ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -3-2–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின்
என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1-

பதவுரை

அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்–இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை–(அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை–(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்–(தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே–(இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி–(காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை–கம்ஸனை
காய்ந்த–சீறி யுதைத்த
கழல்–வீரக் கழலை அணிந்துள்ள
அடி–திருவடிகள்
நோவ–நோம் படியாக
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்–ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே–மஹாபாபம்! மஹாபாபம்.

விளக்க உரை

ஆயர் கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகிய கொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்;
வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்து போலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவு வந்தால்
முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படி யிருத்தலால் கொழுந்தெனப்பட்டான்.
“மஞ்சனமாட்டி” என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும்.
கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய
பாவியேனுடைய பாவ நினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள்.
கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.

———–

பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2-

பதவுரை

பாடியில்–திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி–பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து–(அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்–எல்லா விடங்களிலும்
தீமை செய்து–தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு–அவ் விடைப் பெண்களோடே
திரியாமே–திரிய வொட்டாமல்,
கன்று–கன்றுகளினுடைய
தூளி உடை–தூள்களை யுடைத்தாய்
வேடர்–(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை–காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை–என் மகனை
எற்றுக்கு போக்கினேன்–ஏதுக்காக அனுப்பினேன்!

விளக்க உரை

திருவாய்ப் பாடியில் இடைப் பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக்
கண்ண பிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப் பார்ப்பார்களாம்; ஆதலால் அம் மஞ்சள் பற்று மஞ்சள் எனப் பேர் பெற்றது.
[கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால்
கண்ண பிரானுடைய பொன் போல் மஞ்சன மாட்டின மேனி நிறம் மழுங்குமே யென்று வயிறெரிகின்றனள்.

—————-

நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும்
பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின்
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3-

பதவுரை

என்–என் மகனான
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்–லோகோத்தரமான
மணி–நவ மணிகள் பதித்த
மேகலை–மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு–யுவதிகளோடு கூட
நாள் தொறும்–தினந்தோறும்
பொன் மணி மேனி–அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி–புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே–திரிய வொண்ணாதபடி
கான்–காட்டிலே
(இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்)
கல்–மலையிலே
மணி நின்று அதிர்–மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை–வழியிலே
(வருந்தும்படியாக)
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போக்கினேன்–போகவிட்டேனே!
எல்லே பாவமே!

விளக்க உரை

என் கண்ணபிரான் தானுகந்த பெண்களோடு கூடித் திருமேனி புழுதி படியும்படி யதேச்சமாக விளையாடிக் கொண்டு
இச் சேரியிலேயே திரிந்து கொண்டிருந்ததைத் தவிர்த்துக் கொடிய காட்டு வழியிலே போகவிட்டேனே பாவியேனென்று பரிதபிக்கின்றான்.
’கல்’ என்ற சொல் இலக்கணையால் மலையை உணர்த்திற்று.
கண்ண பிரான் காட்டு வழியிற் போம் போது இவன் கன்றுகளை அழைக்கின்ற த்வநியாலும்,
அதைக் கேட்டு அவை கூப்பாடு போடுகின்ற த்வநியாலும் அருகிலுள்ள மலைகளில் பயங்கரமான பிரதித்வநி கிளம்புமே!
என்று வழியின் கொடுமையை நினைத்து நோகின்றாளென்க.

—————

வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட
பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4-

பதவுரை

கண்ணுக்கு இனியானை–கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை–(இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்–இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து–பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்–அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்–பெண் பிள்ளைகள்
வந்து–(தாயாகிய என்னிடம் ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி–பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கான் அதர் இடை–காட்டு வழியிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்–அனுப்பினேனே!
எல்லே பாவமே!

விளக்க உரை

கண்ணுக்கினியானை=எத்தனையேனுந் தீம்பு செய்யிலும் அவன் வடிவழகை நினைத்தால்
‘ஆகிலுங்கொடிய வென்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்’ என்றாற்போல இவனை விடப் போகாதே!’ என்று கருத்து.

—————-

அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5-

பதவுரை

தெய்வம்–தேவர்களுக்கு
தலைவனை–நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு–(மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு–(அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்–அந்தரங்கனாய்
(அவர்களுக்கு)
கொவ்வை கனி–கோவைப் பழம் போன்ற
வாய்–(தன்) அதரத்தை
கொடுத்து–(போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே–கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்–துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை–வில்லை(க்கையிலே) உடைய
வேடர்–வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

விளக்க உரை

கீழ்த்திருமொழியில் ”கேளாராயர் குலத்தவரிப் பழி கெட்டேன் வாழ்வில்லை” என்று சொன்ன யசோதை தானே
இப்போது இங்ஙன் சொல்லுகை சேருமாறு எங்ஙனேயெனின்?
கண்ணபிரானது பிரிவைப் பொறுக்கமாட்டாமல் ‘அவன் என்னை இவ்வாறு பிரிந்து வருத்துதலுங் காட்டில் இங்குத் தான்
நினைத்தபடி தீமை செய்து திரிவானாகில் இத்தனை வருத்தம் எனக்கு விழையாதே! என்று கருதினள் போலும்.
அணுக்கன் -அணுகி யிருப்பவன்; அந்தரங்கமாயிருப்பவன் என்றவாறு
கூழைமை செய்கையாவது- ‘உன்னையொழிய வேறொருத்தியையும் அறியமாட்டேன்,
உன்னைப் பிரிந்தால் க்ஷணமும் தரிக்க மாட்டேன்’ என்றாற்போலச் சொல்லி அவ்வப் பெண்களுக்கே உரியனாய் தோற்ற நிற்கை.

[எவ்வுஞ்சிலை] எவ்வம் என்றால் துன்பம்; அதனைச் செய்யுஞ்சிலை-எவ்வுஞ்சிலையாம்.
அன்றிக்கே;
‘ஏவுஞ்சிலை’ என்கிற விது-எதுகை யின்பம் நோக்கி ’எவ்வுஞ்சிலை’ என்று கிடக்கிறதாகக் கொண்டால்,
ஏ என்று அம்புக்குப் பேராய் அத்தையும் சிலையையுமுடைய என்று பொருளாம்.
மோனயின்பத்துக் கிணங்க ‘வெவ்வுஞ்சிலையுடை’ என்று பாடமோதி
வெவ்விய [தீக்ஷ்ணமான] சிலையை யுடைய என்று உரைத்தல் ஒக்குமென்பாருமுளர்.

—————-

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6-

பதவுரை

என் பிள்ளையை–என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்–வெண்ணெயை
மிடறு–கழுத்திலே
மெழுமெழுத்து ஓட–(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி–விழுங்கி விட்டு
போய்–(பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு–பல கள்ள வேலைகளை
செய்து–செய்து கொண்டு
இ பாடி எங்கும்–இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே–திரிய வொட்டாமல்
பல கடிறு திரி–பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை–காட்டு வழியிலே
இடற–தட்டித் திறியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

விளக்க உரை

இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்க வேண்டுமானால் கல் உண்டோவென்று சோதித்து
மெதுவாகக் கடித்துண்ண வேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே;
ஆகையால் அதனை விழுங்குவன் என்க.
பல படிறு செய்கை யாவது கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறுகை. களிறு என்ற சொல் எதுகை யின்பம் நோக்கிக் கடிறு என வந்தது; டகரப்போலி;

—————

வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7-

பதவுரை

புள்ளின் தலைவனை–பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி–கொடி போன்று
துடங்கு–துவளா நின்றுள்ள
இடை–இடையை யுடைய
மாதர்–இடைப் பெண்கள்
வந்து–(தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட–பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
(அதை ஒரு பொருளாக மதியாமல்)
துள்ளி–(நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு–(தன்) தோழர்களோடு கூட
விளையாடி–விளையாடிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கள்ளி–(மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு–(பால் வற்றி) உலரும் படியாய்
வெம்–மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை–காட்டு வழியிலே

விளக்க உரை

வள்ளி – கொடி போன்று ஒடிந்து விழுகிறாப் போலிருக்கின்ற இடையை யுடையா ரென்றபடி.
‘அப்பெண்களென்னிடம் வந்து இவன் செய்த தீம்புகளைச் சொல்லிப் பழி தூற்றா நின்றால்,
அதனையே இவன் ஏற்றமாகக் கொண்டு மகிழ்ச்சியின் மிகுதியால் தோழருடன் கூடித் துள்ளி விளையாடுவனே;
இவ்வாறான வினோதச் செய்கைகளைச் செய்து திரிய வொட்டாமல் முதுவேனிற் காலத்திலும் பசுகுபச கென்று
விளங்கக் கடவ கள்ளிச்செடியுங் கூடப் பால் வற்றி உலரும்படி வெம்மை மிக்க காட்டுவழியில்
வருந்தும் படி அனுப்பி விட்டேனே! என்று கதறுகின்றனள்.

————–

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8-

பதவுரை

என் இள சிங்கத்தை–எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்–பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்–(என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்–(தாயாகிய) நான்
என்–என்னுடைய
இள–குழைந்திரா நின்றுள்ள
கொங்கை–முலையிலுண்டான
அமுதம்–பாலை
ஊட்டி–(அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து–வளர்த்து
(இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை)
புலரியே–(இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ–அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
கானில்–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;
எல்லே பாவமே!

விளக்க உரை

சக்ரவர்த்தி திருமகனைப் போலவே கண்ண பிரானும் பன்னிரண்டு மாஸம் கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறந்தானென்க.
இவ்வாறு லோக விக்ஷணமாகப் பிறந்த பிள்ளை யிடத்தில் இதுவே காரணமாக மிகுந்த அன்பை வைத்து
அதற்குத் தக்கபடி என்முலைப் பாலை யூட்டி வளர்த்துப் போந்த நான் இன்று காலையில் அவனை யெழுப்பிக் கால் நோவக்
கன்று மேய்க்கக் காட்டில் போகவிட்டேனே யென்று பரிதவிக்கிறாள்.
கண்ணபிரானை யசோதைப் பிராட்டி மெய் நொந்து பெற்றிலளே யாகிலும் “உன்னை யென்மகனே யென்பர் நின்றார்”” என்றபடி
ஊரார் இவனை இவள் பெற்ற பிள்ளையாகவே சொல்லி வருகையால் இவளுமதைக்கொண்டு தானே
அவனைப் பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டாளாகக் கூறினளெனக் கொள்க. பாங்கு – உரிமை, முறைமை.
பிள்ளை முலை நெருடுங்காலத்தில் வரக்கென்றிருக்கை யன்றிக்கே குழைந்திருக்கும்படியைப் பற்ற இளமுலை என்கிறது.
எடுத்து+யான், எடுத்தியான்; “உக்குறல்…யவ்வரின் இய்யாம்” என்பது நன்னூல்.

—————–

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை
கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9-

பதவுரை

என் பிள்ளையை–என் மகனான
தாமோதரனை–கண்ணபிரானை,
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
கொடாதே–(அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் -கொடியவளாகிய நான்
உடையும்–(ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன–கூரியனவாய்க் கொண்டு
ஊன்று–(காலிலே) உறுத்துவனவாய்
வெம்–(இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை–பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்–அத்யுஷ்ணமான
கான் இடை–காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்
எல்லே பாவமே!

விளக்க உரை

நாட்டிலுள்ள பருக்காங்கற்கள் கதிரவனுடைய எரிச்சலினால் ஒன்று பலவாகப் பிளந்து கூர்மை மிக்கு
உள்ளங்காலில் உறுத்தி வருத்துமே, வெயிலுக்குத் தடையாகக் குடையையும், தரையின் வெம்மைக்குத் தடையாகச் செருப்பையும்
அவனுக்குத் தாராமல் இப்படிபட்ட காட்டிற் போக விட்டேன், என் கொடுமை யிருந்தவாறு என்னே! என்கிறாள்.
மேல் திருமொழியில் “குடையுஞ் செருப்புங் குழலுந் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே”” எனக் காண்கையால்
இங்குக் ‘கொடாதே’’ என்பதற்கு அவன் இவற்றை ‘வேண்டா’ வென்று மறுக்கச் செய்தேயும்
நான் கட்டாயப்படுத்தி [பலாத்காரமாக] அவற்றைக் கொடாமல் என்று பொருள் விரித்தல் வேண்டுமென்க.
பரல்-பருக்கை. கால் அடி-காலின் உள்ளடி.

——————-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை
கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10-

பதவுரை

என்றும்–‘எப்போதும்
எனக்கு–(தாயாகிய) எனக்கு
இனியானை–இனிமையைத் தருமவனாய்
என்–என்னுடைய
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று–கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை–யசோதைப் பிராட்டி
கழறிய–(மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்–அருளிச் செய்த
பொன்–பொன் மயமாய்
திகழ்–விளங்கா நின்றுள்ள
மாடம்–மாடங்களை யுடைய
புதுவையர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
இன்–போக்யமான
தமிழ் மாலைகள்–தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–(ஒரு காலும்) துன்பமில்லையாம்.

விளக்க உரை

என்றும்-தீம்பு செய்த காலத்திலுமென்க: ‘கழறிய’ என்பதைப் பலவின் பால் இறந்த கால வினையாலணையும்
பெயராகக்கொண்டு அதில் இரண்டாம் வேற்றுமை யுருபு தொக்கி யிருக்கின்ற தென்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: