ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-8—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே.

பதவுரை

மறி–அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்–கடலிற் புகுந்து
மாண்டானை–முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்–மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா–(ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே–(அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்–(கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதியாவது;
தோதவத்தி–பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்–நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை–காவேரித் துறைகளில்
படிய–அவகாஹிக்க (அதனால்)
எங்கும்–அக் காவேரி முழுதும்
துளும்பி–அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய)
போதில்–(அந்தப்) பூக்களில்
வைத்த–இரா நின்றுள்ள
தேன்–தேனானது
சொரியும்–பெருகப் பெற்ற
புனல்–நீரை யுடைய
அரங்கம் என்பது–திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.

விளக்க உரை

கண்ணபிரான் ஸாந்தீபிநி யென்னும் ப்ராஹ்மணோத்தமம் பக்கல் ஸகல சாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம்
குருக்ஷிணைகொடுக்கத் தேடுகின்றவளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷசேஷ்டிதங்களை அறிந்தவராகையாலே,
‘பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு ப்ரபான தீர்த்தக்கட்டதிற் கடலில் முழுகி இறந்துபோன என் புத்திரனைக்
கொணடுவந்து தர வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, ‘அப்படியே செய்கிறேன்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன சங்கின்
உருவம்தரித்துச் சமுத்திரத்தில் வாஸஞ் செய்கின்ற பஞ்சஜகன் என்ற அஸுரனைக் கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி,
அங்கு யாதனையிற்கிடந்த அக்குமாரனைப் பூர்வதேஹத்தில் ஒன்றும் விசேஷமறக் கொணர்ந்து கொடுத்தருளிய வரலாறு முன்னடிகளிற் கூறியது.
‘மாண்டானை” என்ற விடத்துள்ள இரண்டனுருபு, “புத்திரன்” என்ற பெயரோடு கூட்டியுரைக்கப்பட்டது.
தக்கணை- தக்ஷிணா என்ற வடசொல்லிகாரம்.

பின்னடிகளின் கருத்து:- கங்கையிற் புனிதமாய காவிரியில் பெரிய பெருமாளுடைய திருக்கண்நோக்கான திருமுகத்துறை
முதலான பலதுறைகளில் ஆசாரபரரான வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் திரள் திரளாக வந்து குடைந்து நீராட
அதனால் அக்காவேரியடங்கலும் அலைமோதப்பெற்று, அவ்வலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட,
அதனால் அப்பூக்களினின்றும் தேன் பெருக, அத்துடன் சொந்த தீர்த்தத்தையுடைய திருவரங்கமென்பதாம்.
தோதவத்தி- வடசொல்லிகாரம்.

————–

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2-

பதவுரை

பிறப்பு அகத்தே–ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த–இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்–புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்-ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து–(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து–மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த–(இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்–சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–தீருப்பதியாவது:
மறை–வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி–சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்–(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு–(தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை–அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்–ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய–(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்–வைதிகர்கள்
வாழ்–வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே….

விளக்க உரை

இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்ய வுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின்
உரையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகு பெயரால் விருந்தினரை உணர்த்துகிறது

————-

மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர்
திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3-

பதவுரை

மருமகன் தன்–மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை–புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு–மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்–மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு–சரீரமானது
மகத்து–(பாரதயத்தமாகிற) நரமேதத்திலே
வீழாமே–விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்–ஆசார்ய ரூபியாய்
(ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்–ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய
ஊர்–திருப்பதியாவது:
செம் கமலம்–செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்–(பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை–நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்–திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று–(ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்-நீர்வளத்தையுடைய
புனல்–நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது

விளக்க உரை

பண்டு பாரதப்போரில், அர்ஜுனன் மகனான அபிமந்யுவின் மனைவியாகிய உத்தரை என்பவருடைய கருவை நோக்கி
அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட அபாண்ட வாஸ்திரத்தினால் அக்கருவிலிருந்த சிசு (பரிக்ஷித்) நீறாயொழிய,
அச்சிசுவை மீண்டும் உயிர் பெறுத்த வேணுமென்று ஸுபத்திரையினால் பிரார்த்திக்கப்பட்ட கண்ணபிரான்
தனது செந்தாமரை மலர்போன்ற திருவடியினால் அச்சிசுவை உயிர்பெற்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டது.
இவ்வரலாறு மஹாபாரதத்தில் ஆச்வமேதிகபர்வத்துக்கு உள்ளீடான அநுகீதாபர்வத்தில் அத்தியாயங்களிற் பரக்கக் காணத்தாக்கது.
அபிமந்யு என்பவன் கண்ணபிரானுக்கு உடன் பிறந்தவளான ஸுபத்தையின் மகனாதலால் மருமகனாயினன். சந்ததி- வடசொல்லிகாரம்.

(மைத்துனன்மார் இத்யாதி.) பஞ்சபாண்டவர்களுக்கு தான் துணையாய் நின்று, கௌரவர்களால் அவர்கட்கு ஒரு நலிவு நேராதபடி
பலவகைகளாயல் காத்தருளிமமையைக் கூறியவாறு.
இரண்டாமடியில், “மகத்தே” என்றவிடத்து, மகம்- வேமென்ற வடசொல் விகாரம்: யாகமென்பது பொருள்;
சந்தர்ப்பம் நோக்கி, நரமேதயாகமென்று உரைக்கப்பட்டது; மநுஷ்யர்களைப் பலிகொடுத்து நடைபெறும் யாகம்- நரமேதயாகமெனப்படும்.
“எல்லாச்சேனையு பிருநிலத்தவித்த” என்றபடி உபய ஸேனையிலும் பூமிக்குச் சுமையாயிருப்பவர்களையெல்லாம் ஒழிப்பதாக நடத்தப்பட்டதும்,
*மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தவனுடைய திருவுள்ளத்திற்கு உகப்பாயிருப்பதுமான பாரத யுத்தத்தை
நரமேதயாகமாகக் கூறுவது ஏற்குமென்ப. பகவத்கீதை முதலியவற்றால் ஆசார்யத்வம் தோற்ற ஹிதோபதேசம்
பண்ணினபடியைப் பற்றிக் “குருமுகமாய்க் காத்தான்” என்றருளிச் செய்தனரென்க.

பின்னடிகளின் கருத்து- திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகாநின்ற காவிரி நீரில், பெரிய பெருமானது திருமுகம் போன்ற செந்தாமரை மலர்களும்,
அவரது திருமேனி நிறம்போன்ற கரு நெய்தல் பூக்களும் பரபாகத்தாலே ஒன்றுக் கொன்று எதிர்பொருகிற முகத்தை யுடைத்தாய்க் கொண்டு
விகஸிக்குமென்று நீர்வளஞ் சொல்லியவாறு.
(பொருமுகமாய்) குவளையும் கமலமும் எம்பெருமானது திருநிறத்தோடும் திருமுகத்தோடும்

—————

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

பதவுரை

கூன்–கூனைவுடைய
தொழுத்தை–வேலைக்காரியாகிய மந்தரை யானவள்
சிதகு–(ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப–சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்–மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்–வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு–கடினமான சொல்லைக் கேட்டு
ஈன்று எடுத்து தாயாரையும்–(தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய–கைவிட்டு
தொழத்தை–அடிமைப் பெண்
தாயார்–பூஜையிற்பன்மை
கண்டகர்–முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி–காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை–(முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்–நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்–தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை–சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது.

விளக்க உரை

தண்டகாரணியத்தில் ஜையந்தமென்ற பட்டணத்தில் வஸிப்பவனும் திமித்வஜன் என்று மறுபெயருள்ளவனும் இந்திரனை
வென்றவனுமான சம்பரராஸுரனை இந்திரனது வேண்டுகோளின்படி வெல்லுதற் பொருட்டுக் கைகேயியுடன் சென்ற
தசரதச்சக்கரவர்த்தி அவ்வஸுரனை எதிர்த்துச் செய்த பெரும்போரில் அவனால் விரணப்பட்டு மூர்ச்சையடைந்த பொழுது,
அச்சக்கரவர்த்தியை அசுரர்கள் வதை செய்யாதபடி கைகேயி போர்க்களத்திலிருந்து எடுத்துச்சென்று பாதுகாக்க,
மூர்ச்சை தெளிந்தவுடன் தசரதன் தனனக்கு கைகேயி செய்த உயிருதவிக்காக அகமகிழ்ந்து தான் அவட்கு அவள் வேண்டும்
இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்கு அளிக்க, அவள் அவற்றை பின்பு தனக்கு வேண்டும்பொழுது
கேட்டுப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள்; அவவ்வரங்களில் ஒன்றாகப் பரதனது பட்டாபிஷேகத்தையும்,
மற்றொன்றாக இராமபிரானது வநவாஸத்தையும் கேட்கும்படி ஞாபகப்படுத்தி உபாயங்கூறித் தூண்டின கூனியின் சொற்படி
தன்னைக்காட்டு கெழுந்தருளச் சொன்ன கைகேயியின் நியமநத்தின்படி ராஜ்யம் முதலியவற்றையெல்லாம் துறந்து
இராமபிரான் தண்டகராணியத்திற்சென்று புகுந்து அங்கு ஜகஸ்தாநத்தில் இருந்து கொண்டு ஸாதுக்களை நலிந்து
திரிந்த அரக்கர்களை அழித்தருளினமை அறிக.

—————-

பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5-

பதவுரை

குரவு–குரவ மரங்களானவை
அரும்ப–அரும்பு விடா நிற்க
கோங்கு–கோங்கு மரங்களானவை
அலரா–அலரா நிற்க.
குயில்–குயில்களானவை
கூவும்–(களித்துக்) கூவும்படியான
குளிர் பொழில் சூழ்–குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது–திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு–பெருமை பொருந்திய
அவை வரங்களை
பற்றி–பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய–(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை–இராவணனுடைய
உரு–உடலானது
மங்க–சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து–போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை–இந்த லோகத்தை
கண் பெறுத்தான்–காத்தருளினவனும்
என்–எனக்குத் தலைவனும்
திருமால்–ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்–சேருமிடாகிய
ஊர்–திருப்பதியாம்

விளக்க உரை

பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து,
நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம்
படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின
எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம்.
வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.

————-

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6-

பதவுரை

கீழலகில்–பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை–அஸுரர்களை
கிழக்க இருந்து–அடக்கிடந்து
கிளராமே–கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய–அவ் வசுரர்களுடைய
கரு–கர்ப்பந்தமாக
அழித்த–அழித்தருளினதாலும்
அழிப்பன்–சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது:
யாழ்–(வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை–இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்–வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு–(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி–உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி–(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து–உடம்படங்கலும் அணிந்து கொண்டு
அந்தக் களிப்பிலே
ஆளம் வைக்கும்–தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்–திருவரங்கம்

விளக்க உரை

பாம்புகளானவை புற்றுக்களில் பாங்காகக் கிடந்து வஸிப்பதுபோல, அசுரர்களும் பாதாளலோகத்தில் பாங்காகக் கிடந்து
சிலசில காலங்களில் அங்குநின்றம் போந்து தேவர்களை அடர்த்துப் போர் செய்வார்கள்; அப்போது எம்பெருமான்
அத்தேவர்களுக்குத் துணையாய்நின்று அவ்வசுரர்களை அழித்தொழித்தருள்வன்; இவ்வாறு அவ்வசுரர்கள் பலகால் போர்புரிய
வருவதையும் அவ்வப்போதுகளிலெல்லாம் தான் அவர்களை ஒழிக்க வேண்டிய வருத்தத்தையும் நோக்கி,
அவ்வசுரரைக் கிழங்கோடு களையவேணுமெனத் திருவுள்ளம் பற்றித் தனது திருவாழியைச் செலுத்தி
அங்ஙனமே நிறைவேற்றிக் கொண்டானென்பன, முன்னடிகள்.
(கிழக்கு இருந்து கிளராமே.) மரத்தின் வேரை மாத்திரம் நிறுத்திவிட்டு மற்றபாகத்தை வெட்டினால்,அவ்வேரடியாக
மீண்டும் அம்மரம் செழிப்புற்றோங்கி வளரும்; அவ்வேர்தன்னையு மொழித்திட்டால் பின்பு ஒன்றுமின்றி யொழியும்;
இவ்வாறே எம்பெருமான் அசுரர்களை ஸமூலோந்மூலகம் பண்ணியருளினானென்க.
கிழங்கு – வேரானது: இருந்து- மிகுந்திருந்து கிளராமே- மறுபடியும் முன்போல முளைக்க வொட்டாதபடியென்க.
கரு—இதனால் மூலத்தைச் சொல்லியவாறு.

செவிக்கினிய ஸ்வரத்தையுடைய வண்டுகள் திரள்திரளாகக்கூடி, விசாஸோங்முகமான தாழை மடலினுள் வருந்திப் புகுந்து
அங்குப்புரண்டு அதிலுள்ள வெண்ணிறக் கண்ணங்களைத் தம் உடலில் அணிந்து கொண்டு, தென, தென என்று ஆளத்தி
வைத்துப் பாடும்படியைக் கூறுவன- பின்னடிகள்.
(உரிஞ்சி) நெருக்கமானத்வாரத்தில் நுழைய வேண்டுபோது உடம்பு உராய்தல், இயல்பு. உறிஞ்சுதல் – ஊராய்தல்;
தவள வண்ணம்- வடசொல் விகாரம். தாழை மடலினுள் வெளுத்தபொடிகள் உள்ளமை அறிக.

யாழின் , இசை. என்று பிரிப்பதும் ஒக்கும். ஆளம் வைத்தல் – அநக்ஷாரஸமாக இசைத்தல்; ஆலாபனை எனப்படும்.

—————-

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7-

பதவுரை

கொழுப்பு உடைய–கொழுப்பை யுடையதும்
செழு–செழுமை தங்கியதுமான
குருதி–ரத்தமானது
கொழித்து–ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து–நிலத்தில் பரவி
குமிழ்ந்து–குமிழி கிளம்பி
பிழக்கு உடைய–(பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை–அஸுரர்களை
பிணம் படுத்த–பிணமாக்கி யருளின
பெருமான்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியானது:
தழுப்பு அரிய–(ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்–சந்தந மரங்களை
தடவரைவாய்–பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு–(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
(இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)
தெழிப்பு உடைய–இரைச்சலை யுடைய
காவிரி-திருக்காவேரி நதியானது
அடி தொழும்–(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்–சீர்மையைப் பெற்ற
அரங்கம்–திருவரங்க நகராம்.

விளக்க உரை

ஊட்டுப் பன்றிபோல நிணங்கொழுக்கும்படி போஷகவஸ்துக்களை உட்கொண்டு உடலை வளரச் செய்து திரிகையாலே
கொழுப்புடைத்தாயும் அழகியதாயுமிருக்கிற ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்ததுபோலே
நிலத்திலே யிழிந்து குமிழிகிளம்பி அலையெறியும்படியாக உலகங்களையெல்லாம் கலிந்துதிரியும் பிழைகளையுடையரான
அசுரர்களை நிரந்வய விநாசமாக்கிவிட்டவாறு கூறுவன முன்னடிகள்.

(தழுப்பரிய இதயாதி.) மலையினிடத்து வளர்ந்துள்ள பெருப்பெருத்த கந்தகவிருஷங்களை வேரோடு கிளப்பி
இழுத்துக்கொண்டு இவற்றைக் கைக் கொண்டருள வேணும் என்று இருப்பதுபோல காவேரியானது தான் கொணர்ந்த
சாத்துப்பாடியைப் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தொழ நிற்கும்படியாக கூறியவாறு.

தழும்பரிய- சந்தன மரம் சிறிதாயிந்தால் ஓருவரிருவரால் தழுவமுடியும். அளவிட்டுக்காடட் கெவாண்ணாதபடி மிகவும்
ஸ்தூலமாக யிருப்பதனால் தழுவ முடியாமை கூறப்பட்டது. தழுவுகள்- கைகளால் அணைத்துக் கொள்ளுதல்

———-

வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8-

பதவுரை

வல் எயிறு கேழலும் ஆய்–வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்–ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்–ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதியாவது
இரு சிறை வண்டு–பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது–அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி–பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்–மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதில்–திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது-

விளக்க உரை

ஹிரண்யாக்ஷரணையும், ஹிரண்யனையும் ஸம்ஹரித்தபடியைக் கூறுவன முன்னடிகள்.
வல்லெயிற்றுத் தரணியை இடந்தான், வாளெயிற்றுச் சீயமாய் அவுணனை இடந்தான் என இயையும்;
எனவே, நிரனிறைப் பொருள்கோளாம். இவ்வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
வராஹத்தின் எயிற்றுக்குப் பூமியை கீண்டெடுக்கும்படியான வன்மை இன்றியமையாதானது பற்றி “வல்லெயிற்றுக் கேழல்” என்றார்;
நரஸிம்ஹத்தின் எயிறுகள் அழகுக்குறுப்பாதல் பற்றி “வாளெயிற்றாச்சீயம்” என்றார்.
தரணிக்கு எல்லையில்லாமையானது கடல்களும் தீவுகளும் போலன்றி, எல்லாம் தன்னுள்ளேயாம்படி
*பஞ்சாகத்கோடி விஸ்தீர்ணையாயிருக்கை அவுணனுக்கு எல்லை யில்லாமையாவது நான் பெற்ற வரங்களுக்கீடாக
எல்லையில்லாத தபஸ்ஸுகளை யுடையவனாயிருக்கை.

வண்டுகள் அந்நியம்போதில் எம்பெருமான் குணங்களைப் பாடிக்கொண்டு திரிதலைக் கூறுவது, மூன்றாமடி.
கீழ் திருமாலிருஞ் சோலையைப் பாடும்போது “அறுகால் வரி வண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லிச், சிறுகாலைப்பாடும்” என்றார்;
இங்கு ‘எல்லியம்போது’ என்கிறார்; இதனால், திவ்யதேசங்களிலுள்ள வண்டுகள் காலத்துக்கேற்பப் பண்களால்
பகவத்குணங்களை நியதமாகப் பாடும்படியைக் கூறியவாறு.

(மல்லிகை இத்யாதி.) ஸாயங்கால புஷ்பமான மல்லிகைப் பூவில் வண்டுகளிலிருந்து ஊதும்போது அந்தப்பூவானது
அலருவதுக்கு முன்பு தலைகுவிந்து மேல்பருத்துக் காம்படிநேர்ந்து வெளுத்த நிறத்தையுடைத்தாய் சங்கைப் போன்றிருத்தலால்
வெண்சங்கை ஊதுவது போல்வது பற்றி இங்ஙனருளிச் செய்தாரென்க

————–

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9-

பதவுரை

குன்று ஆடு–மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்–நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்–கரு நெய்தல் பூப்போலவும்
குரை–ஒலி செய்யா நின்ற
கடல்போல்–கடல்போலவும்
நின்று ஆடு–(களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்–மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய–வடிவழகை யுடையவனான
நெடுமால்–எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தென்றல்–தென்றல் காற்றானது
குன்று–(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு–சோலைகளினிடையிலே
அழைத்து–அழைத்து
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)
கொடி இடையார்–கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை–(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி–வியாபித்து
(அந்தப் பரிமளத்துடனே)
மன்றூடு–நாற்சந்திகளினூடே
உலாம்–உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது

விளக்க உரை

நிறம் என்று திருமேனி நிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு –
நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும்,
புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமை கூறுவதாக நிறமித்துக் கொள்ள வேணும்.
எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.

—————–

பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை
செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10-

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி–பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை–யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு–யுத்தத்திலே
அரங்க–ஒழியும்படி
பொருது–போர் செய்து
அழித்த–ஒழித்தருளின
திருவாளன்–(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்–(திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு–(பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய
தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை–(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்
(திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்–துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்–அடிமை செய்யக்கடவோம்.

விளக்க உரை

“தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று-
தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல,
இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார்.

வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர்.
ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் – அழிதல்.
(இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க.
தமிழ் மாலை கொண்டு வந்த வல்லார்” என இபையும்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: