ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-7—ஆநிரை மேய்க்க நீ போதி–

பிரவேசம்
பகவச் சரணார்த்திகளையும் -கேவலர்களையும் -ஐஸ்வர்யார்த்தி களையும் அழைத்து –
அவர்கள் இசைந்து வர –
தம்மோடே ஸூ மனாக்களை சிரஸா வஹீக்கை இறே

திருப்பல்லாண்டு தொடக்கமாக சங்கதி இங்கு

கூழாட் பட்டு உள்ளார் -காக சமரரான உள்ளவர்களையும் கூப்பிட்டு
நீர்மை மேன்மை காட்டிப் பயப்படுத்தி
மேலே மேலே மங்களா சாசனம் பண்ணும் படி -ஓக்க உரைக்க -தம்மோடு கூட்டிக் கொண்டு
இவை கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார் கீழ்

இனி இதில்
திரு மஞ்சனம் பண்ணி
திருக் குழல் பேணி
திருக்கோலையும் கொடுத்து
இனி
அவர்கள் இசைந்து வர –
தம்மோடே ஸூ மனாக்களை சிரஸா வஹீக்கை இறே
அவ்வர்த்தத்தை -யசோதா பிராட்டி பூ சூட்ட வாராய் -என்று அழைத்த பாசுரத்தை
வியாஜ்யமாக்கி அருளிச் செய்கிறார் –

————–

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

பதவுரை

தேனில்–தேனைக் காட்டிலும்
இனிய–போக்யனாயிருக்கிற
பிரானே–ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம்–பகைவரெல்லாரும்
சிரிப்ப–பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி–(கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து
(பின்பு)
உன்–உன்னுடைய
கரிய–ஸ்யாமமான
திருமேனி–அழகிய திருமேனி
வாட–வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து–காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை–பசுக்களின் திரளை
மேய்க்க–மேய்ப்பதற்கு
நீ போதி–ஸூ குமாரமான நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது–(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை
சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து
அறியாய்–அறிகிறாயில்லை;
(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)
செண்பகம் பூ–செண்பகப் பூவை–காலைப் பூவை
சூட்ட–(நான்) சூட்டும்படி
வாராய்–வருவாயாக

ஆநிரை மேய்க்க நீ போதி
உன்னையும் பாராதே
என்னையும் பாராதே –
கையிலே காக்கை தந்த கோலைக் கொண்டு பசு மேய்க்கப் போகா நின்றாய் –

அரு மருந்து ஆவது அறியாய்
பெறுவதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறாய் இல்லை –
இவன் ஆரா வமுது இறே
இது கடல் படா அமுது இறே
ஆகை இறே அரு மருந்து ஆயிற்று –

மருந்து -அம்ருதம்
இம் மருந்து தான்
சந்நிதி பண்ணின போது போக்யமுமாய்
நீங்கின போது சத்தா நாஸ பரிஹாரமுமாய் இறே இருப்பது –

கானகம் எல்லாம் திரிந்து
பசுக்கள் பச்சை கண்ட இடம் எங்கும் திரிந்து மேய்க்கையாலே
இவனுக்கும் வழியே போய் வழியே வருவதாய் இராதே

உன் கரிய திருமேனி வாட
காட்டில் உண்டான இடம் எங்கும் திரிகையாலே பசுக்களுக்கும் சிரமஹரமான திருமேனி வாடும் காண்

பானையில் பாலைப் பருகி -பற்றாதார் எல்லாம் சிரிப்பத்-
காயாய் பாலைப் பருகுகையாலே இவளுக்கு வயிறு பிடியாய்
பானையோடே பருகுகையாலே

உன்னை யுகவாதார்-
உன் பக்கல் நெஞ்சு பற்றாதார்
உன் பக்கல் சிறிது உண்டான குணங்களும் ஹாஸ ஹேதுவாய் விடும் இறே அவர்களுக்கு –

தேனில் இனிய பிரானே
தேன் பாலைப் பருகிற்றோ
தேனிலும் இனிதாய் இருக்கிற அம்ருதம் பாலைப் பருகிற்றோ
இவை இரண்டும் தன்னைத் தானே உபகரிக்க மாட்டாதே –
தன்னைத் தானே உபகரிக்கும் தேனும் அம்ருதமும் போலே இறே
இவன் தன்னைத் தானே உபகரிக்கும் படி –

செண்பகப் பூ சூட்ட வாராய்
கால புஷ்பம் செவ்வி குன்றாமல் சாத்த வாராய்
இது தான் சிரஸா வஹியாத போது ஸுமநஸ்யம் வாடும் காண் –

தேனில் இனிய பிரானே -பற்றாதார் எல்லாம் சிரிப்ப -பானையில் பாலைப் பருகி
உன் கரிய திருமேனி வாட -கானகம் எல்லாம் திரிந்து -ஆநிரை மேய்க்க நீ போதி
அரு மருந்து ஆவது அறியாய் -செண்பக பூ சூட்ட வாராய் –
என்று அந்வயம்–

———-

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –

பதவுரை

கண்கள்–கண்களானவை
உன்னை கண்டால்–உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்–கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால்–பார்த்தால் (அதை)
ஒக்கும்–ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்–வடிவை யுடையவனே!
உலகு ஏழும்–ஏழுலகங்களும்
உண்டாக–ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய்–திருவவதரித்தவனே!
திரு உடையாள்–(உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–நாயகனே!
திரு அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்–வாஸனை
மருவி கமழ்கின்ற–நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ–மல்லிகைப் பூவை
சூட்ட வாராய்-.

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
நீர் கொண்டு எழுந்து கருகின மேகங்களைக் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும்
உன்னைக் கண்டால் நீர் கொண்டு எழுந்த மேகங்கள் ஒக்கும்

கண்கள் உரு உடையாய்
கண்கள் உடையாய்
உரு உடையாய்
உபமான ரஹிதமான திருக் கண்களையும்
அப்படிப்பட்ட சவுந்தர்யத்தையும் உடையவனே –

உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
உன்னாலே ஸ்ருஜ்யமான லோகங்கள் சங்கல்பத்திலே கிடந்தும் நசியாமல்
கந்த அநு வர்த்திகளாய் உஜ்ஜீவிக்கும் படியாக இறே வந்து திரு அவதரித்தது –

தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாயா —
தர்ம ஸம்ஸ்தாபனம் செய்து சத்தையை நோக்குமவனும் –
தர்ம ஸப்த வாஸ்யனாய் திரு அவதரித்து சத்தா வர்த்தகனாய்
மங்களா ஸாஸன பர்யந்தமாக ஆச்சார்ய முகத்தால் யுண்டாக்குமவனும்
தானே யாகையாலே -பிறந்தாய் -என்கிறார் –

இது தன்னை சிசுபாலாதிகள் குறையாகவும் சொல்லுவர்கள் இறே
அவ்வளவேயோ –
பவுண்டரக வாஸூ தேவனைப் போலே தம் தம்முடைய ஜென்மங்களையும் –
ஐஸ்வர்யாதிகளையும் – தேவதாந்த்ரங்களையும் -சர்வாதிகமாக நினைத்து இருப்பாரையும் –
பொறுக்கும் இறே இந்த பூமி –

திரு உடையாள் மணவாளா
பிறந்தாய் என்கிறதுக்கு ஹேது சொல்கிறது –
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரீய –
ஸ்ரீய ஸ்ரீ –
திருவுக்கும் திருவாகிய
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே
என்கிற திருவை உடையவள் என்ற போதே-ஸாஷால் லஷ்மீ – என்று தோன்றும் இறே

அவன் இவள் உடைமையானால் -போக உபகரண -லீலா உபகரணம் போலே –
அவளுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக வேணும் இறே –
கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம் சேஷித்வே பரம புமான் -என்கிறபடியே –
(அவள் கருணா கடாக்ஷத்தாலே நாம் -நிர்வகிக்கப்படுகிறோம்
அவனும் சேஷி யாக நிர்வகிக்கப் படுகிறான் )
திருவுடையாள் மணவாளன் ஆனால் அவள் நியமித்த இடத்தில் -கண் வளருகை இறே உள்ளது –

திருவரங்கத்தே கிடந்தாய்–மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய்-
இம் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகை என்னுதல்

அன்றிக்கே
என் மடியிலே மருவி இருந்து பூச் சூட வேணும் காண்
பூச்சூட வாராய் என்னவுமாம் –

———–

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி–நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு–பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு–(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை–பட்டாடைகளையும்
கிழித்து–கிழித்து விட்டு
காம்பு துகில் அவை–(மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி–கிழித்துப் போட்டு
(இப்படியே)
நிச்சலும்–ப்ரதி நித்யம்
தீமைகள்–துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய்–செய்பவனே!
நீள் திருவேங்கடத்து–உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்–ஸ்வாமியே!
பச்சை–பசு நிறமுள்ள
தமனகத்தோடு–மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ–பாதிரிப்பூவையும்
சூட்டவாராய்-.

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாயான நீ -மச்சொடு மாளிகை ஏறித் தீம்பு செய்யக் கடவையோ –
மச்சு என்று -நடுவில் நிலம் –
மாளிகை -என்றது -மேல் நிலம் –
மூன்றாம் நிலத்தில் மாதர்கள் இருக்கிற இடங்களிலே சென்று –
(த்ரிதீய விபூதிக்கு இந்த வியாக்யானம் -திவ்ய தேசங்கள்
பெண்கள் போல் அவனுக்கே அற்று தீர்ந்த அநந்யார்ஹ சேஷ பூதர்களுக்காகவே )

கச்சோடு பட்டைக் கிழித்து
முலைக் கச்சுகளுக்கு மேலச் செய்த பட்டுக்களையும் கச்சோடு கிழித்து –

காம்பு துகில் அவை கீறி
துகில் காம்புகளைக் கிழித்து –
பணிப் புடைவைகளில் விளிம்புகளைக் கழித்து –

நிச்சலும் தீமைகள் செய்வாய்
வளர வளரத் தீம்பு கை ஏறிச் செல்லா நின்றது இறே –
இதுவே நிரூபகம் ஆனவனே –

நீள் திருவேம்கடத்து எந்தாய்
பெரிய திருமலையில் நித்ய வாஸம் செய்து
கானமும் வானரமும் திரு வேடுவரும்
ரக்ஷைப் படும்படி ஸந்நிஹிதனாய்ப் போரு கிறவனே –

அன்றிக்கே
இந்த விபூதியில் உள்ளார் பெரிய ஏற்றம் சொல்லுமா போலே
த்ரிபாத் விபூதியில் உள்ளாரும்-
சர்வ ஸ்மாத் பரனானவன் தானும் சென்று
(பரன் சென்று சேர் திரு வேங்கடம் அன்றோ
ஸ்ரீ வைகுண்ட விரக்த்யா
அணைய –பெருமக்களும் ஆதரிப்பார்கள்
படியாய்க் கிடந்தது பவள வாய் காண்பார்கள்
எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே )
சேரும்படியான திரு வேங்கட மா மலை என்னுதல் –

பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய்
பசுமை குன்றாத தமனமகத்தோடே செவ்வி குன்றாத பாதிரிப் பூ சூட்ட வாராய்-
பச்சை என்று
அத்யந்த பரிமளிதமான இலை என்னவுமாம் –

இத்தால்
மச்சொடு மாளிகையால் -த்ருதீய விபூதியில் உள்ள விசேஷஞ்ஞரைக் காட்டுகிறது –
கச்சொடு பட்டால் -பக்தியை அமைக்கிற ஸ்வரூப ஞானத்தில் அநாதரத்தைக் காட்டுகிறது –
(என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் -சேஷத்வ பாரதந்தர்யம் ஞானம் அழித்து
ந க்ரமம் )
நிச்சலும் தீமைகள் செய்கிற இத்தால் -த்ருதீய விபூதியில் இருப் பாருடன் லீலா ரஸம் உண்டோ
காம்பு துகிலால் -ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்தார் அளவிலும் -அநாதரமும் –
பக்ஷ பாத அங்கீ காரமும் ப்ராப்தமோ -என்கிறார் – (புடவை உடல் கரை ஆத்மா )

————–

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

பதவுரை

புருவம்–புருவங்களையும்
கரு குழல்–கரு நிறமான கூந்தலையும்
நெற்றி–(இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த–விளங்குகின்ற
முகில் கன்று போலே–மேகக் கன்று போலே
உருவம் அழகிய–வடிவமழகிய
நம்பி–சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று–தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை–இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே–தீம்பு செய்யாமலிரு;
மருவும்–மருவையும்
தமனகமும்–தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை–அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற–வாஸனை வீசுகின்றன;
இவை–இவற்றை
உகந்து–மகிழ்ச்சி கொண்டு
சூட்ட நீ வாராய்-.

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
நான் மச்சிலும் மாளிகையிலும் ஏறினேனோ
தெருவிலே யல்லோ நின்றேன் –
என்னைத் தீம்பன் என்ன நான் ஏது செய்தேன் -என்ன

முன்பு செய்தாய் ஆகிறாய்
இனித்தான் ஆகிலும் தெருக்களில் நின்று விளையாடுகிற பருவத்தால்
இளைய இடைப் பெண்களைத் தீமை செய்யாதே
இவன் செய்த வியாபாரங்களைத் தனித்தனியே சொல்லிப் பரி கணிக்கப் போகாமையாலே –
தீமை -என்ற
ஒரு சொல்லால் தர்சிப்பிக்கிறாள் –

மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
மருவும் தமநகமும்-சேர்த்து நன்றாகக் கட்டி மணம் கமழா நின்ற வகை மாலை

புருவம் கரும் குழல் நெற்றி
உபமான ரஹிதமான திருப் புருவம்
கரியதான நிறத்தை யுடைய திருக் குழல்
திரு நெற்றி –

பொலிந்த முகில் கன்று போலே
இவை எல்லாத்தாலும் பொலிந்த தொரு முகில் ஈன்ற கன்று போலே

உருவம் அழகிய நம்பி
ஒப்பனையாலும்
அவயவ சோபையாலும்
தீம்பு செய்த குணங்களாலும் -பூர்ணன் ஆனவனே –

உகந்து இவை சூட்ட நீ வாராய்-
உகந்து என்று
நீ உகக்கும் அவையாய்
உனக்கு வேணும் என்று நான் உகந்த இவை சூட்ட வாராய்
(அஹம் அன்னம் –அஹம் அந்நாத போல் இங்கும் )

இவை என்று
கீழ்ச சொன்ன செண்பகம் முதலான உக்த சமுச்சயம்

உருவம் அழகிய நம்பி-தீமை செய்யாதே இவை -உகந்து இவை சூட்ட நீ வாராய்-

இத்தால்
சங்கல்ப பரதந்த்ரராய்
அந்நிய சாதன பரராய்
அந்நிய ப்ரயோஜன பரராய்
அந்யோன்யம் லீலா ரஸ போக்தாக்களாய்
சர்வரும் சஞ்சரிக்கிற மார்க்கங்களிலே உனக்குப் பணி என் –
உன்னை நோக்கி விளையாடுவார் உடனே அன்றோ நீ விளையாடுவது –

————–

இரண்டாவது அவதாரத்துக்கும்
விரோதி நிரசனமே பிரயோஜனம் -என்கிறார் –

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7 5- – –

பதவுரை

புள்ளினை–பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய்–வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு–யுத்தோந்முகமான
கரியின்–குவலயாபீடத்தின்
கொம்பு–கொம்பை
ஒசித்தாய்–பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு–வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை–(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை–தலையையும்
கொண்டாய்–அறுத்தவனே!
நீ–(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்–வெண்ணெயை
அள்ளி விழுங்க–வாரி விழுங்க
அஞ்சாது–சிறிதும் பயப்படாமல்
அடியேன்–(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்–அடித்தேன்;
(அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய–தெளிவான
நீரில்–நீரிலே
எழுந்த–உண்டான
செங்கழுநீர்–செங்கழுநீரை
சூட்டவாராய்-.

புள்ளின் வாய் பிளந்திட்டாய்
பகாசூரனை அநாயாசேன வாயைப் பிளந்து நிரசித்தாய் –

பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
க்ருத்ரிமத்தாலே எதிர் பொருத குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன பிடுங்கி நிரசித்தாய் –

கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
பூதனா சகடாதிகளைப் போலே உரு மாறி வந்த ராக்ஷஸி மூக்கோடு –
இவளுக்கு ரக்ஷகன் ஆனவன் தலையையும் அறுத்து நிரசித்தாய் –

அவன் இவளுக்கு காவலன் ஆகையாவது –
இவளை ஸ்வரை ஸஞ்சாரம் பண்ணித் திரி -என்று விடுகை இறே
இவள் அவன் அவ்வளவு சொல்லப் பெற்றால் அவனை ரக்ஷகன் என்னாது ஒழியுமோ

அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
இவன் வெண்ணெய் தானே அள்ளி விழுங்க வல்லவனாவது எப்போது கூடுமோ
என்று பார்த்து இருந்த நான் –
நீ அள்ளி விழுங்கவும் பெற்று வைத்து

அஞ்சாது அடியேன் அடித்தேன்
அடியேன் அஞ்சாதபடி அடித்தேன் –
யாவர் சிலரும் அனுதாபம் தலை எடுத்தால் -அடியேன் -என்று இறே சொல்லுவது –
இவள் தான் அது தன்னை முன்னே நினையாதே அடிக்க வேண்டிற்றும் –
இவன் மற்றும் ஓர் இடங்களில் இதும் செய்யும் ஆகில் வரும் பழிச் சொல்லுக்கு அஞ்சி இறே
இவன் மார்த்த்வம் பார்த்து அஞ்சாதே அடிக்க வேண்டிற்றும் –

தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்
சேற்று வாய்ப்பாலும் -தெளிந்த நீராலும் செவ்வி பெற்ற செங்கழுநீர் சூட்ட வாராய்

——–

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2 7-6 –

பதவுரை

நம்பி–சிறந்தோனே!
(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு–ஏழு ரிஷபங்களுடன்
பொருதி–போர் செய்யா நின்றாய்;
ஏதும்–எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்–விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
(தேகம் பிராணன் பேணாமல் -லோபம் வடமொழி சொல் )
கருதிய–(கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள்–தீம்புகளை
செய்த–(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை–அந்தக் கம்ஸனை
கால் கொடு–காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய்–பாய்ந்தவனே!
(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)
தெருவின் கண்–தெருவிலே
தீமைகள் செய்து–தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென–வலிமையாக
மல்லர்களோடு–(சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற–போர் செய்து வந்த
பொன்னே–பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய்-.

எருதுகளோடு பொருதி–
திரு ஆய்ப்பாடியில் உள்ளாருடைய பழிச் சொலவு பொறாமையால்
அடியேன் அடித்தேன்-2-7-5- -என்று ஈடுபடுகிறவள்
எருதுகளோடே பொரக் கண்டால் பொறுக்குமோ –
கூடக் கண்டு நின்றாள் போல் காலாந்தரமும் தோற்றும் இறே
எருதுகளோடே பொரா நின்றாய்

ஏதும் உலோபாய் காண் நம்பீ-
எல்லாம் சொல்லி நீ மீட்டாலும் மீளாய் காண்
லோபாமை யாவது
தேஹத்தைப் பேணுதல்
ப்ராணனைப் பேணுதல் –செய்யாது இருக்கை
இவை எருதுகள் அல்ல -கம்சன் வர விட்ட அசுரர்கள் என்று
த்ரிகாலஞ்ஞர் சொன்னாலும் -அது தான் இறே நான் உகப்பது என்று
சொல்லும்படியான துணிவை யுடையை காண்

நம்பீ
நப்பின்னை அளவில் வ்யாமோஹத்தால் பூர்ணன் ஆனவனே –

கருதிய தீமைகள் செய்து
கம்சன் தீமைகள் எல்லாத்தையும் அவன் தன்னோடே போம்படி செய்து –

கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்-
அவனையும் அவன் இருந்த மஞ்சஸ்தலத்திலே சென்று திருவடிகளாலே பாய்ந்தாய் என்னுதல்

அன்றிக்கே
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
இவன் இது செய்யக் கூடும் என்று நாம் கருதினால் போல் செய்து முடித்தாய்
இன்னும் இப்படிப்பட்ட சத்ருக்கள் மேல் விழக் கூடும் என்று பயப்படுகிறார் ஆதல்-

தெருவின் கண் தீமைகள் செய்து
தெருவிலே விளையாடப் போகிறேன் என்று போய் விளையாடுவாரோடே சொல்லுவதற்கு
அரிதான தீமைகளைச் செய்து -என்னுதல் –
ஸ்ரீமதுரையில் தெருவிடத்தில்
குப்ஜியோடும் –
நகர ஸ்திரீகளோடும் முக விகாரங்களாலே செய்த தவ்த்ர்யம்-என்னுதல்

சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே
மல்லர்களைக் கொன்ற பின்னே இறே கம்சன் பட்டது
ஆயிருக்க
மல்லர்களோடு -சிக்கென–பொருது-என்னும் போது
மல்ல யுத்தம் பின்னாற்றிற்றாக வேணும் இறே

சிக்கென-ப்ரதிஞ்ஞா பூர்வகமாக

பொன்னே -என்றது
விரோதி போன பின்பு திருமேனியில் பிறந்த புகரைச் சொல்லுதல் –
ஸ்புருஹதையைச் சொல்லுதல் –

புன்னைப் பூ சூட்ட வாராய்
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் (கலியன் ) -என்கிறபடியே
பொன்னுக்குப் பொன்னைச் சூட்டப் பார்க்கிறார் –
பொன்னோடே இறே பொன் சேர்வது –

————

கீழ் கம்சாதிகளால் வந்த விரோதி -சாது ஜனங்களுக்குப் போக்கினை பிரகாரத்தை அனுசந்தித்தார்
இதில் ஹிரண்யாதிகளால் வந்த விரோதி போக்கினை பிரகாரத்தை அனுசந்திக்கிறார் –

குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2- 7-7-

பதவுரை

குடங்கள்–பல குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர்வெறிந்து
(இப்படி)
கூத்து ஆட–குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுடைய
எம் கோவே–எம்முடைய தலைவனே
மடம் கொள்–மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை–சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல–மயக்க வல்ல
என் மைந்தா–எனது புத்திரனே!
முன்–நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை–ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு–(திரு வுகிரால் ) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக-இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்–பிளந்தவனே!
குடந்தை–திருக் குடந்தையில்
கிடந்த–பள்ளி கொள்ளுகிற
எம் கோவே–எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய்.

குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
இடையர் ஐஸ்வர்யம் மிக்கார் தலைச்சாவி வெட்டியாடும் கூத்து இறே குடக்கூத்து ஆவது –
அது இவனுக்கு ஜாதி உசிதமான தர்மம் ஆகையால் அனுஷ்ட்டிக்க வேண்டி வரும் இறே
ப்ராஹ்மணர்க்கு சந்த்யா வந்த நாதிகள் நியதமானால் போலே இறே இவனுக்கும்

குடம் என்னாதே
குடங்கள் -என்கையாலே
பல குடங்களும் கீழே பாரித்து இருக்கும் போலே காணும்
எடுக்கும் போது குடங்கள் காணுமது ஒழியப் பின்னை ஆகாசத்தில் ஏற விட்டால்
சஷூர் இந்திரியம் தூர க்ராஹி யானாலும் குடங்கள் ஆகாசத்தில் ஏறுகிற தூரம் க்ரஹிக்கப் போகாது இறே

குடங்கள் எடுத்து -என்றும்
ஏற விட்டும் -என்றும்
கண்டது அத்தனை போக்கி
மீண்டும் ஏற விட்ட குடங்கள் திருக் கையிலும் வந்தன -என்கைக்கு
ஒரு பாசுரம் பெற்றிலோம் இறே

திரு முடியிலும் அடுக்குக் குடங்கள் இரா நிற்கச் செய்தேயும்
ஏறிட்ட குடங்களுடைய போக்குவரத்து உண்டாய் இருக்கச் செய்தேயும் –
ஆகாசத்தில் நிறைத்து வைத்தால் போலே இருக்கையாலே போக்கு வரத்து உண்டு என்னும் இடம்
அனுமான சித்தமாம் அத்தனை இறே

ஸ்வர்க்காதிகளில் ஏறினவர்களுக்கு ஓர் அவதியும்
ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விஸந்தி -என்று ஒரு மீட்சி கண்டாலும்
இப் பிரத்யட்ஷம் அநுமிக்கலாம் அத்தனை –

கூத்தாட வல்ல எம் கோவே
ஏறிட்ட குடம் கண்டாலும் கூத்தின் வகைகளோ தான் காணலாய் இருக்கிறது –
பரதத்து அளவும் இறே ந்ருத்த விசேஷம் -காணலாவது
இவனுடைய வல்லபம் தெரியாது
ந்ருத்தத்துக்கு ஒரு ராஜா என்னும் அத்தனை இறே -அதாவது
அக்ர கண்யன் என்றபடி –

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
அவ்வூரில் -ஆண்களையும் -வ்ருத்தைகளையும் -சிஸூ க்களையும் ஒழிய -நவ யவ்வனைகளாய் –
அவனாலே புண் பட்டு பவ்யைகளாய் –
அவன் பொகட்டுவித்த இடத்தே கிடக்கச் செய்தேயும்
ஸூப தர்ஸியான இவன் வந்தால் முகத்தில் வாட்ட்டம் தோற்றாமல் ப்ரசன்னைகளாய் இருக்கையாலே –
மதி முகம் – என்கிறது
இப்படி மால் செய்ய வல்ல எம் மைந்தா
மைந்து -மிடுக்கும் பருவமும் சைஸவமும்

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
இரணியன் நெஞ்சைக் கொண்டு இரு பிளவாக பிளந்திட்டாய்

முன்
கால பரம் ஆதல்
ப்ரஹ்லாதன் முன்னே என்னுதல்
நெஞ்சு -என்று மார்பு ஆகவுமாம்
மார்பு பிளைக்கை எளிது இறே
அமூர்த்தமான நெஞ்சைப் பிளந்தான் என்றார் இறே

உளம் தொட்டு -என்ற இடம்
இப்போது ஆகிலும் -அனுகூலிக்குமோ என்று -நிர்வஹிப்பாரும் உண்டு –
அப்போது பூர்வ சங்கல்ப விருத்தமாய் இருக்கும் –
ஆனால் உளம் தொட்டு -என்றதனக்கு பொருள் தான் என் என்னில்
ஸர்வஞ்ஞனாய் -ஸத்ய ஸங்கல்பனாய் இருக்கிற சர்வ சக்தன் இப்பொழுது இவன் ஹ்ருதய பரீஷை பண்ணுகைக்கு அடி –
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜை குலைந்து பிறகு (முதுகு )காட்டியோடே அவன் போன இடம் எல்லாம்
லோக த்ரயே ஸபதி மானுஷ ஸிம்ஹ கர்ப்பே -என்று
லோக த்ரயத்திலும் கர்ப்பித்த ஸிம்ஹமாய்க் கிடக்கையாலே –
அடியில் ப்ரதிஜ்ஜை குலைகையாலே -இனியாகிலும் ஸாத்ரவம் நிலை நிற்குமோ -என்று –
அதாவது –
பெகணியாமல் பல் கவ்விச் சாகை இறே
அன்புடையவன் அன்றே அவன் (பெரிய திரு மொழி)-என்கையாலே உளம் தொடவும் கூடும் இறே
அவன் தான் தொட்டது எப்போதை நெஞ்சை என்னில்
ஷீராப்தியில் சன்ன (மறைந்த ) பாவத்தில் நெஞ்சு இறே இங்கே பிளந்தது –
இல்லையாகில் பிறகிட்டுப் பிடிபட்டவனை (சிறிதேபகை பட்டவனை ) பிளந்தால் சவ்ர்ய பங்கம் வரும் இறே
அதுக்காகவும்
தேவர்களுக்கு ஓன்று தருகிறோம் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகையாலும்
இவனை விடில் ஷீராப்தி வாசிகளை நலிந்தால் போலே தேவர்களையும் நலியும் என்று இறே
ஆமாறு அறியும் பிரான் இவனை நிரசித்தது –

சம்சாரத்தில் சங்கல்ப பாரதந்தர்ய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அசக்தரையும் –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றான் இறே
இத்தனை யோக்யதை தான் உண்டோ என்று உளம் தொட்டு இடந்திடுவது ஒழிய –
அவனைக் கொள்ளலாம் கார்யம் இல்லை இறே –
(நெத்தியைக் கொத்திப் பார்த்து -கண்ண நீருடன் போமவன் அன்றோ )

குடந்தை கிடந்த எம் கோவே
தமக்குப் ப்ராப்யன் ஆவான் –குடந்தைக் கிடந்தவன் ஆகையாலே –எம் கோ -என்கிறார் –

கூத்தாட்டும்
மால் செய்கையும்
நெஞ்சு இடக்கையும்
முதலான வியாபாரங்களில் காட்டில் –
எம் கோ -என்கையாலே
நிர் வியாபாரனாய்க் கிடந்தவனுக்கு இறே மிகவும் பரிய வேண்டுவது –

குருக்கத்தி பூ சூட்ட வா

————-

கீழே ஹிரண்யனை நிரசித்தமையை அனுசந்தித்தார்
இங்கே மாலிகனை நிரசித்த பிரகாரத்தை அனுசந்திக்கிறார் –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-

பதவுரை

சீ மாலிகன் அவனோடு–மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும்–ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய்–வல்லவனாய்
அவனை–அந்த மாலிகனை
நீ-நீ
சாம் ஆறு எண்ணி–செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால்–சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய்–தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு–நடத்த வேண்டியவைகளை
அறியும்–அறிய வல்ல
பிரானே–ப்ரபுவே!
அணி–அழகிய
அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
என்னை-எனக்கு

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்-சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
மாலிகன் -என்பான் ஒருவன் கிருஷ்ணன் பக்கலிலே ஆயுத சிஷா ஸஹாவாய் -பல ஆயுதங்களும் பயிற்றுவிக்க
கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆஸக்தியால் மூர்க்கனாய் –
லோகத்தில் உள்ள சாதுக்களை வேண்டா வேண்டா என்று நலிந்து திரியப் புக்கவாறே

ஆயுத சகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்றும்
இவனை வசமாக்க ஒண்ணாது -என்றும்
திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம் நடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது  கருக நியமித்தவாறே –
இவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்
ஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன
இது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –

எனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று அவன் அதி நிர்பந்தங்களை பண்ணினவாறே –
இவனை என் செய்வோம் -என்று ஒரு வழியாலும் இசைவிக்க ஒண்ணாமையாலும்
நம்முடைய ஆஸக்தியாலே நாட்டாரை அழிக்கை யாலும்
அதுக்கும் மேலே அசாதாரண பரிகரம் தனக்கு வச வர்த்தி யாகாது என்னும் இடம் அறியாமையாலே இறே நிர்பந்திக்கிறான் என்று
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதானவன் -இவனை நிரசிக்கும் பிரகாரங்களாலே ஒரு தோஷமும் வாராமல் –
தோழமை கொள்ளவும்  வல்லாய்-சீர் சக்கரத்தால் தலை கொள்ளவும் வல்லாய் -என்று
இவர் கொண்டாடும் படி இறே நிரசித்தது –

அது தான் ஏது என்னில்
தன்னுடைய சீர்மை குன்றாதபடி ஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீச-
சுழன்று வருகிற திரு ஆழி மீண்டும் திருக்கையில் வந்து இருந்த ஆச்சர்யத்தைக் கண்ட வாறே
எனக்கு இது அரிதோ -என்று கை நீட்டின வாறே
உனக்கு இது அரிது காண் -என்னச் செய்தேயும் -அவன் வாங்கிச் சுழற்றி மேலே விட்டு
மீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்கத் தன் விரலை வைக்கையாலே
அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழல வர இடம் போராமையாலே
அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து கொண்டு போகையாலே
ஆமாறு அறியும் பிரானே -என்கிறார் –

மேல் விளைவது அறிந்து தோழமை கொள்கையாலும்
சாமாறு எண்ணித் தலை கொள்கையாலும்
பொய்யர்க்கே பொய்யனாயும்
கொடும் கோளால் நிலம் கொண்டும்
ஆமாறு அறியும் பிரான் -என்பதிலும்
அணி அரங்கத்தே கிடந்தாய்-ஆமாறு அறியும் பிரான்-என்கை இறே இவருக்குத் திரு உள்ளம் –

ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் –
இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும் –

ஏமாற்றம்
இவ் வஸ்துவுக்கு என் வருகிறதோ என்று நினைக்கிற கிலேசம் –
அது பின்னைத் தவிருமோ என்னில்
உரையா எந்நோய் தவிர -(திருவாய் -8-3-11-என்கிற இடத்தில் -கண்டோம் இறே –
அதுக்கடி கால தர்சனம் பண்ணுவிக்கை இறே –
இருவாட்சி பூ சூட்ட வாராய்

——–

ஜகத்தில் உண்டான விரோதிகள் எல்லாவற்றையும் உப சம்ஹரித்த பிரகாரத்தை அனுசந்திக்கிறார் –

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2 7-9 – –

பதவுரை

அத்தாணியுள்–அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்–தேவர்கள்
சூழ–சூழ்ந்திருக்க
அங்கு–அவர்கள் நடுவில்
அண்டத்து–பரம பதத்தில்
இருத்தாய்–வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்–அடியார்களுடைய
நெஞ்சில்–ஹ்ருதயத்தில்
உறைவாய்–வஸிப்பவனே!
தூ மலரான்–பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–கொழுநனே!
(பிரளய காலத்தில்)
உலகினை ஏழும்–ஏழு உலகங்களையும்
உண்டிட்டு–உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில்–ஒராவிலையில்
துயில் கொண்டாய்–யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்–நான்
உன்னை கண்டு–(நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க–மகிழும்படி
கருமுகைப் பூ–இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே –என்கிறபடியே
அண்டத்து
அத்தாணி உள்ளே
அமரர்கள் சூழ இருந்தாய் –

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
இங்கு த்ரீதியா விபூதியில் உள்ள தொண்டர்கள் சூழ்ந்து மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நினைவிலே சன்னிஹிதனாய்ப் போரு கிறவனே

தூ மலராள் மணவாளா
அதுக்கு அடியாக பெரிய பிராட்டியாருக்கு அத்விதீய நாயகன் ஆனவனே –
தூயதான தாமரைப் பூவைப் பிறந்தகமாக உடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகன் ஆனவனே –

உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
இவள் புருஷகாரத்தில் அகப்படாதாரை
பிரளய காலத்திலேயே திரு வயிற்றிலே வைத்து
முகிழ் விரியாமல் அத்விதீயமான வடபத்ரத்திலே கண் வளர்ந்து அருளினவனே

கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய்
நான் உன்னைக் கண்டு
மங்களா ஸாஸனம் பண்ணி
மிகவும் ப்ரீதானாம் படி
கரு முகைப் பூ சூட்ட வாராய் –

———

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

பதவுரை

செண்பகம்–செண்பகப் பூவும்
மல்லிகையோடு–மல்லிகைப் பூவும்
செங்கழுநீர்–செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி–இருவாட்சிப் பூவும்
(ஆகிய)
எண் பகர்–(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும்–மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன்–கொண்டு வந்தேன்;
இன்று–இப்போது
இவை சூட்ட–இப் பூக்களைச் சூட்டும்படி
வா–வருவாயாக,
என்று–என்று
பகர் மண் கொண்டானை–பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
(தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி–யசோதை
மகிழ்ந்து–மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த–சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர்–ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன-அருளிச் செய்த
இம்மாலை–இந்தச் சொல்மாலையும்
பத்தே–ஒருபத்தே!

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
அவனுக்கே என்று இவன் கோலும் காலத்துக்கு கால நியதி இல்லை –
ஸ்ரீ கஜேந்திரன் கையில் பூவும் கூட வாடாமல்
மனமும் குலையாமல்
நெடும் காலம் இருந்தது இறே
(அகால பலி நோ வ்ருஷ -அவனுக்கு என்றால் கால நியதி இல்லையே )

அன்றிக்கே
பனி அலர் ஆகவுமாம்
பத்ரம் புஷ்ப்பம்
புரிவதும் புகை பூவே
கள்ளார் துழாயும்
அநந்யார்ஹமான திருத்துழாயோடே கூட நிர் கந்தமான புஷ்ப்பங்களையும் எடுத்தது இறே
அவனுக்கும் இவனுக்கும் சூட்டுகைக்கும் இடுகைக்கும் கர்த்தவ்யமாக
ந கண்ட காரிகா புஷ்ப்பம் -என்றதும் பறிக்கிறவன் கையிலே முள் படாமைக்கு என்றே என்று
ஜீயருக்கு அருளிச் செய்கையாலே அவனுக்கு ஆகாதவை இல்லை –

சிறு காலை
அந்தியம் போது –என்கிற கால நியதியும் இல்லை

ஸர்வ கந்த -என்கிற வஸ்துவின் பக்கலிலே சேர்ந்தால் இறே
புஷ்பங்களுக்கு ஸ்வரூப சித்தி உள்ளதும்

தோளிணை மேலும்
தழைக்கும் துழாய் மார்பன்
அஹிம்ஸா பிரதமம் புஷ்ப்பம் –இத்யாதி –
நாடாத மலர் —
இவை முதலாக பல இடங்களிலும் அதிகாரி நியதி ஒழிய த்ரவ்ய நியதி இல்லை என்றது இறே –
பூசும் சாந்து –புனையும் கண்ணி –வாசகம் செய் மாலை –
கலியன் ஒலி செய்த தமிழ் மாலை -என்று பல இடங்களிலும் பலரும் அருளிச் செய்தார்கள் இறே –

எண்பகர் பூவும் கொணர்ந்தேன்
ஸாஸ்த்ர சித்தங்களுமாய் -பரி கணிக்கப் பட்ட பூக்கள் எல்லாம் கொணர்ந்தேன் என்கையாலே
எல்லாப் பூக்களுக்கும் உப லக்ஷணம் இறே
ஆகை இறே கீழே ஒன்பது பூவைச் சொல்லி –
நாலு பூவிலே நிகமித்தது –

அகால பலிநோ வ்ருஷா
புஷ்பித காநந
மலர்கள் வீழும் மது தாரைகள் இத்யாதி
கொணர்ந்தேன் -என்றது
கொண்டு வந்தேன் என்ற படி –

இன்று இவை சூட்ட வா என்று-
இன்று என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
ப்ராத
மத்யான்ஹம்
சாயந்தனம் –என்கிற கால நியதி இல்லை –
ஆதி நடு வந்தி வாய் வாய்ந்த மலர் தூவி (பூதத்தாழ்வார் )-என்னக் கடவது இறே
இவை -என்கிற
பஹு வசனம் உண்டாகையாலே உப லக்ஷணம் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –

மண்பகர் கொண்டானை
பகர் -மண் -கொண்டானை
மஹா பலி -தந்தேன் என்று உதகம் செய்த பூமி கொண்டான் -என்னுதல்
இவன் தான் அவனை அபேக்ஷித்துப் பெற்ற மண் கொண்டானை -என்னுதல்
ஸாஸ்த்ர ஸித்தமான லோகங்களை எல்லாம் கொண்டான் -என்னுதல்

வேயகம் ஆயினும் (திரு விருத்தம் )-நியாய நிஷ்ட்டூ ரத்தாலும் கொள்ளல் ஆவது –
மஹா பலிக்கு நடக்கிற பூமி அளவும் அன்றோ என்னில்
பதினாலு லோகங்களும் அண்ட பித்தியும் மஹாபலியது என்று இவர் இருக்கிறார் –
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்களால்
மஹாபலியில் குறைந்து இருப்பார்கள் இல்லை என்று –

ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
யசோதா பிராட்டி பிரியப்பட்டு பூச்சூட அழைத்த பிரகாரத்தை –

பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளாருடைய உக்தி ப்ரத்யுக்திகளும் -ஆதார அநாதார உக்திகளும்
எல்லாம் பண்ணிலே சேர்ந்தது போலே காணும் இருப்பது –
இப்படிப்பட்ட ஊருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

இம் மாலை பத்தே
ஓர்த்த இப் பத்தே -(1-2-11)-என்கிறாப் போலே ஸ்லாகிக்கிறார்
இது இறே
ஆப்த வாக்கியமும்

அந்த வஸ்துவுக்கு வேண்டுவதும்
இவனால் செய்யலாவதும்
பூ மாலையும்
சொல் மாலையும் -இறே

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: