ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-5–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

அட்டுக் குவி சோற்றுப் பருப் பதமும் தயிர் வாவியும் நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-1-

பதவுரை

குற மகளிர்–குறப் பெண்கள்,
வட்டம் தட கண்–வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும்
மடம்–(தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான
மான் கன்றினை–மான் குட்டியை
வலை வாய்–வலையிலே
பற்றிக் கொண்டு–அகப் படுத்தி
(பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு)
கொட்டை–பஞ்சுச் சுருளின்
தலை–நுனியாலே
பால்–பாலை
கொடுத்து–எடுத்து ஊட்டி
வளர்க்கும்–வளர்க்கைக்கு இடமான
கோவர்த்தனம் என்னும்–‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும்
கொற்றம்–வெற்றியை யுடையதுமான
குடை–குடையானது (யாதெனில்?)
அட்டு–சமைத்து
குவி–குவிக்கப் பட்ட
சோறு–சோறாகிற
பருப்பதமும்–பர்வதமும்
தயிர்–தயிர்த் திரளாகிற
வாவியும்–ஓடையும்
நெய் அளறும்–நெய்யாகிற சேறும்
அடங்க–ஆகிய இவற்றை முழுதும்
பொட்ட–விரைவாக (ஒரே கபளமாக)
துற்றி–அமுது செய்து விட்டு,
(இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக)
மாரி–மழையாகிற
பகை–பகையை
புணர்த்த–உண்டாக்கின
பொரு மா கடல் வண்ணன்–அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான்
பொறுத்த–(தனது திருக் கைவிரலால்) தூக்கின
மலை–மலையாம்.

விளக்க உரை

“துன்னு சகடத்தாற் புக்க பெருஞ்சோற்றை” என்றபடி வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின்
மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது.
மலையில் ஓடைகளுஞ் சேறுகளும் இன்றியமையாதனவாதலால், இங்குத் தயிர்த் திரளை ஓடையாகவும்
நெய்ப் பெருக்கைச் சேறாகவும் உருவகப் படுத்தினரென்க.
சோற்றுத் திரளில் தொட்டியாகக் கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்தமை தோற்றும்.
‘நெடு நாளாக இந்திரனுக்குச் செய்து வந்த இப் பூஜையை நீ உனக்காக்கிக் கொள்ள வொட்டோம்’ என்று சில இடையர்
மறுப்பர்களோ என்று சங்கித்துப் பொட்டத் துற்றினானாயிற்று; ஓர் இமைப் பொழுதளவில் அவற்றை யெல்லா மமுதுசெய்திட்டனன்.
இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக் கோபத்தினால் புஷ்கலா வர்த்தம் முதலிய மேகங்களை ஏவி
விட மழை பெய்வித்ததனால் அம்மழையாகிற பகைக்குக் கண்ணபிரான் காரண மானமை பற்றி ‘மாரிப் பகை புணர்த்த’ என்றார்.

பின்னிரண்டடிகளின் கருத்து :- குறப்பெண்கள் அழகிய மான்களை வளர்க்க விரும்பி அவற்றை வலை வைத்துப் பிடிப்பித்துத்
தங்கள் குடங்காலில் அவற்றை இருத்திப் பஞ்சுச் சுருள்களின் நுனியால் அவற்றுக்குப் பாலூட்டி வளர்க்கப்பெற்ற மலை என்றவாறு.
அவை அப்பஞ்சுச் சுருளின் நுனியைத் தன் தாய் முலையாகப் பாவித்து உறிஞ்சுமென்க.

அட்டு என்ற வினையெச்சத்தில் அடு என்ற குறிலிணைப்பகுதி ஒற்றிரட்டி இறந்தகாலங் காட்டிற்று.
ஊர்வசியை உருப்பசி என்னுமாபோலே, பர்வதத்தைப் பருப்பதமென்கிறது. வாலி – வாவீ.
வலைவாய் = வாய் – ஏழனுருபு. குறமகளிர் – குறிஞ்சிநில மக்கள். கொட்டைத்தலை – மூன்றாம் வேற்றுமைத் தொகை.
பசுக்களுக்குப் புல்லுந்தண்ணீரும் நிரம்பக் கொடுத்து வளர்த்ததனால் நம் என்பது காரணப்பெயர்.
பெருத்த மழையை வென்று ஒருவர் மேல் ஒரு நீர்த்துளி விழாதபடி கவிந்து நின்றமை பற்றிக் ‘கொற்றக்குடை’ எனப்பட்டது.
கொற்றம் – ஜயம். கடல் வண்ணன் பொறுத்த மலை – கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையாம் என்று முறையே இயைப்பினுமிழுக்காகாது.

துற்றி – ‘துற்று’ என்னும் பகுதினடியாப் பிறந்த வினையெச்சம். “துற்று” என்றே பலர் ஓதுவர்.

இத் திருமொழியில் சில பாட்டுகளின் பின்னிரண்டடிகளுக்கு உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசார்த்தம்) கூறக் கடவோம்.
இதற்கு உள்ளுறை பொருள் யாதெனில்;- தனது வர்ணாச்ரம வ்ருத்தத்தில் விசாலமான ஞானத்தையும்,
அதனை உபதேசித்தருளின ஆசிரியர்கள் பக்கல் க்ருதஜ்ஜைதையும் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியை யுமுடையானொருவனை
ஆசாரியனானவன் “வாசுதேவன் வலையுளே” என்றபடி – எம்பெருமானாகிற வலையிலகப்படுத்தி,
அவனுக்கு ஸகலவேத சாஸ்திர தாத்பரியமாய் பாலோடு அமுதன்ன வாயிரமாகிய திருவாய்மொழியை உரைத்து
வளர்க்குந் தன்மையைச் சொல்லிற்றாகிறது;
எனவே, இப்படிப்பட்ட மஹானுபாவர்கள் உறையுமிடமென்று அம்மலையின் சிறப்பைக் கூறியவாறாம்.

——————

வழு வொன் றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு
மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி யிடைக்காலிட் டெதிர்ந்து பொரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-2-

பதவுரை

(இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்)
ஒன்றும் வழு இல்லா செய்கை–ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய
வானவர் கோன–தேவேந்திரனுடைய
வலி பட்டு–பலாத்காரத்துக்கு உள் பட்டும்
முனிந்து விடுக்கப்பட்ட–(அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள
மழை–மேகங்களானவை
வந்து–(அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து
ஏழு நாள் பெய்து–ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து
மா தடுப்ப–பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய
மதுசூதன்–கண்ணபிரான்
எடுத்து–(ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து
மறித்த–தலை கீழாகப் பிடித்தருளின
மலை–மலையானது (எது என்னில்;)
இள சீயம்–சிங்கக் குட்டியானது
தொடர்ந்து–( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து
முடுகுதலும்–எதிர்த்த வளவிலே,
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி–(தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது
குழவி–(அந்தக்) குட்டியை
கால் இடை இட்டு–(தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு
எதிர்ந்து–(அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து
பொரும்–போராடப்பெற்ற
கோவர்த்தனம் –குடையே-.

விளக்க உரை

இங்கு இந்திரனை வழுவொன்று மில்லாச் செய்கையனாகக் கூறினது – தான் இந்திர பதவியைப் பெறும் போது
அதற்குச் செய்ய வேண்டிய ஸாதநங்களில் ஒன்றுங் குறைவில்லாமல் செய்தவனென்பதற்காக.
இப்படி வெகு வருத்தப்பட்டு ஸம்பாதித்த இந்திர பதவிக்குப் பிறர்களிடத்தில் பூஜை பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக
இவன் கொண்டிருப்பதனால் அம் மரியாதைக்குக் குறைவு வரவே கோபங்கொண்டனனென்க;
ஆகவே, “வழுவொன்றுமில்லாச் செய்கை” என்பது கருத்துடை யடைமொழியாம்.
“மாத்தடுப்ப” என்பதில் ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர் இங்கு. பசுக்களையும் கன்றுகளையுங் குறிக்கும்;
இடையர்கட்கும் உபலக்ஷணம்.
மதுசூதன் – மது என்ற அஸுரனைக் கொன்றவன்; மது – வேதத்தை அபஹரித்துக் கொண்டு சென்ற அஸுரர்களில் ஒருவன்.
பின்னிரண்டடிகளின் கருத்து;- ஒரு பெண் யானையானது தன் குட்டியை ஒரு சிங்கக்குட்டி நலிவதாக வந்து சீறினவளவிலே
அத் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக் கொண்டு
அச் சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தற்கிடமான கோவர்த்தனமலை என்க.
இனி, இழவு என்பதற்கு, விட்டுப் பிரிதல் என்று பொருள் கொண்டு வேறுவகையாகவும் கருத்துக் கூறலாம்;
குட்டியுந் தானுமாயிருந்த ஒரு பெண் யானை, தன்னை நலிய வந்த ஒரு சிங்கக் குட்டியோடு தான் பொர நினைத்து
அப்போது தன் குட்டியை இறைப் பொழுதும் தனித்து விட்டிருக்கமாட்டாத தான்
அக் குழவியைத் தன் காலிடை யடக்கிக் கொண்டு போர் செய்ததாகக்கொள்க.

இதற்கு உள்ளுறைபொருள்;-
தன்னைப் பற்றிக் கிடக்கும் சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்கமாட்டாத ஆசார்யனானவன்,
அச்சிஷ்யனைத் தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற வாஸநாரூப கருமங்களுக்கஞ்சி, அவனைத் தன் திருவடிகளுக்கு
அந்தரங்கனாக்கிக் கொண்டு அக்கரும வாஸனையை நீக்கி முடிக்குந் தன்மையைச் சொல்லிற்றாகிறது.

—————

அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை
தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3-

பதவுரை

அம்–அழகிய
மை–மை அணிந்த
தட–விசாலமான
கண்–கண்களையும்
மடம்–‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய
ஆய்ச்சியரும்–இடைச்சிகளும்
ஆன் ஆயரும்–கோபாலர்களும்
ஆநிரையும்-பசுக்கூட்டமும்
அலறி–(மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு
எம்மை சரண் என்று கொள் என்று–(‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று
இரப்ப–பிரார்த்திக்க,
(அவ்வேண்டுகோளின்படியே)
இலங்கு–விளங்கா நின்ற
ஆழி–திருவாழி ஆழ்வானை
கை–கையிலே உடையனாய்
எந்தை–எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான்
எடுத்த–(அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த
மலை–மலையாவது (எது என்னில்?);
கொம்மை புயம்–பருத்த புஜங்களை யுடைய
குன்றர்–குறவர்கள்,
தம்மை–தங்களை
சரண் என்ற–சரணமென்று பற்றியிருக்கிற
தம் பரவையரை–தங்கள் பெண்களை
(கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து)
புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று–‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற
மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி)
(அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக)
சிலை–(தமது) வில்லை
குனிக்கும்–வளையா நின்றுள்ள

விளக்க உரை

“எம்மைச் சரணேன்றுகொள் என்றிரப்ப” – எங்களை ரக்ஷித்தருள் என்று வேண்ட என்பது கருத்து.
“சரணென்றுகொள்” என்ற பாடத்தை மறுக்க.
கண்ணபிரான் மலையெடுத்த போது, கையில் திருவாழி உள்ளதாகச் சொல்லுகிறவிதுக்குக் கருத்து என்னென்னில்;
கண்ணபிரான் இந்திரனைத் தலையறுக்க வேண்டினால் அது அரிய வேலையன்று,
கையில் திருவாழியை ஏவிக் காரியம் செய்து முடிக்கவல்ல வல்லமையுண்டு.
ஆகிலும் அங்ஙன் செய்யாதொழிந்தது – ‘இந்திரனுடைய உணவைத் தான் கொண்டோமே, உயிரையுங் கொள்ள வேணுமா’
என்ற கருணையைத் தெரிவித்தவாறாம்.
பின்னிரண்டடிகளின் கருத்து;-
மலைக் குறவர் தமக்கு அன்பர்களான குறப் பெண்களின் கண்கள் கொல்லையிலே பரந்திருக்கக்கண்டு அவற்றை மான்களாகக் கருதி,
‘இவை நமது கொல்லையை மேய்ந்து அழிக்க வந்தன, இவற்றை நாம் அம்பெய்து கொல்லுதல் கவிமரபாகையால்,
இம்மலையிலுள்ள குறத்திகள் மானேய் மடநோக்கிகள் என்பதைப் பெறுவிக்கும் இவ்வர்ணனை.
படியைப் பாருங்கள்’ என்று சொல்லி வில் வளைக்கப் பெற்ற மலை என்க; பெண்களின் நோக்குக்கு மான்நோக்கை உவமை கூறு
கொம்மை – வலிவு. புயம் – ?ஜம் என்ற வடசொல்விகாரம்.

இதற்கு உள்ளுறை பொருள்;
பெருங்கொடையாளனாயிருப்பானொரு ஆசிரியன், தன்னைச் சரணமாகப் பற்றியிருக்கும் சிஷ்யர்கள்
விஷயாந்தரங்களிற் செல்லாதிருக்கச் செய்தேயும் – அவர்களை விஷயாந்தரபரர்களாக அதிசங்கித்து
அத் தன்மையை விலக்குவதற்காக அவர்களுக்குப் பிரணவத்தின் பொருளைப் பரக்க உபதேசித்தருளுகிறபடியைச் சொல்லிற்றாகிறது.
பிரணவத்தைச் சிலையாக உருவகப்படுத்தியுள்ளமை காண்க.
ஆத்துமா எம்பெருமானுக்கொழிய மற்றொருவர்க்கும் சேஷமன்று என்ற தெளிவைப் பிறப்பிக்கின்ற ப்ரணவத்தை உபதேசிக்கவே,
அவ்விஷயாந்தர ப்ராவண்யம் விலகுமென்க.

———————

கடு வாய்ச் சின வெங் கண் களிற்றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல்
அடி வாயுறக் கை யிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-4-

பதவுரை

கடுவாய்-பயங்கரமான வாயையும்
சினம்–மிக்க சீற்றத்தையும்
வெம் கண்–தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய
களிற்றினுக்கு–ஒரு யானைக்கு
கவளம்–சோற்றுக் கபளத்தை
எடுத்து–திரட்டி யெடுத்து
கொடுப்பான் அவன் போல்–கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல,
அமரர் பெருமான்–தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான்
கை–(தனது) திருக் கைகளை
அடிவாய் உற இட்டு–(மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து)
எழ பறித்திட்டு–கிளரப் பிடுங்கி
கொண்டு நின்ற–(தானே) தாங்கிக் கொண்டு நின்ற
மலை–மலையாவது (எது? என்னில்;)
மேகம்–மேகங்கள்
கடல் வாய் சென்று–கடலிடத்துச் சென்று
இறங்கி கவிழ்ந்து–(அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து
கதுவாய்ப்பட–(கடல்) வெறுந்தரையாம்படி
நீர்–(அங்குள்ள) நீர் முழுவதையும்
முகந்து–மொண்டு கொண்டு
ஏறி–(மீண்டும் ஆகாசத்திலே) ஏறி
எங்கும்-எல்லாவிடத்தும்
குடம் வாய்ப்பட நின்று–குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே
மழை பொழியும்–மழை பொழியா நிற்கப் பெற்ற
கோவர் – குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் மேக மழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக் கொண்டு நின்ற படிக்கு ஓர் உவமை கூறுகின்றார் – முதலடியினால்;
மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையை யெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக்
கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு:
“மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க.
கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்;
கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும்
அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள். கடு – வடசொல் விகாரம். கவளம் – யானையின் உணவு.
(அடிவாய் இத்யாதி) ஒரு திருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக் கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க.
அடிவாய் – அடியிலே; வாய் – ஏழனுருபு. உற – ஊன்றும்படி.
மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கின
குடையாமென்பது – பின்னடிகளின் கருத்து.
கதுவாய்ப்படுதலாவது – குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது;
வேறுவகையாகவுமுரைக்கலாம்.

——————–

வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமி னென்பவன் போல்
ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி யெடுத்த மலை
கானக் களியானை தன் கொம் பிழந்து கது வாய் மதம் சோரத் தன் கை யெடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-5-

பதவுரை

ஏனத்து உரு ஆகிய–(முன்பு ஒரு காலத்திலே) வராஹ ரூபம் கொண்டருளின
ஈசன்–ஸ்வாமியாயும்
எந்தை–எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான்,
வானத்தில் உள்ளீர்–“மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்)
வலியீர் உள்ளீர் எல்–(என்னோடொக்க) வல்லமை யுள்ளவர்களா யிருப்பீர்களாகில்
அறையோ–அறையோ அறை!!
வந்து–(இங்கே) வந்து
வாங்குமின்–(இம் மலையைக் கையால்) தாங்கிக் கொண்டு நில்லுங்கள்”
என்பவன் போல்–என்று, சொல்லுகிறவன் போல
இடவன்–ஒரு மண் கட்டி போலே
எழ வாங்கி–(அநாயஸமாகக்) கிளரப் பிடுங்கி
எடுத்த மலை–எடுத்துக் கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது;
கானம்–காட்டு நிலங்களில்
களி–செருக்கித் திரியக் கடவதான
யானை–ஒரு யானையானது
(கரை பொருது திரியும் போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த)
தன் கொம்பு–தன் தந்தத்தை
இழந்து–இழந்ததனால்
கதுவாய்–அக் கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே
மதம்–மத நீரானது
சோர–ஒழுகா நிற்க
தன் கை–தனது துதிக்கையை
எடுத்து–உயரத் தூக்கி
(ஆகாசத்தில் தோற்றுகின்ற)
கூன் நல் பிறை–வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து)
வேண்டி–(அதைப் பறித்துக் கொள்ள) விரும்பி
அண்ணாந்து நிற்கும்–மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப் பெற்ற
கோவா — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் மலையை விடாது வருந்தாது தாங்கிக் கொண்டு நிற்றலை ஒருவகையாக உத்ப்ரேக்ஷிக்கின்றார் – முதலடியினால்;
நாம் ஆகாசத்திலே திளைத்தோமென்று இறுமாந்திருப்பவர்களே! நீங்கள் மெய்யே வலிவுள்ளவர்களாகில்
இம்மலையைச் சிறிது தாங்குங்கள் பார்ப்போம் என்று தேவர்களை அழைப்பவன் போன்றுள்ளனென்க.
அறையோ என்றது – பௌருஷம் தோன்ற மீசை முறுக்கிச் சொல்லும் வெற்றிப்பாசுரம்.
பாதாள லோகஞ்சென்று சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்தெடுத்துத் திரு எயிற்றிலே தாங்கி நின்ற பெருமானுக்கு
இம்மலையெடுக்கை அரிதன்றென்பார். “ஏனத்துருவாகியவீசன்” என்றார்.
இடவன் – மண்கட்டிக்குப் பெயர். பின்னடிகளின் கருத்து; ஒரு யானையானது கரைபொருது திரியும்போது
ஓரிடத்திற் கொம்பைக்குத்தின வளவிலே அக்கொம்பு முறியப்பெற்று அவ்விடத்தில் மதநீரொழுகப்பெற்ற ஆற்றாமையாலே
துதிக்கையைத் தூக்கிக்கொண்டு, வானத்தில் வளைந்து தோற்றும் இளந்திங்களைத் தானிழந்த கொம்பாக ப்ரமித்து
அதனைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உயர்முகமாகவே யிருக்கும்படியைச் சொல்லியவாறு.
கதுவாய் – குறையுற்ற இடம். அண்ணாத்தல் – மேல் நோக்குதல்.

இதற்கு உள்ளுறை பொருள்;-
ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே களித்துத் திரிகிற ஆத்துமா தனது மமகாரமழியப் பெற்று மதமாத்ஸர்யங்களும் மழுங்கப் பெற்று
ஸத்துவம் தலையெடுத்து அஞ்சலி பண்ணிக் கொண்டு ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலிய ஞானங்களைப் பெற விரும்பி
யிருக்கும்படியைக் குறித்தவாறாம்: இது மகாரார்த்தமென்க.

—————-

செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6-

பதவுரை

செப்பாடு உடைய–செவ்வைக் குணத்தை யுடையனாய்
திருமால் அவன்–ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்
தன்–தன்னுடைய
செம் தாமரை கை–செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள
விரல் ஐந்தினையும்–ஐந்து விரல்களையும்
கப்பு ஆக மடுத்து–(மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து
மணி நெடு தோள்–அழகிய நீண்ட திருத் தோள்களை
காம்பு ஆக கொடுத்து–(அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து
கவித்த மலை–தலை கீழாகக் கவித்த மலையாவது,
எப்பாடும்–எல்லாப் பக்கங்களிலும்
பரந்து இழி–பரவிப் பெருகா நின்ற
தெள்ளருவி–தெளிந்த சுனை நீரருவிகளானவை
இலங்கு மணி முத்துவடம் பிறழ–விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க
குப்பாயம் என நின்று–(கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக,
காட்சி தரும்–காணப்படப் பெற்ற
கோவர் — குடையே

விளக்க உரை

செப்பாடாவது – இந்திரனுக்கிட்ட சோற்றை யடங்கத் தானமுது செய்து மழைபெய்வித்து ‘இவை பட்டதுபடுக’ என்று
ஈரமற்ற நெஞ்சனாயிருக்கை யன்றிக்கே தான் முன்னின்று ரக்ஷித்தருளின் செவ்வைக் குணம்
இக்குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்ததென்பார். திருமால் என்றார். அவன் – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
கப்பு -குடைக்காம்பினடியிற் கிளை விட்டாற் போன்றுள்ள வேத்ர தண்டங்கள்.
கோவர்த்தன மலையை ஒரு குடையாக உருவகப்படுத்தியதற்கேற்பத் தடங்கை விரலைந்தும் மலரவைத்த கண்ணபிரான்
கைவிரல்களைக் கப்பாகவும் பாஹுதண்டத்தைக் காம்பாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க.
பின்னடிகளின் கருத்து; – (மலைகளில் சுனை நீரருவிகள் இன்றியமையாதன வாகையால்) இம் மலையில் கண்டவிடமெங்கும்
பரவிப் பெருகுகின்ற தெள்ளருவிகளானவை அமைந்துள்ள படியைப் பார்த்தால் கண்ண பிரானுக்காக முத்துச்சட்டை
ஸித்தப்படுத்தப் பட்டுள்ளது போலும் என உத்ப்ரேக்ஷித்தவாறென்க.
குப்பாயம் – சட்டை; “மெய்ப்பை சஞ்சுளி கஞ்சுகம் வாரணம், குப்பாயமங்கி சட்டையாகும்” என்பது – திவாகரம்.
இங்குச் சந்தர்ப்பம் நோக்கி முத்துச் சட்டை எனப்பட்டது. காட்சி – சி விகுதிபெற்ற தொழிற்பெயர்.

————–

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான்
அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7-

பதவுரை

படங்கள் பலவும் உடை–பல படங்களை யுடைய
பாம்பு அரையன்–ஆதிசேஷன்
படர் பூமியை–பரம்பின பூமியை
தாங்கி கிடப்பவன் போல்–(தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல,
தாமோதரன்–கண்ணபிரான்
தடங்கை–(தனது) பெரிய திருக் கைகளிலுள்ள
விரல் ஐந்தும்–ஐந்து விரல்களையும்
மலர வைத்து–மலர்த்தி (விரித்து)
(அவற்றாலே)
தாங்கு–தாங்கப் பெற்ற
தடவரை–பெரிய மலையாவது;
மந்திகள்–பெண் குரங்குகளானவை,
இலங்கையை சென்று–லங்காநகரத் தேறப்போய்
அடங்க–அவ்வூர் முழுவதையும்
ஈடு அழித்த–சீர்கெடும்படி பங்கப்படுத்தின
அனுமன்–சிறிய திருவடியினுடைய
புகழ்–கீர்த்தியை
பாடி–பாடிக் கொண்டு
தம் குட்டன்களை–தமது (குரங்குக்) குட்டிகளை
குடங்கைக் கொண்டு–கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு
கண் வளர்த்தும்–(சீராட்டி) உறங்கப் பெற்ற
கோவர் — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் ஐந்து விரல்களாலும் மலையைத் தாங்கிக்கொண்டு நின்றது –
ஆதிசேஷன் தனது ஆயிரந்தலைகளினால் பூமியைத் தாங்கிக்கொண்டு கிடப்பதை யொக்குமென்றார் – முன்னடிகளால்.
பலவும் என்றவிடத்து உம்மை – குறைவில்லாமைப் பொருளைத் தருதலால், முற்றும்மை; இசை நிறையென்னவுமாம்.
அரையன் – அரசன்; ‘ராஜா’ என்ற வடசொல் விகாரம்.

பின்னடிகளின் கருத்து ;- அம்மலையிலுள்ள பெட்டைக் குரங்குகள் பண்டு தம் குலத்திற் பிறந்து பற்பல வீரச் செயல்களைச் செய்த
ஹனுமான் இராமபிரானிடத்துப் பெற்ற பரிசுகளைப் பாடிக்கொண்டு தம்குட்டிகளை அகங்கையிற் கொண்டு
சீராட்டி உறங்கச் செய்யும்படியைக் கூறினபடி.
உலகத்திலுங் குழந்தைகளை உறக்க வேண்டுவார் சில கதைகளைச் சொல்லிச் சீராட்டுதல் வழக்கமாயிருப்பதை அறிக.
குட்டன் – உவப்பினால் வந்த திணை வழுவமைதி.

இதற்கு உள்ளுறை பொருள்; –
கபடச் செயல்களுககு ஆசுரமான இந்திரியங்களின் திறலை வென்ற பாகவதர்களின் ஞானானுட்டானங்களைத் தமது
கைக்கடங்கின சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு அறிவை வளரச் செய்கின்ற
மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாறாம்.

————–

சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-8-

பதவுரை

சலம் மா முகில்–நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய
பல் கணம்–பல திரளானது,
எங்கும்–இடைச்சேரி யடங்கலும்
பூசல் இட்டு–கர்ஜனை பண்ணிக் கொண்டு
போர் களத்து சரம் மாரி பொழிந்து–யுத்தரங்கத்தில் சர மழை பொழியுமா போலே நீர் மழையைப் பொழிந்து
நலிவான் உற–(ஸர்வ ஜந்துக்களையும்) வருத்தப் புகுந்த வளவிலே
நாராயணன்–கண்ணபிரான்
கேடகம் கோப்பவன் போல்–கடகு கோத்துப் பிடிக்குமவன்போல
(குடையாக எடுத்துப் பிடித்து)
முன்–முந்துற வருகிற
முகம்–மழையினாரம்பத்தை
காத்த–தகைந்த
மலை–மலையாவது,
கொலை வாய்–கொல்லுகின்ற வாயையும்
சினம்–கோபத்தையுமுடைய
வேங்கைகள்–புலிகளானவை
இலை வேய் குரம்பை–இலைகளாலே அமைக்கப்பட்ட குடில்களில்
தவம் மா முனிவர் இருந்தார் நடுவே சென்று–இருக்கின்ற தபஸ்விகளான மஹர்ஷிகளின் திரளிலே புகுர
(அங்குள்ள ரிஷிகள்)
அணார் சொறிய–(தமது) கழுத்தைச் சொறிய
(அந்த ஸுக பாரவச்யத்தினால், அப்புலிகள்)
நின்று உறங்கும்–நின்ற படியே உறங்கப் பெற்ற
கோவர் – குடையே-.

விளக்க உரை

சரமாரி என்றவிடத்து உவமவுருபு தொக்கிக் கிடக்கிறது. பூசலிடுதல் – இடியிடித்தல். நலிவான் – நலிவதற்காக.
வீரர்கள் போர்க் களத்தில் நெறுநெறென அம்புகளைப் பொழிவது போல மேகங்கள் திரள் திரளாக நீர் கொண்டெழுந்து
முழங்கிக் கொண்டு இடைச்சேரி யடங்கலும் நீரைப் பொழிந்து வருத்தப் புக, கண்ணபிரான் மலையைக் குடையாக
எடுத்துக் கையிற்கொண்டு நின்றது – கேடயம் என்னுமாயுதத்தைக் கையிற்கோத்துக் கொண்டு நிற்றலை ஒக்கும்.
கேடயம் பகைவரை அணுக வொண்ணாதபடி தடுப்பதிற் சிறந்த கருவியாவது போல இம்மலையும் மாரிப்பகையைத்
தடுத்தலில் வல்லதாதலால் இவ்வுவமை ஏற்குமெனக. கேடகம் எனினும், கேடயம் எனினும் ஒக்கும்.
முன்முகம் காத்தமலை – முகமென்று வாயைச் சொல்லிற்றாய் அது இலக்கணையால் வாய்மொழியைச் சொல்லக்கடவதாய்,
முன்பு இடையர்கள் இந்திர பூஜை செய்யப் புகுந்தபோது அதனை விலக்குங்கால் “இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம்” என்று
தான் சொன்ன வாய்மொழியைத் தவறாமல் காப்பாற்றிக் கொள்வதற்குக் காரணமான மலை என்றுமுரைக்க இடமுண்டு.
நாராயணன் – கருத்துடையடைகொளி; பரிசுராங்குராலங்காரம்.
புலிகளானவை பர்ணசாலைகளில் தவம் புரியாநின்ற ரிஷிகள் கோஷ்டியிற் செல்ல, அவற்றின் கழுத்தை அந்த ரிஷிகள்
சொறிந்ததாகக் கூறுவது அவர்களின் தவ உறுதிக்குக் குறைகூறியவாறாகாதோ? எனின்;
எல்லாப் பதார்த்தங்களும் எம்பெருமான் தன்மையனவேயாம் என்று கை கண்டிருக்கும் ரிஷிகளாதலால் ஒரு குறையுமில்லையென்க;
புலிகளின் கழுத்தை ரிஷிகள் சொறியும் போது அவை பரமாநந்தத்துக்குப் பரவசப்பட்டன என்பார், நின்றுறங்கும் என்றார்.
இருந்தார் தவமாமுனிவர் – இருந்த தவமாமுனிவர் என்றபடி; தெரிநிலை முற்றுப் பெயரெச்சமாய் வருதலும் நன்னூலார்க்கு உடன்பாடாம்.
சென்று – செல்ல என்றபடி; எச்சத்திரிபு.

இதற்கு உள்ளுறை பொருள்; –
காமம், குரோதம், மதம், மாச்சரியம் முதலிய தீயகுணங்களுக்கு வசப்பட்டொழுகுகின்ற ஸம்ஸாரிகள் அருந்தவ முனிவரான
நாதமுனிகள் போல்வாருடைய திருவோலக்கத்திலே புகுந்து வருத்தந்தோற்ற நிற்க,
அவர்கள் கருணை கூர்ந்து உய்யும் வழிக்கு உடலான பொருள்களை நெஞ்சில் எளிதிற் பதியுமாறு உபதேசிக்க,
அதனால் அவர்கள் திருந்தி உலக வுணர்ச்சி லுறக்கமுற்றுப் பேரின்பம் நுகருமாற்றைப் பெறுவித்தவாறாம்.

————-

வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை
கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9-

பதவுரை

வல் பேய்–கல் நெஞ்சளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
உண்டது ஓர் வாய் உடையன்–(உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான
தாமோதரன்–கண்ணபிரான்
தன் பேர்–(கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை
இட்டுக் கொண்டு–(மலைக்கு) இட்டு,
வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என–பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று
தரணி தன்னில்–இந்நிலவுலகத்தில்
(உள்ளவர்கள் காணும்படி)
தான் தாங்கு–தான் தாங்கிக் கொண்டு நின்ற
தடவரை–பெரிய மலையாவது;
முசு கணங்கள்–முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள்
(தம் குட்டிகளுக்கு)
முன்பே–ஏற்கனவே
வழி காட்ட–ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக
தம்முடை குட்டன்களை–தம்தம் குட்டிகளை
முதுகில் பெய்து–(தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய்
கொம்பு–மரக் கொம்பிலே
ஏற்றி யிருந்து–ஏற்றி வைத்து
குதி பயிற்றும்–அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற
கோவர் — குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் பசுக்களுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்து வளர்ப்பதனால் தான் பெற்றுள்ள கோவர்த்தநன் என்னுந்திருநாமத்தை
அந்த மலை தனக்கு இட்டு அதனைக் குடையாக எடுத்துத் தாங்கிக்கொண்டு நின்றது –
வலியதொரு ஸ்தம்பம் பெருஞ்சுமையைத் தாங்கி நிற்பதை ஒக்குமென்று முன்னடிகளால் உவமித்துக் கூறினரென்க.
பரத்தை என்றதன்பின் ‘தாங்கி’ என்றொரு வினையச்சம் வருவித்துக்கொள்ளலாம்.
கண்ணனைத் தூணாகவும், மலையைத் தூண் தாங்கு சுமையாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க.
கண்ணபிரான் இவ்வற்புதச் செய்கையைப் பிரமன் இந்திரன் முதலியோர்க்குக் காட்டாது பரம கிருபையினால்
அற்ப மனிதர்க்குக் காட்டியருளினனென்பார் தரணிதன்னில் என்றார்.
இனி, “நின்றதோர் -தன்மேலுள்ளதொரு, வன்பரத்தை -, வன்தூணென – வலிய தூணைப் போலே (தூண்தாங்குவதுபோல என்றபடி),
தாமோதரன் தாங்கு தடவரை தான்” என் வினையெச்ச வருவித்தலின்றியே இயைத்துரைப்பாருமுளர்;

முசு என்பது குரங்குகளின் ஓர்வகைச்சாதி; சேந்தன் திவாகரத்தில் “காருகம் யூகம் கருங்குரங்காரும்” என்றதற்குப் பின்,
“ஒரியுங் கலையுங் கடுவனும் முசுவே” எனக் கூறியுள்ளது காண்க.
குரங்குகளானவை தம்குட்டிகளுக்குக் கிளைதாவும் வழியைக் காட்டுவதற்காக அவற்றைத் தம் முதுகில் கட்டிக்கொண்டுபோய்
ஒரு கொம்பிலிருந்து மற்றொரு கொம்பிலே குதிக்கும் விதத்தைத் தாம் முந்துறக் குதித்துக்காட்டிப்
பயிற்றுவியா நிற்குமென்பது – பின்னடிகளின் கருத்து. குதி – குதித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
முன்பே – பருவம் நிரம்புவதற்கு முன்னமே என்றலுமொன்று.

இதற்கு உள்ளுறை பொருள் –
ஸதாசார்யர்கள் தாங்கள் பிரமாணித்த சிஷ்யர்களைத் தாங்களன்புடனணைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்வழி
காட்டுகைக்காக வேத சாலைகளை ஓதுவித்து அவற்றிலேயே அவர்கள் புத்தி ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருக்கும்படி
ஞானோபதேசம் பண்ணும்படியைக் குறிப்பித்தவாறாம்.

—————-

கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவேறு திரு வுகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம்
முடியேறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி யிருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-10-

பதவுரை

கொடி ஏறு–(ரேகா ரூபமான) த்வஜத்தை யுடைய
செந்தாமரை கை– செந்தாமரை மலர் போன்ற (கண்ணனது) திருக்கையும்
விரல்கள்–(அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டு நின்றதனால்)
கோலமும் அழிந்தில–(இயற்கையான) அழகும் அழியப் பெறவில்லை;
வாடிற்றில–வாட்டமும் பெறவில்லை;
வடிவு ஏறு–அழகு அமைந்த
திரு உகிரும்–திரு நகங்களும்
நொந்தில–நோவெடுக்க வில்லை;
(ஆகையால்)
மணி வண்ணன்–நீலமணி போன்ற நிறத்தனான கண்ணபிரான்
(எடுத்தருளின)
மலையும்–மலையும்
(அம் மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்)
ஓர் சம்பிரதம்–ஒரு இந்திர ஜாலவித்தையாயிருக்கின்றது;
(அந்தமலை எது? என்னில்;)
முடி ஏறிய–கொடுமுடியின் மேலேறிய
மா முகில்–காளமேகங்களினுடைய
பல் கணங்கள்–பல ஸமூஹங்களானவை
எங்கும் மழை பொழிந்து–மலைச் சாரல்களிலெல்லாம் மழை பெய்து (வெளுத்ததனால்)
முன் நெற்றி நரைத்தன போல–(அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற் போல் தோற்றும்படி
குடி ஏறி இருக்கும்–(கொடுமுடியின்மேல்) குடிபுகுந்திருக்கப் பெற்ற
கோவர் –குடையே-.

விளக்க உரை

கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம்
முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே
ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை;
மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ? என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் – முன்னடிகளில்.
சம்பிரதம் – ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி
மாஞ்செடி முளைக்கச் செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை. இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால் இச்செய்கை அபாரமார்த்திகம்
என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் – பின்னடிகளால்.
அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று
அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று
தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு.
கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று;
இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க.
குடியேறியிருந்து மழைபொழியும் – மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.
வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக.

இதற்கு உள்ளுறை பொருள் ;-
வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை
உபதேசித்துத் தாங்கள் சுத்த ஸ்வரூபர்களாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.

————-

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல்
திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11-

பதவுரை

அரவில்–திருவனந்தாழ்வான்மீது
பள்ளி கொண்டு–(பாற்கடலில்) பள்ளி கொள்பவனும்
(அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து)
அரவம்–காளியநாகத்தை
துரந்திட்டு–ஒழித்தருளினவனும்
அரவம் பகை ஊர்தி–ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய,
குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்–குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து அமைந்திருக்கப்பெற்ற
கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்–கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக,
திருவில்–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே
பொலி–விளங்கா நின்றுள்ள
மறைவாணர்–வைதிகர்கள் இருக்குமிடமான
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில்
பட்டர் பிரான்–பெரியழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பரவும் மனம்–அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை
நன்கு உடை–நன்றாக உடையரான
பத்தர் உள்ளார் –பக்தர்களாயிருப்பார்
பரமான வைகுந்தம்–பரம பத்ததை
நண்ணுவர்–அடையப் பெறுவர்.

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் – இப்பாட்டால்.
திருவாய்ப்பாடியிற் பிறந்த காளியன் கொழுப்பை யடக்கின கண்ணபிரான் க்ஷீராப்தி சாயியும் கருட வாஹநனுமான
ஸாக்ஷாத் பரமாத்துமா என்பதைத் தெளிவிக்கும்-முதலடி.
அரவப் பகையூர்தியவனுடைய-அவன் எடுத்துதரித்த என்றவாறு,
குரவமரமும் அதன்மேற் பரந்த கொடிமுல்லையும் நின்றுறங்கு மென்றது-தன்மை நவிற்சி,
நன்கு பரவும் மனமுடை என்று மியைக்கலாம்: நன்கு-கு என்ற விகுதிபெற்ற பண்புப்பெயர்.
“வைகுந்த நண்ணுவரே” எனச் சந்தியாக வேண்டுமிடத்து, “வைகுந்த நண்ணுவரே” என நகரவொற்று மிக்கது,
செய்யுளோசை நோக்கி; விரித்தல் விகாரம்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: