ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–1—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா உன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை யல்லால் அறியாது நான தஞ்சுவன் என் வச மன்று
மூர்க்குப் பேசுகின்றானிவ னென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே–5-1-1-

பதவுரை

மாதவா–ச்ரிய: பதியானவனே!
நாரணா–(உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்–பெரிய திருவடியை
கொடியானே–த்வஜமாக வுடையவனே!
வாக்கு–(என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே–பரி சுத்தி இல்லாமையால்
உன்னை–(ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்–வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)
நாக்கு–(ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்–உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது–(வாய்க் கொள்ள) அறியாது;
அது–அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்–நான் அஞ்சுகின்றேன்;
(அது) அந்த நாக்கானது
என் வசம் அன்று–எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று–“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்–நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்–என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்–காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை–நற் சொல்லாக
கொள்வர்–(அறிவுடையார்) கொள்ளுவார்கள்.

விளக்க உரை

“எம்பெருமான் ஸந்நிதியிற் பொய் சொல்லுகை, க்ஷுத்ர ப்ரயோஜநங்களை விரும்புகை, க்ஷுத்ரர்களைப் புகழ்கை
முதலியவையாகிற அசுத்திகள் என்னுடைய வாய்மொழிக்கு அளவற்றிருப்பதனால், அவ் வாய்மொழிகொண்டு
உன் பெருமைகளைப் புகழுகைக்கு நான் அர்ஹனல்லதென்று ஒழித்தாலும், நாக்கு ரஸமறிந்ததாகையால்,
உன்னைத் தவிர்த்து மற்றொருவரை வாயிற்கொள்ள அறியமாட்டாது” என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்ய;
அது கேட்டு எம்பெருமான், ‘ஆழ்வீர்! ஆகில் நீரம் அந்த நாக்குடன் கூடிச்சொல்லும்” என்று நியமிக்க!
அதற்கு ஆழ்வார், “நாக்கின் தோஷத்தை நினைத்து நான் அஞ்சாநின்றேனே” என்ன;
அதற்கு எம்பெருமான், ‘ஆழ்வீர்! நாக்கு ரஸமறிந்ததாகையாலே மேல்விழா நின்றது, அதன் தோஷத்தை அறிந்துள்ள நீர்
அது மேல் விழாதபடி அதை உமக்கு வசப்படுத்தி நியமித்துக் கொள்ளும்” என்ன;
அதுகேட்டு ஆழ்வார், “அந்த நாக்கு எனக்கு வரப்பட்டிருந்தாவன்றோ அதை நான் நியமிக்கவல்லேன்’ அதுதான் உனக்கு வசப்பட்டு விட்டதே” என்ன;
அதற்கு பெருமாள், “ஆழ்வீர்! சால அழகிதாயிருந்தது; ‘உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்’ என்கிறீர்,
‘நாக்கு நின்னையல்லாலறியாது’ என்கிறீர், ‘நான் தஞ்சுவன் என் வசமன்று’ என்கிறீர்;
இவ்வாக்கியங்கள் ஒன்றோடொன்று சேருவது எங்ஙனே? ஆராய்ந்து பார்த்தால் நீர் பேசும் பேச்சுக்களெல்லாம்
மூர்க்கர் பேசும் பேச்சாயிரா நின்றன! என்ன;
ஆழ்வார், “அது உண்மையே; என்னுடைய பேச்சுக்கள் மூர்க்கப் பேச்சுகளாகத் தோற்றம்; அதனால் உனக்குச் சீற்றமும் பிறக்கும்;
ஆகிலும் அச்சிந்தத்தை ஒருவாறு என்னால் ஸஹிக்க முடியும்; இந்நாக்குப்படுத்துகிற பாடு அப்பப்ப! ஸஹிக்கவே முடியவில்லையே” என்ன;
அதற்கு எம்பெருமான், “அந் நாக்கைக் கொண்டு என்னை நீர் புகழத் தொடங்கீனராகில், அது எனக்கு அவத்யாவஹமாய்த் தலைக்கட்டுமே!” என்ன;
அதற்கு ஆழ்வார் “எம்பெருமானே” மூர்க்கர் பேசும் பாசுரங்கள் அறிவுடையார்க்குக் குற்றமாகத் தோற்றதவளவேயன்றிக் குணமாகவுந் தோற்றும்;
காக்கை ஓரிடத்திலிருந்துகொண்டு தனக்குத் தோன்றினபடி கத்திவிட்டுப்போனாலும், அதனை அறிவுடையார் கேட்டு,
‘இது நமக்கு (உறவினர் வரவாகிற) நன்மையைச் சொல்லாநின்றது’ என்று கொள்ளக் காண்கின்றோம்;
அதுபோல அடியேன் நாவினுக்கு ஆற்றமாட்டாமல் வாய் வந்தபடி சிலவற்றைப் பிதற்றினாலும்
அவற்றை நீ நற்றமாகவே கொள்ள வேணும்” என்றருளிச் செய்ய;
எம்பெருமான், “ஆழ்வீர்! அப்படியாகிலும் குற்றத்தை நற்றமாகக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு என்ன உண்டு?” என்று கேட்க;
(காரணா) அது கேட்டு ஆழ்வார், “அப்படியா! நன்று சொன்னாய்; உலகங்களை யெல்லாம் படைத்தவனல்லையோ நீ?
ரக்ஷிக்கிறேனென்று கொடிகட்டிக் கிடக்கிறாயில்லையோ நீ?” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு.

மூர்க்கு –வடசொல்லடியாப் பிறந்தது, மூடத்தனம் என்பது பொருள். முனிதல் – கோபித்தல்
“நா வினுக்கு ஆற்றேன்“ என்றது – நாவினுடைய பதற்றத்துக்கு ஆற்றேன் என்றபடி.
காக்கைவாயிலும் – காக்கையில் நின்றும், ஐந்தாம் வேற்றுமை.
கட்டுரை- ஏற்றச்சொல், பொருளுள்ள சொல். கருளன் – வடசொல் விகாரம்.

———-

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையானே
பிழைப்ப ராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி யேழுலகுண் டுமிழ்ந்தானே–5-1-2-

பதவுரை

சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி–பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு–பொல்லாத நாக்கினால்
புன் கவி–அற்பமான பாசுரங்களை
சொன்னேன்–நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும் (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்–தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்–சொல்லை.
பொறுப்பது–பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே–பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்–உன்னுடைய கடாஷம் அல்லால் வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
(அன்றியும்)
வேறு ஒருவரோடு–மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்–என் நெஞ்சானது
பற்றாது–பொருந்த மாட்டாது
உழைக்கு–புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்–ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?

விளக்க உரை

எம்பெருமானே! நீ கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்புக் கண்ட நான் உன்னைக் கவி பாடாதிருக்க மாட்டாமல்
எனது பொல்லாத நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்ய;
அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும்
உமக்கு யோக்யதைவுண்டோ?” என்ன;
அதற்கு ஆழ்வார், “அநந்யார்ஹ சேஷ பூதர்கள் பேசும் பாசுரம் அவத்யாவஹமாயிருந்தாலும் அதனைப் பொறுக்க வேண்டிய
கடமை பெரியோர்க்கு உளதன்றோ?” என்-
அது கேட்டு எம்பெருமான், ஆழ்வீர்! அப்படி நான் பொறுக்கும்படி அடியார் சேஷ பூத்ரோ என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷமொழிய மற்றொருவருடைய கடாக்ஷத்தையும் நான் ஒரு பொருளாக மதிப்பவனல்லேன்;
உன்னைப் போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும்,உன்னிடததில் எனக்குள்ள தாஸ்யம்
குணமடியாகப் பிறந்ததன்றி ஸ்வரூப ப்ரயுக்தமானதனால், அவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்ன;
அதற்கு எம்பெருமான் “உமக்குப் புறம்பு போத்தில்லையாகில் ஆயிடுக; பல குற்றங்களுக்குக் கொள்கலமாக உம்மை
கைப்பற்றினால் அது எனக்கு அவத்யாவஹமாகாதோ?” என்ன;
அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே! புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என்? குறைந்தால் என்?
எல்லா உயிர்களுடையவும் அபராதங்களைப் பொறுப்பதற்கென்றே காப்புக் கட்டிக் கொண்டிருக்கிற உனக்கு
என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுத்தருளுகை அவத்யாவஹமாய் விடப் போகிறதோ?” என்ன;
அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித்த விடம் உண்டோ?” என்று கேட்க;
ஆழ்வார், ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் பண்ணதிருப்பார் யாரேனுமுண்டோ? அவர்களது அபராதங்களைப் பாராதே
அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்தருளினவனல்லையோ?
அப்படியே அடியேனையும் அங்கீகரித்தருள வேணும் என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

(உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய்) உடம்பு முழுவதும் புள்ளி மயமாயிருக்கிற மானுக்கு ஆரோபிதமாக
ஒரு புள்ளி ஏறி அதிகமாகத் தோற்றினால், அதனால் அந்த மானுக்கு ஒரு குற்றமுமில்லை;
அதுபோல, அபராத ஸஹத்வமே வடிவாயிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுப்பதனால்
ஒரு குற்றமும் வாராது என்றவாறு.
இவ்வகைப் பொருளில், உழையின் ஸ்தானத்தில் எம்பெருமான் நின்றதாகப் பெறலாகம்;
அன்றி,
அந்த ஸ்தானத்தில் ஆழ்வாரோ நின்றதாகவுங் கொள்ளலாம்; புள்ளிமானுக்கு ஒரு புள்ளி அதிகமானால் அதனால்
அதற்கொரு குற்றமில்லாதவாறு போல, அபராதமயனா அடியேனுக்கு ஒரு அபராதமேறினால்,
அதனால் என்னுடைய அங்கீகாரத்திற்கு ஒரு குறையுமில்லைகாண் என்றவாறாம்.
முன்னர் உரைத்தபடியே வியாக்கியானப் போக்குக்கு ஒக்குமென்க.
மிகை – குற்றத்துக்கும் பெயர்; “மிகையே குற்யமுங் கேடுங் துன்பமும், மிகுதியும் வருத்தமுமைமபொருட்டாகம்” என்பது நிகண்டு.
இனி, இங்க மிகை என்பதற்கு கேடு என்று பொருள் கொள்ளுதலும் பொருந்துமென்க.

————-

நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே–5-1-3-

பதவுரை

திருமாலே–ச்ரிய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்–‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்–(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்–அறிகிறேனில்லை.
புன்மையால்–(எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத் தனத்தினால்
உன்னை–உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி–வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்–புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை–உன்னை
உண்ணும் ஆறு–இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்–ஒரு வழியையும்
அறியேன்–அறிந்தேனில்லை;
ஓவாறே–(ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன–நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது–அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்–உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
கண்டாய்–முன்னிலை யசைச் சொல்

விளக்க உரை

“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற
இதொன்னை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமஞ் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ,
அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் றிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்ய;
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமஞ் சொல்லா நின்றீர்?
பிரயோஜநாந்தர பாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க,
அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று
சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன் காண்” என்ன;
அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில்,
மோக்ஷமாகிகற பரம புருஷார்த்தத்தை விரும்பி, அது பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப் பாரீர்” என்ன;
அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்குடலாக நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி
அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப் பொழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்;
ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற;
அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில்
ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்;
இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன;
அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி
உன் கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான
மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு,
நன்மை- ஸ்வரூபாநுரூபம். தீமை- அவத்யாவஹம். புள்ளுவம்- வஞ்சகம். வைட்டணவன்- வடசொல் விகாரம்
வன்மை- திண்ணியதான அத்யவஸாய மென்றும் கொள்க.

————

நெடுமையால் உலகேழு மளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவ தில்லை
அடிமை யென்னு மக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத் தானே–5-1-4-

பதவுரை

நெடுமையால்–(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–அளந்தருளினவனே!
நின்மலா–பரிசுத்தமானவனே!
நெடியாய்–(அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை–கொடிய கம்ஸனை
கொன்று–உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே–உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில்
பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை–(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
அடிமை கொள்வதற்கு–கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா–ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை–இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை–(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்–அடிமை யென்ற
அ கோயின்மையாலே–அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அவை–அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு–அவ்வவ் விடங்களில்
போதரும்–(தாமாகவே) கிடைக்கும்
(கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)

விளக்க உரை

நெடுக வளர்ந்த திருவடியினால் அளந்தாய் என்னாமல், “நெடுமையால் அளந்தாய்” என்றது- ஒருவகை சமத்காரமென்க.
அவிகார ஸ்வரூபனான தன்னைச் சிறியனாகவும் பெரியனகாவும் ஆக்கிக் கொண்ட விதனால் தனக்கொரு
கொத்தையுமில்லை யென்பார், நின்மலா! என்று விளிக்கின்றார்.
ஐச்வரியத்தை விரும்பின தேவேந்திரனது வேண்டுகோளாற் செய்த உலகளப்பையிட்டு விளித்தது ‘
அவ்விந்திரனைப்போல் நான் ஐச்வரியத்தை விரும்பி வேண்டுகிறேனில்லை’ என்று ஸ்வஸ்வரூபத்தின் வாசியைத் தெரிவித்தவாறாம்.
அன்றி, உனது திருவடி ஸ்பர்சத்தில் விருப்பமற்றிருந்தார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ,
உன் திருவடியையே பரம ப்ராப்யமாக ப்ரதிபத்தி பண்ணியிருக்கிற ஆட்படுத்திக் கொள்ளாதொழிவது
தகுதி யன்றென்று உணர்த்துகிறவாறுமாம்.

“திரிவிக்கிரமாபதாநத்தில் அனைவரையு மடிமைகொண்ட நீ அடியேனையுமடிமை கொள்ளவேணும்” என்று ஆழ்வார் பிரார்ததிக்க;
அதற்கு எம்பெருமான், “உம்முடைய ஸ்வரூபத்தின் உண்மை எனக்கு விளங்கவில்லையே” என்ன;
அதற்கு ஆழ்வார, “அடியேனுக்கு ஸ்வாதந்திரியமும் ஸ்வ ப்ரயோஜாபாத்யமும் உண்டென்று நீ ஸந்தேஹக்கவே
(வேண்டியதில்லை அடியேன் அநந்ய ப்ரயோஜனன்” என்று அது கேட்டு
எம்பெருமான் “நீர் அநந்ய ப்ரயோஜநம் என்றால், அதை நான் ஏற்றுக் கொள்வேன், நீர் தேஹமுடையவரன்றோ?
அத்தேஹத்திற்குத் தாரகமாயுள்ளவற்றில் உமக்கு விருப்பமின்றி யொழியுமோ?“ என்ன,
அதற்கு ஆழ்வார், “தேஹ தாரகமாக சோறு கூறை முதலியவற்றை நான் உன்னிடத்துப் பெற விரும்புகிறிலேன்“ என்ன,
“ஆகில் அவை பெறுவதற்காகச் சில அரகர்களைத் தேடி ஓடுகிறீரோ? என்று எம்பெருமான் கேட்க,
அதற்கு ஆழ்வார், “அவற்றை நான் அபேக்ஷித்துப் பெற வேண்டிய அருமையில்லை,
அவற்றுக்காக்க் குக்கர்களைத் தேடித்தான் ஓடவேண்டியதில்லை, உனக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிற சிறப்பு
என்னிடத்துள்ளதாலலால் ஆங்காங்கு அவரவர்கள் தாமாகவே என்னை அழைத்து அவற்றைத் தந்திடுவர்கள்;
ஆகையால் நான் பிரயோஜந்தரத்தை நச்சித் திரிபவனல்லன்; அநந்யப்ரயோஜனனே;
இனி அடியேனை அடிமை கொண்டருள வேணும்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

இனி, “கூறை சோறிவை வேண்டுவதில்லை. என்பதற்கு
‘உண்டியே உடையே உகந்தோடுகின்ற இம்மண்டலத்தவர்களால் விரும்பப்படுகிற கூறையும் சோறும் எனக்குத்
தாரங்களல்லாமையாலே, இவை எனக்கு வேண்டியதில்லை என்று மூன்றாமடிக்கு வேறு வகையாப் பொருள்கொள்ள வேணும்;
அதாவது;- அடிமை என்னும் அக்கோயின்மையாலே- அங்கு அங்கு- அந்த அந்தக் கைங்கரியங்களுக்குள்ளே,
அவை- அக்கூறை சோறுகள், போதரும்- அந்தர்ப்பவிக்கும்; என்று. இதன் கருத்து;
ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்தையே எனக்கும்
கூறை யுடுக்கையும் சோறு உண்மைகயு மென்கிறார் என்பதாம்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” என்றது இங்கு நினைக்கத்தக்கது.

ஆழ்வார் தம்மை அடிமை கொள்ளுகையாவது- பிரகிருதி ஸம்பந்தத்தையும்- ஊழ்வினைத் தொடர்களையும்
ஒழித்தருளுகையே யென்பதை, ஈற்றடியிலுள்ள இரண்டு ஸம்போதக வாக்கியங்களினால் ஸூசிப்பிக்கிறார்;
கஞ்சனைக் கொன்றது போலப் பிரகிருதி ஸம்பந்தத்தைக் கொல்லவேணும்;
தந்தை காலில் விலங்கை யறுத்ததுபோல ஊழ்வினைத் தொடர்களை அறுக்க வேணுமென்றவாறு.

தாதை கோத்தவன்றளைக்கோள் விடுத்தது முன்னும், கஞ்சனைக்கொன்றது பின்னுமாயிருக்க, மாறுபடக்கூறியது-
சிரமவிவக்ஷை யில்லாமையாலாம்;
அன்றி,
கண்ணபிரான் திருவவதரிதத்ருளினவன்றே கம்ஸன் ஜீவச்சீவமானமையால் அங்ஙன் கூறக்குறையில்லையெனிலுமாம்.
தாதை- தாத:- இங்குத் தாதையென்றது, தாய்க்கு முபலக்ஷணம்.
கோள்- முதனிலை திரிந்த தொழிற்பெயர். “வன்றனைகோள்விடுத்தானே” என்றும் ஓதுவர்.

தேவகியினுடைய அஷ்டமனிப்பம் தனக்கு விநாசகமென்றறிந்த கம்ஸனால் விலங்கிட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த
தேவகி வஸுதேவர்களுடைய கால் விலங்குகள் கண்ணபிரான் அவதரித்தவுடனே இற்று முறிந்தொழிந்தனம் அறிக.

———–

தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம்
வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5-

பதவுரை

கேழல் ஒன்று ஆகி–ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு–(தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட–பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே–கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்–(குவலயாபீடமென்ற) யானையானது
வீழ–முடியும்படி
கொம்பு–(அதன்) தந்தத்தை
ஓசித்தானே–முறித்தெறிந்தவனே!
தோட்டம்–தோட்டமும்
இல்லவள்–மனைவியும்
ஆ–பசுக்களும்
தொழு–மாட்டுத் தொழுவமும்
ஓடை-குளமும்
துடவையும்–விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்–கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி–குறைவில்லாமல்
அடியேன்
உன் பொன் அடி கீழே–உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்–திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு–(எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு–நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது–(ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்–பல பேர்
நச்சுவார்–(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்

விளக்க உரை

கீழ்ப் பாட்டில், தாரக பதார்த்தம் (-சோறு) கைங்கர்ய ரஸத்தில் அந்தர்ப்பூதமென்றார்;
இப்பாட்டில், போஷக பதார்த்தங்களும் உன் திருவடிகளை அநுபவிக்கையாகிற ரஸத்தில் அந்தர்ப் பூதங்ளென்கிறார்.

தோட்டம் முதலிய போஷக வஸ்துக்களனைத்தும் உன் திருவடிகளே யெனள்று அறுதியிட்டிரா நின்றேன் என்பது
முன்னடிகளின் தேர்ந்த கருத்து.
இல்லவள் – வடமொழியில் -என்ற சொல்லின் பொருள் கொண்டது.
துடவை – ஸுக்ஷேத்ரம் . வளைப்ப+அகம், வளைப்பகம் ; தொகுத்தல் விகாரம்.
தோட்டம் முதலியவற்றைப் பொன்னடிக் கீழ் வளைப்ப வகுத்துக் கொண்டிருக்கையாவது-
எம்பெருமான் திருவடியை ஏழு வகுப்பாகப் பிரித்து,
ஒருவகுப்பைத் தோட்டமாகவும், மற்றொரு வகுப்பை இல்லவளாகவும்,
மற்றொரு வகுப்பைக் கிணறாகவும் பிரதிபத்தி பண்ணுகையோயாம்.
எம்பெருமானது திருவடியையொழிய வேறொன்றைப் போஷகமாக மதிப்பதில்லை யென்றவாறு.

இனி முன்னடிகளுக்கு வேறுவகையாகவும் பொருள் கொள்ளத்தக்கதாகும்; அதாவது;-
தோட்டம் ….. கிணறுமாகிய இவையெல்லாதம், வளைப்பு அகம்- சூழ்ந்திருக்குமிடம்,
உன் பொன் அடிக்கீழ் – உனது திருவடிநிழலிலே (என்று), வகுத்துக் கொண்டிருந்தேன்.
(என்நெஞ்சினால் அத் திருவடியைச்) சூழ்ந்து கொள்ளா நின்றேன், என்பதாம்.
உன் திருவடி நிழலையே எல்லாப் பொருளுமாக ப்ரதிபத்தி பண்ணி, அத் திருவடியை நெஞ்சினால் வளைத்துக் கொண்டேன் என்பது கருத்து.
“உன் பாத நிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன்” என்று மேல் அருளிச் செய்வது காண்க.
இப்பொருளில், அகம் என்பதற்கு, ‘இருப்பிடம்’ என்று பொருள். (தொகுத்தல் விகாரமுமில்லை.)

இங்ஙனருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆகில் இனி உமக்கு ஒரு குறையுமில்லையே” என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “என் அப்பனே! பிறர் பொருள் தார மென்றிவற்றை நம்பி அலைந்தோடுகின்ற பிராகிதர்களின் நடுவே
எனக்கு இருக்க முடியவில்லை. இவ்விருப்பை ஒழித்தருளவேணும்” என்று வேண்ட;
அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் இங்ஙனமே வேண்டலாகாது, இவ்வுலகவிருப்பை வேண்டுவார் எத்தனை பேருளர் பாரீர்
அவர்களொடொக்க நீரும் இவ்விபூதியிலேயே இருந்தால்குறையென்?” என்ன;
அதற்கு ஆழ்வார்; பலர் இவ்விருப்பை விரும்பினார்களாகிலும், எனக்குப் பாம்போடொரு கூறையிலே பயின்றார் போலிராநின்றது;
ஆகையால் இவ் விருப்பை ஒழித்தே யருள வேணும்” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாசுரம்.

ஸம்ஸார ஸாகரத்தினின்றும் அடியேனை எடுத்து, ஸ்வ ஸ்தானமான உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவல்ல வல்லமையும்,
அச் சேர்த்திக்கு விரோதியான கருமங்களை யொழித்தருள வல்ல வல்லமையும் உனக்கு உண்டென்பார்,
“கேழலொன்றாகிக் கோட்டுமண்கொண்ட கொள்கையினானே” என்றும்,
“குஞ்சரம்வீழக் கொம்போசிந்தானை” என்றும் விளிக்கின்றார்.
ஹிரண்யாக்ஷனால் பாயாகச் சுட்டிக் கடலினுள் கொண்டு போகப்பட்ட பூமியைத் “தானத்தே வைத்தானால்” என்கிறபடியே
இப்பிறவிக்கடலினின்று மெடுத்து ஸ்வஸ்தாநமாகிய உன் திருவடிகளில் வைத்தருள வேணும்;
கம்ஸனுடைய ஏற்பாட்டுக்கிணங்க வஞ்சனை வகையாற் கொல்ல நினைத்தெதிர்ந்த குவலயாபீடத்தைக் கொன்றருளியவாறுபோல,
எனது ஊழ்வினைகளையும் கொல்ல வேணுமென வேண்டியவாறு,
குஞ்சரம்- வடசொல். “சாவு” என்னாமல், வீழ என்றது- மங்கல வழக்கு; துஞ்ச என்பது போல.

————-

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே–5-1-6-

பதவுரை

காரணா–(லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை–பிரமனை
படைத்தானே–(உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா–கண்ணபிரானே!
கரியாய்–காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் (உனக்கு) சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்–உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை–பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே–இடைவிடாமல்
நமோ நாராயணா என்று–‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்–அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்–ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு–அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்–உன் திருவடிகளை
நண்ணா நான்–கிட்டப் பெறாத நாள்களும்
அவை–(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை–அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்–தட்டுப்படுமாகில்
அன்று–அந்த நாளானது
எனக்கு–எனக்கு
பட்டினி நாள்–உண்ணாதொழிந்த நாளாகும்.

விளக்க உரை

தராக போஷகங்களெல்லாம் எம்பெருமான் திருவடிகளே” என்று கீழ் அருளிச் செய்ததை இப் பாட்டில் விசதமாக்கி நிகமித்தருளுகிறார்.
இவ்வுலகத்திலுள்ளாரனைவரும் ஒரு பொழுது உண்ணாதொழிந்தால், பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவார்கள்;
அடியேனுடைய இயல்பு அங்ஙனெத்ததன்று; திருமந்திரத்தை அநுஸந்திக்கப் பெறாத நாளும், தொழுது முப்போது முன்னடி வணங்கித்
தக்ஷமலர் தூய்த்தொழுது ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணா நாள்;
இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற நாள் உண்டநாள், அப்படி நிரப்பாத நாள் பட்டினிநாள்’ என்கிற வயஸஸ்தை என்னிடத்தில்லை;
நான் வயிறார உண்ட போதிலும், திருமந்ராதுஸந்தாகமும் ஸ்ரீபாத ஸேவையும் தட்டுப் பட்டதாகில், அந்நாள் எனக்குப் பட்டினிநாளே என்றவாறு.

இருக்கேசுச் சாமவேதம் – வடமொழித் தொடரின் விகாரம். தத்துறதல்- வாய்க்கப்பெறா தொழிதல் –

அவை- அந்த நாள்கள், தத்துவமாகில- நேரிடுமானால், என்றுமுரைக்கலாம். கருத்து ஒன்றே

————-

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே–5-1-7-

பதவுரை

வெள்ளை–பால் மயமான
வெள்ளத்தின் மேல்–பெருக்கிலே
ஒரு பாம்பை–ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து–படுக்கையாக விரித்து
அதன் மேலே–அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்–(நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே–காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர–நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி–மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்–(உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்–கண்ணீர்
அணை–படுக்கையில்
துயில் கொள்ளேன்–உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்–(இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை–உன்னை
தத்துறும் ஆறு–கிட்டும்வழியை
சொல்லாய்–அருளிச் செய்ய வேணும்.

விளக்க உரை

பிராக்ருதமான உறக்கம் அடியேனுக்கில்லை என்றாற்போல, உறக்கமுமில்லை யென்கிறார், இப்பாட்டில்
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு யோக நித்திரை செய்தருளுங் கிரமத்தை
ஸாக்ஷாத்கரிக்கப்பெறலாமோ வென்னுமாவல்கொண்டு,
(“பாலாழி நீ கிடக்கும் பண்பையாங் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்கிறபடியே)
அவ்வநுஸன்தாநகமடியாக நெஞ்சு அழியப்பெற்று, ப்ரீத்யதிசயத்தினால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச வொண்ணாதபடி ஏங்கி
உடம்பெல்லாம் ரோமாஞ்சிதமாகப் பெற்று, ‘நமது மநோரதம் தலைக்கட்டவில்லையே’ என்ற அவஸாதத்தினால்
கண்ணீர் துளிதுளியாகச் சோரப்பெறுகையால் இதுவே சிந்தையாய்ப் படுக்கையிற் சாய்ந்தால்
கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்யாய் என்கிறார்.

எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்கின்றனனாதலால், கள்ள நித்திரை எனப்பட்டது.
உரோமகூபம் -வடமொழித்தொடர் விகாரப்பட்டது. ரோமம் – மயிர்; கூபம் -குழி.
தத்துறுதல் என்பதற்குக் கீழ்ப்பாட்டில் “தட்டுப்படுதல்” என்று பொருள் கூறப்பட்டது;
இப்பாட்டில், அச்சொல்லுக்கே கிட்டுதல் என்று பொருள் கூறப்படுகின்றது. ஒரு சொல்லுக்கு பல பொருள் கொள்ளக்கூடுமிறே.
அன்றி, கீழ்ப்பாட்டிற் போலவே இப்பாட்டிலும் தந்துறுதல் என்று மாறுபாட்டையே சொல்லிற்றாய்,
கிட்டுதல் என்பது தாத்பரியப் பொருளாகவுமாம்; உள்ளஞ்சோர்தலும், உகர்தெதிர் விம்முகையும் கண்ணநீர்துள்ளஞ் சோர்தலும்,
துயிலணை கொள்ளாமையும் மாறுபடுவதே எம்பெருமானைக் கிட்டுகை என்று கருத்து.
இனி, உண்மைப் பொருளை வல்லார் வாயக் கேட்டுணர்க.

—————–

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8-

பதவுரை

காரணா–(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே–(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது சூதா–மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே–கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!
வண்ணம்–அழகிய
மால்–பெரிய
வரை–கோவர்த்தன மலை
குடை ஆக–குடையாக (அமைய)
மாரி–மழையினின்றும்
காத்தவனே–(பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு–(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட–முடித்த
பிரானே–உபகாரகனே!
ஏத்த அரு பெரு கீர்த்தியினானே–துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே–எமக்குத் தலைவனே!
நான்–அடியேன்
உன்னை–உன்னை
நாள் தொறும்–தினந்தோறும்
நண்ணி–ஆச்ரயித்து
ஏத்தும் நன்மை–துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்–அருள் செய்ய வேணும்.

விளக்க உரை

அட்ட – அடு என்ற குறிலினைப் பகுதியாகப் பிறந்த பெயரெச்சம். ஏத்த+அரு, ஏத்தரு; தொகுத்தல் விகாரம்
“நன்மையே அருள் செய்யும் பிரானே” என்றம் பாடமுண்டு; “அருள் செய்யும்” என்பதற்குப் பொருளதுவே:
“பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையிற், சொல்லாதாகுஞ் செய்யுமென முற்றே” என்ற இலக்கணத்தின்படி
‘நீர் செய்யும்’ என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் ஒவ்வாதாயினும், இது புதியன புகுதலெனக் கொள்க.

————–

நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9-

பதவுரை

நம்பனே–(ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே–(ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்–நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்-நித்ய ஸூரிகளுக்கு
கோன்–தலைவனே!
உலகு ஏழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்–காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்–முன்னே
ஆழி–திருவாழி யாழ்வானை
ஏத்தி–(திருக் கையில்) ஏந்திக் கொண்டு
(எழுந்தருளி)
மா கம்பம்–மிக்க நடுக்கத்தை அடைந்த
கரி–கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்–சிறையை
விடுத்தானே–விடுத்தருளினவனே!
காரணா–ஜகத் காரண பூதனே!
கடலை–(திருப்பாற்) கடலை
கடைந்தானே–(தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்–எம்பிரானே!
என்னை–அடியேனை
ஆளுடை–ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே–தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்–(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை–துன்பத்தை
களையாய்–களைந்தருள வேணும்.

விளக்க உரை

உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான பாபங்களைப் போக்கியருள வேணுமென்று
எம்பெருமானை இரக்கிறார். ‘நரசிங்கம்தானாய்’ என்பது- எம்பெருமானைத் தவிர மற்றையோரை நம்பக் கூடாமைக்கும்
அன்பு கொண்டு ஏத்துமவர்களைக் காக்கின்ற பெருமானது தலைமைக்கும் உதாரணமாகும்.
“உம்பர்கோ னுலகேழுமளந்தாய்” என்பதை ஒரு வாக்கியமாகவே அந்வயித்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையு மளந்தவனே! என்றும்,
பிரமனது ஏழுலகங்களையு மளந்தவனே! என்று முரைக்கலாம்

————-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை
சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும்
நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10-

பதவுரை

காமர் தாதை–மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்–(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும்
காண–ஸேவிப்பதற்கு
இனிய–அழகாயிருக்கிற
கரு குழல் குட்டன்–கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்–வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்–எனக்குத் தலைவனும்
மரகத வண்ணன்–மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும்
மாதவன்–பிராட்டிக்குக் கண்வனும்
மதுசூதனன் தன்னை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்–க்ஷேமமானது
நன்கு–நன்றாக (குறைவின்றி)
அமரும்–அமைந்திருக்கப் பெற்ற
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தன்–பெரியாழ்வாரது
வியன் தமிழ் பத்தும்–பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று–(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி
நவின்று–அன்பு கொண்டு
உரைப்பார்கள்–ஓதுமவவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–கிட்டப் பெறுவர்கள்.

விளக்க உரை

மற்றைத் திருமொழிகளிற் காட்டில் இத்திருமொழியில் எம்பெருமானுடைய திருநாமங்கள் விசேஷமாக அருளிச்
செய்யப்பட்டிருப்பதனால், இத் திருமொழியை ஸஹஸ்ர நாமத்யாயத்தோடொக்கப் பிரதிபத்தி பண்ணுதல் எற்குமென்க.
(காமர் தாதை) ருக்மிணிப் பிராட்டியினிடத்து மந்மதனுடைய அம்சமாகப் பிறந்த பிரத்யும்நனுக்குக் கண்ணபிரான் தந்தையாதல் அறிக.
மரதகவண்ணன்- வடசொற்றொடர்த்திரிபு. ‘மதுசூதன்றன்னை” என்றும் ஓதுவர்.
சேமம் நன்று அமருகையாவது – எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதில் மிக்க ஆவல் கொண்டிருக்கை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: