் செய்ய வாய் முகத்தையும் காணா –
தன் நியந்த்ருத்வத்தையும் மறந்து இவனை அணைத்து
மாத்ரு வசன பரிபாலனம் செய்தவன் அன்றோ என்று
மிகவும் உகந்து எடுத்துக் கொண்டு
இவனையோ நீங்கள் க்ருத்ரிமன் என்கிறது -என்று
அவர்களை வெறுத்து வார்த்தை சொல்கிறாள்

அரியன் இவன் எனக்கு நங்காய்  
இவன் எனக்கு அரியன்

அசலகத்தார்–இன்று-பரிபவம் பேச தரிக்க கில்லேன்
உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு அரும் பேறாய் இருக்கிறாவோ பாதி –
இவனும் எனக்கு அரியன் காணுங்கோள் –
இதன் முன்பு எல்லாம் பிள்ளையை எடுத்துக் கொண்டாடிப் போந்த அசலகத்தார்
இன்று பரிபவம் சொல்லப் புக்கவாறே –

பாவியேன் உனக்கு இங்கே போதராயே
மிகவும் வெறுப்பாய்
பொறுக்க மாட்டு கிறிலேன் என்று
அதில் குண பூர்த்தியை உடையாளாய் ஒருத்தியைக் குறித்து
தன் வெறுப்பைச் சொல்லி
தன் பிள்ளையைப் பிடித்து இங்கே போராய் -என்று உள்ளே போகிறாளாய் இருக்கிறது –

அஞ்சன வண்ணா
என்று சமுதாய சோபையைக் கண்ட போதே ப்ரேமாந்தையாம் இறே
வண்ணம் மருள் கொள்ளப் பண்ணும் இறே –

இத்தால்
வருக வருக என்று பல காலும் அழைக்கையாலே ஆஸ்ரித பாரதந்தர்யம் தோன்றுகிறது
ஆஸ்ரித பாரதந்தர்யம் தோற்றிற்றுத் தான் எங்கனே -என்ன
நீ வாமன நம்பி அன்றோ -என்கிறார் –
ஆஸ்ரிதனான இந்திரனுக்காக வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து –
அநாஸ்ரிதனான மஹா பலி பக்கலிலே சென்றில்லையோ -என்கிறார்

காகுத்த நம்பி -என்கையாலே
மாத்ரு வசன வ்யாஜத்தாலும் ஆஸ்ரிதரான தேவர்களுக்காகவும் ருஷிகளுக்காகவும்
பிரதிகூலனான ராவணனுடைய சமீபமான வென்றிச் செருக்களத்திலே சென்றவன் அல்லையோ
சென்றதும் சிலையும் கணையுமே துணையாக இறே ( சாளக்ராம பதிகம் -கலியன் )

அசலகம் என்றது
பிரபத்தி உபாய பரரை
பிரபத்தி உபாய பரர் பேசுமவை -மங்களா ஸாஸன பரரான இவருக்கு
பிரதிகூலமாய் இறே தோற்றுவது

பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இந்தப் பரிபவம் பொறுக்க மாட்டாமல் —
எந்தக் கருந்தாளூதினான் -எந்த மாணிக்கக் குழாய் எடுத்தான் -இவனையே இது எல்லாம் சொல்லிற்று –
கறப்பன கடைவன எல்லாம் ஸ்வ க்ருஹத்தில் உண்டாய் இருக்க
விளைவது அறியாமல் -ஸ்வ க்ருஹத்துக்கும் பர க்ருஹத்துக்கும் வாசி அறியாமல் புகுந்தான் –
வெண்ணெயைத் தொட்டான் பாலைத் தொட்டான் என்றால் போலே கதறுகிறது எல்லாம் என் தான்
என்று பிள்ளைப் பிணக்கு பிணங்குவாராம் –

———–

பாவியேனுக்கு இங்கே போதராயே -என்று கொண்டு போய் உள்ளே விட்டாளாய் நினைத்து இருந்தாள்
அவன் ஊரில் போய்ச் செய்கிற விஷமங்களை அறியாளே இவள் –
வேறே சிலர் வந்து முறைப்படத் தொடங்கினார்கள் –

திரு உடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று  உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –

பதவுரை

திரு உடை பிள்ளை தான்–உன் செல்லப் பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு–தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன்–சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேசு உடையன்–அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா நின்றான்;
(இவன் செய்ததென்ன வென்றால் ;
உருக வைத்து–உருகுவதற்காக (அடுப்பில் நான் வைத்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
குடத்தொடு–தாழியோடே (நிச்சேஷமாக)
உறிஞ்சி–உறிஞ்சி விட்டு
உடைத்திட்டு–தாழியை யுமுடைத்துப் பொகட்டு
(பிறகு தான் உடையாதவன் போல்)
போந்து நின்றான்–அவ்வருகே வந்து நில்லா நின்றான்;
அசோதாய்–யசோதையே!
அருகு இருந்தார் தம்மை–உன் வீட்டருகே இருந்தவர்களை
அநியாயம் செய்வது–இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது
வழக்கோ தான்–ந்யாயமாகுமோ?
(நீ)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையை
வருக என்று–‘வா’என்று சொல்லி
கூவாய்–அழைக்க வேணும்;
(நீ அழைத்துக் கொள்ளா விட்டாலோ)
மது சூதனன்–இக் கண்ண பிரான்
வாழ ஒட்டான்–(எங்களைக்) குடி வாழ்ந்திருக்க வொட்டான்.

திரு உடைப் பிள்ளை தான்
ஐஸ்வர்யத்தால் ஸ்ரீ மத் புத்ரனாய் இருக்கிறவன் என்னுதல்
ஸ்ரீ மான் ஆனவன் என்னுதல்

தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
இவன் தீமை செய்கிற பிரகாரங்களை பார்த்தால் -ச அவதியாய் இருக்கிறது இல்லை –
இவனைப் போலே தீம்பராய் இருப்பார் சிலரைக் காண்கில் இறே ஓர் உபமானம் இட்டுச் சொல்லலாவது

தேக்கம் -தடை

தேசுடையன்
செய்ததுக்கு நியமித்தால் பயப்படுகை அன்றிக்கே -செய்யுமவற்றை நினைக்கையாலே
க்ருத்ரிம பிரகாசத்தைத் தனக்கு தேஜஸ்ஸாகவும் –
அது தானே உடைமையாகவும் நினைத்து தீமைகள் செய்யா நின்றான் –

உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று  உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான்
இத்யாதிகளைச் சொல்லிக் கொண்டு
கை நெரித்து ஒடத் தொடங்கினார்கள் –

வாழ ஒட்டான் -என்றது
குடிமை செய்து குடி வாழ்ந்து ஓர் இடத்திலே கிடைக்க ஒட்டான் என்றபடி –

மது சூதனனே
முன்பு எல்லாம் விரோதி நிரசனம் செய்து போந்தவன் தானே இப்போது விரோதம் செய்யா நின்றான் –

இத்தால்
களவு தேஜஸ் ஆயிற்று
கள்ளரை கள்ளர் என்னப் பொறாத லோகத்திலே தான் களவிலே ஒருப்பட்டு —
கள்ளன் -என்னும் பேரைப் பூணுகையாலே களவு தான் ந்யாயமுமாய் –
அவனுக்கு தேஜஸ்ஸூமாகக் கடவது –

வெண்ணெயை அங்கீ கரித்து
வெண்ணெய் இருந்த பாத்ரத்தையும் உடைத்தான் என்கையாலே
ஆத்யந்திக ஸம்ஹாரமான மோக்ஷ பிரதன் இவன் என்று தோற்றுகிறது –

தேக்கம் ஒன்றும் இலன் -என்கையாலே
ஒருவருக்கும் நியாம்யன் அன்று என்கிறது –

————–

வருக என்று உன் மகன் தன்னைக் கூவாய் -என்கையாலே
இங்கே போதராய் என்கிறாள் –

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

பதவுரை

கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணா–வடிவை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
கோயில்–திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்–பிள்ளையே!
இங்கே போதராய் ;
தென் திரை சூழ்–தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேர்–திருப்பேர் நகரிலே
கிடந்த–பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா–ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்–இங்கே வாராய்;
(இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து)
அம்மம்–‘உணவை
உண்டு வந்தேன்–(நான்) உண்டு வந்தேன்’
என்று சொல்லி–என்று சொல்லி
ஓடி–ஓடி வந்து
அகம் புக–அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்–தாயான யசோதையும்
கண்டு–(கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று–எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள–(அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்–(அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற–(தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே–கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே!
(என்று ஆழ்வார் இனியராகிறார்)

கொண்டல் வண்ணா இங்கே போதராயே
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற திரு மேனியை யுடையவன் –
இங்கே அம்மம் உண்ண போதராயே –

கோவில் பிள்ளாய் இங்கே போதராயே-
நியந்த்ருத்வ அபாவ பர்யந்தமான ஸர்வ நியந்தா வானவனே -இங்கே போதராயே –
கோ ஸ்வாமி -ஸர்வ நியந்தா -தனக்கு ஒரு நியந்தா இல்லாத ஸர்வ நியந்தா

கோயில் பிள்ளாய் என்பதிலும்
ஸாஷாத் கோயில் பிள்ளாய் என்கை இறே உசிதம்
(கீழே ரூடி அர்த்தம் )

கொண்டல் வண்ணன் -வெண்ணெய் உண்ட வாயன் –
கோயில் பிள்ளை என்ற போதே அது தானும் இதிலே உண்டு இறே –
அரவணையீர் –செங்கோல் நாடாவுதீர் –(திரு விருத்தம் -33 )
செங்கோல் உடையவன் என்ற போதே சர்வாதிகத்வம் விஸதீ கரிக்கலாவது கோயிலிலே இறே
(செங்கோல் யுடைய திருவரங்கச் செல்வன் அன்றோ இவன் )

தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
தெள்ளிதான திரையை யுடைத்தான காவேரியாலே சூழப்பட்ட திருப்பேரிலே கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ மன் நாராயணன் என்னும் பிரதம பத வாஸ்யன் ஆனவனே –

உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம் புக வாய்ச்சி தானும்
உண்ண வாராய் -என்று அழைத்து வர
இவன் இவள் அகத்தை நோக்கி உண்ணாது இருக்கச் செய்தேயும்
உண்டு வந்தேன் என்று வர

ஆய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே
இவன் உண்டு வந்தேன் என்று வருகிற போதே உண்ண அழைத்துச் சொல்லுகிற இவள்
இவன் முகத்தில் ப்ரஸன்னதையைக் கண்டவாறே
இவன் உண்ணுமையை மறந்து தானும் பிரசன்னையாய் எடுத்துக் கொள்ளும் படி இறே
இவன் தான் கற்ற கல்வி -என்று ப்ரசன்னராய்க் கொண்டாடுகிறார் –

—————-

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளை யாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2- 9- 5-

பதவுரை

ஆலை கரும்பு அனைய–ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன் மொழி–மதுரமான மொழியை யுடைய
அசேதை நல்லாய்–யசோதைப் பிராட்டி!
பல் வளையாள்–பல வகை வளைகளை அணிந்துள்ள
என் மகன்–என் மகனானவன்
பாலை கறந்து–பாலை (ப்பாத்திரங்களில்) கறந்தெடுத்து
(அப் பாத்திரங்களை)
அடுப்பு ஏற வைத்து–அடுப்பின் மேலேற்றி வைத்து
இருப்ப–(அவற்றுக்குக் காவலாக) இருக்க (நான்)
நெருப்பு வேண்டி–(அவற்றைக் காய்ச்சுவதற்காக) நெருப் பெடுத்து வர விரும்பி
மேலை அகத்தே சென்று–மேலண்டை வீட்டிற்குப் போய்
அங்கே–அவ் விடத்தில்
இறைப் பொழுது–க்ஷண காலம்
பேசி நின்றேன்–(அவர்களோடு) பேசிக் கொண்டிருந்து விட்டேன்; (அவ் வளவிலே)
சாளக்கிராமம் உடைய–ஸ்ரீஸாளக்ராமத்தை (இருப்பிடமாக) உடையனாய்
நம்பி–ஒன்றாலுங் குறைவற்றவனான (உன் மகன்)
(என் மகளிருந்த விடத்திற் சென்று)
சாய்த்து–(அந்த க்ஷீர பாத்திரத்தைச்) சாய்த்து
பருகிட்டு–(அதிலிருந்த பாலை முழுதும்) குடித்து விட்டு
போந்து–(இப் புறத்தே) வந்து
நின்றான்–(ஒன்றுமறியாதவன் போல) நில்லா நின்றான்;
(இனி இவன் எங்களகங்களில் இவ் வாறான தீமைகளைச் செய்யத் துணியாதபடி நீ சிக்ஷிப்பதற்காக)
உன் மகனை–உன் பிள்ளையான இவனை
கடவாய்–அழைத்துக் கொள்ள வேணும்.

பாலைக் கறந்து
நம் சத்ருஞ்ஞயனைப் போலே வச வர்த்தியாய்
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலைக் கறந்து
கறந்து -என்கிற அருமை
சமுத்ரத்தைத் துலைய இறைத்து -என்பாரைப் போலே

அடுப்பேற வைத்து
அடுப்பில் உயர்த்தியாலும்
பாலும் கனத்தாலும்
ஏற வைத்து -என்கிறது –

பல் வளையாள் என் மகள் இருப்ப
வளையும் பாலும் கண்டு காணும் இவன் புகுந்தான்

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
இவன் புகுந்தது அறியாதே மேலை அகத்தே இப்பால் காய்ச்சுவதாக நெருப்பு வேண்டிச் சென்று
க்ஷண காலம் இவன் தீம்புகளைச் சொல்லித் தாழ்க்க நின்றேன் –

சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
இதுவே ஆலம்பனமாக
ஸ்ரீ ஸாளக்ராமத்திலே நித்ய வாஸம் செய்கிற பூர்ணன்
அபூர்ணரைப் போலே அத்தனையும் சாய்த்து அமுது செய்து
தான் அல்லாதாரைப் போலே விடப் போந்து நில்லா நின்றான் –

ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்
ஆலைக் கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும் பூர்த்தியையும் யுடையவளே –
உன் மகனை விரைந்து அழையாய்
இவன் பிள்ளையைப் பொடிந்து அழைக்கும் போதும்
இவள் மொழி -தோஷம் சொல்லி முறைப்பட வந்தவர்களையும்
துவக்க வற்றாய் இனிதாய் இருக்கும் போலே காணும் –

இத்தால்
ஞான பிரகாச க்ருஹத்திலே வைராக்ய சா பேஷையாய் சென்றேன் என்கிறது –
(மேலை அகம் உயர்ந்த வீடு ஞான பிரகாசம்
நெருப்பு போல் வைராக்யம் வேண்டிப் போனேன் )

———–

கீழே -உன் மகனைக் கூவாய் -என்றபடியாலே அழைக்கிறாள் –

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பதவுரை

கோதுகலம் உடை–(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய
ஓ குட்டனே–வாராய் பிள்ளாய்!
குன்று–(கோவர்த்தனம் என்னும்) மலையை
எடுத்தாய்–(குடையாக) எடுத்தவனே!
குடம் ஆடு கூத்தா–குடக் கூத்தாடினவனே!
வேதம்–வேதங்களுக்கு
பொருளே–பொருளாயிருப்பவனே!
என் வேங்கடவா–‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே!
வித்தகனே–வியக்கத் தக்கவனே! (நீ)
இங்கே–என்னருகில்
போதர் கண்டாய் போதர் கண்டாய்–விரைந்து ஓடிவா;
(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன;
போதரேன் என்னாதே–‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல்
போதர் கண்டாய்–(இசைந்து) வருவாயாக;
(என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன 😉
அசல் அகத்தார்–அசல் வீட்டுக் காரர்கள்
ஏதேனும்–இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை
சொல்லி–(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு
(அவ்வளவோடும் நில்லாமல்)
ஏதேனும்–(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை
பேச–(என் பக்கலிலே வந்து) சொல்ல
(அவற்றை)
நான்–(உன் மீது பரிவுள்ள) நான்
கேட்க மாட்டேன்–கேட்டுப் பொறுக்க மாட்டேன்
(ஆதலால்,)
இங்கே போதராய்–(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.)

போதர் கண்டாய் இங்கே  போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
அங்கு நின்றும் இங்கே போதல் காண் கர்தவ்யம்
போராய் -போராய் -என்ன
மாட்டேன் மாட்டேன் -என்னாதே -போதல் கண்டாய்
லகரம் ரகரமாகிறது
கண்டாய் என்கிறது -சொல் நிரப்பம் ஆதல்
அவர்கள் பரிபவம் கண்டாய் -என்று பொருள் பெற்று முடிதலாம் –

ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
அந்யோன்யம் தங்களிலே சொன்ன அளவு அன்றிக்கே
என் பக்கலிலேயும் வந்து –
கள்ளன் கள்ளன் என்று இக் குடிக்கு அடாதவை எல்லாம் சொல்லக் கேட்க மாட்டு கிறிலேன்

கோதுகுலமுடை குட்டனேயோ
பழுது அற்ற குலத்துக்குப் பிள்ளை யானவனே
ஓ -என்கிறாள்
விஷாத அதிசயத்தாலே

குன்று எடுத்தாய்
கோக்களையும் இக் கோப குலத்தையும் கோவர்த்த கிரியை எடுத்து ரஷித்தவனே

குடமாடு கூத்தா
இடையவர் ஐஸ்வர்யம் மிக்கால் தலைச்சாவி வெட்டிக் குடக்கூத்து ஆடுவார்கள் இறே
ப்ராஹ்மணர்க்கு ஐஸ்வர்யம் மிக்கால் யஜ்ஜாதிகள் செய்யுமா போலே

வேதப் பொருளே
வேத வேத்யனே
வேதைஸ் ஸர்வேர் அஹம் ஏவ வேத்ய -என்றான் இறே

என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பான திருமலையில் நித்ய வாஸம் பண்ணி
என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே –

அந்நிலை தன்னிலே ஜகத் காரண பூதன் -என்னுதல்
ஜகத் நிர்வாஹ சாமர்த்தியத்தை உடையவன் என்னுதல்
(வித்து -அகன் -வித்தகன் என்று கொண்டு )

————-

திருவாய்ப்பாடியில் உள்ள எல்லாரும் ஸ்ரவண வ்ரதம் அனுஷ்ட்டித்துப் போருகை ஜாதி உசிதமாய் இருக்கையாலே
அந்த விரதத்துக்கு வேண்டிய உபகரணங்களை இவன் முன்பே செய்த பிரகாரத்தையும் சொல்லி
இப்போது செய்கிற தீம்புகளையும் சொல்லி உன் பிள்ளையை நியமியாய் -என்கிறாள் –

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9 -7-

பதவுரை

அசோதை நங்காய்!
செந்நெல் அரிசி–செந்நெல் லரிசியும்
சிறு பருப்பு–சிறு பயற்றம் பருப்பும்
செய்த–(சமையற் குற்றமொன்றும் நேராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்–கருப்புக் கட்டியும்
நறு நெய்–மணம் மிக்க நெய்யும்
பாலால்–பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்–பன்னிரண்டு திருவோணத் திரு நாளளவும்
(நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை)
அட்டேன்–சமைத்தேன்;
பண்டும்–முன்பும்
இப் பிள்ளை–இப் பிள்ளையினுடைய
பரிசு–ஸ்வபாவத்தை
அறிவன்–(நான்) அறிவேன்;
(இப்போதும் அப்படியே)
எல்லாம்–(திருவோண விரதத்திற்காகச் சமைத்த வற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு–(ஒன்றும் மிகாதபடி) விழுங்கி விட்டு
(அவ்வளவிலும் திருப்தி பெறாமல்)
நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி–‘நான் இன்னமும் உண்ண வேண்டி யிரா நின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு
போந்த–(அவ் விடத்தை விட்டு) கடக்க வந்து
நின்றான்–(அந்ய பரரைப் போல) நில்லா நின்றான்;
(இனி இவ்வாறு தீமை செய்யாதபடி)
உன் மகன் தன்னை–உன் பிள்ளையான இக் கண்ணனை
கூவிக் கொள்ளாய்–(உன் னருகில்) அழைத்துக் கொள்வாயாக;
(பிள்ளைகளைத் தீம்பு செய்ய வொட்டாதபடி பேணி வளர்க்க வேண்டி யிருக்க, அப்படி வளர்க்காமல்)
இவையும்–இப்படி வளர்ப்பதும்
சிலவே–சில பிள்ளை வளர்க்கையோ?

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
அந் நோன்புக்கு
உர நிலத்திலே பழுது அற விளைந்து சிவந்து சுத்தமான நெல்லில் அரிசியும்
அப்படிக்கொத்த நிலத்திலே விளைந்த சிறு பயிறு நெரித்து உண்டாக்கின பருப்பும்
நல்ல கரும்பு நெருக்கிச் சாறு திரட்டி வட்டாகச் செய்த அக்காரமும்
அல்ப பஹு ஷீரம் அன்றிக்கே நல்ல பசுவின் பாலாய்
நால் ஒன்றாம் படி செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பன்னிரண்டு திருவோணம் பழுதறச் சமைத்தேன்

பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
நான் -இவை திருவோண விரதத்துக்கு -என்று ஆரம்பித்து சமைத்த போதே
இவன் தீம்பிலே ஆரம்பித்து தேவ அர்ச்சனம் செய்ய ஓட்டான்
நோன்பு சமைந்து கொடுக்கக் கொள்ளான்
பரிசாவது –அனுரூப அபிமதங்களைக் கொடுக்கை
இவன் செய்யும் பிரகாரம் பண்டே அறிவேன்

இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
இத் திரு வோணத்தில் இப்போது பாரித்தவை எல்லாம் விழுங்கி
அந்நிய பரரைப் போலே
அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –
எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய்
பிள்ளை பெற்றாருக்குப் பிள்ளைகளைத் தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ
உன் மகன் அன்றோ
கூவி அழைத்துக் கொள்ளாய்

இவையும் சிலவே
இவன் தீம்புகளைச் சொல்லி
கூவி அழைத்துக் கொள்ளாய் என்றவாறே
இவன் சீறி -இவர்கள் பொய்யே சொல்லுகிறார்கள் -என்னுமே
அத்தை அஸத்யமாகப் பிரதிபத்தி பண்ணி -உங்கள் வார்த்தையை விஸ்வசிக்கவோ –
இவன் வார்த்தையை விஸ்வசிக்கவோ என்னுமே -இவள்

இவையும் சிலவே
அவன் தீம்பு செய்தவையும் அன்றி
முறைப்பட வந்த எங்களுக்கு நீ சொன்ன இவையும் சிலவே -என்கிறாள் –

————–

கூவிக் கொள்ளாய் என்கையாலே மீண்டும் அழைக்கிறாள்

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –

பதவுரை

கேசவனே–அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்–இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது–‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;–(என்று யசோதை யழைக்க, இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ–நீ
நேசம் இலாதார்–(உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து–அகங்களிலே யிருந்து
விளையாடாதே–விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்–(உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்–(இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்–(இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற–நிற்கின்ற
இடத்தில் நின்று–இடங்களையு மொழித்து விட்டு
போதராய்–(இங்கே) வாராய்;
(என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,)
தாய் சொல்லு–தாய் வாய்ச் சொல்லை
கொள்வது–மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்–(பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
(ஆதலால்)
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)

கேசவனே இங்கே போதராயே
ப்ரசஸ்த கேஸன் ஆகையால் போரும் போதைக்கு குழல் அழகு காண்கைக்காக வாதல்
ப்ரஸித்த நாமம் ஆதல்

சொல்லுவார் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு நீ பல காலும் அழைத்தால்
நான் விளையாடல் விட்டு வருவேனா -என்ன

கில்லேன் என்னாது இங்கே போதராயே
மாட்டேன் என்னாதே இங்கே போதராயே
நான் இங்கே இருந்து விளையாடி வருகிறேன் என்ன

நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
உன் பக்கலிலே பக்தி ஆதல்
தங்கள் உஜ் ஜீவனத்தில் ஸ்நேஹம் ஆதல்
அல்லாதார் இடத்தில் நீ அந்தர்யாமியாய் இருந்து லீலா ரஸம் கொண்டாடாதே போதர் கண்டாய்
உன்னுடைய சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே லீலா ரஸம் கொண்டாடலாய் இருக்க
நீ அவர்களுக்கு உள்ளே இருந்து விளையாடுகிறது என் -என்னும் பொருளைக் காட்டுகிறது –

இவ்வளவேயோ –
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
இடைச்சிகளுக்குத் தொழுத்தைகளாய்ப் போருகிறவர்களும்
இடையர்க்கு அடியராய்த் தொண்டு பட்டவர்களும் சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அளவில்லை காண்
இவர்கள் நின்ற இடத்திலே நில்லாதே போராய் –

தாய் சொல்லுக்  கொள்வது தன்மம் கண்டாய்
பிறந்த போதே தாய் சொல்லுக் கொண்டவன் அல்லையோ
அந்தத் தாயைப் போலே விபரீதரும் துஷ்ட மிருகங்களும் வர்த்திக்கிற
காடு ஏறப் போகையையோ தர்மம் என்கிறேனோ –
ஆர்க்கும் மாத்ரு வசன பரிபாலனமே தான் தர்மம் –

தாமோதரா இங்கே போதராயே
இவள் தன்னாலே கட்டப் பட்டவன் என்னுதல் –
பரமபத மத்தயே இருக்கிறவன் என்னுதல் (ஸ்ரீ வைகுண்ட தாம் -உதர நடுவில் )

இவள் தான் இப்போது தாமோதரா என்கிறது –
இவனை என்றிய -ஏன் – விட்டோம் -என்றால் போலே நினைக்கிறாள் என்னுதல்
அன்றிக்கே
பழைய யுரலும் கயிறும் கிடந்ததாகில் இனி இவனை விடக் கடவோம் அல்லோம் -என்று நினைக்கிறாள் ஆதல்
பழைய தழும்பின் மேலே இவனைப் பந்திக்கும்படி என் என்று வ்யாகுலப் படுகிறாள் ஆதல் –

————

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு
என்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன்  புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 9-9 – –

பதவுரை

அசோதை நங்காய்
கன்னல்-கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த
இலட்டுவத்தோடு–லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு
சீடை–சீடையும்
கார் எள்ளின் உண்டை– எள்ளுருண்டையையும்
கலத்தில்–அவ் வவற்றுக்கு உரிய பாத்திரங்களிலே
இட்டு–நிரைத்து
என் அகம் என்று–என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து விசேஷமாக காவலிடாமல்
வைத்து-உறிகளிலே வைத்து விட்டு
நான் போந்தேன்–நான் வெளியே வந்தேன்
(அவ்வளவில்)
இவன்-இப் பிள்ளையானவன்
புக்கு-அவ் விடத்திலே வந்து புகுந்து
அவற்றை-அப் பணியாரங்களை
பெறுத்தி–நான் பெறும்படி பண்ணி
போந்தான்–ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்
(அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் )
பின்னும்–மறுபடியும்
அகம் புக்கு–என் வீட்டினுள் புகுந்து
உறியை நோக்கி–உறியைப் பார்த்து
அதில்
பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்–மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்
இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்
உன் மகன் தன்னை–உன் பிள்ளையாகிய கண்ணனை
கூவிக் கொள்ளாய்–உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்
இவையும்–இப்படி இவனைத் தீம்பிலே கைவளர விட்டிருக்கிற இவையும்
சிலவே–ஒரு பிள்ளை வளர்க்கையோ

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை
கருப்பு வட்டு -கருப்பு வட்டோடே சமைத்தவை காட்டிலும் ரசிக்கும் இறே
இலட்டுவம் -அப்பம் -சீடை -கார் எள்ளில் உண்டை -இவை எல்லாம் அபூப வகை

கலத்திலிட்டு
அவற்றுக்குத் தகுதியான சுத்த பாத்திரங்களில் இட்டு

என்னகம் என்று நான் வைத்து போந்தேன்
இவ்வகத்தில் ஒருவரும் வருவார் இல்லை -என்று சேமித்து வைத்துப் போந்தேன் –

இவன்  புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
நான் போந்ததே பற்றாசாக இவன் புக்கு அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு போந்தான் என்னுதல்
பெறுத்தி -என்றதாகில்
அவற்றை எல்லாம் தான் அமுது செய்து -அதுவே எனக்குப் பேறாம் படிப் பண்ணிப் போந்தான் என்னுதல் –
அன்றிக்கே
அவற்றை எல்லாம் வாழ்வித்துப் போந்தான் என்று ஷேபம் ஆதல் –
அவற்றை அழகியதாக என்னை உஜ்ஜீவிப்பித்து போந்தான் என்னுதல் –

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
அவ்வகம் தன்னில் உள்ளுக்குள்ளே புக்குப் பின்னையும்
மிக்க செவ்வியை யுடைத்தான வெண்ணெயையும் உண்டானோ என்று உறிகளைப் பார்த்து ஆராயா நின்றாள்

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய்
குண பூர்த்தியை யுடைய யசோதாய்
அவனுக்கும் உன்னைப் போலவே குண பூர்த்தி யுண்டாம்படி உன்னருகே அழைத்துக் கொள்ளாய்

இவையும் சிலவே
என்னுடைய குண பூர்த்தியும்
அவனுடைய குண தோஷங்களையும் சொல்லிக் கதறுகையே உங்களுக்கு உள்ளது –
சிறு பிள்ளைகள் படல் திறந்த குரம்பைகளிலே புக்கு கண்டவற்றைப் பொருக்கி வாயில் இடக் கடவது அன்றோ –
உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு வச வர்த்திகளாய்த் திரிகிறன-என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாய்
அவன் செய்த அவற்றுக்கும் மேலே
இவையும் சிலவே -என்று
அவர்களும் இன்னாப்போடே போகிறார்கள் என்று தோற்றுகிறது –

——-

இவையும் சிலவே என்று கீழே அரிசம் தோன்றுகையாலே
சொல்ல மாட்டோம் என்று சிலர் சொல்லுகிறார்கள் –

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே -2 9-10 – –

பதவுரை

நங்காய்–யசோதைப் பிராட்டி
சொல்லில்–உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி–அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய்
உன் பிள்ளை தான்–உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே–(பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே
(என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து–என் வீட்டினுள் புகுந்து
என் மகளை–என் பெண்ணை
கூவி–பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை–அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு–பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்–காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்–நாவற்பழங்களை
கொணர்ந்து–இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு–அவ் விடத்தில்
விற்ற–அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு–ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை–அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து–கொடுத்து
(அதற்குப் பதிலாக)
நல்லன–(தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்–நாவற் பழங்களை
கொண்டு–அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
(போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே)
நான் அல்லேன் என்று–(உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி
(அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு)
சிரிக்கின்றான்–ஓ! மோசம் போனோமே என்று) சிரியா நின்றான்
(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)

சொல்லிலரசிப் படுதி நங்காய்
உன் பிள்ளையுடைய சூழலைச் சொல்லுவோம் ஆகில்
உனக்கு கோபம் தோற்றி விமுகை ஆவுதீ
சொல்லாது இருப்போம் ஆகில் உன் நிறைவுக்குக் கொற்றையாம்

சூழல் உடையன் உன் பிள்ளை தானே
சூழல்
நாநாவான க்ருத்ரிம வகைகள்
அவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை –

அவனுக்கும் உண்டோ சூழல் –
அவன் பக்கல் நீங்கள் கண்டது என் -என்ன

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி
என் அகத்திலே புகுந்து
என் மகள் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு
அவள் கையில் அடையாள வளையலைக் கழற்றிக் கொண்டு போய்
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
கொல்லையில் நின்றும் கொண்டு வந்து
அங்கே நாவல் பழம் விற்றுத் திரிவாள் ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து –

நல்லன நாவற் பழங்கள் கொண்டு
செவ்வி குன்றாத பழங்களைத் தெரிந்து கொண்டு -போரும் போராது -என்று சொல்லுகிற அளவிலே

நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க

அவள் -இவன் தந்தான் -என்ன

நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொடு வந்து கொடுத்தாய்-என்ன –

நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன்
என் கையில் வளை கண்டாயோ
நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறது கேட்டாயோ
கையில் வளை கழற்றுவது கண்டாயாகில் உன் வளையை அங்கேயே பறித்துக் கொள்ளாமல் விட்டது என் –
என்றால் போலே சில மித்யைகளைச் சொல்லி
மந்த ஸ்மிதம் செய்கிறதைக் கண்டு
இவனைப் பிடித்தவள் வளையை மறந்து இவனை விட்டு
உன்னைத் தீம்பு அற நியமிக்கும் படி அவளைச் சொல்லுகிறேன் -என்று போந்து
அவனுடைய சூழல்களை இவளுக்குச் சொல்லி முறைப்படுகிறார்கள் –

பிள்ளை எங்கள் ஆழ்வார் கண் வளருவதற்கு முன்னே ஜாக்ரத் ஸ்வப்னத்திலே சென்று
எனக்கு நாவல் பழம் கொண்டிட வேணும் -என்று ஒரு சிறு பிள்ளையாய்ச் சென்று உணர்த்த
அவர்கள் கண் வளரப் புகுந்தவாறே பலகாலும் உணர்த்திக் கண் வளர ஒட்டாமையாலே
ஒரு காலாக -பிள்ளாய் நீ யார்- என்ன
நான் ஜீயர் மகன் ஆயர் கோ -என்ன
(வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -சதங்கை அழகியார் வ்ருத்தாந்தம் போல் இதுவும் )
அவரும் அவ்வளவிலே உணர்ந்து ஜீயர் ஸ்ரீ பாதத்திலே சென்று
ஜீயர் உம்முடைய மகன் என்னைக் குடி இருக்கவும் உறங்கவும் ஓட்டுகிறான் இல்லை -என்ற செய்திகளை அவரும் கேட்டு அருளி
திருப்பள்ளி அறையிலே சென்று
நாயந்தே இப்படி செய்கை கர்த்தவ்யம் அன்று -போர நியமித்தார் என்று பிரசித்தம் இறே –

——–

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –

பதவுரை

வண்டு–வண்டுகளானவை
களித்து–(தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்–ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்–சோலைகளாலும்
வரு–(அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்–நீரை யுடைத்தான
காவிரி–காவேரீ நதியான
சூழ்–சூழப் பெற்று
தென்–அழகிய
அரங்கன் அவன்–திருவரங்கத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு–(விபவமாகிய) முற் காலத்தில்
செய்த–செய்த
கிரீடை எல்லாம்–லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்–விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு–இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி–(இப் பாசுரங்களை)பாடி
(அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து)
குனிக்க வல்லார்–கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி–கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
எண் திசைக்கும்–எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்–(அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி–திருவடிவிணை களானவை
என் தலை மேலான–என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
வண்டுகளானவை களித்து இரைக்கும் படியான பொழில் என்னுதல் –
உகளித்து இரைக்கும் பொழில் என்னுதல்

இப்படிப்பட்ட பொழில்களாலும்
பொழில்களுக்குத் தாரகாதிகளாக -வரு புனல் காவேரியாலும் சூழப்பட்ட திருவரங்கப் பெரு நகரிலே
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள்
தென் -என்று திக்காதல்
அழகாதல்

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்
தென் அரங்கனானவன் பண்டு செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாம்
அந்த லீலை தான் வ்யாஜமாய் –
லோகத்துக்குப் பீதி மூலமாகவும் –
பக்தி மூலமாகவும் –
பிராப்தி மூலமாகவும் –
பிராப்தி அனுஷ்டானங்களோடே சேர்க்கலாய் இறே இருப்பது –

பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
லீலா சேஷ்டிதங்கள் எல்லாம் பிராப்தி பர்யந்தமான மங்களா ஸாசனத்தோடே சேர்த்து
இசை தவறாமல் பாட வல்லார் இவர் தாமே இறே
தத்வ ஞான சா பேஷரான ப்ராஹ்மண உத்தமருக்கு உபகாரராய் விஷ்ணு ஸப்த வாஸ்யரான
பெரிய பெருமாளைத் தம்முடைய திரு உள்ளத்திலே வைத்து மங்களா ஸாஸனம் செய்ய வல்லவர் –

கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்
இவர் பாடலான இவற்றைக் கொண்டு பாடி
அவிக்ருதராய் இராதே ப்ரஹ்வீ பாவம் தோன்றப் பாடி ஆட வல்லார்

கோவிந்தன் தன் அடியார்களாகி
மூன்று எழுத்துடைய கோவிந்தன் தன் அடியார்களாகி

எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
1-எட்டுத் திக்கு என்னுதல்
2-எண்ணப் பட்ட தசா விசேஷங்கள் என்னுதல்
3-எட்டு அர்த்தத்தை பிரகாசிப்பதான வியாபக மந்த்ர விசேஷ பிரதானம் என்னுதல்
(ஜகத் காரணம்– சேஷி– ரக்ஷகம் –அநந்யார்ஹம்– ததீய சேஷத்வம் -சகல வித பந்து -ஸமஸ்த கைங்கர்யம் )

விளக்காகி நிற்பார்
எத் தசைகளுக்கும் ப்ரகாசகராய் இருப்பார்

இணை அடி என் தலை மேலனவே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகள்
என் தலை மேலாரே -என்னுமா போலே அனுசந்திக்கிறார்

இவருடைய பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்க்கு அடிமையும்
இது தான் இறே
அந்தத் திருவடிகளுக்கு வஸ்தவ்ய பூமி தம் திரு முடி -என்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: