ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-5—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாளென்று மயங்கி மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசு வாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரமன்றே–4-5-1-

பதவுரை

ஆசை வாய்–(தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற–போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி–நெஞ்சை யுடையாராய் கொண்டு
என் அன்னை–என்னுடைய தாய்
என் அத்தன்–என்னுடைய தகப்பன்
என் புத்திரர் என்னுடைய பிள்ளைகள்
என் பூமி–என்னுடைய நிலம்
வாச வார்–பரிமளம் வீசுகின்ற
என் குழளான–கூந்தலை யுடையவளான என் மனைவியான
என்று–என்று சொல்லிக் கொண்டு
மயங்கி–(அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து
(பழூதே பல பகலும் போக்கினாலும்)
மாளும் எல்லைக் கண்–சரம ஸமயத்தில்
வாய் திறவாதே–வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல்
கேசவா என்றும்
கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்–புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்–‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்
பேசுவார் அவர்–சொல்லுவார்கள்
எய்திய–அடையக் கூடிய
பெருமை–பெருமைகளே
பேசுவான் புகில்–பேசப் புக்கால்
நம் பரம் அன்று–நம்மால் பேசித் தலை கட்டப் போவது

விளக்க உரை

அஹங்கார மமகாரங்களை வளரச் செய்யக் கடவதான ஸம்ஸாரத்தில் ஆழங்காற்பட்டுப் பழுதே பல பகல்களைப் போக்கினாலும்,
உயிர் முடியுமளவிலாகிலும் அந்த ஸம்ஸாரத்தில் நெஞ்சைச் செலுத்தாது எம்பெருமான் திருநாமங்களை வாய்விட்டுச் சொல்லுமவர்கள்
மேலுலகத்திற் பெறும் பரிசுகளைச் சொல்லித் தலைக்கட்ட யாம் வல்லரல்லோ மென்கிறார்.
வாழ்நாள் முழுவதையும் பகவந்நாம ஸ்ங்கீர்த்தநத்தாலேயே போக்கினவர்கள் பெறும் பெருமையை எம் பெருமான்றானும்
பேசித் தலைக்கட்டவல்லனல்லனென்பது வெளிப்படை
“என்று மயங்கி வாய் திறவாதே மாளுமெல்லைக்கண்” என இயைத்து, அம்மா, அண்ணா, பிள்ளை, பூமி, பெண்டாடி என்று
சொன்னதும் மூர்ச்சையடைந்து, அவரகள் பேரைச் சொல்லி யழைக்கவும் மாட்டாமல் மாள்வதற்குள் என்று பொருளுரைப்பாருமளர்.

———–

சீயினால் செறிந்தேறிய புண் மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும்
ஈயினால் அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே–4-5-2-

பதவுரை

சீயினால்–சீயாலே
செறிந்து எறிய–மிகவும் நிறைந்த
புண் மேல்–புண்ணின் மேல்
செற்றல் ஏறி–ஈ இருந்து முட்டை யிட்டு
குழம்பிருந்து–அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில்
எங்கும்–உடல் முழுதும்
ஈயினால்–ஈயாலே
அரிப்புண்டு–அரிக்கப்பட்டு
மயங்கி–(வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து
எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்–சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே
வாயினால்–வாயாலே
நமோ நாராணா என்று–‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு
மத்தகத்திடை–உச்சியிலே
கைகளைக் கூப்பி–அஞ்ஜலி பண்ணி
(சரீர வியோகமான பின்பு)
போயினால்–(பரம பதம்) போய்ச் சேர்ந்தால்
பின்னை–பிறகு
பிணைக் கொடுக்கிலும்–(நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றாலும்.
என்றும்–ஒருகாலும்
போக ஒட்டார்–(இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள்

விளக்க உரை

“தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயுநரம்புஞ் செறிதசையும் வேண்டாநாற்றமிகு முடலை” என்ற ஐயங்கார் பாசுரத்தின்படி-
பற்பல அஸஹ்யங்களுக்கு ஆகாரமான இவ்வுடம்பின் வேதனைக் கனத்தினால் மயக்கமுற்று மரணமடைவதற்கு முன்,
வாயாலே திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்தித்துக் கொண்டு முடிமேல் கைகூப்பித் தொழுமவர்கள்
பரம பதம்போய்ச் சேருவர்களென்பதில் இதையும் ஐயமில்லை; அப்படி அவர்கள் அங்குப் போய்ச் சேர்ந்த பின்னர்
“இவர்கள் இரண்டு நாளைக்குப் பூமண்டலத்தில் இருந்து வரட்டும்; மீண்டு வருவர்களோ என்று சில நித்யஸூரிகள்,
தங்களை ஈடு கட்டினாலும், அவர்களை அவ்விடத்திலிருந்து இந்தப் பிரகிருதி மண்டலத்துக்கு அனுப்பவல்லார் யாருமில்லையென்கிறார்;
இதனால் ஒழிவில் காலமெல்லா முடனாய்மன்னி. வழுவிலா வடிமை செய்யப்பெறுவர் என்றவாறு.
“இத்தால், கர்மமடியாக மீட்சியில்லை யென்றபடி” என்ற வியாக்கியாந வாக்கியமும் அறியத் தக்கது.

புணைக் கொடுக்கிலும் என்றும் பாடமென்பர் அது, மோனை இன்பத்துக்குச் சேர்ந்திருக்கும்.
பிணைக் கொடுத்தல் ஈடுகாட்டுதல் (ஜாமீன்தார்ராய் நிற்றல்)
போகவொட்டாரே என்ற வினைக்கு எழுவாய் வருவிக்க வேண்டும்
பரமபத நாதனுக்கு மந்திரிகளாயிருப்பவர்கள் போக வொட்டார் என்னலாம்.

————-

சோர்வினால் பொருள் வைத்த துண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வினாவிலும் வாய் திறவாதே அந்தக் காலம் அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-3-

பதவுரை

சோர்வினால்–களவு வழியாலே
பொருள் வைத்தது–(எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று–(அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும் இருந்து–சூழ்ந்து கொண்டு
ஆர்வினாவிலும்–எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும்
வாய் திறவாதே–(அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி.
அந்தக் காலம்–மரண காலமானது
அடைவதன் மூலம்–வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது–‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்–ஒரு ஸந்நிதியை
அமைத்து–ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்–‘திருமால்’ என்கிற
தெய்வத்தை–தேவதையை
நாட்டி–எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம்மென்பது–பக்தி என்கிற
ஓர் பூ–ஒரு புஷ்பத்தை
இட வல்லார்க்கு–ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவதண்டத்தின்–யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கலாகும்.

விளக்க உரை

துணையுஞ்சார்வுமாகுவார்போற் கற்றத்தவர் பிறரும், அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள் போற் சுவைப்பர்” என்றபடி
இவன் கையிலிருந்தவற்றை ஒன்றுமிகாதபடி பறித்துக்கொண்ட பந்துக்கள் வந்து சூழ்ந்து கொண்டு,
“எங்களுக்குத் தெரியாமல் எந்த மூலையிலாவது ஏதாகிலுமொரு பொருள் வைத்துண்டாகில், அதை எமக்குச் சொல்லு” என்று
பலவாறு நிர்ப்பந்தித்துக் கேட்டால், அவர்களுகுக்கு மறமொழிச் சொல்லவும் மாட்டாதபடி மரணகாலம் வந்து கிட்டுவதற்கு முன்னமே,
எம்பெருமானை நெஞ்சில் நிறுத்தி அன்பு பூண்டிருக்க வல்லவர்கள், யமகிங்கரர்களுடைய ஹிம்ஸைகளுக்குத் தப்பிப் பிழைப்பர்களென்கிறார்.

சோர்வு- மறதியும், களவுமாம்.
ஆர்வினாவிலும்- இளையாள் கேட்டாலும் என்க.
அரவதண்டத்தில்- ஐந்தாம் வேற்றுமை; ஏழாம் வேற்றுமை யன்று.
முதலடியில் “கற்றுமிருந்தார்” என்ற பாடமுமுண்டு

—————-

மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி
காலுங் கையும் விதிர் விதிர்த் தேறிக் கண்ணுறக்க மாவதன்
முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை
உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே–4-5-4-

பதவுரை

மேல் எழுந்தது ஓர் வாயு–ஊர்த்துவச்ஸமானது
கிளர்ந்து–மேலெழுந்ததனால்
மேல் மிடறு–நெஞ்சானது
உள் எழ வாங்கி–கீழே இடிந்து விழப் பெற்று
காலும் கையும்–கால்களும் கைகளும்
விதிர் விதிர்த்து ஏறி–பதைபதைக்கப் பெற்று
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்–தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,
மூலமாகிய ஒற்றை எழுத்தை–(ஸகலவேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை
மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி–உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து
வேலை வண்ணனை–கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை
மேவுதிர் ஆகில்–ஆச்ரயித்தீர்களாகில்
விண் அகத்தினில்–ஸ்ரீவைகுண்டத்தில்
மேவலும் ஆம்–அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம்.

விளக்க உரை

“ உயிர் உடலை விட்டு நீங்குவதற்குப் பூர்வக்ஷணத்திற் பிறக்கும் விகாரங்கள், ஒன்றரையடிகளாற் கூறப்படுகின்றன;
அவையாவன – மேல்முகமாக – வாஸம் (மூச்சுக்) கிளம்புதலும் நெஞ்ச இடிந்து விழுதலும், கைகால்கள் பதைபதைத்தலுமாம்.
இப்படிப்பட்ட விகாரங்களை யடைந்து மாளுவதற்கு முன்னமே, ஸகல வேத ஸாரமாகிய ஓம் என்னும் பிரணவத்தை
உச்சரிக்க வேண்டிய முறைவழுவாது உச்சரித்து எம்பெருமானை இறைஞ்சினால்.
களிப்புங் கவர்வுமற்றுப் பிறப்பும் பிணியும் பிறப்பற்று, ஒளிக்கொண்ட சோதியுமாய்
அடியார்கள் குழாங்களை உடன்கூடப் பெறலாமென்கிறார்.

“மேலெழுவதோர்வாயு” என்ன வேண்டுமிடத்து, “மேலெழுந்ததோர் வாயு” என்றது – வழக்குபற்றிய வழுவமைதியாம்.
“மேல்மிடற்றினை” என்றவிடத்து, இன், ஐ-அசைச்சொற்கள்: அன்றி, உருபுமயக்கமுமாம்.
விதிர் விதிர்த்தல்- ‘படபட’ என்று துடித்தல்:
(மூலமாகிய இத்யாதி.) (யமகிங்கார்களைக் கண்ட பயத்தினால்) பிரணவத்திற்கு ஒரு மாத்திரையும் உண்டு,
இரண்டு மாத்திரையும் உண்டு, மூன்று மாத்திரையும் உண்டு,
ஒன்று இரண்டு மாத்திரைகளைடையதாகப் பிரணவத்தை உச்சரிக்குமவர்களுக்கு க்ஷுத்ரபல ப்ராப்தியுள்ளது;
அதனை மூன்று மாத்திரையுள் ளெழவாங்கும் அவர்களுக்கே பரமதப்ராப்தி யுண்டு என்பதை
ஸ்ரீபாஷ்யத்தில் ஈக்ஷதிகர்மாதி கரணத்தில் தெளியக் காணலாம்:
மூன்று மாத்திரைகளிற் குறைவுபடாமல் உச்சரித்தலே மூன்று மாத்திரையுள்ளெழவாங்குதலாம்.

————-

மடிவழி வந்து நீர் புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்க மாவதன் முன்னம்
தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசனென் றேத்த வல்லீரே–4-5-5-

பதவுரை

மடி புலன் வழி வந்து–லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர–மூத்திர நீர் பெருகவும்
வாயில்–வாயிலே
அட்டிய–பெய்த
கஞ்சியும்–பொரிக் கஞ்சியும்
கண்டம் அடைப்ப–கழுத்தை அடைக்கவும்
மீண்டும்–மறுபடியும்
கடை வழி–கடை வாய் வழியாலே
வார–(அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும்
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்
இருடீகேசன் என்று–(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)
ஏத்த வல்லீர்–ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே!
நாய்கள்–(யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை
உம்பை–உங்களை
கவரா–கவர மாட்டா;
(யம கிங்கரர்களும் )
உம்மை–உங்களை
சூலத்தால்–சூலாயுதத்தால்
பாய்வதும் செய்யார்–கத்தவும் மாட்டார்கள்;
நீர்–நீங்கள்
இடை வழியில்–நடு வழியில்
கூறையும்–வஸ்திரத்தையும்
இழவீர்–இழக்க மாட்டீர்கள்

விளக்க உரை

மரண காலம் கிட்டும்போது, கண்டவிடமெங்கும் யமகிங்கரர்கள் தென்படுவதாக நினைத்து, அதனாலுண்டான
அச்சத்தினால் கிடந்தபடியே மூத்திரம்விட்டுக்கொள்ளுவார்கள்;
வாயில்விட்ட பொரிக்கஞ்சி உன் இழியமாட்டாது கழுத்தையடைத்துக் கடைவாய் வழியாகப் பெருகும்;
இப்படிப்பட்ட அவஸ்தைகள் பட்டுக்கொண்டு கிடக்கும்போதே, எம்பெருமான் பேர் சொல்லக் காலம் வாய்க்காது மாளப்பெற்றால்,
யமலோகம் போக நேர்ந்து, வழியிடையிற் செந்நாய்களால் துடை கவ்வப்பட்டும், யமகிங்காரர்களினால் சூலங்கொண்டு குத்தபபட்டும்,
அரையிற் கூறையை இழக்கப்பெற்றும், இப்படி பல துன்பங்கள் படவேண்டி வருமாதலால்,
அவற்றுக்கொல்லம் இடமறும்படி முந்துறமுன்னமே எம்பெருமாளை ஏத்தப்பெறில் இடர்பாடு ஒன்றும் பட நேராது என்கிறார்.

மடிப்புலன் என்று – ஆண் குறியைக் குறித்தவாறு – அச்சத்தினால் மூத்திரம் விட்டுக்கொள்ளுதல் அனைவர்க்கும் அநுபவத்திற்கண்டதாகும்.
கவரா – பலவின்பாரெதிர்மறைவினைமுற்று.
சூலம் -ஈட்டி கூறையிழத்தல் என்பது – யாம்ப யாதகைகளில் ஒன்றாம்.
“இருடீகேசனென்றேத்தவல்லீரேல்” என்ற சிலர்க்குப் பாடமாம்.

————

அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டுலவும் கடற் பள்ளி மாயனை மது சூதனை மார்பில்
தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்கு என்றும் சாதிக்க லாமே–4-5-6-

பதவுரை

அவை ஐந்தும்–பஞ்ச பிராணன்களும்
அங்கம் விட்டு–உடலை விட்டு
அகற்றி–அகன்று போக
மூக்கினில்–மூக்கில் (கையை வைத்து)
ஆவி சோதித்த பின்னை–‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு
சங்கம் விட்டு–(அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,
(அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை ஏன்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக)
கையை மறித்து–கையை விரித்துக் காட்டி
பைய–மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம்–(தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம்–கப்பல்களானவை
விட்டு உலவும்–இடை விடாமல் திரியப் பெற்ற
கடல்–கடலில்
பள்ளி–பள்ளி கொள்பவனும்
மாயனை–ஆச்சரிய சக்தி யுத்தனும்
மது சூதனை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை
மார்பில்–ஹ்ருதயத்தில்
தங்க விட்டு வைத்து–அமைத்து,
ஆவது ஓர் கருமம்–ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை)
சாதிப்பார்க்கு–ஸாதிக்குமவர்களுக்கு
என்றும்–எந்நாளும்
சாதிக்கலாம்–பலாநுபவம் பண்ணப் பெறலாம்.

விளக்க உரை

பிராணம், அபாதம், வயாநம், உதாகம், ஸமாநம் என்ற பஞ்ச ப்ராணன்களும் உடலை விட்டொழிந்த பின்பு,
அருகிலுள்ள பந்துக்கள் அந்தப் பிணத்தின் மூக்கில் கையைவைத்துப் பார்த்து ‘ஆவி போயிற்று’ என்று உறுதியாகத்
தெரிந்து கொண்டு அவ்வுடலில் ஆசையை விட்டிட்டு, யாரேனும் வந்து ‘அவர்க்குத் திருமேனி எப்படியிருக்கின்றது?’ என்று கேட்கில்
அதற்கு அவர்கள் வாய் விட்டு மறுமொழி சொல்லமாட்டாமல், ‘உயிர் போயிற்று’ என்பதைக் காட்டும்படி கையை விரித்துக் காட்டிவிட்டு,
ஒருமுலையிலிருந்து கொண்டு தலை கவிழ்ந்து அழும்படியான தசை நேரிடுவதற்கு முன் , க்ஷீராப்தி சாயியான
எம்பெருமானை நெஞ்சால் நினைத்துக் கொண்டு ஸ்ரூபமான ப்ரபத்தியை அநுஷ்டிப்பவர்கள், எந்நாளும் அநுபவிக்கக் கூடிய
பேற்றைப் பெறுவர்களென்கிறார்.
(அகற்றி) ‘அகல’ என்னும் செயவெனெச்சத்தின் திரிபாகிய ‘அகன்று’ என்ற வினையெச்சம் பிரயோகிக்க வேண்டுமிடத்து, அகற்றி என்றார்;
தன் வினையில் வந்த பிறவினை; “குடையுஞ் செருப்புங் சூழலுந் தருவித்து” என்றது போல
மூக்கினிற்கையை வைத்து ஆவியைச்சோதிப்பது, இப்போதும் வழக்கத்திலுள்ளமை அறிக.
சங்கம் – ஆசைக்கும்பெயர்: அன்றி, வடசொற்றிரிபாகக் கொண்டு, கூட்டமென்ற பொருள் கொண்டால்,
ஒவ்வொருவரும் தனித்தனியே பிரிந்துபோய் என்று கருத்தாம்.

————-

தென்னவன் தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன் னாக இழுப்பதன் முன்னம்
இன்னவன் இனையானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி
மன்னவன் மது சூதன னென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே–4-5-7-

பதவுரை

செப்பம் இலாதார்–ருஜுவான செய்கை இல்லாதவர்களான
தென்னவன்–தமர் யம கிங்கரர்கள்
சே அதக்குவார் போல–எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல
புகுந்து–வந்து,
பின்னும்–அதற்கு மேல்
வல் கயிற்றால்–வலிவுள்ள பாசங்களினால்
பிணித்து–கட்டி
ஏற்றி–அடித்து
பின் முன் ஆக–தலை கீழாக
இழுப்பதன் முன்னம்–(யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே
மன்னவன் (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்
இன்னவன் இனையாள் என்று சொல்லி–இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று
(அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி)
எண்ணி–(அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி
உள்ளத்து இருள் அற–ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி
நோக்கி–(எம் பெருமானை) ஸாஷாத்கரித்து,
மதுசூதனன் என்பார்–(தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்
வான் அகத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்றாடிகள் தாம்–(எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்

விளக்க உரை

ஈர நெஞ்ச, இளநெஞ்சு அற்றவர்களான யம கிங்கார்கள், தயா தாக்ஷிண்யமின்றி எருதுகளை அதக்குவார் போல வந்து கட்டியடித்து,
செந் நாய்களை இழுத்துக் கொண்டு போவது போலத் தலைகீழாக இழுத்துக்கொண்டு யமலோகத்துக்குப் போம்படியான
துர்த் தசை நேரிடுவதற்கு முன்னமே, அந்த யமனுக்கும் தலைவனான எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்பாவங்களை
வாயாற் சொல்லியும் நெஞ்சால் நினைத்தும், இவ் வகைகளாலே அவ் வெம்பெருமாளை ஸாக்ஷத்கரிக்கப் பெற்று,
மேலுள்ள காலத்தையும் திருநாம ஸங்கீர்த்தநத்தினாலேயே போக்க வல்லவர், பரமபதம் போய்ச் சேர்ந்து,
நித்ய ஸூரிகளுடைய கைங்கரியத்தைத் தாம் பெறுவதற்கு எம்பெருமான்னோடு மன்றாடப் பெறுவர்கள் என்கிறார்;
எனவே, பரமபத ப்ராப்தியில் ஸந்தேஹமில்லை யென்றவாறு
தென்னவன் – தக்ஷிணதிக்குக்குத் தலைவன்,
யமன் செப்பம் – செவ்வை ஏற்றுதல் -அடித்தல்
“நாமத்தென்னையனேக தண்டஞ்செய்வதா நிற்பர் நமன்றமர்கள்”. என்பதை நினைக்க
(வானகத்து மன்றாடிகள்). மன்றாடுதல்- இரந்துகேட்டடல். “வானகம் மன்றத்து ஆடிகள்”. என இயைத்து,
பரம பதத்திலுள்ள நித்ய ஸூரி ஸபையில் ஸஞ்சரிக்கப் பெறுவார்கள் என்று பொருளுரைப்பாருமுளர்.

——————

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்துவமுடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தரானால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே–4-5-8-

பதவுரை

(மரணமான பின்பு)
உற்றார்கள்–பந்துக்களானவர்கள்
கூடி கூடி இருந்து–திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு
குற்றம் நிற்க–(செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு)
நற்றங்கள்–(சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை
பறைந்து–சொல்லி,
பாடிப் பாடி–(அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி
ஓர் பாடையில் இட்டு–ஒரு பாடையிலே படுக்க வைத்து
கோடி மூடி–வஸ்திரத்தை யிட்டு மூடி
நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல–நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,)
எடுப்பதன் முன்னம்–(சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே,
கௌத்துவம்–கௌஸ்துபத்தை
உடை–(திரு மார்பிலே) உடைய
கோவிந்தனோடு–எம்பெருமன் பக்கலில்
கூடி ஆடிய–சேர்ந்து அவகாஹித்த
உள்ளத்தர் ஆனால்–நெஞ்சை யுடையவர்களாக ஆனால்,
குறிப்பு இடம்–யம லோகத்தை
கடந்து–(அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து)
உய்யலும் ஆம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்.

விளக்க உரை

உலகத்தில் ஒருவன் மரணமடைந்தானாகில், அவனுடைய சுற்றத்தார்கள் அங்குக் கூட்டங்கூட்டமாக இருந்து கொண்டு,

அப்பா! நீ-
காலை யெழுந்து குளஞ்சென்று நீராடி மாலை வணங்கி மனமகிழ்ந்த மகனன்றோ?
பாகவத பாரதங்கள் பாஷ்யங்கள் பளபள வென்றோதி யுணர்ந்திவ் வுலகில் உகந்துய்ந்த மகனன்றோ
சவை நடுவிற் சதிராகச் சென்று நீ வாய் திறந்தால் கவிகளெல்லா மாந்ந்தக் கண்ண நீர் சொரியாரோ?
சேலத்துச் சேலையை நீ சீருறவே யுடுத்தக்கால் ஞாலத்து மாதரெல்லாம் நெஞ்சுருகி வையாரோ?
அடியிணையு மங்கைகளு மகல்மார்புமந் தோளும் முடி யணியு மலரழகும் ஆர்க்கேனும் வாய்க்குமோ?
இரந்தவர்கட்கு எப்பொருளும் இல்லை எனச் சொல்லாதே சுரந்து நீ பெற்ற புகழ் சொல்லத்தான் முடியுமோ?
வெள்ளென்ற வேஷ்டியோடும் விளங்கு புரி நூலினொடும் மெள்ள நீ புறப்பட்டால் மன்மதனும் மறையானோ?

என்றாற்போல, அவன் விஷயமாகச் சில நன்மைகளை யேறிட்டுப் பாட்டுப் பாடிப் பின்பு பாடையிற் படுக் கவைத்து
அதனை வஸ்திரத்தினால் மூடிக்கட்டிக் காட்டுக்கெடுத்துக் கொண்டு போவார்கள்; பின்பு பகவந் நாம ஸங்கீர்த்தநத்துக்கு அவகாசம்
பெறாது யமகிங்கரர்கையில் அகப்பட்டுத் திகைக்கவேண்டி வருமாதலால், மரண காலத்துக்கு முன்னமே
எம்பெருமான் பக்கலில் நெஞ்சைச் செலுத்தினால் யமலோகத்துக்குத் தப்பிப்பிழைக்கலா மென்றவாறு.

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து – துஷ்கர்மாக்கள் எத்தனை செய்யப்பட்டிருந்தாலும், அவற்றிலொன்றையுஞ் சொல்லமாட்டார்கள்;
ஸத்கர்மம் ஒன்று செய்யப்பட்டிருப்பினும், அதனைப் பலவாகப்பன்னிப் பகர்வர் என்க.
(நரிப் படைக்கொரு பாகுடம்போலே.) வீட்டிலிருந்து பாடையை மூடிக்கொண்டு போவதைப்பார்த்தால், சுடுகாட்டிலுள்ள
நரிப்படைகளுக்கு உணவாம்படி பாகுக்குடங்கொண்டு போகிறார்களோ என்று நினைக்கும்படியாயிருக்குமென்க;
அன்றி, ‘யமலோகத்திற் பாபிஷ்டர்களை நலிவதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள நரிப்படைகளுக்குப்
பாகுக்குடம் கொண்டுபோவதுபோல’ என்றும் உரைக்கலாமென்பர் சிலர்;
பாகு – குடம், பாகுடம், தொகுத்தல் விகாரம்: “ஒண்சங்கதை” போல.
இனி, பாகுடம் என்கிறவிது-வடசொல்லின் விகாரமென்றுங்கொள்ளலாம்;
அப்போது, நரிப்படைகளுக்குப் பாத காணிக்கை கொண்டு போவது போல என்பது பொருள்;
குறிப்பிடம்- பாவங்களின் பயனை அநுபவிப்பதற்கென்று குறிக்கப்பட்ட இடம்; எனவே, யமலோகமாயிற்று.
கடத்தல் – அங்குச் செல்லாதொழிதல்.

———-

வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே–4-5-9-

பதவுரை

வாய்–வாயானது
ஒரு பக்கம் வாங்கி வலிப்ப–(வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும்
வார்ந்த நீர்–பெருகா நின்ற நீரை யுடையதும்
குழி–உள்ளே இடிய இழிந்ததுமான
கண்கள்–கண்ணானது
மிழற்ற–அலமந்து நிற்கவும்,
ஒரு பக்கம்–ஒரு பக்கத்தில்
தந்தை–தகப்பானரும்
தாரமும்–மனைவியும் (இருந்து கொண்டு)
அலற்ற–கதறி அழவும்
ஒரு பக்கம்–மற்றொரு பக்கத்திலே
தீ–நெருப்பானது
சேர்வதன் முன்னம்–(மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே
செம் கண் மாலொடும்–புண்டரீகரக்ஷனான எம்பெருமானை
சிக்கன சுற்றம் ஆய்–நிருபாதிக பந்துவாகக் கொண்டு
ஒரு பக்கம்–அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய்
நிற்க வல்லாருக்கு–நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு
அரவ தண்டத்தில்–யம தண்டனையில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கப் பெறலாம்.

விளக்க உரை

மரண ஸமயத்தில் வாயு விகாரத்தாலே வாய் ஒருக்கடுத்து வலிக்கும்; நெடு நாளாக ஆஹாரமற்றுக் கிடப்பதானல்
உள்ளிழந்துள்ள கண்கள் மருள மருள விழிக்கும்; இவ்விகாரங்களைக்கண்டு தாயர், தந்தையர், மனைவியர் முதலானார்
மூலைக் கொருவராக உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுவார்கள்; இப்படிப்பட்ட ஸந்நிவேசத்தில், உயிர் போயிற்றென்று
சிலர் வந்து மார்பில் நெருப்பைக் கொட்டுவார்கள்; ஆன பின்பு, சரீரம் வலிவுற்றிருக்கும் காலங்களைப் பாழே கழித்தவர்கள்
சரம ஸமயத்திற்படும்பாடு இதுவாகையால், அப்போது பகவந் நாம ஸங்கீர்த்தத்துக்கு அவகாசம் பெறாமல் யம கிங்கரர்களின்
நலிவுக்கு ஆளாக வேண்டி வரும்; ஆதலால் சரீரம் கட்டுக் குலைவதற்கு முன்னமே எம்பெருமான்றன்னையே
ஸர்வ வித பந்துவுமாகப் பற்றப் பெற்றால் யம தண்டனைக்குத் தப்பிப் பிழைக்கலா மென்றவாறு.

தாரம் –வடசொல விகாரம் சிக்கன நிற்க வல்லாருக்கு என்று இயைப்பினுமாம்

———

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல்
பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன்
சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10-

பதவுரை

செத்துப் போவது ஓர் போது–இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்–(கடுஞ்) செயல்களை
நினைத்து–நினைத்து
தேவ பிரான் மேல்–தேவ பிரான் பக்கலில்
பத்தர் ஆய்–அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்–(பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை–அடையக்கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோள்–(ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
செய்யும்–(யம படர்களால்) செய்யப் படுகிற
சித்தம்–(தம்முடைய) நெஞ்சை
திருமாலை–திருமால் திறத்தில்
நன்கு–நன்றாக
ஒருங்கி–ஒருபடுத்தி
செய்த–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
இவை பத்தும்–இப் பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி–(ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப்படப் பெற்று
திருமால் மேல்–திருமால் பக்கலிலே
சென்ற–குடி கொண்ட
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–உடையராவர்.

விளக்க உரை

‘மரண காலத்தில் யம படர்கள் பொறுக்க வொண்ணாதபடி நலிவர்களே!’ என்று நினைத்துத் தீ வழியிற் செல்லாமல்
எம்பெருமான் பக்கலில் அன்பு பூண்டிருந்து, பின்பு இறப்பவர்கள் பெறும் பேற்றைக் குறித்துப் பெரியாழ்வாரருளிச் செய்த
இப் பாசுரங்களை ஓத வல்லவர்கள், எம்பெருமானிடத்துக் குடிகொண்ட நெஞ்சை யுடையராகப்
பெறுவர்களென்று பலஞ்சொல்லித் தலைக் கட்டியவாறு.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: