ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-7—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை
கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1-

பதவுரை

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே–கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால்
என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கடு வினை–கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்–ஒழிக்கவல்ல
கரை மேல்–கரையிலே
கை தொழ நின்ற–(பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்–‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை–(இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்–மூக்கையும்
தமையனை–அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்–தலையையும்
எங்கும்–நாட்டெங்கும்
தன் புகழ்–தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து–பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட–ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்–எமக்குத் தலைவனுமான
தாசரதி–இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
எமது இருக்கை–வாஸஸ்தாநமாம்.

விளக்க உரை

தங்கை மூக்கைத் தடிந்த விவரணமும், அதன்மேல் தோன்றும் ஆக்ஷேபத்திற்குப் பரிகாரமும்,
கீழ்- என்னாதன் தேவியில் எட்டாம்பாட்டினுரையில் கூறப்பட்டது.
தாசரதி- வடமொழித் தத்திதாந்தநாம்-
புருடோத்தமன்- திருக் கண்டங்கடி நகரில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம்.
இருக்கை- தொழிலாகுபெயர்.

பின்னடிகளின் கருத்து;- ஏதேனுமொரு குளத்தில் நீராடுமவர்கள் அந்த நீரைக் கங்கையாக நினைத்து,
‘கங்கை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பெருப் பெருத்த பாபங்களையெல்லா மொழிக்கும்படியான
பெருமை பொருந்திய கங்கையின் கரையிலுள்ள கண்டமென்கிற நகரவிசேஷமென்பதாம்.

திருகண்டங்கடிநகர்- வடநாட்டுத் திருப்பதிகள் 12- னுள் ஒன்று; கண்டம் என்னுமிவ்வளவே இத்திருப்பதியின் பெயர்;
கடி. என்னுஞ்சொல் இங்குச் சிறப்புப் பொருளது.
“மத்தாற் கடல் கடைந்து வானோர்க்கமுதளித்த அத்தா வெனகுன்னடிப்போதில்- புத்தமுதைக்,
கங்கைக் கரை சேருங் கண்டத்தாய் புண்டரிக, மங்கைக் கரசே வழங்கு” என்ற ஐயங்கார் பாடலில்
“கண்டத்தாய்” என்ற விளி நோக்கத்தக்கது.

—————

சலம் பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண வுருவின் மால் புரு டோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டமென்னும் கடி நகரே–4-7-2-

பதவுரை

நலம் திகழ்–(எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்–ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி–தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்–(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்–(அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்–திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து–சேர்ந்து
இழி–ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்–ஜலத்தினால்
புகர் படு–விளங்கா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்
சலம்–ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்–வடிவை யுடைய
சந்திரன்–சந்திரனும்
தழல்–நெருப்பை
உமிழ்–உமிழா நின்றுள்ள
பேழ்–பெரிய
வாய்–கிரணங்களை யுடையவனாய்
வெம்–வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்–ஸூர்யனும்
அஞ்ச–அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து–மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு–(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்–(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமன்
வாழ்வு–வாழுமிடம்

விளக்க உரை

எம்பெருமான் மாவலி கையில நீரேற்றுப் பெற்று உலகளக்கத் தொடங்கி ஓங்கி யுயர்ந்த போது சந்த்ர ஸூர்யர்கள்
இதுவென் புகுந்த்திங்கந்தோ என்றாற்போல அஞ்சினராம்; அப்படி அவர்கள் அஞ்சும்படி விம்மி வளர்ந்த எம்பெருமான்
பொருந்தி யெழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னும் கடிநகரென்க.
சந்திரன் அம்ருத மயமான கிரணங்களை யுடையவனாதலால், சலம்பொதி யுடம்பினனாகக் கூறப்படுதல்.
பேழ்-பெருமை. “சலம்பொதியுடம்பிற் சந்திரன், தழலுமிழ்பேழ்வாய் வெங்கதிர்” என இயைந்துரைக்கப்பட்டது.

பின் யடிகளால், கங்கையை வருணிக்கின்றார். இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் பெருகிப்
பின்பு சங்கரன் சடையினில் தங்கி, ஆகாசத்தில் நின்றும் நிலவுலகத்தில் பிரவஹித்தமையால்,
எம்பெருமானுடைய பாதத் துழாய்மலரோடும் சிவபிரானுடைய முடிக் கொன்றை மலரோடுங்கலந்து
பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் விலுக்ஷணமானதொரு புகரைப்பெறுமென்க.
“கலந்திடும்” என்பதைச் சடையோடும் இயைக்கலாம், சடையனோடும் இயக்கலாம்.
எம்பெருமானுடைய ஸ்ரீபாதத் தீர்த்தத்தைத் தனக்குத் தூய்மை விளைக்குமதாக ப்ரதி பத்தி பண்ணித் தலையால்
தரிக்கைக்கு மேற்பட்ட நன்மையில்லையிறே சடையானுக்கு.

————-

அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3-

பதவுரை
(எம் பெருமானுடைய திருவடியை விளக்குகிற போது.)

சதுமுகன் கையில்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்–சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்–சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி–தங்கி,
கதிர்–ஒளியுடையனவும்
மணி–ரத்னங்களை
கொண்டு–கொழித்துக் கொண்டு
இழி–இழிகிற
புனல்–தீர்த்தத்தை யுடைய
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;
அங்கு–உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய–முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி–திருப் பவளத்தில் வைத்து ஊதியு“
அழலுமிழ்–நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து–திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்–(போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்–அஸுரர்களுடைய
தலைகளை–தலைகளை
இடறும்–உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை–எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்.

விளக்க உரை

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்ய லோகத்திற் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல
தீர்த்தத்தாற் கழுவி விலக்க, அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்கை நதியை,
ஸூர்யகுலத்துப் பகிருத சக்ரவர்த்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத் தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய்
நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகா புத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறுவிக்கும் பொருட்டு
நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்கு கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான்
அந் நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாக பூமியில் விட்டனன் என்ற வரலாறு அறியத்தக்கது.

ஓங்கி உலகளந்தருளும்போது நமுசி முதலிய அசுரர்கள் “என்னிதுமாயமென்னப்பனறிந்திலன், முன்னை வண்ணமே கொண்டவளவாய்”
என்று தடை செய்ய, அப்போது சங்கை முழங்கியும், ஆழியை எறிந்தும் அவர்களைத் தொலைத்தருளினமை முன்னடிகளில் கூறியது.
“குமிழ்த்தி” “எறிந்து” என்ற வினையெச்சமிரண்டும், “இடம்” என்ற பெயரெச்சத்தோடு இயையும்,
இம்முன்னடிகளிற் கூறிய வரலாறு, ஸாதாரணாமகத் தேவாஸுரயுதத்த காலங்களில் நடந்ததாகக் கொள்ளவுங்கூடும்.
“தலைகளையிடறும்” என்றது அவர்களைத் தொலைத்தமையைக் கூறியவாறு

————-

இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இரு கரை உல கிரைத்தாட
கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-4-

பதவுரை

இமவந்தம் தொடங்கி–இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்–பெரிய கடல் வரைக்கும்
இரு கரை–இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து–ஆரவாரித்துக் கொண்டு
ஆட–நீராட
கமை உடை பெருமை–(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;
இமையவர்–(இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து–அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள–ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை–துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம் யமலோகத்தை
நணுக–கிட்டுகைக்காகவும்
நாந்தகம்–நந்தகமென்னும் வாளை
விசிறும்–வீசா நிற்குமவனும்
நம்–நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்–நகரமாகும்.

விளக்க உரை

அரசுரர்களு மரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களைக் குடியிருக்க ஓட்டாதபடி அனைத்து அடர்ந்து எதிர்த்து போர் புரியப் புக,
அப்போது எம்பெருõமன் இந்திராதிகளுக்குப் பக்ஷபாதிபதியாயிருந்து அவர்களை இடையூறின்றி அரசாளவிக்குமாறு
அவ் வசுரர்மீது தனது கந்தக வாளை வீசி யெறிந்து அவர்களைப் பொழிந்தமை முன்னடிகளிற்கூறியது.
இறுமாந்திருக்கையாவது கண்டவாற்றால் தனதே யுலகென நின்றானை என்றாற்போல வீற்றிருக்கை.
ஏற்றுவந்து என்று வந்து அஹங்கரித்து வந்து, நாந்தகம் நீட்டல் விகாரம், நகர்தான் – தான் அசை.

இமவந்தக தொடங்கியிருங்கடலளவும் – ஹிமகத்பர்வத்த்தின் உச்சி தொடங்கி பெரியகடலளவும் ள்ள லோகத்தாருந் திரண்டு
ஆரவாரித்துக்கொண்டு வந்து நீராட, அவர்களுடைய பரபங்களையெல்லாம் பொறுத்து அவர்களைத் தூயரக்கும்
பெருமையை வுடையது கங்கையென்க
கமை – வடசொல்திரியு, “கமை பெருமை உடை“ எனமாற்றி இயைத்து,
(பாவங்களை) க்ஷமிக்கையாகிற பெருமையை யுடைய என்றுரைப்பாருமுளர்.

—————–

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-5-

பதவுரை

எழுமையும்–ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட–சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்–பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்–க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்–போக்கி விடும்படியான
பெருமை–பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;
உழுவது ஓர் படையும்–உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்–உலக்கையையும்
வில்லும்–ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்–திரு வாழியையும்
சங்கும–ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு–கோடாலியையும்
வாளும்–நந்தக வாளையும்
படைக்கலம் உடைய–ஆயுதமாக வுடையவனும்
மால்–ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளியிருக்குமிடம்

விளக்க உரை

கலப்பையும் உலக்கையும்- பலராமாவதாரத்திலும், மழு- பரசுராமாவதாரத்திலும் கொள்ளப்பட்ட ஆயுதங்களென்க.
படைக்கலமுடைய= படைகலம், உடைய என்று பிரித்து, (இவற்றை) ஆயுதமாகவும் ஆபரணாமகவுமுடைய என்று முரைக்கலாம்.

அநேக ஜந்ம ஸஞ்சிதமான பாவங்களைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் கழித்து விடும்படியான
பெருமையை யுடையது கங்கை யென்பது பின்னடி. கழுவிடும்- கழுவியிடும்

———-

தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு
மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப் புடைத் திரை வாய் அருந் தவமுனிவர் அவபிரதம் குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-6-

பதவுரை

அரு தவம் முனிவர்–அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை–அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்–அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட–அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்–(யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்
கண்டம் என்னும் கடி நகர் ;
சலம்–(கடலிலுள்ள) ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்–மேகங்களானவை
தலைப்பெய்து–திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி–கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட–சள சள வென்று மழை பொழிய
கண்டு–(அதைக்) கண்டு
மலை–கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்–பெரிய குடையாலே
மறுத்தவன்–(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை–திரு வடமதுரையில்
மால்–விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்–ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளி யிருக்குமிடம்.

விளக்க உரை

முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப் பல விடங்களில் விரித்துரைக்கப்பட்டது.
சலசல – ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர்.

பின்னடிகளின் கருத்து; – தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத் ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து,
அத்திம திநத்தில் அவப்ருத ஸ்நாநம் செய்ய, அநந்தரம் பெருக்காறாப் பெருக்கி யாக பூமிலுள்ள கலப்பை முதலிய
உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம்.
அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாநம்-

——————-

விற் பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி
மற் பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால் புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம்படிய ரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-7-

பதவுரை

அற்புதம் உடைய–ஆச்சர்யமான
ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்–மத நீரும்,
அவர்–அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்–இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்–(அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து–ஒன்று சேர்ந்து
இழீ–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து–(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
வேழத்தை–(குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி–பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்–(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை–தலையை
சாடி–சிதறப் புடைத்தும்
மல்–(சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது–போர் செய்தும்
அரயைனை–உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த–அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்க

விளக்க உரை

எவ்வகையினாலாவது கண்ணபிரானை கலிய நினைத்த கம்ஸன் தான் ஒரு தநுர் யாகஞ் செய்வதாக அதற்கு
அப் பிரானை உறவு முறையாமையால் அழைக்க, அவ்வண்ணமே கண்ணபிரான்
அங்கேற எழுந்தருளிச் செய்த செயல்களைக் கூறுவது, முன்னடி

————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு
நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8-

பதவுரை

நெடியன–நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்–(பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக–திரள் திரளாக
நிரந்தரம்–இடை விடாமல்
ஒழுங்கு விட்டு–நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை -இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்–யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;
திரை பொரு–அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்–கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்–திண்மையான மதிள்களை யுடைய
துவரை–த்வாரகைக்கு
வேந்து–தலைவனும்
தன்–தன்னுடைய
மைத்துனன் மார்க்கு–மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்–பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய–துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை–ராஜ்யத்தை
அருளும்–(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி–(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு–பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்

விளக்க உரை

முன்னடிகளிற் குறித்த வரலாற கீழ் “மெச்சூது சங்கமிடத்தான்” என்ற பாட்டின் உரையிற் காணத்தக்கது.
அரி -ஹரி. கங்கையிற் பற்பல யூபஸ்தம்பங்கள் இடைவிடாது நெடுக அடித்துக்கொண்டு ஓடுமென்பது மூன்றாமடி.
பூபம் – யாகப்பசுவைக் கட்டுந்தறி; வடசொல். நிரந்தரம்- வடசொல்,
இரண்டு கரைபொரு – இரண்டு கரைகளும் ஒருபடிப்பட; இரண்டு கரைகளிலும் என்றாவது

————-

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9-

பதவுரை

தட வரை–(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர–சலிக்கும் படியாகவும்
காணி–பூமியானது
விண்டு இடிய–பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி–(மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி
கரை–கரையிலுள்ள
மரம்–மரங்களை
சாடி–மோதி முறித்தும்
இடம் உடை–இடமுடையத்தான் (விசாலமான)
கடல்–(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க–கலக்கும்படி
கடுத்து–வேகங்கொண்டு
இழி–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;
வட திசை–வடக்கிலுள்ள
மதுரை–ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்–ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டமும்
துவரை–ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி–திருவயோத்தையும்
இடம் உடை–இடமுடைத்தான (விசாலமான)
வதரி–ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய–வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை-

விளக்க உரை

பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது
வந்திழிகிற வேகத்தைச் சொல்லுவன பின்னடிகள். கடுத்து=கடுமை-வேகம்.

————-

மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன் றெழுத்தை
ஏன்று கொண் டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம் புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-10-

பதவுரை

கான்–கறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட–பெரிய
பொழில்–சோலைகளினால்
சூழ்–சூழப் பெற்ற
கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை–அகார, உகார, மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்– (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷராமன பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
மூன்று எழுத்து ஆகி–(மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை–(அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு–(தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய–சிறந்த கருணையையுடையவனும்
மூன்று அடி நிமிர்த்து–அந்த பிரணவத்தை நம பத்தோடும் நாராயண பத்தோடும் நாராயண பத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்–(அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி–(ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்==அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்–(காணும்) சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை

விளக்க உரை

ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் அடைவே, பூ:புவ , ஸுவ: என்ற மூன்று வயாஹ்ருதிகளையும் தோன்றுவித்து,
பொன்வாணியன் பொன்னைப் புடபாகம் வைப்பதுபோல எம்பெருõமன் தனது ஸங்கல்பத்தினால் அவற்றை ஓடவைத்து,
அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற மூன்று அக்ஷரங்களைத் தோன்றுவித்து,
அம்மூன்றையும் ஸந்தி கிராமத்தில் ‘ஓம்’ என்று ஏகாக்ஷரமாக்கி இப்படி ஏகாக்ஷரமாக்கப்பட்ட மூன்றக்ஷமாகிய
பிரணவத்தை நிருத்திக்ரமத்தினால் (அதாவது- ப்ரக்ரியை பண்ணும் மூன்றுபதமாய் மூன்று அர்த்தங்களுக்கு வாசகமாயிருக்கும்
அகார உகார மகாரங்களாகிய மூன்றெழுத்தாகப் பிரித்து
அவற்றுள் அகாரம் ஜீவாத்துமாவுக்குள் பகவச்சேஷத்துவத்தைக் கூறுகையாலும்,
உகரம் அவதாரணாத்தத்தைக்கூறி, அதனால் கீழ்ச்சொன்ன சேஷத்துவம் ஸ்ரீமந்நாராணன் பக்கலிலன்றி வேறுடத்து
வஹிக்கத்தகாதது என்று மிடத்தைத் தெளிவிக்கையாலும்,
மகாரம் “மக-ஜ்ஞாநே” என்கிற தாதுவினின்றும் பிறந்து ஞாலத்தைக் கூறுமதாயும்,
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கா ஆசரயமான ஆத்துமா தேஹம் முதலியவற்றிற்காட்டில் விலக்ஷணன் என்று புலப்படுத்துமதாயு மிருப்பதாலும்,
இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து அநுஸந்திருக்குமலர் பக்கலில் பரமகிருபையைச் செய்தருள்பவனும்,
அந்தப்ரணவத்தை நம பத நாராண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, அம்மூன்று பதங்களிலும்
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களையும் தோன்றுவித்து,
அவ்வாகாரங்களுக்கு எதிர்த்தட்டாகத்தான் சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்பயத்வம் என்கிற மூன்று ஆகாரங்களையுடையது
எம்பெருமாள் எழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னுங் கடிநகராம்.

மூன்றெழுத்தனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி” – பிரித்துப் பார்த்தால் மூன்றெழுத்தாகத் தோன்றும்படியாய்,
ஸ்தூலதர்சநத்தில் ஏகாக்ஷமாகத் தோற்றும்படியாயுள்ள ‘ஓம்’ என்கிற பிரணவத்தை நிர்வாசக்ரமத்தினால்
மூன்றெழுத்தாகப் பிரித்து என்றபடி.
அக்ஷாத்ரயாத்மகமானது பற்றி ‘மூன்றெழுத்ததனால்’ என்றாரென்க.
நிருக்தம்- வேதாங்கங்கள் ஆறனுள் ஒன்று. மூன்றாமடியில், தோன்றி- பிறவினையில் வந்த தன்வினை.

———–

பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11-

பதவுரை

பொங்கு–நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும்
ஒலி–கோபத்தை உடையதுமான
கங்கை கரை–கங்கைக் கரையிலுள்ளதும்
மலி–எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து–திருக் கண்டங் கடி நகரில்
புருடோத்தமன்–புருஷோத்தப் பெருமானுடைய
அடி மேல்–திருவடிகளில்,
வெம்கலி நலியா–கொடிய கலியினால் நலியப் பெறாத
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விருப்புற்ற–ஆசைப் படல்
தங்கிய அன்பால்–நிலை நின்ற பக்தியினால்
செய்–அருளிச் செய்த
தமிழ் மாலை
தங்கிய–நிலை நின்றிருக்கப்பெற்ற
நா உடையார்க்கு–நாக்கை உடையவர்களுக்கு
கங்கையில்–கங்காநதியில்
குளித்து–நீராடி
திருமால்–ஸ்ரீயபதியினுடைய
இணை–ஒன்றொடொன்றொத்த
கழல் கீழே–திருவடிகளின் கீழே
இருந்த கணக்கு ஆம்–நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும்.

விளக்க உரை

இதனால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. நலிவு- துன்பம்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: