தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1-
பதவுரை
இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப்புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.
விளக்க உரை
சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும்
அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்து வந்து புழுதி யளைகின்றான்;
இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண் படைத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற
வியாஜமாக நீ இங்கே வந்து இக் குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று
யசோதைப் பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்.
—————-
என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2-
பதவுரை
மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.
விளக்க உரை
சிறு குழந்தைகளை மாமா முதலாயினோர் மாலைப்பொழுதில் இடுப்பிலெடுத்துக் கொண்டு
“சந்த மாமா! வா வா வா’’ என்று சொல்லக் கற்பித்துக் கையால் அழைக்கும்படி செய்வதும் உலக வழக்கமாதலால்
அப்படியே கண்ணபிரானும் அழைக்கிறானென்க.
சந்திரன் மேகத்தில் மறைந்து போவது இயல்பாதலால் அப்படி மறைந்து போகவேண்டா வென்கிறாள்.
மறையாதே என்பதை எதிர்மறை வினைமுற்றாகவுங் கொள்ளலாம்.
—————
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3-
பதவுரை
அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.
விளக்க உரை
“மாமதி! மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே
‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு
அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள். சந்திரா! நீ இப்போது நாள் தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்;
களங்கமுடையனாயும் இருக்கின்றாய்; இப்படி இல்லாமல் நீ எப்போதும் க்ஷயமென்பதே இல்லாமல் பூர்ண மண்டலமாகவே
இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் என் குழந்தையினுடைய முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.
ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை
உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா;
வாரா விட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக் குழந்தைக்குக் கை நோவு ஒன்றே மிகும்;
இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு.
அம்புலி என்று சந்திரனுக்குப் பெயர். வாழ்நின் என்பது “வாணனென”” மருவிற்று.
————–
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4-
பதவுரை
சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்துகொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டிகாட்டும்–குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.
விளக்க உரை
சந்திரா! இவனை வெறுங்குழந்தையாக நினைத்து அலட்சியஞ் செய்திடாதே; இவன் சக்கரக் கையன் காண்;
நீ வராமல் இருப்பாயானால் உன்மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னைத் தண்டித்து விடுவன் என்னும்
கருத்தை யடக்கி சக்கரக் கையன் என்கிறாள்.
“ஆழி கொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லை காண்” என்று மேலே ஸ்பஷ்டமாகவுங் கூறுவள்.
மக்கள் பெறாத மலடனல்லையேல் வா = குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக்கூடாதென்பது உனக்குத் தெரியுமே என்றவாறு.
———–
அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5-
பதவுரை
புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தியிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம்பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்00ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயேயானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)
விளக்க உரை
சந்திரா! உன்னைக் கூவி அழைக்கிற இக் குழந்தையின் இனிய மழலைச் சொல் உன் காதில் விழவில்லையா? செவிடனா நீ?
உன் காதில் துளையில்லையோ? இக்குழந்தை இனிய முற்றாமழலைச் சொல்லினால் உன்னை அழைக்கவும் நீ
காது கேளாதாரைப்போல போய்விட்டாயானால் நீ காது படைத்தது பயனற்றதாகுமன்றோ என்கிறாள்.
இப்படிப்பட்ட இளஞ்சொல்லைக் கேட்டு உடனே ஓடி வருதலே செவிபடைத்ததற்குப் பலன் என்று காட்டினவாறு.
மழலை – எழுத்துகள் ஸ்பஷ்டமாகத் தெரியாதே மதுரமாயிருக்குமது.
மழலை முற்றாத இளஞ்சொல் என்றது – மழலைத் தனத்துருக்குள்ள முற்றுதலுமில்லாத மிக இளஞ்சொல் என்றபடி.
குழகன் – “கொடுத்தார் கொடுத்தார் முலைகளெல்லா முண்டு எடுத்தாரெடுத்தாரோடெல்லாம் பொருந்தி யிருக்கும்
கலப்புடையவன்” என்பது வியாக்கியான வாக்கியம்.
————–
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6-
பதவுரை
விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தியிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக்கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா
விளக்க உரை
உலகத்தில் மனிதர்களுக்கு அதிகமாகக் கொட்டாவி வந்தால் உடனே உறக்கம் வருமென்பது அநுபவஸித்தம் ஆதலால்
“கண்டுயில் கொள்ளக்கருதிக் கொடடாவி கொள்கின்றான்” என்கிறாள்.
இவன் இப்போது கொட்டாவி விடுகிறபடியாலே இனித் தூங்கிவிடுவன்; தூங்கா விட்டாலோ உண்ட முலைப்பால் ஜரியாது;
ஆதலால் இவன் உறங்கிப் போவதற்கு முன்னமே விரைந்து ஓடிவா என்றழைக்கிறாள்.
முதலடியில் மூன்று ஆயுதங்களைச் சொன்னது பஞ்சாயுதங்கட்கும் உபலக்ஷணம்.
இவ் வாயுதங்களின் அழகை ஸேவித்துப் போக வேண்டுவது உனக்கு உரியதேயன்றி இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி
முடிந்து போகப் பாராதே என்றுணர்த்தியவாறு.
அறா – அறாது; ஜரியாது.
—————————-
பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள்
ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7-
பதவுரை
மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவமதியாமல்
மகிழ்ந்து ஓடிவா–.
விளக்க உரை
சந்திரா! ஓயாமல் உன்னை அழைக்கச் செய்தேயும் நீ வாராமையினால் இவனொரு சிறுபிள்ளை தானே இவனுக்காக
ஓடி வர வேணுமோ என்று அலட்சியமாக நினைக்கிறாய் என்பது தெரிகின்றது;
இவனைச் சிறியவன் என்று நீ குறைவாக நினைக்கலாகாது; இவன் முன்னொரு காலத்தில் உலகங்களை எல்லாம்
பிரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்துக் கொண்டு சிறு பசுங்குழந்தையாய் இருந்தவன்காண்;
இப்படிப்பட்ட இவனை நீ அலட்சியஞ் செய்தால் இவன் உன்மேற் கோபங்கொண்டு பாய்ந்தெழுந்து உன்னைப் பிடித்துக் கொள்ளவுங் கூடும்;
ஆகையால் இவனை அவமதியாமல் உடனே விரைந்தோடி வா என்கிறாள்.
பாலகன். பரிபவம் – வடசொற்கள். “பிடித்துக் கொள்வன்” “வெகுள்வன்” எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து
பிடித்துக்கொள்ளும் என்றும் வெகுளும் என்றும் செய்யு மென்முற்று வந்தன.
——————
சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8-
பதவுரை
நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )
விளக்க உரை
சந்திரா! என் குழந்தையை ‘மற்றுள்ள ஊர்ப் பிள்ளைகளைப் போலே இவனும் ஒரு சிறியவன்தானே’ என்று
இகழ்ச்சியாக நினைக்கிறாய் போலும்;
அப்படி நினையாதே; இவன் முன்பொருகால் மாணிக்குறளுருவாய் மாவலியிடஞ் சென்று செய்த காரியங்களை
அந்த மஹாபலியையே கேட்டுத் தெரிந்துகொள்; மிகப்பெரியவனான இவனைச் சிறியவனென்று நினைத்து அலட்சியஞ் செய்தவிது
மஹத்தான அபசாரம் என்று தாடைமேல் அறைந்து கொள்வாயாகில் பிறகுதான் நீ இவனருகில் வந்து
ஏதேனும் அடிமை செய்வதற்கு யோக்யதை பெறுவாய்.
“சிறுமையின் வார்த்தையை” என்றவிடத்து வார்த்தை என்றது வாய்ச்சொல் என்றபடியன்று; நடவடிக்கை என்றபடி.
“வாத-வூவதி:வதெ: = வார்த்தா ப்ரவ்ருத்திர் வ்ருத்தாந்த:” என்பது அமரகோசம்.
“மாவலியிடைச் சென்று கேள்” என்றதன் கருத்தாவது மாவலியின் கொழுப்பை யடக்கின கதையைக் கொண்டே
நீ அவனது பெருமையை அறுதியிடலாமென்க.
—————————–
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9-
பதவுரை
மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கைஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமேயில்லை;
(இதில் நின்றுந்தப்பி)
வாழ உறுதியேல்–வாழக்கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா
விளக்க உரை
சந்திரா! இவன் உன்னை விரும்பி அழைக்கின்றவிது வெண்ணெயை வாரி விழுங்கின செய்திபோலே ஆசையின்
கனத்தினாலானது என்னுங்கருத்துப்பட முன்னடிகளருளிச் செய்தபடி. அவ் வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால்
கல்லை விட்டெறிந்து அந்தத்தாழியை உடைப்பதுபோல நீயும் வாராதிருந்தால் இவன் சக்ராயுதத்தை உன்மீது பிரயோகித்து
உன் தலையையறுத்திடுவான்; இதில் கொஞ்சமேனும் ஸந்தேஹமில்லை;
இப்படி இவனுடைய நிக்ரஹத்துக்கு இலக்காகி முடிந்து போகாமல் பிழைத்திருக்க விரும்புவாயாகில்
பெருந்தன்மையாய் வந்துவிடு என்பது பின்னடிகளின் கருத்து.
————–
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10-
பதவுரை
மை–மையணிந்த
தட–விசாலமாயிராநின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதையானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸநி) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷாரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொருபடியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்றுமில்லை.
விளக்க உரை
யசோதைப் பிராட்டியானவள் சந்திரனை நோக்கித் தன்மகனுடைய கருத்துக்கு இணங்கின வார்த்தைகளை
(‘சந்திரா! வா’ இத்யாதிகளைச்) சொல்லி அச்சமுறுத்தியும் புகழ்ந்தும் பேசின பாசுரங்களை நான்
அவளுடைய பாவனைகொண்டு பேசினேன்; இப்பாசுரங்களை எவ்விதமாகவாவது வாய்விட்டுச் சொல்லவல்லவர்கட்குத்
துன்பமெல்லாம் நீங்கி ஆநிந்தம் விளையுமென்று – இத் திருமொழிகற்றார்க்குப் பலன்சொல்லித் தலைகட்டினாராயிற்று.
நான்காடியில் எத்தனையும் என்றது – யதாசக்தி என்றபடி.
—–
அடிவரவு – தன் என் சுற்றும் சக்கரம் அழகிய தண்டு பாலகன் சிறியன் தாழி மை உய்ய.
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply