ஸ்ரீ குழைக் காதர் பிரபந்தத்திரட்டு –1. ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்–

ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்—
திருமதி பத்மஜா அனந்தராமன் அவர்களால் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு அமுதமாக‌ அளிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தென் திருப்பேரையில் எழுந்தருளியுள்ள மகரநெடுங்குழைக்காதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன.
அவைகளில் இதுவரை அச்சேறாத ‘குழைக்காதர்கலம்பக’மும், ‘குழைக்காதர் சோபன’மும் –

பராங்குச நாயகி தேடித் தேடி அலைந்து தன் மனம் குருகூருக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில்
தாமிரவருணி ஆற்றங்கரையில் இருக்கும் தெந்திருப்பேரை நகரில் வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும்
நிகரில் முகில்வண்ணணான, மகரக்குழைக்காதனிடம் சென்றுவிட்டது என்றும்,
இனி ஒரு கணம்கூட‌ தாமதிக்காமல் அவனிடம் செல்லவேண்டியதுதான் என்றும் உரைக்கிறாள்.

உற்றார்கள் தன் காதல் வேகத்தைத் தணிக்கச் சொன்ன‌ வழிகளையும் ஒத்துக்கொள்ளவில்லை,
செவி சாய்த்துக் கேட்கவுமில்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காதல் சுரம் நிவர்த்தியாக வேண்டுமென்றால்,
தன்னைகாக்க வேண்டில் “ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்”, என்று கோதையைப்போல் அங்கலாய்க்கிறாள்.

காதல் வெள்ளம் பீறிட்டு, “வெள்ளைச்சுரிசங்கோடாழியேந்தி” என்றும் ஆரம்பித்து,
“ஊழிதோறூழியுருவும் பேரும்” என்று தலைக்கட்டுகிறாள் பராங்குச நாயகி.
தெய்வீகக் காதலர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் சோகம் ஏது? மோகம் ஏது?
‘தத்ர கோ மோஹ:? க: சோக:?’ என்கிறது உபநிஷத்து.

“வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளையாட்டொலியும் அறாத்” திருப்பேரை என்று
நம்மாழ்வாரால் போற்றப்பட்ட இத்திருப்பதி
இப்பதி திருப்பேரெயில், திருப்பேரை, வரலாறு கண்ட பேரை, தண்டமிழ்ப் பேரை, தென்பேரை எனப்
பலவாறாகப் பாராட்டப் பெற்ற ‘கலைமல்கு பேரை’யாகும். ‘பேரெயில்’ என்பது ‘பேரை’ என்று மருவி வழங்கி வருகிறது.
அஷ்டப்பிரபந்த ஆசிரியர் இவ்வூரைத் ‘தென்திருப்பேரை’ என்றே குறிப்பிடுகின்றார்.
மணவாள‌ மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் ‘மகாநகரமான‌ தென்திருப்பேரையிலே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமவதாரத்தில் வெற்றியடைந்த ஜெயராமன் சோழநாட்டில் காவிரிநதி தீரத்தின் வடகரையிலும் தென் கரையிலும் உள்ள
பதினெட்டு ஊர்களைத் தலவகார‌ சாமவேதிகளுக்குத் தானம் செய்த‌தாகக் கூறப்படுகிறது.
அந்த பதினெட்டு ஊர்கள் காவிரிக்கு வடகரையில்எட்டும், தென்கரையில் பத்தும் என வெண்பாவே அறிவிக்கிறது.
“திட்டைக்குடி அன்பில் திரு பூறையூர் அதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயவாலி—
சிட்டர் திருக்குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் என்று வடகரையில் எட்டு”

“இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி —-
இடைமருதூர் நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெருமாள் மங்கை பரணமங்கை தென்கரையிற் பத்து”

ஆதியில் தென் திருப்பேரையில் வாழ்ந்த நூற்றெட்டு குடும்பத்தினரும் ஜைமினி என்ற முனிவரைப் பின்பற்றிய
சாமவேதிகள் என நம்பப்படுகிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த ஜைமினி சாமவேதிகள் ‘தலவ காரர்’ என்று அழைக்கப் படுவதுண்டு.
இவர்கள் ‘கேனோபநிஷத்’ என்னும் உபநிடத்தினைத் தங்கள் தனிச் சொத்தாகக் கருதி வருகின்றனர்.

தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்காதரின் திருமுகத்தை ‘வாடாத செந்தாமரை’ என்று
கோயில் முன் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள பாடல் ஒன்று வருணிக்கிறது. அதனை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை.

“கண்டாயோ சோதிக் கதிரவனே! நீயுமிந்த‌
மண்டலங்கள் எங்கும் போய் வந்தாயே – தண் தமிழ்ச்சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம் போல‌
வாடாத செந்தாமரை”

சூரியனே! நீ உலகமெங்கும் போகிறாய். எங்கள் குழைக்காத பெருமானின் ஜோதி முகம் போன்ற‌
‘வாடாத செந்தாமரை’ யினைப் பார்த்திருக்கிறாயா? என்று புலவர் ஒருவர் வினா எழுப்பினார்.
கோயிலுக்கு எதிரே கருடன் சந்நிதி போன்ற மறைவு ஒன்றும் இல்லாததால் ஆண்டின் ஒரு பகுதியில் சூரிய ஒளி
மூலவரின் முகச் சோதியில் விழுவதைக் கண்டு களித்த புலவர் ஒருவர் இப் பாடலை எழுதியதில் வியப்பொன்றுமில்லை.

பேரையில் பெருமாளின் திருவிளையாட்டினையும் அவருக்குத் துணை நின்ற பிராட்டியார் இருவரின் ஊடலைப் பற்றியும் ‘
தாமிரவருணி மகாத்மியம்’ என்னும் புராணம் விவரிக்கின்றது.
அன்றொரு நாள் வானுலக‌ வைகுந்தத்தில் திருமகளின் மணாளனான தாமரைக் கண்ணனிற்கும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அன்றும் என்றும் போல் கருநிற காயா மலர் மேனியினையுடைய பூமாதேவியிடம் பிரான் மிகுந்த ஈடுபாடு கொண்டதனைக் கண்டு திருமகள் வெகுண்டாள்.
துர்வாச முனிவரின் உதவியினை நாடினாள். அவரும் இசைந்தார்; புறப்பட்டார். பூதேவி பெருமானுடன் மகிழ்ச்சியாக‌ உரையாடிக்
கொண்டிருக்கையில் முனிவர் வந்தார். தன்னைப் பூதேவி புறக்கணித்து விட்டாள் எனச் சீற்றங் கொண்ட முனிவர்,
‘எவ்வழகு காரணமாக நீ செருக்குற்றாயோ அவ்வழகு இல்லாதொழிக’ என சாபமிட்டார்
அவளும் நிறமிழந்து பின் சாப விமோசனமாக இத் திருப்பதியில் உள்ள நிகரில் முகில் வண்ணனின் கோயிலில்
‘பேரை’ என்னும் நாமம் தாங்கித் தவம் புரிந்து மீண்டும் தன் வண்ணத்தைப் பெற்றாள் என்பது வரலாறு

ஒரு பங்குனித் திங்கள் மதிநிறைந்த உத்திர மீன்கூடிய நன்னாளன்று தவமிருந்த திருப்பேரைச் செல்வி
வழக்கம் போல் பெருநை நதியில் தீர்த்தமாடிவிட்டுத் திரு மந்திரத்தை உருவேற்றித் தீர்த்தத்தை அள்ளினாள்.
அதிலே துள்ளும் கயல் போல மகர வடிவமான இரு குழைகள் சுடர் விடுவதைக் கண்டாள்.
அவள் உடலும், உள்ளமும் விம்மிச் சிலிர்த்தன. திருப்பேரைச் செல்வி தன் நாயகனான முகில் வண்ணனின் நீண்ட காதுகள்
இந்த மகரக் குண்டலங்களை யணிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தாள்.
அவர் திருக்கழுத்தின் இரு மருங்கிலும் அழகாக அசைந்தாடுமே என்று பூமகள் எண்ணினாள்.
உடனே பிரானும் தோன்றி தம் நெடிய செவிகளில் அணிந்து பூதேவிக்கு மகிழ்ச்சி யூட்டினாராம்.
இந்த இனிய, அரிய காட்சியினைத் தேவரும், முனிவரும் காணும் பேறு பெற்றனர். இவர்களும் இறைவனைப் போற்றிப் பரவினர்.

பேரையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் அக் குழைகளை அணிந்த காரணத்தால் ‘மகர நெடுங்குழைக் காதர்’ என்னும் பெயர் பெற்றார்.
அக்குழைகள் கிடந்த தீர்த்தம் ‘மகர தீர்த்தம்’ எனப் பெயர் பெற்றது.
நிலமகள் ‘பேரை’ என்னும் பெயருடன் பயன்பெற்ற இடமாதலால் அவ்வூரும் திருப்பேரை என்னும் பெயர் பெற்றது.
இங்கு அதுமுதல் தன்நிறம் பெற்ற பூதேவியான திருப்பேரை நாச்சியாருடன், சீதேவியான குழைக்காத வல்லியுடனும்
பிரான் கோயில் கொண்டு காட்சி தருகிறார். திருப்பேரை நாச்சியாரின் மற்றுமொரு திருநாமம் பேராபுரி நாயகி.
இங்கு இறைவன் சங்கு, கதை, பதுமம் முதலியவற்றை யணிந்தவராய், ஏக வுருவமாய் எழுந்தருளியிருக்கிறார்.
இவரின் தன்னிகரில்லாத் தனிச்சிறப்பு மகர வடிவமான நீண்ட காதணிகளையணிந்து, குழைகின்ற காதுகளாக அமைந்து
அடியார்களின் அல்லல்களை நீக்கும் அன்புத் திருவுருவமாக விளங்குவது
இவ்வூரிலிருந்து எழும் வேத பாராயண ஒலியினையும் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழி, பாராயண ஒலியினையும்
எக்காலத்தும், எப்போதும் குழைக்காதரின் நெடிய காதுகள் குளிரக் குளிர கேட்டுக் கொண்டே யிருக்குமாம்.
மகரக் குழையானின் காதுகளுக்கு மற்றுமொரு விருந்தினையும் ஆழ்வார் படைக்கிறார்.
அதுதான் ‘பிள்ளைக்குழா விளையாட்டொலி’ யாகும். சிறார் சிறுமணல் வீடுகட்டி அழகனை அதிலே நிறுத்திச் சேவிப்பார்களாம்.
அந்த மாயனும் இந்த இளம் நெஞ்சுகளுடன் கைகோர்த்தும், காலடித்தும் விளையாடுகிறான் என்பது மக்கள் நம்பிக்கை.
விண்ணை முட்டும் இந்த விளையாட்டொலியினைக் கேட்டு மகிழத்தான் மகரக்குழைக் காதர் தம் கோயிலுக்கு முன்
வீற்றிருக்கும் கெருடனை வாய்க்கால் கரைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் மூலவரான ‘மகராயுத கர்ணபாச்சர்’ (மகர பூஷணம்) தமது தேவியர் இருவரான
குழைக்காத வல்லித் தாயாருடனும், திருப்பேரை நாச்சியாருடனும் எழுந்தருளியுள்ளார்.
கிழக்கே திருமுக மண்டலம் நோக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்ட வண்ணம்,
இடது காலை மடித்து வைத்தவராய் வீராசனம் செய்தபடி காட்சியளிக்கிறார்.
மூலவருக்கு முன் இருமருங்கிலும் பிருகுரிஷியும், மார்கண்ட ரிஷியும் வீற்றிருக்கின்றனர்.
மூலவரின் அருளாசியினைப் பெற முழங்கு சங்கக் கையனான கௌதுகபேரர் அமர்ந்திருக்கிறார்.
கருவரைக்கு முன்பு மண்டபத்தில் மாண்புற உற்சவ மூர்த்தியான முகில் வண்ணன் சீதேவி, பூதேவித் தாயாருடன் காட்சி தருகிறார்.

பெருமாள் : மகர நெடுங்குழைக்காதர்
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி
வீற்றிருக்கும் திருக்கோலம் கிழக்கே பார்த்த சந்நிதி
சுக்கிரன், பிரமன், ஈசானியருக்கும், ருத்திரருக்கும், பிரத்யக்ஷம்.

——–

பல்வேறு வகையான நிறமும், உருவமும், மணமும் கொண்ட மலர்களால் தொடுத்த மலர் மாலை போன்று
இப்பிரபந்தமும் பல்வேறு வகைப் பாக்களையும், பொருள்களையும், சுவைகளையும் கொண்டு வரும்
என்னும் உவமை நயம் பொருந்தவே இது ‘கலம்பகம்’ என்னும் பெயர் பெறுவதாயிற்று.

‘களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த‌ அலங்கலத் தொடையல் ‘என்ற தொண்டரடிப் பொடியார் பாத் தொடரால் இது புலப்படும்.

இங்கு இரண்டு கலம்பகங்கள் உள்ளன.
ஒன்று அபிநவ காளமேக அநந்த கிருஷ்ணையங்கார் எழுதி வெளியிட்ட ‘திருப்பேரைக் கலம்பக’ மாகும்.
பிறிதொன்று தான் ‘குழைக்காதர் கலம்பகம்’.
இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் பற்றிய விவரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை அச்சிடப்பட்டதாகவும் தெரியவில்லை.
‘அழகர் கலம்பகம்’ ‘ திருப்பேரைக் கலம்பகம்’ என்றார் போன்று தெய்வத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுடன்,
தலத்தின் பெயரால் ‘திருவரங்கக் கலம்பகம்’ ‘திருவேங்கடக் கலம்பகம்’ போன்றன‌ எழுதப்பட்டன.

முதன் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள‌ ‘குழைக்காதர் கலம்பகம்’ இனிய எளிய 101 செய்யுட்களைக் கொண்டது.
இது காப்புச் செய்யுளுடன் துவங்குகிறது-

பூ என்னும் மங்கலச் சொல்லுடன் “குழைக்காதர் கலம்பகம்” மங்களகரமாகத் துவங்கி இனிய எளிய ஆற்றொழுக்கு நடையில்
கலம்பக உறுப்புக்கள் விரவிவர 100 செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது.
நூலின் இறுதியில் ஒரு வாழ்த்துப் பாடலுடன் நூல் முடிவடைகின்றது.
இந்நூல் முழுவதையும் கற்றுணர்ந்தால் புலவர் பெருமாளிடம் கொண்ட ஈடுபாடும், தமிழின் மீது கொண்ட பற்றும்,
இத்திருப்பதியின் மீதுள்ள பக்தியும் நன்கு புலனாகின்றன.
“பேரை மால் குழைக்காதர்” ‘மகரக் குழையனே’ ‘பேரை வாழ் முகிலே’ என்று பலவாறு எம்பெருமானை விளித்துப் பாடுகிறார்.
இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதராத்திலும் நூலாசிரியர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினை இக் கலம்பகம் எடுத்துக் காட்டுகிறது.

‘கானகம் புகுந்து விராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை கரிய மூக்கரிந்து கரனுயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து”
என இராமபிரானின் சாதனைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். சகடம் உடைத்தவன், மருதிடைப் பாய்ந்தவன்,
நரசிம்மாவதாரம் எடுத்தவன், குறள் வடிவானவன், இராவணனை வென்றவன்…
ஏன் எல்லாமே மகரக் குழையனே என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
மேலும் அப்பிரானைப் ‘பேரேசர்’, ‘வழுதித் திருநாடன்’ எனவும் போற்றிப் பரவுகின்றார்.

————

1- குழைக்காதர் கலம்பகம்

காப்பு

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிதொறுங் கனிந்த செந்தேன்
தெளிந்தசொல் தவறுண் டேனும்
புவிபுகழ்ந் தெடுத்த பேரைப்
புகழ்க்கலம் பகத்தைக் காக்க!
பவ‌விலங் கறுத்த புள்ளின்
பாகணைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப்
பராங்குசக் களிறு தானே,

எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகிறார்.
காக்க-காவலாக இருக்கட்டும். வியங்கோள் வினைமுற்று. பராங்குசக் களிறு காக்க!
பவம்-பிறப்பு, விலங்கறுத்த-பற்று நீக்கின, புள்ளின் பாகன்-கருடனை ஊர்ந்து செல்வோன். தொடர்ந்து பற்றி- பற்றித் தொடர்ந்து;
கவி பொழியும்-கவிதையை மிகுதியாகச் செய்யும். பராங்குசன்-நம்மாழ்வார், தான், ஏ-அசை,
பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்ததற்கேற்ப, கவிமதம் பொழியும் என்றும்,

———

அவையடக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி
மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட‌
லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல்
ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற்
பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே
நூல்

வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா

பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலைகுனிப்ப‌
நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக்

கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப‌
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட‌
வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின்
ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட்
காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும்
ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே

இஃது பன்னீரடித்தரவு

———-

கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு
மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே

பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே.

விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால்
பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே
திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே

இவை மூன்றும் நாலடித்தாழிசை

———

பயிரவி யெனவரு படுகொலை யலகையின்
உயிரையு முலையுட னொருவழி பருகினை

பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட‌
வடிமத கரியொடு வலிகொடு பொருதனை

ஒருபத சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை புறமிடு பரிபவ மருளினை

இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது
சதுமறை படவற சமயமு மருளினை.

இவை நான்கும் ஈரடி அராகம்

————

மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே
மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும்
பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே.

இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம்

துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே
வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே
பட்டவா ரமுதம‌ரர் பசிக்குவிருந் தளித்தனையே.

இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்

மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை
பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை

இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம்

மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ
உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ

இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம்

என வாங்கு – இது தனிச் சொல்

அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும்
கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையும்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை

பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற்
சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி
மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. 1

அரும்பவீழ் – மொட்டு விரிந்த, சுரும்பு – வண்டு, அவிழ்- மலர்த்தும்; வார் குழை- நீண்ட குழையணிந்த காது,
செவ்வி – அழகு, ஒருமுகத்து – ஒரு சேரக்காட்டி, பொலங்கொடி- அழகிய கொடி, மகளிரில் – பெண்கள் போன்று,
கவிப்ப – கவிப்பார்கள். (ஒரு குடைக்கீழ் ஆள்பவர்கள்) மாகம் – விண்ணுலகு.

—————

இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம்

நேரிசை வெண்பா

மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ – நாகவணைக்
கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கன்புரக்கு மோவொருகா லம். 2

மா கவலை-மிகுந்த கவலை, கொன்புரக்கும் – பெருமையுடன் காக்கும், நேமி – சக்கரம், உரக்கும்-திடம் பெறும்.

——————–

கட்டளைக் கலித்துறை

ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான்
முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே 3

ஒருகைமுகக்குஞ்சரம் – முகத்தில் துதிக்கையுடைய ஒப்பற்ற யானை (கஜேந்திரன்),
காதருகை முசக்கும் அயல்விழி – காதளவோடிய வேல் போன்ற கண், மான்- மான் போன்ற விழியுடைய என் மகள்,
முருகு- மணம், முகத்தல் – மோந்து பார்த்தல், சருகு – வாடல், மொய் குழல் – நெருங்கிய கூந்தலையுடைய பெண்,
என்றும் – என்று சொல்லுவாள்,
உண்ணாவிதழைக்கும் என்றே இருக்கு – உயிர் மட்டும் இருக்கிறது என்று சொல்லும்படி தளர்வுற்றிருக்கிறாள்.

————–

பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந்
தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும்
தமிழுடன் பிறந்த மந்த மாருதமும்
தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும்
குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென் னளவிற்
கொடுவினை விளைந்த காலநல் லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்.
கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து
காழகிற் குழாமுறித் தெதிர்ந்து
கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து
மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருளைத் துறைவனே குவளை
வளைவயற் பேரைமா தவனே. 4

மதியம்: பரிதியென்றுதிக்கும் – சந்திரன் சூரியன் போன்று சுடுகின்ற கிரணங்களோடு உதிக்கும்,
களப லேபனம் – சந்தனப் பூச்சு, கொடுவினை விளைந்தகாலம் – போதாத காலம்,
கழைக்குலம் தடிந்து – மூங்கில் கூட்டத்தை ஒடித்து, சந்தனம் திமிர்ந்து – சந்தான மரத்தை முறித்து,
காழகில் குழாம் – வயிரம் கொண்ட அகில் மரத்தொகுதி, கரிமுக மருப்பு – யானைக் கொம்பு,
தரளம் – முத்து சுரம் – பாலைவனம், கடை நிலம் – நெய்தல்.

————

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு
தனைநினையு மறிவிலி யைமா
கவலைபடு விகடபக டனையகப டனையுனது
கழலிணைக ளடிமை கொளுவாய்
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
நறைகமழு மமுது மெடவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர்
தெளியுமரு மறைமு தல்வனே. 5

தவசரியை – தவம், சரியை: விகடபகடு – நகைக்கிடமான மதயானை, கபடனை – வஞ்சகனை,
மதகளிறு – ஐராவதம், நறை – வாசனை, திவலை – துளி, முகில்வண – முகில்வண்ணனே.

—————

சந்தத் தாழிசை

மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத்
தவழு மாயனார்
வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித்
தொழுகி யருவியாய்
நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித்
தொழுகு வெற்பனே
நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட
மொழிந்த தேன்
பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல்
பட்டசடை யில்லையே
பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய
விட்டநகை யில்லைமா
கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரது
பாலமிலை யெங்கள்மால்
கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக்
கடவ தாகுமே 6

மறைமுடி-உபநிடதம், உற-பொருந்த, வெற்பன்- குறிஞ்சி நிலத்தலைவன், வேயின் முத்தம்-மூங்கிலில் உள்ள முத்து;
சிவபெருமான்; பிணை-மான், மிடறு-கழுத்து, மாகறை முடித்த மிடறு-நீலகண்டம் கரகபாலம்-கையில் தலை யோடு.

————–

சந்தவிருத்தம்.

ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர்
வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர்
கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. 7

ஆகம்-மார்பு, ஆடகன்-இரணியன், கொண்டல்- மேகம் போன்ற நிறமுடைய திருமால்,
கோகிலம்- குயில், அன்பர் குறை-தலைவர் குற்றம்.

————–

கட்டளைக் கலித்துறை

குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென்
முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. 8

குறைக்கொழுந்தாய்-குறைந்த கலைகளோடு கொழுந்து போன்று, தாரை-கிரணங்கள்,
பிறைக் கொழுந்து ஆர்-சந்திரமண்டலம் தொடும், தம்பி- இலக்குவன்.

———–

வண்ண விருத்தம்

வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல்
வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ
ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. 9

ஏனம்-வராகம்.

———–

சந்தவிருத்தம்

கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே
வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே
நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால்
ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. 10

வாரணம்-யானை, மாலை-துளவ மாலை ஆரணம், வேதம்.

———-

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன்
பவனி கண்டபின்
தோழி மீரவன் துளப மாலையென் துணைமு
லைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே
றழல்கொ டுத்ததும்
கோழி வாயையுங் கூவொ ணாமல்மண் கூறு
கொண்டதும் கொடிய தாயரே. 11

ஊழி வேல் விழும் கங்குல்-யுகமாக வேரூன்றிவிட்ட இரவு, உடுபதி-சந்திரன், அழல்-வெப்பம்,
மண் கூறு கொண்டது – மண்ணைக் கொண்டு அடைத்தது ஒப்பு: “கோழி வாய் மண் கூறு கொண்டதோ!”

——–

நேரிசை வெண்பா

ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ – மாடமதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. 12

ஏடு-புற இதழ், கண்ணி-துளவ மாலை, மகரக்குழை-மகர தோரணம்..

———-

கட்டளைக் கலித்துறை

குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங்
கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட
டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப்
பிழைத்திருப் பாருமுன் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. 13

குழல்-புல்லாங்குழல், கழை – மூங்கில், பால் இசை- பால் போல இனிய கீதம்,
கூடல் இழைத்தல்- பிரிந்த தலைவி மணலில் கோடு இழைத்துத வருவனா என்று குறி பார்த்தல்,
சூள்- சபதம்; வருவதாக ஆணையிட்ட சொல்.

———-

தாழிசை

பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற
செங்கனி வாயிர்னா
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை
யம்பதி யன்னமே
யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி
னெகிழ்த்துவே
றடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி
யாமலர்

முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை
கங்குல்வாய்
முளரி யம்பத நோவ வன்பினில் மூத றிந்தவர்
போலவந்
தென்னை யிப்படி வாழ வைத்தது மின்ப மோகநல்
வாழ்வுபற
றியான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பி
றப்பினி லில்லையே. 14

பின்னை-நப்பின்னை, பெருமித்தமிழ்முறை கொழித்து அறிபேரை-தமிழை முறையாகக் கற்று
அதன் பெருமையை ஆராய்ந்து அறிந்த தென் திருப் பேரை, கபாலம் நீவி-தாழ்ப்பாளைத் திறந்து

———-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும்
புலை ரேனுமுட்
சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும்
புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத்
தமர்ச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத்
தளவி லாததே. 15

மிச்சில்-உண்ட மிச்சம், சரோருகம்-தாமரை.

————

தரவு கொச்சகம்
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளைவறியாப் பேதைமயல் வெள்ளத்தி லழுந்துவளேற்
களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற்
றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. 16

அளவு அறியாப் புனல்-ஆழம் தெரியாத வெள்ளம்,
விளவு அறியாப் பேதை-வாய் விட்டுச் சொல்லத் தெரியாத இளம்பெண், மயல் வெள்ளம் -காதல் வெள்ளம்.

——————-

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. 17

வாளைப் பகடு-ஆண் வாளை மீன், பிரகு-வேறு உபாயம்.

————–

அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன்
நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ
யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே.. 18

மறு-குற்றம், மரபு-ஆன்றோர் ஒழுக்கம்.

——–

ஊசல் – கலித்தாழிசை

வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட
மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச்
சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித்
தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட
மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகுசீர் வளம்பாடி யாடி ரூசல்
விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர்தம் புகழ்பாடி யாடி ரூசல்
ஆழிவலம் புரிபாடி யாடி ரூசல்
அவங்கருடக் கொடிபாடி யாடி ரூசல்
ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடி ரூசல்
அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. 19

வாழி-அசை, குடைந்த முத்து-முத்தைக் குடைந்து செய்த, மருங்குல்-இடை, சூழி-நெற்றிப் பட்டம்,
துவக்கி-கட்டி, மேழி-கலப்பை, ஆழிவலம்புரி- சக்கரம், சங்கு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

ஆடி லாள்கழலாடி லாள்கனை யாடி லான்பனிநீர்
போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான்
பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ்முகிலே
நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே 20

கழல் ஆடிலாள்- கழற்காய் விளையாடவில்லை. சுனை ஆடிலாள்-நீராடவில்லை,
கடை போடிலாள்- மேகலை அணியவில்லை, பீடு-பெருமை.

—————

நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ
ணாவாலு மேதுபய ணவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
காணார்க ணாலுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
வாராத காலுமொரு பயனிலையே.. 21

வீண் மொழி கொள்- வீம் வார்த்தை பேசுகின்ற, ஆராத-திருப்தி அடையாத, பேரேசர்-தென் திருப்பேரைக் கடவுள்.

————-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா
ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா
ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ
முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே
முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ
மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே
மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. 22

செங்கனிக் கோவை வாய்-கோவைப் பழம் போல் சிவந்த வாய்.

————-

கட்டளைக் கலித்துறை

ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும்
பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே
தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற்
காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. 23

அயராமல்-மறவாமல், பிறங்கலமின்னே-மலையிலுள்ள பெண்ணே, தாரை-முனை, குழல் காரை- கார் போன்ற கூந்தல்.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக்
கருந்தடத் திருட்படாய் விரித்துக்
கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டனவெனத் தணிந்து
விண்ணகம் புதைத்த பரிதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்
மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைப்ப வேழ்புலியும்
வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்
பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. 24

படாம்-துணி, குழை பிடித்து-குழையணிந்த காதை பிடித்து.

———–

நேரிசை வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக்
காவளர்த்தா ரென்று குழைக் காதரே – நாவளைத்துச்
செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. 25

மாரன்-மன்மதன், கா-சோலை, செற்றார்- பகைவன்,
தீ வெடிப்ப வெடிக்குமோ-தீத் தோன்றுவது போலத் துளவ மலர்கள் சிவந்து தோன்றும்.

————

சுரம் போக்கு – கட்டளைக் கலித்துறை

வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே 26

வெடித்து – வெடிப்புகள் தோன்றி, பாலைக்கப் பாலை – பாலை நிலத்துக்கப்பாற்பட்ட, அந்தணீர் – முக்கோல் பகவர்களே,
செம்பஞ்சு – மருதோன்றி பூசிய சிவந்த நிறம், அனிச்ச மலர் – மென்மையான ஒரு வகைப் பூ,
தடித்துச் சிவந்தது – வீங்கிச் சிவந்து போயின, மடந்தை – என் மகள். முக்கோல் பகவரை வழிவினாதல் என்னும் அகப்பொருள் துறை.

————

மறம் – சந்தத் தாழிசை

தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு
நிலத்துளோர்
தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு
வருதூதனே

வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம்
வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே
நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு
நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும்
வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம்
மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. 27

மறம்: இது கலம்பகத்தின் ஒரு துறை.
மணம் பேசத் தூது வந்தவனை மறவர்தம் குலப் பெருமை சொல்லி மகட்கொடை மறுத்தல். அரிட்குறு – அருளைப் பெற்ற,
தையலை – பெண்ணை, சருகு – ஓலை, வேள் – முருகன், வேல்பட – வேலாயுதமும் தோற்க, வினையொத்த – போர்த் தொழிலைச் செய்த,
நாகொடுத்த படை பாடெடுத்த நிலை – நாள் முழுவதும் எடுத்த ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்து விடுவதில்லை.
நாணயப்பிழை – நா நயப் பிழை; பேசுந்திறமையிலுள்ள பிழை. நரபதித் தலைவர் – தலைமை பெற்ற அரசர்கள்,
நமனெதிர்த்து வருமாயினும் – எதிரி எமனேயாயினும், மனு வரம்பு – மனித ஜாதியின் வரம்பு, மற வரம்பு – வீர மறவர் குலத்தின் ஒழுங்கு.

————-

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன்
றீயா தவர்கைப் பொருள்போலு
மிரவிக் கிருள்போ லவுமடியார்
சொல்லத் தொலையா வெழுபிறப்புந்
துடைகுங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே
கொல்லத் துணியா தன்னையருங்
கொதியார் மதியு மதன்படையுங்
கூப்பிட் டழையாக் கருங்குயிலும்
கொடுமை படுத்தாக் குழலிசையு
மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரியீ ரெனவுரையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
வாரை வெறுக்கக் கடவேமால். 28

இல்லத்தடங்கா – வீட்டினுள்ளே தங்கியிராத, பசிக்கென்று – பசி என்று, ஒன்று – ஒரு பொருளும்,
சொல்லத் தொலையா – சொல்லி முடிவு காணாத, எழு பிறப்பு – எழுவகைக் கதி, துடைக்கும் – நீக்கும்,
தாள் அளக்கும் – தாள்களால் அளந்து கொண்ட, புவி மருங்கில் – பூமியின் எல்லாப் புறங்களிலும்,
கொதியார் – கோபிக்கமாட்டார். மதன்படை – மன்மதன் படைக்கலங்கள், குழலிசை – வேய்ங்குழல் ஓசை,
அளித்து – தலையளி செய்து, அயர்த்துக் கொடுத்த – மறந்து பிரிவுக்குச் சம்மதித்த.

—————–

சம்பிரதம்

கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல்
கடுகி லும்புகுது மூசிவே
ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு
மெமது சம்பிரத மீதெலா
முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை
யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு
மரிய சம்பிரத மானதே. 29

சம்பிரதம் – ஜால வித்தை, கடலடங்கலுழிதொறு சிறங்காக புனல் கடுகிலும் புகுதும் – கடல் நீர் முழுவதும் ஒரு கைக்குள் அடக்குவோம்;
கடுகிலும் புகுவோம் என்றும், கடல் எல்லாவற்றிலும் ஒரு கை தண்ணீர் மொண்டு விரைந்து வந்திடுவோம் என்றும் பொருள் கொள்க.
வடமேருவும் ஊசிவேருடன் இடது புறமும், வலது புறமும் சுழலும்படி செய்வோம் என்றும் ஊசிவேரைக் கொண்டு
வடமேருவை இடது புறமும் வலது புறமும் சுற்றிச் செல்வோம் என்றும் பொருள் கொள்க.
பரவையுலகு – கடல் சூழ்ந்த உலகம், பகலிரவு கொண்டதும் – பகலை இரவாக்கியதும்.

—————–

நேரிசை வெண்பா

தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல்
கோவியர்தா மன்றுகுழைக் காதரே – தாவி
யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது
பிடிக்கும்கைம் மாறோ பெரிது. 30

சோவியர் – இடைப் பெண்கள், அடிக்குங் கை மானோ – அடிப்பதற்குக் கையில் எடுத்த கோலோ,
காது பிடிக்கும் – தோப்புக்கரணம் போடுவதற்கு இரு கைகளால் காதுகளை மாற்றிப் பிடிக்கும், கைம்மாறு – உதவி.

———–

கலிவிருத்தம்

பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைகிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. 31

தருவிட – விடத்தைத் தருகின்ற

————-

கட்டளைக் கலித்துறை

உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக்
குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர்
துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச்
சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. 32

உறைக் கோடும் வாள் – உறையில் விரைந்து புகும்வாள், ஒரு கொம்பிறந்து – கொம்பு வெட்டப்பெற்று,
குறைக் கோடு – கோடு, உழல் குஞ்சரம் – திரிகின்ற யானை, துறைக்கோடு – நீர்த் துறையில் கிடந்த சங்கு, தென்னர் – பாண்டியர்,
பண்டைச் சிறைக்கோடு மேகம் – பாண்டியர் சிறை வைத்த மேகம், பாண்டியர் மேகங்களைச் சிறையிலிட்ட திருவிளையாடல்,
பிறைக்கோடு – பிறை போலும் கொம்பு.

———–

தூது – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல்
செழும்பே ரையுத் தமர்பால்
அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை
யனங்கா ளுரைத் தருள்வீர்
இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு
திரங்கா மனத்தவர் போன்
மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு
மனந்தா னெமக் கிலையே. 33

அறந்தானுற உரைத்தருள்வீர் – இப்பறவொழுங்கைப் பொருந்த எடுத்துரைப்பீர்.

———–

வெண்பா

எமக்குமுகம் வாட விருந்தா மரைகள்
தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் – அமைத்துரையும்
பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள்
தன்மதியி லுண்டோ தழல். 34

அழைத்துரையும் – பொருந்தச் சொல்லுங்கள், பெண் மதி – பெண்ணின் பேதைமை,
பேதை நாட்டு – பேதைமையுடைய என்னுடைய நாட்டிலுள்ள.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்
தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார்
குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார்
கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும்
நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா
ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. 35

நிழல் பிழிந்து பருகவென்று நினையும் அசுர மருதம் -நிழலிலே* உயிரைப் பிழிந்து குடிக்க வேண்டுமென்று
நினைத்த அசுரர்களாகிய மருத மரங்கள், குரிசில் – சிறந்தவன், அழல் பிழிந்த வேலர் – நெருப்பைக் கக்குகின்ற வேலையுடையவர்,
ஆணை – சூள், சபதம் அந்த வாய்மை – தவறாத அந்தச் சொல்.

————

பின்முடுகு வெண்பா

ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ – தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்கிளர்ந்த நீலவண்டு காள். 36

மையுண்டு – மை தீட்டப் பெற்று, அறிவுண்டு – மதியை மயக்கி, ஆவியுண்டு – உயிரைக் குடித்து;
காவி – நீலோத்பல மலர் போன்ற கண்கள், தாமரைக்கே – தாமரை போன்ற முகத்தில், வளர்ந்த – நீண்டகாலம் தங்கிய,
வாவி – குளம், பூவை – பூவிலுள்ள மதுவை, கால் கிளர்ந்த – சென்ற.

————–

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. 37

புறத்து – அருகில், வள்ளைத் தண்டு – வள்ளைத் தண்டு போன்ற காதுகள், வடித்து – பெருக்கி,
உவட்டாத – தெவிட்டாத, உங்கள் பாலில் – உங்களிடத்தில்.

——–

வஞ்சி விருத்தம்

கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற்
பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன்
அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர்
தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே 38

பிடித்தீர்தழை – வில்லையொழித்துக் கையில் தழையை வைத்திருக்கிறீர்,
கெடுத்தீர் கரி – யானையைத் தவறவிட்ட தாகக் கூறிக்கொள்கிறீர். பிணைத்தேடுவதேன் – ஆனால் ஏன் மானைத் தேடுகிறீர்.
அடித்தாமரை – தாமரை போன்ற மெல்லிய கால்கள் வருந்த, அடைத்தாளுவதோர் தொழு – அடைத்துக் காக்கின்ற தொழுவம்,
புனச் சார்பு – தினைப்புனம், தொடி – வளையலணிந்த.

———–

கட்டளைக் கலித்துறை

தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே
னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே 39

அண்டர் – தேவர்கள், தொரும்பாக்கி – அடிமையாகி, அடவி – சோலை, அலர் – மலர்,
எழும் பாக்கியம் – பாக்கியம் கிட்டும், இந்து – சந்திரன், விட்டம் – அடிப்பாகம்,
சரணாரவிந்தம் – பாத தாமரைகள், பண்டு – முள்.

—————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும்
தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல்
எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. 40

செய் – வயல், தொய்யில் – மங்கையர் மார்பில் சந்தனத்தால் போடும் கோலம், தொழிலுக்கு – என்னை வருத்தும் செயலுக்கு,
அரும்பும் – தோன்றும், மதன் – மன்மதன், எய்தில் – எய்தால் (என்னைத் தழுவிக் கொண்டால்),
கரும்பும் கணையும் இலை – எனை வருத்தும் படைகள் உங்களிடம் இல்லாது போகும், இறவாதிருப்பன் – பிழைத்துப் போவேன்.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் வீரனெறிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை
யிடறி நெறித்துக் கடர்புறத்துச்
சுரும்பை நெறித்து வழிகறங்கச்
சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதாள் விரகம் தொலையாதோ?
கரும்பை நெறித்து முடப்பலவின்
கனியை நெறித்து மடைமுதுகிற்
கதலிப் படலைக் குலைநெறித்துக்
கன்னிக் கமுகின் மடனெறித்துக்
குரும்பை நெறித்துத் தேனொழுகுங்
குவளை நெறித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையின் மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. 41

இரும்பு – அங்குசம், துதிக்கை மடுத்து – யானைத் துதிக்கையில் மாட்டி, கோ மகளிர் – அரசகுலத்துப் பெண்கள்,
விரல் – விரலால், எதிர்த்தார் – பகைவர். சுரும்பு – வண்டு, வழிகறங்க – வழியில் சுழலும்படி, செவிப்படலம் – செவியின் பரப்பு,
துங்கம் – சிறப்பு, பவனி – குழைக்காதர் வரும் வீதியுலா, விரசம் – காதல் துன்பம், தொழுதாள் – தொழுத தலைவி,
முடப்பலவு – வளைந்த பலா, படலைக் குலை – பரந்த குலை, மடல் – பாளை, குரும்பை – இளநீர், வரால் – மீன்.

——-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு
மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. 42

மத்த வேழம் – மதம் பிடித்த யானை, பதி – தலைவியின் ஊர், தாமரைப் பூ – இலக்குமி உறையுமிடம்,
கோனென்பார் – தலைவர்கள், கொம்பே – பெண்ணே, வம்பே – வீணாக,அல்ல – வேறொருவன், இல்லை – ஒன்றுமேயில்லை,
கோட்டி – வார்த்தை,எதிருரைப்பார் – பதில் சொல்வார்.

———

கழித் தாழிசை

தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீர்
ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. 43

நலம் – அழகு, முனிவாய் – கோபங் கொண்டு.

———-

கலிவிருத்தம்

தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை
யானாத கல்வி யறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து
போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. 44

அமுதுர நினையீர் என்று கூட்டுக.* ஆனாத – அழியாத, கானார் – மானம் நிறைந்த, காமத்தின் பால் -காதலின் பகுதி,
அறத்தின் பொருட்டு – இல்லறம் நடத்த விரும்பி, பொருட்பால் – பொருளைத் தேடி,
திருக்குறளில் காமத்துப்பால் சிறிது, அறத்துப்பால் நடுத்தரம், பொருட்பால் மிகப் பெரிது.

——————

கலித்தாழிசை

பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. 45

சூல் – கருப்பம், மேல் வடிவு – பெரிய வடிவம், வினை தொலைக்கும் – அழிக்கும்.

————

கட்டளைக் கலித்துறை

வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப்
பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே 46

தோடு – புற இதழ், ஐவர் – பஞ்ச பாண்டவர், சாடும் – சொரியும்.

————

கழித்தாழிசை

கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே
குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே
தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால்
தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே
அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ
அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ
தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர்
சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. 47

கொண்டல் – மேகம், அண்டர் பூமி – தேவலோகம், நாமோ – நீங்களோ – முன்னிலைப் பொருளில் வந்த தன்மை.

——-

மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து
கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக்
குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற்
றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே 48

மருந்தேறல் – மணம் பொருந்திய தேன், மால் – ஆசை,
கதலிக்குருத்தே விசும்பளக்கும் பேரை – வாழைக் குருத்துக்களே ஆகாயத்தை எட்டிப் பிடிக்கிற – உயர்வு நவிற்சி அணி.
கடிதாய் – விரைவாய், அன்பர் -தலைவர்.

———–

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர்
மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ்
கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு
கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர்
இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக
விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே
வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக
விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே 49

பாயல் – படுக்கை, மகிழ்ந்த – விரும்பின, திருப்பேரையை மகிழ்ந்து பாற்கடலை விட்டு வந்தார் என்று பொருள் கொள்க.
கசப்பாக – கசப்பாக்கி, பாகு – தேன்பாகு, ஆவியிலிருந்து – உயிர் வாழ்ந்து, சஞ்சரித்து – நடந்து – திரிந்து,
விரிஞ்சன் – பிரமன், விரிஞ்சனும் படைத்தான்.

——–

பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

விதிக்குந் தொழிலாற் பலகோலம்
வெவ்வே றெடுத்து நடித்தொருவன்
விளையா டுவபோற் றொலையாத
வினையிற் சுழன்று தடுமாறி
எதிற்குந் சிறிதா மெறும்புகடை
யானை முதலாந் தொல்குலத்தி
லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே
னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய்
குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக்
குறுங்கட் பெருவான் மழைமதித்துக்
கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக்
குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று
மதிக்கும் புகர்மத் தகமுகத்து
வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து
மதவா ரணத்துக் கருள்புரியும்
மகரக் குழையெம் பெருமானே. 50

விதிக்கும் தொழில் – பிரமன் படைத்த செய்கையியினால், வெவ்வேறுபல – வேறுவேறானபல, கோலம் -வேடம்,
ஒருவனே பல கோலங்களில் நடிக்கிறான், அதுபோல ஒரு உயிர் பல உடல்களில் பிறக்கிறது, எதிர்க்கும் -எதற்கும்,
யானை முதல் எறும் பீறாக, குதிக்கும் கலுழி – வெள்ளமாகப் பொங்கி வரும், சுவடு – கால், குறுங்கள் – சிறிய கள்,
வேட்டு – விரும்பிதெவ் – பகைவர், மத்தகம் – யானைத் தலை, பனை – பெருத்த.

———

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன்
மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன்
பகதற்கரி தாகும் பரதத்துவ போதன்
பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய்
சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ்
சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந்
தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந்
தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. 51

தொண்டன் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

————

சந்தக்கலி விருத்தம்

எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால்
வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார்
சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா
தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. 52

வேள் – விருப்பம், சங்கம் – சங்கு வளையல், மாது – மாதர், அணி -வரிசை, வேள் – மன்மதன்.

———–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக
ரக்குழைமால்
கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு
நரைக்குருகீர்
பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி
விற்குணமே
யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை
வெறுப்பதுவே. 53

ஆடவர் – தலைவர்

———–

பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம்

ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு
மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள்
போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற்
புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ
வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு
மாயனார்
மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து
முயங்குபைந்
தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும்
பெற விட்டதோர்
சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில
தாகியே. 54

அயல் – அயலார், வெதுப்ப – சுட, வேள்போர் -மன்மதன் செய்யும் போர், மறலி – எமன், புடை -பக்கத்தில்,
கடல் வளை – கடல்சூழ்ந்த, புடவி – பூமியிலுள்ளார், முயங்கு -உடலிற் கலந்த, வெறி -மணம்,
பெறவிட்டது – தலைவி பெறத் தலைவன் அளித்தது, சுரும்பு – வண்டு, வெறுப்பிலதாகி -விருப்பங்கொண்டு.

——–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி
யொளியாகநீ
பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி
பலதேவ ரறிவார்களோ
மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை
நகராளனே
சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத
தெளிஞான முடையோர்களே. 55

தாரை -ஒழுங்குமுறை.

—–

புய வகுப்பு

முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம்
உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத்
திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன
உரலைக் கதவுக் கடையிட் டுயரத்
துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன
உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட்
டசுரரை யெமபுர மளவு துரந்தன
உயிரைப் பருகக் களவிட் டலகைப்
பணைவரை முலைமுக நெருடி யிருந்தன.
படியிற் றுடைபட் டுழலக் கனகனை
நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன
பனையிற் கனியொத் திருபது முடியத்
தலையுருள் படவடு பகழி சொரிந்தன
பரிதிக் கதிருட்புதையத் தமணப்
படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன
பருமச் சிகரக் கயிலைப் பரனுக்
கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின
கடலைக் கடையப் பருமத் துவலித்
திமையவர் பசியற வமுதம் விளம்பின
களபத் தெளியிற் றுளபத் தொடையில்
பரிமள ம்ருகபத முழுகி யளந்தன
கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப்
பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன
கமலத் தவளைத் தழுவிக் களவியி
லிளகிய புளகம தொழுகி மலிந்தன
மடையிற் கழியிற் பொருனைத் திரையினி
லுதறிய வரிமண லலகு நெடும்புழை
மதகிற் கதலிப் படலைக் குலையினில்
வளமுக கடவியில் மருவி வலம்புரி
வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற்
குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை
மகரக் குழையுத் தமனித் தியனுயர்
பரகதி முத்லவ னணிபொற் புயங்களே. 56

திவலை – தயிர்த்துளி, கதவுக்கடை – கதவின் அருகில், உயரத்து – உயர்ந்த இடத்திலுள்ள,
மல்தொழில் பிடி – மற்போரில் செய்கின்ற பிடிகள், துரந்தன – செலுத்தின, களவிட்டு – வஞ்சகமாக வந்த,
அலகை – பேய்ப்பெண் பூதனை, பணைவரை – பெருத்த மலை, படியில் – பூமியில், துடை – தொடை,
கனகன் – இரணியன், உருள்பட – உருள, பகழி – அம்பு, கதிருட் புதை அத்தமனம் – சூரியன் மறைந்த அந்திப் பொழுது,
நிழல் கெழுமிய – ஒளி நிறைந்த, திகிரி – சக்கரம், பருமச் சிகரம் – உயர்ந்த உச்சி, பலி – பிச்சை,
பரிசில் – வெகுமதி, பருமத்து வலித்து – பெரிய மத்தை இழுத்து, விளம்பின -பறிமாறின, தெளி – குழம்பு,
தொடை – மாலை, மிருகமதம் – மான் மதம், கத்தூரி, பொதுவியர் – இடைச்சியர், கமலத்தவள் – இலக்குமி,
புளசம் – மயிர்க்கூச்செறிதல், புழை – துவாரம். வலம்புரி – சங்கு, எக்கர் -மணல், குருகையரதிபதி – நம்மாழ்வார்.
பரவுநெடுந்தகை – போற்றப்படும் பெரியோன், பரகதி – மோட்சம், முதலவன் – முதன்மையானவன், அளி – அழசிய.

——–

குறம் – பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

புயங்க சேகர முயங்கு நாடதி
புகழ்ந்த பேரையை வணங்கியே
புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி
புகன்று வாழ்குற மடந்தை நான்
இயங்கு மாகெவு ளியும்பொ லாதல
விருந்த மாநில மிணங்கவே
யிசைந்து மாநிதி துலங்க வேயருள்
பொருந்தி வாழுவை யிலங்கிழாய்
வயங்கு மாதலை வரைந்து பேரதில்
வளங்கொள் சேவக ரிரண்டுபேர்
வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு
வனுந்த ராதலம் வணங்குவோ
னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு
குழந்தை வாய்பசி யடங்கவே
யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு
கிழிந்த தூசுரு ளுறங்கவே. 57

புயங்க சேகரம் – அரவளிந்த, முயங்கு – பொருந்திய, நாடகி – நடிக்கின்ற பெண், காளி, புரிந்த வாய்மை -சொன்ன சொல்,
கெவுளி – பல்லி சொல், பொலாதல – நன்மை செய்யும் குறிதான், இருந்த மாநிலம் – வாழ்கின்ற ஊர்,
இணங்கவேயிசைந்து – சம்மதம் பொருந்தி, இலங்கிழாய் – விளங்கும் ஆபரணத்தையுடைய பெண்ணே,
சேவகர் – வேலை செய்வோர், நாவலர் – புலவர், உயங்கி – வருந்தி, உடந்தையாய் – மனமிசைந்து, சிறங்கை – கைகொள்ளுமளவு,
தூசு – கூட்டத் தலவர் ஐந்து பேர் – நன்கு விளங்கவில்லை, திருமால், சிவன், அயன், விநாயகன், முருகன் இவர்களைக் குறிக்கலாம்.
பசியால் அழுத குழந்தை வாய்மூடச் சிறங்கை கூழிடு; உறங்கக் கந்தை கொடு என்பது பொருள்,

———-

கொற்றியார் – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய
லகஞ்சுற்று பேரை நகர்வாய்
விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில்
விளைந்துக்க மாமணி கொலோ
கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு
கலந்திட்ட தாவடமு மாய்
வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது
மருங்கொற்றி யாரறி வரே 58

கொற்றியரா – கலம்பகத்தின் உறுப்பு,
வைணவ சின்னம் பூண்டு பிச்சைக்கு வருவோர்கள் மீது காதல் கொண்டு ஒரு காமுகன் கூறுவதாகச்
சிலேடை பொருள்பட வருவது இச்செய்யுள். வயலகம் – வயலிடம், தாமம் – மாலை,
தாமரையின் மாமணி – தாமரைக்காய் மாலை, அரும்பித்த – மலர்ந்த, நாமம் -திருமண் காப்பு,
தாவடம் – முத்து மாலை, அரங்கு – நாடக மேடை, ஒற்றி – இசைந்து, மருங்கொற்றி – அருகேயிருந்து கவனித்து.

————–

சந்தக்கலி விருத்தம்

வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர்
பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே
திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா
முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. 59

பூவணை – மலர்ப்படுக்கை, அமுதுரு – அமுதம் போன்ற வடிவம்.

————

நேரிசை வெண்பா

உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை
மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் – அயனார்
பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து
மருத்துளதிக் கேமயலா வாள். 60

உயிர் முடிக்கும் – உயிரை அழிக்கும், செவ்வந்தி – சிவந்த அந்தி மாலை, மயிர் முடி – கூந்தல்,
செவ்வந்தி – செவந்திப்பூ, மருந்துளதி – வாசனை பொருந்திய துளசி, மயல் – ஆசை.

————-

எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம்

மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள்
வயிரப் பொருப்பி னயல்சூழ்
முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென
முகவட்ட மிட்டு வருவீர்
புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை
புளகிக்கி விற்று வீடும்வே
ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே
மழியத் துடைப்ப தழகே. 61

பொருப்பின் – மலையிடத்தே, முயல் – சந்திரன் கறை, மதி – சந்திரன், முகவட்டம் – முகத்தில்பொட்டு,
புயல் – மேகம், புளகிக்கில் – புளகித்தால், கூச்சமடைந்தால், அற்பஇடைவேரற்றுவிடும்;
ஆகையால் திலகத்தை அழித்துவிடுவீர், அழகு – நல்லது.

—————–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய்
நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ
மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே
தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே 62

நுவலவும் படுமோ – சொல்லும் தரமோ. மழை – கூந்தல், கடல் – கண்,
மலை – கொங்கை, கொடி -பெண் கொடி காட்சி யென்னும் துறை.

———

ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்

இளங்கொடி யிணங்குமுது சூழல்
நெருங்கிய பொதும்பர்வெளி நீழல்
இதண்புடை யிருந்து விளையாடி நீர்
விளம்பிய குளிர்ந்த மொழி யூடு
கரைந்தது கருங்கலினை வீசி
வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ
வளந்தலை மயங்குதமிழ் நாடர்
செகந்தனில் முகுந்தர்வரு பேரை
மடந்தையர் வணங்கு மபிஷேகமே
தெளிந்தசொ லினிங்களென நூறு
பசுங்கிளி விழுந்தபுன மீது
செழுந்தினை விளைந்துகரை யேறுமே. 63

பொதும்பர் – சோலை, இதண் – பரண், அபிஷேகம் – முடிபோறாள், புனம் – திணைப்புனம்,
கறையேறுமே – மாசூல் கைக்குக் கிடைக்குமோ?

————

களி – பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை

கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு
கயல் படைத் துலவு பேரை மால்
கருணையைப் புகழ வரு பரப்பிரமர்
களியர்கா னறியு நறவுமாய்
வரிசையிட்டன ளிலச்சி யாகினி
வலைச்சியைத் தொழு மடத்துளே
மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை
வளைய வைத்து நட மாடுவோம்
விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும்
விடமிடற் றிடை செறித்ததும்
வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில்
வென்றதும் பொருது கொன்றதும்
அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி
யறுதலைக் குறை முளைத்ததும்
அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை
யன்றி வேறு வரமல்லவே. 64

களி – குடியர் கள்ளைச் சிறப்பித்துக் கூறுவது, களியர் – குடிகாரர், நறவு – கள்,
இலச்சி யாகினி வலச்சி – பரவும் தெய்வம், பஞ்சமி – கள், மந்திரப் பெருமை – மந்திர சக்தி.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக்
கழுத்தொடிய
வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற்
றுளைத்து கரையேறி
நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து
பணிலமணி
நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால்
பொருனைத் திருநாட்டின்
வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே
யமுதுருவே
வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர்
மழையருவி
கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந்
தொலைத்தன னென்
கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக்
கடவீரே. 65-

அல்லி – அகவிதழ், பணிலம் – சங்கு, மணி – முத்து, வனசம் – தாமரை.

—–

வஞ்சித்துறை

வீர மாரனா

லார மாலை வேம்
நேர மாலை தா
நேர மாலை தா
பேரை மாயனே. 66-

ஆரம் – முத்து, வேம் – வெப்பந்தரும், நேர – எனக்குக் கிடைக்கும்படி.

———

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை

பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா
ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன்
மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ
ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. 67

மாரசரம் படு பூ – மன்மதன் அம்பாக விடுகின்ற பூ, ஆரவடம் – முத்துமாலை.

———–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கார் காலம்

தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத்
தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம்
தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம்
திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம்
நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த
ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட
வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். 68

மந்தி – பெண் குரங்கு, இதழி – கொன்றை, தரளம் – முத்துப்போன்ற கண்ணீர், ஒழுங்கு – நியாயம்,
ஞான வரோதயன் – சிறந்த ஞானத்தால் அறியப் படுவோன்.

——————

தரவு கொச்சகக் கலிப்பா

மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக்
கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப்
புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக
ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. 69-

புரிசை – மதில், புயல் – மேகம், துவக்கும் – கட்டும்.

———

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை
நின்றுதன் னிழற் கோலங்
காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென்
கன்னியைத் தழுவாயோ
தூணி லாடக னுரம் பிளந் துயிருணத்
தோன்றிய நெடுமாலே
கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ்
திருந் தெழிற் குரியானே. 70-

எழும் – செய்யும், பளிங்கு மண்டபம் – கண்ணாடி மண்டபம், நிழற்கோலம் – பிரதிபிம்பம்,
ஆயிழை ஒருத்தி – வேறு ஒரு பெண், ஆடகன் – இரணியன், உரம் – மார்பு, திருந்தெழில் – சிறந்த அழகு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய்
விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே
யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா
யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. 71

உரிசை – ருசி, உறை – கிணற்று விரிசுவராகிய உறை, கூவல் – கிணறு, பதியில் – ஊரில் தங்கி,
எயினர் ஒருவர் போகிலர் – வேடர் ஒருவர் கூடப் போகவில்லை, ஓ!கொடிது – மிகவும் கஷ்டம்,

————–

கட்டளைக் கலிப்பா

கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக்
குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும
தடியளந்த வுயிர் யாவும் வாழவன்
றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர்
படியளந்தது போதாம லன்னமும்
படைத்திருப்பது பாலனென்றோதலால்
மிடியளந்த வறிஞரைப் போலன்று
வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே 72-

கொடியள் அந்த அசோதை – கொடுமை செய்து பிரசித்தி பெற்ற அசோதை , மாறு – விளார், பிரம்பு;
குழைதொடும் – தோப்புக்கரணம் போடக் காதைப் பிடிக்கும், அடியளந்த – காலால் அளந்த, ஆழி – சக்கரம்,
அமரக்கால் – தெய்வத்தன்மை வாய்ந்த கால், படியளந்தது – பூமியை அளந்தது உணவு கொடுத்தது,
பாலன் – காத்தற் கடவுள், மிடியளந்த – வறுமையிலே வளர்ந்த, தொட்டுண்டது – களவிலுண்டது,

————-

பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ
எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந்
தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந்
தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ
கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக்
கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச்
செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந்
திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. 73-

வாய் மடுக்கும் – வாயிற் கொண்ட, இடும்பை – துன்பம், கனிவாய் – கனிந்து, செழுந்தாள் – பெருத்த கால்கள்

——-

கட்டளைக் கலித்துறை-

மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர்
நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப்
பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற்
றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே 74

வளை – வளைந்த, நாவாய் – நாக்கையுடையவாய், தோணி, நடு – நடுவுநிலைமை.

————–

எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை-

தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால்
தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர்
அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ
அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ
கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன்
காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா
விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ
வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. 75-

எழுதா -எழுதி.

——–

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே
யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே
நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய்
பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. 76-

கேடில் – வராகம், அறிகின்றதே பேசுவீர்.

———–

சித்து

ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல்
முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து
புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு
முழுமூடு படமோதி வரைவா யிறங்கி
யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு
சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து
தத்திவீழ் பொருநை வந்தநாள்
அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று
வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து\
கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி
வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி
யகிலார மணநாறு வெகுசே றளைந்து
முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த
முத்த வால்வளை கறங்கவே

மருவீதி மலராடை புனைமார் பணிந்து
துறைதோறு மருகோடி விளையாடி யங்க
ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு
மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து
வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து
கடுமேதி தடுமாற வுளவான் மலங்க
வெக்கர் பாய்மணல் மருங்குறா

மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு
புடை போல வளர்பூக முடல்கூன மந்தி
தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப
மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க
வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த
நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த
சித்தரேமடி பணிந்து கேள்

திருமாது பிரியாத மடமாது செம் பொன்
றுருவான தொருவேரி லதுமா லறிந்த
வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன்
னிறமான பிரமாண மறைநூலி லுண்டு
சிலையான வடமேரு வரனா ருகந்த
துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன்
வைத்த தார்பெருமை யும்பரூர்

சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள்
குருநாதர் பரிவான மதிபார முண்டு
மதராஜ னுபதேச மொருபூ மருந்து
மடமாத குறவோடு விளைபா டகங்கள்
திரைதாவு கடலூடு படுதீவி லொன்று
பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற
வித்தையோ புதுமை யின்று நீ

சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு
தலைவாச லடைதாழி டருகே யிருந்து
குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி
லரிதார மிடுதார முதலா மிரும்பு
தனிலூத விடிவேறு தவறாது செம்பொ
னதுவார முடனோது முபதேச மந்த்ரம்
அப்பனே அமுது கொண்டுவா.

தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று
பொரிகாடை கதுவாலி மிளகான நன்று
சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை
கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு
தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து
பணியார வகைபோடு நளபாக முண்ட
தப்படா களப சந்தமே. 77-

தாழை – தென்னை, ஞாழல் – குங்கும மரம், சூர் – மூங்கில், மூடு – மரம், சுரம் – பாலை நிலம், ஆயர் நிலம் – முல்லை,
வலைவாணர் – நெய்தல் நில மக்கள், கழை – தோணியைத் தள்ளும் மூங்கில் கம்பு, உந்தி – தள்ளி, ஆரம் – சந்தனம்,
முடிகூடு – மயிர் முடியில் ஏற்படும், வால் வளை – வெள்ளிய சங்கு,கோடு – உச்சி, மேழி – கலப்பை, மேதி – எருமை,
ஆன் – பசு, மலங்க – வருந்த, எக்கர் – மணல்மேடு, மறுகால் – நிறைந்த தண்ணீர் வடியுமிடம், உரையாளி – மாற்று அறிவிக்கும் ஆளி,
உம்பரூர் – தேவ லோகம், சருவாமல் – திகைக்காமல். ஒரு பூதர் – ஒரு மனிதர், அஞ்சுதலை வாசல் – ஐம்பொறி,
தாழிடு – தாழ்ப்பாள் போடு, குகை – பொன்னையுருக்குங் கூடு, அரிதாரம் -உருக்குவதற்குப் பொன்னுடன் கலக்கும் மருந்து,
விடிவேறு – விடியும் பொழுது, வாரம் – பட்சம், அமுது – உணவு, தலைவாழையிலை – பெரிய வாழையிலை,
என்னுயிர் – எனக்கு மிகுந்த விருப்பம், கயல், தேளி, சாளை – மீன்வகை, மாரி – மழைபோல,
பணியாரம் – பட்சணம், அப்பு – பூசு, சந்தரம் – சந்தனம்.

———-

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம் டங்குளித் தாசலாடுவீர்
பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே
தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே*
மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* 78-

தடம் – சுனை, மருங்கு – இடை, நீட்டுரம் -கொடுமை, காவி – கண்கள்.

———–

மடக்கு-கட்டளைக் கலிப்பா-

தாவு யுண்ப துறிமுகப் பாலையே
சயன போகத் தலமுகப் பாலையே
தேவி யென்பது பங்கயத் தாளையே
தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே
யாவு மாய்வந் துதிப்பது மாயனே
யென்று பன்னித் துதிப்பது மாயனே.
நாவி லோதுவ துன்றிருப் பேரையே
நான் வணங்குவ துன்றிருப் பேரையே. 79-

உறிமுகப் பாலையே – உறியிலுள்ள பாலையே, சயன போகம் உகப்புத் தலம் – படுக்க இனிதாய் மகிழ்ச்சி தரும் இடம்,
ஆலையே – ஆலிலையையே, பங்கயத்தாளையே – தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியையே,
தேவர் கோன் அங்கை அத்தாளையே விரும்பும் என்று பொருள்,
ஆயனேயென்ற உதிப்பதும் – கண்ணனாக வந்து அவதரிப்பது. பன்னி – சொல்லி, மாயனே – மாயையுடையவனே,
திருப்பேரையே – அழகிய திருநாமங்களையே; திருப்பேரையென்னும் ஊரையே.

———–

வஞ்சி விருத்தம்

பேரி யம்பிலன் பேரைமால்
வேரி யம்புனல் வெற்பில் வேள்
காரி யம்பறை கண்கள் வேல்
வாரி யம்பெனன் மாறுமே. 80

இச்செய்யுள் கடைமடக்கு. வேரி – மணம், வேள் காரியம் பறை – மன்மதன் தொழிலைக் கூறும், வாரி – கடலை, மானுமே – நிகராகுமே.

————

பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து
மதியுடம் பழுக்கறத் துடைத்து
வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து
மாசறக் கடைந்தவேல் கிடத்திக்
கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக்
கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக்
குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த
குளிர்முகத் திருவை நீ தருவாய்
கானகம் புகுந்து வீராதனை வதைத்துக்
கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை
கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக்
கருங்கடல் வழிபடக் கடந்து
போனது மரக்கன் புகுந்தது முடிவிற்
புரந்தரன் பெருந்தவ மெனமுன்
பொருதவா மகரக் குழையனே கருணைப்
புனல்வளம் பொழிந்தகார் முகிலே. 81-

மதி, வள்ளை, குமிழ், குமுதம், வேல், சிலை இவை முறையே முகம், காது, மூக்கு, வாய், கண், புருவம் இவற்றுக்கு உவமை.
மான் – சந்திரன் களங்கம், கலை – சந்திரகலை, குருகுலம் – குருகுல வாசம் பண்ணி,
திரு -இலக்குமி போன்ற மகள், வழிபட -வணங்கி வழிபட.

——–

அம்மானை – கலித்தாழிசை-

காரையூர் வண்ணர் குழைக் காதர்சிலைப் போர் விசயன்
தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை
பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை
பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை 82-

காரை ஊர் – மேகத்தில் பொருந்திய, வண்ணர் – நிறத்தை உடையவர். விசயன் – அருச்சுனன்,
தேரையூர்மால் – தேரை ஓட்டுகிற கண்ணன், தேரையூரிலுள்ள விஷ்ணு; பின்னை மால் – நப்பின்னைப் பிராட்டியிடம் காதல்,
மால் கொண்டிருந்தால் – அறிவு மயக்கம் கொண்டிருந்தால், பின்னைப் பேசாரோ – அதன் காரணமாகப் பேசமாட்டாரோ?

———-

கைக்கிளை மருட்பா-

அம்மா னகையு மடுகின்ற மால்பேரை
யெம்மாவி கொண்ட திவணகையே – பெம்மான்
வரிசிலை வடவரை வளைத்த பின்றைத்
திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே 83-

அம்மான் – மாமனாகிய கம்சம், நகையும் சுடுகின்ற -சிரிப்பையும் ஒழித்துக் கொன்ற, பேரை – பேரையில்,
இவள் தலைவி, ஆவியுண்டது – உயிர் கவர்ந்தது, பெம்மான் – சிவபெருமான், சிலை – வில்லாக,
வடவரை – மகா மேருமலை, செற்றது – அழித்தது, முன் – முன்னே, தோன்றின, திருநகை – அழகிய சிரிப்பு.

——–

நேரிசை வெண்பா-

நகைத் தாமரை புரைதாள் நாயகனார் பேரை
யகத்தா மரையமுதே மன்னாள்–முதத்தழகு
தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல்
வான் பிடித்த தன்றோ மதி 84-

நகை – ஒளி, புரையும் – ஒக்கும், பேரையகம் – பேரைத்தலம், தாமரையமுதம் – தாமரையில் இருக்கும் இனிய இலக்குமி
அன்னாள் – ஒபபானவள். பிடித்த – கொண்ட, தரம் பிடிக்க மாட்டாமல் – அழகின் தன்மையறிந்து ஒப்பாக மாட்டாமல்,
வாள் பிடித்தது – வானத்தில் ஓடி ஒளிந்தது.

————

ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்

மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை
முடிக்கும்பெரு மாளய னாரிரு
வருக்கும்பெரு மானெனு மாமறைநூல்
துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை
பொறுக்கும்பெரு மாளடி யார்வினை
தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே
குதிக்குங்கயல் போல்விழி யீரினி
யிறக்குங்குழை யார்முனம் வார்மனங்
கொதிக்கும்பத மானது தானறியீர்
அதிக்கும்பசி யென்னது தூதையில்
வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும்
அறத்தின்பய னாவது தானிதுவே 85-

மதிக்கும் – எல்லோரும் பாராட்டும், மதிவார் சடை முடிக்கும் பெருமான் – சந்திரனை நீண்ட சடையிலே சூடும் சிவபெருமான்,
அயனார் – பிரமன், எனும் – என்று தலபுராணம் கூறும். மறைநூல் – வேதம். துதிக்கும் புகழைக் கூறும், தொலைக்கும் – தீர்க்கும்,
இறக்கும் குழை – நீண்டு தொங்கும் காதணி, கொதிக்கும் பதம் – மிகுந்த வெப்பம் தரும் நிலை,
அதிக்கும் – அதிகரித்துக் கொண்டே வரும். தூதை – பானை சோறிடும், பசி மாறிடும்; அறத்தின் பயனாவது இது தான். அறம் – இல்லறம்.

——————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம்
பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர்
தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே
மாயவெம் பிறவி நோய்க்கு வாகட மருந்து தானே. 86-

வேயிருந்திசைத்த – புல்லாங்குழலை வைத்து ஊதின, விண்ணொடு – விண்ணில், மேகம் – மேகம் போன்றவன்,
பேய் – பூதனை, நாறும் – கமழும், துணை -இரண்டு, வாசடம் – வைத்திய நூல்.

———–

மதங்கியார் – எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால்
வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார்
முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும்
முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும்
இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும்
இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற்
றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும்
உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. 87-

மதங்கியார் – வாளைக் கையில் பிடித்துச் சுழற்றியிடுகின்ற பெண், சாடு – சகடு, வண்டி; மடிபட – இறந்து வீழ,
முருகு – வாசனை, உலாவும் – போன்ற. ப்ரதாபம் – புகழ், இருவெட்டு – இரண்டாகப் பிரிந்த
தொய்யில் – மகளிர் மார்பில் அணியும் சந்தனக் கோலம், பிறைக் கொழுந்து – சிறு பிறை போன்ற நெற்றி,
திலகம் – பொட்டு, இயமனுக்கு உயிர் பறிக்கும் உபாய வித்தையென்று கூட்டுக.

————

மேற்படி விருத்தம்-

மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற
வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற்
சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற்
றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ
மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ
மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே
பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப்
படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. 88-

மதிக்குழவி – பிறை, முடித்தார் – சிவபெருமான், மால் – விஷ்ணு, ஆசை; வயிரங்குன்ற – வயிரமும் ஒப்பாகாத,
வள்ளம் – கிண்ணம், சுளிப்ப – கோண, கைப்ப-கசப்பாக. படுகொலைசூழ்-கொடுமையான கொலையைச் செய்கிற, அள்ளி-முகந்து.

————

பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப்
பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு
மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக்
கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு 89-

புரிசை-மதில், அணங்கு-பெண், சுணங்கும்-வருந்தும், பிடி-பெண் யானை, கடா யானை -ஆண் யானை,
இறைவர்-தலைவன், கொடியில் -பூங்கொடி போல, துவக்கும்-கட்டும், மூரிக்கழை -வலிய மூங்கில், கழைக்கு-கழையில்,.
உறவே-பொருந்தும்படி, அணங்கே, நும் தாள் சாரல் கழைக்கு உறவே, புரிசைக் கொடியைத் துவக்கும்,
இறைவர் தம்மை கருந்தாள் கொடி துவக்குவது போலத் துவக்கும். ஏன்? பருந்தாட் கொடிய தென்றோ? என முடிவு காண்க,
தலைவனுடன் சுரம் போக்குக்கு உடன்பட்ட தலைவியைத் தலைவன் ஊர் அதி சமீபத்தில் இருக்கிறதென்று தோழி தேற்றுதல்,
ஊரளித் தென்றல் என்ற அகப் பொருள் துறை.

——–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கழைக்காவ லானதழல் கொதித்தேறு பாலைவழி
கழித்தோமிராமல் மயிலே
தழைக்காவ லார்கமல மலர்த்தாளு றாமலொரு
சரத்தூர மேகி லுளவே
குழைக்காதர் நாடுமவர் திருப்பேரை யூருமணி
கொழித்தேரு வாவி களுநீள்
மழைக்கா ருலாவும் வரி மணற்சூழல் வாவுமிள
மரச்சோலை நீழல் களுமே. 90-

கழைக்கு ஆவலான தழல்-மூங்கிலை விரும்பிப் பற்றுகிற தீ, கொதித்தேறு-வளர்ந்து கொண்டே செல்லுகிற,
பாலை வழி-பாலை நிலத்தினூடே போகிற பாதை. இராமல்-உட்கார்நது இளைப் பாறாமல்.
சரத்தூரம் அம்பு போடுகிற, கமல மலர்த்தாளுருமல்-தாமரை போன்ற அடிகள் வருந்தாமல்.
மணி-இரத்தினங்கள். மழைக்கார்-மழை மேகங்கள் சூழல்-மேடுகள், வாவும்-தாவி வருகின்ற, நீழல்களும் உளவே என்று முடிவு காண்க.

————

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்-

மேதி பாசடைக் குவளை தின்றுவாய்
வேரி பாய் புனற் பேரை மாயனே
தீது போகவும் பிறவி போகவுந்
தேவரே தொழுஞ் செல்வமான தாள்
ஓதி மாதராற் கயிற்றி லிட்டதால்
உரல் பிணிக்கவுஞ் சகடு தைக்கவும்
தூது போகவுங் கடவதோ வெனாத்
தொழுது மா மறைச் சுருதி பாடுமே 91-

மேதி-எருமை, பாசடை-பசிய இலை, வேரி-தேன், தீது-தீவினை, ஓதி-கூந்தல்,
கயிற்றில்…உரல் பிணிக்கவும்-கயிற்றின் ஒரு நுனியைக் காலில் கட்டி, மற்றொரு நுனியை உரலைச் சுற்றிக் கட்டவும்,
சுருதி-வேதம். கேட்கப்படுவது.

————

நேரிசை வெண்பா-

பாடு குரலறியாப் பைங்கிளியே செந்தினையின்
காடு பூங்காலறியாக் காவலார் – நீடசுரர்
வேரரிந்த மால் பேரை வெற்பிற் சிலகுறவ
ராரரிந்த வாரறியா ரோ. 92

காடு-புனம், பூங்கால்-பூவைப்போல மென்மையான கால், காவலார்-காவல் செய்பவர், ஆரரிந்த-ஆர முழுவதும் அரிந்த.

———-

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அறிவிருந்த சிறுமதலைக் கிர்ணியனா ரடர்த்தநாள்
வெடித்த தூணிற்
பிறிவிருந்த தேவகிபாற் கருவிருந்த திருவயிறும்
பிரிந்த வன்றே
செறிதரங்க நிறைபொருநைத் திருப்பேரை
வளநகருஞ் சேடன் மீதி
லெறிதரங்கப் பாற்கடலு மென்னெஞ்சு மவர்க்கலா
திடம தாமே. 93-

சிறுமதலை – சிறுபிள்ளை, மதலை – பிள்ளையின் பொருட்டு, தரங்கம் – அலை, பொருனை – தாமிரளருணி நதி.

———

எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்.

ககனர் முக் கணர் காண மதலையைச் சலியாது
தலை யறுத துடல் வேறு கறி சமைத் தவள் பாவியோ
விகடமிட் டொருதேவி தசரதற் கினிதான
மகன் வனத் திடையேக விளைய வைத் தவள் பாவியோ
மகனெனக் கருதாம னிலவிலிட் டிள வாடை
வளையவிட் டநியாய மதனை விட் டவள் பாவியோ
பகருமுத் தமிழ்ஞான கருணை பெற் றவர் பேரை
மடநடைப் பெடை நாரை பதிலினிச் சொல வேணுமே. 94-

ககனர் – ஆகாயத்திலுள்ளவர், முக்கணர் – சிவ பெருமான், மதலை – சிறு தொண்டன் பிள்ளை,
கறி சமைத்தவள் சிறுத்தொண்டன் மகன் இராமன், விளையவைத்தவள் – கைகேயி, மதனை விட்டவள் -தலைவன் தாய்.

———-

பாண் – மேற்படி விருத்தம்

மேருவைப் பிளந்தெடுத்து வேறு கூறு செய்த போல்
வெஞ்சினத்தி லிரண்யன்றன் மேனியைப் பிளந்து பேர்
கூருகிர்தி தடக்கை கொண்டு கூறு செய்த பேரை மால்
குரைகழற் புகழ்ந்து பாடல் கொண்டு பெற்ற வரிசையோ
மூரியற்ற விறலியர்க்கு முன்னடைந்து செல்கையால்
மொய் வினைத் துதிக்கை கொண்டு மூடிகளைச் சரிக்கையால்
பாரியற்கை கொண்டழிந்து பலகடம் பெருக்கையால்
பரிசில் பெற்ற யானை நீதி பாணருக்கு மொக்குமே. 95-

முரி – சோம்பல், விறலியர் – பாணன் மனைவிகள், பெருமையுடைய அரசியர்;
துதிக்கை கொண்டு -துதிப்பதினால், தும்பிக்கையினால்;
முடிகளைச் சரிக்கையால் – அரசர்களை வெல்லுகையால், தலைகளை வணங்கச் செய்கையால், கடம் – மதஜலம், கடன்.

———-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்-

பாண் வாய் மிழற்றுஞ் சுரும்பின் தொடர விரி
பங்கயத் தாதிறைத்தும்
பனி மலர்க் குவளை யஞ் சேயிதழ் சுரக்கும்
பசுந்துளித் தேனை மாந்திச்
கேண் வாய் தொடுத்த மதி வண்டுளியி னிற் சிதறு
மல்லிகை யவிழ்த்தும் வாகச்
செம்பொற் றகட்டுக் கருந்தாழை மடலிற்
செறித்த பொற் சுண்ணமாடித்
தூண் வாய் சுமக்கும் பளிக்கறைப் பத்திச்
சுவர்ப் புறத் திடைகு யிற்றுஞ்
சுடர் மணிச் சாளரக் கண் வழி நுழைந்து பைந்
துளவைப் பெறாத மடவார்
நாண் வாய் கிழித்துவேள் சிறுநா ணிறுக்கிட
நடக்குஞ் செழுந் தென்றல் பார்
ஞான புங்கவ விறைவ பேரையம் பதி முதல்வ
நந்தா வளக் கொண்டலே. 96-

பாண் – பண், இசை; மிழற்றும் – மழலையிற் பேசும், சுரும்பு – வண்டு, மாந்தி -குடித்து, மதி வண் குளி – சந்திகளின் துண்டுகள்,
அவிழ்த்தும் – மலரச் செய்தும், சுண்ணம் – வாசனைப் பொடி, பளிக்கறை – பளிங்கு மண்டபம், குயிற்றும் – அமைத்திருக்கிற,
சாளரம் – பலகணி, நாண் – நாணத்தை, வேள் – மன்மதன். நாண் – வில்லின் நாண், ஞான புங்கவ – அறிவிற் சிறந்தவனே, நந்தா – அழியாத.

—-

நேரிசை வெண்பா

நந்தா வளம் பிறந்த நம் பேரை மால் பவனி
வந்தார் வளம் பிறந்த வார்த்தைக்கே – செந்தழல் போல்
வண்ண மாயங்குதித்த மாமதி கண்டென் பசலைக்
கென்ன மாயங் குதித்ததே. 97-

நந்தா வளம் – அழியாத வளப்பம், பிறந்த – தோன்றிய மால் – குழைக்காதர், வந்தார் – வந்தார் என்ற,
வளம் பிறந்த – பெருமை தோன்றும், வார்த்தைக்கே -பேச்சுக்கே, வண்ணம் – நிறம், உதித்த – எழுந்த,
மாமதி – பூர்ண சந்திரன். பசலை – நிற வேறுபாடு, மாயம் – காரணம் அறிய முடியாத கொடுமை, குதித்தது – திடீரென்று தோன்றிற்று.

————-

எழுசீர்ச் சந்த விருத்தம்

குதிக்குங்கவுள் மதத் தண்டுளி மழைக் குஞ்சர மழைக்கும் புயல்
கொழிக்குந் தமிழ் வளர் பேரையிலே
மதிக்கும் பொருள் மிகப் பெண்டுகள் வெறுக்குங்குடி தழைக்கும்படி
வளர்க்குந் திரு மடமா மயிலே
வறிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச் சங்களும் பணிப்பஞ்சிலும்
வெறுக்கும் பத முனதா கையினால்
உதிக்குங் கதிர் வெறுக்கும் பால் கொதிக்குஞ் சுடர் நடக்குந்தொறு
முறைக்கும் பொழு துயிர் வாடுவையே. 98-

கவுள் கன்னம் – கவுளிலிருந்து குதிக்கும், துளிமழை -தூற்றல் முற்றிச் சொரியும் மழை, குஞ்சரன் – கஜேந்திரன் என்னும் யானை,
அழைக்கும் – ஆதிமூலமே என்று கூப்பிடும், புயல் – மேகம் போன்ற குழைக்காதர், கொழிக்கும் தமிழ் வளர்-தமிழ் செழித்து வளர்கின்ற,
பேரை-தென்திருப்பேரை, தழைக்கும்படி-மதிப்பில்லாத குடும்பம் சிறந்த மதிப்படையும்படி,
பெண்டுகள் வளர்க்கும் – பெண்களால் வளர்க்கப்பெற்ற, மயில்-மயில் போன்ற பெண்ணே,
சிறிதென்று விதிக்கும்படி படிக்கும் அனிச்சங்களும் -சிறிதென்று தீர்மானிக்கும்படி நாமறிந்த மென்மையான அனிச்சப் பூக்களிலும்,
பஞ்சினும் உற-பஞ்சிலும், பட்டாலும், உனது பதம் வெறுக்கும்-உனது கால்கள் நோகும்,
“அனிச்சமும், அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெரிஞ்சிப்பழம்,” என்ற குறளைக் காண்க.
உதிக்கும் கதிர் கொதிக்கும் சுடர் நடக்குந்தொறும், வெறுக்கும் பரல் உறைக்கும் பொழுது நீ உயிர் வாடுவை என்று கூட்டுக.
உயிர் வாடுவையே-தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?

———-

இருபத்தைந்தடி நேரிசை யாசிரியப்பா

வாடை வந் தியங்கப் பீடை கொண்டுளதே
தென்றலங் கன்று மென்று தின் றுமிழ்ந்து
கோது பட வாருயிர்க் குறையையுஞ் சுழித்துக்
குழித்து விரல் குழைத்துச் சுழித்த மணற் கூடலும்
அள்ளி யிட்ட புள்ளியம் பசலையும்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்களும்
மறவா வன்புந் துறவா வுள்ளமும்
அன்னப் பேடும் புன்னையங் காவும்
துணை பட விரிந்து துயர்படுங் காலத்தும்
பழுதிலா துயர்ந்த வழுதி நாட் டெவையும்
யாரையுந் தமிழ்ப் பேரயும் புரக்க
வளநகர் வார்குழைச் சிகரபூ தரத்தோன்
தெய்வ நாயக னைவர் தேர்ப் பாகன்
மலைமால் வரைத்தல மலைச் சாரலின் கண்
மணங்கொள் பூங்கொடி யணங்கு தண் பொதும்பரிற்
சிறந்த காட்சியிற் பிறந்த தண்ணளி போற்
கை தொட்டுத் தலைவர் மெய் தொட்டூப்பி யின்று
பணை முலைக் குரும்பை பிணை மலைப் புயத்தின்
ஊடுறப் பொருது பாடுறக் கிடப்ப
வரிவளைத் தழும்பு மார்பிடத் தழுந்தப்
பரிபுரச் சில்லொலி பல்கல னொலிப்பப்
புலவியுங் கலவியும் பொருந்திநற் சீருள்
நலமிகு பெருஞ்சுவை நமக்கினி தளிக்கச்
சிறுதுயிற் கனவு தந் தருளு
மகர நெடுங்குழை வாழி வா ழியவே. 99-

வாடை-வடக்கேயிருந்து வரும் காற்று, இயங்க-வீச, பீடை-வருத்தம், தென்றலங்கன்று-இளந்தென்றல்,
தென்றல்-தெற்கேயிருந்து வரும்காற்று. கோதுபட-கொத்தென்று நீக்கவைத்த, கூடல் – கூடலிழைத்தல்,
அள்ளியிட்ட-வாரிச் சொரிந்த, பயிர்ப்பு-பிறர் பொருளைத் தீண்டின வெறுப்பு,துணைபட-உயிர்த்துணை பிரிந்தால்,
இரிந்து- ஓடி, புரக்க-காக்க, வார்-நீண்ட, பூதரம்-மலை போன்ற தோள், ஐவர்-பஞ்ச பாண்டவர்,
அணங்கு-படர்ந்து வருத்தம் செய்கிற, பொதும்பர் – சோலை, தண்ணளி-தலையளி, குரும்பை-இளநீர் புயம்-தோள்,
பாகுற-பக்கத்தில் பொருந்த, பரிபுரம் -பாதசரம், சில்லொலி-சில்லென்ற ஒலி, பல்கலன்- பல ஆபரணங்கள், புலவி-ஊடல், கலவி-புணர்ச்சி,

————–

நேரிசை வெண்பா

வாழி புகழ்ப் பேரை மகரக் குழை வாழி
வாழி தமிழ் நூற்றெட்டு மாமறையோர் -வாழியவே
தேக்கும் பதக மலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பத கமலப் பூ. 100-

பதக மலம்-குற்றமாகிய அழுக்கு, பத கமலம்-அடித்தாமரை, பூக்கும்-தோன்றும்.

————

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பதித்த நவ ரத்னமணி மோலி வாழி
பங்கயப்பூந் திருமுகச் செம் பவளம் வாழி
கதித்த சீர் நெற்றியில் வெண் டிருமண் காப்பு
கத்தூரித் திலகமிரு கண்கள்
துதித்தநறும் பசுந்துபைத் தோள்கள் வாழி
சுரிமுகச்சங் காழிவான் கதைவில் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சேர் அரைநூல் வாழி
மகரநெடுங் குழைக்காதர் வாழி வாழி. 101–

மோலி-கிரீடம், பவளம்-இதழ், சுரிமுகம்-வளைந்த அடிப்புறம், ஆழி-சக்கரம். கதை-தண்டாயுதம், பீதாம்பரம்-பொன்னாடை.

——

முற்றும்.

—————

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: