ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-3—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற
உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1-

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை–ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்–கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து–(அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற–ஓடி வந்த
உருப்பனை–உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு–ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட–(அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை–மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை–கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று–மலையிலே நின்று
முறி–முறிந்து
பொன்–பொன் மயமான
ஆழியும்–மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்–(பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு–வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்–ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்–ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே–அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்.

விளக்க உரை

இதில் முன்னடிகளில் கூறிய வரலாறு- கீழ் வன்னாகன் தேவியில் மூன்றாம்பாட்டின் உரையில் விவரிக்கப்பட்டது.
ருக்மிணியின் தமையனுக்கு ருக்மண் என்றும், ருக்மி என்றும் பெயர் வழங்குவர்
உறைத்திடுதல்-மாந பங்கம் பண்ணுதல்; உறைப்பான்- ருக்மிணிப் பிராட்டியைச் சிக்கனக் கைக் கொண்டு, மீட்க வந்த
ருக்மனையும் பங்கப்படுத்திவிட்ட மிடுக்கை யுடையவனென்றபடி.

பின்னடிகளின் கருத்து:- திருவாமலிருஞ்சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள், நரம்பும் இதழுமாகப்
பூக்களைச் சொரிகின்றமை, முறிந்து பொன் மோதிரங்களையும் பொற்காசுகளையும் வாரிப் பிறர்களுக்குக் கொடுப்பது
போன்றுள்ளது என்ற உத்ப்ரேக்ஷையைத் திருவுள்ளத்திற் கொண்டு, உபமேயார்த்தத்தை வெளிப்படையாக அருளிச் செய்யாமல்
“தாவி வையங்கொண்டதடந் தாமரைகட்கே” என்றது போலக் கூறுகின்றனரென்க.
கொன்றைப் பூவிலுள்ள நரம்பும் இதழும்- முறிந்த பொன் மோதிரமும் பொற் காசும் போலே யிருக்கும்படி காண்க.

———————

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர்
நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2-

பதவுரை

கஞ்சனும்–கம்ஸனும்
காளியனும்–காளிய நாகமும்
களிறும்–(குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்–இரட்டை மருத மரங்களும்
எருதும்–(அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்–(தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய–(தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த–(திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை–நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு–விஷத்தை
உமிழ்–உமிழா நின்றுள்ள
காகம்–(மலைப்) பாம்பானவை
நளிர்–குளிர்ந்த
மா மதியை–(மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற)
பூர்ணச்சந்திரனை–(தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து–(படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி–கிட்டி
செம் சுடர்–சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா–(தனது) நாக்கினால்
அளைக்கும்–(சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே.

விளக்க உரை

முன்னடிகளிலடங்கிய வரலாறுகள் கீழ்ப் பலவிடங்களில் விரிக்கப்பட்டன. பின்னடிகளின் கருத்து;
திருமலையிலுள்ள மலைப் பாம்புகள் பூர்ண சந்திரனைப் பார்த்து, அவனைத் தமது ஆமிஷமாகக் கருதி,
மேற்கிளர்ந்த தமது நாவினால் அச் சந்திர மண்டலத்தை அளையா நிற்குமென்று-
இத்திருமலையில் ஒக்கத்தைக் கூறியவாறாம்–

———————-

மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3-

பதவுரை

மன்னு–(தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை நரகாஸுரனை
சூழ்போகி–கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து–(அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து–(திரு வாழியாலே) நிரஸித்து
(அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த)
கன்னி மகளிர் தம்மை–(பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த–தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
புன்னை–புன்னை மரங்களும்
செந்தியொடு–சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்–புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்–கோங்கு மரங்களும்
நின்று–(புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்-(திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்–சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே

விளக்க உரை

ஆள் வலியாலும் தோள் வலியாலும் நமக்கு ஓரழிவுமில்லையென்று உறுதியாக நினைத்து அஹங்காரி யாயிருந்த நரகாஸுரன்,
தேவர்களை அடர்த்தும், தேவ மாதரைப் பிடித்தும், அதிதியினுடைய குண்டலங்களைப் பறித்தும், இங்ஙனொத்த கொடுமைகளாலே
தேவர்களைக் குடியிருக்காலொட்டாதபடி பல பீடைகளைச் செய்ய, தேவேந்திரன் த்வாரகையிற் கண்ணனிடத்துவந்து
‘இவனை கிரஸிக்கவேணும்’ என்று வேண்டிக் கொள்ள, பின்பு கண்ணபிரான் அவனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து,
ஸத்ய பாமைப் பிராட்டியோடே கூடப் பெரிய திருவடியை மேற்கொண்டு, அவ்வஸுரனது இருப்பிடமாகிய பிராக்ஜோதிஸ புரத்துக்கு எழுந்தருளி,
தனக்குத் தப்பிப்போக வொண்ணாதபவடி அவளை வளைத்துக் கொண்டு, திருவாழியாழ்வானைப் பிரயோகித்து, உயிர்தொலைத்திட்டு,
நெடுங்காலமாய்த் தான் மணம் புணர வேண்டுமென்று மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தின புரியிற் பல திசைகளிலிருந்துங் கொணர்ந்து
சிறை வைக்கப்பட்ட கன்னிகைள் பதினாறாயிரத்தொரு நூற்றுவரையும் கண்ணபிரான் தான் கைக்கொண்ட வரலாறு, முன்னடியில் அடங்கியது.
சூழ்போகுதல்- சூழ்ச்சி; அதாவது, ஆராய்ச்சி வளைத்தல்- போக்கறுத்தல்.

புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு என்ற இம்மரங்களின் பூக்கள் பொற்கென்ற நிறம் பெற்றிருக்கும்;
அப்படிப்பட்ட பூக்கள் நிறைந்த மரங்கள் இத்திருமலையில் ஒழுங்குபட நிற்பது-
மலைக்குப் பொன்னரி மாலை என்னும் ஆபரணம் ஸமர்ப்பிப்பது போன்றுள்ளதென்ற உத்யரேக்ஷை, பின்னடிகளுகுக் கருத்து
பொன்னரி மாலை என்பது- பொன்னாற்செய்யப்பட்ட ஒரு ஆபரண விசேஷம்.

————–

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4-

பதவுரை

மா வலி தன்னுடைய–மஹாபலியினுடைய
மகன் வாணன்–புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த–மகளான உஷை இருந்து
காவலை–சிறைக் கூடத்தை
கட்டு அழித்த–அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை–ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை–விரும்புகிற மலையாவது;
கோவலர்–இடையர்களுக்கும்
கோவிந்தனை–கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்–குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்–குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா–பாட்டுக்களை
ஒலி பாடி–இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்–கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே

விளக்க உரை

பலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற்பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு
தான் கூடியிருந்ததாகக் கனாக் கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசை பற்றியவளாய்,
தன் உயிர்த் தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும்,
பிரத்யுநனது புத்திரனுமாகிய அநிருந்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுவதற்கு உபாயஞ்செய்ய வேண்டும்’ என்று
அத் தோழியையே வேண்ட, அவள் தன் யோக வித்தை மஹிமையினால் துவாரகைக்குச் சென்று
அநிருத்தனைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர,
இச் செய்தியைக் காவலாளரால் அறிந்த அந்தப் பாணன் தன் சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே
பொது நமாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும்
கலங்கி யிருந்த போது, நாரத முனிவனால் கடந்த வரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீக்ருஷ்ண பகவான், பெரிய திருவடியை நினைத்தருளி,
உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக் கொண்டு பலராமன் முதலானாரோடு கூடப் பாண புரமாகிய
சோணித புரத்துக்கு எழுந்தருளும் போதே, அப்பட்டணத்தின் ஸமீபத்திற் காவல் காத்துக் கொண்டிருந்த
சிவபிரானது பரிமத கணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு
ஜ்வாதேவதை மூன்று கால்களும், மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தம் செய்ய,
தானும் ஒரு ஜ்வரத்தை உண்டாக்கி, அதன் சக்தியினாலே அவனைத் துரத்தி விட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாஸுரனது
கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து,
பாணாஸுரனோடு போர்செய்யத் தொடங்க, அவனுக்குப் பக்க பலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன்
வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ்செய்யாமற் கொட்டாவி விட்டுக் கொண்டு
சோர்வடைந்துபோம்படி செய்து, ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்ஊகாரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர்,
அனேகமாயிரஞ் சூரியர்க்குச் சமமான தனது சக்ராயுதத்தையெடுத்து பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும்
தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு
பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது
அநிருந்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க அதன்பின் மீண்டு வந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.
உஷை அநிருத்தனுக்குச் சேஷமானது வாணனை வென்ற பின்னரேயாதலால் “வாணன் மகளிருக்க காவலைக் கட்டழித்த” எனப்பட்டது.
தனிக்காளை. காமனைப்பெற்ற பின்பும் யௌவனப் பருவம் நிகரற்று இருக்குமவன் என்க.
“காளையே எருதுபாலைக்கதிபன் நல்லிளையோன் போரம்” என்ற நிகண்டு அறிய.

————-

பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை
குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5-

பதவுரை

பலபல நாழம்–பலபல குற்றங்களை
சொல்லி–சொல்லி
பழித்த–தூஷித்த
சிசு பாலன் தன்னை–சிசுபாலனுடைய
அலவலைமை–அற்பத் தனத்தை
தவிர்த்த–(சாம தசையில்) போக்கி யருளின
அழகன்–அழகை யுடையவனும்
அலங்காரன்–அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது:
குலம் மலை–தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும்
கோலம் மலை–அழகை யுடைய மலையும்
குளிர் மா மலை–குளிர்ந்த பெரிய மலைகள்
கொற்றம் மலை–ஜயத்தை யுடைய மலையும்
நிலம் மலை–(நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய மலையும்
நீண்ட மலை–நீட்சியை யுடைய மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே.

விளக்க உரை

“ கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையுஞ், கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்” என்றபடி- காது கொண்டு கேட்க முடியாதபடி
தூஷித்துக் கொண்டிருந்த சிசுபாலனுக்குச் சரமதசையில் கண்ணபிரான் தன் அழகைக் காட்டித் தன்னளவில் பகையை
மாற்றியருளினமை, முன்னடிகளிற் போதகரும், நாழம் என்பதில், அம்- சாரியை, நாழ் என்ற சொல் குற்றமென்னம் பொருளாதலை
1. “நாமா மிகவுடையோம் நாழ்”
2. “நாழமவர் முயன்ற வல்லாக்கான்” என அவ்விடத்து உரைப்பர் அப்பிள்ளை.
3. “அஃதே கொண்டன்னை நாழிவளோ வென்னும்” என்ற விடமுங் காண்க.
அவ்வலைமை – கண்ணன் என்றால் பொறாது நிந்திக்கும்படியான அற்பத்தனம்.
(கொற்றமலை.) தன் அபிமாகத்தில் அகப்பட்டவர்களை ஸம்ஸாரம் மேலிடாதபடி நோக்கும் வெற்றியை யுடைத்தானமலை என்றபடி.
கொற்றம்- அதிசயம் (நோக்கும். வெற்றியை யுடையத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம்
(நிலமலை.) மணிப் பாறையாயிருக்கு மளவன்றியே, நல்ல பழங்கள் புஷ்பங்கள் தர வல்ல மரங்கள் முளைப்பதற்குப் பாங்கான
செழிப்பை யுடைய நிலங்களமைத்தமலை யென்க
(நீண்ட மலை.) பரம பதத்திற்கும் ஸம்ஸாரத்திற்கும் இடைவெளி யற்று உயர்ந்துள்ளது.

—————

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6-

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

விளக்க உரை

‘பாண்டவர்கள், துரியோதநாதியரோடு ஆடின பொய்ச் சூதில், தங்கள் மனைவியான த்ரௌபதியையுங்கூடத் தோற்றதனால்,
குருடன் மகனான துச்சாதஸகன் என்பானொரு முரட்டுப்பயல், பஹிஷ்டையாயிருக்க இவளை மயிரைப் பிடித்திழுந்துக் கொண்டு
வந்து மஹா ஸபையிலே நிறுத்திப் பரிபலப் பேச்சுக்களைப் பேசித் துகிலை உரித்த போது, அவள் பட்ட வியஸனங்களையெல்லாம்,
கண்ணபிரான், துரியோதனாதியர் மனைவியர்க்கும் ஆகும்படி செய்தருளினான். அதாவது-
அவர்கள் மங்கலநூல் இழந்தமை “சந்தமல்குழலாளலக் கண் நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப” என்றார் திருமங்கையாழ்வாரும்.
பாஞ்சாலி- பாஞ்சால தேசத்தாசன் மகள். நூற்றுவர்- தொகைக் குறிப்பு.

பின்னடிகளின் கருத்து; – பிறப்பே பிடித்துப் பாட்டேயொழிய வேறொன்றறியாத வண்டுகள் இவைகளைப் பாடிக்கொண்டு
தேன் பருகுகைக்குச் செழிப்பான சோலைகள் வேண்டும்; அவை நன்கு வளருகைக்கு நீர் வேண்டும்;
அதுக்கீடாக ஊற்றுக்கள் அத்திருமலையில் உள்ளமை கூறியவாறு. தோண்டல்- தொழிலாகுபெயர்.
திருவனந்தாழ்வானே திருமலையாய் வந்து நிற்கையாலே “தொல்லை மாலிருஞ்சோலை” என்கிறது.

——————-

கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம்
இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7-

பதவுரை

கனம்–ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா–காதணியை யுடையாளான
கணை–அம்புகளை
பாரித்து–பிரயோகித்து
அரக்கர்கள் இனம்–ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து–குலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?–அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்–இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையான
கனம்–பொன்களை
கொழி–கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி–தெளிந்த அருவிகளிலே
இனக்குழு–அறிஞர்கள் எல்லாம்–
அகல் ஞாலமெல்லாம்–விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த–வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்–நீராடப் பெற்ற
எழில்–அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே

விளக்க உரை

இராமபிரான், பிராட்டியை லங்கையினின்றும் மீட்டுக் கொணர்கைக்காக, ராவணன் முதலிய ராக்ஷஸர்களின் மேல்
அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்தமையைக் கூறுவன. முன்னடிகள்.
கனம்- வடசொற்சிதைவு கனங்குழையாள் என்றது- பிராட்டியின் முன்புற்ற நிலைமை பற்றி. பாரித்தல்- பரப்புதல்,
கழுவேற்றுவித்தல்- சூலாரோஹணஞ் செய்வித்தல்; தூக்கிலேற்றி உயிரை முடித்தல்; இதனால், கொன்றபடியைக் கூறியவாறு,
அன்றி, கழு ஏற்றுவித்த- கழு என்னும் பறவைகள் ஏறி ஜீவிக்கும்படி பண்ணின என்று முரைக்கலாம்;
இதனால், அரக்கர்களைப் பிணமாக்கின படியைக் கூறியவாறு; பிணங்கள் கழுகுககளுக்கு உணவாகுமன்றோ.

பின்னடிகளின் கருத்து- திருமலையிலுள்ள நீரருவிகள் பொன்களைக் கொழித்துக்கொண்டு பெருகாநிற்க,
அவற்றிலே லோகமெல்லாம் திரண்டுவந்து நீராடுகிறபடியைக் கூறியவாறாம்.
இனம் எனினும், குழு எனினும், திரளுக்கே பெயர-

——————-

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த
அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8-

பதவுரை

எரி–நெருப்பை
சிதறும்–சொரியா நின்றுள்ள
சரத்தால்–அம்புகளினால்
இலங்கையினை–இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய–தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து–நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து
காய் நோட்டம்–(அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து–குலைத்து
உகந்த–(தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்–ஸ்வாமியான இராமபிரான்
அமரும்–எழுந்தருளி யிருக்கிற
மலை–மலையாவது:
அமரரொடு–தேவர்களோடு கூட
கோனும்–(அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி–(இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்–சந்த்ர ஸூர்யர்களும்
சென்று–வந்து
சூழூம்–பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே

விளக்க உரை

இலங்கையினை என்றது- ஆகு பெயர் அதிலுள்ள ராவணனையும் மற்ற அரக்கர்களையும் காட்டும்.
“இலங்கையனை” என்றும் பாடம்; இலங்கைக்காரனை என்பது பொருள்.
வரி- நீளம், கோடு, நெருப்பு; வரிசிலை- நெருப்பைச் சொரிகிற வில் என்றலுமொன்று.
வாய்க்கோட்டம்-ஒரு வரையும் நான் வணங்கேன்’ என்ற ராவணனுடைய வாய்க்கோணலைச் சொல்லுகிறது;
கோட்டம்- அநீதி, கோணல்,
இந்திரன், சந்திரன், ஸூர்யன் முதலிய தேவர்களனைவரும் வந்து பிரதக்ஷிணம் பண்ணும்படிக்கீடான
பெருமையையுடைய மலை என்பது, பின்னடிகளின் கருத்து.

————–

கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து
மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று
ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9-

பதவுரை

மண்–ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
(வராஹர மாய் அவதரித்து)
இடந்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து
கோடு–(தனது) திரு வயிற்றிலே
கொண்டு–என்று கொண்டும்,
மண்–(மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
(வாமந ரூபியாய் அவதரித்து)
குடங் கையில்–அகங்கையில்
கொண்டு–(நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து–அளந்தருளியும்
மீட்டும்–மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது–அப் பூமியை
உண்டு–திரு வயிற்றில் வைத்து நோக்கி
(பிம்பு பிரளங் கழித்தவாறே)
உமிழ்ந்து–(அதனை) வெளிப் படுத்தியும்
(இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே)
விளையாடும்–விளையாடா நின்றுள்ள
விமலன்–நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையாவது;
ஈட்டிய–(பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு–எம் பெருமானுக்கு
அடியுரை என்று–ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்–(பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
சிலம்பாறு உடை–நூபுர கங்கையை யுடைய
மாலிருஞ் சோலை அதே

விளக்க உரை

ஈட்டுதல்–திரட்டுதல். ‘அடியிறை’ என்றும் பாடமுண்டென்பர்; பொருள் அதுவே. ஓட்டரும்
‘ஓட்டந்தரும்’ என்பதன் விகாரம்–

————–

ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும்
ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10-

பதவுரை

ஆயிரம்–பலவாயிருந்துள்ள
தோள்–திருத் தோள்களை
பரப்பு–பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்–ஆயிரந் திருமுடிகளும்
மின் இசை–(திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை–பரந்த
ஆயிரம் தலைய–ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்–திருவந்தாழ்வான் மீது
சயனன்–பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்–ஆளுகின்ற
மலை–மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்–பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்–அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பொழிலும் உடை– பல பூஞ்சோலைகளையுமுடைய

விளக்க உரை

மாலிருஞ்சோலை அதே முடிகள் ஆயிரமானால், தோள்கள் இரண்டாயிரமாமாதலால் “ஈராயிரந்தோள் பரப்பி”
என்றருளிச் செய்ய வேண்டாவோ? என்ற சங்கைக்கு இடமறும்படி,
ஆயிரமென்பதற்கு அனேகம் என்று பொருள் உரைக்கப்பட்டதென்க.
மின் இலக மீமிசைச் சொல்.

—————-

மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11-

பதவுரை

மாலிருஞ்சோலை என்னும்–திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை–திருமலையை
உடைய–(தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை–ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
கால் இரு மூர்த்தி தன்னை–திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை–நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை–(ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்–வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப்பொருளில்–சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த–மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை–தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.

விளக்க உரை

இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டாதொழிந்தது- இப்பாசுரங்களின் பொருளை அறிகையே
இது கற்கைக்குப் பயனாமென்று திருவுள்ளம் பற்றி யென்க.
(நாலிருமூர்த்தி தன்னை.) வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்று நால்வகையாக கூறப்பட்ட
பெரிய வடிவையுடையவனென்பதும் பொருளாம்; அப்போது, இரு என்பதற்கு- இரண்டு என்று பொருளன்று; இருமை- பெருமை.
மூர்த்தி- வடசொல் – ‘அஷ்டாக்ஷர ஸ்வரூபியானவனை’ என்று உரைப்பதும் பொருந்துமென்க.
நால்வேதக் கடலமுது என்று- திருமந்திரத்தைச் சொல்லிற்றாய், அதனால் கூறப்படுகிறவன் என்கிற காரணங்கொண்டு,
ஆகுபெயரால் எம்பெருமானைக் குறிக்கின்றதென்றது மொன்று.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: