ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–3—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

இரண்டாமடியில், “கண்டு கொண்டேன்” என்ற விடத்துள் ஏன் விகுதியைப் பிரித்து,
முதாலடியிறுதியிலுள்ள ‘பறித்து’ என்பதனோடு கூட்டி யுரைக்கப்பட்டது.
இனி இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலும் ஒருவாறு ஒக்குமென்க.

பரத்துவம், அந்தர்யாமித்துவம், வியூஹம், விபலம், அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படுவனவும்,
உன்னுடைய பிரவேசமுள்ளனவுமான விடங்களிலெல்லாம் தட்டித் தரிந்து உன்னை ஸேவித்து, பலவைத் துன்பங்களுக்கு
இடமான இச்சரீரத்தில் விருப்பை ஒழித்துக்கொண்ட அடியேன் இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டகலகில்லேன் என்கிறார். முன்னடிகளால்,
சுழலை- சுழன்று சுழன்று வருகிற ஆறு. துக்கங்கள் இச்சரீரத்தைச் சூழவளைந்துகொண்டிருப்பதனால்,
அவற்றைச் சுழலையாக உருவகப்படுத்தினர்.
அன்றி, ‘சுழலையை’ என்ற விடத்துள்ள இரண்டனுருபைத் துக்கம் என்பதனோடு கூட்டி, ‘சுழலையை’ என உரைத்தலுமொன்று.
‘சூழ்ந்து கிடந்த’ என்பதைச் சூழ்ந்து கிடந்த என வலிக்க;
பிற வினையில் வந்த தன் வினை வலை என்ற சொல் ஆகு பெயரால் உடலை உணர்த்திற்று.
‘வலை என்கிறது, தப்ப வொண்ணாமையைப் பற்ற;
வலையாவது கயிறுமணியுமாயிருப்பதொன்று; இதுவும் நரம்பு மெலும்புமாயிருப்பதொன்றிறே” என்ற வியாக்கியாகவாக்கியமிங்கு அறியத்தக்கது.
இனி, ‘துக்கச் சுழலை’ என்று- துக்கங்கள் சுழல்வதற்கு இடமடான ஆத்துமாவை சொல்லிற்றாய்.
அதைச் சூழ்ந்துகிடந்தவலை என்று- அவித்யாகர்ம வாஸாநாருசிகளைச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம்.
புக்கினில்- ‘புத்தகங்களில்’ என்பதன் மருஉ. பாத்வ, அந்தர்யாமித்வ, வியூஹ, விபவ, அம்சாவதாரங்களளவாகப்
புக்குக் காண்கையாவது- அந்த அந்த நிலைகளைப் பிரத்யக்ஷமாகாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தினால்
அநுபவித்துப்பாடுவகை
கல்லிடை மோத- கல்மேல அறைய என்றபடி.

————

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு ஆணை–உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை.

விளக்க உரை

ஏழையாயிருப்பவர் செல்வர் மாளிகை வாசலைப் பற்றிக் கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னை விடமாட்டோம்’
என்ற உறுதியுடன் அவர்களை வளைத்துக் கொண்டிருப்பது போலவும்,
பரதாழ்வான் சித்திரகூடந்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற்போலவும் நான் உன்னை வளைத்துக்கொண்டேன்;
உன்னால் தப்பிப் போக வொண்ணாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய;
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்; என் மாயையில் உலக முழுவதையும் பிணிப்புண்டிருக்கச் செய்யவல்ல யான்,
உம்முடைய வளைப்பில் நின்றும் என்னைத் தப்ப வைத்துக் கொள்ள வல்லேனல்லனோ” என்ன;
அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின்மேலாணை; நீ தப்பிப்போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட;
எம்பெருமான், “ஆழ்வீர்! இது என் காணும்? ஆணையிடுவதற்கு இப்போது என்ன பிரஸத்தி?” என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! (அடியார்களை ஒருபடியாலும் கைவிடமாட்டேன்) என்று நீ ஓதி வைத்ததெல்லாம்
பொய்யாய்த் தலைக்கட்ட நேரிட்டதே என்று ஆணையிடுகிறேன்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டின் முன்னடி.

“என்னெஞ்சத் துள்ளித்திங்கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் வளைத்து வைத்தேன்” என்ற
கலியனருளிச்செயல், முதல் அரையடியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
இந்த்ரஜாலம்- கண்கட்டுவித்தை. ஒளித்திடில் – நீ மறைந்தாயாகில் என்றபடி.
(நின்திருவாணைகண்டாய்.) “மாயஞ்செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை, வாசஞ்செய் பூங்குழலாள்,
திருவாணை நின்னாணை கண்டாய்” என்ற திருவாய்மொழி அறிக.
ஆணையிட்டால் அதை மறுக்கமுடியாதென்று கருத்து.
(நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை.) “கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக் கடைக் கணித்தாங்கே ஒருத்திதன்பால்,
மருவினம்வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒரு பேதைக்குப் பொய்குறித்துப் புரிகுழன்மங்கை யொருத்தி
தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாயுன் வளர்த்தியோடே
வளர்கின்றதாலுன்றன் மாயைதானே” என்ற பெருமாள் திருமொழியை நினைக்க.
அல்லை – முன்னிலையொருமை வினைமுற்று.

பின்னடிகளின் கருத்து: – உலகத்தாரனைவருந் திரண்டு, தம்முடைய பாவங்களையெல்லாம் தொலைத்துக் கொள்ள
விரும்பிப் பேராரவாரஞ் செய்துகொண்டு திருமாலிருஞ்சோலையிலுள்ள சிலம்பாறுமுதலிய பல தீர்த்த விசேஷங்களைப்
பிரதக்ஷிணம் செய்வதைக் கூறியவாறு.
வலஞ்செய்தலைக் கூறியது – மற்றுள்ள வழிபாடுகளுக்கெல்லாம் உபலக்ஷணமென்க.
இனி வலஞ்செய்வதற்கு உரியதும், தீர்த்த விசேஷங்களை யுடையதுமான திருமாலிருஞ்சொலைமலையென்று பொருள் கொள்ளிலுமாம்;
அப்பொருளில் “வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை, வலஞ்செய்துநாளும் மருவுதல் வழக்கே” என்ற
திருவாய்மொழி நினைக்கத்தக்கது.
பின்னடிகளுக்கு வேறு வகையாகவும் பொருளவருளிச் செய்வர் பெரிய வாச்சான் பிள்ளை.

————-

உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக் குறவர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-3-

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?

விளக்க உரை

மகரந்தமமர்ந்த அரவிந்தத்தின் சுவையறிந்த வண்டு மீண்டொரு முள்ளிப்பூவைத்தேடி ஓடாதவாறுபோல,
உன்னுடைய கைங்கரியாஸமறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத்தேடி ஓடமாட்டேன்;
அப்படி என்னை நீ ஓடவிட்டால் அது உன்றன் மேன்மைக்கே குறையாமுத்தனை;
ஆதலால் அடியேனை நெறிகாட்டி நீக்காது திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்ற பிரார்த்திக்கின்றமை முன்னடிகளிற் போதருமென்க.
ஒருவன் றனக்குப் பணிந்து – ஒருவன் தன்னைப் பணிந்து என்றவாறு; உருபு மயக்கம்.
கடை – வாசல்; தலை – ஏழனுருபு. வாசலிலே என்றபடி.
சாயை தேஜஸ்ஸு; அதாவது – ஸர்வாதிகத்வம். ஷாயா என்ற வடசொல் திரிந்தது.

கீழ் நான்காம்பத்தில், இரண்டாந்திருமொழியில், இரண்டாம் பாட்டில்
“எல்லாவிடத்திலு மெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ் சீர்த்தென்றிருமாலிருஞ் சோலையே”
என்றதை விவரிக்கின்றன, பின்னடிகள்.
இத்திருமலையிலுள்ள குறவர்கள் கொல்லைகளில் வளர்ந்துள்ள தினைக் கதிர்களைப் பறித்து அவற்றைப் பரிஷ்கரித்து
எம்பெருமானுக்கு அமுது செய்வித்து, ‘தாங்கள் அநந்யப்ரயோஜகர்’ என்னுமிடம் வெளியாம்படி
“உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு” என்று மங்களாசாஸநம் செய்துகொண்டு, அந்தப் புதிய தினைமாவை உண்பாராம்.
தினை – ஓர் சாமை. இதனை மாவாக்கி உண்பது குறவர் முதலியோரது சாதியியல்பு.
தமக்கு ஏற்ற உணவையே எம்பெருமானுக்கும் இட்டனரென்க. குஹப்பெருமாளுடைய அனுட்டானமும் அறியத்தக்கது.
இங்குத் தினை என்ற சொல், அதன் கதிர்களைக் குறிக்கும்; பொருளாகுபெயர்.
“புனைத்தினைகிள்ளி” என்ற பாடம் சிறக்குமென்க. அவி- வடசொல் விகாரம்; தேவருணவு என்பது பொருள்;
அவிக்காட்டி என்றது – எம்பெருமானுக்குப் போஜ்யமாம்படி காட்டி என்றபடி.
வாழ்க – வியங்கோள் வினைமுற்று. இனம் – கூட்டம். புதியதுண்கை – கல்யாணச் சாப்பாடாக உண்கை என்றுமாம்.

————

காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்
பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4-

பதவுரை

குரு-குருவம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(காபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்புஇடம்–ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை.

விளக்க உரை

“இலங்கதிமற்றொன்று –நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாமே” என்ற திருவாய்மொழியை ஒக்கும் முன்னடிகள்.
இந்த ஸம்ஸார பூமிக்குள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் எட்டினவிடம் எத்தனை யோஜனை தூரமுண்டோ, அவ்வளவும்
அடியேன் தட்டித்திரிந்தாயிற்று; ஓரிடத்திலும் ஒதுங்க ஒருநிழல் பெற்றிலேன்; குடிக்கத் துளிதண்ணீரும் பெற்றிலேன்.
(லௌகிகர்கள் ஒதுங்குகிற நிழலும், அவர்கள் பருகும் நீரும் அடியேனுக்கு விஷ வ்ருக்ஷத்தின் நிழலாகவும் நச்சுநீராகவும் தோற்றியிராநின்றன.)
ஆதலால் உனது திருவடி நிழலைத் தவிர்த்து மற்றொன்றை நான் ப்ராணதாரகஸ்தலமாக நெஞ்சிற்கொண்டிலேன்,
கண்ணிலுங் காண்கின்றிலேன் என்கிறார்.
திரிந்து உழன்றேற்கு – உழன்று திரிந்தேற்கு என விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம்.
உழல்தல் – ஆயாஸப்படுதல். . உயிர்ப்பு- மூச்சுவிடுதல்.

கீழ்பாட்டில், “இனிப்போ யொருவன்றனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயையழிவுகண்டாய்” என்று
ஆழ்வாரருளிச் செய்தவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி,
“ஆழ்வீர்! நீ புறம்புபோய் நிற்பது என் சாயைக்கு அழிவானால் ஆகட்டும்;
அப்படி நிற்கும்படியாகப் புறம்பே ஓரிடமும் உமக்கு உளதோ?” என்றுகேட்க;
வேறு ஓரிடமுங் கிடையாதென்கிறார், இப்பாட்டால்.

(தூதுசென்றாய் இத்யாதி.) “உறவு சுற்றமென்றொன்றிலா வொருவன்” என்கிறபடி ஒருவகைச் சுற்றமுமற்றவனான
கண்ணபிரான் பாண்டவர் பக்கலில் பந்துத்துவம் பாராட்டியது- “இன்புற மிவ் விளையாட்டுடையான்” என்றதற்கேற்ப
லீலாநுகுணமாக ஆரோபிதாகாரமாதலால் “பொய்ச்சொற்றம்” எனப்பட்டது.
‘பேசிச்சென்று’ என்றது – வார்த்தைப்பாடாய், பாராட்டி என்றபடியென்பர்.
இனி, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப்பிரதியென்று” என்றொரு வாக்கியங் காணப்படுதலால் அ
தற்கேற்பப் பொருள் கொள்ளுதலும் ஒன்று; ஆனால், கண்ணபிரான் துரியோதநாதியரை நோக்கி,
“எனக்கு உங்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் ஒரு நிகரான பக்ஷபாதமே உள்ளது” என்றருளிச் செய்ததாகச்
சொல்லப்படுகிற விருத்தாந்தம் பாரதம் முதலிய முதனூற்களிற் காணப்படுகின்றதா என்பது ஆராயத்தக்கது.
கண்ணபிரான் தூதுசெல்லும்போது வழியிடையில் விதுரர் திருமாளிகையில் அமுது செய்துவிட்டு வந்தமைகண்ட துரியோதனன்,
‘புண்டரீகாக்ஷனே! பீஷ்மரையும் துரோணரையும் என்னையும் ஒரு பொருளாக மதியாமல் ஏதுக்காகப்
பள்ளிப் பயலிட்ட சோற்றை உண்டனை?’ என்று கேட்டதற்கு, கண்ணபிரான்,
‘எனக்கு உயிர்நிலையாயிராநின்றுள்ள பாண்டவர்கள் திறந்து நீ பகைமைபூண்டிருக்கின்றமையால் எனக்கும் பகைவனாயினை;
பகைவனது சோற்றையுண்பது உரிய தாகுமோ? என்று உத்தரங் கூறினதாக மஹாபாரதத்தில் காணப்படுகின்றமையால்,
அதற்கு விருத்தமாக இங்ஙனே பொய்ச்சுற்றம் பேசினதாகக் கூறப்படுமோ?
ஒருகாற் பேசியிருந்தாலும் துரியோதநாதியர் அப்பேச்சை ஏற்றுக் கொள்வரோ?
‘ஒரு க்ஷணத்திற்குமுன் எம்மை நீ பகைவராகப் பேசினாயே’ என்று மடிபிடித்துக் கொள்ளார்களோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;
அதற்குப் பரிஹாரம் வருமாறு:- கண்ணபிரான் துரியோதநாதியரைப் பகைவராகக் கூறியது முதல்முதலாக
அவர்களைக் கண்டபோது; பொய்ச்சுற்றம் பேசியது- பிறகு ஸமாதாநம் பேசுங்காலத்தில்;
முன்பு பகைவராகச் சொன்ன பேச்சைத் துரியோதநன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வல்லவனல்லன்;
“உன் முகம் மாய மந்திரந்தான்கொலோ” என்றபடி கண்ணபிரானது முகவழகில் மயங்காதாரில்லை ஆதலால்,
துரியோதனனும் அதில் மயங்கி, முந்தியபேச்சை மறந்துவிடுவான்;
கண்ணழகில் மயங்கித் தோற்று விளித்தவனிறே துரியோதநனென்பவன். இனி, பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
பேதம் செய்து – ‘பிணங்காதொழியப்பெறில் எங்களுக்கு ஒரூரமையும்’ என்ற பாண்டவர்களை பத்தூர் கேட்கும்படிபண்ணி,
அதுவே ஹேதுவாக இரண்டு வகுப்பினர்க்கும் வைரத்தை வளர்த்து அவர்கள் உறவைக் குலைத்து என்றவாறு.
அன்றி, ஆச்ரிதரென்றும் அநாச்ரிதரென்றும் இங்ஙனமே ஒரு வாசியைக்கற்பித்து என்று முரைப்பர். பேதம்-வடசொல் திரிபு.
எங்கும்- கண்ணாற் கண்டவிடமெங்கும் என்றுமாம்.
“கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தவெந்தாய்” என்ற
திருவாய்மொழி இங்க நோக்கத்தக்கது
பிணம் – சவம்

————

காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா
மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்.

விளக்க உரை

மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்”
என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால்
தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை;
ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை;
மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும்
வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.

வீழ்வொழியா என்பதற்கு “நிர்விகாரமாய்” என்றிவ்வளவே பெரிய வாச்சான்பிள்ளை பொருளுரைத் தக்கதாக
அச்சுப் பிரதிகளிற் காண்கிறது; அது பொருத்தமற்றது; “நிர்வ்யாபாரமாம்” என்றிருந்ததை, “நிர்விகாரமாய்” என மயங்கி அச்சிடுவித்தனர் போலும்.
வீழ்வு-சோர்வு; அது ஒழியாமையாவது -எப்போதும் சோர்வுற்றிருக்கை. அதாகிறது – நிர்வ்யாபாரத்வம்.
இனி “நிர்விகாரமாம்” என்ற அச்சுப்பிரதிப் பாடத்தை, “நிர்விகாரமாம்”எனத் திருத்திக் கொண்டு,
“நிர்வ்யாபாரமாம்” என்ற பாடத்தின் பொருளையே அதற்குக் கொள்ளுதல் பொருந்துமென்னவுமாம்.
மனமே என்றவிடத்து, ஏகாரம் இசைநிறை.

————-

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருது கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இ பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
மா மணி வண்ணா–நீலமணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உன்னைவாழத் தலைப்பெய்திட்டேன்” என்ற ஆழ்வார் களித்துக் கூறியதைக்கேட்டு எம்பெருமான்,
“ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் மாறி மாறி நடக்கும்;
இப்படியே ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிக் கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல்
ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும்
பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை
உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.

எருது+கொடி, எருத்துக்கொடி. மருத்துவன்-வைத்தியன்; இங்க, ஆசாரியன் என்பது உள்ளுறை.
எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்;
“மருந்தும் பொருளு மமுதமுமந்தானே”
“அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே”
“மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்”
“அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக.
உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்;
வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு;
இம் மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது;
பல ப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.

(கோயில் கடைப்புகப்பேய்) “உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பர்” என்றவிடத்திற்கு உதாஹரணமாகக் காட்டப்பட்ட
திருக் கண்ணமங்கை யாண்டான் நிலைமையை அடியேனுக்கு அருள்செய்யவேணும் என்கிறார்.
“திருக்கண்ணமங்கை யாண்டான், ஒரு ஸம்ஸாரி தன் வாசலைப்பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டித்
தானுங் குத்திக்கொண்டபடியைக் கண்டு, ஒரு தேஹாத்மாபிமாநியின் அளவு இதுவானால், பரமசேதநனான ஈச்வரன்
நம்மை மயாதிகள் கையில் காட்டிக்கொடானென்று திருவாசலைப்பற்றிக் கிடந்தாரிறே” என்ற திருமாலை வியாக்கியானம் காண்க.
பெய்- முன்னிலையொருமை வினைமுற்று.

————-

அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்.

விளக்க உரை

*இளைத்திருந்தேனை என்ற விடத்துள்ள இரண்டனுருபைப் பிரித்து, ஏறி என்ற விளையெச்சதோடு கூட்டியுரைத்தோம்.
இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலுமொன்று. ஸம்ஸார ஸாகரத்தில் ஆழ்ந்துகிடந்து அலமருகைக்கீடான
அஜ்ஞாநத்தை நீக்கி ஞானத்தைப் பிறப்பித்தருளியவாறுபோல, உன்திருவடியோடே சேர்த்தியையும் பண்ணியருளவேணும் என்று வேண்டுகின்றார்.
இப்பாட்டால் அக்கரை என்று பாபத்துக்குப் பெயராதலால், கருவியாகு பெயரால் ஸம்ஸாரத்தை உணர்த்திற்று;
(கருவியாகு பெயராவது- காரணத்தின் பெயர் காரியத்துக்கு ஆகுவது; இங்கு, காரணம் பாபம்; காரியம் ஸம்ஸாரம்)
அனர்த்தம் – அபாயம்–வடசொல் திரிந்தது. இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையை அறிக.
இக்கரையேறி – பிறவிக் கடலினின்றும் வெளிப்பட்டு என்றவாறு. ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய் போல்
பிறவிக்கடலுள் நின்று துளங்கின அடியேன் உனது நிர்ஹேதுக கிருபையினால் அக்கடலைக் கடந்தேனாகிலும்,
நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தைச் சிக்கனப் பிடித்தாலன்றி என் அச்சம் தீராதாகையால்,
‘ஸ்வதந்திரனான ஈச்வரன் மீண்டும் நம்மை ஸம்ஸாரக்கடலில் தள்ளினாற் செய்வதென்?’ என்று மிகவும் பயப்படா நின்றேனாகையால்,
இவ்வச்சந்தீரும்படி அபயப்ரதாநம் பண்ணியருளவேணுமென்றவாறு.
இதனால், ஸம்ஸாரதசை என்றும், ஸம்ஸாராதுத்தீர்ணதசை என்றும், பரமபத ப்ராப்தி தசை யென்றும் மூன்று தசைகள் உண்டென்பதும்,
அவற்றுள் இப்போது ஆழ்வார்க்குள்ள தசை மத்யமதசையென்னும் பெறுவிக்கப்பட்டதாகும்.

(அஞ்சேலென்று கைகவியாய்.) அர்ஜுநனை நோக்கி அருளிச்செய்தபடி அடியேனையும் நோக்கி அருளவேணுமென்கிறாரெனக்கொள்க.
பரதன் கூறிய அபயமுத்ராலக்ஷண ச்லோகத்தில், கைவிரல்கள் மேல் முகமாக விரிந்திருக்க வேண்டுவது
அபயமுத்திரையின் இலக்கணமாகத் தெரிதலால், இங்குக் கைகவியாய் என்கிற விதனை அதற்குச்சேர ஒருவாறு
ஔபசாரிகமாக நிர்வஹித்துக்கொள்ள வேணும், அஞ்சே லென்று கைகவியாய் – அபயமுத்திரையைக் காட்டியருளாய் என்று
இங்ஙனே திரண்டபொருள் கொள்வது ஏற்குமென்க, அன்றி வேறுவகை உண்டேல் உற்றுணர்க.
அஞ்சேல் என்னும்போதைக்கு அச்சம் இன்றியமையாத்தாகையால்,
அவ்வச்சமாவது – “மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சி“
“(கொள்ளக்குறையாத இடும்மைக்குழியில் தள்ளிப்புகப் பெய்திகொலென்றதற்கஞ்சி“ என்றிப்புடைகளிலே
திருமங்கையாழ்வார்க்குப் பிறந்த அச்சம் போன்ற அச்சம் எனக் கொள்க.

(சக்கரமும் இத்யாதி) செவ்வானம்போற் செந்நிறமுடைய ஜ்யோதிஸ்ஸையுடையதான திருவாழியாழ்வானையும்,
(செந்தாமரை போல்) சிவந்த திருக்கை, திருக்கண்களையும், (இவற்றுக்கெல்லாம் நிறத்தைத் தரவல்ல)
பீதாம்பரத்தையும் உடையவனே! என விளித்தவாறு.

————-

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளை யென்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின் பாலதறிதி யன்றே திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-8-

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின்பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?

விளக்க உரை

இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், நேற்றைக்கென்றும் இப்படி சொல்லிக்கொண்டு கழித்தகாலம் முழுவதையும் பாழே போக்கினேன்;
ஏதோ சிறிது ஸுக்ருத விசேஷத்தினால் இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னை விட்டுப் புறம்புபோகப் புக்கால்,
அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன்; எனக்கு உன் திறத்து இவ்வகை அபிநிவேசம் பிறக்கைக்கீடாக,
என் நெஞ்சு உன்னை விட்டு மற்றொன்றை நினைப்பதே யில்லை யென்னுமிடத்தை ஸர்வஜ்ஞனான நீ அறியாநின்றாயன்றோ? என்கிறார்.
“பழுதே பல பகலும் போயின வென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு தொழுதேன்” என்ற
பொய்கையார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

(இன்றொடு நாளையென்றே) ‘நேற்றுப்போனேன், இன்று வந்தேன், நாளைக்குப் போகப்போகிறேன்’ என்றிப்படி
வ்யவஹரித்துக்கொண்டு கழிக்குங் காலத்திற்குக் கணக்கில்லையிறே.
“கிறியே மாயம்” என்ற நிகண்டின்படி, கிறி என்ற சொல் மாயப்பொருளதாகையால்,
‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது ஒக்கும்;
ஸம்ஸாரம் எம்பெருமானது மாயையிறே–என்ற கீதை காண்க.

நூற்றுவர் – தொகைக் குறிப்பு. அறிதி – முன்னிலை யொருமை வினைமுற்று. அன்றே -என்றபடி.

————–

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9-

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.

விளக்க உரை

(பத்நீ ஸம்ச்லேஷத்தில் வேண்டின படி பாரித்துக் கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப் பெற்றால் ஒரு நொடிப்பொழுதும்
விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்ப வாஸம் பண்ணிக் கொண்டிருந்த போதே உனக்குப் பணி செய்ய வேணுமென்று
பேரவாக் கொண்டிருந்து, பிறந்த பின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தில் ஈடு பாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-,
விஷயாந்தர பரனாய்க் கண்ட விடங்களிலுந் தட்டித் திரிந்து கொண்டு வரும் போது தைவ வசமாக இன்று இத் திருமாலிருஞ்சோலையைக் கிட்டி
இங்க உன்னைக் காணப் பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார்.
அடிமை செய்யல் உற்றிருப்பன் – கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி.
‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமை செய்ய விரும்புவதில் ஸம்சய லேசமுமில்லை யென்பது போதரும்.

————-

சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10-

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத்திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில்,
“இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே
பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது – ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’
என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் …. விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது.
தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்;
ஆயாஸமில்லாம லென்றபடி–

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: