ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-5–பின்னை மணாளனை—

பிரவேசம் –
கீழே -மஞ்சன மாட்டியவற்றை -என்று திரு மஞ்சனம் செய்தாராய் நின்றார் –
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய் -என்கையாலே
அயோத்தியாம் அடவீம் வித்தி -என்கிற அர்த்தம் தோன்றில் –
த்யாஜ்யதயா ஞாதவ்யம் ஆவது -கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் இறே

இத்தை நினைத்து இறே
மித்ர பாவேந -என்றும்
நத்யஜேயம் -என்றும்
ஸதாம் -என்றும் –அருளிச் செய்தது –
(சத்துக்கள் -விபீஷணனை ஏத்துக் கொள்ளாமல் இருந்தால் கர்ஹிப்பார்களே )
ஆகையால் அங்கு மித்ர பாவம் கண்டு கால் தாழ்கிறார் அன்று –

சிலர் இவ்வூரை த்யஜிக்க வேணும் என்ன -எங்கனே விடுவது என்று தளும்புகிறார் அன்று –
(விபீஷணனை விட சிலர் பல காரணங்களும் சொன்னாலும் )
அவர்களை விட வேணும் என்று நிர்ணயிக்க
விடில் சத்துக்கள் கர்ஹிப்பர்
அவர்கள் கர்ஹியாமல்
என்னை விடுவது அன்றோ உள்ளது என்றால் இந்த வார்த்தையில் கருத்து அறிந்து
இசைகைக்கு ஒரு திருவடி மஹா ராஜர் முதலானோரும் இங்கே இல்லை –
(இங்கு கிருஷ்ண அவதாரத்தில் இல்லை )

ஆகையால் காடு த்யாஜ்யமும்
கடற்கரையும் கான வெண் குரங்கு முதலானோரும் உபாதேயமாகத்
திரு உள்ளம் பற்றி இறே —
ஸக்ருத் ஏவ –ஏதத் வ்ரதம் மம -என்று வெளியிட்டதும் –

(காடு ரிஷிகள் உபாயாந்தர ப்ரயோஜனாந்த நிஷ்டர் ஆகவே பிடித்தம் இல்லை த்யாஜ்யம்
இங்கு-கடல் கரையில் சரணாகதி தானே
இங்கு அக்காக்காய் பறவை உத்தேச்யம் ஆனால் போல் –
விலங்கு வானர ஜாதி வீறு பெரும் ராமாவதாரத்தில்
ஆழ்வார்கள் காலத்தில் பக்ஷிகள் வீறு பெற்றனவே )

இவ்வளவேயோ
பக்ஷி ஜாதங்களைப் பல இடங்களிலும் ஆழ்வார்கள் ஆச்சார்ய துல்யராக்கி நபும்சகமும் தோன்ற
தூது விடவும் கண்டோம் இறே
(சேர்ப்பார்களைப் பக்ஷிகள் ஆக்கி ஞான அனுஷ்டானம் -இரண்டு இறக்கைகள் )

திருத்தாய்-(10-10-) -கரையாய் -சொல்லாய் -என்று த்ரிகாலஞ்ஞர் பலரும் உளவாய் இருக்க
ஹித வசன சா பேஷாராய்க் கேட்டதும் இவற்றை-( பக்ஷிகளை ) இறே
இவற்றை வைத்துக் கொண்டு பிள்ளாய் -என்றது இத்தை இறே –
(கரையாய் காக்கை பிள்ளாய் -அங்கே பாசுரம் )

ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான ஈஸ்வரனும் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும்
அறிவார்களையும் அறிந்தார்களையும் அறியார்களாக நினைத்து அறிவிக்கைக்காக இறே
(அஞ்ஞர் -ஞானிகள்–ஞான விசேஷஞ்ஞர்கள்– சர்வஞ்ஞன்-நான்கு பேருக்கும் உபதேசிப்பர் )
இவற்றினுடைய (பக்ஷிகளுடைய ) ஸ்திதி கமன சயனாதிகளை அபேக்ஷிக்கிறதும் –

இவ்வளவும் யோக்யம் இல்லாத கடலை அவன் திரு உள்ளத்தில் கருத்து அறிய முன்னிலை யாக்கி அபேக்ஷித்ததும் –
கடல் கூடாமையாலே கர்ஹித்ததும் –
அந்த ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனானவன் தான் திரியும் கானம் கடந்து -தன் திரு உள்ளக கருத்தை அறிவித்தால்
பொறுப்பார்க்கு அருளிச் செய்தது அறியாமையால் அன்றே –
(சுக்ரீவாதிகளை வியாஜ்ஜியமாக்கி அங்கு அருளிச் செய்தது
இங்கே காக்கையை வியாஜ்ஜியமாக்கி அருளிச் செய்கிறார் என்றபடி )

காக்கையால் சொல்லுகிறது
முக் குணத்து இரண்டு அகற்றாத அளவன்றிக்கே இரண்டிலே நெஞ்சு பொருந்தும்படி நின்ற நீசரானவர்களைக் குறித்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -மாலை வாழ்த்தி வாழ்மினோ (திருச்சந்த )-என்று
மங்களா சாசனத்துக்கு ஆளாக உபதேசத்தால் போலே

இவரும் தமோ குண பிரசுரராயும் ரஜோ குண பிரசுரராயும் இருக்கிறவர்களை –
காக்கை என்கிற வியாஜத்தாலே –
ப்ரபத்தியில் கிரியா பதத்துக்கு முற்பாடன் அவனான பிரகாரத்தை உணர்த்தி
மங்களா சாசனத்தில் சேர்ப்பதாக
வந்து குழல் வாராய் என்கிறார் –

இந்த குண த்வயம் இதில் பக்கல் கண்டபடி என் என்னில்
அபஷய பக்ஷணங்கள் நிஷித்தங்கள் அத்யந்த நிஷித்தங்கள் பஷிக்கையாலும்
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் ஸ்நானம் செய்து ஜீவிக்கையாலும்
பிதர்யமான கர்மங்களிலே சில பிண்ட விசேஷங்களையும் பிசாசா ஆராதனை முதலான பிண்டங்கள் தண்ணீர்
முதலானவற்றை பூத யஜ்ஜ மாத்ரமே அன்றிக்கே
வரித்து இதுக்கே இட வேணும் என்ற நிர்பந்தம் உண்டாகையாலும் –
இனம் சேர்ந்து ஜீவிக்கும் அபிமான விசேஷங்களாலும்

ஸ்வ புத்ரர்களோடு பர புத்ரர்களையும் ஸ்வீ கரித்து (குயில் குட்டிகளையும் வளர்க்கும் )
வளர்த்துப் பரிணமித்த வாறே துல்ய விகல்ப விசேஷ ரூப சித்தியும் பாராமல் வ்யவஸ்திதமான
வாக் வ்யவஹார மாதுர்ய சித்தி கண்டு அங்கீ கரியாத அளவே அன்றிக்கே
கர்ப்ப தோஷ நிரூபணம் செய்து நீக்குகிற அஸஹமாநத்வத்தாலும்
தன் இனம் ஒழிய மற்றோர் இனம் கூடி ஜீவியாமையாலும் –
கண்டக ப்ரபத்தியாலே பிராணன் பெற்றோம் என்று கர்வித்து அஸ்திரமே ஒரு கண் அழிவு செய்தது அறியாமையாலும்

மித்ர மவ்பயிகம் கர்த்தும் -என்றும்
பாபா நாம் வா ஸூபா நாம் வா -என்றும்
பிரதி கூலனையும் -அனுகூல அக்ரேசனையும் வாசி அறத் திருத்தப் பார்த்துத் திருத்துமவள் உண்டாய் இருக்க
இவள் நிறத்திலும் தப்பின பிழை உணராமல் ஜ்யேஷ்டா தேவிக்குக் கொடியாக பிராணனை நோக்கித் திரிகையாலும்
இவற்றால் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கும் குண த்வய நிஷ்டர் படி சொல்லலாம் இறே –

இனி லோகத்தில் பிள்ளைகள் அழுகை மருட்டுகைக்காக –
அக்காக்காய் -சுக்குருவி -சந்திரா வா -என்றால் போல்
சொல்லுகிற லோக யுக்தி வ்யாஜத்தாலே சொல்லுகிற யசோதா பிராட்டி பாசுரத்தை உட் கொண்டு
குண த்வய பிரசுரர் முதலாக எல்லாரையும் –
அவன் முற்பட்டு உங்களை செய்த ப்ரபத்தியால் வந்த தோஷத்தை
உணர்ந்து நீக்குங்கோள் என்று குழலை வியாஜ்யமாக்கி மங்களா சாஸனத்திலே மூட்டுகிறார் –
(அவன் ப்ரபத்தியால் வந்த தோஷத்தை -ஈடுபட்டால் வந்த தோஷம் நீக்குவது -சிடுக்கை எடுத்து )

இப்படிப்பட்ட அஞ்ஞரை முதலாக விஷயீ கரிப்பான் என் என்னில் –
அஞ்ஞனான விஷய ப்ரவணனைத் திருத்தி மேல் கொண்டு போகலாம் –
ஞான லவ துர் விதக்தனான அஹங்கார க்ரஸ்தனைப் போலே ஞானா வானான விஷய ப்ரவணனைத் திருத்த ஒண்ணாது —
என்று பிள்ளை லோகாச்சார்யார் (ஸ்ரீ வசன பூஷணம் –188-189) அருளிச் செய்கையாலும்
இவர்களை முற்பட விஷயீ கரித்தார் என்ன வேணும் –

இனி அஞ்ஞான பூர்த்தி உள்ளது தமோ குண ப்ரசுரராயும் ரஜோ குண பிரசுரராயுமாய் இருக்கிறவர்களுக்கு இறே –
இவர் கூழாள் -என்கிறது ஆரை என்னில் –
அந்நிய சேஷ பூதரை —

அந்நியரான சேஷிகள் இல்லாமையாலும் –
அந்நிய சேஷத்வ விதி இல்லாமையாலும் –
இவர் எங்கள் குழுவனில் புகுதல் ஒட்டோம் -என்று ஓர் இடத்திலும் கூட்டாமையாலும்
ராஜ தார ப்ராவண்ய நிஷேதம் போலே இது கூட்டிக் கழிக்கவும் பற்றாது –

வாழாள் -என்றது –
வாழாள் -என்றும்
ஆள் -என்றும்
நின்றீர்-என்றும் –மூன்று படியாய் இருக்கும் –

ஆள் -என்றது ஐஸ்வர்யத்தை அவன் பக்கலிலே பெற வேணும் என்று அபேக்ஷிக்குமவர்களை –
வாழாள் -என்றது -ஆத்ம அனுபவ சா பேஷரை –
நின்றீர்-என்றது -பக்தி ப்ரபத்திகளை உபாயம் ஆக்காமல் அவன் தன்னையே உபாயமாக்கி நிலை நின்றவர்களை –
இவை மூன்றும் த்வயத்தில் பூர்வ வாக்கியத்தில் காணலாம் –
ஒன்றே நிலை நிற்பது
(உத்தர வாக்கியம் சொல்வதே நாம் அவனுக்கு மாஸூச சொல்வது )

வந்து கொண்மின் -என்றது எத்தை குறித்து என்னில் –
உத்தர வாக்கியத்தில் -ஆய -பதத்தில் -வெளிற்றை (ஸ்வார்த்த போகத்தை) நமஸ்ஸிலே கழித்து –
கழியாத ஹித ரூப மங்களா ஸாஸன கைங்கர்யத்தைக் குறித்து –

இவ்வாட்படும் பிரகாரங்கள் காணலாவது –
வ்யுத்பத்தி பிரதானமான பிரதம ரஹஸ்யத்திலே இறே —

இவை எல்லாம் ஏற்கவே உண்டாக்கு வதாக இறே
எதிர் சூழல் -(2-7)
தனியேன் வாழ் முதல் -(2-3-)
அந்நாள் நீ தந்த -என்றவை
முதலான சில ஸூஹ்ருத விசேஷங்களைக் கற்பித்து

அத்வேஷ ஆபி முக்யங்களை உண்டாக்கி
வருண ஸூக்ரீவாதிகளைச் சரணம் புக்கும் –
அசாதாரண அக்ரேஸரை முன்னிட்டு உறவு கொண்டும் –
அவன் பண்ணின பிரபத்தி விசேஷங்களைக் கைம் முதல் ஆக்கி –
அந்த ப்ரபன்னனைத் தான் தாழ்ந்தாருக்கும் தாழ்ந்தவனாக்கி –
காகா நிலய நியாயத்தாலே -அக்காக்கை -என்று கீழ்ச் சொன்ன காகங்களை நிஷேதித்து

அன்னத்தின் பக்கலில் ஸாரஞ்ஞதையும்
கிளியின் பக்கலிலே பூர்வாச்சார்ய வசனமும்
நாயின் பக்கலிலே க்ருதஞ்ஞதையும்
இவை முதலான ஆத்ம குணங்கள் கொண்டால் போலே
காகத்தின் பக்கலிலேயும் சில குண விசேஷங்களைக் கற்பித்து

யசோதை தாழ இழிந்து -அவனை குழல் வாராய் -என்கிற வியாஜ்யத்தாலே –
தேவ தத்த கல்பனைப் போலே ஒன்றைக் கல்பித்து ஸர்வஞ்ஞராக்கி
அத்யந்தம் தமோ குண ப்ரசுரரையும் ப்ரபன்னராக்கி –
மங்களா ஸாஸனத்தில் சேர்ப்பதாக
அவன் பண்ணின ப்ரபத்தியில் விஷய தோஷங்களைக் கழித்து
அவன் திரு உள்ளத்திலே சேர்க்கையே பிரயோஜனமாக
குழல் வாராய் -என்கிறார் –

கீழே
திருமஞ்சன வியாஜ்யத்தாலே –
மோக்ஷ உபாயம் அவனாக வரித்து இருக்கிற பிரபத்தி நிஷ்டராலும்
அந்நிய சாதன பரராய் -அநந்ய ப்ரயோஜன பரராய் -அவனை மோக்ஷ பிரதனனாக நினைத்து இருக்கும் அவர்களாலும் –
வந்த அழுக்குப் போக விவேக ஜலத்தாலே திரு மஞ்சனம் செய்தாராய் நின்றார் கீழ்

இனி இதில்
பிராமயன் -(கீதை யந்த்ரா ரூடா மாயா )-என்றும்
யதா நியுக்தோஸ்மி ததா கரோமி (தெய்வத்தால் தூண்டப்பட்டு தப்பிலே ஈடுபடுகிறேன் துரியோதனன் )-என்றும்
தேந விநாத் ருணா க்ரமபி ந சலதி –என்றும்
கரவம் அகரவம் -என்றும்
சொல்லுகிற ப்ரமாணங்களின் கருத்து அறியாத அளவு அன்றிக்கே –

(மூன்று நிலைகள்
உதாசீனம்
அனுமந்தா
பிரேரிதன்
ஜீவ ஸ்வாதந்திரம் மதித்து இம் மூன்றும்
அதி மாத்ர அனுகூலர்களை புண்ய செயலில் தூண்டி
அதி மாத்ர பிரதிகூலர்களை பாபம் செய்வதில் சூழ்நிலை ஏற்படுத்தி தூண்டி
கர்மத்துக்குத் தக்கபடி இந்த செயல்கள் )

நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் -என்றும்
ஆறு சமயம் புகைத்தான் (நான்முகன் )-என்றும் –
மாட்டாத பல சமய மதி கெடுத்தாய் -என்றும் –
ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களில் ஸம்ப்ரதாயம் இல்லாதாருக்கும்
(தாய் பிள்ளை நெருக்கம் உணர்ந்து சொல்ல வைக்கும் -என்று உணராமல் )

ஸகல ப்ரவ்ருத்திகளையும் ஸதா காலமும் அவனே ப்ரேராதிகளாலே செய்விக்கிறான் -என்று
தோஷத்தை அவன் தலையிலே ஏறிட்டு
வ்யவஹரித்துக் போருகிற குண த்வய அதீனரை எல்லாம்
காக ஸமராக்கி ஸம்போதித்து
அழைத்து

அவனுடைய ஸ்திதி கமன சயனாதிகளிலே தோஷம் இல்லை –
நீங்கள் அவன் தலை மேல் ஏறிட்ட தோஷங்களை
நிபுணாசார்ய சேவையாலே
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது என்று நீங்கள் ஏறிட்ட பொல்லாங்குகளை
நீக்கப் பாருங்கோள் -என்று
யசோதை
அழுகை மருட்டுகைக்கு
காக்கையை அழைத்து குழல் வாராய் -என்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(யதிராஜ சப்ததி-வேத மாதா குழல் சிக்கை எடுத்த ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யமே சீப்பு )

——-

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –

பதவுரை

அக்காக்காய்–காக்கையே!
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை–நாயகனும்– வல்லபனாய்
பேரில்–திருப் பேர்களிலே
கிடந்தானை–பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை–(பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்–நித்ய ஸுரிகளுக்கு
முதல்–தலைவனும்
(அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்)
தனி வித்தினை–ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்–என்னையும்
எங்கள் குடி முழுது–எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட–அடிமை கொண்ட
மன்னனை–தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து–(நீ) வந்து
குழல் வாராய்–கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்–காக்கையே!
மாதவன் தன்-ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்-

பின்னை மணாளனை –
ப்ரபத்திக்கு -புருஷகாரம் முன்னாக வேணும் இறே
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை ( திருவாய் -1-7-)-என்னக் கடவது இறே
ஸ்ரீ யபதி -என்னுமா போலே

பேரில் கிடந்தானை-
அவள் கற்பனை இரே திருப் பேரில் கண் வளர்ந்து அருளுவது –

முன்னை அமரர் முதல் தனி வித்தினை-
அமரர்க்கு முன்னை -நித்ய ஸூரிகளுக்கு முன்னோடிக் கார்யம் பார்க்குமவனை –
பின்னை மணாளன் என்றால் முன்னை அமரர் வரக் கடவது –
இது தான் இறே இவருக்குத் தோள் வலியும் ஆள் வலியும் –

முதல் தனி வித்தினை-
இந்த விபூதிக்கு த்ரிவித காரண பூதமானவனே

என்னையும் எங்கள் குடி முழுது  ஆள் கொண்ட
ஏழாட் காலும் பழிப்பற்ற எங்கள் குடி முழுவதும் –
குடிக்குப் பழிப்பு யாவது –
பிரதம அக்ஷரத்திலே த்ரிவித சம்பந்தத்தையும் மாறாடி –
(பிதா புத்ர ரஷக ரஷ்ய சேஷ சேஷி சம்பந்தம் மூன்றையும் மாறாடி )
ஸகல ஸாஸ்த்ரங்களையும் சேர்த்து –
ஹித ரூப கைங்கர்யமான -மங்களா ஸாஸனம் செய்ய மாட்டாது இருக்கை
இப்படிப் பழிப்பு அற்று இருக்கிற எங்கள் குடி முழுவதும் –
அக் குடியிலே பிறந்து இருக்கிற என்னையும் அடிமை கொண்ட –

மன்னனை
நிலையை உடையவனை
ஆளுமாளார்-என்கிற எங்கள் குடி முழுதும் என்னையும் ஆண்டு கொண்டு
போர வல்லவன்-என்று மன்னன் -என்கிறார் –

வந்து குழல் வாராய்
நீராட்டி விட்டால் குழல் வரவும் பிராப்தம் இறே
அவன் நப்பின்னைப் பிராட்டியையும் முன்னைய அமரரையும் முன்னிட்டு பிரபத்தி பண்ணிற்று –
இவனுக்கு மங்களா சாசன ருசியை விளைக்கைக்காகவே இறே என்று அறிந்து
தத் தத் அபிமத ஸ்தானங்களில் கூட்டின பிரபத்தி செடியை நீக்கி குழல் வாராய் –

அக்காக்காய்
காக்காய் -வியாஜ்யம்
தாது அர்த்தத்தால் வந்த ரக்ஷண தர்மத்தை காக்காய் என்று சேதன சமாதியால் சம்போதிக்கிறார் -என்னுதல்
(அவ ரக்ஷண -தாது அர்த்தம்
காப்பது அசேதனம்
காக்காய் சேதன சமாதி
அந்த உயர்ந்த ரக்ஷணம் -அக்காக்காய் )
காரணத்வம் சேஷித்வ நிபந்தமே யாகிலும் ரக்ஷணத்திலே இறே ஊற்றம் —
ஆகையால் அகார ஸப்த வாஸ்யத்தை கௌரவ வஸ்து நிர்தேசத்திலே யாக்கி –அக்காக்காய் -என்கிறார் ஆகவுமாம்-

அவன் தலையில் சிடுக்கு போனால் யாயிற்று உங்கள் தலையில் அழுக்கு போவது –
என்று காக சமரர் அனைவரையும் அழைத்து அவன் குழலில் சிடுக்கை அறுத்து
சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவங்களைப் பிரித்து -(தர்சனம் பேத ஏவ தேச -)
நெடுகப் பார்த்து அறிந்து –
அவன் தலையில் தோஷத்தை ஒழித்து உங்கள் தலையிலே வைத்துக் கொள்ளுங்கோள் –
வந்து குழல் வாருங்கோள் -என்கிறார் –

(கர்மமும் கிருபையும் காரணம்
பிறக்க கர்மமே ஹேது
கிருபையால் மோக்ஷம் )

மாதவன் தன் குழல் வாராய்
பின்னை மணாளன் ஆகைக்கு ஹேது மாதவன் ஆகை இறே –
ஆகையால் நிர் துஷ்டன் என்கிறார் –
அவன் நிர் தோஷனான அளவே அன்று காண் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -காண்
குணத்திலே தோஷ தர்சனம் பண்ணாதே கொள் -என்கிறார் –

ஸூக்ரீவம் நாதம் இச்சதி -என்கிற ப்ரபத்தியால் வந்த குறை தீர்வதும் –
உன் தோழி உம்பி எம்பி -என்று அவன் பிரபத்தி பண்ண –

நீங்கள் குறைவாளராய் நின்ற குறை தீருவதும்
பின்னை மணாளன் -என்று பிரபத்தி பண்ணினால் என்னும் கருத்தாலே
வந்து குழல் வாராய் -என்கிறார் –

———

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –

பதவுரை

அக்காக்காய்!-
இவன்–இப் பிள்ளை
முன்னம்–முன்பு
பேயின் முலை–பூதனையின் முலையை
உண்ட–(அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை–பிள்ளை காண்
(அன்றியும்)
மாயம்–வஞ்சனை யுள்ள
சகடும்-சகடத்தையும்
மருதும்–யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்–முறித்தவன்
காயா மலர் வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்–‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்–கரு நிறமான கூந்தலை
வந்து–(நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்–நின்றாக வாருவாயாக.
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணன்–நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் –

பேயின் முலை உண்ட —
குணத்தில் தோஷ தர்சனம் பண்ணி வந்த பேய்ச்சி பட்டது படாதே கொள்ளுங்கோள் -என்கிறார் –

பிள்ளை இவன்
பிள்ளைத் தானத்தில் புரை இல்லாதவன் –

முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
அப்படிப்பட்ட க்ருத்ரிமத்தை யுடைய சகடாசூரனையும் யாமளார்ஜுனங்களையும் நிரசித்தவன் –

காயா மலர் வண்ணன்
ஆத்ம குணங்கள் மிகையாம்படி அப்போது அலர்ந்த செவ்விக் காயா மலர் போலேயாய்
அனுகூலரை எழுத்து இடுவித்துக் கொள்ளும் வடிவு அழகை உடையவன் –

கண்ணன் –
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –

கரும் குழல்
குழலுக்கு ஒரு போலி காணாமையாலே
வெறும் புறத்திலே கரும் குழல் -என்கிறார் –

தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
அவன் குழலில் ஒரு அழுக்கு இல்லை –
நீங்கள் அறியாமையாலே உண்டாக நினைத்ததுவாகவே உள்ளது –

தூ மணி வண்ணன்
காயம் பூவுக்கு விவரணம் உண்டானாலும் –ஒரு படிப்பட்ட நீல ரத்னம் போலே
வடிவு அழகு படைத்தவன் –என்கிறார் –

———

திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 3-((விரையன் உறங்கிடும்-பாட பேதம்)

பதவுரை

அக்காக்காய்!-
திரை–பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த–(பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து–த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–உட் கொண்டு
விரைய–விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்–பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்–ஸ்வாமியும்
அமரர்–நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை–நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை–இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய் –
அக்காக்காய்!-
கார் முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய் –

திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த-
ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாத படி மேல் மரத்திலே சொருகிக் கட்டி
கள்ளக் கயிறு உருவி வைத்த –
வைக்கும் அது ஒழிய வைத்தவர்களாலும் வாங்க ஒண்ணாத படியாக இறே வைத்தது –

அன்றிக்கே
திரைக் கயிறுகள் சூழ நாற்றிக்
கண்ணித் தெறித்த உறி -என்னவுமாம் –

வெண்ணெய் விழுங்கி –
வெண்ணெய் யானத்தைப் பாத்திரத்தை நீக்கி விழுங்கினான் -என்னாமையாலே –
வைத்த குறி அழியாது இருக்கச் செய்தே பதறி விழுங்குகையாலே
வழிந்து சிதறிக் கிடக்கக் கண்டது அத்தனை என்று தோற்றுகிறது –

விரையன் உறங்கிடும்-
வெண்ணெய் விழுங்குகிற போதில் பதற்றத்திலும் காட்டில் -பதறி உறங்கப் புக்கால் அக் கண் உறங்குமோ
இவன் பதற்றத்துக்குக் கண் உறங்குமோ –
குறு விழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் கண்டோம் என்று பார்த்து இறே உறங்குவது –
இது என்ன பொய் உறக்கம் தான் என்று கண்டு கொள்வார்கள் இறே –

அண்ணல்
திரு ஆய்க்குலத்துக்கு ஸ்வாமி யானவன் –

அமரர் பெருமானை
பரம பதத்தில் ஸூரிகளுக்கும் அவ்வருகாய் — பெரியனாய் -அவர்களை நிர்வஹிக்குமவன் –
நிர்வஹிப்பது தான் அவர்களோடே கலந்து பரிமாறி இறே –

ஆயர் தம் கண்ணனை
1-திரு ஆய்ப்பாடிக்கு ரக்ஷகன் –
2-ஸூலபன் –
3-அவர்கள் கண்ணுக்கு விஷயம் ஆனவன் –

கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே
அவர்களுக்கு ஸகல தாப ஹரனுமாய் இருக்குமவன் –

திரை யுறி -பெரிய யுறி –

———–

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானை தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய்
பேய் முலை உண்டான் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 4- –

பதவுரை

அக் காக்காய்!-
பள்ளத்தில்–நீர்த் தாழ்வுகளிலே
மேயும்–இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை–(கொக்கு என்னும்) பஷியின்
உரு–ரூபத்தை
கொண்டு–ஏறிட்டு்க் கொண்டு
வருவான்–வருபவனாகிய
கள்ளம் அசுரனை–வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு–தான் பார்த்து (பராக்காய் கன்றுகளை மேய்த்து விளையாடும் தான் -அவனை)
இது புள் என்று–இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ–விரைவாக
வாய்–(அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட–கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் -அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் –

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள வசுரன்
குணத்திலே தோஷ தர்சனம் செய்து
ப்ரஸன்ன ரூபியுமாய் இறே பகாசூரன் தான் வந்தது –
நீர்த் தாழ்விலே ஆமிஷ க்ராஹியாய் மேய்ந்து திரிகிற பெரிய கொக்குகளோடே தானும் அவற்றில் ஒன்றாய்
ஆமிஷ க்ராஹியாய்த் திரிந்தாலும் வேறுபாடு தோன்றும் இறே –
தோன்றி இறே -கள்ள வசுரன் -என்றது –

வருவானை
தன் மேல் வருகிறவனை

தான் கண்டு
அந்நிய பரனாய் இவன் கொலைவு பாடு அறியாதே விளையாடுகிற தான் கண்டு –

புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
என் பாக்யத்தாலே இது -பொதுப் புள் என்று –
தின்ன விரும்பாக் கன்று போலே உபய ஆகாரமான வேஷமாகக் கண்டு
பொது -என்றாலும் வேறுபாடு -தோன்றும் –
இப்படிப் பொதுவாய் வந்த -அசுர ராஜன் வாயைக் கீண்டிட்ட -(பொதுக்கோ–பொது வான கோ )

பொதுக்கோ
என்று ஒரு சொல்லாய் –
பொதுக்கென -சடக்கென என்னவுமாம்

பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய்
பிள்ளைத் தனத்தில் புரை இல்லாதவனை -அதாவது
சிறுப் பிள்ளைகள் ஏதேனும் ஒரு விவரம் கண்டால் விளைவது அறியாமல் -அதுக்கு உள்ளே கை நீட்டுமா போலே –
பகாசூரன் சத்துக்கள் நடுங்கும்படி வாயை அங்காந்து கொண்டு வந்தவாறே கையை நீட்டினான் –
அபூர்வ தர்சனத்தாலே கை பூரித்து அத்தாலே பிளந்து விழக் கண்டது அத்தனை –

ப்ரதி கூலித்துக் கிட்டினார் முடிந்து போம்படியான முஹூர்த்த விசேஷத்திலே இறே பிள்ளை பிறந்தது –
இல்லையாகில் -பிள்ளையைக் கொக்கு விழுங்கிற்று -என்னும் இத்தனை – இறே
அங்கன் ஆகாமல் தன்னை நோக்கித் தந்த உபகாரத்தாலே -குழல் வாராய் -என்கிறார் –

பேய் முலை உண்டான் குழல் வாராய் அக்காக்காய்
புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப் பெற்றது -என்கிறார் –
பிள்ளைகளுக்கு இரண்டும் வருவதாகச் சொல்லிப் போருவது ஓன்று உண்டு இறே –

————–

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய் – 2-5 5- –

பதவுரை

அக்காக்காய்!-
நீ–நீ
உற்றன–(உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி–சொல்லிக் கொண்டு-காக்கை வாயிலும் கட்டுரை கொள்வார் உண்டே –
ஓடி–அங்குமிங்கும் பறந்து
திரியாதே–திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து–கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை–(அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி–பிடித்து
கனிக்கு–(அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த–(குணிலாக) வீசின
பரமன்–பரம புருஷனுடைய
திருமுடி–அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து–அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்–வாருவாயாக
ஆழியான் தன்–சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய் –

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் திருமுடி
வறட்டு ஆக்களின் பின் போக வேண்டி இரான் போலே காணும் –
கற்று ஆக்களை மேய்த்து
அவற்றின் வயிறு தடவிப் பார்த்தால் அவற்றின் வயிறு நிறைந்தால் இறே
தன் வயிறு நிறைந்தது ஆவதும் –

இப்படி பூர்த்தி பிறந்த அளவிலே மேய்கிற இளம் கன்றுகளைக் கண்டவாறே
இவற்றை விடா
அவற்றோடே விளையாடுவதாகச் சென்றவாறே –
எப்போதோ வருவது -என்று -அதுக்கு உள்ளே

கன்றாக நின்ற அசூரர்களையும் பார்த்து வேறுபாடு தோன்றுகையாலே
முள்ளாலே முள்ளைக் களைவாரைப் போலே –
அஸூர மயமான கன்றுகளை எடுத்து விளாவான அஸூரர்கள் மேலே எறிந்து
நிரசித்து ஜகத்துக்கு ஒரு பர தேவதையை உண்டாக்கித் தந்த உபகாரகனுடைய
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு முடி காண் –

நீ -உற்றன பேசி – ஓடித் திரியாதே
ஒரு நிபுணாசார்ய சேவை செய்யாமல் -ப்ரதீதி மாத்திரத்திலே ஓன்று போலத் தோன்றக் கடவதுமாய்
விவஷா வசமுமான சப்தார்த்தங்களை விஸ்வஸித்து
ப்ரதிஜ்ஜை உப பாதன நிகமனங்கள் சேரும் பிரகாரங்கள் பாராதே
நெஞ்சில் தோன்றின அர்த்தங்களை விஸ்வஸித்து-
இதுவே வேதார்த்தம் என்று சொல்லி
ஜகத்தை மோஹிப்பித்து
சத்துக்களைக் கண்டால் முகம் மாறிப் போவது வருவதாய்த் திரியாதே –

அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
எற்றைக்கும் வந்திலை யாகிலும் –
உபாயாந்தர நிஷ்டரால் – வந்த தோஷம் போம்படி
திரு மஞ்சனம் செய்து நிற்கிற வற்றைக்காகிலும் வர வேணும் காண் –
அற்றைக்கு வந்தால் -அது தான் எற்றைக்கும் வந்து குழல் வாரிற்றாய் இறே இருப்பது –

ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய்-
சீரா வெரியும் திரு நேமி –
கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தான் காண் அவன் –

————

கிழக்கில் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்ட ஆழி அதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானை
குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய்
கோவிந்தன் தண் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

பதவுரை

அக்காக்காய்!-
கேடு இலாதார்–(வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை–கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்–அழிக்கும் படி
நினைந்திட்டு–எண்ணி
(ப்ராக் ஜ்யோதிஷ் புரம் -நரகாசூரன் முடித்து -முன்பு முரன் -பாசம் அறுத்து எரிந்து முடித்து முராரி பெயர்
இவர்கள் இந்த்ராதிகளை அழிக்க நினைந்திட்ட என்றும் இவர்களை அழிக்க நினைந்திட்ட என்றும்)
அவ் வாழி அதனால்–அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே–கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை–ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு–கூந்தலுக்கு
அணி ஆக–அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்–(இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்–குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்–வாருவாயாக.

கிழக்கில் குடி மன்னர் கேடு இலாதாரை அழிப்பான் நினைந்திட்ட –
ப்ராக் ஜ்யோதிஷ வாஸிகளான நரகாசூரன் தொடக்க மானவர்கள்
கேடு இலாதாரை அழிப்பான் நினைந்திட்ட–கிழக்கில் குடி மன்னர்–

விழிக்கும் அளவிலே
அழிப்பதாக அறுதியிட்டு -அழிக்கைக்கு காலம் இது -என்று
நினைக்கிற அளவிலே –

கேடு இலாமை யாவது –
ப்ரஹ்ம பாவனையில் ஊற்றமாய்
கர்ம பாவனையில் அநாதாரம் பிறக்கை –
இப்படி கேடு இல்லாத இந்த்ராதிகளையும் ராஜ கன்யைகளையும் அழிப்பதாகக் கோலினவர்களை –

ஆழி அதனால்-
கருதும் இடம் பொருது வரும் திருவாழியாலே

அதனால் –
என்றது -அழைத்தாலும் மீளாது காரியப்பாட்டிலே ஒருப்பட்டுத் தலைக்கட்டினால் அன்றி
மீளாத ஆழி யதனால் -என்றபடி –

வேர் அறுத்தானை-
வேர்ப் பற்றோடே அவர்களை அறுத்தவனை –

குழற்கு அணியாக குழல் வாராய் அக்காக்காய்
குழலானது அழகு விளங்கும்படியாக

கோவிந்தன்
பர ரக்ஷணத்தில் தீர்ந்த வியாபாரங்களை உடையவன் –

தண் குழல் வாராய் அக்காக்காய்
அழகுக்கு ஏறப் பெறாத குழல்

————-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்தஅமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –

பதவுரை

அக்காக்காய்!-
பிண்டம் திரளையும்–(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட-பிசாசங்களுக்குப் பொகட்ட
நீர் சோறும்–நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு–உண்ணுதற்கு
வேண்டி–விரும்பி
நீ ஓடி திரியாதே– பலி புக்கான நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து–மேலுலகத்திலுள்ள
அமரர்–தேவர்களுக்கு
பெருமான்–தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்–அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட–வண்டைப் போல் கருநிறமான
குழல் வாராய் –
மாயவன் தன்–ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய் –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே-
(உம்மைத் தொகைக்கு விளக்கம் )
சோறும் -என்கிற அபி விவாஷ வஸம் இறே
தம் தாமுக்கு இட்டவற்றை ஜீவிக்கை அன்றிக்கே யாரேனும் ஆரேனைக் குறித்து இட்ட
அன்னாதிகளைப் புஜிக்க வேணும் என்னும் விருப்பத்தோடே ஓடித் திரிகிற அளவு அன்றிக்கே
ஆஹார நீஹாரங்களிலே கழித்தார் கழித்தது தின்று திரிவது
நாய் போல் இட்டவன் அளவிலே க்ருதஞ்ஞதையும் அற்று
பலி புக் -என்ற பேருக்கும் லஜ்ஜியாதே

பறக்கும் காக்கை இருக்கும் கொம்பு அறியாது -என்னும்படி
வஸ்தவ்ய ஸ்தலம் -இன்ன கொம்பு என்ற நியதியும் இன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்கிற விதியாலும் இன்றிக்கே
அசுத்த ஜீவனத்துக்கு தேஹ சுத்தி செய்து ஜீவித்த தோஷத்துக்கு ஸ்நானம் செய்வது
பர ஹிம்சை பண்ணுவது
பர ஹிம்சை பண்ணுவார் இடங்களில் உதிரி பெறுக்கி ஜீவிப்பது –
தேஹ தாரண ஹேதுவாக சோஷிப்பிக்கிற வ்ரீஹ்யாதிகளை அவர்கள் காவலிட்டு நிஷேதிக்கச் செய்தேயும்
சென்றிடம் பார்த்து ஜீவிப்பது –
மது பாஷிகளாய் இருப்பாரை (குயில் ) வளர்த்து இருக்கச் செய்தேயும் நிஷேதிப்பது
இவை முதலான துரா சாரங்களைச் செய்யாதே –

(ரஜோ தமோ குண நிஷ்டர்களுக்கும்
இப்படி யாரானும் யாதாவது கொடுப்பார் என்று தட்டித் திரிந்து
கரண களேபரங்கள் இட்ட அவனுக்கு செய்ந்நன்றியும் இல்லாமல்
ப்ரஹ்லாதன் மது பாஷி -நிஷேதித்த ஹிரண்யன் போல்
இதே போல் கண்டு கொள்வது )

அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல்-
நித்ய விபூதியில் நித்ய ஸூரிகளுக்கு தாரகாதிகள் எல்லாமுமாய் நிர்வகிக்கிற
பெரியவனுடைய அழகு நிலை பெற்ற குழல் காண் –

வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்

வண்டு -என்கிறது -அவனை ஆஸ்ரயித்த ப்ரபன்னரை –

ஒத்து -என்கையாலே அவன் தான் இவர்களை ஆஸ்ரயிப்பிக்கும் என்னும் அர்த்தமும் தோற்றுகிறது

தெய்வ வண்டு -என்னக் கடவது இறே

ஸூக்ரீவம் சரணம் கத -என்றும்
ஸூக்ரீவம் நாதம் இச்சதி -என்றும்
சரணம் புக்காரைச் சரணம் புகுவதும் –
சரணம் புகுவிக்கைக்காக வருணாதிகளைச் சரணம் புகுவது –

இவன் முன்னிட்டும் அவர்களைத் தான் முன்னிடுவது -இருவரும் முன்னிட்டும் படி தான் எங்கனே என்னில்
அலர் மேல் மங்கை உறை மார்பா –நிகரில் அமரர் –
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை –முன்னை அமரர் -(1-7)
அவன் தானும்
உன் தோழீ –உம்பி நீ உகந்த தோழர் -என்று இறே முன்னிட்டது

இருண்ட குழல்
வண்டு போலே கருகின நிறத்தை யுடைய குழல்

அவன் குழல் ப்ரபத்தியான போது
இருட்சி அக வாயில் அர்த்தம் துரவகஹாமாய் தெரியாது இருக்கை –

மாயவன் தன் குழல் வாராய் அக்காக்காய்
ஆச்சர்ய சக்தி யுக்தன் –

————-

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – –

பதவுரை

அக்காக்காய்!-
உந்தி–(தனது) திருநாபியிலே
எழுந்த–உண்டான
உருவம்–ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்–தாமரைப் பூவிலே
சந்தம்–சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை–நான்முகனை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை–புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்–தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து–சிக்கு விடுத்து
குழல் வாராய்–வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில் –
ஸகல ஜகத் காரணமான திரு நாபியிலே கிளம்பின அழகிய தாமரை மலர் தன்னிலே

சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்-
ஆத்மாவை புத்ர நாமாஸி -என்கிறபடியே
(மந்த்ர ப்ரச்னம் -தந்தையே பிள்ளையாக பிறக்கிறான் )
ஜகத் ஸ்ருஷ்டியில் வந்தால் ப்ரதீதியில் துல்ய விகல்பம் தோன்றுகையாலே –
சந்தச் சதுமுகன்-என்கிறது –
நாவி யுள் நற் கமலம் நான்முகனுக்கு -என்கிறது பின்னாட்டின படி –

கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்-என்றது
கீழ் திருமஞ்சன உபகரணமாகச் சொன்ன -எண்ணெய் புளிப்பழம் -பின்னாட்டின படி
குறந்து புளி யட்டி–கொந்தக் குழல் -என்ற போதே முன்பு சொன்னது என்று தோற்றும் இறே
புளி குறந்து-முன்பே யட்டின குழல் -என்றபடி –
அட்டித் திரு மஞ்சனம் செய்த குழல் என்றபடி –
புளி யட்டிக் குழல் -என்னும் நிரூபிக்கலாம் இறே
அன்றாகில் திரு மஞ்சனம் செய்து மயிர் வகிருகிற போதாகப் புளியைக் குறந்து மயிரிலே தப்ப ஒண்ணாதே

அன்றிக்கே
அகங்களிலே வளர்த்த நாவி -குழல் மேல் ஒற்றினதை –குறந்து-என்றும்
அந்தப் பசும் புழுகை -புளி -என்னவுமாம் –
நீராட்டின பின்பு ஜாதி உசிதமாக இது சேரும் இறே –
குறந்து -புளி என்று -ஒண் சங்கதை வாள் போலே பதமாம்

புழுகட்டி -என்று
பாடம் ஆயிற்று ஆகில் –
யுகே யுகே என்கிற நியாயத்தாலே பாட பேதமும் பிறக்கக் கூடும் இறே

தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்-
தந்தத்தின் சீப்பு -விவேக ஞான அத்யவசாயம்
ஆச்சார்ய சேவையாலே விவேக ஞான அத்யவசாய ப்ரபத்தியாலே –
இவனுடைய ப்ரபத்தியாலே இறே அவனுடைய பிரபத்தி நிர் தோஷம் ஆவது –
குழல் என்று ப்ரஹ்வீ பாவம் ஆகையாலே கழுத்து மேல் ப்ரபத்தியாகக் கடவது –

தாமோதரன் தன் குழல் வாராய் அக்காக்காய்
பரமபத நிலையன் காண் -ஓர் அபலை கையாலே கட்டுண்டு
அவிழ்த்து விட்டாலும் அத் தழும்பு என்று தோன்றும்படி ஆசாரித்துக் காட்டுகையாலே
ஸம்ஸார பாசம் அடியான யம பாசம் நீங்கும் போதும்
கடையற பாசங்கள் விட வேணும் -என்று தோற்றும் இறே -அதாவது

சம்பிரதாய ஸாஸ்த்ர அனுகுணமாக நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த நேர் ஒழிய நடக்கும் பாசங்கள் –
தம் தாம் நினைவுகள் இல்லை என்று தோற்றிற்றே யாகிலும் அவர்கள் -அவன் -நினைவாலே
சிறுது உண்டாக வேணும் என்று நினைத்தால் இறே கடை யறப் பாசங்கள் விட்டதாவது –
ஆத்மீயங்கள் என்றது இவருக்கு கிளி முதலானவை –
அது இறே நமக்கும் –

——–

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ வணை மேல் வைத்துப்
பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்
பேர் ஆயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய் 2-5 9- – –

பதவுரை

அக்காக்காய்!-
முன்–வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்–அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்–மனைவியர்கள்
கண்டு–(தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த–மகிழ்ச்சி யடையும்படி
(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி)’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்)
இ உலகினை முற்றும்–இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்–அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை–அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து–புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து–(இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்!- அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்–ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய் –

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
புலன் கொள் மாணாய் -என்கிறபடியே
சர்வ இந்திரிய அபஹார க்ஷமமான வியாபாரங்களை –
மஹா பலியினுடைய ஸ்த்ரீகள் கண்டு என்னுதல்
மஹா பலியும் அவன் ஸ்த்ரீகளும் கண்டு என்னுதல்

முன் கண்டு
முற்பட வரக் கண்ட வாமன வேஷம் இறே இவர்களுடைய அத்யந்த ப்ரீதிக்கு ஹேதுவாவது
பின் கண்ட த்ரிவிக்ரம அபதானம் திருவடிகள் விரியப் புகுந்த போதே தொடங்கி முற்றும் அளப்பதாக
அநாதாரமும் பயமுமாய் இறே செல்லுகிறது –

இவ்வுலகினை
இவ்வுலகு என்றது –
மஹா பாலி தன்னதாக நினைத்த அவ்வுலகை -தானம் பெற்ற போதே –
அவன் அளப்பதற்கு முன்னே – பதறி –
இவர் தம்மதாக -இவ்வுலகு என்கிறார்
முன் ஓடித் தட்டிச் சாற்றின ஜாம்பவான் மஹா ராஜரைக் காட்டிலும்
(ஜிதம் பகவதா ஜகத் என்று பறை கொட்டி தட்டிச் சாற்றின ஜாம்பவான் )
பதறிக் காணும் இவர் இவ்வுலகு என்கிறது –

முற்றும் அளந்தவன்
வேயகமாயினும் –திரு விருத்தம்

பொன்னின் முடியினைப்
ஷோடஸ வர்ணியான பொன்னின் மேல் உண்டான விருப்பம் தோன்றுகையாலே
இன் பொன் முடி –என்னுதல்

முற்றும் அளந்தவன் பொன் முடியன் -என்கையாலே
ஆதி ராஜ்ய ஸூ சகமான -திரு அபிஷேகம் –
அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி –நீராக
அண்டம் போய் நீண்ட பொன்னின் முடி என்னுதல் –

பூ வணை மேல் வைத்துப்
இப்படிப்பட்ட விருப்பத்தை யுடைய முடியை அதி மார்த்வமான அணை மேலே வைத்து –

பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம ப்ரஜ ஜன அக்னி ஹோத்ரம் யஜ்ஜோ மானஸம் ந்யாஸ -என்றும்
தஸ்மான் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதி ரிக்தம் ஆஹு -என்றும்
ப்ரபத்தியை ந்யாஸ ஸப்த வாஸ்யமாகப் பின்னே சொல்லுகையாலும் –
எல்லா தபஸ்ஸூக்களின் மேலாய் -இவற்றை நீக்கித் தனித்து தலையாய நிற்கையாலும்
அவன் குழலுக்கும் இது தானே பேராகிறது
கர்ம ஞான பக்தி பிரபக்தி -என்று இறே தான் உபாயாந்தரங்கள் இருப்பது –
(உபாய பிரபத்தி நாம் பற்றும் பற்றும் உபாயாந்தரம் தானே
அதிகார விசேஷண பிரபத்தி – தன்மையாகவே மட்டுமே இருக்க வேண்டும் –
விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம் )

பின்னானார் வணங்கும் சோதி
பின்னான உன்னை உனக்கு ஆளானார் வணங்கிப் பெறும் தேஜஸ்ஸை
நீ முதலே உடையாய் ஆனாய் -என்று
இருவருக்கும் பிரபத்தி -தலையாய இறே இருப்பது –
(தலை பிரதானம்
நம்மை பற்றவே அர்ச்சா வதாரம் )

பின்னே -என்றது
காக்கையை முன்னே அழைத்துக் குழலைத் தொடச் சொல்லில் பிள்ளை பயப்படும் -என்று
இவள் தானும் பின்னே என்கிறாள் –
இவர் தாமும் காக சமர் திருந்தி வந்தாலும் -விஸ்வசியாமல் -பின்னே என்பர் –
இவன் தானும் சத்யாதிகளுக்கு முன்னே பிரபத்தி பண்ணுமாகில் பின்னே சத்யாதிகள் கிடைக்கையாலே –
நாம் என் செய்தோம் ஆனோம் -நமக்கு இவ்வளவு போருமோ -என்று அனாதரமும் பீதியும் தோன்றும் –
உபதேசித்தவனுடைய அபிமானத்திலே ஒதுங்க இறாய்க்கும் –
ஆகையால் இறே எல்லா உபாயங்களிலும் நாச பரிஹாரார்த்தமாக இத்தை விதியிலும்
யதி விதியிலும் கலந்து விதிக்க வேண்டிற்றும் –
(உபாயாந்தர ஆரம்ப விரோதி பரிஹாரதமாகவும் இத்தை விதிக்கிறார்கள்
ஆர்த்தோ வா யதி வா திருப்தா –ஆர்த்தி உள்ளவர்களும் கௌரவம் உள்ளவரையும் ரக்ஷிப்பானே )

பேர் ஆயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய்
அவன் நீர்மையைச் சொன்னாலும் வஸ்து நிர்த்தேசம் வேணுமே –
கீழே நாராயணா அழேல் -என்றது பின்னாட்டின படி –

நாராயணா என்று வஸ்து நிர்த்தேசத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் அழுதது
இவள் நம்மை புத்ரத்வ அபிமானம் பண்ணி முலை தந்து -அழேல் அழேல் -என்னா நின்றாள்
இது அவளும் சத்ருவத்வ அபிமானம் பண்ணி நச்சு முலை கொடுக்க ஊணாக உண்டான் இறே

இவர் நாராயணா என்றால் இறே வஸ்து நிர்தேசம் ஆவதும் –
வாயிலே ஓர் ஆயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத -என்றது இம் மந்திரத்தை இறே
இதில் ஒள்ளிய -என்றது –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் வஸ்து நிர்தேசம் செய்யா நிற்கச் செய்தேயும்
இதுவே ஸாதனம் என்று இறே

இவன் வாயில் ஆயிர நாமம்-என்றத்தை இறே
இவள் -பேர் ஆயிரத்தான் -என்றதும்

இப் பேர் ஆயிரம் -என்றது –
வந்து அடி தொழுது ஆயிர நாமம் (திருப்பல்லாண்டு ) என்றத்தை இறே –

————-

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கண்டார் பழியாமே யக்காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாட குறுகா வினை தானே -2 5-10 – –

பதவுரை

அக் காக்காய்–‘காக்கையே!
கண்டார்–பார்த்தவர்கள்
பழியாமே–பழியாதபடி
கார் வண்ணன்–காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்–வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார–வாரும்படி
வா–வருவாயாக’
என்ற–என்று சொன்ன
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியின்
சொல்–சொல்லை (க்குறித்த) –
விண் தோய்–ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்–மதிளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
சொல்–அருளிச் செயல்களை
கொண்டாடி–சிலாகித்து
பாட–பாடப் பெற்றால்
வினை தாம்–ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா–சேராவாம்.

கண்டார் பழியாமே
திரு மஞ்சனம் செய்து குழல் வாராது இருந்தால் கண்டவர்கள் பழிக்கக் கூடும் –
அவர்கள் பழியாமே-

கார் வண்ணன்
கார் போலே திரு நிறத்தை உடையவன் –

வண்டார் குழல் வார
அவன் நிறம் கார் வண்ணம் என்று முன்னே சொல்லி
வண்டார் குழல்-என்னும் போது
எப்போதும் பூ மாறாத குழல் ஆகையால் வண்டுகள் மொய்த்துக் கிடக்கும் இறே

யக்காக்காய் -வாராய் என்ற ஆய்ச்சி சொல்
பிள்ளையை அழுகையை மருட்டி அக்காக்கையை குழல் வார யசோதை அழைத்த பிரகாரத்தை

விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்
ஆகாசத்தில் மிகவும் உயர்ந்த மதிலாள் சூழப்பட்ட திரு மாளிகைக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த
இந்த ஸ்வாபதேச மங்களா சாசனத்தை –

கொண்டாடிப் பாட
ஒரு சப்தம் இருந்தபடி என்
ஓர் அர்த்தம் இருந்தபடி என்
ஒரு ஸ்வாபதேசம் இருந்தபடி என் -என்றால் போலே கொண்டாடி –
செருக்குக்கு போக்குவிட்டு பாடிலும்
இவருடைய மங்களா ஸாஸனம் ஆகையால்

குறுகா வினை தானே
தாமஸமும் தாமஸ ராஜஸமுமான குண த்வய நிபந்தத்தாலே காக சமராய் இருப்பவர்களையும் –
அஞ்ஞாத ஞாபனம் செய்து –
திருத்தி –
பக்தி பிரபத்தி ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தில் தெரியாத விகல்பங்களைக் கழித்து –
அதிகாரிகள் ஆக்கி
இந்தப் பிரபத்திக்கு ஹேதுவான அவனுடைய ப்ரபத்தியில் ஸ்வீ கார நிபந்தமான தோஷத்தை –

குழல் வாராய் -என்கிற வ்யாஜத்தாலே
பிரதம ஸூஹ்ருதம்
தனியேன் வாழ் முதல்
என்று அவனாக உணர்த்தி
மங்களா ஸாஸன பரவசராம் படி தம்முடைய அபிமானத்தையும் பிரகாசிப்பிக்கையாலே –

இந்தப் பிரகாரங்களைக் கொண்டாடிப் பாட
மங்களா ஸாஸன விரோதி பாபங்கள் எல்லாம் பாடினவர்களுடைய பரிசரத்திலே
அருகு அணையவும் பெறாது என்கிறார் –

வண்டுகள் -என்று ப்ரபன்னரையும்
வண்டார் குழல் -என்று அவனுடைய ப்ரஹ்வீ பாவ( வணக்க வடிவான ப்ரபத்தியையும் காட்டுகிறது –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: