ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-8–இந்திரனோடு பிரமன் ஈசன்–

பிரவேசம்
பூசும் சாந்தின் படியே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு அலங்கரித்து
த்ருஷ்டி தோஷ பரிஹார்த்தமாகக் காப்பிடத் தொடங்கினார் –
(பூசும் சாந்தின் படியே அஹிம்சா இத்யாதி ஆத்ம குணங்கள் )

——-

ஸந்த்யா கால ஸேவார்த்தமாக இந்திராதி தேவர்கள் எல்லாரும் வந்தார்கள்
காப்பிட வாராய் -என்கிறார் –

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- –

பதவுரை

சந்திரன்–சந்த்ரனானவன்
மாளிகை சேரும்–வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை– மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றவனே!
அழகனே–அழகு உடையவனே!
இந்திரனோடு–இந்திரனும்
பிரமன்–ப்ரஹ்மாவும்
ஈசன்–ருத்ரனும்
இமையவர்–மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம்–(ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு–சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து–(மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார்–மறைந்து நின்றார்கள்,
இது–இக் காலம்
அம்–அழகிய
அந்தி போது ஆகும்–ஸாயம் ஸந்த்யா காலமாகும்,
(ஆகையால்)
காப்பு இட–(நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி
வாராய்–வருவாயாக.

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
தந்துவனாய் வந்து நின்ற இந்திரனும்
இந்திரனோடு தொட்டில் வர விட்ட ப்ரஹ்மாவும்
அந்த ப்ரஹ்மாவோடே திருவரைக்குச் சாத்த தகுதியானவற்றை எல்லாம் வரவிட்ட ருஷப வாஹனனும் –
அந்த ருஷப வாஹநனோடே அனுக்தரான தேவர்கள் எல்லாரும்
வந்து -அத்ருஸ்யராய் -அதூர விப்ர க்ருஷ்டராய் -மந்த்ர மா மலர் கொண்டு நின்றார்கள்

ப்ரஹ்மாவோடே ஈசன் இந்திரன் என்னாதே
இந்திரனை கௌரவித்தது ஓவ்பாதிக கர்ம தார தமயத்தால் வந்த
ஐஸ்வர்ய செருக்கு முற்பட சா வதியாகையாலே என்று தோற்றும் இறே

மறைந்துவரா வந்து நின்றார் என்னவுமாம் –

மந்திரம்
மறை கொண்ட மந்த்ரம் –
தம் தாம் நினைவுகளால் மறைந்தார்களாக இருக்கும் அத்தனை ஒழிய –
இவருக்கும் மறைய ஒண்ணாதே

மா மலர்
கல்பகம் முதலான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
தம் தாம் குறைவுகளையும் கொண்டு
அருளப்பாடு இடும் தனையும் பார்த்து நின்றார்கள் –
ஜப ஹோம தான தர்ப்பணங்களிலே விநியுக்தமான மங்களா ஸாஸனம் நின்றார்கள் –
சில கண்ணைச் செம் பளித்துத் தம்தாமை மறைத்தனவாக நினைப்பது உண்டு இறே –

குண த்ரய வஸ்யர் அல்லாதார் மேலே -உவர் -என்ற அநாதார யுக்தி செல்லாதே

சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
திரு வெள்ளறையில் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வைஷ்ணவர்
திரு மாளிகைகளிலும் கோயிலிலும் உண்டான உயர்த்தியாலே சந்திரன் வந்து சேரும் என்கிறார் –

இத்தால்
ஆந்த ராளிகரான ஞாதாக்கள் சேரும் இடம் என்கிறது
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தீப ப்ரகாஸம் போலே –
ஸாஸ்த்ர ஜன்யரில் ஞான வைராக்ய நிஷ்டர் -ஆதித்ய ப்ரகாஸம் போலே —
உபதேஸ ஞானம் போலே இறே பூர்ண சந்த்ரனைச் சொல்லுவது –
இந்த உபதேஸ கம்ய ஞானத்தில் அநந்யார்ஹத்வம்
த்ருதிய விபூதியிலும் த்ரிபாத் விபூதியிலும் துல்ய விகல்பமாக இருந்ததே யாகிலும்
அங்குள்ளார்க்கும் கௌரவ ப்ராப்யம் இறே

சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அவன் தனக்கும் ப்ராப்யம் இங்கே இறே நிலை நின்றது –
ஆகை இறே -நிலையார நின்றான் (கலியன் -6-9-)-என்னுமா போலே நின்றான் என்கிறது

சதிராவது
பூவாமல் காய்க்கும் மரங்கள் போலே
க்ரியா கேவலம் உத்தரம் -என்கை இறே
அதாவது
சலிப்பின்றி ஆண்டு (திருவாய் -3-7-)-என்கிறபடி
தங்கள் ஆசாரத்தாலேயும் ஸம்ஸார சம்பந்த நிகள நிவ்ருத்தி பண்ண வல்லராய் இருக்கை –

அந்தியம்போது இதுவாகும்
விளையாட்டுப் பராக்கிலே அஸ்தமித்ததும் அறிகிறாய் இல்லையீ

அழகனே காப்பிட வாராய்
அஸ்தமித்தது அறியாதாப் போலே உன் ஸுந்தர்ய மார்த்வ வாசியும் அறிகிறாய் இல்லை
உன்னுடைய ஸமுதாய சோபைக்கும் ஒப்பனை அழகுக்கும் மங்களா ஸாஸனம் பண்ணித்
திருவந்திக்காப்பு இட வேணும் காண் வாராய் என்கிறார் –

அந்தியம் போதால்
ராஜஸ குண ப்ராதான்யத்தால் அஹங்கார க்ரஸ்தருமாய் -பர ஸம்ருத்ய அசஹ பரருமாய் இருப்பார்
நடையாடும் காலம் என்று பீதராய் வாராய் என்கிறார் –

——–

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 –

பதவுரை

மதிள்–மதிளரணை யுடைய
திரு வெள்ளறை–திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றருளினவனே!
மேல்–(என்) மேல்
ஒன்றும்–துன்பமும்
நேசம் இலாதாய்–அன்பில்லாதவனே!
உன்னை கூவி–உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன்–நின்று விட்டேன்;
(அதனால்)
பசு எல்லாம்–பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து–கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற–முலை கடுப்பாலே கத்துகின்றன;
இப்போது இது சொல்வது சடக்கென காப்பிட வருவதற்காக
(நீ)
அந்தி போது–அந்தி வேளையில்
மன்றில்–நாற் சந்தியில்
நில்வேல்–நில்லாதே;
என் தன் சொல்லு–என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய்–(உனக்கு) நல்லதாகுங்கிடாய்:
நான் உன்னை காப்பு இட வாராய்.

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
கன்றுகள் எல்லாம் தொழுவத்தில் தம் தாம் நிலைகளில் புகுந்து நின்று கதறா நின்றன
பசுக்கள் எல்லாம் முலைக் கடுப்பாலே புறம்பே நின்று கதறா நின்றன
சுரப்பு மாறில் நீ உண்ணும் படி என்

நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி –
உன்னை அழைத்த இடத்தில் நீ வந்திலையே
நான் நின்றே விடும் அத்தனையோ –

நேசமேல் ஒன்றும் இலாதாய்
இவள் அழைத்த இடத்தில் செல்லக் கடவோம் அல்லோம் -என்று
என் அளவில் உனக்கு ஸ்நேஹ லேசமும் கூட இல்லாதாப் போலே காணும் –
நான் உன்னை நியமித்து வச வர்த்தியாக்க வேணும் என்னும் ஸ்நேஹம் ஒன்றுமே ஒழிய
மற்று ஒன்றும் இன்றிக்கே இருக்கிற படி –
மேல் ஒன்றாலும் என் மேல் ஒரு ஸ்நேஹம் இல்லாத என்றபடி

மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நால் சந்திகளிலே தனியே நில்லாதே கொள்ளாய்
உன்னோடே விளையாடுகிற பிள்ளைகள் எல்லாரும் அகம் புகுந்தார்கள் காண்
உன்னை அறியா விட்டால் என்னையும் அறியாமல் நிர்ப்பரனாய் இருக்க வேணுமோ

மதிள் திருவெள்ளறை நின்றாய்
இவனை மதிளுக்குள்ளே யாக்கி நிர் பரையாய் -கன்றுகள் விடவும் -கறப்பாரை நியமிக்கவும் –
தன்னுடைய க்ருஹ காரியத்தில் ஒருப்படவும் போலே காணும் இவள் தானும் நினைக்கிறதும் –
திரு வெள்ளறையில் திரு மதிள் தான் மங்களா ஸாஸன பரர்க்கு எல்லாம்
நெஞ்சிலே கை வைத்து உறங்கலாம் படி காணும் இருப்பது –

நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்
உனக்கும்
எனக்கும்
நீ உகந்த கன்றுகளுக்கும்
சுரப்பார்க்கும்
நன்றாய் காண் என் சொல் இருப்பது –

இவருடைய நான் -தான் இருப்பது –
சரம சதுர்தியிலே மூட்டி மீண்டு த்ருதீய அக்ஷரத்திலே வந்தானாய் இறே இருப்பது –

(சேஷத்வ ஞானம் அறிந்த இவர் நான் என்றாலும் அடியேன் என்றே அர்த்தம்
லுப்த சதுர்த்தி -ததர்த்த சதுர்த்தி -அகாரத்துக்கு மகாரம் அநந்யார்ஹ சேஷ பூதன் –
அத்யந்த பரதந்த்ரன் நமஸ் அர்த்தம்
பிரார்த்தனாயா சதுர்த்தி நாராயணாயா -கைங்கர்ய பிரார்த்தனை -)

உன்னை
பிரதம அக்ஷரத்திலே நின்று பர்வ க்ரமமாகச் சென்று -அஹம் -என்று மூட்டி -மீண்டு
பிரதம அக்ஷரத்திலே நிற்கையாலே –

(அ –ஆய உ ம -நாராயண –த்வயம் பூர்வ உத்தர வாக்கியம் நாராயணம் —
சரம ஸ்லோகம்–மாம் -அஹம் பர்யந்தம் -சொல்ல வேண்டுமே
பரத்வம் அறிந்து மீண்டும் -ரக்ஷகன் சேஷி – வந்து -என்றபடி )

நின்றாய் –
நின்ற உன்னைக் காப்பிட வாராய் –

உன்னை -என்றது
உனக்கு -என்றபடி
(உனக்கு என்றால் தானே ஆய அர்த்தம் வரும் )
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு என்றால் போலே —

மன்று –
நாற் சந்தி ஆதல்
பலரும் கூடிப் பிரியும் இடம் ஆதல்

நாற்சந்தி என்றது
வேத வாத ரதரான சாந்தஸ்தர் வர்த்திக்கும் இடத்தைக் காட்டுகிறது
(பூர்வ பாகம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு -காம்ய கர்மங்களில் ஆழ்ந்து இருப்பார்கள்
இவர்களை விட்டு சதுரர்கள் வாழும் வெள்ளறை உள்ளே வாராய் –
உன்னையே விரும்பி உனக்காகவே இருப்பார்கள் )

ரஜோ குண உத்ரிக்த்தர் வர்த்திக்கிற சந்த்யா காலத்தைச் சொல்லுகையாலே
பலரும் கூடிப் பிரியும் என்றத்தாலே இவருக்கும் இறை அறியாதாரைக் காட்டுகிறது –

கன்று என்று
விஹித பரராய் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தராய் இருப்பாரைக் காட்டுகிறது –

பசுக்கள் -என்று
அசக்தரை அழைத்து ரக்ஷித்தால் அல்லது துக்க நிவ்ருத்தி பிறவாதாரை –

———

நீ என்னை அழைக்கிறது
ஒப்பித்து ஒரு காப்பிட்டு
விளையாடப் புறப்படாமல்
மதிளுக்குள்ளே இட்டுப் பிடித்துக் கொள்ள அன்றோ -என்ன
நான் ஒன்றும் செய்யேன் இப்போது என்கிறாள் –

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3-

பதவுரை

ஆள்வாய்–என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும்–­மூன்று காலத்திலும்
வானவர்–தேவர்கள்
ஏத்தும்–ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை–(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய்–நிற்பவனே! (நீ)
செப்போது–பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள்–மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
(விளையாட்டாகச் செய்த)
சிறு சோறும்–மணற் சோற்றையும்
(சிறு)இல்லும்–மணல் வீட்டையும்
சிதைத்திட்டு–அழித்து விட்டு (நிற்க)
அப்போது–அக் காலத்தில்
நான்–நான்
உரப்ப–கோபித்துச் சொல்ல
(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்)
போய்–அப்பாற்போய்
அடிசிலும்–சோற்றையும்
உண்டிலை–உண்ணாமலிருந்திட்டாய்;
இப்போது–இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன்–நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்;
எம்பிரான் சாப்பிட வாராய்.

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய்
செப்போடே உபமானம் சொல்லும்படியான ஸ்தந பரிணாமங்களை யுடையராய்
அத்யந்தம் ம்ருது ஸ்வ பாவைகளாய் இருக்கிறவர்களுடைய
விளையாடு சிறு சோறுகளையும்
சிற்றிலான கொட்டங்களையும்
சிதைத்து –

அவர்களோடே கைப்பி ணைக்கு இட்டு விளையாடித் திரிய வேண்டாம் காண்
என்று நான் கோபித்து அழைக்க
அழைக்க போய் இப்போது அளவாக
அடிசிலும் உண்டிலையே

ஆள்வாய்
இப்படியோ என்னை ஆள இருக்கிற படி
ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-(பெரியாழ்வார் -1-7) -என்னக் கடவது இறே

முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
உரனால் ஒரு மூன்று போதும் -என்கிற படியே
த்ரி சந்தியும் ப்ரஹ்ம பாவனை தலையெடுத்த போது எல்லாம்
வந்து ஸ்தோத்ரம் செய்யக் கேட்டருளி
மனன சீலரான தேசிகர் அபிமானித்த திரு வெள்ளறையில் நித்ய வாஸம் செய்து நிற்கிறவனே

இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்
உன்னை அடிசிலூட்டு விடுமது ஒழிய நியமியேன் என்றவாறே

உன் வார்த்தை யன்றோ -என்று
பிடி கொடாமல் ஓடப் புகுந்தான்

ஓடின அளவிலும் இவர் விடாமல் செல்லுகிறார் இறே
இது என்ன தஸா விசேஷம் தான் –

எம்பிரான்
என்னை ஆள்வாய்
செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
நான் உரப்பப்
போய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது அடிசிலும் உண்டிலை
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
காப்பிட வாராய்-
என்று அந்வயம்

————-

கீழே ஓடாதே வாராய் என்ன
ஓடிப் போய் அவர்கள் கண்ணிலே மணலைத் தூவினான் என்று முறைப்பட
பொறாமை தோன்ற (பொறுக்க முடியாமல் ) வார்த்தை சொல்லுகிறாள் –

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4- – –

இவரார் முறைப்படுகின்றார்–பாட பேதம்
வண்ணமே-ஏகாரம் -இவரால் -ஆல் -அசைச் சொற்கள்
காலினால்–காலால் என்றவாறு –இன் -சரிகை

பதவுரை

கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!;-புண்டரீகாக்ஷன் தானே இவன்
கண்டாரோடே–கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய்–தீம்பு செய்பவனே!
வண்ணம்–திருமேனி நிறம்
வேலை அது–கடலின் நிறத்தை
ஒப்பாய்–ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே–உதாரனே!
எண் அரு–எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர்–இப் பிள்ளைகள்
வந்திட்டு–வந்திருந்து
மணல் கொடு–மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி–கண்ணில் தூவி விட்டு
(அதனோடு நில்லாமல்)
காலினால் பாய்ந்தனை–காலினாலும் உதைத்தாய்;
என்று என்று–என்று பலதரஞ்சொல்லி
(நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார்–முறையிடா நின்றார்கள்;
(ஆதலால் அங்கே போவதை விட்டு)
காப்பு இட வாராய்.

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு
விளையாடுகிற பிள்ளைகள் -எங்கள் கண்ணிலே மணலைத் தூவினால் என்றும் –
எங்களை காலாலே பாய்ந்தான் -என்றும்
பரிகணிக்க ஒண்ணாத பிள்ளைகள் எல்லாரும் வந்து முறைப்படா நின்றார்கள் என்று –
இவனைப் பிடித்து இறுக்கி அவர்களை பார்த்து இன்னாதாகிறாள் –

இவரார் முறைப்படுகின்றார்-
அதாவது
நீங்கள் பலர் -இவன் ஒருத்தன்
நீங்களோ இன்னம் முறைப்படு கிறிகோள் -என்னும் படியாக
என் கண்ணிலே மணலைத் தூவி -காலாலே பாய்ந்தார்கள் -என்று அழுமே இவன்
அது இறே அவள் மெய்யாகக் கொள்ளுகிறது —

கண்ணனே
அவர்கள் கண்ணிலே நில்லாதே இங்கே வாராய்
அன்றியிலே
எல்லாருக்கும் உன்னைத் தீம்பு ஏறும்படி எளியனாய் நில்லா நின்றாய் -என்னவுமாம் –

வெள்ளறை நின்றாய்
அது தன்னிலும் காட்டில் ஒரு ஸுலப்யமே இது –

கண்டாரோடே தீமை செய்வாய்
பொருந்தாரோடே தீமைகள் செய்யா நின்றாய் –

வண்ணமே வேலையது ஒப்பாய்
வேலை போன்ற நிறத்தை உடையவனே
தீம்புகள் செய்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனே

வள்ளலே காப்பிட வாராய்
இவ் வடிவு அழகை எனக்கு உபகரித்தவனே –

இத்தால்
வைதமான ஞானத்தை இந்திரிய பாரவஸ்யத்தாலே மறைத்தும்
அஸூத்த லீலா ரஸ ஸ்ரத்தையாலே சிலரை அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான
சாதனத்தாலே-திருவடியாலே – சிலரை நிஷேதித்தும் செய்தான் என்று அவன் மேலே பலராக தோஷத்தை வைப்பார்கள் இறே
சம்சாரிகள் தங்கள் தோஷம் அறியாமையால் –

சாதன சாத்யங்களில் பொருந்தாதாரைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவர்களுக்கு சன்னிஹிதனாகை இறே தீம்பு ஆவது –

—————

இப் பாட்டாலும் அது தன்னையே விஸ்தரிக்கிறது –

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 – –

பதவுரை

இ ஊரில்–(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார்–தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள்–சிறுவர்கள்
பல் ஆயிரவர்–அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம்–அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி–உன் மேலல்லாமல்
(வேறொருவர் மேலும்)
போகாது–ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள்–நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்! ;
ஞானம் சுடரே–ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி–உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி–சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி–மங்களாசாஸநஞ்செய்து
சொப்பட–நன்றாக
காப்பு இட வாராய்.

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது
இவ்வூரில் பஞ்ச லக்ஷம் குடியில் பிள்ளைகள் எல்லாரும் தம் தாம் செய்த தீமைகளை உன் மேலே வையா நின்றார்கள் –
அவர்கள் அபிப்ராயத்தாலும்
உன் வியாபாரங்களாலும்
சத்யம் போலே கருத்து அறியாதாருக்கு உன் மேலே தோன்றும் இறே

எம்பிரான் இங்கே வாராய்
இப்படிச் சொல்லுவார் இடங்களிலே நில்லாதே
அவர்கள் சொலவும் நினைவும் பொறாதார் இடத்தே நீ வாராய்

உதங்க மகரிஷி -இவ் வர்த்தத்தை ப்ரஸ்துதமாக்க –
மகரிஷி போந்த கார்யம் என் போகலாகாதோ -என்றான் இறே

த்ருதராஷ்ட்ராதிகளும் –
ஜானாமி தர்மம் ந ச மே ப்ரவ்ருத்திர் ஜாநாமி அதர்மம் ந ச மே நிவ்ருத்திர்
கே நாபி தேவேந ஹ்ருதி ஸ்த்தி தேந யதா நியுக்தோஸ்மி ததா கரோமி -என்று
அறிவுக்குத் தானாகவும் –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு அவனாகவும் –
விபரீத பிரதிபத்தி பண்ணிச் சொன்னார்கள் இறே சஞ்சயனைப் பார்த்து
சஞ்சயனும் -மாயாம் சேவே பத்ரம் தே -என்றான் இறே

ஆழ்வார்களும் ஓரோ தசா விசேஷங்களில் வந்த ஆற்றாமையால்
இன்னும் நலிவான் எண்ணுகின்றாய் -( திருவாய் 7-1)
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் (கலியன்-11-8)
சீற்றம் உள ஆகிலும் சொல்லுவன்
தரு துயரம் தடாயேல்
இவை என்று இவை அறிவனேலும் –என்னால் அடைப்பு நீக்கல் ஒண்ணாது -)பெரிய திருவந்தாதி )
என்று இவை முதலாக அருளிச் செய்த பாசுரங்களைத் தம் தாமுக்குத் தோன்றின நினைவுகளால் சொல்லாமல்
ஒரு நிபுணாச்சார்யன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்து பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டான வசனங்களையும்
பிரார்த்தனா பூர்வகமாகக் கேட்டு விளங்க வேண்டி இறே இருப்பது –

ஞான அநுஷ்டானங்கள் கை வந்ததாம் போதைக்கு
அனுஷ்டானம் உண்டானபடி வந்ததே இல்லை யாகிலும்
அதுக்கு அநு தபித்து
ஞானத்தில் பழுதற நிற்கப் பெறிலும் நன்று இறே வர்த்தமானர்க்கு –

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே
கண்ணன் விண்ணூரான அவ்வூரிலே பிள்ளைகள் தீமைகள் செய்யாதாப் போலே இறே
திரு வெள்ளறையிலே தேசிகரும்
1-நல்லவர்களாய் –
2-தாங்களும் பொல்லாங்கு செய்யாமல் –
3-பிராமாதிகமாக புகுந்தது உண்டாகிலும் அவன் மேல் வையாமல்
4-அவன் அவதாராதிகளிலே செய்த வியாபாரங்களில் ந்யூநாதிரேகங்கள் உண்டாய்த் தோற்றிற்றே யாகிலும்
(ந்யூநாதிரேகங்கள்-ந்யூநம் குறைவு அதிரேகங்கள்-நிறைவு )
அவற்றையும் செப்பம் செய்து –
லோக உபகாரம் ஆக்க வல்ல ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையவர்களைக் குறித்து இறே –
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்-என்றது –

1-செந்தாமரை கண்ணற்க்கும் (புண்டரீகாக்ஷ பெருமாள் தானே இங்கு )
2-நித்ய விபூதியில் உள்ளாருக்கும்
3-தங்களுக்கும்
4-இந்த விபூதியில் உள்ளாருக்கும்
அதிகார அனுகுணமாக நல்லவர்கள் –

ஞானச் சுடரே உன் மேனி
ஞானமும் -ஞான ஆஸ்ரயமான ஸ்வரூபமும் -பிரகாசிக்கும் படியான விக்ரஹத்தை உடையவனே –
ஞானச் சுடர் ஏய்ந்து இருக்கிற உன்னுடைய திருமேனியை
ஞான ஆஸ்ரயமோ என்று விகல்பிக்கலாம் படி இறே திரு மேனி தான் இருப்பது

சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி
சொல் நிறையும்படி நின்று ஏத்தி
ஸர்வ ஸப்த வாஸ்யன் என்று ஏத்தி
கவிக்கு நிறை பொருளாய் நின்றானை என்கிறபடி சொல்லாருவது பொருள் நிறைந்த இடத்தே இறே

அது கூடுவது –
வியாபக த்வய வ்யாவ்ருத்தமான ஸமாஸ த்வயத்திலும் –
வாக்ய த்வயத்திலும் இறே

(மூன்று வியாபக மந்த்ரங்கள்
வியாபக த்வய-விஷ்ணு வாஸூ தேவ வியாவருத்தம் -நாராயண
தத் புருஷ ஸமாஸம் -அவன் இருப்பிடம் மேன்மை
பஹு வரீஹி ஸமாசம் -ஸுலப்யம்
வாக்ய த்வயத்திலும்-முன் வாக்கியம் அவனே உபாயம் பின் வாக்கியம் உபேயம் )

அது தான் நிறைவதும் –
கீழ்ச் சொன்ன குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனான கண்ணன் நின்ற
திரு வெள்ளறையிலே இறே

ஆகை இறே
நல்லார்கள் வெள்ளறை -என்றதும்

இத்தனை வேணுமோ தான் காப்பிடும் போதைக்கு
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -என்கிறபடி –
பல்லாண்டு பல்லாண்டு என்று ஏத்தி வாழ்த்தி –

சொப்படக் காப்பிட வாராய்
சொப்பட -என்றது நன்றாக -என்றபடி –
காப்பு என்றது –சேவடி செவ்வி திருக்காப்பு -என்றபடி –

———-

ஸ்வ தோஷத்தைப் பர தோஷம் ஆக்குவார் இடத்திலே நில்லாதே
இங்கே வா என்றார் கீழே
அவன் வாராமையாலே த்வரிப்பித்து அழைக்கிறார் இதில் –

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 – –

பதவுரை

மஞ்சு தவழ்–மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம்–ரத்ந மயமான வீடுகளையும்
மதிள்–மதிளையுமுடைய
திருவெள்ளறை(யில்) நின்றாய்! ;
கஞ்சன்–‘கம்ஸனானவன்
நின் மேல்–உன் மேலே,
கறுக்கொண்டு–கோபங்கொண்டு
கரு நிறம்–கரு நிறத்தையும்
செம் மயிர்–செம் பட்ட மயிரையுமுடைய
பேயை–பூதனையை
வஞ்சிப்பதற்கு–(உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான்–அனுப்பினான்,
என்பது–என்பதான
ஓர் வார்த்தையும்–ஒரு சொல்லும்
உண்டு–கேட்டிருப்பதுண்டு,
(ஆதலால்)
நீ அங்கு நிற்க–நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன்–நான் அஞ்சா நின்றேன்;
அழகனே! காப்பு இட வாராய்-

கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல்
அசரீரி வாக்கியம் முதலானவற்றைக் கேட்ட மாத்திரத்திலே சீறின அளவே அன்றிக்கே அத்யந்தம் வைர ஹ்ருதயனாய்
மக்கள் அறுவர் அளவிலும் -மறம் மாறாமல் -சாவாமல் இழிந்த வழி கண்டும் -சாவாமல் சிக்கென பிறந்து –
காவலோடும் ஸ்வ சாமர்த்யத்தோடும் திருவாய்ப்பாடியிலே புக்கு வளர்க்கிறான் -என்று கேட்டு இருக்கச் செய்தேயும்
பூதனையாலே சாதிப்பானாக இறே கம்சன் நினைத்து விட்டது –
ஆகையால் -நின் மேல் கறுக் கொண்டு -என்ன வேண்டிற்று –

ஆகை இறே
கரு நிற செம் மயிர் பேயை-வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு-
இருள் திரண்டு ஒரு வடிவு ஆனால் போலே -கருகிய நிறத்தை உடையவளாய் –
அக்னி ஜ்வாலை மிகவும் கொழுந்து விடக் கிளம்பினால் போலே இருப்பதான மயிரையும் உடையளாக இருக்கிற பேய்ச்சியை
நீ நேர் கொடு வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
நேரே சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது –
நீ க்ருத்ரிம ரூபத்தால் சென்று சாதிக்க வேணும் காண் -என்று சொன்னான் என்கிற வார்த்தையும் உண்டு காண் பிறக்கிறது –

இவ் வார்த்தை தான்
ஸ்ரீ நந்தகோபர் ஸ்ரீ வஸூ தேவர் பக்கலிலே சென்று கேட்டு வந்து சொன்னார் ஆதல்
மதுரையில் பரவை வழக்கம்( செவி வழிச் செய்தி) இங்கே பிறந்தது ஆதல்
சாஷாத்காரம் ஆதல் –

மஞ்சு தவழ் மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
மேகங்கள் ஆனவை -நாம் திருமலையில் -பெரிய இளைப்புடன் பெரிய ஏற்றம் ஏறுமா போலே –
தவழ்ந்து ஏறும்படியான உயர்த்தியை உடைத்தாய் –
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால் (பெரிய திருமொழி 4-10)–என்கிறபடியே
உள் எல்லாம் ரத்நாதிகளாலே அலங்க்ருதமாய் இருக்கிற மாடங்களையும் உடையதாய் –
அதுக்குத் தகுதியான திரு மதிள்களாலே சூழப்பட்டு இருக்கிற திரு வெள்ளறையிலே -நிலையார நின்றவனே –

அஞ்சுவன் நீ அங்கு நிற்க
குணத்திலே தோஷ தர்சனம் பண்ணுவார் இடத்திலே நிற்கிறதுக்கும்
பூதனைக்கு அஞ்சுமா போலே காணும் இவர் அஞ்சுகிற படி –

அழகனே காப்பிட வாராய்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்
சாஷான் மன்மத மன்மத -என்று சொல்லுகிற
உன்னுடைய சவுந்தர்யத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் த்வேஷம் பண்ணுவார் உண்டு போலே காணும் என்னுதல் –
த்ருஷ்டி தோஷ பரிகார அர்த்தமாகக் காப்பிட வாராய் என்கிறார் ஆதல்

மஞ்சு என்கிற இத்தால்
ஆந்தராளிகர் ஆனவர்கள் வந்து சேரும்படியான வ்யவசாய ப்ரஸித்தியையும் –

மணி -என்கையாலே
அக வாயிலே ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே பிரகாசிக்கிற ஞான விசேஷங்களையும்
அவற்றை நோக்குகின்ற விவசாயத்தையும் காட்டுகிறது –

————

பிறந்த வார்த்தை மெய்யாகவும் பெற்றது என்கிறார் –

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7 – –

பதவுரை

கள்ளம்–வஞ்சனை யுடைய
சகடும்–சகடாஸுரனையும்
மருதும்–யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய–(வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே–பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ-நீ
பேயை–பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை–தாயாகவே நினைத்து -முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு–உள்ள படி
ஒன்றும் அறியேன்–ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;
இது–இப்போது
பள்ளி கொள் போது ஆகும்–படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!-அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்.

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
பூதனை யுடைய முலையைப் பிடித்து உண்ட பிள்ளை அரசே
பிள்ளைத் தனம் குன்றாமையாலே பிள்ளை அரசே என்கிறார் –
க்ருத்ரிமான சகடாசூரன் முதலான பிரதிகூலரைக் கலங்கி அழியும் படி நிரசித்த பின்னை –

உன்னை உள்ளபடியே அறிகிறேன் இல்லை
அதாவது –
பருவத்துக்குத் தகாதவை செய்தபடியால் -மேலும் ஏது விளையும் என்று அறிகிறேன் இல்லை –
வடதள ஸாயி யுடைய அகடிதம் தன்னை அறிந்தாலும் உன்னை உள்ளவாறு அறிகிறிலேன் –
அதாவது –
எல்லா அவஸ்தையிலும் -ஆஸ்ரித ரக்ஷணம் தப்பாமை பாரீர் –

இத்தால் ஆஸ்ரித விரோதி நிரசனமோ
அவர்களுடைய அபீஷ்ட பல பிரதானமோ
உன்னுடைய ஸத் பாவ ஹேது -என்று அறிகிறிலேன் –

ஒளி உடை வெள்ளறை நின்றாய்-பரமனே
அது உள்ளபடியே பிரகாசிக்கும்படியாக இறே
அதி பிரகாசமான திரு வெள்ளறையிலே நின்று அருளிற்றும் –
இப்படி நின்று அருளின ஸர்வ ஸ்மாத் பரமனே

பள்ளி கொள் போது இதுவாகும்
நான் அழைக்கிற இந்தக் காலம் கண் வளரப் ப்ராப்தமான காலம் காண்

காப்பிட வாராய்

பள்ளி கொள்ளுகையாவது
லீலா ரசத்தில் நிர்ப்பரனாகை இறே

பேயை பிடித்து முலை உண்ட பிள்ளை அரசே
ஒளி உடை வெள்ளறை நின்றாய்
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பின்னை
உன்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்
என்று அந்வயம் –

————

பூத நாதிகளை நிரசித்த அளவேயோ
குவாலாயா பீடத்தையும் அநாயாசேன நிரசித்தவன் அன்றோ -நீ என்கிறார் –

இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8-

பதவுரை

(உன் குண சேஷ்டிதங்களால்)
இன்பம் அதனை–பரமாநந்தத்தை
உயர்த்தாய்–(எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே!
தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ
இமையவர்க்கு-தேவர்க்கு
என்றும்–எந்நாளும்
அரியாய்–அருமையானவனே!
கும்பம்–மஸ்தகத்தையுடைய
களிறு–குவலயாபீடத்தை
அட்ட–கொன்ற
கோவே–ஸ்வாமியே!
கொடு–கொடுமை தங்கிய
கஞ்சன்–கம்ஸனுடைய
நெஞ்சினில்–மநஸ்ஸிலே
கூற்றே–யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;
செல்லத்தினால் வளர்–செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்–குழந்தாய்!
அங்கு–நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்–(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல
கபாலி காண்–துர்க்கையாகும்;
(ஆகையால் அங்கு நில்லாமல்)
கடிது ஓடி–மிகவும் விரைந்தோடி
காப்பு இட வாராய்.

இன்பம் அதனை உயர்த்தாய்
புருஷார்த்தமாக நிலை நின்ற இன்பத்துக்கு மேலே
உன்னுடைய அவதார வியாபாரங்களில் உண்டான
சீலாதி குணங்களை எனக்குப் பிரகாசிப்பித்து
என்னைக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ணுவித்துக் கொள்ளுகிறவனே

இமையவர்க்கு என்றும் அரியாய்
இவ் வெளிமை இந்நிலத்தில் வந்தால் நித்ய ஸூரிகளுக்கும் அரிதானவனே என்னுதல் –
அன்றிக்கே
இவ் வெளிமை இந்நிலத்தில் தேவர்களுக்கு பிரகாசிப்பியாதவனே என்னுதல்

கும்பக் களிறு அட்ட கோவே
கும்ப மிகு மத யானைப் பாகனோடும் குலைந்து விழ நிரசித்த ஸுர்யத்தை உடையவனே
கும்பம் -மஸ்தகம் –

கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
கஞ்சன் தன்னுடைய நெஞ்சில் காட்டில் தனக்குக் கொடியதான கூற்று இல்லை இறே
ஆயிருக்க அவனுக்கு அவன் நெஞ்சிலும் காட்டில் கொடியதான கூற்றாய் அந்நினைவை நிரசித்தவனே –

செம் பொன் மதிள் வெள்ளறையாய்
மங்களா ஸாஸன பரர்க்கு ஸ்ப்ருஹாவஹமான மதிளாலே சூழப்பட்ட
திரு வெள்ளறையை நிரூபகமாக யுடையவனே

செல்வத்தினால் வளர் பிள்ளாய்
சக்ரவர்த்தி திரு மகனைப் போலே பலருக்கும் நியாம்யனாய் வளருகை அன்றிக்கே
தந்தக் களிறு போலே தானே விளையாடும்படி நந்தன் மகனான செலவை யுடையவன் –

கம்பக் கபாலி காண்
கண்ட போதே அனுகூலருக்கும் நடுக்கத்தை விளைப்பிக்க வல்ல க்ரூர விஷத்தையும் –
கபாலத்தையும் யுடையவன் சஞ்சரிக்கிற காலம் காண் –

அங்கு கடிதோடிக் காப்பிட வாராய்
அவ் விடத்திலே நில்லாதே கடுக நடை இட்டு
நான் காப்பிடும்படி வாராய் –

———–

கீழே கம்பக் கபாலி காண் -என்ற வாராமையாலே –
அதிலும் கொடிது காண் நாற் சந்தி -வாராய் என்கிறார்
சக்ரவர்த்தி திருமகன் பக்வானான பின்பு இறே மாத்ரு வசன பரிபாலனம் செய்தது
நீ பிறந்த அன்றே மாத்ரு வசன பரிபாலனம் செய்தவன் அல்லையோ என்கிறார் –

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-

பதவுரை

இருக்கொடு–(புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர்–தீர்த்தத்தை
சங்கில்–சங்கத்திலே
கொண்டிட்டு–கொணர்ந்து
எழில்–விலக்ஷணரான
மறையோர்–ப்ராஹ்மணர்
(உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
நம்பி–தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று–நாற்சந்தியிலே நின்று
தருக்கேல்–செருக்கித் திரியாதே;
சில நாள்–சில காலம்
தாய் சொல்லு–தாய் வார்த்தையை
கொள்ளாய்–கேட்பாயாக;
தேசு உடை–தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! ;
இன்று–இப்போது
நான்–நான்
திரு காப்பு–அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த–உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு–உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன்–ஏற்றுவேன்;
(இதைக்காண)
வாராய்–கடுக வருவாயாக.

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
ருக்கு முதலான வேதங்களோடே வேதாந்திகளான ப்ராஹ்மண உத்தமர் உன்னை ரக்ஷை விடுவதாக –
சங்கிலே ஸுத்த ஜலத்தையும் கொண்டு வந்து நில்லா நின்றார்கள் –
உங்கள் தமப்பனார் வந்தால் ஆசார உபசாரம் செய்து -கோ தானம் முதலியவைகளையும் செய்து –
அவர்களைக் கொண்டு ரக்ஷை இடுவித்துக் காண் போருவார் –
நீயும் அவர்கள் ரக்ஷை இடும்படி வாராய் என்ன

தருக்கேல் நம்பி –
அதுவும் கேளாமல் கர்வித்து ஓடப் புகுந்தான் என்னுதல்
உத்தர ப்ரத் யுத்தம் சொல்லி ஓடப் புகுந்தான் -என்னுதல் –

அவன் சொன்ன உத்தரம் தான் என் என்னில் –
அவர்கள் தங்கள் காரியத்துக்கு அன்றோ வந்தார்கள் –
என் கார்யத்துக்கோ வந்தார்கள் என்றால் போலே
சில உத்தரம் சொல்லவும் கூடும் இறே

ஐயரை ரக்ஷை இட்டு கோ தானம் கொண்டு போகிடாய் –
அவர்கள் ஸ்வ ரக்ஷண சா பேஷராய் யன்றோ வந்தார்கள்
என்றால் போலே சில உத்தரம் சொல்லவும் கூடும் இறே

சக்கரவர்த்தி திருமகனைப் போலே குணவானாய் —
அவர்களைச் சென்று நமஸ்கரித்து –
அவர்கள் ரக்ஷை இட –
அந்த ரக்ஷை தனக்கு ரக்ஷணம் என்று நினைத்து இருக்கிறான் அன்றே –

நம்பி
கார்வோத்தரன் ஆனவன் என்னுதல்
அந்த ரக்ஷையாலே நிரபேஷன் ஆனவன் என்னுதல்

சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
இன்னமும் சில நாள் மாத்ரு வசன பரிபாலநம் செய்ய வேணும் காண்
என்னை இப்படி நிர்பந்தித்து நியமிக்கிறது முன்பு அழைத்தால் போலேயோ என்ன

திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உனக்கு தேஜஸ்ஸூ மிகவும் உண்டாகும்படி நான் உன்னைத் திருக் காப்புச் சாத்த
அழகியதாக ரக்ஷை இட திரு வெள்ளறையிலே நித்ய வாஸம் செய்கிறவனே –

உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் –
திருவந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி எடுப்பது
நிரதிசய போக்யமான திருமேனி காண்கை புருஷார்த்தமாக இறே
அது இறே அவனுக்கு ரக்ஷை ஆவது

ஒளி கொள்ளும் அந்தி விளக்கு இன்று ஏற்றுகிறேன் வாராய் –
ரத்நாதிகளுடைய தேஜஸ்ஸை அதிக்ரமித்து இறே இவன் -(தீப -)தேஜஸ்ஸூ இருப்பது
இன்று -என்றது
இப்போது என்றபடி –

————–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10 –

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த–ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை–யசோதைப் பிராட்டி
மகன் தன்னை–தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட–ரக்ஷை யிட அழைத்த
மாற்றம்–வார்த்தையை
போது அமர்–தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து–செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர்–ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை–திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி-,
(எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே)
வேதப் பயன்–வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல–அறிய வல்ல
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–பாமாலையினுடைய
பாதம் பயன்–ஓரடி கற்றதனாலாகிய பயனை-நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை –
கொள்ள வல்ல–அடைய வல்ல
பக்தர் உள்ளார்–பக்தராக உள்ளவரது
வினை–வினைகளெல்லாம்
போம்–கழிந்து விடும்.

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
தனக்குப் பிறந்தகமான தாமரைப் பூவிலே அமரும்படியான செல்வத்தை உடையவள்
பூவில் பரிமளமே வடிவு கொண்டு எழுந்தால் போலே இறே இவளுடைய மார்த்வ ரூபம் தான் இருப்பது –
அதாவது
அவன் இவளுக்கு ஸர்வ கந்த -ஸர்வ ரஸமும் ஆனால் போலே –
இவளும் அவனுக்கு அப்படியேயாய் இருக்கை –

இவளுடைய செல்வு இறே அவனுக்கு சர்வாதிகத்வத்தாலும் உண்டான செல்வாயிற்றும்
இச் செல்வம் கொழுந்து விடுவதும் திரு மார்பில் சுவட்டிலே இறே
அந்த சுவடு அறிந்த பின்பு இறே பிறந்த அகத்தை மறந்தது –
இனி இவளும் நினைப்பது பிராட்டி ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்று இறே

இக் கொழுந்துக்கு உபக்நம் ஆவான் அவன் இறே
ஆகை இறே –கொழுந்து புணர் திரு வெள்ளறையானை-என்றது
கொழுந்து -தலைவி
இவளுடைய ப்ராதான்யம் தோன்றும் இறே -திரு வெள்ளறையான் -என்ற போதே –

மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
மாது –
பருவத்தால் வந்த இளமையில் பிரதான்யம் –

மாந்தர்க்கு உயருகை யாவது –
தம் தம்முடைய பர்த்தாக்களுக்கு அபிமதைகளாய்
வச வர்த்திகளாய் இருக்கை இறே

இவளுக்கு உயர்த்தியாவது –
பர்த்ரு ஸ்நேஹத்தில் காட்டிலும் புத்ர ஸ்நேஹம் மிக்கு இருக்கை
ஆனால் இறே பார்த்தாவுக்கு வச வர்த்தி யாவது –
யதா யதா ஹி கௌசல்யா தாஸீ வத்ய -இத்யாதி வத்

அசோதை மகன் -என்கையாலே
ஸ்ரீ நந்தகோபரும் ஸ்ரீ வஸூ தேவரைப் போலேயோ தான்
இவள் தான் -தன் மகன் -என்று அபிமானித்தால் இறே
அவன் தான் நந்த மகன் ஆவதுவும் நம்பி ஆவதுவும் –

மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றத்தை
பல காலும் அழைத்துக் காப்பிட்டு
தன்னுடைய ஸ்நேஹம் எல்லாம் தோன்றும்படி வாழ்த்தின பிரகாரத்தை –

மாற்றம் -சொல்லு

வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
வேதப் பயன் கொள்ள வல்லார் இவர் போலே காணும் –
பயனாவது -மங்களா சாசனம் செய்கை இறே
சாந்தி ஸ்வஸ்திகள் வேத ப்ரயோஜனமாய் இருக்கச் செய்தேயும் –
சாதாரண அசாதாரண விபாக நிரபேஷமாகவும் வரும் இறே
விஷ்ணு சித்தரான இவர் கொள்ளும் பிரயோஜனம் வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது –

இந்த விஷ்ணு ஸப்தம்
வ்யாபகமான பிரதம ரஹஸ்யத்திலே ப்ரணவ நமஸ்ஸூக்களோடே கூடி இருக்கும் இறே
ஆகையால் இறே
விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்றது –

(பாஞ்ச ராத்ர ஆகமம் -ச கண்ட நமஸ் -அர்த்தம் பிரதம ரஹஸ்யத்துக்கு மட்டுமே சொல்லும்
நான் எனக்கு அல்லன்
அத்யந்த சேஷி -பிரணவம் –நாம் சேஷத்வம் இத்தால் அறிகிறோம்
நம -பாரதந்தர்யம் -அவன் ஸ்வதந்த்ரன்
அநந்யார்ஹ சேஷத்வம் –
பரார்த்தமாக கைங்கர்யம் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
பர கத அதிசய ஆதேய இச்சையா இத்யாதி
ரிஷிகள் சித்தத்தில் ஸ்வார்த்ததையுடன் சேர்ந்து இருக்கும் –
வேதப்பயன் கொள்ள மாட்டார்கள்
ஸ்வார்த்தத்தை ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் கொண்டவர் இவர் மட்டுமே )

சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல
அருளிச் செய்த மாலையாவது -சென்னி ஓங்கு அளவாக

இதில் பாதப் பயன் ஆவது –
திருப் பல்லாண்டில் முதல் பாட்டில் முதல் அடியில் பிரயோஜனம்
பல்லாண்டு செய்வதே தானே அந்திக்காப்பு
நிகமன பிரயோஜனமும் இது தான் இறே

பத்தர் உள்ளார் வினை போமே
இப் பிரயோஜனத்தை இவர் அபிமான அந்தர் கதமான பக்தியோடு கொள்ள வல்லார் உண்டாகில்
இவரைப் போல் திருப் பல்லாண்டு பாடி அடிமை செய்யப் பெற்றிலோம் -என்ற வினைகள் எல்லாம்
வாசனையோடு போம் என்று அருளிச் செய்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: