ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-6–வேலிக் கோல் வெட்டி—

பிரவேசம்
கீழே பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து -( 2-5-9-)என்று காக சமராய் இருப்பார்க்கும் –
பகவத் சம்பந்த நிபந்தமான கர்ம கால ஸாஸ்த்ரங்கள்
மர்கட பலா அசந ந்யாயத்தாலும் -(குரங்கு பழம் சாப்பிடும் நியாயம் )
சைதன்ய தார தம்யத்தாலும்
அவனுடைய அவராதிகளாலேயும்
நித்ய பிரயோஜனம் உண்டாய் இருக்கையாலே அவர்களையும் திருத்த நினைத்து –
அவனுடைய ப்ரபத்தியை (சேதனர் இடம் அவன் வைக்கும் பற்று ) பூர்வமே தர்சிப்பித்து

இவர்களை ப்ரபன்னராக்கி
அவன் ப்ரபத்தி பண்ண வேண்டும்படி நாம் நின்றோம் ஆகாதே என்றும் இவர்கள் அனுதபிக்கும் படி பண்ணி
இவர்கள் தங்களை அவன் பிரபத்தி பண்ணினாக அனுதபித்தவாறே
கெடுவீகாள் -உங்கள் பிரபத்தி உங்கள் ஸ்வரூபத்திலே சேர்ந்தவோ பாதி
அவன் உங்களை நோக்கி யன்று காணுங்கோள் பிரபத்தி பண்ணிற்று –
அவன் ஸ்வரூபம் இருக்கும் படி தான் இது காணுங்கோள் -என்று
அவன் ப்ரபத்தியாலே இவர்கள் அனுதபிக்க-

அவனுடைய ப்ரபத்தியில் தோஷத்தை –
குழல் வாராய் -என்கிற வியாஜத்தாலே கழித்து
அவனுக்கும் இவர்களுக்கும் ரஷ்ய ரக்ஷக பாவம் ஸ்வரூபம் என்னுமத்தை உணர்த்தி –
இவர்கள் அனுதாபத்தை நீக்கி –
அவனையும் திருப்தி பிறப்பித்து –
வ்யாமோஹத்தையும் பக்தி ரூபா பன்ன ஞானத்தையும் இருவருக்கும் விசத தமமாகப் பிரகாசிப்பித்து

ரத்ன தன தான்யாதிகள் மிகவும் ஒருவனுக்குக் கைப்பட்டால்
அவை ஸூ ரஷித்தமாய் இருந்தனவே யாகிலும் –
தான் ரஷிக்கவும்
ரக்ஷிக்க வல்லாரைக் கூட்டியும் ரக்ஷிக்கிறாப் போலே யாகிலும் வேண்டி வருகையாலே

அவன் ரக்ஷகனாய்ப் போரா நிற்கச் செய்தேயும்
அவனுக்கு ரஷ்யம் ஸித்தியாமையாலே -(இசையாமல் விமுகராயப் போக )
அவனுக்கு சித்தித்த ரஷ்ய ரக்ஷக பாவ ஸம்பந்தத்தாலும் தமக்கு சந்தோஷம் பிறவாமையாலே
அந்த ரஷ்ய ரஷாக பாவ சம்பந்தத்தை மாறாடி
ரஷ்ய ரஷக பாவ சம்பந்தம் ஆக்கித் தாம் ரக்ஷகர் ஆனாராய்

பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து -என்று ஸூ மனஸ்ஸாக்களோடே சேர்த்து
ப்ரபன்னர் அவன் ப்ரபத்தியைக் கண்டு அஞ்சி சோகித்த அனுதாபங்களையும் அவர்களைக் கொண்டே –
ஸர்வ பாபேப்யோ – என்னுமா போலே
காக சமரைத் திருத்தி
அவர்களைக் கொண்டே வாரிக் கழித்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் திருமஞ்சனம் செய்வித்துத் திருக்குழல் வாரிப் பூச் சூட்டுவதாக தொடுக்கிற அளவிலே
பூவுக்கு இறாய்த்துப் பசு மேய்க்கப் போவதாகக் கோலி
பசு மறித்து மேய்க்கிற கோலைத் தா என்ன –

இவள் இசைந்து கோல் கொடாமல் -இவனை ஒப்பித்துக் காண வேணும் என்னும் கருத்தாலே –
கோல் வாங்கித் தருவிக்கிறேன் என்று இவனை அழுகை மருட்டி –
அக்காக்காய் கோல் கொண்டு வா என்று –
அவள் சொன்ன நிர் அர்த்தக சப்தத்தை வ்யாஜமாக்கி

அவளுடைய பக்தி லேசத்தையும் புத்ரத்வ அபிமானத்தையும் அர்த்த வத்தாக்குவதாகக் கோலி
இவளோ மாத்ரமும் -( இவர்கள் ஒரு மாத்ரமும் ) அளவில்லாதவர்களுமாய் –
புஷ்பிதமான வேத வாத ரதருமாய்ப் ( பூர்வ வேத நிஷ்டர் ) போருகிற அளவு அன்றிக்கே
நான்யதஸ்தீதி வாதிந–(பரமபதமே இல்லை என்பார் )-என்று துணிந்து இருப்பாரையும் -குறித்து
கர்ம காலாதிகளாலே திருத்துகைக்கும் திருந்துகைக்கும் யோக்யதை உண்டு
என்று திரு உள்ளம் பற்றி அருளி

ராஜஸ தாமஸரையும் -ராஜஸ ராஜஸரையும் குறித்து
இவர்களுடைய ஞான அனுஷ்டானங்களை –
1-வைதம் ஆகையாலே அகரணே ப்ரத்யவாய பரிஹாரத்தமோ -(செய்யாமல் இருந்தால் பாபம் வருமோ )
2-ஆசா ஜனகமான ப்ரேரக வசனங்களாலே வந்த ப்ரயோஜனங்களைக் குறித்தோ
3-அநுஞ்ஞா ரூபமாய் (அனுமதி ரூபம் )-வைதமான பகவத் ஸமாராதனம் என்றோ
4-காம்ய தர்மங்களுக்கும் காய சோஷண பர்யந்தமான மேல் வருகிற ஜீவாத்ம யோகத்துக்கும்
தத் துல்ய விசேஷண பரமாத்ம யோகமான உபாயாந்தரங்களுக்கும் யோக்யதா பாதங்களை உண்டாக்குகைக்கோ –
5-கேவல வைதமே யன்றோ -என்று
ஏவமாதிகளாலே விகல்பித்துக் காட்டினால்
(காம்ய கர்மங்களை செய்யும் இவர்களைக் குறித்து ஐந்து கேள்விகள் )

எங்களுக்கு இவ் விகல்பங்கள் ஒன்றும் தெரியாது –
தேவரீர் அருளிச் செய்தபடி செய்கிறோம் -என்றார் உண்டானால்
திருப்பல்லாண்டில் கூடியவர்களை போலே இவர்களையும் கூட்டிக் கொள்ளலாம் இறே –

கூடாதார் உண்டாகில்
வைதமானதுக்கும் ப்ரரோஜாகம் (ஆசை காட்டித் தூண்டுவது ) வாசி அறிந்து –
இவ் விதிக்கு ஆஜ்ஜா அதி லங்கன பரிஹாரம் என்று தெளிந்து –
மேல் போக மாட்டாமல்
விஹித ருசிக்காகச் சொன்ன ஆபாஸ வசனங்களை விஸ்வஸித்து
அவனுடைய சங்கல்ப நிபந்தனமாக வைதத்தைக் காம்யம் ஆக்குபவர்களைக் குறித்து –

பகவத் ஆஜ்ஜையை அழிக்க நினைத்துத் தட்டுப் படாதே
அவன் செங்கோலை நடத்தி அவனை உபசரியுங்கோள்
என்கிற அர்த்த விசேஷத்தை
காக சமராய் இருக்கிறவர்களை அழைத்து –
கோல் கொண்டு வா -என்கிற நியாயத்தாலே நியமிக்கிறார் –

————

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
காலிப் பின் போவாற் கோர் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா– 2-6-1-

பதவுரை

(அக்காக்காய்)–காக்கையே!
வேலிகோல்–வேலிக் கால்களிலுள்ள கோலை
வெட்டி–(வாளால்) வெட்டி (அதை)
விளையாடு வில்–லீலோபகரணமான வில்லாகச் செய்து
ஏற்றி–(அதிலே) நாணேற்றியும்,
கொழுந்து தாலியை–பனை மர கொழுந்தால் செய்த –சிறந்த ஆமைத் தாலியை
தடங்கழுத்தில்–(தனது) பெரிய கழுத்திலே
பூண்டு–அணிந்து கொண்டும்
பீலித் தழையை–மயில் தோகைகளை
பிணைத்து–ஒன்று சேர்த்து
பிறகு இட்டு–பின் புறத்திலே கட்டிக் கொண்டும்
காலி பின்–பசுக் கூட்டங்களின் பின்னே
போவாற்கு–போகி்ன்ற இவனுக்கு
ஓர் கோல்–ஒரு கோலை கொண்டு வா –
கடல் நிறம் வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
வளையும்படியான கோல்களை வெட்டி -என்னுதல்
பர வேரல் –
வேர் -என்று மூங்கிலுக்குப் பேராய் –
ரவ்வுக்கு லவ்வாய் -இகரம் ஏறி மூங்கில் போல் வெட்டி என்னுமாம்
லீலா உபகாரணமான வில்லாக வளைத்து –
அதிலே நாணை ஏற்றி

தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
ஆமைத்தாலி -என்னுதல்
தாலி என்று தால வ்ருஷ ஸம்பந்தத்தைக் காட்டுகையாலும்
கொழுந்து என்று அதில் வெண் குருத்தாய் -வெள்ளி போலே இருக்கையாலே –
அத்தை ஆபரணமாகத் தெற்றி பூணுவர் இறே இடையர் –

அன்றிக்கே
தாளி என்று பனைக்கு ஜாதிப்பேர் ஆகையால் தாளியை தாலி என்று சொல்லிற்று ஆகவுமாம்
தடவிதான கழுத்திலே பூண்டு –

பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
பீலிகளைப் பிணைத்துத் திரு முதுகிலே நாற்றி

காலிப் பின் போவாற் கோர் கோல் கொண்டு வா -கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா
மறித்து மேய்க்குமவனுக்கு கோல் வேணும் காண்
அவன் கோலை நீ மறையாதே கொண்டு வா அக்காக்காய் -என்கிறாள் –

இத்தால்
அவனுடைய ஆஜ்ஜையை நோக்குவதான சுத்த சம்சார விதியைக் காம்யம் ஆக்காதே
வைதம் என்று
பசு ப்ராயரை ரக்ஷிக்குமவனுடைய ஆஜ்ஜையை நோக்குகிற
சங்கல்ப ஸ்வா தந்தர்யத்தைக் கொண்டு வா -என்கிறார் –

———-

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தடக் கைக்கு தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா -2 6-2 –

பதவுரை

கொங்கு–வாஸனை பொருந்திய
குடந்தையும்–திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்–திருக் கோட்டியூரிலும்
பேரும்–திருப்பேர் நகரிலும்
எங்கும்–மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து–ஸஞ்சரித்து
விளையாடும்–விளையாடுகின்ற
என் மகன்–என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு–பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க–தகுந்ததான
நல் அங்கம் உடையது–நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா –
அரக்கு வழித்தது–(நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா –

கொங்கும் குடந்தையும்
கொங்கு மாறாத சோலைக் குடந்தையும் –
பூவும் பரிமளமும் ஒரு காலும் மாறாத சோலைக் குடந்தையும் –
கொங்கார் சோலைக் குடந்தை-(10-10-என்னுமா போலே
கொங்கும் -என்கிற
அபி -ஏவ காரமாய் –கொங்கு பொருந்தின சோலைக் குடந்தை -என்னவுமாம் –

அன்றியிலே
கொங்கு -என்று மேலைத் திக்காய் -அது ஸ்வாமி ஸ்தானமாய் —
அத்தால் வந்த பரத்வத்தையும் திருக் குடந்தையிலே சேர்க்கிறார் ஆகவுமாம் –
அழுந்தூர் மேல் திசை என்னக் கடவது இறே–

கோட்டியூரும்
திருக்கோட்டி யூரிலும்

பேரும்
திருப்பேரிலும்

எங்கும்
சொல்லிச் சொல்லா திருப்பதிகள் எல்லாம்

திரிந்து விளையாடும்
வ்யாமோஹத்தாலே எங்கும் செல்வது –
வ்யாமோஹ கார்யம் பலியா விட்டால் லீலா ரஸம் இறே சித்திப்பது

என் மகன்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடினால் போலே
கார்ய காரண பாவத்தையும் மாறாடி
என் மகன் -என்கிறார் –

சங்கம் பிடிக்கும் தடக் கைக்கு தக்க
ஈஸ்வரனுடைய நித்ய அபிமான -நித்ய அபிமதனுக்கும் விஷயமாய் –
மங்களா சாஸான பரனான அவனும் கூட தன்னுடைய ஆஜ்ஜையை
அகல் விசும்பும் நிலனும் –செங்கோல் நாடாவுதீர் -என்று
திரு வாழி ஆழ்வானையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் கொண்டு இறே
அவன் ஆஜ்ஜா பரிபாலனம் செய்வது –

அவன் ஆஜ்ஜைக்கு அடங்காதார் மேலே -இடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப -(இரண்டாம் திருவந்தாதி )- என்று
அவன் தன் கையிலும் அடங்காதே நின்று இறே கத கத என்று நின்று ஆர்ப்பது –
அப்படிப் பட்டவனை இறே அவன் திருக்கையிலே அடங்கப் பிடிக்கிறது –
செங்கோல் உடையவன் அவன் காண்
உன்னதோ

நல் அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா
அவன் கையில் கொண்டால் தான் இது நன்றுமாய் அசாதாரணமுமாய் ஆவது –
உன் கையில் இந்தக் கோல் கிடந்தால் சாதாரண மாத்ரமும் இன்றிக்கே அங்க ஹீனமும் காண்
(ஸ்வா தந்தர்யம் என்னும் கோல் நம்மிடம் இருந்தால் கண்ணை குத்திப்போம் ஞானம் மழுங்கும் )
பசுப் பிராயரான நீங்களும் ரக்ஷைப் பட வேண்டி இருந்தீர்கள் ஆகில்
அவன் கையில் அந்தக் கோலைக் கொடுத்து
அந்தக் கோலின் கீழே வச வர்த்திகளாய் வர்த்தியுங்கோள் என்கிறார்

அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா
அரக்கு இலச்சினை செய்த கோல் காண்

எல்லாரையும் நியமிக்கிற கோல் காண்
அது தான் தர்சநீயமாய் காண் இருப்பது
அந்த இலச்சினை அழியுமாகில் விவர்ணமாகும் காண்
ஆஸ்ரயம் மாத்திரமேயோ -வர்ணம் தானும் போகாமல் பேணப் போகாது காண்

(நிரங்குச ஸ்வ தந்த்ரனாக இருப்பதாலே தானே சர்வ ரக்ஷகன் ஆகிறான் )

———–

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

பதவுரை

கறுத்திட்டு–கோபித்து
எதிர் நின்ற–தன்னை எதிரிட்டு நின்ற
கஞ்சனை–கம்ஸனை
கொன்றான்–கொன்றவனும்
எதிர் வந்த–(தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த
புள்ளின்–பகாஸுரனுடைய
வாய்–வாயை
பொறுத்திட்டு–(முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்–(பின்பு) கிழித்தவனும்
நெறித்த–நெறித்திரா நின்றுள்ள
குழல்கள்–கூந்தல்கள்
நீங்க–ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக
முன் ஓடி–கன்றுகளுக்கு முன்னே போய்
சிறு கன்று–இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு–மேய்ப்பவனுமாகிய இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா –
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் -(கலியன் )-என்கிறபடியே
இவன் திரு அவதரிக்கப் புகுகிறான் என்று உருவின வாளோடே ஹிம்சிப்பானாக எதிர்த்து நின்ற கஞ்சனை என்னுதல் –
ஜன்மாந்தரத்தில் கால நேமியான வாஸனையாலே வந்த நெஞ்சில் கறுப்போடு இறே எதிர் நின்றது
அந்த பிராதி கூல்யத்தையும் பிழைத்துப் போனவனை அனுகூல தர்சனம் செய்வித்து அழைத்தது இறே –
நேர் கொடு நேர் எதிர்ந்தது ஆவது –

(கறுத்து நின்ற கஞ்சனை
எதிரிட்டு நின்ற கஞ்சனை
இரண்டுக்கும் வியாக்யானம் )

பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
எதிரே வாயை அங்காந்து கொண்டு கதறி வந்த அதிர்ச்சியைப் பொறுத்து
அந்தப் புள்ளின் வாயை அநாயாசேன கீண்டு தன்னை நோக்கித் தந்தவன் –

நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
நீண்டு கவிந்து சுருண்ட குழல்களை நீங்க முன்னோடி
கன்றுகளுக்கு முன்னோடி என்னுதல்
குழல் கவியாமல் பின்னே நீங்க என்னுதல்
இப்படி அதிர ஓடி

சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
ஸ்வ ரக்ஷணத்தில் அன்வயம் இல்லாத அளவன்றிக்கே –
புல்லைக் கசக்கிக் கொடுத்து
மிடற்றுக்கு உள்ளே இழியும் படி பண்ணி
இறங்கின வாறே மிகவும் உகந்து இறே சிறுக் கன்றுகள் தான் மேய்ப்பது –

தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
இங்குள்ள தேவர்கள் ஆதல்
(நிலத்தேவர் –பூ ஸூரர்கள் -இளம் கன்று போல் இருப்பவர்கள் )
அங்குள்ள தேவர்கள் ஆதல்
இரண்டு விபூதிக்கும் உபகாரகன் இறே –

—————-

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2 -6-4 –

பதவுரை

ஒன்றே–(‘பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை
உரைப்பான்–சொல்லுபவனும்
(மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற)
ஒரு சொல்லே–ஒரு சொல்லையே
சொல்லுவான்–சொல்லுபவனும்
துன்று முடியான்–(நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான
துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில்
சென்று–தூது போய்
அங்கு–அவ்விடத்தில்
பாரதம்–பாரத யுத்தத்தை
கையெறிந்தானுக்கு–உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா –
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா –

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
குண த்வயங்கள் தலை எடுத்த காலத்தும்
ஸத்யம் தலை எடுத்த தேச காலத்திலும்
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
குண த்வயம் தலை எடுத்த காலத்தில் சொன்ன ஸாத்ரவமே இறே ஸத்வம் தலை எடுத்த காலத்திலும் சொல்லுவது

அன்றிக்கே
ஸாமத்தாலும் (சாத்விக உபதேசத்தாலும் )-தானத்தாலும் -பேதத்தாலும் -தண்டத்தாலும் பேதித்தாலும்
ரஹஸ்ய பரம ரஹஸ்யங்களிலும் பொருந்தாமையே அவன் நெஞ்சில் கிடப்பது –

ஸத்யவாதிகள் குண த்ரயங்கள் பேதித்தாலும் ஒரு படிப்பட்டே இருந்தார்களே யாகிலும்
முக்கிய தர்ம பிரதானர்கள் ஆகையால்
அவஸ்தா அனுகுணமான வா பக்ஷ நியாயத்தாலே பேதிக்கவும் கூடும் இறே –

(வா பக்ஷ -இதுவோ அதுவோ
அஹிம்சா பரமோ தர்மம்
பசு மாடு -கண் பார்க்கும் பேசாதே
வாய் பேசும் பார்க்காதே
சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் )

ஓவ்பாதிக வசன சித்தர் ஆகையால் –
ஓவ்பாதிக தர்ம பரி பாலகரே யானாலும் முக்கிய தர்ம பிரதான ஆகையாலே –
அவஸ்தா அனுகுணமான வார்த்தைகள் அருளிச் செய்யார் இறே பெருமாள் –
அது போலே இறே இவனும் பத்தூர் ஓரூர் என்றாலும் பர்யாய சப்தம் ஒழியச் சொல்லுவது இல்லை –

(ஓவ்பாதிகம் -சங்கல்பம் எடுத்து மனுஷ்ய தன்மைக்குத் தக்க செயல் –
ஸத்ய பாஷா ராமன்
ம்ருது பாஷா ராமன்
ஆந்ரு சம்சயம் பரோ தர்மம் -சரணாகத ரக்ஷணமே பிரதானம் )

துன்று முடியான் துரியோதனன் பக்கல்
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவானாய்
துன்று முடியானாய் இருக்கும் துரியோதனன் பக்கல்
ரத்நாதிகளால் நெருங்கி அலங்க்ருதமான அபிஷேகத்தை உடையவன் என்னுதல் –
அபி ஷிக்த ஷத்ரியராலே ஒருவருக்கு ஒருவர் நெருங்கி சேவிக்க இருக்கிறவன் -என்னுதல்

சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு
அங்கே சமாதானம் செய்யலாமோ என்று பலகாலும் சென்று இசைத்துப் பார்த்த அளவிலே பொருந்தாமையாலும்
யுத்தத்திலே பொருந்துகையாலும்
யுத்தம் தானும் தர்மம் ஆகையாலே இது தன்னிலே நிலை நின்றமை தோற்ற கை தட்டு என்ன
அந்நிய பதார்த்தங்களைக் கொண்டு கார்யப்பாடு அறிந்தால் போலே இருக்கிறது காணும்
வெற்றி கூறிக் கை தட்டின படி என்னுதல்
அங்கே சென்று இசைந்து போந்து இங்கே கையும் அணியும் வகுத்து எறிந்தவன் -என்னுதல்
எறிதல்-வீசுதல்

கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
புல் கவ்வி மேய மாட்டாதவையாய் –
பறித்துக் கசக்கிக் கொடுத்தாலும் இறங்கும் தனையும் பார்த்து இருக்க வேண்டுகையாலும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தராய் இருப்பார் அளவில் திரு உள்ளம் ஊன்றி இருக்கும் போலே காணும் –
அவனுக்கு நிறக்கேடு வாராமைக்காக கோல் கொண்டு வா

கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா
கடல் நிறம் போலே இருக்கிற திரு மேனியை உடையவனுக்கு அத்விதீயமான கோல் கொண்டு வா –

—————

சீர் ஓன்று தூதாய் துரியோதனன் பக்கல்
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பாரதற்க்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு ஓர்  கோல் கொண்டு வா
தேவப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-5 –

பதவுரை

துரியோதநன் பக்கல்–துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக
சீர் ஒன்று தூது ஆய்–சிறப்பு பொருந்திய தூதனாகப் போய்
ஊர் ஒன்று வேண்டி–(பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும்
பெறாத–அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான
உரோடத்தால்–சீற்றத்தாலே
பார் ஒன்றி–பூமியில் பொருந்தி யிருந்து
பாரதம் கை செய்து–பாரத யுத்தத்தில் அணி வகுத்து
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு–ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா—;
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா—;

சீர் ஓன்று தூதாய் –
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றில் இறே சீரோடு தான் ஒன்றினான் ஆவது –
தான் குணத்திலே ஒன்றினால் இறே எல்லார் பக்கலிலும் சீர் தான் ஒன்றிற்று ஆவது –
பாண்டவாதிகள் பக்கல் கண்ட குணங்களை துரியோத நாதிகளுக்கும் உண்டாக்க வேணும் என்று இறே
ஸ்ரீ தூது எழுந்து அருளிற்று என்னுதல்
இவர்கள் தங்கள் பக்கல் கண்ட குண லேசங்கள் நிலை நின்றது ஆவதும் இவன் தூது போக இசைந்தால் இறே
இசைந்திலேன் ஆகில் சோறு சுட்ட போதூதினால் -இவன் ஜாதி ஷத்ரியனோ -என்றால் போலே
தங்களுக்குத் தோற்றிற்று சொல்வார்கள் இறே இவர்களும் –

அன்றிக்கே
துவாரகா நிலயா அச்யுத -என்று இறே அவள் தான் சரணம் புக்கது –
அந்தத் திரு நாம பிரபாவம் நிலை நிற்கும் போதும் தூதுக்கு இசைய வேணும் இறே

அன்றிக்கே
இன்னார் தூதன் என நின்றான் -என்கிறபடியே
அவன் தன் படியாலும் -தூதுக்கும் இசைய வேணும் இறே
தன் படி யாவது –
நிரங்குச ஸ்வா தந்தர்ய நிபந்தமான ஆஸ்ரித பாரதந்தர்யம் இறே
அது இறே இதில் கொள்ளலாவது
அவன் ஒரு காரியத்தில் உபக்ரமித்தால் நிவாரகர் இல்லை இறே
அது தான் இறே ஆஸ்ரித பாரதந்தர்யம் ஆவதும் –
இவனும் (அர்ஜுனனும் )சாபராத ஸ்வ தந்திரனாய் இருக்கச் செய்தே இறே
(தர்மம் அதர்மம் அறியாமல் -போன்ற மூன்று அபராதங்கள் )
ஆஸ்ரயித்து தன்னை குணவானாக நினைத்து இருப்பது –

அவனும் அப்படியே இறே
அஹம் ஸப்த வாஸ்யன் இறே மாம் என்று தோற்றினான் –
த்வத் ஆஸ்ரிதாநாம்( த்வதீய கம்பீர –இத்யாதி அடியார் பின் தொடர்ந்து வேதம் செல்லும் படி ஸ்தோத்ர ரத்னம் )
பாண்டவ தூதன்
என்ற போது ஆய்த்து -அவன் பிறந்து கால் பாவி நிலத்திலே நின்றது –

ப்ரஹ்மண அநு ஜ்ஞா பூர்வகமாகவும் -உதக பூர்வகமாகவும் -நாம் யஜ்ஜம் தலைக் கட்டினால்
த்ரவ்யத்தால் வந்த லுப்ததை பாராதே நாம் அலாபத்தாலே ஸந்துஷ்டாராய் இருக்குமா போலே இறே
இவனும் ஸந்தோஷித்து நின்ற நிலை –

(ரகு -விஸ்வஜித் யாகம் செய்து தனம் போனாலும் மகிழ்ந்தாரே
மரப்பாத்திரம் கொண்டு அர்க்க்யம் –14 கோடி வராகன் தானம்
அனைத்தும் கொடுத்து இருந்தாலும் ஒன்றும் இல்லா விட்டாலும் திருப்தியாக இருந்தான் என்று காளிதாசன் ரகுவம்சம்)

துரியோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப்
அவன் சேவகம் எல்லாம் கண்டோம் இறே
பொய் ஆஸனம் இட்டு -சில ப்ரதிஞ்ஜைகளையும் செய்து – நிஷ் பிராணனாய் இருந்த போதே
அம்சித்துக் கொடாயாகில் பத்தூரைக் கொடு -அதுவும் செய்யாயாகில் ஒரூரைக் கொடு என்ற அளவில் –
அவன் இசையாமல் -அவர்களுக்கு தர்மம் உண்டு -தர்மத்தாலே ஸ்வர்க்காதி லோகங்கள் உண்டு –
எங்களுக்கு இத்தனை அன்றோ -உள்ளது என்று அவன் மறுத்த அளவில் –
தான் வந்த கார்யம் பலியாமையாலே திரு உள்ளத்தில் சீற்றம் கிளம்பின படியால் –
வீர போஃயை அன்றோ வஸூந்தரை -பத்தூர் ஓரூர் என்று சொல்லுகிறது என் என்று துரியோதனன் சொல்ல
இவரும் வீர போஃயை அன்றோ வஸூந்தரை-இவன் இது தன்னிலே இசையப் பெற்றோமே -நாம் வந்த கார்யம் பலித்ததே -என்று
இன்னார் தூதன் என நின்ற போதிலும் காட்டில் திரு உள்ளத்தில் ஸந்தோஷம் பிறந்து
நிலத்திலே திருவடிகள் பதித்துக் கொண்டு பொருந்தினது -இப்போது இறே –

பாரதம் கை செய்து
யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து –

பாரதற்க்கு
விஸ்ருஜ்ய ச சரஞ் சாபம் -என்ற அந்த சமர்த்தர்க்கு

தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு ஓர்  கோல் கொண்டு வா
அத்விதீயமான தேர் என்னுதல்
சத்ரு ஐயத்துக்கு ஆயுதம் எடுக்க ஒண்ணாமையாலே -ஆயுதம் ஆயிற்று -என்னலாம் படி
நாலு சாரி விட்டுத் தேர்க் காலிலே மடியும்படி துகைத்துப் பொகட்ட தேர் என்னுதல்

தேவப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
ஸூரி நிர்வாஹகர்க்கு –

———-

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –
பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தை கிடந்தாற்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6- 6-

பதவுரை

(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)
ஆலத்து இலையான்–ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்–(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும்
நிலம் கடலுள்–கரு நிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்–வெகு காலமாக
கண் வளர்ந்தான்–யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே–குழந்தைப் பருவமே தொடங்கி
பார்த்தற்கு–அர்ஜுநனுக்கு
அருள் செய்த–க்ருபை செய்த
கோலம்–அழகிய வடிவத்தை யுடைய
பிரானுக்கு–தலைவனுமான இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா;
குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்–
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலே திரு அநந்த ஆழ்வானும் —
சென்றால் குடையாம் -என்கிறபடியே
அவன் வடதள ஸாயி -என்னும்படி திரு அவதரித்த ரஹஸ்யம் இப் பாட்டுக்குத் தாத்பர்யம் –

ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ -விண்ணதோ -மண்ணதோ -சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –(முதல் திருவந்தாதி )
என்று பிரார்த்தித்துக் கேட்டார் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
அத்து -சாரியை ஆதல் –
ஆலான அத்தினுடைய என்று விபக்தியான போது -தான்றிச் சுட்டாய் –
அதுக்கு ஹேதுவான ஒன்றைக் காட்டும் இறே
அந்த ஹேது தான் இருக்கிற படி –

நீலக் கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –
நீலக் கடல் என்று இது தான் ஆதல் –
திருமேனியில் ப்ரபையாலே –முகில் வண்ண வானம் -என்கிறபடி ஷீராப்தி தான் ஆதல்
கடைகிற கால முறையிட்ட ஓவ்ஷதங்களால் வந்த வைவர்ணயம் மாறாமையாலே நீலக் கடல் என்றாதல் –
அந்த விவர்ணத்துக்கு காலாந்தர ஸ்திதி இல்லை என்று தோன்றினாலும்
தத் கால விசேஷண ப்ரஸித்தி நிரூபனம் ஆகையாலே நீலக் கடல் என்னவுமாம் –

குண தோஷங்கள் ஆகந்துக நிரூபனம் ஆனாலும் –
அந்த ஜாதி வியக்தி உள்ளதனையும் சொல்லாய் இருக்கும் இறே –

இக் கடலான போது
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்- என்றும்
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -என்றும் சொல்லுகிறபடியே
கடல்கள் தோறும் -திருப்பள்ளி அறை உண்டு என்னவுமாம் –
இப்படியான கடலுள் அரவின் அணை மேலான் -என்னும்படி –
யோக நித்திரை சிந்தை செய்து அநேக காலம் கண் வளர்ந்தான் –

பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த
இவனுடைய பிதாவான இந்திரன் -என் புத்திரனான அர்ஜுனனை ரக்ஷிக்க வேணும் -என்று வேண்டிக் கொண்ட படியாலும் –
தான் இவன் இடத்தே பக்ஷ பதித்து இருக்கையாலும் –
இவன் தானும் அவன் வார்த்தை கேட்டுப் போருகையாலும்
கண் மாளர் (கண் இழந்த த்ருதராஷ்ட்ரன் )பணிக் கொட்டிலிலே கண் வளருகிற காலம் தொடங்கி
அஞ்ஞாத ஞாபநம் செய்து போந்து இவன் பக்வானான பின்பு திரௌபதி ப்ரதிஜ்ஜை யாலும்
மிக்க கிருபையாலும் இறே தேர் தட்டிலே ஸ்ரீ கீதை முதலாக அருளிச் செய்ததும் –

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
இவ்வளவே அன்றிக்கே
தன்னுடைய ஸூரி போக்யமான விக்ரஹத்தை இவனுக்கு வச வர்த்தி யாக்கி –
முன்னே நின்று -காட்டிக் கொடுத்துக் கொண்டு ரஷித்த மஹா உபகாரம்

குடந்தை கிடந்தாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
மோக்ஷயிஷ்யாமி -என்ற அளவன்றிக்கே
கும்ப கோணே விநஸ்யதி -என்னும்படியான அளவு அன்றிக்கே
ஆவி அகமே தித்திப்பான் இறே
(அநிஷ்டம் தவிர்ப்பது மட்டும் இல்லாமல் இஷ்ட பிராப்தி ஆராவமுதாய் கிடந்து அருளுகிறார் )

நீலக் கடலுள்
அரவின் அணை மேலான்
நெடும் காலம் கண் வளர்ந்தான் –
ஆலத்து இலையான் (யானாய் )
பாலப் ப்ராயத்தே பார்த்தற்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தை கிடந்தாற்க்கு ஓர் கோல் கொண்டு வா–என்று அந்வயம் –

—————

பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா -2- 6-7 –

பதவுரை

(அக்காக்காய்!)
பொன்–அழகியதாய்
திகழ்–விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்–சித்ர கூட மலைச் சாரலில்
(பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்–(பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற–பதிந்த
(உனது இரண்டு கண்களில்)
ஒரு கண்ணும்–ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட–பறித்துக் கொண்ட
அ கற்றை குழலன்–அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்–க்ரூரன்;
(ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக)
உன்னை–உன்னை (ச்சீறி)
மற்றை கண்–(உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே–பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து–ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்-உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்-கற்றைக் குழலன்
சித்ர கூடம் கதே ராமே -என்கிறபடியே பொலிவை உடைத்தாய் –
விளங்கா நின்றுள்ள -சித்ர கூட பர்வத பார்ஸ்வத்திலே
நாய்ச்சியாரும் தாமும் எழுந்து அருளி இருக்கச் செய்தே
ரஜோ குண பிரசுரனான ஜெயந்தன் விஹிதமான கர்ம பல அஹங்காரத்து அளவில் நில்லாமல்
தாமஸ ராஜஸம் தலை எடுத்து -அத்தாலே விஷய ப்ராவண்யம் தலை எடுத்து –

ஜன்ய ஜனக விபாகம் பாராமல் –
தேவ சரீரத்திலும் காக சரீரத்தை உத்தேச்யமாக நினைத்து எடுத்து சில துஸ் சேஷ்டிதங்களைப் பண்ணுகையாலே
அத்தைக் கண்ட பெருமாள் இவனை நோக்கி மந்த கதியாக ஓர் அஸ்திரத்தை விட
அது இவனுக்கு முன்னோட்டுக் கொடுத்துப் பின்னே செல்ல

த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய-என்கிறபடி –
அனைத்தும் உலகும் திரிந்து ஓடி ஒதுங்க நிழல் அற்று -பிராண சா பேஷனாய்
தமேவ சரணம் கத -என்று கண்டக பிரபத்தி செய்து இருக்கச் செய்தேயும்
இவனுக்கு அபேஷா மாத்ர ப்ரதானமே அன்றோ வேண்டுவது -என்று திரு உள்ளம் பற்றி
வடிவு அழகில் உற்ற இரண்டு கண்ணில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் –

அந்த அஸ்திரம் தான் யதேஷ்ட அமோக சர்வ அஸ்திரம் இறே
தேவேந்திர தனய அஷி ஹா -என்று இறே திரு நாமம்
பொய்யர்க்கே பொய்யனாகும்
கொடும் கோளால் நிலம் கொண்ட
இரண்டு கண்ணும் விஷய தர்சனம் செய்தால் இரண்டையும் அழிக்க ப்ராப்தமாய் இருக்க –
ஒன்றை அழியாதே இருந்தது –
குழல்கள் இருந்த வா காணீரே -என்கிற கற்றைக் குழலனைக் காண்கைக்காகவே இறே
லகுர் தண்ட ப்ரபந்நஸ்ய -என்கிறபடி -பிரபன்னனுக்கு லகு தண்டமே உள்ளது இறே
கற்றை -செறிவு
அவன் கையில் ராவணாதிகள் பட்டது அறிவுதியே –

விரைந்து உன்னை -மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
உன்னை மற்றைக் கண் கொள்ளாமே விரைந்து கோல் கொண்டு வா –
கற்றைக் குழல் காணும் போது ஒரு கண் கொண்டு காண்கை போராது என்று இறே
ஒன்றையும் இரண்டு ஆக்கிற்று –
ஓன்று இரண்டாக கண்ணும் போகாமல் இனியாகிலும் ஆஜ்ஜா அதி லங்கனம் செய்யாதே
அவனுடைய ஆஜ்ஜையை அவன் கையிலே கொடுக்கப் பாராய் –
அவன் பிரபத்தி கண்டகமாய் இராது என்று காண் உன்னைக் குழல் வார அழைத்ததும் –
அந்தக் குழல் வாரிய காக்கைக்கும் இந்தக் காக்கைக்கும் வாசி
கள்ளர் பள்ளிகள் என்னுமா போலே

மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
நீல ரத்னம் போன்ற அழகையும்
ஸ்வா தந்தர்ய பூர்த்தியையும் உடையவன் காண்

———–

மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழத்
தன்னிகர் ஒன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைதாற்க்கு  ஓர் கோல் கொண்டு வா -2- 6-8 –

பதவுரை

மின்–மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை–இடையை யுடைய
சீதை பொருட்டா–ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்–லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்–ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ–ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா–தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை–வில்லை
கால் வளைத்து இட்ட–கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு–விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு–ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.

மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர்–மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழத்
தன்னுடைய வர பல புஜ பலங்களையும் -மதிளையும்-அகழியையும் கண்ட கர்வத்தாலே
செய்வது ஒன்றும் அறியாமலேயே
மின் போலே இடையை யுடையளாய் –
கர்ப்ப கிலேச ரஹிதையாய் இருக்கிறவளைப் பிரிகையாலே
அதுவே ஹேதுவாக இலங்கையில் உள்ள ராக்ஷசர்க்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனுடைய
ரத்நாதிகளாலே அலங்க்ருதமாய் இருக்கிற முடிகளைத் தான் தலையற்று வீழத் தொடுத்த அளவிலும்
முடிவு காணாமையாலே பத்தும் சேர ஓர் அம்பாலே விழும்படி –

தன்னிகர் ஒன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட-மின்னு முடியற்க்கு ஓர் கோல் கொண்டு வா-
உபமான ரஹிதமான வில்லை வளைத்து
விஜய அபிஷேகம் செய்தவன் காண்

வேலை அடைதாற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைத்ததும் சாபமா நய -என்று இறே –
(ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -செருவிலே செற்ற -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் )

———–

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்கைக்கு
மன்னன்–அரசனாகிய ராவணனுடைய
சிரம்–தலைகளையும்
தோள்–தோள்களையும்
துணி செய்து–(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு–ஒளி வீசுகின்ற
பூண்–ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு–ராம பக்தியால் பூர்ணன் விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்–என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு–ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற–என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு–மின்னல் போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;
வேங்கடம்–திருமலையில்
வாணற்கு–வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
மித்ர பாவம் -என்ற மாத்திரத்தாலே
ராவண அநுஜன் என்று பாராமல்
நத்யஜேயம் -என்று ரஷித்தவனுக்கு
கீழ் பிராட்டி பொருட்டாக செய்தது எல்லாம் ஒன்றாய் இருந்ததோ -என்கிறார் –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து விடுவதற்கு முன்பே இறே –
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
மிக்க தேஜஸ்ஸை யுடைத்தான ஆபரணங்களை உடையவனாக ராவண அனுஜனாய்
வாழ்ந்தது எல்லாம் அநர்த்தம் என்று இறே
அவனை துர் வ்ருத்தன் என்று போந்த பின்
அந்தரிக்ஷ கதனாய் நிற்கச் செய்தே
ஸ்ரீ மான் என்னும்படியான பூர்ணன் ஆனுவனுக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்று -அபிஷேகம் செய்த பின்பு இறே சிரந்தோள் துணி செய்தது

மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
மின் போலே அதி பிரகாசத்தை உடைத்தான் திரு அபிஷேகத்தை உடையவனும் –
ஆரம் –முத்தா முக்தா -ஹாரம்

அன்றிக்கே
ராம குண ஆபரணம் அவருக்கு
விபீஷண குண ஆபரணம் இவருக்கு -என்னவுமாம் –

பவான் நாராயணோ தேவ -என்றத்தை என் நாமம் -என்னப் பெற்றேன் என்று –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத் மஜம் -என்று
என் பேர் ராமன்
எங்கள் தமப்பனார் பேர் தசரதன்
எனக்கு நிரூபக நாமம் தாசாரதி -என்றது இறே இலங்கு நாமம் –

நந்தன் மைந்தனாக வாகும் நம்பி -என்னுமா போலே
விபீடணற்கு நல்லான் என்றது
தாசாரதி என்றபடி இறே –
நாராயணம் -என்ற இது சிறுப் பேர் போலே காணும்
அதுக்குப் பரிகாரமாக நம -என்று ப்ரஹ்வீ பவித்தார் இறே

வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா
இராமனாய் மிடைந்த ஏழு மரங்களும் அடங்க எய்து வேங்கடம் அடைந்த மால் -என்கையாலே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கட வாணன் காண்-
நிரங்குச ஸ்வா தந்தர்யம் நேராக ஜீவிப்பது இங்கே காண்
இவன் ஆஜ்ஜையைக் கொண்டு வா –

———

திருக் குழல் பேணின காக்கைக்கும் இதுக்கும் வாசி என் என்னில்
நீர்மையால் வந்த ப்ரபத்தியும்
மேன்மையால் வந்த நிராங்குச ஸ்வா தந்தர்யமும்

ஒன்றாகத் தான் காக்காய் என்னாதே
அக் காக்காய் என்றது
அகார ஸப்த வாஸ்யனுடைய ரக்ஷை -என்றபடி –
அ-என்கிற இது பிரதம அபி தானம் இறே

ரக்ஷைக்கு விஷயமானது ரஷ்யம் ஆகையாலே -அக் காக்காய் -என்று சம்போதிக்கிறார் –
விஞ்ஞானம் யஜ்ஜம் தனுதே -என்று
விஞ்ஞான ஸப்தம் ஞாதாவையும் ஆஸ்ரயத்தாலே காட்டி –
அந்த ஞாதாவினுடைய ஞானம் ஜேய சாபேஷமாய் இருக்கையாலே
யஜ்ஜத்தையும் காட்டினால் போலே
ரக்ஷண வாசியான ஸப்தம்
ஆஸ்ரய த்வாரா ரக்ஷகனான அகார ஸப்த வாஸ்யனையும் காட்டி –
ரக்ஷகனுடைய ரக்ஷை சேதன சா பேஷமாய் ரஷ்யத்தைக் காட்டுகையாலே
அத்தை காக்கை -என்று சம்போதிக்கிறார் –

மற்றும் பூவை -கிளி குயில் மயில் -அன்னம் பல்லி காக்கை -என்றால் போலே
இவற்றைப் பார்த்து சில கார்யங்களைக் குறித்து பல இடங்களிலும் –
அன்யாபதேசமும் ஸ்வாபதேசமும் கொண்டார்கள் இறே

நம்பிக்குக் கோல் கொண்டு வா என்ற மர்மம் -இந்தக் காக சமராய் இருப்பார் –
அவனுடைய ஆஜ்ஜை நோக்காத போது
அவனுடைய சங்கல்ப நிபந்தநமான ஸ்வா தந்தர்யம் வரை இடும் என்று அன்று –
அவனுடைய ஸ்வா தந்தர்யத்தை நோக்கி அல்லது உங்களுக்கு எல்லாம் பிழைக்கலாம் விரகுகள் இல்லை –
அவன் ஸ்வா தந்தர்யத்தில் ஊன்றின ஸங்கல்பத்தில் கொடுமையை நினைத்துத் தட்டுப் படாதே கொள்ளுங்கோள் –

அது மழுங்காத சங்கல்பம் என்று அறிந்து –
நீங்கள் அவன் ப்ரபத்தியை உணர்ந்து -அவன் திருவடிகளில் விழுந்து –
கரிஷ்யே வசனம் தவ -என்று அவன் ஸ்வா தந்தர்யத்தை நோக்கினால்
இவர்களால் நாம் ஸ்வ தந்த்ரன் ஆனோம் என்று அவன் உகக்கக் கூடும் –
அத்தைக் கண்டு இறுமாவாதே மேலே மேலே போந்து மங்களா ஸாஸனத்திலே வாருங்கோள் –
என்னோடே கூடுங்கோள் -என்கிறார் –

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களை பெற்று மகிழ்வர் இவ்வையத்தே -2 6-10 –

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
நம்பிக்கு கோல் கொண்டுவா என்று–உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று
நம்பி-தீம்பில் பூர்ணன்
மிக்கான் உரைத்த சொல்–-தேவகி பிராட்டியைக் காட்டில் மிக்கு=சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லி புத்தூர் பட்டன்–ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்–அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்–ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர்

அக் காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா என்று மிக்காள் உரைத்த சொல்
அவள் அழுகை மருட்டிச் சொன்ன பிரகாரத்தை
புத்ரத்வ நிபந்தநமான அபிமான ஸ்நேஹம் ஆக்கி
ஸ்வரூப அனுரூபமான மங்களா ஸாசனத்தோடே சேரும் படி

வில்லிபுத்தூர் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
ஓக்க அருளிச் செய்த இந்த தமிழ் பத்தும்
சா பிப்ராயமாக வல்லவர்கள்

மக்களை பெற்று மகிழ்வர் இவ்வையத்தே
மக்கள் -என்பது மனுஷ்யரை
அதாவது
சிஷ்ய
புத்திரர்களை
மங்களா ஸாஸன பர்யந்தமான பிரபத்தி குலையாதவர்களைப் பெற்று மகிழ்வார்கள்
மகிழ்ச்சிக்கு விஷயம் இவர்கள் இறே

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: