ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–2—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1-

பதவுரை

நெய்க் குடத்தை–நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி–பற்றிக் கொண்டு
ஏறும்–(அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்–எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்–என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு–(என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்–வியாதிகளே!
காலம்பெற–விரைவாக
உய்ய –(நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்–(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்–(பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட–பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து — எழுந்தருளி
மெய்–(எனது) சரீரத்தை
கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்–(என் சரீரத்தை கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
(என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்–(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று–பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு (அவனால்) காக்கப் பெற்றது.

விளக்க உரை

அக்நி ஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி
ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை
ஆக்கிரமித்துக்கொண்டு, நான் உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு
சாச்வத ப்ரதிஷ்டையாக நின்று இருக்கும் நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று;
இத்தனை நாளும் போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளி கொண்டிருக்குமிடமாயிற்று
இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை;
இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,
இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள்.

“பாம்பனையோடும் வந்து புகுந்து கிடந்தார்” என்றதனால், நித்ய வாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும்.
பட்டினம்- வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.

———

சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன்
பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2-

பதவுரை

சித்திர குத்தன்–சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்–தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி–மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த–(தான்) எழுதிவைத்த
இலச்சினை–குறிப்புச் சீட்டை
தூதுவர்–யம கிங்கரர்கள்
மாற்றி–கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்–கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து–முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை–அலைகளை யுடைய
கடல்–கடலில்
சேர்ப்பன–கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்–முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்–தலைவனும்,
பத்தர்க்கு–அடியார்களுக்கு
அமுதன்–அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன் (யான்) தாஸனாயினேன்;
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல்குறுகச் சென்றாலெற்றி நமன்றமர்பற்றும்போது,
நில்லுமினென்னுமுபாயமில்லை” என்ற குறைதீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச் செய்கிறார்,
இப்பாட்டில் யம லோகத்தில், இவ்வுலகத்தின் கணுள்ள ஸர்வாத்மாக்களினுடையவும் பாபங்களைக் கணக்கிட்டு
எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தனென்னுங் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத் தன்மையால்
ஸூரியன் சந்திரன் வாயு அக்நி ஆகாசம் பூமி வருணன் ஹ்ருதயம் யமன் பகல் இரவு காலை மாலை தருமம் என்ற
பதினான்குபேர் ஸாக்ஷியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையு மெழுதிவைப்பது போல ஒரு சுவடியில்
என் தீவினைகளையுமெல்லா மெழுதி, அதன்மேல் யமனுடைய மேலெழுத்தையுமிடுவித்து அதனைப் பாதுகவாலாய் வைத்திருக்க,
அதனை யம தூதர்கள் எடுத்துச் சுட்டுப்போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; இதற்கு அடி என்னெனில்;
அயர்வறுமமாக்கனதிபதிக்கு நான் அடிமைப்பட்டதேயாகும். அது காரணமாக எனது ஆத்துமா அவ்வெம்பெருமானுடைய
பாதுகாப்பை பெற்றிருக்கின்றபடியால் அவ்யமதூதர்கட்கு என்னை அணுகும்வழி என்னவே மென்றவாறு.

“தரணியில் பண்ணியயனார் தனித் தனிக் காத்த பிரான்
கருணை யெலுங்கா அடித் திருமங்கையாள்வார் நற்பின்
திரணரகெண்ணிய சித்திரகுத்தன் தெரித்து வைத்த
கருணையிலெறிய சூர்வினை முற்றுந் துரந்தனமே–(தேசிகப்ரபந்தம்) என்ற பாசுரமிங்கு நினைக்கத்தக்கது.

புலம் என்று திசைக்கும் பெயர். இலச்சினை – வடசொல்விகாரம்.
(தூதுவராடி யொளித்தார்.) “வள்ளலே! உன் தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்போல“
“நமன்றமாராலாராயப் பட்டறியர் கண்டீர் அரவனை மேற் பேராயற் காட்பட்டார் பேர்“ என்ற அருளி செயல்களுமறிக.

————–

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி
கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3-

பதவுரை
(வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.)
எயிற்றிடை–(தனது) கோரப் பல் மேல்
மண்–பூமியை
கொண்ட–தாங்கி யருள
எந்தை–எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை–வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து–கழித்தருளியும்
புலம்–இந்திரியங்களால்
வல் சேவை–கடுயைமான ரிஷபங்களை
அதக்கி-(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிறும்–நரம்புகளும்
அக்கு–எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி–சரீரத்தில் (ஆசையை)
கழித்து–ஒழித்தருளியும்
பாசம்–(யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி–காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்–இரவும் பகலும்
ஓதுவித்து–நல்லறிவைப் போதித்து
பயிற்றி–(கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய–நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்–அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “பக்தர்க்கமுதடியேன்” என்று எம்பெருமானுக்கு தம்மை அடிமைப்பட்டவராக அருளிச் செய்து,
இப்பாட்டில் அவ்வெம்பெருமான் தம்மை அடிமை கொண்ட ப்ரகாரங்களை அருளிச் செய்கிறார்.
அவன் செய்தருளின உபகார பரம்பரைகளைக் கூறுகின்றவாறு.
(வயிற்றில் இத்யாதி.) இனி யான் கருவிருத்தக் குழியில் விழாதபடி செய்தருளினான்;
அப்படி கர்ப்பவாஸம் நேராøமைக் குடலாக,இந்திரியங்களாகிய காளைகளைப் பட்டி மேய்த்து திரிய வொட்டாமல் பாதுகாத்தருளினான்;
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ்சீயும் நரம்புஞ் செறிதரையும் வேண்டாநாற்ற மிருமுடலில் விருப்பமொழியும்படி செய்தருளினான்;
இப்படியெல்லாம் அருள் செய்கையினால், யமபடக் கையும் பாசமுமாய் வந்து புகுந்து பாசங்களைக் காலிலே துவக்கி
முழங்கீழ்படத்தள்ளி இழுத்து கலிகையாகிற பரலோகஹிம்ஸைகளுக்கும் ஆளாகாதபடி அருளினவாயாயிற்று;
இவ்வகை அருள்களைச் செய்தபடி எங்ஙனே எனனில்?
இரவும் பகலும் ஓய்வின்றி என் நெஞ்சிற் குடிகொண்டிருந்து ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து,
அதன் பிறகு அறிந்தபடியே அனுட்டிக்கும்படியாகவுங் கற்பித்து,
அநவரதம் அடியேன் தனது திருவடிகளின் கீழ் அடிமைகளையே செய்து உய்யும்படி செய்தருளினானாதலால்
இவ்வகை நன்மைகள் எனக்கு வாய்த்தன என்பதாக விரித்த கருத்தறிக.

குற்றஞ் செய்தவர்களைத் தொழுமரத்தில் அடைப்பதும் விலங்கிடுகையேயாதலாலும்,
வயிற்றிற்கிடப்பது விலங்கிடுவதைப் போல்லதனாலும், கர்ப்பவாஸத்தை “வயிற்றில் தொழு” என்றனரென்க.
இரண்டாமடியில் எதுகை நயம்நோக்கி “கயிற்றும்” என வலித்துக் கிடக்கிற தென்க.
கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல்.
“காலிடைப் பாசங்கழற்றி’ என்பதற்கு நான்கு வகையாகப் பொருள் கூறுவர்;
அவற்றுள் ஒன்று பதவுரையிற் கூறப்பட்டது.
இனி இரண்டாவது பொருள்- கால் என்று காற்றாய், அதனால் பிராண வாயுவைச் சொன்னபடியாய்,
பாசம் என்று ஆத்துமாவைக் கட்டிக் கொண்டிருக்கிற ஸூக்ஷம சரீரத்தை சொல்லுகிறதாய்,
பஞ்சவ்ருத்தி ப்ராணனாலே ப்ரேரிதமான ஸூக்ஷ்மசரீரத்தில் நகையறுத்தபடி சொல்லுகிறது;
எனவே, கீழ் ‘கயிற்றுமக்காணி கழித்து’ என்றது- ஸ்தூலசரீரத்தில் நசையறுத்தபடியைச் சொல்லியவாறாம்
இனி மூன்றாவது பொருள்:- காற்கட்டான புத்ரதாரக்ருஹ க்ஷேத்ராதிகளிலுள்ள பற்றைப் போக்கின்படி சொல்லுகிறது.
இனி, நான்காவது பொருள்:-உலகமுழுவதையும் மயக்கக்கூடியதும் இரண்டு காலினிடையிலுள்ளதுமான
ஹேயஸ்தாநத்தின் விருப்பத்தை ஒழித்தபடி சொல்லுகிறது;
உலகத்தை மோஹத்தினாற் கட்டுண்டதுபோலச் செய்கின்ற அதனைப் பாசமென்றால் பொருந்தத் தட்டில்லையே.

—————-

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4-

பதவுரை

மங்கிய–(ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை–வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்–வியாதிகளே
உமக்கும்–உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை–ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்–(இன்று) பாருஙக்ள்
இங்கு–இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்– வர வேண்டா, வர வேண்டா
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)
எளிது அன்று சுலபமான கரியமன்று;
புகேன்மின்–ஆகையால் இனி இங்கு வர வேண்டா
(என் ஆத்துமா)
எம்மான் அவன்–எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்–எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘–திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத–பரிபவப் படாமல்
உய்யபோமின்–பிழைத்துப் போங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை விளித்து,
‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது.
இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமே பலிக்கம்;
வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார்.
மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்;
“சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க.
புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவ பற்றியது;
“அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.

————

மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5-

பதவுரை

மாணி–பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு–வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்–மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை–ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி–ஆசைப் பட்டு
கொணர்ந்து–எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே–என் நெஞ்சினுள்ளே
புகுத–புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி–வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்–அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்–மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்–(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா–தாமதிக்க வேண்டியதில்லை,
பண்டு அன்று பட்டினம் காப்பு,

விளக்க உரை

தேவேந்திரனுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டுக் குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி
அரசு வாங்கி ஓங்கியுலகளக்கும்போது, அநபேக்ஷிகள் தலையிலும் திருவடியை வைத்தருளின பரமகாருணிக ஸ்வபாவனும்,
தனது நிர்ஹேதுக கிருபையினாலன்றிப் பெறுதற்கரியனும், மாயச் செயல்களில் வல்லவனுமான எம்பெருமானை
நான் இன்று எனது ஹ்ருதயத்தில் நிலை நிறுத்தினேனாதலால், பொல்லாத இந்திரியங்களே!
இனி நீங்கள் இங்கு நசை வைத்திட வேண்டியதில்லை என்கிறார்.
இந்திரியங்கள் அசேதனங்களாயினும் கொடுமைபுரிவதிற் சேதநகரில் விஞ்சியிருத்தலால்
“குறும்பர்களுள்ளீர்” என உயர்திணையாகக் கூறினரென்க.
“உண்ணிலாவிய ஐவரால்”
“கோவாய் ஐவர் என் மெய்குடியேறி” என்பன காண்க.
இந்திரியங்களை வேறிடந்தேடி ஓடச்சொன்னது- கூறை சோறிவைதாவென்று குமைக்கையாகிற
உங்கள் தொழில்களைச் செய்யாதொழியுங்கள் என்றவாறு, வலிவல் – மீமிசைச் சொல்.
(உள்ளீர்) எம்பெருமான் எனது நெஞ்சில் வந்து குடி கொண்டவுடனே நீங்கள் ஓடிப்போக வேண்டியது ப்ராப்தம்;
அப்படியன்றி இன்னும் ஓடாதிருந்தீர்களாகில் என்பது சமத்காரப் பொருள்.

மாணி- அழகுக்கும் பெயர்; ‘பிரமசாரி’ என்றபடியுமாம். உரு – வடிவு.
பிறிது இன்றி- இரண்டு பொருளாகத் தோற்றாமல், ஏகவஸ்து என்னலாம்படி பொருந்தச் செய்து என்றபடி
எம்பெருமானை மாணிக்க பண்டார மென்றது- அதுபோல் பெறுதற்கரியவன் என்றவாறு -வடசொல் திரிபு.

————-

உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6-

பதவுரை

உற்ற–நெடு நாளாக இருக்கிற
உறு பிணி–மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்–நோய்களே!
உமக்கு–உங்களுக்கு
ஒன்று–ஒரு வார்த்தை
சொல்லுகேன்–சொல்லுகிறேன்:
கேண்மின்–கேளுங்கள்;
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்–பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்–திருக் கோயிலாயிற்று;
கண்டீர்–முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்–(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்–ஓ கொடுமைகளே!
இன்னம்–மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்–அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு–உங்களுக்கு
இங்கு–இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை–ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்–(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்ப

விளக்க உரை

யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய் நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள
அன்பு கொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி,
பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்:
அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடி புகுந்ததனால் காவல் பெற்றிருக்கின்றது;
ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய் விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்.

———–

கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7-

பதவுரை

சிறு வரை–சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்–முலைகளாகிற
பொதும்பினில்–பொந்தில்
வழுக்கி வீழ்ந்து–வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு–(நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த–(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை–(திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின–தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்–கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி–போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்–பரிபவப் படாதபடி
செய்தான்–செய்தருளினான்;
பண்டு அல்லது பட்டினம் காப்பு.

விளக்க உரை

“வாணிலாமுறுவல் சிறுநூதல் பெருந்தோள் மாதாரர் வனமுலைப் பயனே பேணினேன்” என்றபடி
விஷயாந்தரங்களில் ஆழங்காற்படுத்திப் பின்பு அதற்குப் பலாமக நகரங்களிலுங் கொண்டுபோய் அழுத்தக் கடவனவான
எனது கருமங்களையெல்லாம் எம்பெருமான் ஒழித்தருளி, பரிபவங்களுக்கு ஆளாகாதபடி செய்தருளிப் பாதுகாத்தருளினனென்கிறார்.

மலைபோற் கிளர்ந்துள்ள கொம்மைமுலையைப் ‘பொதும்பு’ (பொந்து) என்னலாமோ? எனின்;
தன்னிடத்து அழங்காற் படுத்திக்கொள்ளுந் தன்மையின் ஒற்றுமைபற்றி அங்ஙனங் கூறினரென்க.
இனி, “கொங்கைச் சிறுவரை யென்றும்” என்று பாடமாகிய, “சிறுவரை” என்பதை, சிறு அரை எனப் பிரித்து,
‘கொங்கை என்றும், சிறு அரை என்றும்’ என இயைத்து, இதொரு முலையிருந்தபடியே! என்றும்,
இதொரு சிற்றிடையிருந்தபடியே! என்றும் (மயங்கிச்)சொல்லிக்கொண்டு (விஷயாந்தரத்தில் மூண்டு)
ஹேயஸ்தாநமாகிய பொந்தில் விழுக்கி வீழ்ந்து எனப் பொருள் கொள்ளலாமென்பர்.
முழை என்று குஹைக்குப் பெயர்; அதுபோல் பயங்கரமான நரகத்தைச் சொல்லுகிறது
இங்கு. உழல்வேனை- எதிர்காலம்; நிகழ்காலமன்று.
இவ்விடத்தில் இப்போது கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வழுக்கி வீழ்கிறதற்குப் பலனாக,
பின்பு நரகத்திற்புகுந்து அங்கு உழலப்போகிற என்னுடைய என்றவாறு
(“வங்கக்கடல்வண்ணன்” தன் திருமேனியினழகை எனக்குக் காட்டியருளின மாத்திரத்தினால்
ஊழ்வினைகளெல்லாம் தன்னுடையே ஒழிந்தன என்பது உள்ளுறை.
பங்கப்படாவண்ணம்- தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து, பின்னும்
வன்கயிற்றாற் பிணித்தெற்றிப் பின் முன்னாக விழுக்கை முதலிய பரிபவச் செயல்களுக்குப் பாத்திரமாகாதபடி என்கை.

————–

ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8-

பதவுரை

பீதக ஆடை பிரானர்–திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து–ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்–அறிவுக்கு இருப்பிடானதும்
அல்–அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்–ஹ்ருதய கமலத்தினுள்
புகுந்து–பிரவேசித்து
என் னுள்ளே–எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்–தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து–நீக்கி
என்–என்னுடைய
சென்னித் திடரில்–தலையினிது
பாத விலச்சினை–ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்–ஏறி யருளப் பண்ணினான்
பண்டு அன்று பட்டினம் காப்பு.

விளக்க உரை

ஸர்வேச்வரத்வத்திற்கும் புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப்பீதாம்பரத்தைத் திருவரையில் அணிந்துள்ள
ஸர்வேச்வரன் ஞானோபதேசம் பண்றுகிற ஆசாரியாக என் நெஞ்சினுள் வந்து புகுந்து
தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியபுத்தி, அய்யகேஷாதபுத்தி, ஸ்லரக்ஷண பரத்வம், ஸ்வப்ரயோஜகபாத்யா முதலிய
மனக் குற்றங்களை ஒழித்து அவ்வளவிலும் பர்யாப்தி பெறாமல் தனது திருவடிகளை இலச்சினை படும்படி
என் தலை மேல் அமைத்து இவ்வாறு பரமோகபாரம் பண்ணியருளினனாதலால்,
இவ்வாத்துமா பண்டு போலன்றி இப்போது குறைவற்ற காப்பை அடைந்திரா நின்ற தென்கிறார்.

இறங்கலிடுவித்து – (தான் இருந்த இடத்தில் நின்றும்) இறங்கச்செய்து என்றபடி.
பிரமகுரு – பிரமம் என்ற இங்க ஞனாத்தைச் சொல்லுகிறது-
மூன்றாமடியில், போது -வடசொற் சிதைவு. திடர் – மேடு. திருவடிகள் ஏற வொண்ணாத மேட்டில் அத்
திருவடிகளை ஏற்றியருளினான் என்ற சமத்காரந்தோற்றச் “சென்னித்திடரில்” என்றனரென்க.
(பாதவிலச்சினை வைத்தார்) தோளுக்குத் திருவாழி யிலச்சினை யிட்டதுபோலத் தலைக்குத் திருவடியிலச்சினை யிட்டனனென்க.
இனி, திருவாழியிலச்சினை தலையிலுமுண்டென்க;
‘ஒரு காலிற்சங் கொருகாலிற்சக்கர முள்ளடிபொறித்தமைந்த , இருகாலுங் கொண்டங்கங் கெழுதினாற்
போலிலச்சினை படநடந்து” என்றதும் அறியத்தக்கது.

—————

உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே
அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9-

பதவுரை

ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே–திருவாழி யாழ்வானே!
எறி–(எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!–நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே–அழகு பொருந்திய சார்ங்கமே–சார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே–(கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த–(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்–அஷ்ட திக்குப் பாலகர்களே!
இறவு படாமல்–தப்பிப் போகாமல்
சங்கே–ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற–(ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்–உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்;
பறவை அரையா–பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே!
உறகல்–உறங்காதிரு;
(நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது)
பள்ளி அறை–(எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை
குறிக் கொள்மின்–நோக்கிக் காத்திடுங்கள்.

விளக்க உரை

இவ்வாழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என் வருகிறதோ’ இதுவரை தம்மை எம்பெருமானால்
காக்கப்பட்டவராக அநுஸந்தித்துப் போந்தவிலர், அவனுக்குங் காவல் தேடுகிறார், இப்பாட்டில்,
எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாஹநத்தையும் விளித்து,
நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கைப்பற்றை
நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார்.

உறகல்- உறங்க வேண்டா என்று பொருளையுடைய உறங்கேல் என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றின் சிதைவு.
‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத்தொடர், அச்சம் பற்றியது.
‘இறவு படாமல் உறகல்’ என இயையும்; அன்றி, ‘இறவுபடாமல் இருந்த’ என அடைவே இயைத்து,
என்றும் இறவாமல் வாழ்கின்ற என்று பொருள் கொள்வாருமுளர் .
(எண்ம ருலோக பாலீர்காள்.) “இந்திரனங்கி யாமனிருதி வருணன், வந்தவாயு குபேரனீசாநன், என்ன வெண்டிசை யுலோகபாலகர்”
என்பது திவாகரம்.

————–

அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10-

பதவுரை

அரவத்து அமளியினோடும்–திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அழகிய பால் கடலோடும்–அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்–செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து– எழுந்து அருளி
அகம்படி–(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து–பிரவேசித்து,
பரவை–(அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திசை–பல அலைகள்
மோத–தளும்ப
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை–உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே- ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்–போற்றுகின்றார்.

விளக்க உரை

‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில்
அருளிச்செய்த படியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும்
மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க.
இது மற்றுமுள்ள நித்ய ஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர்.
அமளி- – படுக்கை. அரவிந்தம் – வடசொல் பாவை- உவமையாகுபெயர்.
அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர்.
பரவை- கடல்; எம்பெருமான் அழைத்துக் கொண்டு வந்த திருப்பாற்கடல்,
“பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி.

இத் திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க.

————–

அடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: