ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-4—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார்
தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1-

பதவுரை

நாவ காரியம்–நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்–(ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்–நாடோறும்
விருந்து ஓம்புவார்–(ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து–பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்–வேதங்களை
பயின்று–ஓதிக் கொண்டும்
வாழ்–வாழுமிடாமன
திருக்கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்–பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்–காரியங்களையும்
திருத்தும்–செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை–(எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத–நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை-அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்–எதுக்காக
படைத்தான் கொல் ஓ–ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)

விளக்க உரை

பொய் பேசுகை, பிறரை புகழுகை முதலிய துஷ்கர்மங்களில் அந்வயமற்றவரும், உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும்
அதிதிகளைப்போல் ஆதரிப்பவரும், பகவதாராதநம, வேதாத்யயநம் முதலிய ஸத்கர்மங்கள் செய்துகொண்டு
போது போக்குமவர்களுமான பரமபாகவதர்கள் வாழுமிடமாகிய திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாவியாத
பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ? அறியோம் என்கிறார்.
தேவர் + காரியம், தேவ காரியம்; திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை முதலியன கொள்க.
மூவர் காரயிமாவது- மதுகைடபர்கள் கையில் பறிகொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரியம்;
குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கியருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்;
மஹாபலி போல்வார் கையிற் பறிகொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம்.
திருத்துகை- ஒழுங்குபடச் செய்கை. சிந்தியாத- வட சொல்லடியாப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம். பாவகாரி-

———-

குற்ற மின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனு கூலராய்
செற்ற மொன்று மிலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி யேழுல குண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந் தார்களே-4-4-2-

பதவுரை

குற்றம் இன்றி–ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்–(சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி–வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு–(தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்–(கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத–பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு–ஸப்த லோகங்களையும்
துற்றி–ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட–அமுது செய்தருளினவனும்
தூ–பழிப்பற்ற
மணி–நீல மணி போன்ற
வண்ணந்தன்னை–நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்–வணங்காதவர்
பெற்ற (தங்களைப்) பெற்ற–
தாயர்–தாய்மாருமடய
வயிற்றினை–வயிற்றை
பெரு நோய் செய்வான்–மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்–பிறந்தார்

விளக்க உரை

உலகத்திற் பிறந்த பிள்ளைகள் திருக் கோட்டியூ ரெம்பெருமானை வணங்கினால் தான், அவர்களைப் பெற்ற தாய்மார் பேறு
பெற்றவராவார்கள்; அல்லாவிடில், இப் பிள்ளைகளால் அந்தத் தாய்மார்கட்கு ஒருவகைப் பயனுமில்லாமல்,
பிரஸவ காலத்திற் பட்ட வேதனையே மிகுந்ததா மென்றவாறு.

———–

வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர்த் திரு மாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்து கின்றார்களே–4-4-3-

பதவுரை

நல் வண்ணம்–நல்ல நிறத்தை யுடைய
மணியும்–ரத்நங்களையும்
மரகதமும்–மரகதகங்களையும்
அழுத்தி–(ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்–ஒளி விடா நின்றுள்ள
திண்ணை–திண்ணைகளாலே
சூழ்–சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்–திருமாமகன் கொழுநனுடைய
திரு நாமங்கள்–திரு நாமங்களை
எண்ண–(ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட–படைக்கப் பட்ட
விரல்களால்–விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்–க்ஷண காலமும்
எண்ண இலாது–எண்ண மாட்டாமல்
போய்–புறம்பே சென்று
உண்ணக் கண்ட–(சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்–தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு–அசுத்தமான வாயிலே
கவளம்–சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே–(அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே!
(இதென்ன கொடுமை.!)

விளக்க உரை

உலகத்தில் மனிதர்கட்குக் கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே
உபயோகப் படுத்துவதற்காகவேயாம், அதற்கிணங்கக் கை விரல்களால் திருகோட்டியூ ரெம்பெருமானுடை
திருநாமங்களை எண்ணுகையும், வாயினால் அவற்றைச் சொல்லுகையிமே யாயிற்றுத் தகுவது!:
இப்படி யிருக்க சில பாவிகள் அக் காரியங்களிலே அக் கரணங்களைச் செலுத்தாது, வாயினால் தின்ன வேண்டிய தென்றும்,
கை விரல்களினால் சோற்றுக் கபளங்களை யெடுத்து அவ் வாயினுள் விடவேணுமென்றும் இவ்வளவே
தமக்குக் காரியமாக ஏற்படுத்திக் கொண்டன? ஈதென்ன கொடுமை! என்று உள் வெதும்புகின்றனர்.
ஒரு காலாகிலும் அக் கரணங்களைக் கிரமமான விஷயத்தில் உபயோகித்தால் குறையறும்,
அதுவுமில்லையென்பார், இறைப்பொழுதும் என்கிறார்.

————–

உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந் தேறும் செங்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தனதாங் கொலோ–4-4-4-

பதவுரை

உரகம் மெல்–திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்–படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை–திருக் கையில் உள்ள
சங்கம் போல்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்–மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்–ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்–செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை–(தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு–நாவினால்
மானிட சாதியர்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்–குடிக்கின்ற
நீரும்–தண்ணீரும்
உடுக்கும்–உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்–வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ–பாவஞ்செய்தனவோ தான்!:

விளக்க உரை

“ நாமம், ரூபம் என்ற இரண்டையுமுடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் அதிஷ்டான மா யிருக்கின்ற னென்பதைப்
பிரமாண பலத்தினாற் கொள்ள வேணும்; தும்பு முதலிவற்றில் உள்ள ஜீவ அதிஷ்டான நத்தை நாம் காணாதொழிவதற்குக் காரணம் –
நமது கருமமடியாகப் பிறந்துள்ள ஞானச் சுருக்கமேயாம்;
ஆகையாலே, “பருகு நீரு முடுக்குங் கூறையும் பாவஞ் செய்தனதான் கொலோ” என்பது பொருந்துமென்க.
உலகத்தில் ஒருவன் நிஹீந புருஷனுக்கு ஆட்பட்டானாகில், அவன் நன்மை யியழந்து தீமையையே பெறுவதும்.
விலக்ஷண புருஷனுக்கு ஆட்பட்டவன் தீமையைத் தவிர்த்து நன்மையையே பெறுவதும் சாஸ்திரங்களிற் கை கண்ட அர்த்தமாகும்;
அப்படி தீமைக்கு ஹேதுமான நிஹீந புருஷ சேஷத்துவம் நேருவதற்குக் காரணம் அவனுடைய பாபமே யென்பதும் சாஸ்திர ஸித்தம்.
ஆனது பற்றி திருக்கோட்டியூரெம்பெருமானை அநுஸந்திக்க மாட்டாத நிஹீந புருர்களுக்குச் சேஷப்பட்ட
பருகு நீரும் உடுக்குங்கற்றையும் பாவம் செய்தனவோ தான்! என்கிறார்.

மிகவும் பெறுவதற்கரிய மநுஷ்ய ஜந்மத்தைப் பெற்று வைத்தும் அதன் பயனை யிழப்பதே என்ற
வருத்தந் தோற்றக் கூறுகின்றார் – மானிட சாதியர் என்று.

செந்தாமரை மலர்களின் (வெளுத்த) அன்னப் பறவைகள் இருப்பது எம்பெருமான் திருக் கையில் பாஞ்ச சன்னியம்
இருப்பது போலும் என முன்னடிகளில் உத்ப்ரேக்ஷித்தவாறு.

—————

ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடங் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்க ளுண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே–4-4-5-

பதவுரை

இள–இளமை பொருந்திய
வாளைகள்–‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்–ஆமைகளினுடைய
முதுகத்திடை–முதுகின் மேல்
குதி கொண்டு–குதித்துக் கொண்டும்
தூ மலர்–நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்–உழக்கிக் கொண்டும்
தீமை செய்து–(க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு–விளையாடுமிடமான
நீர்–நீரை யுடைய
திருக் கோட்டியூர்– திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி–திருவாழி யாழ்வானோடு
சேர்–சேர்ந்திருக்கிற
தட–பெரிய
கையினானை–திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
நினைப்பு இலா–(ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை–கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்–பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்–உண்கிற
சோற்றினை–சோற்றை
வாங்கி–பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை–(அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்–(அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்.

விளக்க உரை

“ உலகத்தில் அறிவுடையார் சோற்றை உண்ணவேணும், அறிவிலிகள் புல் முதலிவற்றை உட்கொள்ளவேணும் என்பது விவாதமற்ற விஷயம்.
திருக்கோட்டியூ ரெம்பெருமானை நெஞ்சாலும் நினையாத மனிதர் அறிவற்றவர்கள் ஆதலால் அவர்கள் புல்லைத்தான் தின்னவேணும்;
அங்ஙனமன்றி, அவர்கள் முறை தப்பித் தின்னுஞ் சோற்றைப் பிடுங்கி யெறிந்துவிட்டு, அவர்கள் வயிற்றில் புல்லையிட்டு நிறையுங்கள் என்கிறார்.
முன்னடிகளிற் கூறியது – தன்மை நவிற்சி. குதிகொண்டு = குதி – முதனிலைத் தொழிற்பெயர். சாடுதல் -அலைத்தல்.
நேமி-வடசொல். திணித்தல் – அடைத்தல், துறுத்தல்.

—————

பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய
பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6-

பதவுரை

பூதம் ஐந்தொடு–பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி–பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்–(சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்
பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத–குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்–வாழ்விடமான
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை–(எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை–நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவார்கள்–துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி–திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்–ஸம்பந்தத்தினால்
இ உலகம்–இந்த லோகமானது
பாக்கியம் செய்தது–பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்.

விளக்க உரை

ஒரு வகைக்குற்றமும் தம்மிடத்து இல்லாத பரமோதாரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழுமிடமான திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்
எம்பெருமான்பக்கம் அன்புபூண்ட பாகவதர்கள் பலர் இவ்வுலகத்தில் ஸஞ்சரியா நின்றமையால், அவர்களுடைய ஸ்ரீபாததூளியை
வஹிக்கப்பெற்ற இவ்வுலகம் பெருப்பெருத்த பாக்கியம் பண்ணிவைத்ததென்கிறார்.

நிலம், நீர், தீ. கால், விசும்பு என்கிற பஞ்சபூதமயமாகிய சரீரத்தை பூதமைத்து என்றது. – ஆகுபெயரால்.
“மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவு மாதர் சமூமாம், புண்ணாராகக்கை” என்ற பெரியதிருமொழி அறிக.
வேள்வி ஐந்து தேவயஜ்ஞம், பிரத்ருயஜ்ஞம் பூதயஜ்ஞம், மனுஷயஜ்ஞம், ப்ரஹமயஜ்ஞம் என்பவை
புலன்கள்- ஐந்து – சப்தம். கந்தம், ரூபம், ஸ்பர்சம் என்பதை பொறிகள்
ஐந்து செவி, வாய், கண், மூக்கு, உடல்,
இனி “செவி வாய் கண் மூக்கு உடலென்றைம்புலனும்” என்றருளிச் செய்துள்ளமைக் கிணங்க ஐம் புலன்கள் என்பதற்கு.
செவி முதலிய பஞ்ச இந்திரியங்கள் என்று பொருளுரைத்தலும் ஒக்கும்.
“பொங்கைம்புலனும் பொறிவைத்து, “சருமேந்திரியம்” என்ற திருவாய்மொழியின் வியாக்கியாகங்களைக் காண்க.
இனி இவற்றால் ஏதமொன்றுமிலாமையாவது தேஹத்தைக் கணக்கில் சேஷமாக்கிக் கொள்ளுகை சரீரத்திலுண்டாகும் ஏதம்.
அதை எம்பெருமானுக்குச் சேஷப்படுத்துகை – ஏதுமில்லை;
அதை எம்பெருமா னடியார்களுக்குச் சேஷப்படுத்துகை ஏதமொன்றுமில்லாமை
பஞ்ச மஹாயஜ்ஞங்களை ஸ்வர்க்கம் முதலிய உலகங்களைப் பெறுதற்கு ஸாதகமாக அநுஷ்டித்தல், ஏதமில்லாமை;
பகவானுடையவும், பாகவதர்களுடையவும் முகமலர்த்திக்கென்று அநுஷ்டித்தல் ஏதமொன்றுமிலாமை.
ரூபம், ரஸம், கந்தம், ஸ்பர்சம், சப்தம் ஆகிற விஷயங்களைத் தனக்கு என்றிருக்கை- ஐம்புலன்களால் வரும் ஏதம்;
இவற்றைப் பகவத் விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமிலாமை!
பாகவத விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமொன்றுமில்லை.
கண் முதலிய இந்திரியங்களை விஷயாந்தரங்களிற் செலுத்துகை- ஐம்பொறிகளால் வரும் ஏதம்;
அவற்றை எம்பெருமான் விஷயத்திற் செலுத்துகை- ஏதலமிலாமை; பாகவதவிஷயத்தில் செலுத்துகை- ஏதமொன்றுமிலாமை.
எனவே, திருக்கோட்டியூரிலுளள் ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்கள் தேஹத்தைப் பாகவதவிஷயத்தில் ஆட்படுத்துமவர்கள் என்றும்,
பகவத் பாகவதர்களின் முகமலர்த்திக்காகப் பஞ்சயஜ்ஞாதுஷ்டாகத்தில் பண்ணுமவர்கள் என்றும்,
பஞ்சுஜ்ஞாகேந்திரியங்களையும் பாகவதவிஷயத்தில் உபயோகப்படுத்துமவர்கள் என்றும் கூறியவாறு,

நாதனை என்று திருக்கோட்டியூரில் கோயில் கொண்டிருக்கும் சொக்க நாராயணரைக் குறிக்கிறதென்றும்,
நரசிங்கனை என்று தெக்காழ்வாரை குறிக்கிறதென்றும் ஸம்ப்ரதாயம்–

—————-

குருந்த மொன்றொசித் தானொடும் சென்று கூடி யாடி விழாச் செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கருந்தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத் தவங்கள் செய்தார் கொலோ–4-4-7-

பதவுரை

திருந்து–(எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய
நால் மறையோர்–நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம்–ஒரு குருத்த மரத்தை
ஒசித்தானோடும்–முறித்தருளின கண்ண பிரானை
சென்று கூடி–சென்று சேர்ந்து
ஆடி–(அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து
விழாச் செய்து–(விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு
இரா பகல்–இரவும் பகலும்
ஏந்தி–மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,)
கருந்தட–கறுத்துப் பெருத்த
முகில்–மேகம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து
கடைக் கொண்டு–நைச்சியாநுஸந்தானத்துடன்
கை தொழும்–அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள
பக்தர்கள்–பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள்
இருந்த–எழுந்தருளி யிருக்குமிடமான
ஊரில்–ஊரிலே
இருக்கும்–நித்ய வாஸம் பண்ணுகிற
மானிடர்–மநுஷ்யர்கள்
ஏதலங்கள்–எப்படிப்பட்ட பாவங்களை
செய்தார் கொல் ஓ-அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.)

விளக்க உரை

திருக்கோட்டியூ ரெம்பெருமான் திருவடிகளில் அன்பு பூண்ட பாகவதர்கள் எழுந்தருளி யிருக்கிற திவ்யதேசத்தில் வாஸமும்,
அரிய பெரிய தளங்களினாற் பெறவேண்டிய பேறு என்பதை வெளியிடுகிறது இப்பாட்டென்க.
எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமிடத்தில் வாஸம் பெறுவதற்கு ஒரு தபஸ்ஸே அமையும்;
பாகவதர்களின் நகரத்தில் வாஸம் பெறுமைக்குப் பல தவங்கள் புரியவேணும் என்பதும் தோன்றும்-
எத்தவங்கள் என்று பன்மையினால்.

கண்ணபிரான், யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு, அதன் கரையிலுள்ள
குருந்தமரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும், கம்ஸனால் ஏவப்பட்டவனமான ஒரு அஸுரன், கண்ணனை நலிவதற்காக
அக் குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்; அதை அறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்துப் போகட்டானென்ற வரலாறு அறிக.
திருந்தம் – ஸௌஷவம். கடைகொண்டு= கடை – தாழ்வு; அதை அனுஸந்தித்துக் கொண்டு என்றபடி :
“நீசனேன் நிறையொன்றுமிலேன்” என்றாற் போலச் சொல்லுகை.
நான்முகன் திருவந்தாதியில். “குறைகொண்டு நான்முகன்” என்ற பாட்டில் “குறைகொண்டு” என்ற பிரயோகத்தை ஒக்கும்,
இப்பிரயோகமும்; அதுவும் இப்பொருளதே.

————

நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்த தானியமு மிராக்கர் மீது கொள்ள கிலார்களே–4-4-8-

பதவுரை

நளிர்ந்த சீலன்–குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்–நீதிநெறி தவறாதவரும்
அபிமான துங்கனை–இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை–நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட–அடிமை கொண்டவனாய்
செம் கண் மால்–செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற–திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்–கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்–எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்–ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்–அபஹரிக்க மாட்டார்கள்

விளக்க உரை

“(நளிர்ந்த சீலன் இத்யாதி) “அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப் போலத் திருமாலே
நானுமுனைக்குப் பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது.
நயாசலன் – வடசொல் தொடர்; நீதி நெறியில் சலிப்பற்றவன் – ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன்.

சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வ நம்பியை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய
திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட
ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்;
தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை.
தானியமும் என்ற உம்மை – இழிவு சிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளை கொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள
தாந்யத்தையே கொள்ளை கொள்ள மாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத் தக்கது.

————-

கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நர சிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே–4-4-9-

பதவுரை

கொம்பின் ஆர்–கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்–சோலைகளிலே
குயில் இனம்–குயில்களின் திரள்
கோவிந்தன்–கண்ண பிரானுடைய,
குணம்–சீர்மைகளை
பாடு–பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்–சிறந்த
செம் பொன் ஆர்–செம் பொன்னாலே சமைந்த
மதிள்–மதிள்களாலே
சூழ்–சூழப் பட்டதும்
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை–(ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை–நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நலின்று–அநுஸந்தித்து
ஏத்துவரர்களை–துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்–(யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்-“இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்–எம்பெருமானுடைய
சின்னங்கள்–அடையாளமாயிருப்பவர்கள்”
என்று–என்று அநுஸந்தித்து
ஆசைகள்–நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்–தலைக் கட்டிக் கொள்வேன்.

விளக்க உரை

திருக்கோட்டியூர் எம்பெருமானடியார்களை ஸேவிக்கும் போதே ‘அவ்வெம்பெருமான் ஸாத்விகர்களினால் ஸேவிக்கப்படுமவன்’
என்கிற லக்ஷணம் வெளியாமாதலால் ‘இவர்கள் எம்பெருமானது சிறப்பைத் தெரிவிக்கவல்ல சின்னங்கள்’ என்று அநுஸந்தித்து,
யான் நெடுநாளாய்க் கொண்டுள்ள பலவகை ஆசைகளையுந் தீர்வேனென்கிறார்.
பாகவதர்களின் ஸேவை, பகவத் ஸேவையினும் அரிது என்பார் கண்ணடக்கால் என்கிறார்.
“மெய்யடியார்கள் தம், ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண் பயனாவதே” என்ற குலசேகராழ்வார் பாசுரமுங்காண்க.
இவர் இவர் என்ற இரட்டிப்புக்குக் கருத்து – ஒவ்வொரு பாகவதையும் தனித்தனியே அநுஸந்திக்கை. காணவேணுமென்றும்,
கிட்ட வெணுமென்றும்-, கூடவே இருக்கவேணுமென்றும் இப்படி ஆசைகள் பலவாதல்பற்றி ஆசைகள் எனப் பன்மையாக் கூறினர்.
இவ்வகை ஆசைகளெல்லாம், காண்கை யொன்றினாலேயே தீருமென்றது- பாகவத ஸேவாமாத் ரத்துக்குள்ள
அருமையையுஞ் சிறப்பபையுங் கூறியவாறு.

————-

காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே–4-4-10-

பதவுரை

காசின் வாய்–ஒருகாசுக்கு
கரம்–ஒரு பிடி நெல்
விற்கிலும்–விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு–(அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை–புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்–ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் மங்கையினார்கள்–உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா–கேசவனே!
புருடோத்தமா–புருஷோத்தமனே!
காவாது–(தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி–பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்–மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா–வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று–என்றிப்படி
பேசுவார்–(எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்–பாகவதர்கள்
எந்தம்மை–அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்–(தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்.

விளக்க உரை

இப்பாசுரமடியாகப் பிறந்தவையென்றுணர்க:- ஒருகாசுக்கு ஒருபிடிநெல் விற்கும் படியான காலத்தில் தம் வயிற்றைத் தாம்
நிறைத்துக்கொள்வதே அரிது; தம் வயிற்றைப் பட்டினி கொண்டு பிறர் வயிற்றை நிறைப்பதென்றால் ஏதேனுமொரு
ப்ரத்யுபகாரத்தைக் கணிசித்தாராக வேணும்; இது உலகத்தில் ஸாமந்ய ஜநங்களின் இயல்பு;
திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமினோவென்றால், காசின் வாய்க் கரம் விற்குங் காலத்திலும், கைம்மாறு கருதாது
அதிதிகளுக்கு அந்ததாநம் பண்ணி நாடெங்கும் புகழ்பெற்றிருப்பார்களாம். அப்படிப் பட்ட மஹாநுபாவர் வாழுமிடத்துள்ள
எம்பெருமானது திருநாமங்களை அநுஸந்திக்குமவர்கள் அடியேனைத் தங்களிஷ்டப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு
யான் உடன் பட்டிருக்கத் தட்டில்லை யென்று- தம்முடைய சரமபர்வ நிஷ்ட்டையின் பரம காஷ்ட்மடையை அருளிச் செய்தவாறு.

———–

சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11-

பதவுரை

சீதம் நீர்–குளிர்ந்த நீராலே
படை சூழ்–சுற்றும் சூழப் பெற்ற
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்–எம்பெருமானுக்கு
அடியாரையும்–அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி–அடிமை செய்யாமல்
திரிவாரையும்–திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்–குற்றமற்றவரும்
பட்டர் பிரான்–அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர–குளிர்ந்த
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்–நிர்வாஹருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி–பழுதில்லாதபடி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு–எம்பெருமானுக்கு
ஆளர்–ஆட் செய்யப் பெறுவர்

விளக்க உரை

திருக்கோட்டியூரெம்பெருமானுக்கு அடிமை செய்யும் பாகவதர்களைப் புகழ்ந்தும், அடிமை செய்யாது விஷயங்களிலே மண்டித் திரியும்
பாவர்களை இழந்தும் அருளிச் செய்த இவற்றை ஓதவல்லபிராக்கள் எம்பெருமானுக்கு நித்யகைங்கரியம்
பண்ணப்பெறுவர்களென்று பலஞ்சொல்லிக்கட்டியவாறு.
சீதம்- வடசொல்திரிபு. ஆதியன்- முதல்வன். புதுவைக்குக் குளிர்த்தியாவது- ஸம்ஸாரதாபங்களை ஆற்றுக. … ….

————–

அடிவரவு:- நா குற்றம் வண்ணம் உரகம் ஆமை பூதம் குருந்தம் நளிர்ந்த கொம்பினை காசின் சீதரீர் ஆசை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: