ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-4–வெண்ணெய் அளைந்த–

வெண்ணெய் அளைந்த -பிரவேசம்
கீழே வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் உண்கையாலும்
அங்கம் எல்லாம் புழுதியாக அளைகையாலும்
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு மார்வு தேர்க்க என்கையாலும்
பால் என்ற மாத்திரத்தாலே வாசி அறியாமல் -பேய் முலைப் பால் உண்கையாலும் –

காதுகள் வீங்கி எரியத் த்ரி இட்ட செடியாலும்

மலை எடுப்பது
சாடு உதைப்பது முதலான ஆயாஸங்களாலும்

கீழே வண்ணம் எழில் கொள் மகரக் குழை இட்டுக் கண்டவள் அது போராது என்று
வார் காது தாழப் பெருக்கி மகரக் குழை இட வேண்டும் -என்கையாலே
இவளுக்கு எப்போதும் காது பெருக்குகை தானே யாத்ரை –
ஆனாலும் செடி மாறாது இறே
(அந்தச் செடி என்றது -காதுப்புண் சவறு பாய்ந்து -அத்தால் வந்த அழுக்கு -என்றபடி -)

இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளாலும் அவனைப் பொறுப்பித்துத்
திரு மஞ்சனம் செய்வதில் உபக்ரமிக்கிறார் –

———

வெண்ணெய் இத்யாதி
வெண்ணெயாலும் புழுதியாலும் சொல்லுகிறது
முமுஷுக்களையும் நித்ய ஸம்ஸாரிகளையும்
ஆகில் இவர்களை நீக்கலாமோ என்னில்

முமுஷுக்கள் ஆகிறார் –
ஸம்ஸாரத்தில் அஹங்கார மமகாரங்களால் வருகிற எப்பேர் பட்ட ருசிகளும் அற்று –
கைவல்ய போகத்தையும் திஸ்கரித்து –
ஆஸன்னமான அர்ச்சாவதாராதிகளும் இங்கேயே இருக்கச் செய்தேயும்
மமகார ப்ரதாநராய் மோக்ஷ ருசியில் நிற்கிற ப்ரபத்தி நிஷ்டரும் பக்தி நிஷ்டரும் –

ஸம்ஸாரிகள் ஆகிறார் –
ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேச தத் பரருமாய்
அந்த ஸங்கல்ப பாரதந்தர்யத்தோடு இந்திரிய பரவசருமாய்
இதம் மம அஹம் மம என்று இருக்குமவர்கள்

பொழில் ஏழும் தான் நல்கிக் காத்து அளிக்கும் நாரணன் -(திருவாய் -1-4-)-என்று
வெண்ணெயில் காட்டிலும் புழுதியை அவன் விரும்புகையாலே –
திரு மஞ்சன வியாஜத்தாலே இவர்களை நீக்கலாமோ என்னில்
இவருடைய மங்களா ஸாஸனத்தில் கூடாதாரை நீக்கவாயும் இறே இவர் திரு உள்ளம் தான் இருப்பது –

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1 – –

பதவுரை

வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
முழுதும் வெண்ணெயை அளைந்து கொண்டு உண்கையாலும்
விளையாடு புழுதி அத்தோடு சேருகையாலும்
அவை போம்படி திரு மஞ்சனம் செய்ய வேண்டும் – என்று இவர் பிடிக்கச் செல்ல –
அவன் இறாய்க்கையாலே

திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
குளியாத போது கண்டூதி சமியாது(அரிப்பு அடங்காது ) காண் என்றதும் அவன் கேளாமையாலே –
இவ் விரா உன்னை ஏதேனும் ஒரு பிரகாரத்தாலே பிடித்து குளிப்பிற்று அல்லது விடேன் -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணுகை இறே திண்ணம் ஆவது –

உனக்குத் தான் இத் திண்மை எல்லாம் தான் என்
நான் அறுதி இட்டதே செய்ய வேணும் காண் –
சீக்கிரமாகச் செய்விக்கிறேன் -என்னவுமாம் –

தேய்த்தால் அல்லது கண்டூதி சமியாது
சமித்தால் அல்லது நித்திரை வாராது
ஆகையால் -தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்-என்கிறார் –

இவ் விரா
ஸம்ஸாரம்
இதில் ருசி அற்றாருக்கும் ருசி அறாதாருக்கும் அறிவு கேட்டை விளைப்பது ஓன்று இறே இது தான்
ஆகையால் சாதாரண பிரதானம் இறே
இப்படியே இவருக்கு அவனோடே விபலித்து அடிமை செய்யலாமோ என்னில்
ஹித ரூபமாகையாலும்
காரியப்பாடு ஆகையால் கூடும் இறே

எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
திரு மஞ்சனத்துக்கு வேண்டும் எண்ணெய் புளி முதலான உபகரணங்களும் கொண்டு
உன் வரவு பார்த்து -இத்தனை போதும் இருந்தேன் –

நண்ணல் அரிய பிரானே
நான் பல காலும் அழைக்க அழைக்க
வாராது இருக்கிற மஹா உபகாரகன் அன்றோ நீ –
இந்த ஸ்வா தந்தர்யம் எல்லாம் வேண்டாம் காண்

நாரணா
சாதாரண யோகம் அன்றோ –
ஸ்வா தந்தர்ய ஸ்தானம் –
(இது பொது -அனைவருக்கும்
ஆஸ்ரிதர்களுக்கு மட்டுமர் அன்றோ பாரதந்தர்யம் காட்டி அருளுவான் )

நீராட வாராய்-
நான் அழைத்தால் வாராமல் இருக்கைக்கு ஹேது என்
திரு மஞ்சனம் செய்ய வேணும் காண்

எண்ணெய் -ப்ரக்ருதி தர்சனம்
புளி -தேஹ தர்சனம்
இவை தரிசித்தால் இறே அழுக்கு அறுவது –

(ஓ ஓ உலகினது இயல்வே
இவை என்ன உலகு இயற்க்கை
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
இவை அறிந்தே சம்சாரம் போக்கிக் கொள்ள வேண்டும்
வியாஜம் -திரு மஞ்சனம் –
நம் உஜ்ஜீவனத்துக்காகவே அவன் திரு மஞ்சனம் கண்டு அருளுகிறார் )

——–

நான் அழைத்தால் வாராத போதும்
நீ பிறந்த நாளைக்கு நீராட வர வேணும் காண் என்கிறார்

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

பதவுரை

நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ஸ்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆட வேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –

கன்று இத்யாதி –
தன்னேராயிரம் பிள்ளைகளான உன் தரத்தார் உண்டாய் இருக்க கன்றுகளோடே விளையாட வேணுமோ –
இப்படி விளையாடிக் கன்றுகள் செவியில் கட்டெறும்பைப் பிடித்திட்டால் அவை

தென்றிக் கெடுமாகில்
சிதறி இனம் பிரிந்து போமாகில்

வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் –
வெண்ணெய் ஒழிய க்ஷண காலமும் செல்லாமல்
வெண்ணெய் அளைந்த குணுங்கு நாற்றமே சத்தா ஹேதுவாக
நீராடவும் இறாய்க்கிற நீ எங்கனே தான் அது ஜீவிக்க இருக்கிறாய்
இனி நீ ஜீவிக்குமது காண வன்றோ இருக்கிறோம் –

நின்ற மராமரம் சாய்த்தாய்
இனம் செறிந்து வ்ருத்தாகாரமாய் நின்ற மராமரங்களை ஒரு ஆஸ்ரிதனுக்கு சங்கை வாராமைக்காக
துளை படச் சிலை வளைத்துச் சாய்த்தவன் அன்றோ –

அது கிடக்கிடு
நீ பிறந்த திருவோணம் கான் இன்று என்று சொல்ல
ஒடுகையால்
என்னுடைய நாயன் அன்றோ ஓடாதே வாரீர் என்கிறார்

இது அத்தத்தின் பாத்தா நாள் போல்
துல்ய விகல்பமும் அன்று இறே –
அசாதாரணமும் அன்று -(ரோஹிணியும் இல்லையே )
சில அவதாரங்களில் இந்த நக்ஷத்ரம் கூடிற்றே யாகிலும்
இவர் வெளியிடுக இல்லை இறே –

இத்தால்
கன்றுகளால் –
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயம் இல்லாதாரைக் காட்டுகிறது –

கட்டெறும்பால்-
தாமஸ ப்ரசுரமாய் -ஸ்ரவண கடுகமாயும் இருக்கும்
உபதேச விசேஷங்களைக் காட்டுகிறது

தென்றிக் கெடுகை யாவது –
பூர்வ அவஸ்தை குலைந்து
ப்ராயேண ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயிக்கை –

———

(ஸூத்ர தாரி
அர்ச்சிராதி போவதை நாடகமாக நடத்திக் காட்டுகிறானே வைகுண்ட ஏகாதசி அன்று
மூன்றாம் சுற்றில் வைகுண்ட வாசலில் எதிரில்
அது விராஜா நதி
சந்த்ர புஷ்கரணி
ஆயிரம் கால் மண்டபம் -ஸஹஸ்ர தூண்
மணல் வெளி நடை காட்டி அருளி
திரு மா மணி மண்டபம் நடுவில் -தனியாக ஆனந்தமாக எழுந்து அருளி
ஆழ்வார்கள் அனைவரும் பின்னால் சேவித்துக் கொண்டு இருப்பார்கள் –
தான் ஜீவாத்மா போல் நாடகம்
அதே போல் நீராட்டமும்
அழுக்கு போக்க காட்டி அருளுகிறார் –
ப்ரக்ருதி அழுக்கு -எண்ணெய்
தேக அழுக்கு -புளிப்பழம் )

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 – –

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும்
திரு ஆய்ப்பாடியில் உள்ள இடையரும் இடைச்சிகளும் பேச்சியின் அறிவு அழிந்த குரலைக் கேட்டும் –
அவள் தான் கிடக்கிற கிடையைக் கண்டும்
பீதராய் எல்லாரும் கூடக் கூப்பிடுகிறது கண்டு இருக்கச் செய்தேயும்
இப் பிள்ளை பேய்ப் பிணம் ஏறி முலை யுண்கிறது கண்டும் –

என் நெஞ்சம் பின்னையும் நில்லாமல் சென்று
பேய் முலையில் நின்றும் பிள்ளையைப் பிரித்து எடுத்துக் கொண்டு
இப் பேய் பிணம் எழுந்து இருந்து இன்னமும் பிள்ளையைத் தொடர்ந்து வரவும் கூடும் என்கிற பயத்தாலே
மற்ற ஒரு பிரதேசத்தில் போந்து தன் முலையைத் தானே பரிக்ஷித்துக் கொடுக்கையாலே
நான் முலை தந்தேன்-என்கிறாள் –
(தான் இட்ட ஆசனத்தைத் தானே தடவிப் பார்த்தார் -விதுரஸ்ய மஹா மதி போல் )

இப்படி அன்றோ நான் உன்னை வளர்த்தது -என்கிறாள் –
ஆகையால் நான் சொல்லிற்று செய்ய வேண்டும் என்று கருத்து –

ஆதாய கிருஷ்ணம் ஸந்த்ரஸ்தா யசோதாபித் விஜோத்தமா
கோ புச்ச பிராமணே நாத பால தோஷம பாகரோத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –

காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
நெல்லியோடே காய்ச்சின நீர் கடாரத்திலே பூரித்து வைத்தேன்
உனக்கு சீத உஷ்ணங்கள் சமமாகப் பூரித்து வைத்தேன் –

வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய்
பேய்ச்சியுடைய வஞ்சனையிலே அகப்படாதே அவளை நிரஸித்து
உன்னை நோக்கித் தந்த அந்த நல்ல புகழையும்
நீல ரத்னம் போன்ற வடிவு அழகையும் உடையவனே வாராய் -என்றவாறே

நீ பூரித்த வற்றை நான் இருக்கும் இடத்தே கொண்டு வா என்ன

அவை பூரிக்கலாம் அத்தனை ஒழிய என்னாலே எடுக்கப் போமோ –
நீ வாராய் –
என்று பிரார்த்திக்கிறாள் –

————

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – –

பதவுரை

கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
பூதனா சகடாதிகள் -என்னாதே –
ஸகடாசூர நிரசனத்தை முற்பட அருளிச் செய்கையாலே
வேஷாந்தர பரிக்ரகத்திலும் ஆவேசம் கொடியது ஆகையால் என்னுதல்
யுகே யுகே -என்னுதல்
கஞ்சன் வகுத்துக் கற்பித்து வரவிட்டதுக்கு வருகை அன்றிக்கே
அவன் தன்னிலும் காட்டில் – கடியனாய் இறே ஸகடாசூரன் தான் இருப்பது –
இவனைக் கலக்கழியும் படியாக உதைத்து

வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
அவள் கோலி வந்த மரணம் அவள் தன்னோடே போம்படி முலை வாய் வைத்த பிரானே –

மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
பற்று மஞ்சள் வாசி அறிந்து பூசுகிற உனக்குத் தகுதியான மஞ்சளும்
உன் நிறத்தில் ப்ரதிபிம்பிக்கும் படி நிறமுடைத்தான செங்கழு நீரின் வாசிகையும்
ஆறிக் குளிர்ந்து பரிமளிதமான சாந்தும்
உன் நிறம் போலே இருக்கிற அஞ்சனமும்
மற்றும் வேண்டும் உபகரணங்களும் கொண்டு வந்து வைத்தேன் –

அழகனே நீராட வாராய்
இவை எல்லாம் மிகையாம் படியான வடிவு அழகை யுடையவன்

நீராட வாராய் –

————–

அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ
செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 – –

பதவுரை

நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –

அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
நான் சிற்று உண்டியோடே செப்புடை யப்பம் சுட்டுப் பாலில் அக்காரம் மாவில் வைத்தேன் –
சொப்பட -நன்றாக

தின்னல் உருதியேல்
அமுது செய்ய வேணும் என்று -அதிலே உற்று இருந்தாயாகில் –
உறுதல் -விரும்புதல்

நம்பீ
பூர்ணனே

செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
செப்பிள மென் முலையாளர்கள் சிறு புறம் பேசிச் சிரிக்கையாலே வந்த பூர்த்தியை யுடையவன் –

சிறு புறம்
ஸ்நேஹ அதிசயத்தாலே தோற்றின புன்மைகளைச் சொல்லுகை –

சொப்பட நீராட வேண்டும்
எல்லாத்தாலும் நன்றாக நீராட வேணும் –

சோத்தம்பிரான் நீ இங்கே வாராய்
பிரானே உன்னை ஸ்தோத்ரம் செய்கிறேன் –

—————

எண்ணைய்க் குடத்தை  உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6- –

பதவுரை

எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டிவிட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

எண்ணைய்க் குடத்தை  உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
க்ருஹத்தில் உள்ளார் எல்லாரும் அந்நிய பரராம் படியாக எண்ணைய்க் குடத்தை  உருட்டி
உறங்குகிற சிறுப் பிள்ளையைக் கிள்ளி எழுப்பி

கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
சிறு பிள்ளைகள் பூச்சி என்று பயப்படும்படியாகக் கண்ணை மாற விழித்து
இந்த ஆரவாரத்திலே தனக்கு வேண்டிற்று செய்யலாம் இறே
இதுவே யாத்திரையாக நடத்த வல்ல சாமர்த்தியத்தை யுடைய தீம்பனே

உண்ணக் கனிகள் தருவன்
நீ விரும்பி அமுது செய்யும் படி நாவல் பழம் முதலான பழங்கள் தருவன்

ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய பிரானே மஞ்சனமாட நீ வாராய்-
உன் திருமேனி தோன்றுவது நீராடினால் காண் –

—————

கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே
சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7- –

பதவுரை

எம்பிரானே-!
கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் -சிறந்த தாயார் )
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-

கறந்த நல் பாலும்
கறவாத பால் இல்லை இறே
கறந்த பால் என்கையாலே -நானே ஆயாஸித்து கறந்த நன்றான பாலும் –
நன்மையாவது
நாழியும் உழக்கு நெய் போருகை

தயிரும்
அந்தப் பாலிலே உறைத்த தயிரும்

கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
அது கடைந்து உறியிலே வைத்த வெண்ணெயையும்

பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன்
பெறுகை யாவது –
நான் தர
நீ அமுது செய்து ப்ரஸன்னன் ஆனால் இறே
நான் பெற்றது யாவது

எம்பிரானே
நீ கழ கண்டாலே ஜீவிக்கும் போது
அது இருவருக்கும் பேறு அன்றே –

சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
சிறந்த தாய் என்றும்
நல் தாய் என்றும்
இரண்டு இறே ராஜ புத்ரர்களுக்கு

நல் தாய் -பெற்றவள்
சிறந்த தாய் -வளர்த்தவள்
இரண்டும் தானே இறே

இவள் பிள்ளையை -ஒளி மழுங்கும் -என்று பயப்பட்டு
வளர்ப்பார் கையிலும் காட்டிக் கொடாள் இறே ஸ்நேஹ அதிசயத்தாலே –
இரண்டாகில் இறே ஒருவருக்கு ஒருவர் பிள்ளை குண ஹானிகள் சொல்லி அலர் தூற்றுவது
இரண்டும் தானே யாகையாலே -மாட்டேன் என்கிறாள் –

பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன்
பிறர் ஆகிறார்
உன்னுடைய தோஷ குண ஹானிகளாலே கால ஷேபம் பண்ணுகிற மாத்ரம் அன்றிக்கே
குணத்திலேயும் தோஷ கிரஹணம் செய்ய வல்ல சிசுபாலாதிகளும் உண்டு இறே லோகத்திலே
இவை மறந்தும் உரையாட மாட்டேன்
அபுத்தி பூர்வகமாகவும் வாய் விட மாட்டேன் –

—————-

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

பதவுரை

கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை–(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோ தான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நிஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய்-

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து-பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்-
சில கன்றுகளின் வாலிலே ஒலையைக் கட்டி வெருட்டித் துள்ளுதல் பார்த்து
சில கன்றுகளை எடுத்து விளாங்கனி யுதிர எறிந்து –
அதன் பின்னே அத்விதீயமான காளியன் படத்திலே ஓடிச் சென்று குதித்துப் பிடித்துக் கொண்டாட்டினாயோ தான்

1-அனு கூலரை வெருட்டியும் –
2-பிரதிகூலரை நிரசித்தும் –
3-பிரதிகூல பயத்தாலே ஒதுங்கினாரைத் துறத்தி ஒட்டி விட்டும் செய்தாயோ தான் –
நீ இப்போது செய்கிற தீம்பால்
அவையும் செய்ததாக நான் கேட்டவையும் கூடும் இறே –

நின் திறத்தேன் அல்லேன் நம்பி
உன் படிகள் எனக்குத் தெரிந்து இருக்கிறது இல்லை –
அது கிடக்கிடு

நீ பிறந்த நல் திரு நாள்
திரு -ஓவ்பசாரிகம் –
அன்றிக்கே -திரு நக்ஷத்ரம் என்னவுமாம் –
நீ பிறவாத நாள் இறே பொல்லாத நாள்

நன்னாள்
மாதா பிதாக்களுக்கும் –
பந்துக்களுக்கும் –
லோகத்துக்கும் -பொருந்தின நாள் ஆகையாலே நன்னாள் என்கிறது –

பொருந்தாத நாளிலே பிறந்தாரும் உண்டு இறே
உனக்குத் தானும் நன்றான நாள் இறே

நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய்
ஒரு நாளும் நீராடாதாரும் தம் தாம் பிறந்த நாளிலே நீராடாதார் இல்லை இறே

நாரணா
சாதாரண பரி பாலனமும் வேணும் காண் –

———-

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 – –

பதவுரை

பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

பூணித் தொழுவினில் புக்கு
நல்ல பசுக்கள் அடைத்துப் பூட்டித் திறந்து விடும் தொழுவத்திலே புக்கு –

புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன்
அதாவது
நீராடிக் காண்பதிலும் முக்த பாவம் தோன்றுகையாலே பிரியப்படுவன் –

ஆகிலும் கண்டார் பழிப்பர்
உன்னைக் கண்டார் -ஒருத்தி பிள்ளை வளர்த்த படி என் என்று ஏசுவார்கள் –

நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மைத்துனமையாலே உன்னைக் காணில் நப்பின்னை சிரிக்கும் –
காணில் -என்றது
அவள் காண்பதற்கு முன்னே வந்து கொள்ளாய் -வந்து கொள்ளாய் -என்ன

வராதே
எனக்கு அது தானே அல்லவோ வேண்டுவது -என்ன

நாண் எத்தனையும் இலாதாய்
என்ன நிர் லஜ்ஜனோ நீ

இத்தனை
அல்பம் என்றபடி

மாணிக்கமே
மாணிக்கம் போல் விரும்பப்பட்டவனே -என்னா
அது போராமையால்
என் மணியே-என்கிறாள் ஆதல்

அன்றிக்கே
மாணிக்கத்திலும் முத்திலும் ஏறின அழுக்கு ஒழிந்த பிரகாஸம் போலே
நீராட்டித் திருமேனி காண வேணும் காண் -என்னுதல்

மாணிக்கம் -கரு மாணிக்கம்

அன்றிக்கே
மாணிக்கம் ஏய்ந்த மரகத மணி போலே இருக்கிறவன் -என்றுமாம் –
ஏய்தல் -ப்ரதி பிம்பம்

———–

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –

பதவுரை

கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார்மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர்மலி–அழகு நிறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.

கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
நீர் கொண்டு எழுந்த காள மேகத்தின் பிரகாசத்தை யுடைய திருமேணியை யுடையனுமாய்
ஸூ லபனுமுமாய்
உபகாரகனுமாய்
இருப்பவனை மிகவும் உகந்து –

வார்மலி கொங்கை யசோதை
கச்சு விரியும்படி விம்முகிற முலையை யுடைய யசோதை

மஞ்சனம் ஆட்டியவாற்றை
கடார நீராட்டின பிரகாரத்தை –
ந வாரிணாத் ஸூத் யதிசயித யந்தராத்மா –என்கிற நியாயத்தில் இறே திருமஞ்சனம் ஆட்டுவது –

ஞான நீர் கொண்டு இறே இவர் நீராட்டுவது –
அந்த ஞானம் ஆவது -மங்களா ஸாஸனமான பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஞானம் இறே –
(ஆகவே நீராட்டம் பாசுரங்கள் இவற்றுடன் திருக்குறும் தாண்டக பாசுரங்களும் நித்ய அனுசந்தேயம் ஆகின்றன )

பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன
பாடல்
ப்ரஹ்ம லோகத்து அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியிலும் அடங்காத -அதுக்கும்
அவ்வருகான திரு மாளிகையிலே இறே இவர் புகழ் நிலை பெறுவது

தொன்மை யாவது -இப் புகழ் அநாதி ஸித்தம் -என்கை
புதுவை -என்றது -ஸ்ரீ வில்லிபுத்தூரை இறே
புத்தூர் புதுவையாம் இறே
இப்படிப்பட்ட திருப் புதுவைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த –

சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே –
எழுத்து -சொல் -பொருள் -யாப்பு -அலங்காரம் -சீர் -தளை -என்றால் போலே
சொல்லுகிற லக்ஷணங்களுக்கு லஷ்யமாதல் -என்னுதல்
அவனுடைய குண விசேஷங்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணின செந்தமிழ் என்னுதல்-

செந்தமிழ் –
ஆர்ஜவமான தமிழ் -அதாவது நடை விளங்குகை
அதுதான் ஆவது
அகாத ஜல அந்தர்கதமான ரத்னம் அத்யா சன்னமாம் படி தோன்றுமா போலே இறே
ஸம்ஸார சாகர மத்யே தேவகீ புத்ர ரத்னம் தோன்றும் படி

வல்லார்
சா பிப்ராயமாக வல்லார் என்றபடி –

தீ வினை யாதும் இலரே
த்ரிவித ப்ரவ்ருத்தியாலும் தீதான வினைகள் ஒன்றும் இல்லை –

அதாவது
ஐஸ்வர்ய -கைவல்யாதிகள்
தத் தத் சாதனங்கள்
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்கள்
விஷய அனுரூபமான கைங்கர்யங்கள்
இவை எல்லாம் தீ வினையாக இறே
தேய்த்துக் கிடக்க நான் ஓட்டேன் -என்கிற இவர் நினைத்து இருப்பது –
(சேஷ சேஷி பாவம் மாறி தானே மங்களா ஸாஸனம் )

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: