ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-10—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்துத் துணை யாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-1-

பதவுரை

அரங்கத்து–திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே–பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது–(அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
எல்லாம் சோர்வு இடத்து–‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே–தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?
ஒப்பு இலேன் ஆகிலும்–(இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர் திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்–தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
(அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று)
நின் அடைந்தேன்–தேவரைச் சரணம் புகுந்தேன்
எய்ப்பு–(வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை–அடியேனை
வந்து நலியும் போது–கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு–அந்த சரம தசையில்
நான்–அடியேன்
உன்னை–தேவரீரை
ஏதும்–க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்–நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே–(கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்–(என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்

விளக்க உரை

“துப்புடையாயை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவை யென்றே” என்று முன்னிலையாகக் கூ றவேண்டியிருக்க;
அங்ஙனங் கூறாது படர்க்கையாகக் கூறியது, இடவழுவமைதியின் பாய்படும்: முன்னிலைப் படர்க்கை என்க;
“ஓரிடம்பிற இடந்தழுவலுமுளவே” என்பது நன்னூல்.
காத்தல் தொழிலில் வல்லமை எம்பெருமானுக்கன்றி மற்ற ஆர்க்கேனும் அமையாதென்பது – ப்ரபந்ந்பரித்ராணம் முதலிய
பிரபந்தங்களிளால் அறுதியடப் பட்டதாதலின், படர்க்கைப் பொருள் பொருந்தாதென்றுணர்க.
“உடையாரை: துணையாவர்” என்ற பன்மை – பூஜையிற் போந்ததாம்.

ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, “திருமாலே! ரக்ஷணத்தில் ஸமர்ப்பனான உன்னை அடியேன் ஆசரயிப்பது,
‘செவி வாய் கண் மூக்கு முதலியவையெல்லாம் தளர்ச்சிபெற்று ஒரு காரியத்திற்கும் உதவப் பெறாதகாலத்தில் நீ துணையாவாய்’
என்ற நிச்சயத்தினாலன்றோ” என்றருளிச்செய்ய அதற்கு
எம்பெருமான் “ஆழ்வீர்! விஷய பூதர்களான அதிகாரிகளுக்கு நீர் ஒப்போ?” என்று கேட்க;
ஆழ்வார், “அப்படிப்பட்ட அதிகாரிகளோடு எனக்கு ஒப்பு இல்லையாயினும், உனது நிர்ஹேதக க்ருபையையே கணிசித்து
என்னுடைய துக்கம் பொறுக்கமாட்டாமல் உன்னை அடைந்தேன்” என்ன;
இப்படி நான் ஆரை ரக்ஷித்தது கண்டு என்னை நீர் அடைந்தது? ” என்று எம்பெருமான் கேட்க
“ஆர்த்தியும் அநந்யகதித்வமு மொழிய வேறொரு யோக்யதை யில்லாத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு நீ அருள்
புரிந்து பிரஸித்தமன்றோ” என்று ஆழ்வார் அருளிச்செய்ய, அதுகேட்ட எம்பெருமான், “ஆனால் அந்த ஸ்ரீகஜேந்திராழ்வானைப்போல்
நீர் உமக்குத் தளர்த்தி வந்தபோது நினைத்தீராகில் அப்போது வந்து ரக்ஷிக்கிறோம்” என்ன;
ஆழ்வாரும் அது கேட்டு, “வாதம், பித்தம், கிலேக்ஷ்மம் என்ற மூன்று தோஷங்களும் ப்ரபலப்பட்டு வருத்துவதனாலுண்டாகும்
இளைப்பானது என்னை நலியுங்காலத்தில் உன்னை நான் நினைப்பது எப்படி கூடும்?” என்று கேட்க;
ஆழ்வார், “சரம காலத்துக்காக இப்போதே சொல்லி வைக்க முடியும்; அதைத்தான் சொல்லி வைத்தேன்” என்ன;
“இப்படி நீர் சொல்லிவைத்தால் இதை நான் நினைத்திருந்து உம்மை ரக்ஷிக்கவேண்டிய நிர்ப்பந்தமென்ன?” என்று எம்பெருமான் கேட்க
அதற்கு ஆழ்வார், “அப்படியா? ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் கோயிலில் வந்து பள்ளி கொண்டருளினது
இதற்காகவன்றோ” என்பதாய்ச் செல்லுகிறது இப் பாசுரம்.

————

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-2-

பதவுரை

சங்கொடு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்–ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே–திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா–பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து–இழுத்துக் கொண்டு போம் போது
(என்னுடைய நெஞ்சானது)
உன் திறத்து–உன் விஷயத்தில்
எத்தனையும்–சிறிதாயினும்
புகா வண்ணம்–அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை–மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்–யம படர்கள்
நா மடித்து–(மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை–(மஹா பாபியான) அடியேனை
(ஆதலால்)
ஆம் இடத்தே–ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று–“சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத) அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை–உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்–விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.

விளக்க உரை

“ஆமிடத்தே – சாமிடத்தென்னைக் குறிக்கொள் கண்டாய் (என்று) உன்னைச் சொல்லி வைத்தேன்” என்று இயையும்.
கீழ்ப்பாட்டில் “எல்லாஞ் சோர்விடத்து” என்றதை விவரிக்கிறது – “சாமிடத்து” என்று.

எம்பெருமானே! எனது உயிர் உடலை விட்டு நீங்கின பிறகு, யம கிங்கரர் வந்து மிக்க சீற்றங்கொண்டு நாக்கை மடித்துப்
பல வகைத் துன்பங்களைச் செய்வதற்காக யம லோகத்திற்கு இழுத்துக் கொண்டு போகும் போது, என் நெஞ்சினால் உன்னை
நினைக்க முடியாதபடி உன்னை உன் நெஞ்சுக்கு விஷயமாக்காமல் மறைத்துக் கொள்ளும்படியான மாயச் செயல்களில் நீ
வல்லவனாதல் பற்றி அக் காலத்தில் உன்னை நினைக்கை அரிதென்று, இந்திரியங்கள் ஸ்வாதீன்மாயிருக்கப் பெற்ற இப்போதே,
“சரம ஸமயத்தில் அடியேன் நலிவு படா வண்ணம் திருவுள்ளம் பற்றி யருள வேணும்” என்று
உன் திருவடிகளில் விண்ணப்பஞ் செய்து கொண்டேன் என்கிறார்.

அநேக தண்டம் – வடசொல் தொடர். செய்வதா – செய்வதாக. நிற்பர் – முற்றெச்சம்; நின்று என்றபடி;
செய்வதா நின்று- செய்வதாக மனத்திற்கொண்டு என்பது தேர்ந்த பொருள்.
அன்றி, நிற்பர் என்பதை வினை முற்றாகக் கொள்ளுதலும் ஒன்று.

———–

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதே உன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-3-

பதவுரை

நேமியும்–திருவாழியையும்
சங்கமும்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே–கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்–(யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்–யம கிங்கரர்கள்
ஏற்றி–அடித்து
பற்றும் போது–பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்–“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை–ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே–வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
எல்லையில்–(அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்–உன்னுடைய
நாமம் எல்லாம்–திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்–சொன்னேன்;
என்னை–அடியேனை
குறிக் கொண்டு–திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்–எப்போதும்
அல்லல் படா வண்ணம்–அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்–ரக்ஷித்தருள வேணும்.

விளக்க உரை

எல்லை என்று – மரண தசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லை யாதலால்.
வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் – அடித்தல்.
உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர்.

எம்பெருமானே! நான் சரம தசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின் வழியே சென்றால் அங்க யம கிங்கரர்கள் வந்து
என்னை அடித்துப் பிடிக்கும் போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது:
ஆதலால், அப்படிப்பட்ட அநர்த்தம் அடியேனுக்கு விளைய வொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன்
திரு நாமங்களை யெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ
திரு வுள்ளத்தில் கொண்டு காத்தருள வேணுமென்றவாறு

————

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-4-

பதவுரை

ஒற்றை விடையனும்–ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்–ப்ரஹ்மாவும்
உன்னை–உன்னை
அறியா–(உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே–பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்–யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி–இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்-ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி–நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய–மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே–ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.
அஞ்ச–(பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு–பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்.

விளக்க உரை

சிவபிரான் மற்றவர்களைப் போலன்றி, ப்ரஹ்ம பாவனை தலை யெடுத்த போது, “நுண்ணுணர்வின் நீலார் கண்டத்தமமானும்”
என்னும்படி தத்துவத்தை உண்மையாக உணருகைக்கீடான ஸூக்ஷ்மஞான முடையனாதலால், ஒற்றை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனன்.
ஒன்று + விடையன், ஒற்றை விடையன்; “ஐயீற்றுடைக் குற்றுகரமுமுளவே” என்பது நன்னூல்.
இனி, ஒற்றை என்பதை விடைக்கு அடைமொழியாக்கலுமாம். முதலடியில், உன்னை என்றது வார்த்ததைப்பாடு விஷ்ணுவினுடைய
ப்ரஹ்மமான ஸ்வரூபத்தைப் பிரமனாகிய தானும் சிவனும் மற்றமுள்ள தேவர் முனிவர்களும் அறியார்களென்னுமிடத்தைப்
பிரமன்றானே சொல்லிவைத்தான் காண்மின்.
(முற்றவுலகெல்லாம் நீயே யாகி.) எம்பெருமானுக்குத் தன்னை யொதீந்த ஸமஸ்த வஸ்துக்கம் ப்ரகார பூதங்கள்;
எம்பெருமான் அவற்றுக்கு ப்ரகாரி என்றபடி-

(மூன்றெழுத்தாய). அகார, உகார, மகாரங்களாகிற (ஓம்) பிரணவத்துக்கு அர்த்தமாயிருப்பவன் என்க.
இம் மூன்றெழுத்துக்களில் முதலாவதான அகாரத்தின் ப்ரக்ருத்யர்த்தமான ஸர்வ காரணத்வத்தைச் சொல்லுகிறது – முதல்வனே! என்று.
ஓ, என்று இரக்கக் குறிப்புமாம் (மூன்றாமடியில்), இவன்+கு, இவற்கு, இடையில் உகரச் சாரியைபெறில், இவனுக்கு என்றாகும்.
அற்றைக்கு -அப்போதைக்கு.

—————

பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5-

பதவுரை

பால்கடலுள்–திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை–(பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பரம மூர்த்தி–பரம சேஷியானவனே !
உய்ய–(எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு–லோகங்களை
படைக்க வேண்டி–ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்–திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை–பிரமனை
தோற்றினாய்–தோற்று வித்தவனே!
வையம்–பூமியிலுள்ள
மனிசர்–மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி–(நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய்
நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்–யமனையும்
உடனே–கூடவே
படைத்தாய்–ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய–பரம பந்துலானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
இவர் என்னை காக்க வேண்டும்

விளக்க உரை

(பரமமூர்த்தி) “மூர்த்தி சப்தம்- ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்ய வாசகமாய்க் கொண்டு,
சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற வியாக்கியாக வாக்கிய மறியத்தக்கது.
மூன்றாமடியில், மணிசரை என்றவிடத்து, ஐ- அசை;
அன்றி, உருபுமயக்கமுமாக “பொய்யை” என்கிறவித்தைப் பொய் என்று குறைந்துக் கிடக்கிறது என்றபடி தனது கட்டளையான
சாஸ்த்ரங்களை மீறி ஸ்வேச்சையாகக் கபட நடைகளில் ஒழுகுபவர்கள் இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான்
திருவுள்ளத்திற்கொண்டு, அவ்வக்காலங்களில் அவரவர்கள் செய்யும் பாபங்களுக்கீடாகத தண்டம் நடத்தியாகிலும்
இவ்வுலகைக் காக்க வேணுமென்ற கருணையினால், சிக்ஷைக்குக் கடவனான யமனையும் படைத்தருளினமை மூன்றாமடியில் விளங்கும்.
காலன்- வடசொல். தோற்றினாய், படைத்தாய்- விளிகள்.

————–

தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6-

பதவுரை

மண்ணொடு–பூமியும்
நீரும்– ஜலமும்
எரியும்–தேஜஸ்ஸும்
காலும்–வாயுவும்
ஆகாசமும்–ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)
மற்றும் ஆகி நின்றாய்–மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
அண்ணலே–ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை–இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால–மிகவும்
கொடுமைகள்–கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்–பண்ணுவர்கள்;
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.)
எண்ணலாம் போதே–அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்–உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்–அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை–அடியேனை
நீ–நீ
குறிக் கொண்டு–நினைவுள்ளத்தில் கொண்டு
என்றும்–எப்போதும்
காக்க வேண்டும்–காத்தருள வேணும்

விளக்க உரை

தண்னானவு குளிர்ச்சி, ‘தண்ணேன’ என்றனுக் கருதி ஈர நெஞ்சு அற்றவர்களென்றவாறு .
அன்றி
‘தண்ணனவு’ என்று கணிதலைச் சொல்லிற்றாய் ( தணிகள்-ஓய்தல்) கவிதையில் ஒழிவில்லாமையைக் கூறியவாறுமாய்
சால-உரிச்சொல். (மண்ணோடு இந்தியாகி.) இவ் வொற்றுமை ப்ரகார ப்காரியான நிபந்தம்

————-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா
வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7-

பதவுரை

செம் சொல்–ருஜுவான சொற்களை யுடைய
மறை–வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற–அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்–நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே–தலைவனுமானவனே!
எம்மானே–எம்பெருமானே!
எஞ்சல் இல்–குறை வற்ற
இன்–பரம போக்யமான
உன்னுடை அமுதே–எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்–உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா–எனக்கு உபகாரகனானவனே!
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;
வஞ்சம்–வஞ்சனை பொருந்திய
உருவின்–ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
என்னை–அடியேனை
வலிந்து–பலாத்கரித்து
நலிந்து–ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது–பிடிக்கும் போது
அஞ்சல் என்று ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்

விளக்க உரை

(செஞ்சொல் மறைப்பொருளாகி நின்ற.) காண்க. அமுதத்திற்கு எஞ்சலில்லாமையாவது-
‘அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்றபடி அநுபவிக்க அநுபவிக்க குறைவின்றிப் பணைக்கை,
வஞ்சவுருவின் நமன்றமர்கள் தங்கள் வரவு ஒருவற்குத் தெரியாதபடி ரூபத்தை மறைத்துக்கொண்டு வரும் யமபடர்கள் என்றபடி,
அஞ்சல்- அஞ்சு என்ற வினைப் பகுதியாப் பிறந்த எதிர்மறை

—————

நான் ஏதும் உன் மாய மொன்ற றியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே யென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-8-

பதவுரை

வான் ஏய்–பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்–நித்ய முக்தர்களுக்கு
ஈசா–தலைவனே!
மதுரை–திரு வட மதுரையில்
பிறந்த–அவதரித்த
மா மாயனே–மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்–(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
நான்–அடியேன்
உன் மாயம்–உன் மாயைகளில்
ஏது ஒன்றும்–யாதொன்றையும்
அறியேன்–அறிய மாட்டேன்;
நமன் தமர்–யம கிங்கரர்கள்
பற்றி–(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு–(இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று–‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது–அடிக்கும் போது
அங்கு–அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்.

விளக்க உரை

அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்” என்றும் பாடமுண்டு
“நானே துமுன்மாய மொன்றறியேன்” என்றவிடத்தில், (கீழ் இரண்டாம் பாட்டில்)
‘போமிடத்துன் திறத்தெத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை” என்றதை நினைக்க.
இந்த ஊன்- விட்ட சரீரததிற்காட்டில் பிரவேசிக்கிற சரீரத்தின் கொடுமையைச் சுட்டிக் காட்டுகிறது.
நரகத்தில் அதி தீவ்ரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நாசரீரம்” என்று பெயர் அறிக.
ஊனே. புகே ஏ இரண்டும் இசை நிறை என்னலாம்.

————-

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்றறுதியாக ஆதியஞ் சோதி மறந்தறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது
அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-9-

பதவுரை

குன்று–கோவர்த்தந மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரஷித்தருளின
ஆயா–ஆயனே (கோபாலானே!)
கோ நிரை–மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே–மேய்த்தருளினவனே!
எம்மானே–எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அன்று முதல்–(உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக–இன்றளவாக
ஆகி–ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி–விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்–(அடியேன்) மறந்ததில்லை
நன்றும் கொடிய–மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்–யம கிங்காரர்கள்
என்னை–என்னை
நலிந்து–ஹிம்ஸித்து
வலிந்து–பலாத்கரித்து
பற்றும் போது அன்று–பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு–அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்

விளக்க உரை

அன்று முதல்- கர்ப்ப வாஸம் முதலான என்றும் கொளா அறுதி முடிவு.
“அன்றமுதலின்றறுதியா” என்ற பாடம் செய்யுளின்பத்துக்கு மாறுபாடாம்.
அன்று முதல் இன்றளவாக ஆதியஞ்சோதியை மறந்தறியேன் என்னா நின்று கொண்டு–என்றால் விருத்தமன்றோலென்னில்;
அதி சங்கா மூலமாக கலக்கத்தினால் வந்த அச்சத்தாலே இங்கனே வேண்டுகிறபடி.
(இத் திருமொழியின் அவதாரிகையில் இது விரியும்.) “பற்றும் போது அங்கு என்னைக் காக்க வேண்டும்” என்றிவ்வளவே
போதுமாயிருக்க, அன்று என்று அதிகமாக ஒரு சொல் சொன்னது அவ் வவஸ்தையின் கொடுமையைக் கருதியாமென்க.

——-

மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும்
ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை
பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10-

பதவுரை

மாயவனை–ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை–மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை–பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்–வைதிகர்கள்
ஏத்தும்–துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை–இடையர்களுக்குத் தலைவனும்
அச்சுதனை–(அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து–கோயிலில்
அரவு அணை–சேஷ சயநத்தில்
பள்ளியானை–கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்–தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்–புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்- நிர்வாஹருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையான
பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி–நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
வல்லார் தாம்–ஓத வல்லார்கள்
தூய மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்–அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)

விளக்க உரை

இப்பாடல், இத்திருமொழி கற்பார்க்கப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார்.
மேன்மைக்கு “அமரரேறு” என்பதுபோல, நீர்மைக்கு “ஆயர்களேறு” என்பதாம்.
நம் பூருவாசாரியர்கள் பெரியபெருமானைக் கிருஷ்ணாவதாரமாக அநுஸந்தித்துப் போருவர்கள்;
“ கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங் கவர்ந்தானை,
அண்டர்கோ னணியாங்கள் என்னமுதிலே” என்றார் திருப்பாணாழவார்.
திருபவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் என்றருளிச் செய்வர்.
யசோதைப்பிராட்டி பிள்ளைப் பணியாகச் சாத்தின திருவாபரணம் இப்போதும் பெரிய பெருமாள் திருக்கழுத்திற்
கிடக்கிறதென்று நேரில் கண்டநுபவித்து அருளிச் செய்தார் பட்டரும்.

தூயமனத்தனராகி வல்லார்- அநந்யப்ரயோஜநராக ஓதவல்லர்கள் என்றபடி;
இதனால், சோறு கூறைகளையே முக்கிய பிரயோஜநமாக நச்சி ஓதுமவர்களை வியாவர்த்திக்கின்ற தென்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: