ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற்றாருமில்லை–3-3-1-

பதவுரை

நங்கைமீர்–பெண்காள்!,
ஒரு காது–ஒரு காதிலே
சீலைக் குதம்பை–சீலைத் தக்கையையும்
ஒரு காது–மற்றொரு காதிலே
செம் நிறம் மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு)
கூறை உடையும்–திருப் பரியட்டத்தின் உடுப்பையும்
(அது நழுவாமைக்குச் சாத்தின)
கோலம்–அழகிய
பணை–பெரிய
கச்சும்–கச்சுப் பட்டையையும்
குளிர்–குளிர்ந்திரா நின்றுள்ள
முத்தின்–முத்தாலே தொடுக்கப் பெற்று
கோடு–(பிறை போல்)வளைந்திருக்கின்ற
ஆலமும்–ஹாரத்தையும்
(உடையனாய்க் கொண்டு)
காலி பின்னே–கன்றுகளின் பின்னே
வருகின்ற–(மீண்டு)வாரா நின்ற
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய
வேடத்தை–வேஷத்தை
வந்து காணீர்–வந்து பாருங்கள்;
ஞாலத்து–பூ மண்டலத்திலே
புத்திரனை–பிள்ளையை
பெற்றார்–பெற்றவர்களுள்
(’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்)
நானே–நான் ஒருத்தியே யாவேன்;
மற்று ஆரும் இல்லை–வேறொருத்தியுமில்லை.

விளக்க உரை

சீலைக்குதம்பை= ‘போய்ப் பாடுடைய நின்’’ என்ற திருமொழியில் யசோதைப் பிராட்டி கண்ண பிரானை
வேண்டியழைத்துக் காதிலிட்ட துணித்திரி. “திரியை யெரியாமே காதுக்கிடுவன்” என்று சொல்லி இட்டாளன்றோ.-
இரண்டு காதுகளிலும் அத் திரியை இவள் இட்டனுப்ப, அவன் காட்டிலே ஒரு காதில் திரியைக் களைந்திட்டுச்
செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தமை அறிக. உடை என்று வஸ்திரத்திற்கும் அதனை உடுத்துதற்கும் பேர்.
இங்கு இரண்டாவதான தொழிற்பெயரைக் கொள்க.
ஆலம்-’ஹாரம்’ என்ற வடசொல் ஆரமெனத் திரிந்து ரகரத்திற்கும் லகரம் போலியாக வந்தது:
அன்றிக்கே, ‘கோடாரமும்’ என்றே பாடமாகவுமாம்;
அன்றிக்கே, ‘கோடாலம்’ என்றொரு முழு சொல்லாய் முத்துப் பணியைச் சொல்லிற்றாகவுமாமென்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.
வேடம்-வேஷம். பெண்காள்! கச்சுங் கூறையுமாரமுமாக என் கண்ணபிரான் கன்று மேய்த்து மீண்டு வருகின்ற
கோலத்தை வந்து காண்மின்; பிள்ளை என்றால் இவனொருத்தனே யொழிய மற்றைப் பிள்ளைகள்
அணிற்பிள்ளை கீரிப் பிள்ளை தென்னம் பிள்ளையேயாமத்தனை;
அவற்றைப் பெற்ற தாய்களோடு மலடிகளோடு ஒருவாசி யில்லை;
‘புத்ரவதீ’ என்று எனக் கொருத்திக்கே யன்றோ பட்டங்கட்டத்தகும் என்று புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாள்.

——————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து
உன்னை இளங் கன்று மேய்க்கச் சிறு காலே யூட்டி ஒருப் படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா-3-3-2-

பதவுரை

கன்னி–அழிவற்ற
நல்–விலக்ஷணமான
மா மதிள்–பெரிய மதிள்களாலே
சூழ் தரு–சூழப்பட்டு
பூ பொழில்–பூஞ்சோலைகளை யுடைய
காவிரி–காவேரி நதியோடு கூடிய
தென் அரங்கம்–தென் திருவரங்கத்தில்
மன்னிய–பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற
சீர்–கல்யாண குண யுக்தனான
மது சூதனா–மதுஸூதநனே! [கண்ணபிரானே!]
கேசவா–கேசவனே!
பாவியேன்–பாவியாகிய நான்
வாழ்வு உகந்து–(நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி
உன்னை–(இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை
சிறுகாலே–விடியற்காலத்திலேயே
ஊட்டி–உண்ணச் செய்து
இள கன்று மேய்க்க–இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக)
ஒருப்படுத்தேன்–ஸம்மதித்தேன்;
(இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த)
என்னில்–என்னிற்காட்டில்
மனம் வலியாள்–கல் நெஞ்சை யுடையளான
ஒரு பெண்–ஒரு ஸ்த்ரீயும்
இல்லை-(இவ் வுலகில்) இல்லை;
என் குட்டனே–எனது குழந்தாய்!
முத்தம் தா–(எனக்கு) ஒரு முத்தம் கொடு.

விளக்க உரை

கன்னி-ஸ்திரமாயிருக்கை; நிகண்டு;-
“கன்னிபெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே”” என்றான் மண்டல புருடன்.
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை நோக்காது உன்னை
இடைப் பிள்ளையாகவே நினைத்துச் சாதித்தொழிலென்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக்
காடேறப் போக விட்ட எனது நெஞ்சின் காடிந்யத்தை என்னென்று சொல்வேன்;
இவ்வாறு கடினமான நெஞ்சையுடைய ஸ்த்ரீமர்ராரெனுங் கிடைப்பாளோவென்று இவ்வுலகெங்குந் தேடினாலும் கிடையாள்;
வேறு சிலராகில் நெஞ்சழிந்து விழுந்து விடார்களோ? இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயனென்?
எனக்குண்டான இவ்வருத்தமெல்லாந்தீர ஒருமுத்தங் கொடுத்தருள் என்று அணைத்து உகந்து சொல்லுகின்றாள்.
வாழ்வு உகந்து என்ற சொல்நயத்தால்-
ஸ்வ ப்ரயோஜநத்தைக் கணிசித்தேனேயொழிய உன் ஸம்ருத்தியை நான் விரும்பிற்றிலேனே என்று
உள் வெதும்புகின்றமை தோற்றும்.
ஒருப்படுத்தேன்=ஒருப்பாடு-ஒருமனப்படுதல், ஸம்மதித்தல் என்றபடி:
‘நீ கன்று மேய்க்கும்படியை நான் ஸம்மதித்தேன்’ என்கை.
“ஒருப்படுத்தேன்”” என்கிறவிது-உடன்பாட்டுக்கும் எதிமறைக்கும் பொதுவான வினை;
இங்கு உடன்பாட்டில் வந்ததென்க. முத்தம்-அதரம்.

—————-

காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3-

பதவுரை

காடுகள் ஊடு போய்–(பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து
(கன்றுகள் கை கழியப் போகாத படி)
மறி ஓடி–(அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி
கன்றுகள் மேய்த்து–(அக்) கன்றுகளை மேய்த்து
கார் கோடல் பூ சூடி–பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு
வருகின்ற–(மீண்டு) வருகின்ற
தாமோதரா–கண்ணபிரானே!
உன் உடம்பு–உன் உடம்பானது
கன்று தூளி காண்–கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்;
மயில் பேடை–பெண் மயில் போன்ற
சாயல்–சாயலை யுடைய
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மாணாளா–வல்லபனானவனே!
(இந்த உடம்பை அலம்புவதற்காக)
நீராட்டு அமைத்து வைத்தேன்–நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்;
(ஆகையால் நீ)
ஆடி–நீராடி
அமுது செய்–அமுது செய்வாயாக;
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
உண்பான்–உண்ண வேணுமென்று
அப்பனும்–(உன்) தகப்பனாரும்
உண்டிலன்–(இதுவரை) உண்ணவில்லை.

விளக்க உரை

கண்ணபிரானே! நீ கன்று மேய்க்கக் காட்டிடைப் புகுந்து மேய்க்கும் போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட,
அப்படி அவ்ற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்து விட்டு
வரும் போது உன் உடம்பெல்லாம் புழுதி படிந்து கிடக்கின்றது;
இந்த மாசு தீரும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலிய ஸாமக்ரிகளச் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ வந்த பிறகு உன்னுடனே உண்ண வேணுமென்று உன் தகப்பனாரும் இது வரை உண்ணாமல் காத்திருக்கின்றார்;
ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள். கோடல் பூ-காந்தள் பூ; கார்-பெருமைக்கும் பேர்.

——————

கடியார் பொழிலணி வேங்கடவா கரும் போரேறே நீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங் கமல
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்–3-3-4-

பதவுரை

கடி ஆர்–(மலர்களின்) பரிமளம் நிறைந்த
பொழில்–சோலைகளை யுடைய
அணி–அழகிய
வேங்கடவா–திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
போர்–யுத்தஞ்செய்ய முயன்ற
கரு ஏறே–காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே!
மாலே–(கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே!
எம்பிரான்–எமக்கு ஸ்வாமி யானவனே!
நீ உகக்கும்–நீ விரும்புமவையான
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
குழலும்–வேய்ங்குழலையும்
தருவிக்க–(நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும்
கொள்ளாதே–(அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல்
போனாய்–(கன்றுகளின் பின்னே) சென்றாய்;
கடிய வெம் கான் இடை–மிகவும் வெவ்விய காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போன–தொடர்ந்து சென்ற
சிறு குட்டன்–சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய
செம் கமலம் அடியும்–செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும்
வெதும்பி–கொதிக்கப் பெற்று
உன் கண்கள்–உன் கண்களும்
சிவந்தாய்–சிவக்கப் பெற்றாய்;
நீ;
அசைந்திட்டாய்–(உடம்பு) இளைக்கவும் பெற்றாய்

விளக்க உரை

கண்ணபிரானே நீ கன்று மேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நான் முன்னமே நினத்துக்
‘குடையையுஞ் செருப்பையுங் கொள்’ என்று வேண்டியும் அவற்றை நீ கொள்ள வில்லை.
அங்குமிங்குஞ் சிதறியோடுங் கன்றுகளை நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே வேய்ங்குழலை யூதி யழைத்துக்
கிட்டுவித்துக் கொள்வதற்காக அவ் வேய்ங்குழலையுங் கொடுக்கக் கொண்டிலை;
நீ சென்ற விடமோ மிகவும் தீக்ஷ்ணமான! காட்டு நிலம்; காலிற் செருப்பில்லாமையாலே செங்கமலவடிகள் வெதும்பிப் போயின;
மேல் குடை யில்லாமையாலே கண்கள் சிவந்தன; இங்குமங்குந் திரியாமல் இருந்த விடத்தே யிருந்து கன்றுகளை மேய்க்கக்
குழலிலாமல் தட்டித் திரியும்படியால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் நோக்கக் கடவதோ யென்று வயிறு பிடிக்கிறாள்.
தருவிக்க என்பதற்கு கொடுக்க என்று தன் வினைப் பொருள் கொள்க.
போனாய் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல், போனவனே! என விளியாகக் கொள்ளலுந் தகுமெனக் கொள்க.
கண்கள் சிவந்தாய்- “சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்” என்ற நன்னூற் சூத்திரமுணர்க.

—————

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்-3-3-5-

பதவுரை

முன்–(பாரதப் போர் செய்த) முற் காலத்தில்
பற்றார்–(உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்
நடுங்கும்–நடுங்கும்படி
பாஞ்ச சன்னியத்தை–சங்கத்தை
போர் ஏறே–போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய்–
சிறு ஆயர் சிங்கமே–சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே!
சீதை–ஸீதாப் பிராட்டிக்கு
மணாளா–வல்லபனானவனே!
சிறு குட்டன்–சிறு பிள்ளையாயிருப்பவனே!
(இப்படியிருக்கச் செய்தேயும்)
செம் கண் மாலே–செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே!
நீ;
சிறு ஆடையும்–(உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும்
சிறு பத்திரமும் இவை–குற்றுடை வாளுமாகிற இவற்றை
(காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே)
கட்டிலின் மேல் வைத்து போய்–(கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய்
கன்று ஆயரோடு–கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே
கன்றுகள் மேய்த்து–கன்றுகளை மேய்த்து விட்டு
(மீண்டு மாலைப் பொழுதிலே)
கலந்து உடன்-(அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து
வந்தாய் போலும்–(வீட்டுக்கு) வந்தாயன்றோ?.

விளக்க உரை

(“த்விஷதந்நம் ந போக்தவ்யம் – பாண்டவாந் த்விஷஸே ராஜந்“) என்று கண்ணபிரான் தானே அருளிச் செய்தமையால்,
துர்யோதநாதிகள் பாண்டவர்களுக்குப் பகைவராயினும் இவன்றனக்கே பகைவராகச் சொல்லப்பட்டனர்,
உயிர் வேறல்லாமையாலே நடுங்க -என்ற கீதையை நினைக்க.
சிறுக்குட்டன்+செங்கண்மால்=சிருகுட்டச் செங்கண்மால்; “சிலவிகாரமாமுயர்திணை”” என்பது நன்னூல்.
சிறுகுட்டன் -சிறுகுட்டனே! என விளித்தவாறு;
“இம் முப் பெயர்க் கண் இயல்பும் ஏயும், இகர நீட்சியு முருபாம் மன்னே” என்பதும் நன்னூல்.
சிறுப் பத்திரம்-சிறிய கத்தி; “பத்திரமிலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம்”” என்பது நிகண்டு.

பின்னிரண்டடிகளின் கருத்து:-நீ கன்றுமேய்க்க காடு செல்ல நினைத்தபோது நான் உனது உத்தரீயத்தையும்
விளையாட்டுக்கு உபகரணமான சொட்டைக் கத்தியையும் தரச் செய்தேயும் நீ போகையிலுள்ள விரைவாலே
அவற்றைக் கட்டிலிலேயே வைத்து மறந்து விட்டுக் காட்டுக்குப் போய் இடைப் பிள்ளைக ளோடொக்கக் கன்றுகளை மேய்த்து விட்டு
மாலைப் பொழுதானவாறே அப் பிள்ளைகளோடு கூடவே ‘இவன் இவர்களிலே ஒருவன்’ என்றே நினைக்கும்படி
வந்து சேர்ந்தாயன்றோ என்று உகக்கிறாள்;
மேல் பீதாம்பரமும் உடைவாளும் கையிலிருந்தால் வைலக்ஷண்யந் தோற்றும் என்பது உட்கருத்து.

————–

அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6-

பதவுரை

அம் சுடர்–அழகிய ஒளியை யுடைய
ஆழி–திருவாழி யாழ்வானை
கை அகத்து–திருக் கையிலே
ஏந்தும்–தரியா நின்றுள்ள
அழகா–அழகப் பிரானே!
நீ;
பொய்கை–(காளியன் கிடந்த) பொய்கையிலே
புக்கு–போய்ப் புகுந்து
(அவ் விடத்தில்)
பிணங்கவும்–சண்டை செய்த போதும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்–நான் ஜீவித்திருந்தேன்;
என் செய்ய–ஏதுக்காக
என்னை–என்னை
(இப்படி)
வயிறு மறுக்கினாய்–வயிறு குழம்பச் செய்கின்றாய்;
ஏது ஓர் அச்சம் இல்லை–(உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே;
காயாம் பூ வண்ணம் கொண்டாய்–காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே!
கஞ்சன்–கம்ஸனுடைய
மனத்துக்கு–மநஸ்ஸுக்கு
உகப்பனவே–உகப்பா யுள்ள வற்றையே
செய்தாய்–செய்யா நின்றாய்.

விளக்க உரை

முதலடியில் ‘உன்’ என்றது-வார்த்தைப்பாடு; பொருளில்லை.
கண்ணபிரானே! நீ அன்றொருகால் காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட, அவன் தன் உடலாலே உன்னைக் கட்ட
அதை உதறிப் பொகட்டு அவனுச்சியின் மீதேறி அவன் வாலைப் பிடித்துக் கொண்டு நின்று திளைத்து அவன் வாயாலே
ரத்தம் கக்கும்படி ஆடி இப்படியாய்க் கொண்டு அந்யோந்யம் பிணங்கின போது நான் உயிர் தரித்திருக்கப் பட்டபாடு பகவானறியும்;
நீயோ வென்றால் இறையுமஞ்சுகிறிலை; உன்னைக் கொல்ல ஸமயம் பார்த்திருக்கின்ற கம்ஸன் தன் மனோ ரதம்
நிறைவேறப் பெற்று மகிழும் படியாகக் காட்டுக்குச் சென்று கண்டவிடமெங்குந் திரியா நின்றாய்;
இப் படிகளை நினைத்தால் என் வயிறு குழம்புகின்றது; இப்படி என் குடலைக் குழப்புவதனால் நீ பெறும் போது என்னோ?
அறிகிலேன் என்கிறாள்.
[காயாம்பூ இத்யாதி.] இவ்வடியின் பெருமயை நினைக்கிறாயில்லையே! என்றவாறு.
“வேண்டினபடியாகிறது, இவ்வடிவுக்கு ஒரு வைகல்யம் வாராமல் பிழைக்கப் பெற்றேனே யென்கை” என்பது ஜீயருரை.
மறுக்கினாய் என்பதற்கு ‘மறுக்கின்றாய்’ என்றும், செய்தாய் என்பதற்குச் ‘செய்கின்றாய்’ என்றும் நிகழ் காலப்பொருள் கொள்ளல் தகும்;
இது வழுவமைதியின் பாற்படும்: “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி”” என்றார் நன்னூலார்.

————–

பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றி னுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கன மாவார்களே–3-3-7-

பதவுரை

பன்றியும்–மஹா வராஹமாயும்
ஆமையும்–ஸ்ரீகூர்மமாயும்
மீனமும்–மத்ஸ்யமாயும்
ஆகிய–திருவவதரித்தருளின
பால் கடல் வண்ணா–பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே!
உன் மேல்–உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால்
கன்றின் உரு ஆகி–கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு
மேய் புலத்தே வந்து–(கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த
கள்ளம் அசுரர் தம்மை–க்ருத்ரிமனான அஸுரனை
(அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து)
சென்று–(அக்கன்றின் அருகிற்)சென்று
சிறு கைகளாலே–(உனது) சிறிய கைகளாலே
பிடித்து–(அக்கன்றைப்) பிடித்து
விளங்காய்–(அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி
எறிந்தாய் போலும்–விட்டெறிந்தா யன்றோ;
என் பிள்ளைக்கு–என் பிள்ளையான கண்ணபிரானுக்கு
தீமை செய்வார்கள்–தீமைகளை உண்டுபண்ணுமவர்கள்
என்றும்–என்றைக்கும்
அங்ஙனம் ஆவார்கள்–அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள்.

விளக்க உரை

‘பாற்கடல்வண்ணா’ என்றது-க்ருஷ்ணாவதாரத்தில் நிறத்தைச் சொன்னபடியன்று;
‘பாலின் நீர்மை செம்பொனீர்மை’ என்ற பாட்டிற் சொல்லியபடி-ஸாத்விகர்களான க்ருதயுக புருஷர்களுடைய ருசிக்குத்
தக்கபடி திருமேனி நிறத்தை யுடையவனாய்க் கொண்டு அவர்களைக் காத்தருளினவாற்றைச் சொல்லுகிறதென்க;
இனி, ‘பாற்கடல்வண்ணா”’ என்று பாடமாகில், பார்[பூமி] சூழ்ந்த கடல் போன்ற [கறுத்த] நிறத்தையுடையவனே! என்று பொருளாய்
இவ் வவதாரத்தின் நிறத்தையே சொல்லிற்றாகலாம்.
கன்றினுருவாகி வந்த அசுரன் [வத்ஸாஸுரன்] ஒருவனாதலால் ‘அசுரன்றன்னை’ என்று ஒருமையாக சொல்ல வேண்டியிருக்க,
அங்ஙனஞ் சொல்லாது ‘அசுரர்தம்மை’ என்று பன்மையாகக் கூறினது-பால்வழுவமைதியின் பாற்படுமென்க;
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினுனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்றார் நன்னூலார்;
கோபத்தினால் பன்மைப்பால் ஒருமைப் பாலாதலே யன்றி ஒருமைப் பால் பன்மைப் பாலாதலும் உண்டென்பது ஒருசாரார் கொள்கை;
சிறிய திருமடலில், “அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போற் கிடந்தானைக் கண்டவளும்,
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்திங்கார்ர் புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிது செய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்,
ஊரார்கள் எல்லாருங்காண உரலோடே, தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப, ஆராவயிற்றி னோடாற்றாதான்” என்றவிடத்து
‘ஐய்யர்’ ‘நீராம்’ என்று ஒருமைப் பால் பன்மைப் பாலாக அருளிச் செய்துள்ளமையும்,
‘தீரர்வெகுளியளாய்’’ என்றமையால் இதுக்கு அடி கோபமென்பதும் இங்கு உணரத்தக்கது.
“உண்ணிலாவியவைவரால்”” என்ற பதிகத்திலும் மற்றும் பலவிடங்களிலும் ஐம்பொறிகளை ‘ஐவர்’ என உயர்திணையாற் கூறியது,
இழிபு பற்றிய திணை வழுவமதி என்றாற்போலக் கொள்க.
“கன்றினுருவாகி” என்றதை உபலக்ஷணமாக்கித் தாம்பர்யங் கண்டுகொல்வது;
அன்றிக்கே,
ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் ப்ரேமாதிசயத்தாலே, வந்த ஒருவனே ஒன்பதாகத் தோற்றி
பஹூவசநம் ப்ரயோகித்தார் என்று கொள்ளவுமாம்” என்பர் ஒரு அரும்பதவுரைகாரர்.

கண்ணபிரானே! உன்னை நலிய வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் அநாயாஸமாக முடித்தவனன்றோ நீ –
என்று யசோதை சொல்ல, அவன் ‘ஆம்’ என்ன அதைக் கேட்ட யசோதை மன மகிழ்ச்சி ஒரு பக்கத்திலும்
வயிற்றெரிச்சல் ஒரு பக்கத்திலுமாய் ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்யக் கருதுமவர்கள் என்றும்
அப்படியே மாளக்கடவர்கள்’’ என்று கைநெரித்துச் சாபமிடுகிறாள் ஈற்றடியில்.

—————-

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8-

பதவுரை

கேசவா–கண்ணபிரானே!
கேட்டு அறியாதன–(உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை
கேட்கின்றேன்–(இன்று) கேட்கப் பெற்றேன்;
(அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;)
கோவலர்–கோபாலர்கள்
இந்திரற்கு–இந்திரனைப் பூஜிப்பதற்காக
காட்டிய–அனுப்பிய
சோறும்–சோற்றையும்
கறியும்–(அதுக்குத் தக்க) கறியையும்
தயிரும்–தயிரையும்
உடன் கலந்து–ஒன்று சேரக் கலந்து
உண்டாய் போலும்–உண்டவனன்றோ நீ;
(இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை)
ஊட்ட–(நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க)
முதல் இலேன்–கைம் முதல் எனக்கில்லை;
உன் தன்னை கொண்டு–உன்னை வைத்துக் கொண்டு
ஒரு போதும்–ஒரு வேளையும்
எனக்கு அரிது–என்னால் ஆற்ற முடியாது;
வாட்டம் இலா–(என்றும்) வாடாத
புகழ்–புகழை யுடைய
வாசு தேவா–வஸுதேவர் திருமகனே!
இன்று தொட்டும்–இன்று முதலாக
உன்னை–உன்னைக் குறித்து
அஞ்சுவன்–அஞ்சா நின்றேன்.

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங்கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த
சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச் சொல்லித் தானே
ஒரு தேவதா ரூபங்கொண்டு அமுது செய்தனனென்ற வரலாற்றைப் பலர் சொல்ல கேட்டுணர்ந்த யசோதைப் பிராட்டி
அக் கண்ணனை நோக்கிப் ‘பிரானே! நீ இங்ஙனே செய்தாயோ தான்’ என்ன;
அவனும் மறு மாற்ற முரையாதொழிய ‘பாசன நல்லன பண்டிகளாற் புகப்பெய்த அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமுந் தயிர்வாவியும்
நெய்யளறுமடங்கப் பொட்டத்துற்றின உனக்கு நான் நாடோறு மவ்வளவு சோற்றை யூட்டி வளர்க்கைக் கீடான
கைச்சரக்கற்ற வளாகையால் இனி உன்னை எவ்வாறு வளர்க்கக் கடவதென்று மிகவுமஞ்சா நின்றேனென்கிறாளென்க.
முதல் – கைம்முதல்; மூலத்ரவ்யம் என்றபடி.

——————

திண்ணார் வெண் சங் குடையாய் திருநாள் திருவோணமின் றேழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய் திங்கே யிரு–3-3-9-

பதவுரை

திண் ஆர்–திண்மை பொருந்திய
வெண் சங்கு–வெண் சங்கத்தை
உடையாய்–(திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே!
கண்ணா–கண்ணபிரானே!
திருநாள்–(நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்–திருவோண க்ஷத்திரம்
இன்று–இற்றைக்கு
ஏழு நாள்–ஏழாவது நாளாகும்;
(ஆதலால்,)
முன்–முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை கூவி–பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து
முளை அட்டி–அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்–மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய–(திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு
கறியும்–கறி யமுதுகளையும்
அரிசியும்–அமுது படியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்–பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ-;
நாளைத் தொட்டு–நாளை முதற்கொண்டு
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போகேல்–(காட்டுக்குப்) போக வேண்டா;
கோலம் செய்து–(உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு
இங்கே இரு–இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக.

விளக்க உரை

திண்ஆர் – சத்ரு நிரஸநத்தில் நிலை பேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது.
யசோதைப் பிராட்டி கண்ணனை நோக்கி இப் பாசுரஞ் சொல்லியது. விசாகா நக்ஷத்திரத்தினன்று என்றுணர்க.
பண் – இசைப் பாட்டு. இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்ம நக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான
மங்கள காரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்;
அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்;
ஆகையால் இனி நீ சாதித் தொழிலைத் தவிர்ந்து உத்ஸவ விக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக் கொண்டு
இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப் பிராட்டி வேண்டுகின்றாள்.
முளையட்டுதல் – கல்யாணாங்கமாக நவ தானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை. கண்ணாலம் – மரூஉமொழி

——————

புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10-

பதவுரை

புற்று–புற்றிலே (வளர்கின்ற)
அரவு–பாம்பின் படத்தை ஒத்த
அல்குல்–அல்குலை உடையளாய்
அசோதை–யசோதை யென்னும் பெயரை யுடையளாய்
நல்–(பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான
ஆய்ச்சி–ஆய்ச்சியானவள்
தன் புத்திரன்–தன் மகனான
கோவிந்தனை–கண்ணபிரானை
கன்று இனம் மேய்த்து வரக் கண்டு–கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு
உகந்து–மன மகிழ்ந்து
அவள்–அவ் யசோதை
(அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)
கற்பித்த–நியமித்துக் கூறிய
மாற்றம் எல்லாம்–வார்த்தைகளை யெல்லாம்;
செற்றம் இலாதவர்–அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ் தரு–வாழுமிடமான
தென்–அழகிய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
கற்று–(ஆசார்ய முகமாக) ஓதி
பாட வல்லார்–(வாயாரப்) பாட வல்லவர்கள்
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய
கழல் இணை–திருவடி யிணைகளை
காண்பார்கள்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

விளக்க உரை

இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டுகிறார்.
‘புற்றரவல்குலசோதை’ என்று – சரீர குணமும், ‘நல்’ என்று ஆத்ம குணமுஞ் சொல்லிற்றாகக் கொள்க.
கற்பித்த மாற்றம் – இத் திருமொழியில், மூன்றாம் பாட்டிலும் ஒன்பதாம் பாட்டிலும் நியமித்தவாறு காண்க.
வாழ்தரு = தரு – துணை வினை.

அடிவரவு :- சீலை கன்னி காடு கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று தழை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: