ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–4—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி யொற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக் குறிப்பே–5-4-1-

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?

விளக்க உரை

எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களை நச்சி அங்குமிங்கும் அலைந்து திரிந்த அடியேனை,
உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே
சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி பண்ணிக் கொண்டிருக்கும் படியான நிலைமையயும்
அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று;
இனிச் செய்ய வேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி.

திருவேங்கடத்துக்குத் தண்மை – ஸம்ஸார தாபங்களை ஆற்றவற்றாயிருக்கை.
உடையாய்- உடையான் என்பதன் ஈறு திரிந்த விளி. வாழ – பிறவினையில் வந்த தன்வினை;
‘உலகு தன்னை’ என்பதை உருபு மயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம்.
தாமோதரன் -கண்ணி நுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனாதலால், அத்தாம்பின் தழும்பு
திரு வயிற்றில் தோன்றப் பெறவனென்றபடி. சதிர் – ருஜுவாயிருக்குந் தன்மை.
கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற் பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-,
இப் பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார். ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது – அநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை.
அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினை யிடுவது.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது – உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றபடி. …

————-

பறவை யேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்
பிறவி யென்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை யென்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே–5-4-2-

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது.

விளக்க உரை

கீழ்பாட்டில், “இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து தலைக் கட்டின
பின்பு இனிப்பதறுவானென்? என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
“ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடு நாளாகப் பற்றிக் கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே;
ப்ராப்திக்கு உறுப்பான பரம பக்தி பிறக்க வில்லையே” என்ன;
இவை யித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார் – நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு
ஸம்ஸார ஸாகரமானது நிச் சேஷமாக வற்றிப் போனமையால், அடியோர் பெருத்த பாக்கியம் பண்ணினேனாகிறேன்;
இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாப ராசிகளும் தீயினிற் பட்ட தூசு போல இவை யெல்லாம் இங்ஙனொழிந்தமையால்
ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு.

எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவதாகப் பெரிய திருவடியின்
மேலேறிக் கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார்.
‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்க வேணும்; பெரிய பதவியை யான் பெறா நின்றேன் என்றபடி.
இன்றளவும் பிறவிக் கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீந பதவியிலிருந்த நான்,
இன்று அதனை வென்றமையால் உத்தம பதவியைச் சேர்ந்தேன் என விரிக்க.

ஆல் இரண்டும் மகிழ்ச்சிக் குறிப்பிடைச் சொல். தீக்கொளீஇ – தீக்கொண்டு; சொல்லிசையளபெடை ?
“போய பிழையும் புகு தருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்ற திருப் பாவை இங்கு நினைக்கத்தக்கது.
அறிவை என்ற சொல்லில், ஐ -சாரியை. இவ் விடத்தில் அறிவை யென்று பரம பக்தியைச் சொல்லுகிறதென்பர்.
பிறவிக் கடலில் ஆழ்ந்திருந்த நான், அதனை வென்று வெளிக் கிளம்பி நின்றால், ஞானமாகிற ஒரு அமுதவாறு
வாயையும் தலையும் சொல் நயத்தாற் போதருமென்க. தலைப்பற்றி வாய் கொள்ளுதல் -மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்.

——————-

எம்மனா என் குல தெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ் வுலகினில் ஆர் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே-5-4-3-

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன.

விளக்க உரை

கீழ் “பிறவியென்னுங் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்ற
தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் அபேக்ஷிதம் தலைக் கட்டிமையையும் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
“ஆழ்வீர்! நீரொருவர் மாத்திரம் பேறு பெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ?
நீர் பேறு பெற்றீராவது” என்ன, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்த பின்பு
என்னைப் போல் நன்மை பெற்றார் இவ் வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு
ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந் நாட்டிலுள்ள ரனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன;
இதற்கு மேற் படவும் ஒரு நன்மை யுண்டோ?” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

எம்மனா – எம் மன்னா; தொகுத்தல்; ‘மன்னன்’ என்ற சொல்லின் ஈறுதிரிந்த விளி.
“எம்மனாயென் குலதெய்வமே” என்றும் ஒரு பாடம். அப்போது ‘எம் அனாய்’ எனப் பிரியும்.
அனாய்-அன்னை என்பதன்விளி; தொகுத்தல் ; எனக்குத் தாய் போலப் பிரியமே நடத்துமவனே! என்றபடி.

குலதெய்வம் – வடமொழித் தொடர். “நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று – பாவங்களின் கொடுமையைக் கூறியவாறு.
“நாட்டுள பாவமெல்லாம்” என்றும் பாடமுண்டென்பர். (சும்மெனாதே) ‘கப் சிப், வாயைத் திறவாமல் ஓடிப் போய் விட்டான்’ என்பதுபோல ;
போவது பிறர்க்குத் தெரியாதபடி போயினவென்க.
(தூறுகள் பாய்ந்தன) “வனோ மறிகடலோ மாருதமோத தீயகமோ, நானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்-
ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்ததார். தாள் பணிந்தோம், வன்துயரை யாவாமருங்கு” என்றார் நம்மாழ்வார்.

“இவ் விடத்தில், தூறு என்கிறது ஸம்ஸாரிகளை” என்றருளிச் செய்வாராம் திருக்கோட்டியூர் நம்பி.
தூறென்று செடியாய், கிளை விட்டுக் கிடக்கிற ஸம்ஸாரத்தைச் சொல்லக் கடவதிறே.
“முற்ற விம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றிற் புக்கு” என்ற திருவாய்மொழி காண்க.

————

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற் போல்
உடலுருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கர பாணீ சார்ங்க விற் சேவகனே–5-4-4-

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்.

விளக்க உரை

கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே
நிறைத்துக் கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து
ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் -வடசொல்; பாத்திரமென்று பொருள் –
நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப் பிரியும்; ஆற என்ற சொல்: ஆ எனக் குறைந்து கிடக்கிறது;
ஆறு – பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச் சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம்.

(உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக் கேடு படாமைக்காக இட்ட கரை போன்ற சரீரமும் உருகப்பெற்றது.
எனவே, இவ் வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும்.
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால்
உடலுருகச் சொல்லவேணுமோ?
“ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ் வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க;
‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம்
வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம்.

(கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவே யன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய
பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை செல்லு மிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார்.
‘கூற்றமும் –குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ?” எனின்;
‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக் குறையாகக் கொள்க;
“கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று).
கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் .
கோலாடி – ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் – செங்கோல்.

—————

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ வுரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பா என் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே–5-4-5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருத த்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ண த்ருஷ்டாந்தங் கூறுகின்றனர்.
உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரை கல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்;
அதுபோல், பொன் போன்ற உன்னை, அற்ப சாரங்களில் மண்டின என் நாக்காகிற உரை கல்லில் இட்டு உரைத்தேன்;
நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவது போல்,
நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப் பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து.
உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்;
நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று;
பொல்லாப் பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே;
உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரை கல்லில் நிறம் பார்க்கவிறே உரைப்பது.
ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள் கொள்க.
‘உன்னைக் கொண்டு’ இத்யாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம்.
ஒருவராலும் துதிக்க வொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பது போலாகுமே யன்றி,
பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார்.
இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ள வேணும்.
“மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக் கொண்டு நின்றேன்.
நல்ல பொன்னை நல்ல கல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப் போலே,
உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்;
பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது.

இப்படி அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்து வந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை;
‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந் நன்றிகளை நீர் தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்;
இப்படி நான் உம்மைப் பரம பாவநராக்கி யிருக்கச் செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து,
என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை!
உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன;
அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ் வெம்பெருமான் திருவடிகளில் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்;
“நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற் போல
நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும்.

—————–

உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான் இனி யெங்குப் போகின்றதே–5-4-6-

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராமநம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
எம்பெருமான்–எமக்குத் தலைவனே!
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார்.
முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால்,
அந்த மல்ல வதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க.
“உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக்
கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள்
தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு;
கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய்,
சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும்,
மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை
கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும்
மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க.

விக்கிரம் – வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது
கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில்
அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி.
ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால்,
அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க.

“மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது
“இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரிய குல மடங்கலும் பாழ்பட்டவாறு போல,
உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து.
ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால்
இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற எம்பெருமான் கருதியதாகக் கொண்டு,
அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால்
“மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கினிப் போய்ப் பிறரொருவர்.
என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும்.
போகின்றது- தொழிற்பெயர்.

“ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும்,
அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும்,
அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது”
என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது.

————-

பருப் பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
மருப் பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித் தாக்கினையே-5-4-7-

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர கேதுவை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும் (இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “உன்னுடைய விக்கிரமமொன் றொழியாமலெல்லாம், என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி
யெழுதிக்கொண்டேன்” என்றது எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையினால் என்பதை இப்பாட்டாலருளிச் செய்கிறார்.
பரமபதத்தை இருப்பிடமாகவுடைய எம்பெருமான் அங்கு நின்றும் இவர் பக்கலிலே வருமளவு முண்டான பாவக் காடுகளைப் பாழாக்கியும்,
விரோதிகளைப் போக்கியும், இவருடைய சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தருளினமைக்கு
ஒரு த்ருஷ்டாந்தல் காட்டுகிறார். முதலடியில்,
பாண்டியகுலத்துத் தலைவனாயிருந்த மலயத்வஜ ராஜன் தனது நாட்டில் நின்றும் மஹா மேரு கிரியளவும் வழியிலுள்ள
காடுகளைக் களைந்து பகைவர்களைக் காப்பாற்றித் தனக்கும் தனது பரிஜனங்களுக்கும் கடை எளிதாம்படி
பெரு வழியாக்கிக்கொண்டு சென்று, தனது வெற்றி தோற்றும்படி அம்மேருகிரியின் சிகரத்தில் தனது மதுரகேதுவை
நாட்டிப்போயினனென்று வரலாறு அறிக.
பாண்டியர்குலபதி கயல்பொறித்த இடமாகிய, பருப்பதத்தை இங்கு உவமை கூறியதனால்,
பெறுதற்கரிய இப்பேற்றைப் பெறுவதற்காகத் தாம் ஒரு முயற்சியும் செய்திலர் என்பது போகரும்.
பருப்பதம்-வடசொல்; உருப்பசி எனத் திரிவதாக்கும்.
கயல்- மீன்; இது, மன்மதனுக்குக் கேது வானதுபோல, பாண்டியர் குலபதிக்கும் கேதுவாயிருந்ததென்க.
சே அடி- ருஜுவான திருவடி என்றுமாம்; செம்மை + அடி, சேவடி. செம்மை- செந்நிறமுமாம்; ருஜுவாயிருக்குத் தன்மையுமாம்.
பொறித்தாய், ஒசித்தாய், அடர்த்தாய் என்ற மூன்றும் விளி.
‘உருப்பொலிந்த’ என்று- எம்பெருமானைத் துதிப்பதனால் நாவுக்குப் பிறந்த புகர்ப்பைக் கூறியவாறுமாம்.
“(உருப்பொலிந்த நாவினேனை.) செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாபோலே விபரீத லக்ஷணை;
இதர விஷயங்களிலேயிறே என் நாக்கு உருப் பொலிந்தது” என்பது ஆன்றோர் வாக்கியம்.

பகவத் ஸந்நிதிகளில் ஸ்ரீசடகோபன் ஸாதிக்கும் போது இப் பாசுரத்தை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

———–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அகம் பொழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே–5-4-8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்

விளக்க உரை

எம்பெருமான் தனது அந்தரங்க சிங்கார்களான நித்யஸூரியள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து,
அவ்வன்பு முழுவதையும் தம்மொருவர் பக்கலில் அமைந்தருளின பரமோபகாரத்தைப் பேசுகின்றார், இப்பாட்டில்
“சென்றால் குடையாம்” என்றபடி பலவகைப் பணிவிடைகளையுஞ் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்தும்,
உவந்து தேறுதைக்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால், மற்றையோரிடத்துக் குறைவுற்றது.
கைமுதிக நியாயத்தாற் பெறலாகுமென்க
ஐது எனினும், நொய்து எனினும் அற்பமென்றே பொருள்; இங்கு ஒருபொருட் பன்மொழியாய், ‘மிகவும் அற்பமாக’ என்று பொருள்படும்.

இப்படி ‘வாழச்செய்தாய் எம்பிரான்!’ என்ற ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான்,
“ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறுகின்ற நீர் நெடுநாளாக இவ்விருள் தருமா ஞாலத்தில் தட்டித்திரிந்து
அலமந்து மிகவும் இளைத்தீரே” என்ன; அதற்கு
ஆழ்வார், “ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு ‘நெஞ்சுழியும்’ என்றபடி மனஸ் சைதில்யமும் பெற்று,
கண்களும் நீர் மல்கப் பெற்று, பிறகு இவ்வாறாக பரிபாகங்கள் பிறக்கைக்கடியாக நீ செய்தருளின நன்றிகளை
மநநம் பண்ணிக் கொண்டே ஸகல தாபங்களும் தவிரப் பெற்றேனாகையால், என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்க
வேண்டிய கடமையில்லை” என்கிறார். பின்னடிகளில்.
அசும்பு – கண்ணீர்; வடசொல் திரிபு
சிரமம் – வடசொல் திரிபு. கையும் திருவாழியுமான அழகைக் கண்ட பின்பும் இளைப்பாறக் கேட்கவேணுமோ
என்பார் ‘நேமி நெடியவனே!’ என விளிக்கின்றார்

————–

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே தனி யுலகே என்றென்று
உனக்கிடமா யிருக்க என்னை உனக்கு உரித் தாக்கினையே–5-4-9-

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சந்தியையுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இலை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)

விளக்க உரை

எம்பெருமான், தன்னை அநுபவிக்குமவர்களான நித்திய ஸூரிகளை உபேக்ஷித்து விட்டு, என்னிடத்து அன்பு பூண்டு,
என்னையே போக்தாவாகக் கொண்டு வந்தான் என்றார், கீழ்ப்பாட்டில்;
இப் பாட்டில், அவ்வெம்பெருமான் தன்னுடைய போக ஸ்தாநங்களையும் உபேக்ஷித்து விட்டு வந்து என் நெஞ்சையே
தனக்கு உரிய இடமாக அங்கீகரித்தருளின் என்கிறார்.

(வரதராஜபஞ்சாசத்) தூப்புற்பிள்ளையினருளிச் செயல், இப் பாசுரத்தை ஒரு புடை அடியொற்றிய தென்றுணர்க.
“பள்ளி கோள்“ என்றவிடத்து, கோள் – முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
பழகவிட்டு-பழகும்படிவிட்டு, அதாவது – ‘எம்பெருமானுக்குப் பனிக்கடலில் பள்ளி கொள்ளுதல் எப்போதோ
பழைய காலத்தில் இருந்த சங்கதி‘ என்னும்படியாகவிட்டு என்றபடி, பழகுதல் – பிராசீநமாதல்.
மனத்தைக் கடலாகக் கூறியது – குளிர்ச்சி. இடமுடைமை முதலிய தன்மைகளின் ஒற்றுமைபற்றி–
எம்பெருமான் ஸூர்ய மண்டலத்தை இருப்பிடமாக்க் கொண்டவனென்பது அறியற்பாற்று.

—————–

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே-5-4-10-

பதவுரை

தடவரைவாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இடவகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்;
ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல,
எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின்,
அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு,
அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க.
‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில் நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில்,
பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும்.
அவன்றானே அவளிடத்துச் சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்;
அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்தி பூர்வமாக
இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து.

பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல,
என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று
எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில்.
மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்-வடசொல் திரிபு.
இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும்,
முறையே, திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் எனப் பொருள் வாசி காண்க.
மூன்றாமடியில், வடதடமென்பதை, வட மென்னும் வட சொல்லின் விகாரமாகக் கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்;
இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல்
என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே!
இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக் கூட்டி உயர்யஸிக்க.

“உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே
விழுந்து கூப்பிட இவரை யெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார்.
“அதனிற் பெரிய என் அவா ” என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம்,
இப் பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத் திருமொழி” என்ற ஆன்றோர் உரையில் அருளிச் செயல் இங்கு அறியற்பாலது.

—————

வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை
ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தமமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே–5-4-11-

பதவுரை

வேயர் தங்கள்–வேயர்களுடைய
குலத்து–வம்சத்து
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்.

விளக்க உரை

இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார்.
விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும்.
‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத் திருநாமத்தின் பொருள் ஒன்றரை யடிகளால் விரிக்கப்பட்டது.

(வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்;
“முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்த
திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது.

எம்பெருமான் இடைக் குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானது போல ஆழ்வார் தமக்கும் எளியனான படியைக்
கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார் நெஞ்சிற் புகுந்த பின்பு,
விலக்ஷணமானதொரு புகரைப் பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது.
கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலை உவமை கூறினானென்றுங் கொள்வர்.
ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளை போலச் செருக்குற்றிருப்பவன்.
ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ் பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க.
அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப் பொருளுரைத்தனர்;
“அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில்
“கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல்.
இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர்.
“அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,
அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது.
“நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால்,
அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும்.

அமுதத்தினை- அத்து, இன் என்ற இரண்டும் சாரியை; ‘அந்தணர்கள் அமுதை’ என்றபடி; உவமையாகுபெயர்.
சுவையின் மிகுதி பற்றியும் பெறற்கருமை பற்றியும் போக்யமாயிருக்குந் தன்மை பற்றியும்,
பருகினவர்களை மயக்குந்தன்மை பற்றியும் எம்பெருமானை அமுதமாகக் கூறுதல் ஏற்குமென்க.

ஈற்றடியில் ஒரு ஐதிஹ்யம்- பண்டு எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு
எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற
அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க,
எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச்
சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்;
ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளை யெடுத்துத்
தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று,
“அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம்.
தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு
இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர் என்றவாறு,
இனி, ‘சாயைபோல- குளிர்த்தி உண்டாம்படி, பாட வல்லார் தாம் அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர் என்ப,

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: