ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து அளித்தவை —அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –

அதிகாரத்திலிருந்து —–

ப்ரக்ருதி ஆத்மாப்ராந்தி : களதி சித் அசித் லக்ஷண தியா
ததா ஜீவ ஈச ஐக்ய ப்ரப்ருதி கலஹ : தத் விபஜனாத்
அத : போக்தா போக்யம் தத் உபய நியந்தா நிகமை :
விபக்தம் ந : தத்த்வத்ரயம் உபதிசந்தி அக்ஷததிய :

வ்யாக்யானம் —–

சேதநங்கள் , அசேநதங்கள் —இவைபற்றிய ஜ்ஞானம் ஏற்படும் போது,-இதுவரை எண்ணியிருந்த, இந்த சரீரமும், இந்த்ரியங்களுமே ஆத்மா
என்கிற மதி மயக்கம் அகலும்; அதாவது, சித் , அசித் இவைபற்றிய ஜ்ஞானம். ஆத்மா வேறு; உடல் இந்திரியங்கள் வேறு என்கிற
உண்மையான ஜ்ஞானம் ஏற்படும்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கிற தவறான வாதம் , இவற்றின் குணங்களால் உணரப்படும் போது
அகன்று விடும்.அதாவது, ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மையான ஜ்ஞானம்.
இந்த ஜ்ஞானம் , எப்போது ஏற்படும் என்றால், நமது ஆசார்யர்கள் நமக்கு ,சாஸ்த்ரங்கள் சொல்லும் மூன்று தத்வங்களை
நன்கு உபதேசம் செய்யும்போது ஏற்படும்.

இந்த மூன்று தத்வங்கள் —
1. சேதநன் —சுக துக்கங்களை அனுபவிப்பவன்–போக்தா
2. அசேதநம் —சேதநனால் அனுபவிக்கப்படுவது
3 ஈச்வரன் –சேதந ,அசேதநங்களை நியமிப்பவன் –நியந்தா

அதாவது—போக்தா–சேதநன் –அவனுக்கு வருகிற சுகம்; துக்கம் இவைகளை அவனே அனுபவித்துத் தீர்ப்பது.
போக்யம் —இதுவே அசேதநம் —சேதநன் அனுபவிக்கிறானே ,அவை.
நியந்தா —அதாவது–பகவான்—அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவை இவற்றை நியமிப்பவன் .
போக்தா என்கிற அநுபவிப்பவன் , போக்யம் என்கிற அனுபவிக்கப்படும் வஸ்துக்கள், இவற்றையெல்லாம்,
ப்ரேரிதா என்கிற ஈச்வரன்– —-பொருளை –வஸ்துக்களை அனுபவிக்கும்படியாக , சேதநனை ஆக்குபவன்
இவற்றை, போக்ருத்வம், போக்யத்வம் , நியம்க்ருத்வம் என்றும் சொல்வர் .
பகவான், சேதநன் அசேதநம் இரண்டிலும் வியாபித்து ( இவை இரண்டும் பகவானுக்குச் சரீரம் ) அரணிக் கட்டையில் அக்நியைப்
போலவும், எள்ளில் எண்ணையைப் போலவும், பாலில் நெய் போலவும் மறைந்து நின்று , கர்மாநுகூணமான பலனைப் பெறச் செய்கிறான்.
ச்வேதாச்வசர உபநிஷத் இப்படிக்கு கூறுகிறது—
பகவான் தன்னை அறிய ஸங்கல்ப குணங்களோடும் , தன்னை அறிந்தவனை வாழ்விக்க வாத்ஸல்யம் , காருண்ய குணங்களோடும் இருக்கிறான்.
இவற்றை உள்ளபடி அறிந்து, பக்தியில் ப்ரஹ்ம ஜ்ஞானம் ஏற்படும்போது, புண்ய ,பாப கர்மாக்களிலிருந்து விடுபடுகிறான்.

அதிகாரத்திலிருந்து—–

தத்வ த்ரயம் —இதை எதற்காகத் தெரிந்துகொள்ள வேண்டும் ?

ஸம்பந்தமும் அர்த்தபஞ்சகமுங்கூட ஆறு அர்த்தமறிய வேண்டியிருக்க , இவற்றில் ஏகதேசமான தத்வத்ரயத்தை முமுக்ஷுவுக்கு விசேஷித்து
அறியவேண்டுமென்று ஆசார்யர்கள் உபதேசித்துப் போருகைக்கு அடியெனென்னென்னில் —–
அதுக்கடி ப்ரக்ருதி ஆத்ம க்ரமமும் ஸ்வதந்த்ர ஆத்ம க்ரமமும் , இதுக்கு நிதானமான அநீச்வரவாதருசியுமான
மஹா விரோதிகளை முற்படக் கழிக்கப் ப்ராப்தமாகை .
இத்தை நினைத்து போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபத்தாலே சாஸ்த்ரங்களிலே தத்த்வ விவேகம் பண்ணுகிறது

இவற்றில் வைத்துக்கொண்டு
”அசேதநா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா
த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே அநாதிர்பகவான்
காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே, கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ
ந யத்விபூதே :பரிணாம ஹேது : ஞானானந்தமயா லோகா :காலம் ஸ
பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு :”–இத்யாதிகளாலே த்ரிகுண கால சுத்த ஸத்வரூபங்களான த்ரிவித
அசேதநங்களுடைய ஸ்வபாவஞ் சொல்லிற்று

புமாந் ந தேவோ ந நர : நாயம் தேவோ ந மர்த்யோ வா
க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த :அக்ஷர உச்யதே ,
யத்வை பச்யந்தி ஸுரய :–இத்யாதிகளாலே த்ரிவித ஜீவர்களுடைய ப்ரகாரம் விவேகிக்கப்பட்டது.

ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பல,
க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத :–இத்யாதிகளாலே ஈச்வர ஸ்வபாவம் உபதிஷ்டமாயிற்று

இவ் ஈசோசிதவ்ய ரூபமான தத்வத்ரயம் நிற்கும் நிலையை
ஸ்வாதீந த்ரிவித சேதந அசேதந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திபேதம்–என்று சுருங்க அருளிச் செய்தார்.
த்ரிவிதசேதனரென்றது பத்தரையும் , முக்தரையும் , நித்யரையும்
த்ரிவித அசேதனமென்றது த்ரிகுணத்ரவ்யத்தையும் காலத்தையும் சுத்த ஸத்வமான த்ரவத்தையும்

வ்யாக்யானம்

ஸம்பந்தம் —-அதாவது ,ஜீவ , ஈச்வர ஸம்பந்தம்
அர்த்த பஞ்சகம் —மேற்படி ஸம்பந்தத்துடன் கூடிய ஆறு தத்வங்கள் ,
முமுக்ஷுவால் அறியப்பட வேண்டியவையாகும். சொல்லப்படும் மூன்று தத்வங்களும், ஆறு தத்வங்களில் உள்ளன.

இப்படி இருக்கும்போது, மேற்கூறியவற்றை ஆசார்யர்கள் விசேஷித்துச் சொல்லக் காரணம் என்னவெனில்,
1. சரீரமே ஆத்மா என்கிற மயக்கமும், இந்த ஜீவாத்மா ஸ்வதந்த்ரமானவன் என்கிற மயக்கமும், அகலவேண்டும் என்பதற்காகவே —
இப்படிப்பட்ட மயக்கம் ஏன் ஏற்படுகிறது என்றால்,
பகவான் என்பவரே இல்லை என்று எண்ணுவதாகும். இப்படி, இவை எல்லாமே ஒரு ஜீவாத்மா மோக்ஷம் அடையத் தடைகளாகின்றன.
இதனால்தான், சாஸ்த்ரங்கள் தத்வங்களை மூன்றாகப் பிரித்துச் சொல்கின்றன —அவையே–சேதநன் என்கிற அநுபவிப்பவன் ,
அசேதநம் என்கிற ”அநுபவிக்கப்படும் வஸ்துக்கள் ”
மற்றும், ஈச்வரன் –இவற்றையெல்லாம் நியமிப்பவன் அதாவது, பகவான்

மேலே சொல்லப்பட்ட, அசேதநங்களான,அனுபவிக்கப்படும் பொருள்கள் மூன்று வகை—-
1. ஸத்வ ,ரஜோ , தாமஸ குணங்களுடன் கூடிய ப்ரக்ருதி , 2.காலம் ,3. ஸுத்த ஸத்வம்
இவற்றில் ப்ரக்ருதியின் தன்மை, பரம ஸம்ஹிதையில்

”அசேதநா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா
த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே”–என்று சொல்லப்படுகிறது. அதாவது,
ப்ரக்ருதி , அறிவில்லாதது, எப்போதும் மற்றவர்களுக்காகவே உள்ளது,-தனது ஸ்வரூபத்துக்கு அழிவு இல்லை ,
எப்போதும் மாறுகிற குணம் உள்ளது,–ஸத்வம் ,ரஜஸ், தாமஸம் என்கிற மூன்று குணங்களை உடையது,
கர்மாக்களைச் செய்கிறார்களே–சேதநர்கள் —-அவர்களுக்கு,-அந்தக் கர்மாக்களின் பலனை அநுபவிக்கும் சரீரமாக உள்ளது.

காலம் —இதை விஷ்ணு புராணம் சொல்கிறது

அநாதிர்பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே, கலா முஹுர்த்தாதி மயச்ச
காலோ ந யத்விபூதே :பரிணாம ஹேது :

பகவானுக்குச் சரீரமாக உள்ள, காலம் என்பதற்கு, தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை; மற்றும், வினாடி, முஹூர்த்தம் என்று காலப்
பரிணாமங்களைச் சொல்கிறோமே இவை, எம்பெருமானின் நித்யவிபூதியில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்வதில்லை–உண்டாக்குவதில்லை.

ஸுத்த ஸத்வம்—–ப்ரக்ருதி என்று பார்த்தோமே –உலகங்கள்—இவற்றுக்கு அப்பாலே வெகு தொலைவில் உள்ள எம்பெருமானின் ”நித்ய விபூதி”யில்
யாவுமே (அசேதநங்களாக இருந்தாலும் ), ஸுத்த ஸத்வத்தால் ஆனவை.
ஆதலால், இவை ”ஞானானந்தமயா லோகா :” ஜ்ஞானமும் , ஆனந்தமும் முற்றிலும் நிறைந்தவை

காலம் ஸ பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு :” ( மஹா பாரதம் –சாந்தி பர்வம் )
நித்ய விபூதியில் ,காலமானது எம்பெருமானுக்குக் கட்டுப்பட்டது. அவன்தான் காலத்தை நிர்ணயிக்கிறான்.நித்ய விபூதியில்,
”காலம் ” எவ்வித மாறுதல்களையும் ஏற்படுத்த இயலாது.
இப்படியாக, ப்ரக்ருதி ,கால, ஸுத்தஸத்வம் என்கிற மூன்று அசேதனங்களின் தன்மை விவரிக்கப்பட்டது.

(பித்ருக்களுக்கு—கிருஷ்ண பக்ஷம் இரவு –ராத்ரி ; சுக்ல பக்ஷம் –பகல்.
தேவர்களுக்கு / தேவதைகளுக்கு—-தக்ஷிணாயணம் –இரவு –ராத்ரி .உத்தராயணம் —-பகல்
நமக்கு ஒரு வருஷம் என்பது, அவர்களுக்கு ஒரு நாள் ( அஹோராத்ரம் ) இப்படி, 360 நாட்கள், அவர்களுக்கு ஒரு வருஷம் )

நிமிஷம் —ஒரு மாத்ரை ;15 நிமிஷங்கள் –ஒரு காஷ்டை ;30 காஷ்டை –ஒரு கலை
15 கலை —ஒரு நாழிகை ;2 நாழிகை –ஒரு முஹூர்த்தம் ;
30 முஹூர்த்தம் –ஒரு நாள்; 30 நாள் –ஒரு மாதம்; 12 மாதம்–ஒரு வருஷம்.

இதைப்போல,
17, 28,000 வருஷங்கள் –க்ருத யுகம் –பிறகு யுக ப்ரளயம் –யுக சந்தி என்றும் சொல்வர்
12, 96,000 வருஷங்கள் –த்ரேதா யுகம் –பிறகு யுக ப்ரளயம் ”
8,64,000 வருஷங்கள் –த்வாபர யுகம் —பிறகு யுகப்ரளயம் ”
4,32,000 வருஷங்கள் –கலியுகம் —பிறகு யுகப்ரளயம் ”

இப்படி காலச் சுழற்சி ஏற்படுகிறது.
இப்படி ஏற்படும் சுழற்சியில், நான்காயிரம் யுகம் ( 1000 சதுர் யுகம் )–ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல் ;
அடுத்த நான்காயிரம் யுகம் ( 1000 சதுர் யுகம் )–ஒரு ராத்ரி –இவற்றை ”கல்பம் ”என்பர்
பகல் ஒரு கல்பம்; இரவு ஒரு கல்பம்.
கல்பத்தின் முடிவில், நைமித்திக ப்ரளயம் — காலம்,நிமித்தமாக இருப்பதால், நைமித்திகம் இப்படி ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள்

14 கல்பங்கள்–ஒரு மன்வந்த்ரம் ; மொத்தம் 14 மன்வந்த்ரங்கள்.
இப்போது நாம் இருப்பது, வைவஸ்வத மன்வந்த்ரம் எனப்படும்.
இது ஏழாவது மன்வந்த்ரம். ;இதுவரை, 1.ஸ்வாயம்புவன் , 2. ஸ்வாரோசிஷன் ,
3. உத்தமன், 4.தாமஸன் , 5. ரைவதன் , 6. சரஸுக்ஷன் என்கிற மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன.

வ்யாக்யானம் —-
ஜீவாத்மாவைப் பற்றி ஸ்ரீ விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது—
புமாந் ந தேவோ ந நர :—–மனிதனும் அல்லன்; தேவனும் அல்லன்.

நாயம் தேவோ ந மர்த்யோ வா —தேவனும் அல்லன் ; மனிதனும் அல்லன்
சேதநர் , மூன்று பிரிவுகளாவர் இதை,ஸ்ரீமத் பகவத் கீதை சொல்கிறது—-

க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த :அக்ஷர உச்யதே , ஸ்ரீமத் பகவத் கீதை ( 15–16 )
த்வாமிமௌ புருஷெள லோகே க்ஷரஸ் ஸாக்ஷர ஏவ ச |
க்ஷவ : ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்ஷர உச்யதே ||
கர்மவசத்துக்கு உட்பட்டவர்கள் –க்ஷரன் /க்ஷரம்-அதாவது, பத்தர் ,கர்மவசப்பட்டவர்கள் . முக்தர்–கர்மஸம்பந்தம்
இல்லாமல் இருப்பவர்–அக்ஷரர் . நித்யஸூரிகள் –அக்ஷரர் –கர்மவசத்துக்கு உட்படாதவர்கள்
ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது—
யத்வை பச்யந்தி ஸுரய : நித்ய ஸூரிகள் பார்த்தபடி உள்ள இடம்

இவ்வாறாக, மூன்று வித ஜீவர்களின் தன்மைகள் விவரிக்கப்பட்டன.

அடுத்து, ஈச்வர தத்வம் சொல்லப்படுகிறது
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலிருந்தே ,ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டுகிறார்

ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பல,
க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத :

ஈச்வரன் —-பகவான் –இவன் ஸர்வஜ்ஞன் –அனைத்தும் அவனே இவன் ஸர்வக்ருத் —எல்லாம் அறிந்தவன்
இவன் ஸர்வ ——சக்தி, ஜ்ஞான ,பல , ஐச்வர்ய , குணாதிகள் நிறைந்தவன்;
களைப்பு, சோம்பல், பயம், கோபம், காமம் போன்றவை இல்லாதவன்
இப்படியாக ஈச்வர ஸ்வபாவம் விளக்கப்பட்டது.

அடுத்து, ஈச்வரன் , அவனால் நியமிக்கப்படுபவை இவற்றையெல்லாம் நமது
ஆசார்யர்கள் சுருக்கமாகச் சொல்லியுள்ளதாக, ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்.

எம்பெருமானாரின் ”வைகுண்ட கத்யம் ” , ஸ்ரீ ஆளவந்தாரின் ”ஆத்ம ஸித்தி ” எடுத்துச் சொல்லப்படுகிறது.
ஸ்வாதீன த்ரிவித சேதநாசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் , க்லேசகர்மாதி
அஸேஷதோஷா ஸம்ஸ்ப்ருஷ்டம் , ஸ்வாபாவிக அநவதிகாதிஸய , ஜ்ஞான
பல , ஐச்வர்ய , வீர்ய , சக்தி , தேஜ :, ப்ரப்ருதி அஸங்க்யேய கல்யாண குணகணெளக
மஹார்ணவம் , பரமபுருஷம் , பகவந்தம் , நாராயணம் , ஸ்வாமித்வேன ,
ஸுஹ்ருத்வேன , குரூத்த்வேன ச பரிக்ருஹ்ய ————

சம்ஸாரி , முக்தன் , நித்ய ஸூரி என்றும், 3 வித ஜீவராசிகளுடையவும் ,
த்ரிகுண ப்ரக்ருதி , காலம்,நித்ய விபூதி என்றும் 3 வித அசேதனங்களுடையவும்
ஸ்திதி, ப்ரவ்ருத்தி , நிவ்ருத்தி இவைகளைத் தாமிட்ட வழக்காக உடையவரும் ,
5 வித க்லேசங்களும், புண்ய பாபரூபமான கர்மங்களும் எனப்படும் எவராலும் மாசுபடாதவரும் , மிக உயர்ந்தவரும்,
இந்த்ரியங்களின் உதவியே இல்லாமல் காண்பது, மூலகாரணமாகப் பொருளாக ஆகும் ஆற்றல், அனைத்தையும்
எவ்வித ச்ரமமும் இன்றி தரிக்கும் வலிமை , எல்லாரையும் /எல்லாவற்றையும் ஸங்கல்பத்தின்படி நடத்தும் தலைமை ,
சிறிதும் சோர்வு அடையாத பெருமை , அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் ஒளி —-இவைகள் எல்லாம்
நிறைந்தவரும், ஸமஸ்த ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவரும்,
பகவானான ஸ்ரீமந் நாராயணனை ,நம்மையெல்லாம் அடிமையாக்கிக்கொண்ட ஸ்வாமியாகவும் , ஆசார்யனாகவும் ——————–

த்ரிவித சேதநர் என்பது—சம்ஸார பந்தத்தில் உள்ள ”பத்தர் ‘, மோக்ஷமடைந்த முக்தர் , மற்றும் நித்ய ஸூரிகள்
த்ரிவித அசேதநம் என்பது—-ப்ரக்ருதி, காலம், ஸுத்தஸத்வம்

அதிகாரத்திலிருந்து ——-

ஸ்வரூபம் —ஸ்திதி —ப்ரவ்ருத்தி –இவற்றின் விவரம்

ஸ்வரூபமென்றது
ஸ்வாஸதாரண தர்மத்தாலே நிரூபிதமான தர்மியை

ஸ்திதியாவது
இதனுடைய காலாந்தரானுவ்ருத்தி . இதுதான் நித்ய வஸ்துக்களுக்கு நித்யையாயிருக்கும் .
அநித்ய வஸ்துக்களுக்கு ஈச்வர ஸங்கல்பத்துக்கு ஈடாக ஏறியும் சுருங்கியும் இருக்கும்.
இங்கு, ப்ரவ்ருத்தியாவது
ப்ரவ்ருத்தி –நிவ்ருத்தி ரூபமான வியாபாரம் . இவையெல்லாம், வஸ்துக்கள் தோறும் ப்ரமாண ப்ரதி நியதமாயிருக்கும் .
ப்ரமாணங்கள் வஸ்துக்களைக் காட்டும் போது
அவ்வோ வஸ்துக்களின் ஸ்வரூபத்தையும் , ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் , நிரூபித ஸ்வரூப விசேஷணங்களையும் , வ்யாபாரங்களையும் காட்டும்.
அதில் ஸ்வரூபத்தை ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே விசிஷ்டமாகவே காட்டும்.
அந்த ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களை இட்டல்லது சொல்ல வொண்ணாது .
அவற்றைக் கழித்துப் பார்க்கில் சச விஷாண துல்யமாம் .

வ்யாக்யானம்

ஸ்வரூபம் —என்பது, ஒரு வஸ்துவின் தனித் தன்மையைக் குறிக்கும் . அதனுடைய அசாதாரண தன்மையையும் குறிக்கும்.
உதாரணம் —மரம் — இது அசேதநம் . ஆலமரம் என்று வைத்துக் கொள்வோம் .
இதன் ஸ்வரூபம் –ஆலமரம் . இதன் தனித்தன்மை –சிறிய இலைகள்; சிறிய பழங்கள் .
அசாதாரணத் தன்மை—விழுதுகள் பூமியில் பரவி , அரசனின் ”ரத ,கஜ ,துரக ,பதாதிகள் ” தங்குவதற்கு நிழல் தரும் தன்மை .

ஸ்திதியாவது —-ஸ்வரூபத்தின் நீடிப்பு எனலாம். காலத்தின் போக்கில் அப்படியே இருக்கும். ஆனால், நித்யமில்லாத வஸ்துக்களுக்கு விரிவதும் ,சுருங்குவதுமான
தன்மைகள் இருக்கும். இவை ஈச்வரனின் ஸங்கல்பத்தின்படி ஏற்படும். நித்யமில்லாத வஸ்து; அசேதநம் ; வளரும், சுருங்கும்,பட்டுப்போகும் .

ப்ரவ்ருத்தி —–
செயலாற்றுவது , செயலாற்றாமலும் இருப்பது. இவை கால நிலைக்கு ஏற்ப , அதாவது,
மழை,வெய்யில், வசந்தம் ; இலைகள் துளிர்ப்பது , பட்டுப்போவது.சில காலங்களில் துளிர்வது, பட்டுப்போவது இல்லாமல் அப்படியே இருப்பது.
ஆக ,மேற்சொன்ன மூன்றும் பற்பல ப்ரமாணங்கள் மூலமாக, பொருளுக்குப் பொருள்
( வஸ்துக்கள் ) வேறுபடும்.ப்ரமாணம் என்பது, ஒரு வஸ்துவின் ஸ்வரூபம்,அதன் தன்மை , அதன் செயல்பாடு இவற்றைச் சொல்வது.
ஸ்வரூபத்தைப்பற்றிச் சொல்லும்போது, அந்த ஸ்வரூபத்தின் தன்மைகளும் சொல்லப்படும்.
ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தின் தன்மைகளைக் குறிப்பிடாமல் , அந்த வஸ்துவைப் பற்றி மட்டுமே சொல்வது, முயலின் காது பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும்.

அதிகாரத்திலிருந்து——

ஜீவ தத்வ நிரூபணம் —
ஜீவனின் ஸ்வரூபம்
ஆகையால் ஜீவ ஸ்வரூபத்தை ஞானத்வம் , ஆனந்தத்வம் ,அமலத்வம் , அணுத்வம் இத்யாதிகளான நிரூபக தர்மங்களை யிட்டு
நிரூபித்து ஞானம், ஆனந்தம், அமலம், அணு என்று இம் முகங்களாலே சொல்லக் கடவது .

வ்யாக்யானம்

ஆகவே , ஜீவனின் ஸ்வரூபத்தை, ஞானம் , ஆனந்தம் , அமலம் ( தூய்மை ), அணு ஆகிய தன்மைகளைக் கொண்டு சொல்லலாம் .
அதாவது—-ஜீவன், ஞானமயமானவன் , ஆனந்தமயமானவன், தூய்மையானவன் , அணுவைப்போன்றவன் என்றெல்லாம் சொல்லலாம்.

அதிகாரத்திலிருந்து—-

ஜீவ தத்வம் –திருமாலுக்கே இயல்பாக அடிமை

இஜ் ஜீவ தத்த்வம் ஸர்வேச்வரனுக்குச் சேஷமாயேயிருக்குமென்றும் அவனுக்கே நிரூபாதிக சேஷமென்றும் அயோகாந்ய யோக வ்யவச்சேதங்களாலே ப்ரதம பதத்திலே
தோன்றின சேஷத்வம் ஸம்பந்த ரூபமாகையாலே ஸம்பந்தி ஸ்வரூபம் நிரூபிதமானாலல்லது அறிய வொண்ணாமையாலே ஜீவனுக்கு இது நிரூபித ஸ்வரூப விசேஷணமென்னலாம் .

அணுத்வே ஸதி சேதநத்வம் போலே ஸ்வத : சேஷத்வே ஸதி சேதநத்வமும் ஜீவலக்ஷணமாகவற்றாகையாலே இச்சேஷத்வம் ஜீவனுக்கு
ஸ்வரூப நிரூபகமென்னவுமாம் .

இப்படி விபுத்வேஸதி சேதநத்வமும் , அனன்யாதீனத்வ நிரூபாதிகசேஷித்வாதிகளும் ஈச்வர லக்ஷணங்கள் .
ஜீவேச்வரரூபமான ஆத்மவர்க்கத்துக்கெல்லாம் பொதுவான லக்ஷணம் சேதநத்வமும் ப்ரத்யக்த்வமும் .
சேதநத்வமாவது ஞானாச்ரயமாகை . ப்ரத்யக்த்வமாவது தனக்குத்தான் தோற்றுகை .
அப்போது தர்மபூதஞான நிரபேக்ஷமாக நான் என்று தோற்றும் .
இப்படி சேதநத்வாதிகள் ஈச்வரனுக்கும் ஜீவனுக்கும் பொதுவாகையாலே அவனிற்காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக
ஜீவலக்ஷணத்தில் ஸ்வதச்சேஷத்வாதிகள் சொல்லுகிறது .
ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியில் தோற்றின தாதர்த்யத்துக்கு உபாதியில்லாமையாலே ஸர்வ ரக்ஷகனான
ஸ்ரீய :பதிக்கு ஜீவாத்மா நிரூபாதிக  சேஷமாயே யிருக்குமென்று இப்படி யாவத்ஸ்வரூபம் ஸம்பந்தம் சொல்லுகை அயோக வ்யவச்சேதம் —
மத்யமாக்ஷரத்தில் அவதாரண ஸாமர்த்யத்தாலே அவனுக்கே நிரூபாதிக சேஷம் . வேறொருத்தருக்கு நிரூபாதிகசேஷமென்கை
அந்யயோக வ்யவச்சேதம் . இச் சேஷத்வம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வளரும்படி மேலே சொல்லக் கடவோம்

வ்யாக்யானம்

ஜீவன் என்கிற தத்வம், எப்போதும் எம்பெருமானுக்கு அடிமையாக இருப்பதே .
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், பகவானுக்கு அடிமையாக உள்ளான்
எப்போதும் அவனுக்காகவே ஜீவன் இருக்கிறான். இதுவே அயோக வ்யவச்சேதம் .
மற்றவர்களுக்காக அல்ல , இது அந்யயோக வ்யவச்சேதம் .

திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவத்தின் மூலம் ஜீவன் பகவானுக்கு அடிமை என்பது தெளியலாயிற்று .
இதனால்,ஜீவனுக்கும் பகவானுக்கும் உள்ள ஸம்பந்தம் சொல்லப்பட்டது. இத்தகைய ஸம்பந்தமின்றி ஜீவனைப் பற்றி , ஏதும்
சொல்ல இயலாது. ஜீவனின் தன்மைகள் ”அணு ” என்றும் , ”அறிவுள்ளது ” என்றும் சொல்வதைப் போல
பகவானுக்கு, ஜீவன் அடிமை என்பதும் ஒரு தன்மையே . ஆகவே ,அடிமையாக இருப்பதும் ஜீவனுக்கு ஒரு அடையாளம்
இதைப் போன்றே , அறிவுடன் உள்ளதும், எங்கும் உள்ளதும் ( விபுத்வம் ) ஈச்வரனின் தன்மையாகிறது.
தவிரவும்,பகவான் மற்ற எதனையும் சார்ந்து இல்லை என்பதும், சுதந்திரமாக உள்ளான் என்பதும் , மற்றவற்றிலிருந்து எதையும் எதிர்பாராமல்
உள்ளான் என்பதும், இங்கு அறியப்படவேண்டியவை.
ஜீவன், ஈச்வரன் –ஆத்ம வஸ்துக்கள்—இவற்றிற்கு சேதநத்வம், ப்ரத்யக்த்வம் இரண்டும் பொருந்தும்.

சேதநத்வம்—–ஞானத்துடன் உள்ள நிலை. ப்ரத்யக்த்வம்—-தன்னைப்பற்றிய அறிவுடன் உள்ள நிலை
தர்ம பூத ஞானம் —-ஜீவனிடம் உள்ள ஞானம் –இவற்றின் மூலமாக , ஜீவன் எல்லாவற்றையும் அறிகிறான்.
அதே சமயம் , தன்னைப் பற்றி அறிந்துகொள்ள இந்த தர்மபூத ஞானம் அவச்யமில்லை.
ஜீவனுக்கும், ஈச்வரனுக்கும் . சேதநத்வம், ப்ரத்யக்த்வம் இரண்டும் பொதுவாக இருந்தாலும், ஜீவனின் தன்மையை, ஈச்வரனின் தன்மையிலிருந்து
வேறுபடுத்திக்காட்ட ,ஜீவன் இயல்பாகவே ஈச்வரனின் அடிமை என்று .சொல்லப்படுகிறான்

ஆக , திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவத்தின் ”அ ” என்கிற அக்ஷரத்தின் மூலம்
ஜீவன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஈச்வரனின் அடிமை என்பது உணர்த்தப்படுகிறது.

இந்த ஸம்பந்தம் ,ஜீவன் உள்ளவரையில் எப்போதுமே இருக்கும் இந்த ஸம்பந்தம் , அயோக வ்யவச்சேதம் எனப்படுகிறது.

ப்ரணவத்தின் நடு அக்ஷரமான ”உ ” என்பதன் பொருள் –”மட்டும் ” எனப்படுகிறது.
அதாவது, ஜீவன், ஈச்வரனுக்காக மட்டுமே உள்ளான் என்றும் மற்றவர்க்காக உள்ளான் என்பது மறுக்கப்படவும் செய்கிறது.
இந்த மறுப்பானது—–அந்யயோக வ்யவச்சேதம் .என்று சொல்லப்படுகிறது.
‘இப்படிப்பட்ட” சேஷத்வம்” பகவான் முதலாக அவன் அடியார்கள் –பாகவதர்கள் வரை
நீடிப்பதை நாம் வேறு ஒரு இடத்தில் விளக்குவோம்

அதிகாரத்திலிருந்து——

சேதநனின் ப்ரவ்ருத்தி

இப்படியிருக்க , சேதநருக்குப் ப்ரவ்ருத்தியாவது ——–பராதீனமுமாய் பரார்த்தமுமான கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் , ஈச்வரன் தன்
போக்த்ருத்வார்த்தமாக இவர்களுக்குக் கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உண்டாக்குகையால் இவை பரார்த்தங்கள்

வ்யாக்யானம்

சேதனர்களின் செயல்கள் ,பகவானின் ஸங்கல்பத்துக்கு இணங்க கர்மாக்களைச் செய்வதாகும்.அந்தக் கர்மாக்களின் பலனை அனுபவிப்பதுமாகும் .
இவை யிரண்டும், பகவானின் சங்கல்பத்தின் காரணமாகவே நடப்பதால், சேதநர்கள் , பகவானுக்காகவே இருக்கின்றனர்;
தங்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ அல்ல .

அதிகாரத்திலிருந்து

பத்த —முக்த–நித்யர் …..மூன்றுவகைச் சேதநர்களும் ,ப்ரவர்த்திகளும் ,வேறுபாடுகளும்

பத்த சேதநருக்கு நீங்கியுள்ளாரில் பேதம் அவித்யா கர்ம வாஸனா ருசி ப்ரக்ருதிஸம்பந்த யுக்தராயிருக்கை.
இவர்களுக்கு, அன்யோன்யம் வரும் ஞானஸுகாதிபேதத்தை ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தகளான வகுப்புகளிலே கண்டு கொள்வது.
இப்பத்த சேதநர் தந்தாமுக்குக் கர்மாநுரூபமாக ஈச்வரன் அளித்த சரீரங்களை தர்மி ஸ்வரூபத்தாலும் தரியா நிற்பார்கள் .
தர்மியால் வருகிற தாரணம் சரீரத்தினுடைய ஸத்தைக்குப் ப்ரயோஜனமாயிருக்கும்
ஜாக்ரதாத்யவஸ்தையில் தர்மபூத ஞானத்தாலே வருகிற சரீர தாரணம் புருஷார்த்த ததுபாயாநுஷ்டானங்களுக்கும் ,
க்ருதோபாயனான பரமைகாந்திக்கு பகவதனுபவ கைங்கர்யங்களுக்கும் உபயுக்தமாயிருக்கும் .
பாப க்ருத்துக்களுக்கு இச் சரீர தாரணம் விபரீத பலத்துக்கு ஹேதுவாயிருக்கும் . இஜ்ஜீவர்கள் இச்சரீரத்தை விட்டால் இதின்
ஸங்காதம் குலையுமித்தனை . சரீரத்துக்கு உபாதானமான த்ரவ்யங்கள் ஈச்வர சரீரமாய்க் கொண்டு கிடக்கும். பத்த சேதநருக்கு இதரரிற் காட்டில்
ஸ்திதிபேதம் யாவந்மோக்ஷம் அனுவர்த்திக்கை .

ப்ரவர்த்திபேதம் புண்யபாப அநுபயரூபங்களான த்ரிவித ப்ரவ்ருத்திகளும் .முக்தருக்கு நீக்கியுள்ளாராகில் பேதம் ப்ரதிபந்தக நிவ்ருத்தியாலே ஆவீர்பூத ஸ்வரூபராயிருக்கை. ஸ்திதிபேதம் பூர்வாவதியுண்டான ஆவிர்பாவத்துக்கு
உத்தராவதியன்றிக்கேயிருக்கை .

இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதிபேதம் ஆவிர்பாவத்தில் முற்பாடு பிற்பாடுகளால் உண்டான முன்புற்ற
ஏற்றச் சுருக்கம் . ப்ரவ்ருத்திபேதம் அநாதிகாலம் இழந்து பெற்ற பரிபூர்ண பகவதனுபவஜநித ப்ரீதிகாரிதமான யதாபிமத கைங்கர்ய விசேஷங்கள்

நித்யருக்கு நீக்கியுள்ளாரில் பேதம் அநாத்யா ஆவீர்பூத –ஸ்வரூபராய் பரதந்த்ரராய் இருக்கை . இவர்களுக்கு நீக்கியுள்ளாரிற்காட்டில் ஸ்திதிபேதம்
அநாத்யனுவ்ருத்தமான சேஷிதத்வ அநுபவம் . இது நித்யருக்கு எல்லாம் பொதுவானபடியாலே இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதியில்
வைஷம்யம் இல்லை. இவர்களுக்குப் ப்ரவர்த்திபேதம் ”அநாதி ப்ரவாஹ நித்யங்”களான கைங்கர்ய விசேஷங்கள்

வ்யாக்யானம்

பத்தர்—சம்ஸார பந்தம் என்கிற பிடியில் சிக்கியுள்ள சேதநர்கள் –இவர்களுக்கும்
மற்ற சேதநர்களான முக்தர், நித்யர்களுக்கும் வேறுபாடு ஏதென்னில் —
பந்தத்தில் உள்ள சேதநர்கள் அறியாமை ( பகவானைப் பற்றியது ), கர்மாக்கள் அவற்றின் பாப புண்ய அனுபவங்கள், பூர்வ கர்மாக்களின் வாஸனை,
உலக –லௌகிக விஷயங்களில் ஈடுபாடு , இவ்வுலகத் தொடர்பு –இப்படி யாவற்றையும் கொண்டுள்ளனர். ப்ரஹ்மா முதலாக , புல் பூண்டு வரை
ஜீவாத்மாக்களின் ஞானம் ,ஸுக துக்க அனுபவங்கள் முதலியவற்றில் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம்
அவரவர்களுடைய கர்ம வினைப் பயன் காரணமாக பகவான் அளித்த சரீரங்களைப் பெற்று , அவற்றை ஆதரித்து,அவரவர் ஸ்வரூபம் மூலமாகவும்
தர்மபூத ஞானம் மூலமாகவும் சரீரத்தைப் போஷிக்கின்றனர்.
ஸ்வரூபம் மூலமாகத் தாங்கப்படுவதால்,சரீரம் இருக்கிறது; விழித்திருக்கும்போது தர்மபூதஞானத்தின் மூலமாக ,இந்தச் சரீரமானது,வாழ்வின் புருஷார்த்தங்களைத் தேடுகிறது. பெறவும் முயற்சி செய்கிறது.பரமைகாந்திகளுக்கு ( மோக்ஷத்தைத் தவிர, பகவானிடம் வேறு எதையும் ப்ரார்த்திக்காதவர்கள் ), தர்மபூதஞானம் மூலமாக இந்த உடல்,பகவத் அனுபவத்திலும் , அவனுடைய கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தப்படுகிறது.

பாபிகளுக்கு, இந்தச் சரீரம் மேன்மேலும் பாபம் செய்யக் காரணமாக இருக்கிறது. ஜீவன் வெளியேறும்போது, இந்தச் சரீரம் அழியத் துவங்குகிறது.
சரீரம் ஏற்படக் காரணமாக இருந்த ”பஞ்ச பூதங்”களும் பகவானின் சரீரமாக ஆகிவிடுகின்றன. பத்த சேதநர்களின் ஸ்திதி—நீடிப்பு –என்பது,
பகவானை அடையும்வரை —மோக்ஷம் பெறும்வரை —சரீரத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும் ( பாப ,புண்ய பலன்களுக்கு ஏற்றவாறு
வெவ்வேறு சரீரங்கள் ) இந்த பத்தசேதநர்களின் ப்ரவ்ருத்தி—- செயல்கள்— மூன்று வகை. பாபம் , புண்யம் , இரண்டும் இல்லாதது.

முக்தர்கள்–முக்தி பெற்றவர்கள் –இவர்களுக்கும் மற்ற ஜீவர்களுக்கும் உள்ள வேறுபாடு யாதென்னில் —
முக்தி பெற்றவர்கள், தங்களுடைய தடைகளைக் கடந்து , தங்களுடைய முக்தர் என்கிற ஸ்வரூபத்தை அடைந்தவர்கள்.
இவர்களுடைய ஸ்திதி அதாவது நீடிப்பு —அடையப்பட்ட ஸ்வரூபத்துடன் முடிவில்லாமல் அப்படியே நீடித்திருப்பது .
இவர்களுடைய ப்ரவ்ருத்தி—செயல்கள்—கணக்கில்லாக் காலமாக இழந்து வருந்திய , பகவானிடம் பக்திகொண்டு
அன்பு காரணமாக, கைங்கர்ய பாக்யத்தை மறுபடியும் பெறுதலேயாகும்

அநாதி ப்ரவாஹ நித்யம் –விளக்கம்
நித்யர்கள்—அநாதியாக எப்போதும் ஸ்ரீவைகுண்டவாஸிகள். இவர்களின் இருப்புக்கு ஆதி கிடையாது, எப்போதும் கைங்கர்யம் செய்துகொண்டு இருப்பதால் இப்போதுதான் ஆரம்பித்தார்கள் என்று கைங்கர்யத்துக்கு ஆதி –அதாவது –ஆரம்பம் சொல்லமுடியாது. ஆதலால்,நித்யரின் கைங்கர்யங்கள்,
அநாதியானவை . நித்யமானவை.எப்போதும் கைங்கர்யம் செய்துகொண்டு இருப்பதால் கைங்கர்யமும் நித்தியமானது.கைங்கர்யம் என்பது
பணிவிடை (அல் ) செய்கை, செயல், க்ரியை . இது நொடிதோறும் மாறுபட்டது.

இது நித்யம் என்று எப்படிச் சொல்லலாம் ,மாறுபட்டுக்கொண்டிருப்பது எப்படி நித்யமாகும் என்றால்,
ஆற்றில் வெள்ளம் வருகிறது; அதிலிருந்து வருபவனை ”வெள்ளம் எப்படி இருக்கிறது ” என்று கேட்டால் ,அப்படியேதான் இருக்கிறது என்பான்.
அதிகப்படியான தண்ணீரின் ஓட்டம் வெள்ளம்; அது மறுநாள் குறையலாம் . நேற்று பார்த்த வெள்ள நீர் கடலில் கலந்து இருக்கும் . ஆனால், ஜீவ நதிகளில்
நீர் என்றும் நித்யமாகவே இருக்கும். நீர் வெவ்வேறாயினும் மாற்றி மாற்றி நீர் ஓட்டம் இருந்துகொண்டே இருக்கும்
இதுதான் ,”ப்ரவாஹ நித்யம் ”.ஒருபொருள் அழிவில்லாமல் இருப்பது , ”ஸ்வரூப நித்யம் ”.

அதிகாரத்திலிருந்து ——

முக்தர்கள்,நித்யர்கள்—- இவர்களுக்கு ஸித்திக்கும் கைங்கர்யங்கள்

அனந்த கருடாதிகளுக்கு அதிகார விசேஷங்களும் ததுசித் கைங்கர்யங்களும் வ்யவஸ்திதங்களாயிருக்க , நித்யருக்கும் முக்தருக்கும் ஸர்வவித கைங்கர்ய
ஸித்தியுண்டென்கிற அர்த்தம் கூடுமோவென்னில் —-
ஸ்வாமியினுடைய அபிப்ராயத்துக்கு ஈடாக தனக்கு அபிமதங்களான கைங்கர்யங்களிலே கிடையாதவை ஒன்றுமில்லையாலும் , ஓரோருத்தருக்கு
வ்யவஸ்திதங்களான கைங்கர்யங்களைத் தாங்கள் அநுஷ்டிக்கிற வேணுமென்கிற அபிஸந்தி வேறொருத்தருக்குப் பிறவாமையாலும்
ஆரேனுமொருவர் அநுஷ்டிக்கும் கைங்கர்யமும் ஸ்வாமிக்குப் ப்ரியமானபடியாலே ததுசித் கைங்கர்யங்களும் ஸர்வருக்கும் ப்ரியமாய் கைங்கர்ய பலமான
ப்ரீதியில் வாசியில்லாமையாலும் ஸர்வருக்கும் ஸர்வவித கைங்கர்ய ஸித்தி உண்டென்கையில் விரோதமில்லை .

வ்யாக்யானம்

ஆதிசேஷன் ,கருடன் முதலான நித்யர்கள் —நித்யஸூரிகள் —இவர்கள் ஒரு குறிப்பிட்ட கைங்கர்யங்களைச் செய்கிறார்கள் எனச் சொல்வதுண்டு.
ஆனால்,எம்பெருமானார் கூறுவதான –நித்யஸூரிகளும் முக்தர்களும் அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்கின்றனர் –என்பதில் முரண்பட்டு தோன்றுகிறதே
என்னில் ,
அவரவர்கள் தங்களுக்கு விருப்பமான கைங்கர்யங்களைச் செய்ய எந்தத் தடையும் இல்லை; அதேசமயம், ஒருவர் செய்யும் கைங்கர்யத்தைத் தானே
செய்யவேண்டும் என்கிற போட்டி மனப்பான்மை –அதாவது எண்ணம் — அவர்களிடம் இல்லை என்பதே கருத்து. இவர்களில் யார் எந்தக் கைங்கர்யம்
செய்தாலும், எம்பெருமானுக்கு உகப்பே வரும். ஒருவர் செய்யும் கைங்கர்யத்தைப் பார்த்து, மற்றவர்க்கு மகிழ்ச்சியே ஏற்படும் ; அந்த மகிழ்ச்சியில் எந்த
வேறுபாடும் இல்லை; அனைவருக்கும், அனைத்துக் கைங்கர்யமும் உண்டு என்கிற எம்பெருமானார் கூற்றில் முரண்பாடு இல்லை.

பத்தர், முக்தர் இவர்களைக் காட்டிலும், நித்யருக்கு வாசி அதிகம்.
நித்யருடைய கைங்கர்யங்கள், அநாதியானவை. முக்தருடைய கைங்கர்யங்கள் அநாதிகாலமாக இல்லாமல் பின்னால் பெறப்பட்டவை .

கைங்கர்யங்கள்–சேஷத்வம் குன்றாதபடி செய்யவேண்டும். சேஷியின் உகப்புக்குச் செய்யவேண்டும். சேஷியின் உகப்புக்கு ஆகாததைச் செய்யக்கூடாது .
சேஷத்வத்திலேயே நோக்கம் இருக்கவேண்டும். தனக்கு வரும் பெருமையில் நோக்கம் தகாது.

அதிகாரத்திலிருந்து —

தர்ம பூத ஜ்ஞான நிரூபணம்

இவ்வாத்மாக்களெல்லாருக்கும் தர்மிஸ்வரூபம் போலே தர்மபூதஜ்ஞானமும் த்ரவ்யமாயிருக்க , இதன் ஸ்வரூபத்தைத் தனித்து இங்கு அருளிச் செய்யாதொழிந்தது
சேதநரென்று எடுத்த விசிஷ்டத்திலே விசேஷணமாய் சொருகி நிற்கையடியாக

வ்யாக்யானம்

எல்லா ஆத்மாக்களுக்கும் ஸ்வரூபம் என்பது அடிப்படையாக இருப்பதைப் போல தர்மபூத ஜ்ஞானமும் அடிப்படையாக இருக்கிறது.
இப்படியான , தர்மபூதஜ்ஞானத்தின் ஸ்வரூபத்தை இங்கு சொல்லாமல் இருப்பதன் காரணம், சேதநன் என்று சொல்லும்போது
அந்த வார்த்தையிலேயே ஸ்வரூபமும் அடங்கி இருப்பதாகும்

அதிகாரத்திலிருந்து—-

தர்மபூதஜ்ஞானத்தின் ஸ்வரூப–ஸ்திதி–ப்ரவ்ருத்திகள்

இத் தர்மபூதஜ்ஞானம் விஷய ப்ரகாஸ தசையிலே ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கும்
இது ஈச்வரனுக்கும் நித்யருக்கும் நித்யவிபுவாயிருக்கும் . மற்றுமுள்ளோருக்கு ஸம்ஸாராவஸ்தையில் கர்மாநுரூபமாக பஹுவித ஸங்கோச விகாஸவத்தாய்
முக்தாவஸ்தையிலே ஏகவிகாஸத்தாலே பின்பு யாவத்காலம் விபுவாயிருக்கும்

இதுக்கு ப்ரவ்ருத்தியாவது விஷயங்களை ப்ரகாசிப்பிக்கையும் ,ப்ரயத்நாவஸ்தையிலே சரீராதிகளைப் ப்ரேரிக்கையும் , பத்த தசையில் ஸங்கோச விகாரங்களும் ,
ஆனுகூல்ய ப்ரதீகூல்ய ப்ரகாசமுகத்தாலே போகமென்கிற அவஸ்தையை அடைகையும் . போகமாவது தனக்கு அனுகூலமாகவாதல் ஒன்றை அனுபவிக்கை

வ்யாக்யானம்

தர்மபூதஜ்ஞானம் என்னும் இது, அந்தந்த ஆத்மாவிற்குத் தகுந்த காலத்தில் தானாகவே வெளிப்படும். எம்பெருமானுக்கும் ,நித்யர்களுக்கும் எங்கும் எப்போதும்
சகலத்தையும் அறியும் விதமாகஇது விளங்கும்.முக்தர்களுக்கு, ஒருமுறை நன்கு மலர்ந்து, மறுபடியும் சுருங்காமல் நீடித்து இருக்கும். பத்தர்களுக்கு, அவரவர்
கர்மவினைகளுக்கு ஏற்ப விரிவடைந்தும் , சுருங்கியும் விளங்கும்.

தர்மபூத ஜ்ஞானத்தின் ப்ரவ்ருத்தி என்பது, எல்லா விஷயங்களையும் குறித்த ஜ்ஞானத்தை ஏற்படுத்துவது. சரீரத்தையும் புலன்களையும் கட்டளைக்கு
உட்படுத்துவது, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்துவது, ஸம்ஸாரத்தில் விரிவடைவது; சுருங்குவது. இப்படி விஷயங்களை அனுபவிக்கும்போது,
எதை ஏற்பது என்பனவற்றையும் அனுபவிப்பதில் எது ஏற்புடைத்து என்பதையும் உணர்த்துவது.

அதிகாரத்திலிருந்து

தர்மபூதஜ்ஞானம் பற்றி மேலும் சில விளக்கங்கள்

ஈச்வர விபூதியான ஸர்வ வஸ்துவுக்கும் ஆனுகூல்யம் ஸ்வபாவமாய் இப்படி ஈச்வரனும் நித்யரும் முக்தரும் அனுபவியா நிற்க , ஸம்ஸாரிகளுக்குக்
காலபேதத்தாலும் புருஷபேதத்தாலும் தேசபேதத்தாலும் அல்பானுகூலமாயும் ப்ரதிகூலமாயும் உதாஸீனமாயுமிருக்கிற இவ்விபாகங்களெல்லாம்
இவ்வஸ்துக்களுக்கு ஸ்வபாவ ஸித்தங்களல்ல . இது இவர்களுடைய கர்மங்களுக்கீடாக ஸத்ய ஸங்கல்பனான ஈச்வரன் இவர்களுக்கு
பலப்ரதானம் பண்ணினப் ப்ரகாரம்

இக்கர்மபலம் அனுபவிக்கைக்குப் பத்தருக்கு ஸ்வரூப யோக்யதையும் ஸஹகாரியோக்யதையுமுண்டு. ஸ்வரூப யோக்யதை பரதந்த்ரசேதநத்வம் .
ஸஹகாரி யோக்யதை ஸாபராதத்வம். நித்யருக்கும் முக்தருக்கும் பரதந்த்ர சேதநதையாலே ஸ்வரூபயோக்யதையுண்டேயாகிலும்
ஈச்வராநபிமத விபரீதாநுஷ்டானமில்லாமையாலே ஸஹகாரி யோக்யதை இல்லை . ஈச்வரன் ஸர்வம்ப்ரசாஸிதவாய்த் தானொருத்தருக்கு
சாஸநீயனன்றிக்கே நிற்கையாலே பரதந்த்ர சேதநத்வமாகிற ஸ்வரூப யோக்யதையுமில்லை . ஸ்வதந்த்ராஞாதிலங்கனமாகிற ஸஹகாரி
யோக்யதையுமில்லை

ஜீவேச்வரரூபரான ஆத்மாக்களெல்லாருடையவும் ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாஸம் . இத்தர்மிஸ்வரூப ப்ரகாசத்துக்குப் பத்தருக்குமுள்பட
ஒரு காலத்திலும் ஸங்கோச விகாஸங்களில்லை . ஸர்வாத்மாக்களுடையவும் தர்மபூதஜ்ஞானம் விஷய ப்ரகாசன வேளையிலே ஸ்வாச்ரயத்துக்கு
ஸ்வயம் ப்ரகாஸமாயிருக்கும் . ஜ்ஞானத்தவமும் ஸ்வயம்ப்ரகாஸத்வமும் தர்மதர்மிகளுக்கு ஸாதாரணம் . தர்மபூதஜ்ஞானத்துக்கு விஷயித்வமேற்றம் .
தர்மியான ஆத்மஸ்வரூபத்துக்குப் ப்ரத்யக்த்வம் ஏற்றம். ஜ்ஞானத்வமாவது கஸ்யசித் ப்ரகாசத்வம் ,
அதாவது தன்னுடையவாகவுமாம் , வேறொன்றினுடைய வாகவுமாம் ஏதேனுமொன்றினுடைய வ்யவஹாரானுகுண்யத்தைப்பண்ணுகை
ஸ்வயம்ப்ரகாஸத்வமாவது தன்னை விஷயீகரிப்பதொரு ஞானாந்தரத்தால் , அபேக்ஷையறத்தானே ப்ரகாசிக்கை .
தர்மபூதஜ்ஞானத்துக்கு விஷயித்வமாவது தன்னையொழிந்ததொன்றைக் காட்டுகை.

ஆத்மாக்களுக்குப் ப்ரத்யக்தமாவது ,ஸ்வஸ்மைபாஸமானத்வம் .
அதாவது தன் ப்ரகாசத்துக்குத்தான் பலியாயிருக்கை என்றபடி ஏதேனுமொரு வஸ்துவின் ப்ரகாசத்துக்குப் பலியென்கிற ஸாமான்யாகாரத்தைத்
தன் ப்ரகாசத்துக்குத் தான் பலியென்று விசேஷித்தவாறே ப்ரத்யக்த்வமாம் .
இவ்விசேஷமில்லாத வஸ்துவுக்கு இஸ்ஸாமான்யமும் இத்தோடு வ்யாப்தமான சேதனத்வமுமில்லை . இத்தர்ம தர்மிகளிரண்டும் ஸ்வயம் பிரகாசமாயிருந்தாலும்
நித்யத்வாதி தர்மவிசேஷ விசிஷ்டரூபங்களாலே ஞானாந்தர வேத்யங்களுமாம் . தன்னுடைய தர்மபூதஜ்ஞானம் தனக்கு ஞானாந்தர வேத்யமாம்போது
ப்ரஸரணபேதமாத்ரத்தாலே ஞானாந்தர வ்யபதேசம் .

வ்யாக்யானம்

ஈச்வரனின் –பகவானின்–விபூதியான எல்லாப் பொருட்களுமே , அவற்றின் இயல்பு மாறாமல், எல்லோராலும் ஏற்கப்படும் தன்மையில் உள்ளன.
ஈச்வரன், நித்யர்கள், முக்தர்கள் ஏற்கிறார்கள். ஆனால்,பத்தருக்கு– ஸம்ஸாரிகளுக்கு இந்தப்பொருள்கள் ( விபூதிகள் ) , சில நேரங்களில் ,
சில இடங்களில் , ஒரு சில பத்தருக்கு ஏற்கும்படியாகவும்,வேறு சில நேரங்களில், சில இடங்களில் சில பத்தருக்கு ஏற்காதபடியும் உள்ளன.
ஆனால், இந்த முரண்பாடுகள் ,அந்தப் பொருட்களிடம் இயற்கையாகவே இருப்பதில்லை. இப்படி நேருவது, அந்தந்த பத்தர்களின் கர்மவினை காரணமாக
ஈச்வரனின் மாற்ற இயலாத ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றன.

இங்கு காலபேதம் –என்பதாவது—-சீதகாலத்தில் அநுகூலமான அக்நி , உஷ்ண காலத்தில் பிரதிகூலமாக இருப்பதைப்போலே . ஒட்டகத்துக்கு, முள்
அநுகூலமென்றால் மாட்டுக்குப் புல் அநுகூலமானதைப் போலே —

பத்தர்கள் –ஸம்ஸாரிகள் –இப்படிக் கர்மவினைகளை அநுபவித்தலென்பது , ஈச்வரனுக்கு அடங்கியவர்கள் என்பதால் இயற்கை , வேறு சில காரணங்களுமுண்டு
என்பதால், பகவானுக்கு எதிரான பாபச் செயல்களைச் செய்வதாகும்.
நித்யர்கள், முக்தர்களுக்கும் ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு இருப்பதால், கர்மபலன் அனுபவித்தல் என்பது அவர்களுக்கும் உண்டு. ஆனால், பகவானின்
விதிகளை மீறாமல் இருப்பதால், வேறு காரணங்கள் என்பவை இவர்களுக்கு இல்லை.
பகவான், அனைத்தையும் நியமிப்பவன் ; எவருக்கும் கட்டுப்பட்டு இல்லாதவன் , ஆகையால், பகவானுக்குக் இப்படியான அனுபவித்தல் என்பது இயற்கையாகவே இல்லை. இப்படித்தான் செயலாற்றவேண்டும் என்று பகவானைச் சொல்ல யாரும் கிடையாது; ஆதலால்,மற்ற காரணங்களால் என்கிற பேச்சும் இவருக்கு இல்லை.
ஸ்வரூப யோக்யதை—-கர்மபலனை இயற்கையாகவே அனுபவிப்பது
ஸஹகாரி யோக்யதை–கூடவே உள்ள வேறு காரணங்களான , பகவானுக்கு எதிராகப் பாபச் செயல்களைச் செய்வது

ஜீவ , ஈச்வர ரூப ஆத்மாக்கள் –(ஜீவாத்மாக்கள் எண்ண இயலாதவை ; ஈச்வரன் ஒருவனே)
இவை யாவும் ஸ்வயம் ப்ரகாசமுள்ளவை –அதாவது, தங்களுக்குத் தாங்கள்
ப்ரகாசமானவை. இது,ஸம்ஸாரிகள் உட்பட, யாருக்கும் எப்போதும்
விரிவதோ சுருங்குவதோ இல்லை.
ஆத்மாவுக்கு இயற்கையாகவே உள்ள ஜ்ஞானம் —ஸ்வரூப ஜ்ஞானம்
இதைத் தவிர தர்மபூதஜ்ஞானம் உள்ளது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை யாதெனில்,
இவை இரண்டுமே , மற்ற எவற்றின் உதவியில்லாமலே , ப்ரகாசிப்பவை( ஸ்வயம்பிரகாசம் )
.தர்மபூதஜ்ஞானத்தின் விசேஷம்—-பொருள்களை உணர்த்துவது –விஷயித்வம் .
ஸ்வரூபஜ்ஞானத்தின் விசேஷம் —தன்னைத்தானே உணர்த்துவது —ப்ரத்யக்த்வம்
இவையிரண்டுக்கும் பொதுவாக உள்ள ஜ்ஞானம் — தன்னைப்பற்றியோ,
மற்றொன்றைப் பற்றியோ உணர்த்துவது ;தன் மீதோ ,மற்றவற்றின் மீதோ
செயலாற்ற வைக்கிறது.
ஸ்வயம் ப்ரகாசம் என்பது, தன்னை உணர்த்த /விளக்க/ அறிய,
மற்ற ஏதோ ஒரு ஜ்ஞானம் அவச்யமில்லாமல் தானாகவே தன்னை உணர்த்துதல்
தர்மபூதஜ்ஞானம் —தன்னை அல்லாமல், மற்றொரு பொருளை உணர்த்துவது.
ஸ்வரூப ஜ்ஞானம் —தன்னையே உணர்த்துவது
இவை பொதுவான கருத்து.
ஒரு ஆத்மாவின் ஸ்வரூபஜ்ஞானம் தன்னையே அறிந்து அதனால் தானே
பலனடைவது–இது ப்ரத்யக்த்வம் என்று பார்த்தோம். இப்படி ப்ரத்யக்த்வம் இல்லாதவை
சேதநன் என்று கூற இயலாது.
தர்மபூதஜ்ஞானமும் ,இது உள்ள ஆத்மாவும் (சேதநன்). தங்களைத் தாங்களே
வெளிப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாலும் , சாஸ்த்ரம் மூலமாக
வெளிப்படுத்தி, நித்யத் தன்மை போன்றவற்றை விளக்கும்.
தானே வெளிப்படும் தர்மபூதஜ்ஞானமும், மற்ற ஒரு ஜ்ஞானத்தின்
மூலமாகவும் விளக்கப்படலாம் –இப்படிப்பட்ட ஜ்ஞானம் என்பது
தர்மபூதஜ்ஞானத்தின் ஒரு பகுதியே ஆகும்

அதிகாரத்திலிருந்து

மூன்று வகை அசேதநங்கள் –நிரூபணமும், இலக்கணமும்

த்ரிவிதாசேதனங்களும் பரருக்கே தோன்றக்கடவனவாயிருக்கும் அசேதநத்வமாவது
ஞானாச்ரயமன்றிக்கேயொழிகை . பிறருக்கே தோன்றுகையாவது தன்
ப்ரகாசத்துக்குத்தான் பலியன்றிக்கேயொழிகை . இவையிரண்டும் தர்மபூத
ஞானாதிகளுக்கும் துல்யம்

த்ரிவிதாசேதனங்களென்றெடுத்தவற்றில் ப்ரக்ருதியும் காலமும் ஜடங்கள் .
ஸுத்தஸத்வமான த்ரவ்யத்தையும் ஜடமென்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம்பிரகாசமன்றிக்கேயிருக்கை . பகவத்சாஸ்த்ராதி
பராமர்சம் பண்ணினவர்கள் ஞானாத்மகத்வம் சாஸ்வ ஸித்தமாகையாலே
ஸுத்தஸத்வத்ரயத்தையும் ஸ்வயம்ப்ரகாசமென்பார்கள்

இப்படி ஸ்வயம் ப்ரகாசமாகில் ஸம்ஸாரிகளுக்கு சாஸ்த்ரவேத்யமாக வேண்டாதே
தானே தோன்ற வேண்டாவோவென்னில் ஸர்வாத்மாக்களுடையவும்
ஸ்வரூபமும் தர்மபூத ஞானமும் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்க ஸ்வரூபம்
தனக்கே ஸ்வயம் பிரகாசமாய் வேறெல்லார்க்கும் ஞானாந்தரவேத்யமானாற்
போலவும் தர்மபூத ஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம்ப்ரகாசம் அல்லாதாப்போலவும் , இதுவும் நியதவிஷயமாக
ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை

யோ வேத்தி யுகபத்ஸர்வம் ப்ரத்யக்க்ஷேண ஸதா ஸ்வத :
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரஸக்ஷ்மஹே
என்கிறபடியே தர்மபூத ஞானத்தாலே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துக்
கொண்டிருக்கிற ஈச்வரனுக்கு ஸுத்தஸத்வத்ரயம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறபடி
எங்ஙனேயென்னில் —-
இவனுடைய தர்மபூத ஞானம் திவ்யாத்மஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறாப்போல
இதுவும் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கலாம் . இப்படி நித்யருக்கும் துல்யம் .
விஷயப்ரகாச காலத்திலே தர்மபூத ஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமானாற்போலே
முக்தருக்கும் அவ்வவஸ்தையிலே இதுவும் ஸ்வயம் ப்ரகாசமானால் விரோதமில்லை
தர்மபூத ஞானத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியானது ,விஷயப்ரகாசமில்லாத
காலத்தில் கர்மவிசேஷங்களாலே ப்ரதிபத்தையானாற்போலே ஸுத்தஸத்வத்தினுடைய
ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியும் பத்ததசையில் ப்ரதிபத்தையாகையாலே , ஸுத்தஸத்வம்
பத்தருக்கு ப்ரகாசியாதொழிகிறது

திய : ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தொள ஸ்வாபாவிகம் யதா
பத்தே கதாஸித்ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே

இவ்வளவு அவஸ்தாந்தராபத்தி விகாரித்ரவ்யத்துக்கு விருத்தமன்று . ஆகையாலே
ப்ரமாணப்ரதிபந்நார்தத்துக்கு யுக்திவிரோதம் சொல்ல வழியில்லை .
இங்ஙனன்றிக்கே உபசாரத்தாலே நிர்வஹிக்கப் பார்க்கில் ஆத்ம ஸ்வரூபத்திலும்
ஞானாதிசப்தங்களை அன்யப்பரங்களாக்கலாம் . ஸ்வயம் ப்ரகாசத்துக்கு
ரூபரஸாதிகுணங்களுக்கும் அவையடியாக வந்த ப்ருதிவ்யாதி விபாகமும் பரிணாமாதிகளும்
கூடுமோவென்கிற சோத்யமும் தர்மபூத ஞானத்துக்கும் தர்மிஞானத்துக்குமுண்டான
வைஷ்மயங்களை ப்ரதிபந்தியாகக் கொண்டு ப்ரமாணபலத்தாலே பரிஹ்ருதம் .
இப்படி ஸ்வயம் ப்ரகாசமான ஸுத்தஸத்வ த்ரயத்தை ஞாத்ருத்வமில்லாமையாலே
த்ரிவிதாசேதநங்களென்று சேரக்கோத்தது

இவ்வசேதனங்கள் மூன்றுக்கும் ப்ரவ்ருத்தியாவது ஈச்வரஸங்கல்பானுரூபங்களான விசித்ர பரிணாமாதிகள்

வ்யாக்யானம்

ப்ரக்ருதி, காலம்,ஸுத்தஸத்வம் –மூன்று வகையான அசேதனங்கள்

மூன்று வகையான அசேதனங்கள் –பரருக்கே –மற்ற ஜீவன்களுக்கே தோன்றுகின்றன
தங்களுக்காக அல்ல.
அசேதனம் என்பது— ஞானம் இல்லாமலிருப்பது
மற்றவர்களுக்காகவே தோன்றுவது என்பது — அவை,தங்களுக்குத் தாங்களே
பலன் அளித்துக்கொள்வதில்லை என்பதாகும் . ஞானம் இல்லாமலிருப்பது ,
தனக்காக இல்லாமலிருப்பது –இவையிரண்டும்—இவர்களுடைய தர்மபூத ஞானம்
என்பதற்குப் பொருந்தும்.

மூன்று வகையான அசேதனங்கள் என்று பார்த்தோம் . இவற்றில் ப்ரக்ருதி , காலம்
இரண்டும் ஜடப்பொருள்கள் , ஒரு சிலர் ஸுத்தஸத்வத்தையும் ஜடப்பொருள் என்று
சொன்னாலும்,அது அப்படியல்ல
ஜடப்பொருள் என்றால் தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாத பொருள்
என்று அர்த்தம்.
சாஸ்த்ரங்கள் சொல்கின்றன; பாஞ்சராத்ரம் முதலான ஆகம வல்லுநர்கள்
-சொல்வது—–ஸுத்தஸத்வம் என்பது ஜ்ஞானம் முழுவதும் உள்ள அசேதநம் —
ஆதலால் இது ஜடம் அல்ல , தானாகவே வெளிப்படக்கூடியது –இது ஸுத்தஸத்வம்
(அதாவது, முழுவதும் ஸத்வமயம் .பரமபதம் என்கிற ஸ்ரீவைகுண்டம்
முழுதும் ஸுத்தஸத்வம் — )

ஸுத்தஸத்வம் தானாகவே வெளிப்படும் திறனுள்ளது;சாஸ்த்ரங்கள் மூலமாக
தெரிந்துகொள்ளத் தேவையில்லையெனில் ,ஸம்ஸாரிகளுக்கு –பத்தர்களுக்கு —
ஏன் புலப்படவில்லை என்றால்—–
ஜீவனின் ஸ்வரூபம் –பத்தர் –அவரவர்க்கு மட்டுமே வெளிப்படும். ஸ்வயம்ப்ரகாசம்
என்று பார்த்தோம். இயற்கையாகவே ஆத்மாவிற்கு–சேதநன் –பத்தன் —
என்று எந்தப் பெயரிட்டுச் சொன்னாலும்–ஸம்ஸாரிகளுக்கு இயற்கையாகவே
உள்ளது. இந்த ஆத்மா–ஸம்ஸாரி —மற்றவர்களை அறிய தர்மபூத ஞானம் உதவுகிறது.
இந்த தர்மபூத ஞானம்அந்தந்த ஆத்மாவுக்கு மட்டுமே புலப்படும்.
ஸுத்தஸத்வம் என்பது,, ஈச்வரன், நித்யர் முக்தர் –இவர்களுக்கு மட்டுமே
தானாகவே வெளிப்படும். மற்றவர்களுக்கு வெளிப்படாது.

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிய ”ந்யாய தத்வத்”தின் மங்கள ச்லோகத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு சொல்கிறார்
யோ வேத்தி யுகபத்ஸர்வம் ப்ரத்யக்க்ஷேண ஸதா ஸ்வத :
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரஸக்ஷ்மஹே

எந்த ஸர்வேச்வரன் , எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தனது ஸ்வபாவம்
மூலமாக அறிகிறானோ அந்த ஸ்ரீ ஹரியை நமஸ்கரித்து , ந்யாயதத்வம்
என்கிற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம்
ஒரு சந்தேகம் வரலாம் —-
ஸுத்தஸத்வம் , பகவானின் தர்மபூத ஞானம் மூலமாக அவனுக்குப்
புலப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் , ,பகவானுக்கு , அது ,தானாகவே
புலப்படுவது என்று கூறுவது சரியா ?
பகவானின் தர்மபூத ஞானம் அவனுடைய திவ்ய ஸ்வரூபம் உட்பட
எல்லாவற்றையும் புலப்படவைக்கிறது . என்றாலும் , அவனது ஸ்வரூபம் தானாகவே
வெளிப்படவல்லது என்று அறுதியிட்டுச் சொல்வதைப்போல
ஸுத்தஸத்வமும் , தர்மபூத ஞானம் மூலமாக வெளிப்பட்டாலும்
தானாகவே வெளிப்படுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது
சாஸ்த்ர முடிவு.நித்ய ஸூரிகளுக்கும் இப்படியே
ஒரு பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டிய சமயத்தில் , ஆத்மாவிற்கு ,
தர்மபூத ஞானம் தானாகவே வெளிப்படுவதைப்போல ,
முக்தர்களுக்கு , ஸுத்தஸத்வமும், தானாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் .
இதில் முரண்பட்டு ஏதுமில்லை.
ஆனால், பத்தனுக்கு , ஸம்ஸாரிகளுக்கு , கர்மவினை காரணமாக ,
ஒரு பொருளை உணர்த்தவேண்டிய சமயத்தில், தர்மபூத ஞானம் தடைப்படும் .
இதைப் போலவே, ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்கு ஸுத்தஸத்வமும்
தானாகவே வெளிப்படுத்த இயலாமல் போகும்.

திய : ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தொள ஸ்வாபாவிகம் யதா
பத்தே கதாஸித்ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே

மோக்ஷ வேளையில் , தானாகவே வெளிப்படும் தர்மபூத ஞானம்
ஸம்ஸாரத்தில் சில நேரங்களில் தடைப்படுகிறது . இதைப்போலவே
ஸுத்தஸத்வ விஷயத்திலும் நேருகிறது.

இவ்வளவு — அவஸ்தாந்தராபத்தி—-வேறு ஒரு நிலையை அடைவதானது —
பொருள்கள் மாற்றமடையும்போது அவை ஒரு சிலரால் ஏற்கப்படுவதோ
நிராகரிக்கப்படுவதோ நிகழலாம். மற்றவர்கட்கும் இப்பொருள் குறித்து
இதே போன்ற நிலை ஏற்படலாம் இதில் முரண்பட்டு ஏதுமில்லை .
சாஸ்த்ரங்களைப் ப்ரமாணமாக எப்போதும் ஏற்கவேண்டும்.
ஸுத்தஸத்வம் , சேதநன் மேலும் அறிபவன் ஆகிய இரண்டின்
தன்மையும் இல்லாமலிருப்பதால் , அசேதனத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த மூன்று அசேதனங்களின் ப்ரவ்ருத்தி என்பது, பகவானின்
ஸங்கல்பத்தின்படி தொடர்ந்து மாறியபடியே இருப்பதே இவற்றின்
பரிணாமம்

அதிகாரத்திலிருந்து —

த்ரிகுண த்ரவ்யத்தின் ஸ்வரூப –ஸ்திதி

இவற்றில் த்ரிகுண த்ரவ்யத்துக்கு ஸ்வரூப பேதம் குணத்ரயாச்ரயத்வம்
ஸததபரிணாமசீலமான இத்த்ரவ்யத்துக்கு ஸத்த்வரஜஸ்தமஸ்ஸுக்கள்
அன்யோன்யம் ஸமமானபோது மஹாப்ரளயம் . விஷமமானபோது ஸ்ருஷ்டி
ஸ்திதிகள் . குணவைஷம்யமுள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள் . இதில்
விக்ருதமல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட
ப்ரக்ருதி மஹதஹங்கார தன்மாத்ர பூதேந்த்ரியங்களென்று இருபத்துநாலு
தத்வங்களாகச் சாஸ்த்ரங்கள் வகுத்துச் .சொல்லும் சில விவக்ஷா விசேஷங்களாலே
ஓரோரிடங்களில் அவாந்தர வகுப்புக்களும் அவற்றின் அபிமானி தேவதைகளும்
அவ்வோ உபாஸநாதிகாரிகளுக்கு அறிவெனும். ஆத்மாவுக்கு அவற்றிற்காட்டில்
வ்யாவ்ருத்தியறிகை இங்கு நமக்குப் ப்ரதானம்

வ்யாக்யானம்

மூன்று அசேதனங்களில் ,ப்ரக்ருதியின் ஸ்வரூபம் என்பது மூன்று குணங்களுடன் உள்ளது .
இந்தப் ப்ரக்ருதி எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.ப்ரக்ருதியில் உள்ள
ஸத்வ ,ரஜஸ் ,தாமஸ குணங்கள் யாவும் சரிசமமாக இருக்கும்போது
மஹா.ப்ரளயம் ஏற்படுகிறது . இவற்றில் வேறுபாடு இருக்கும்போது ஸ்ருஷ்டி
உண்டாகிறது. இந்தக் குணங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும்போது ,
”மஹத்” முதலானவைகளாக மாறுகிறது.
மாறாமல் உள்ள ப்ரக்ருதியின் பகுதி, மாறும் ப்ரக்ருதியின் பகுதி –இவற்றை,
சாஸ்த்ரங்கள் 24 தத்வங்களாகப் பிரிக்கின்றன.
இந்தப் பிரிவுகளைப் பற்றிய விவரங்களையும், ஒவ்வொரு பிரிவுக்கான தேவதையையும்
இவற்றைத் த்யானம் செய்யத் தகுதி உள்ளவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்
இவை யாவும், ஆத்மாவைக் காட்டிலும் வேறானவை. அந்த வேறுபாடு என்ன என்பதையும்
அறியவேண்டும்

அதிகாரத்திலிருந்து —-

தத்வங்கள் ,ஈச்வரனுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் இருப்பது

இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ரபூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை

புருடன் மணிவரம் ஆக பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள்வா ளுறையாக வாங்கா ரங்கள் சார்ங்கஞ்சங் காகமனம் திகிரியாக
விருடிகங்க ளீரைந்துஞ் சரங்களாக இருபூத மாலை வனமாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே-என்கிற கட்டளையிலே அறிகை உசிதம்

இருபத்துநாலு தத்வங்களுக்கும் அன்யோன்ய ஸ்வரூபபேதமும் அவ்வோ
லக்ஷணங்களாலே ஸித்தம் . இவற்றில் கார்யமான இருபத்துமூன்று
தத்வங்களுக்கும் இவற்றால் ஆரப்தங்களானவற்றுக்கும் ஸ்திதியில்
வரும் ஏற்றச் சுருக்கங்கள் புராணங்களிலே ப்ரஸித்தமானபடியே கண்டு
கொள்வது.
ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத்விலக்ஷணாம்
தமஸ : பரமோ தாதா அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம்-இத்யாதிகளாலே தமஸ்ஸுக்கு மேலான தேசவிசேஷம் ஸித்திக்கையாலே

அனந்தஸ்ய ந தஸ்யாந்த : ஸங்க்யானம் வா அபி வித்யதே
ததனந்தபஸங்க்யாத ப்ரமாணம் சாபி வை யத :-இத்யாதிகள் நித்யவிபூதியில் அவச்சின்னமல்லாத ப்ரதேசத்தாலே மூலப்ரக்ருதிக்கு
ஆனந்த்யம் சொல்லுகின்றன

வ்யாக்யானம்

இந்த 24 தத்வங்களும் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும்
இருப்பதை , ”புருடன் மணிவரமாக —” என்னும் பாசுரம் சொல்கிறது.

ஸ்வாமி தேசிகனின் ”அதிகார சங்க்ரஹம் ”–பாசுரம் 41

கருடனுடைய சரீரம் வேதங்கள்; இந்த வேதங்களின் பொருள் கண்ணன்.

ஜீவன் –கௌஸ்துப ரத்னம் ;மூல ப்ரக்ருதி –ஸ்ரீவத்ஸம் என்கிற மறு ; மஹத்வம் —
கௌமோதகி என்கிற கதை ; ஜ்ஞானமும் ,அஜ்ஞானமும் —கந்தகம் என்கிற கத்தி ,
அதன் உறை ; ஸாத்விக அஹங்காரம்—சார்ங்கம் என்கிற வில் ;தாமஸ அஹங்காரம் —
சங்கம் ; மனஸ் —சக்ரம் ; ஈரைந்து இந்த்ரியங்கள் —-பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம் பூதங்கள் 5ம் —வனமாலை;

இப்படியாக, சகல தத்வங்களும் ,ஆயுதமாகவும் ஆபரணமாகவும்
இருக்க,ஹஸ்திகிரியின் மேலே எல்லோரும் தரிசிக்கும்படி நின்று
எல்லாவற்றையும் காப்பாற்றுகிறான்

ஈரைந்து இந்த்ரியங்கள் —- ஜ்ஞானேந்திரியங்கள் 5ம் கர்மேந்த்ரியங்கள் 5ம் — பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம்—ஸப்தம் , வாயு, தேஜஸ், ஜலம் , மண்.
பூதங்கள் 5ம் — ஆகாசம் , காற்று,நெருப்பு, ஜலம் ,மண் ஆக 10ம் —வனமாலை;

இந்த 24 தத்வங்களின் ஸ்வரூபம் அவற்றின் இலக்கணம் தெரிந்துகொள்ளவேணும்
இவற்றில் 23 தத்வங்கள் , ப்ரக்ருதியின் மாறுதல்களால் ,ப்ரக்ருதியின் கார்யமாக
வெளியாகிறது . மேலும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மாறுதல்களை
ஏற்படுத்துகின்றன இவற்றின் விளைவுகளும் வேறானவை.இவை புராணங்களில் உள்ளன.

ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத்விலக்ஷணாம்—பௌஷ்கர ஸம்ஹிதை
ஸுத்தஸத்வம் என்பது தானாகவே வெளிப்படுவது; இந்த ஸுத்தஸத்வம்,
ரஜஸ் ,தமஸ் இவற்றுடன் உள்ள ஸத்வம் என்பதைக் காட்டிலும் வேறானது

தமஸ : பரமோ தாதா———– ஸ்ரீமத் ராமாயணம்
தமஸ்ஸுக்கும் அப்பால் உள்ளவன் பரமாத்மா –எம்பெருமான்

அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம்———ஜிதந்தே ஸ்தோத்ரம்
நித்யவிபூதி என்பது, ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானது;நித்யஸூரிகள் இருக்கும் இடம் ;
அவர்களால் போற்றப்படுவது

ஸ்ரீ விஷ்ணு புராணம் —
அனந்தஸ்ய ந தஸ்யாந்த : ஸங்க்யானம் வா அபி வித்யதே
ததனந்தபஸங்க்யாத ப்ரமாணம் சாபி வை யத :

ப்ரக்ருதிக்கு அழிவு கிடையாது ; கால அளவும் கிடையாது . இப்படி அளவிட இயலாதது

இப்படியாக, நித்ய விபூதிக்கு உட்படாத ப்ரக்ருதியின் எல்லையின்மை கூறப்பட்டது.
(உத்தமூர் ஸ்வாமி —–ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் —மூன்று குணங்கள் . ஸத்வ குணம்
தத்வஜ்ஞானத்துக்குக் காரணமானாலும் ரஜஸ், தமஸ் அதிகமானால்,
ஸத்வம் அடங்கிவிடும் )

அதிகாரத்திலிருந்து —

மூன்று குணங்களின் ப்ரவ்ருத்தி பேதங்கள்

த்ரிகுணத்ரயத்துக்குப் ப்ரவ்ருத்தி பேதம் பத்த சேதநருடைய போகாப வர்கங்களுக்கும்
ஈச்வரனுடைய லீலாரஸத்துக்குமாக ஸமமாகவும் விஷமமாகவும் பரிணாம
ஸந்ததியையுடைத்தாய் தேஹேந்த்ரியாதிரூபத்தாலே அவ்வோ வ்யாபாரங்களையும்
பண்ணுகை . இது ரஜஸ்தமஸ்ஸுக்களையிட்டுப் பத்தர்க்குத் தத்த்வங்களிலுண்மையை
மறைத்து விபரீத ஜ்ஞானத்தை உண்டாக்குகிறது போகார்த்தமாக . இதுதானே
அபவர்க்கார்த்தமாக ஸத்த்வ விவ்ருத்தியாலே தத்த்வங்களை யதாவத் ப்ரகாசிப்பிக்கிறது
இவையெல்லாமீச்வரனுக்கு லீலாரஸாவஹமாயிருக்கும்

வ்யாக்யானம்

மூன்று குணங்களும் ப்ரக்ருதியும் –ப்ரக்ருதியின் செயல்கள்
1. ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் மூன்று குணங்களும் சமமாக ,ஒரே அளவில் இருக்கும்போது
ப்ரளயம் உண்டாகிறது.
2. ப்ரக்ருதியின் செயல்கள் பேதப்பட்டு ( ஒன்று அதிகமாதல்,இன்னொன்று குறைதல்,இப்படி )
ப்ரக்ருதியும் மாறுதல் அடைந்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது
3. ஸ்ருஷ்டி சமயத்தில் ஜீவன்கள் ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டு அநுபவத்தை அடைகிறது
4. அநுபவம் மூலமாக ஜீவன்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகிறது
5. இவை யாவும் பகவானின் லீலைக்காக ஏற்படுகிறது
6. லீலைக்கு ஏற்றவகையில் –அதற்கு ஏற்றவாறு பெயர் மற்றும் உருவம் எடுக்கிறது
( மொத்தத்தில் லீலா விபூதி )
7. ஜீவன்கள் அடையும் உடல்–சரீரம் காரணமாக ரஜோ தாமஸ குணங்களால்
உண்மையான தத்வத்தை , இவை மறைத்து ,தவறான ஜ்ஞானத்தைக் கொடுக்கிறது.
8. ஜீவனுக்கு ,ஸத்வகுணம் மேலோங்கும்போது அவனுக்கு உண்மையான ஜ்ஞானம்
புலப்படுகிறது
9. இந்த உண்மையான ஜ்ஞானம் , மோக்ஷத்தை அடையும் வழியில் ஜீவனை முயற்சிக்கச்
செய்கிறது.
இவை யாவும் பகவானின் லீலை

அதிகாரத்திலிருந்து ——

ஸுத்தஸத்வத்தின் ஸ்வரூபம், ஸ்திதி, ப்ரவ்ருத்தி

ஸுத்தஸத்வத்துக்கு ஸ்வரூபபேதம் ரஜஸ்தமஸ்ஸுக்களோடு கலவாத
ஸத்த்வகுணாச் ரயமாயிருக்கை . இதின் ஸ்திதிபேதம் நித்யமான மண்டப
கோபுராதிகளிலும் ஈச்வரனுடையவும் நித்யருடையவும் விக்ரஹவிசேஷங்களிலும்
நித்யமாயிருக்கும் .நித்யருடையவும் முக்தருடையவும் ஈச்வரனுடையவும்
அநித்யேச்சையாலே வந்த விக்ரஹாதிகளில் அநித்யமாயிருக்கும் . இதின்
ப்ரவ்ருத்திபேதம் இவர்களுடைய இச்சைக்கீடான பரிணாமாதிகளிலே
சேஷிக்கு போகோபகரணமாயும் சேஷபூதனுக்கு கைங்கர்யோபகரணமாயும்
நிற்கை

வ்யாக்யானம்

ஸுத்தஸத்வத்தின் ஸ்வரூபம் என்பது,ரஜஸ் தமஸ் கலவாத/சேராத/ ஸுத்த
ஸத்வமாகும் . இது ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கிற மண்டபம், கோபுரம் ஈச்வரனின்
விக்ரஹம் , நித்யர்களின் சரீரம் என்கிற தன்மைகளில் நிரந்தரமாக இருக்கும்.
ஆனால் ,
ஈச்வரன் , நித்யர் , முக்தர் இவர்களின் தாற்காலிக விருப்பத்தின்படி விக்ரஹம்
போன்றவற்றில் நித்யமாக இருப்பதில்லை .ஈச்வரனின் விருப்பப்படி ஸுத்தஸத்வமான
ஒரு போகம் இன்னொரு போகமாக மாறுதல் அடையும் .நித்யரின் ப்ரார்த்தனைப்படி
ஸுத்தஸத்வமான ஒரு பொருள் —உதாரணமாக——ஆலவட்டம்—
சாமரமாக மாறும் ; மாறுபாடு அடையும் , முக்தனின் வேண்டுகோளின்படி
ஸுத்தஸத்வமான ஒரு புஷ்பம் , இன்னொரு புஷ்பமாக மாறுதல் அடையும்
இத்தகைய மாறுதல்கள் மூலமாக ஸுத்தஸத்வமானது எஜமானானாகிய
எம்பெருமானுக்கு அனுபவிக்கும் பொருளாகவும் , நித்யர் முக்தர்களுக்கு கைங்கர்யம்
செய்வதற்கான பொருளாகவும் இருக்கிறது

அதிகாரத்திலிருந்து

காலத்தின் ஸ்வரூப–ஸ்திதி–ப்ரவ்ருத்தி பேதங்கள்

காலத்துக்கு ஸ்வரூபபேதம் ஜடமாய் விபுவாயிருக்கை . இதன் ஸ்திதி
காலாவச்சேதமில்லாமையாலே நித்யையாயிருக்கும் . இதின் ப்ரவ்ருத்தி பேதம்
கலாகாஷ்டாதி விபாகத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபகரணமாயிருக்கிறபடியிலே
கண்டு கொள்வது

இத்த்ரவ்யங்களெல்லாம் ஸ்வரூபேண நித்யங்களாயிருக்கும் நாமாந்தரபஜனார்ஹாவஸ்தா
விசேஷ விசிஷ்டதையிட்டுச் சிலவற்றை அநித்யங்களென்கிறது . அழிந்ததோடு
ஸஜாதீயங்களான அவஸ்தாந்தரங்கள் மேலும் முழுக்க வருகையிலே
ப்ரவாஹநித்யங்களென்று சொல்லுகிறது

இப்பதார்த்தங்கள் எல்லாவாற்றினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள்
ஈச்வரனுக்கு ஸ்வாதீநங்களாயிருக்கையாவது ஈச்வரஸத்தையையும்
ஈச்வரேச்சையையுமொழிய இவற்றுக்கு ஸத்தாதிகள் கொடாதொழிகை

ஆகையால் ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஸ்வபாவ ஸித்தானுகூல்யம் ஈச்வரேச்சாயத்தம் .
இத்தாலே ஈச்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் ஸர்வமும் அநுகூலமாயிருக்கும்
பத்தருக்குக் கர்மாநுரூபமாகப் புருஷபேதத்தாலும் காலபேதத்தாலும் இவற்றில்
ப்ராதிகூல்யங்களும் அல்பானுகூல்யங்களும் நடவாநிற்கும் . இப்பத்தர்
தங்களுக்கும் ஸ்வாத்மஸ்வரூபம் ஸர்வதா அநுகூலமாக ஈச்வரேச்சாஸித்தம் . இப்படி
அநுகூலமான ஆத்மஸ்வரூபத்தோடே ஏகத்வ ப்ரமத்தாலும் கர்மவசத்தாலுமிறே
ஹேயமான சரீரம் ஞானாஹீனருக்கு அநுகூலமாய்த் தோற்றுகிறது .
இவற்றுக்குக் கர்மாபாதிகமான ப்ரதிகூலரூபத்தாலே முமுக்ஷுவைப் பற்ற
த்யாஜ்யத்வம் . ஸ்வாபாவிகமான அநுகூல ரூபத்தாலே முக்தனைப் பற்ற அவை தமக்கே
உபாதேயத்வம் . அஹங்கார மமகாரயுக்தனாய்க் கொண்டு தனக்கென்று
ஸ்வீகரிக்குமவையெல்லாம் ப்ரதிகூலங்களாம் . ஸ்வரூபஜ்ஞானம் பிறந்து
ஸ்வாமிசேஷமென்று காணப்புக்கால் எல்லாம் அநுகூலமாம் . இவ்வர்த்தம் பரிபூர்ண
ப்ரஹ்மானுபவம் சொல்லுமிடத்திலே பரக்கச் சொல்லக்கடவோம்

வ்யாக்யானம்

காலத்தின் ஸ்வரூபம் என்பது தானே வெளிப்படாது; ஆனால் எங்கும் பரவியிருக்கும்
இதற்கு கால அளவு எல்லையில்லாதது; அதனால் என்றும் இருப்பது –ஸ்திதி ஆகிறது
இதன் செயல் ஸ்ருஷ்டிக்கு உதவுகிறது. ( காலத்தின் அளவுகள் மேலேயே கூறினோம் )

இதன் ஸ்வரூபம் —எங்கும் பரவியிருப்பது
இதன் ஸ்திதி—என்றும் இருப்பது
இதன் ப்ரவ்ருத்தி அல்லது செயல்—ஸ்ருஷ்டிக்கு உதவியாக இருப்பது

இத்த்ரவ்யங்களெல்லாம் –வஸ்துக்களெல்லாம் ஸ்வரூபத்தால் என்றுமே இருந்தாலும்
தங்களது நிலையை அவ்வப்போது மாற்றிக்கொள்கின்றன . அதனால், தாற்காலிகமானவை
என்றோ அழியக்கூடியவை என்றோ சொல்ல இயலாது. நிலையை மாற்றுவது என்பது
நீர் ,பனிக்கட்டி ஆதல், பிறகு நீர் ஆதல் , பிறகு ஆவியாதல் . இப்படி மாற்று நிலையில்
வேறுபெயரிட்டாலும் ,பழைய நிலையிலிருந்து ,புதிய நிலைக்கு வரும்போது
இடைவெளியே இல்லாததால், இவை நித்யம் என்றே சொல்லப்படுகின்றன

இப்பதார்த்தங்கள் என்கிற வஸ்துக்களின் ஸ்வரூபம் ஸ்திதி, ப்ரவ்ருத்தி ஆகிய ஈச்வரனின்
இட்ட வழக்காயுள்ளன. ஏனெனில்,அவனில்லாமல் இவை இல்லை;
அவனுடைய ஸங்கல்பமில்லாமல் இவை இல்லை

ஆகையால், ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ,ஈச்வரனின் ஸங்கல்பம் இயல்பாகவே ஏற்புடைத்து.
ஆனால், ஸம்ஸாரிகளுக்கு –பத்தர்களுக்கு, அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப ஒரு சில
சில சமயங்களில் ஏற்புடையதாகவும்,மற்றச் சில சமயங்களில் அப்படி ஏற்க
இயலாததாகவும் ஆகிவிடும். இவர்களின் ஆத்மஸ்வரூபம் , இவர்களால் ஏற்கப்படுகிறது.
ஒரு சிலருக்கு சரீரம் ஏற்கத்தகுந்தது என்று சிந்தனை வர, அதனால் சரீர அபிமானம்
பெருகி,ப்ரக்ருதி அதன் மாறுபாடுகள் யாவும் கர்மவினை காரணமாக
இந்தச் சிலரை ஸம்ஸார பந்தத்தில் ஆழ்த்திவிடும் மோக்ஷத்தை அடையத் துடிப்பவன்
இந்தப் பற்றுதல்களை விலக்கி ஒழிக்கவேண்டும்.
முக்தனுக்கு ஏற்கெனவே இத்தகைய ப்ரக்ருதியின் மாறுபாட்டால் எந்தப் பாதிப்புமில்லை .

இவை எல்லாமும் ஒருவனுக்கு எப்போது ஏற்புடையதாக ஆகுமென்னில்
நான் , எனது என்கிற எண்ணத்தை விலக்கி தன்னுடைய ஸ்வரூபஜ்ஞானத்தை உணர்ந்து
யாவுமே எம்பெருமானுக்காகவே உள்ளன என்கிற பக்ஷத்தில் , சாத்யமாகும் .
இவைபோன்றவற்றை , ப்ரஹ்மத்தின் பூர்ணம் மற்றும் ஆனந்தம் பற்றிச்
சொல்லும்போது விளக்குவோம்

ஈச்வர தத்வ நிரூபணம் -பகவானுடைய ஐந்து ஸ்வரூப ,நிரூபக விசேஷணங்கள்

அதிகாரத்திலிருந்து

இப்படி ஸ்வாதீன ஸர்வஸத்தாதிகளையுடைவனாயிருக்கிற ஈச்வரனுடைய
ஸ்வரூபம் ஸத்யவாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களிலே ஸத்யமாய்
ஜ்ஞானமாய் அநந்தமாய் ஆனந்தமாய் அமலமாயிருக்கும் . இவ்வர்த்தத்தை
நந்தாவிளக்கேயளத்தற்கரியாய் என்றும், உணர்முழுநலமென்றும் ,சூழ்ந்ததனிற்
பெரிய சுடர்ஞானவின்பம் என்றும் அமலன் என்றும் இத்யாதிகளாலே
ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள்

மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளுமெல்லாம் ஈச்வரனுக்கு
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும் . இக்குணங்களில் ஞான ,பல ,
ஐச்வர்ய ,வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்களென்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும் .
ஸௌசீல்யவாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோபயுக்தங்களாயிருக்கும் . இக்குணங்களெல்லாம்
ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாஸ்ரீதங்களாயிருக்கும்

பர வ்யூஹாதி விபாவங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோ
ரூபங்களை அநுஸந்திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள்
சொல்லுகைக்காகவத்தனை . ஒளபநிஷத் வித்யாவிசேஷங்கள்தோறும் அனுஸந்தேய
குண விசேஷங்கள் நியதங்களானாற்போலே பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப
விசேஷானுஸந்தானத்துக்கும் குணவிசேஷங்கள் நியதங்கள் . அவ்விடத்தில்
பரரூபத்தில் ஞானாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்

வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும்.
நாலு வ்யூஹமுண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவரூபத்துக்குப் பரரூபத்திற்காட்டில்
அனுஸந்தேய குணபேதமில்லாமையாலே த்ரிவ்யூஹமென்கிறது.இப்பக்ஷத்தை

குணைஷ்ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்த்தஸ்தவ பபௌ
ததாஸ்திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு :0என்கிற ச்லோகத்தில் ஸங்க்ரஹித்தார்கள் . இப்பரவ்யூஹங்களில் குண க்ரியா
விபவங்கள்

ஷாட்குண்யாத் வாஸுதேவ :பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத்
போதாத் ஸங்கர்ஷண : த்வம் ஹரஸி விதனுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ந : ஸர்க்கதர்மெள நயஸிச பகவந் சக்தி தேஜோநிருத்த :
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ–என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப்பட்டன . ஜாக்ரதாதிபதபேதங்களிலுள்ள
விசேஷங்களெல்லாம்

ஜாக்ரத்ஸ்வப்னாத்யலஸ துரீயப்ராய த்யாத்ருக்ரமவதுபாஸ்ய :
ஸ்வாமிந் தத்தத்குண பரிவர்ஹ : சாதுர்வ்யூஹம் வஹஸி சதுர்த்தா-என்று ஸங்க்ருஹீதங்களாயிற்று

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களை வ்யூஹந்தரங்கள் . விபவங்களான
பத்மநாபாதிகளான முப்பத்துச் சின்ன ரூபங்கள். இவற்றில் மத்ஸ்ய கூர்மாதிகளான
அவதாரங்கள் ஒரு ப்ரயோஜனவசத்தாலே விசேஷித்துச் சொல்லப்பட்டன.
இவ்விபவங்களில் ஈச்வரன் அவ்வோ கார்யவிசேஷங்களுக்கு ஈடாகத்தான்
வேண்டின குணங்களை வேண்டியபோது மறைத்தும் வேண்டியபோது
ப்ரகாசிப்பித்தும் நடத்தும். இவற்றில் அவாந்தரபேதங்கள் க்ருஷ்ணரூபாண்ய —
—ஸங்க்யாநி இத்யாதிகளிற்படியே அநந்தங்கள் . இப்படியே விபவாந்தரங்களும்
கண்டுகொள்வது. சில ஜீவர்களை விக்ரஹ விசேஷத்தாலும் சக்தி விசேஷத்தாலும்
அதிஷ்டித்து அதிசயித்த கார்யங்களை நடக்கிறதுவும் விபவபேதம்

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆச்ரிதர்க்காக அவர்கள் அபேக்ஷித்தபடியிலே
பிம்பாக்ருத்யாத்மநா ” பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே ” என்கிறபடியே-நிற்கிற நிலை அர்ச்சாவதாரம்

ஸர்வருடையவும் ஹ்ருதயங்களிலே ஸுக்ஷ்மாமாயிருப்பதொரு ரூபவிசேஷத்தைக்கொண்டு
நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம் . இது ஸர்வாந்தர்யாமியான திவ்யாத்மஸ்வரூபத்தை
அநுஸந்திக்க இழிவார்க்குத் துறையாக

அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம்
யோகிநாமதிகாரஸ்ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே-இத்யாதிகளிலே சொல்லுகையாலே அந்தர்யாமிரூபமென்று சொல்லப்பட்டது

இப்படி அவதரிக்கிற ரூபங்களில் வகைகளெல்லாம் ஸுத்தஸத்வ த்ரவ்யமயங்களாய்
கர்மதத்பலங்களோடு துவக்கற வருகையாலே ஸுத்தஸ்ருஷ்டிஎன்று பேர்பெற்றிருக்கும்

இவ்வவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும் இவற்றில் ஈச்வரனுக்கு ஞானாதி
ஸங்கோசமில்லையென்றும் , இவ்விக்ரஹங்கள் ஸுத்தஸத்வமயங்களென்றும்
இவற்றிற்கு ஈச்வரேச்சாமாத்ரமே காரணமென்றும் , தர்மரக்ஷணம் பண்ணவேண்டும்
காலமே காலமென்றும் ஸாதுபரித்ராணாதிகளிலே ப்ரயோஜனங்களென்றும் இவ்வர்த்தம்
தெளிந்து அநுஸந்திப்பார்க்கு ஏகஜன்மத்திலே ஸ்வாதிகாராநுகுண ஸமீஹிதோபாய —
—பூர்த்தியாலே ஜன்மாந்தரம் அநுபவியாதே முக்தராகலாமென்றும் , பஹுநி மே வ்யதீதாநி
என்று தொடங்கி ஐந்து ச்லோகத்தாலே கீதாசார்யன் அருளிச் செய்தான் .
இது ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு சரண்யகுணாவிசேஷ ஞானமுகத்தாலே
உபாயாநுஷ்டானக்ஷணத்திலே மஹாவிச்வாஸாதிகளை ஸ்த்ரீகரித்து உபகாரகமாம்

வ்யாக்யானம்

இப்படி அனைத்தையும் தன்னைச் சார்ந்துள்ளதாக வைத்துள்ள பகவானின்
ஸ்வரூபமானது, ஸத்யம் , ஜ்ஞானம் , அனந்தம் (முடிவில்லாதது ), முதலியவாகவே
இருப்பதாக ஆழ்வார்கள் அனுபவித்துள்ளனர்

பெரிய திருமொழி ( 3–8–1 )

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில்போல்
எந்தாய்!எமக்கே அருளாய் எனநின்று
இமையோர் பரவும் இடம் ,எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

நாசமல்லாததாயும் ,ஸ்வயம்ப்ரகாசமாயும் ,தேச ,கால,வஸ்து இவைகளால்
அளவிட இயலாத ஸ்வரூபத்தை உடையவனே!
——————————————————————————————————-
திருவாய்மொழி (1–1–2 )
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறி உணர்வு அவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில எனனுயிர் மிகு நரையிலனே

மனத்தில் உள்ள காமக்ரோத விஷயாதிகள் அறுந்தபிறகு, மானஸயோக
ஞானத்தாலே ( த்யானிப்பதாலே )ஞானயோகத்தாலே இவ்வளவு என்று அளவிட்டுச்
சொல்ல இயலாத நிலையை உடையவன். இந்த்ரியஞானங்கள் ,தன்விஷயத்தில்
இல்லாதவன். இப்படிப்பட்ட ஒன்றுமில்லாதவன், பூரண ஆனந்த ஸ்வரூபன்.
மூன்று காலங்களிலும் இப்படிப்பட்டவன் என்று ஒன்றும் இல்லாதவன்.
எனக்கு ஆத்மா. இவனுக்கு மேம்பட்டவர், மிகுந்தவர்இல்லை.
முழுவதும் ஜ்ஞானமும் ஆனந்தமும் நிரம்பப்பெற்ற ஸ்வரூபனே
—————————————————————————————————-
திருவாய்மொழி (10–10–10 )

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பரநன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரியஎன்னவாவறச் சூழ்ந்தாயே

சூழ்ந்து ,அகன்று, ஆழ்ந்து உயர்ந்த= எல்லாத் திக்குகளிலும் இருந்து
முழுவதும் சூழ்ந்து, குறுக்கில் பரவி நித்யவிபூதிகளோடு பெருமளவுக்கு உயர்ந்து
ப்ரக்ருதியான அவஸ்தை என்றும் குன்றாத ,பல ப்ரஹ்மாண்டங்கள்
என்கிற கார்யமெல்லாம் உண்டாகும்படியாக ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியே !
எங்கும் பரவி, ப்ரக்ருத்திக்கு மேலாகவும் செல்லும் ,
அசேதனத்துக்கும் சேஷியான ஜ்ஞானானந்த ஸ்வரூபமான மலர்ந்து எங்கும்
பரவுகிற தர்மபூதஜ்ஞானம் உள்ள ஜீவாத்மாவின் அந்தர்யாமியே !
எங்கும் பரவி மலர்ந்த ஜ்ஞானம் உடைய முக்தர்களிலும்
பெரிதான தர்மபூதஜ்ஞானத்தை உடைய ஜ்ஞானாநந்த ஸ்வரூபனே
மேலே சொன்ன வஸ்துக்களையெல்லாம் க்ரஹித்து, அதற்கு மேலாக
நித்யவிபூதி விஷயமாகவும் நின்ற , உன்னைப்பெறவேண்டுமென்கிற
எனது தாகமான ஆவல்,முன்னெல்லாம்போல மீண்டும் மீண்டும்
உண்டாகும்படி இல்லாமல், அது தீர்க்கும்படி, என்னைச் சூழ்ந்து
பூர்ண ஆனந்தானுபவம் அளிப்பவனே
——————————————————————————————————-
அமலனாதிபிரான் ( 1 )

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் ,விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன் நீள் மதிளரங்கத்தம்மான் , திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே

தூயனாய், ஆதிமூலமாய் தன்னுடைய அடியவர்களுக்கு அடியேனை
ஆட்படுத்துவதால் , சிறந்த ஒளியுடைவனாய் , நறுமணம் சூழ்ந்த
சோலைவாழ் திருவேங்கடவன், முறைவழுவா நிறைகுணத்தன் ,
உயர்ந்த மதில்கள் சூழ் திருவரங்கத்தான் , திருவடித் தாமரைகள்
தாமாகவே வந்து அடியேனின் விழிகளுக்குள் புகுந்தாப்போல் உள்ளன

————————————————————————————————–

மற்றுள்ள குணங்களும் = எம்பெருமானின் ஏனைய குணங்களும் அவனது
திவ்ய மங்கள விக்ரஹமும் அவனது ஸ்வரூபத்தை நிரூபிக்கின்றன .
இந்தக் கல்யாண குணங்களில், ஜ்ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம்,
சக்தி, தேஜஸ், ஆகிய ஆறு குணங்கள் இவனே பரத்வம் என்று
பறையறிவித்தார்போல் உள்ளன. சௌசீல்யம் ,வாத்ஸல்யம் போன்றவை
அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவன் என்பதை வெளியிடுகின்றன.
இப்படியாக ,எல்லாக் குணங்களும் எம்பெருமானின் ஸ்வரூபத்தின்
தன்மைகளாக எக்காலத்திலும் உள்ளன.

பர வ்யூஹாதி விபவங்களில் = அதாவது இந்தக் கல்யாண குணங்களில்,
சில எம்பெருமானின் ”பர ” ரூபத்திலும் ( பரவாஸுதேவனாக ), சில ”வ்யூஹ ” ரூபத்திலும்
( வாஸுதேவ , ஸங்கர்ஷண , ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் )
சில ”விபவ ரூபத்திலும் ( அவதாரங்கள் )மட்டுமே வெளிப்படும். ஏனெனில்,
எந்த ரூபத்தை உபாஸனம் செய்தாலும், பகவான் தனது குணங்களைக்
காட்டி அருள்கிறான் என்பதை விளக்கவே !
உபநிஷத் , பகவானை உபாஸிக்கப் பற்பல ”வித்யை”களைச் சொல்கிறது.
பாஞ்சராத்ரம் , குறிப்பிட்ட பகவானின் ரூபங்களில், குறிப்பிட்ட
குணங்களை உபாஸிக்கச் சொல்கிறது. ஆனால், எல்லா ரூபங்களிலும்,
இந்த ஆறு கல்யாணகுணங்களும் வெளிப்படும்

வ்யூஹங்கள் நாலென்றும், மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும்–அதாவது,
பகவானின் வ்யூஹ அவதாரங்கள் , நான்கு என்றும், மூன்று என்றும் சாஸ்த்ர
ரீதியாகச் சொல்லும்போது , நான்கு என்று சொல்லுமிடங்களில், வாஸுதேவன்
நான்கில் ஒருவன் என்று சொல்வர்.
பரவாஸுதேவனுக்கும் , வ்யூஹ வாஸுதேவனுக்கும் த்யானிப்பதில்
குணபேதம் இல்லை என்பர். இதைவைத்து, வ்யூஹங்கள் மூன்று என்றும் சொல்வர்.
இதற்கு ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை மேற்கோள் காட்டுவர்

ச்லோகம் 16–ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளியது.

ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
தேவப்பெருமாளே திருச்செவி சாத்திய ஸ்தோத்ரம்
எம்பெருமானாரும், மற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ வரதன் ஸந்நிதியில்
குழுமியிருக்க தேவப் பெருமாள் , திருமுகப்பில் அரங்கேறிய ஸ்தோத்ரம்

குணை:ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்திஸ்தவ பபௌ
தத ஸ்திஸ்ரதேஷாம் த்ரியுக 1 யுகலைர் ஹி த்ரிப்ரபு : |
வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ! ஸா$$விஷ்க்ருதி வசாத்
பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹாமங்கல குண : ||

த்ரியுக =மூவிரண்டு குணங்களை உடைய
வரத = தேவப்பெருமாளே
தவ=தேவரீருடைய
ப்ரதமதர மூர்தி =முதன்மையான திருவுருவான பரவாஸுதேவ மூர்த்தி
ஷட்குணை :=அந்த ஆறு குணங்களால்
பபௌ =விளங்கியது
தத :திஸ்ர =அதிலிருந்து தோன்றிய மூன்று மூர்த்திகளான ஸங்கர்ஷண ,
ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள்
தேஷாம்= அந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களுடைய
த்ரிபி: யுகலை =மூன்று இரட்டைகளாகவே
அபு : =ப்ரகாசித்தன
ஏஷாயா வ்யவஸ்த்தா = இத்தகைய யாதொரு கட்டுப்பாடு உண்டோ
ஸா = அது
ஆவிஷ்க்ருதி வசாத் = அந்தந்த மூர்த்திகளின் குணங்களை வெளியிடுவதால்
உண்டானதாகும்
து =ஆனால்
பவாந் =தேவரீர்
ஸர்வத்ர ஏவ =எல்லா நிலைகளிலும்
அகணித =எண்ணில் அடங்காத
மஹா மங்கல குண : =பெரிய மங்களமான குணக்கூட்டங்களை உடையவரே

ஹே வரதனே —உன்னுடைய பரவாஸுதேவ ரூபம் ஆறு குணங்களால் ப்ரஸித்தி .
ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் , இந்த ஆறு குணங்களிலிருந்து
இரண்டிரண்டு குணங்களை ஸ்வீகரித்துக்கொண்டுள்ளன

ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் ( 2–39 )
ஷாட்குண்யாத் வாஸுதேவ :பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத்
போதாத் ஸங்கர்ஷண : த்வம் ஹரஸி விதனுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ந : ஸர்க்கதர்மெள நயஸிச பகவந் சக்தி தேஜோநிருத்த :
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ

ஹே ரங்கராஜனே , ஆறு குணங்களை உடையவராய் பரவாஸுதேவன் என்று
கொண்டாடப்படுகிற தேவரீர் முக்தர்களால் இப்படியாக அனுபவிக்கப்படுகிறீர்.
அப்படியே மூன்றாகப் பிரிந்து, ஜ்ஞானம் ,பலம் இந்த இரண்டு குணங்களுடன்
ஸங்கர்ஷணனாக உலகை ஸம்ஹரிக்கிறீர் , சாஸ்த்ரப்ரவசனம் செய்கிறீர்.
ஐச்வர்யம் வீர்யம் இந்த இரண்டு குணங்களுடன் ,ப்ரத்யும்நனாயிருந்து
உலகங்களைப் படைத்து, தர்ம ரக்ஷணம் செய்கிறீர். சக்தி, தேஜஸ் –இரண்டு
குணங்களுடன் அநிருத்தனாயிருந்து ரக்ஷித்து,தத்வ உபதேசம் செய்கிறீர்

ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம் ( 2–40 )

ஜாக்ரத்ஸ்வப்னாத்யலஸ துரீயப்ராய த்யாத்ருக்ரமவதுபாஸ்ய :
ஸ்வாமிந் தத்தத்குண பரிவர்ஹ : சாதுர்வ்யூஹம் வஹஸி சதுர்த்தா

ஹே ரங்கநாதா —தேவரீரைத் த்யானம் செய்பவர்கள் சிலர், விழித்துக்
கொண்டிருப்பவர்கள் போல இருக்கிறார்கள். சிலர், கனவு காண்பவர்போல
இருக்கிறார்கள். சிலர் தூங்குபவர் போல இருக்கிறார்கள். சிலர்,
மூர்ச்சையடைந்தவர் போல இருக்கிறார்கள்.

[விழித்திருப்பாருக்கு –இந்த்ரியங்கள் வேலை செய்கின்றன
கனவு காண்பவருக்கு –மனம் மாத்ரம் வேலை செய்கிறது
தூங்குபவர்களுக்கு–மனமும் வேலை செய்வதில்லை
மூர்ச்சை நிலையில் —உயிரோடு இருக்கும் அடையாளம்கூட இல்லை ]

இவர்களைப்போல, ஹே பகவந் , நீர்,நான்கு ரூபங்களாகப் பிரிந்து
அந்தந்த ரூபங்களுக்குத் தகுந்த குணங்கள், ஆயுதங்களுடன்
உபாஸிக்கப்படுகிறீர்

வ்யூஹாந்தரங்கள்
———————————
1. வாஸுதேவன் –கேசவன் நாராயணன் மாதவன்
பத்னி –லக்ஷ்மி ஸ்ரீ வாகீச்வரி காந்தீ
2. ஸங்கர்ஷணன் —கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன்
பத்னி –கீர்த்தி-9ஜீவன் )–க்ரியா சாந்தி விபூதி :
3. ப்ரத்யும்நன் —— த்ரிவிக்ரமன் வாமநன் ஸ்ரீதரன்
பத்னி–ஜயா (புத்தி ) இச்சா ப்ரீதி : ரதி:
4.அநிருத்தன் — – ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன்
பத்னி–மாயா(அஹங்காரம் ) மாயா தீ : மஹிமா

நான்கு வ்யூஹம் மற்றும் செயல் [ ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் —
பெளண்டரீகபுர ஆச்ரம வெளியீடு ]
பரமபதத்தில்—–விசாக ஸ்தம்பம் என்கிற அப்ராக்ருதமான பெரிய
ஸ்தம்பம் உள்ளது. அது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாகத்துக்கும் நான்கு பக்கங்கள்.
கிழக்கே ஆரம்பித்து, தெற்கு, மேற்கு,வடக்கு என்றுஒவ்வொரு பக்கத்திலும்
வாஸுதேவ, ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்களாக
பகவான் எழுந்தருளியிருக்கிறான் .
நான்கு பாகங்கள் என்று பார்த்தோமல்லவா —
1.–முதலில்–ஜாக்ரத் ஸ்தானம் –இதில், ஜகத் ஸ்ருஷ்டி, ஆயுதங்கள், வாஹனங்கள்,
சின்னம்
2.அதற்கு மேல் —ஸ்வப்ந ஸ்தானம் —ஆகாரம், வர்ணம், சின்னம் [ஸ்பஷ்டமாகப்
ப்ரகாஸிக்காது; ஜகத் வ்யாபாரமின்றி
இச்சை மாத்திரம் இருக்கும்.
3. அதற்கு மேல் —ஸுஷுப்தி ஸ்தானம் –வர்ணம்,ஆயுதம் இவை இன்றி,
இச்சையுமின்றி ஸ்வாநத்தா அநுபவம்
4. அதற்கு மேல்–துரீய ஸ்தானம்—ஸ்தம்பத்தின் கிளைகள்போலத் தோற்றம்
————————————————————————————————

ஜீவனுக்கு–

1. விழிப்பு நிலை—-அநிருத்தன்
2. ஸ்வப்ந நிலை—ப்ரத்யும்நன்
3. உறக்க நிலை–ஸங்கர்ஷணன்
4. மோக்ஷ நிலை —வாஸுதேவன் , பரவாஸுதேவன்

1. விழித்திருப்பது—
எல்ல இந்த்ரியங்களும் இயங்குகின்றன ;கர்மாவைச் செய்கிறான்

2. ஸ்வப்நம்
ஜீவன் , வேறு ஒரு சரீரத்தில் இருப்பதாக உணர்கிறான் ஸ்வப்ந சமயத்தில்,
ஜீவன் சரீரத்தைவிட்டு வெளியேறினாலும் ,ப்ராணவாயு ( ப்ராணன் ),ஜீவனுடன்கூட
வெளியே செல்வதில்லை.அது ,பழைய சரீரத்திலேயே இருக்கிறது.
அதன்மூலமாக,சரீரம் ரக்ஷிக்கப்படுகிறது.ஸ்வப்நத்தில் , இவன்
எடுத்துக்கொண்ட சரீரம் ,விழித்துக்கொண்டிருக்கும்போது இவனுடன்
இருப்பதில்லை. விழித்திருக்கும்போது உள்ள சரீரம் ,ஸ்வப்நத்தில்
இருப்பதில்லை. ஸ்வப்நத்தில் இவன் இதை விட்டுவிடுகிறான்.
ஆதலால், சரீரத்தைவிட , ஆத்மா வேறு என்பது தெளிவாகிறது

3. உறக்கம்–ஸுஷுப்தி
ஸ்வப்நத்தின்போது , ” ஜீவன்,”ஹிதா ” என்கிற நாடிகளில் இருக்கிறான்.
தூங்கும்போதோ , ஸாக்ஷாத் பரமாத்மாவிடமே இருக்கிறான். அப்போது,
அவனுக்கு அநுகூல ,ப்ரதிகூல விஷயங்கள் தெரியாது.
வெளி உலகம் தெரியாது.சுக துக்கம் தெரியாது. ப்ரியமான ஸ்திரீயால்
அணைக்கப்பட்டு உள்ள நிலையில், தன்னை மறந்து இருப்பதைப் போல
தூக்க நிலையில் ,பரம ப்ரியனான பரமாதவினால் அணைக்கப்பட்டு,
அதிலேயே லயித்து, எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறான்.
பரமாத்மாவைக் கூட அறிய முடியாமல் தூங்குகிறான். இச்சமயம்
எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.
ஜ்ஞானமானது ,மனஸ்ஸை அடைந்து ,மனஸ் இந்த்ரியங்களை
ஏவுதல் போன்ற எந்தக் காரியமும் உரக்க நிலையில் இல்லை.

4. மோக்ஷ நிலை—
சமயம் வரும்போது வேறு ஒரு அதிகாரத்தில் பார்ப்போம்

பரவாஸுதேவ , உபாஸனையில் ஆறு குணங்களையும் உபாஸிக்கவேணும்
ஜ்ஞானம் = சாஸ்த்ர நிர்மாணம்
பலம் =ஸம்ஹாரம்
ஐச்வர்யம் =ஸ்ருஷ்டி
வீர்யம் =தர்ம ஸ்தாபனம்
சக்தி = ரக்ஷிப்பது
தேஜஸ் =தத்வத்தை அறிவிப்பது

மாண்டூக்ய உபநிஷத் சொல்கிறது—

ஆத்மா
—————
பதம் நிலை ( தசை ) மூர்த்தி

1. வைச்வாநரன் விழிப்பு அநிருத்தன் (சக்தி,தேஜஸ் –அறிவை அழிப்பது, ரக்ஷணம் )
2. தைஜஸன் ஸ்வப்நம் ப்ரத்யும்நன் ( ஐச்வர்யம், வீர்யம் –ஸ்ருஷ்டி, தர்ம வ்யவஸ்தை )
3. ப்ராஜ்ஞன் உறக்கம் ஸங்கர்ஷணன் (ஜ்ஞானம், பலம்–ஸம்ஹாரம் ,சாஸ்த்ர ப்ரசாரம் )
4. துரீயன் மோக்ஷம் வாஸுதேவன் (பொது–வ்யூஹ வாஸுதேவன் )

—————————————————————————————————-

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களும் வ்யூஹாந்த்தரங்கள்—–அதாவது-
கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன ,த்ரிவிக்ரம ,வாமந ,
ஸ்ரீதர , வ்ருஷீகேச , பத்மநாப, தாமோதர,
என்கிற 12 ரூபங்களும் வ்யூஹத்திலிருந்து வெளிப்படும் மற்ற வ்யூஹாந்தரங்க ரூபங்கள்.
விபவங்கள் என்பவை ”பத்மநாபன் ”முதலான முப்பது ரூபங்கள்.
இந்த முப்பது ரூபங்களில், மத்ஸ்யம் ,கூர்மம் போன்றவை, ஒரு குறிப்பிட்ட கார்யத்துக்காக
வெளிப்பட்டவை.
இப்படியான ,விபவ அவதாரங்களில், அந்தந்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப
ஈச்வரன் தனது சில குணங்களை மட்டுமே வெளிப்படுத்தியும்,
சிலவற்றை மறைத்தும் உள்ளான்.இவற்றில் உட்பிரிவுகளுக்குக் கணக்கில்லை.

க்ருஷ்ணரூபாண்யஸங்க்யாநி –அதாவது, க்ருஷ்ணனாக அவதரித்த எம்பெருமானின்
ரூபங்களுக்குக் கணக்கில்லை என்று ஸ்ரீ பாஞ்சராத்ரம் சொல்லுகிறது.
விபவாவதாரங்களை –பலவற்றை–சாஸ்த்ரங்கள் மூலமாகத் தெளியலாம்.
சில ஜீவன்களில் உள்ளே புகுந்தோ, அல்லது தன்னுடைய சக்தியைப் புகுத்தியோ
அளவிலா அதிசயங்களைச் செய்கிறான். இவைபோன்றவையும், விபவத்துடனே சேரும்.

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆச்ரிதர்க்காக —-என்பது–
பர ,வ்யூஹ ,விபவ ரூபங்கள் தன்னை ஆச்ரயித்த சேதநர்களுக்கு ,
பிம்பத்தில் எழுந்தருளி அநுக்ரஹிப்பது –இது அர்ச்சாவதாரமாகும்
ஸாத்வத ஸம்ஹிதை கூறுகிறது—
ஆச்ரிதர்களாக , எம்பெருமானை ஸேவிக்க முயற்சிப்பவர்களுக்கு
” பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே ”
பிம்பத்தில்–விக்ரஹரூபமாக — விக்ரஹமா, திருமேனியா என்று
பிரிக்க இயலாதபடி அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான்

அடுத்து, அந்தர்யாமித்வம் என்கிறார் —
ஜீவன்களின் ஹ்ருதயத்திலே சூக்ஷ்ம ரூபமாகபகவான் இருக்கிறான்
என்கிறார்,ஆசார்யன் .
இது அந்தர்யாமி ரூபம்
பகவானின் திவ்ய மங்கள ரூபத்தைத் த்யானிப்பவர்களுக்கு இது
அந்தர்யாமித்வம் . ஸாத்வத ஸம்ஹிதை , இதையும் சொல்கிறது

அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம்
யோகிநாமதிகாரஸ்ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே

அஷ்டாங்க யோகத்தைச் செய்து, ஆத்மாவலோகனம் என்கிற
ஸித்தியடைந்தவர்கள் , மானஸ பூஜையை விரும்பி
ப்ரஹ்மோபாஸனம் செய்து, யோகிகளாகி அவர்களின் ஹ்ருதயத்தில்
ஒரு மூர்த்தியாக த்யானிப்பது. மூர்த்தி என்பது, நான்கு வ்யூஹங்களாகப்
பிரியாமலிருக்கிற ரூபம் என்று அர்த்தம்.

அஷ்டாங்க யோகம் என்பதை ”பக்தி யோகம் ”என்றும் சொல்வர் .
1.யமம்
2. நியமம்
3.ஆஸனம்
4.ப்ராணாயாமம்
5.ப்ரத்யாஹாரம்
6.தாரணை
7.த்யானம்
8.ஸமாதி

எம்பெருமானின்
பர ரூபத்தில் ஈடுபட்டவை —-உபநிஷத்துக்கள்
விபவ ரூபத்தில் ஈடுபட்டவை —புராணங்கள்
வ்யூஹம், அர்ச்சை –இரண்டிலும் ஈடுபட்டவை–பாஞ்சராத்ர ஆகமங்கள்
அந்தர்யாமித்வம் –யோகிகளால் மட்டுமே சாக்ஷாத்கரிக்க முடியும்.

இப்படியாக, எம்பெருமான் ஆவிர்பவிக்கும் ரூபங்களனைத்தும் ஸுத்தஸத்வம்
எனப்படும். இவையாவும்,கர்மாக்களுடனோ , அந்தக் கர்மாக்களின்
பலன்களுடனோ சம்பந்தப்பட்டவையல்ல . இவை சுத்த ஸ்ருஷ்டி

இப்படியான அவதாரங்கள் எல்லாமும் ஸத்யமானவை . ஈச்வரனுக்கே உள்ள
ஜ்ஞானம் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவை. இவை, எம்பெருமானின்
ஸங்கல்பத்தால் ஏற்படுபவை.தர்மத்தில் நிலைநிறுத்த , சாதுக்களைக்காப்பற்ற
பகவான் எடுக்கும் அவதாரங்கள்.
நெல் செய்யப் புல் தேயுமாப்போலே என்பார்கள். சாது ரக்ஷணம்
என்கிற நெல்லை பகவான் செய்கிறான்; அந்த ரக்ஷணத்துக்கு இடைஞ்சலாக
இருக்கிற –நெல் வளர இடைஞ்சலாக இருக்கிற புல் —துஷ்ட நிக்ரஹம்
செய்கிறான்.
–இதைத் தெரிந்துகொண்டவர்கள் மோக்ஷம் பெறுவர். அவர்களுக்கு
மேலும் மேலும் பிறவிகள் இல்லை.இவைபற்றி பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அருளியிருக்கிறார். ஸ்ரீமத் பகவத் கீதை–4ம் அத்யாயம்

5.பஹு நி மே வியதீதாநி ஜன்மாநி தவ சார்ஜந |
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ! ||

பகவான் சொல்கிறார்
அர்ஜுனா ! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்துவிட்டன .
உனக்கும் அப்படியே.அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன் .
நீ அறியமாட்டாய்

6. அஜோ$பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோபி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாப ஸம்பவாம்யாத்மமாயயா ||

நான் பிறப்பற்றவன். அழிவு இல்லாதவன்.ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன் .
இப்படி எல்லாம் இருந்தாலும் என்னுடைய மாயையால்
ஸங்கல்ப மாத்ரத்தில் அவதரிக்கிறேன்

7.யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத |
அப்யுத்தாந மதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

எப்போது எப்போது தர்மம் நிலைகுலைந்துபோய் அதர்மம் வளர்கிறதோ
அந்தச் சமயத்தில் எல்லாம் நான் அவதரிக்கிறேன்

8.பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

ஸாதுக்களைக் காப்பாற்றவும் , துஷ்டர்களை அழிக்கவும்
தர்மத்தை நிலை நிறுத்தவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்

9. ஜந்ம கர்ம ச மே தி வ்யமேவம் யோ வேத்தி தத்வதா |
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந ||

அர்ஜுனா என்னுடைய திவ்ய அவதார ரஹஸ்யங்கள் என்னுடைய
செயல்கள் ,எவன் இப்படி உள்ளபடி தெரிந்து கொள்கிறானோ
அவன் (ஆத்மா ), சரீரத்தை விட்டவுடன் மறுபடியும் பிறவி இல்லாமல்
என்னையே அடைகிறான்

10. வீதராக பயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா |
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா ||

விருப்பம், பயம், கோபம் இல்லாதவர்களும் என்னையே
சரணம் என்று அடைந்தவர்களும் ஜ்ஞானம் என்கிற தவத்தால்
மோக்ஷமடைகிறார்கள்

விபாவதாரங்களைத் த்யானம் செய்வதால் அவனுக்கு
அந்த எம்பெருமானின் குணங்கள் பற்றிய ஜ்ஞானம் வருகிறது;
மஹாவிச்வாஸம் உண்டாகிறது; இதனால், மோக்ஷம் அடைவதற்கு
உள்ள உபாயம் ”ப்ரபத்தி ” என்று உணர்கிறான்

அர்ச்சாவதாரமும் மோக்ஷம் அளிக்கவல்லது

அதிகாரத்திலிருந்து

இப்படியே அர்ச்சாவதாரமும் மிறுக்கிற மோக்ஷத்தைத் தருமென்னுமிடத்தை

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ : ப்ரஸந்ந வதநேக்ஷணாம்
க்ருத்வா ஆத்மந : ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி : |
தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத்
விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் ||

என்று ஸ்ரீ சௌனகபகவான் அருளிச் செய்தான். ஆழ்வார்களுக்கும்
இவ்வவதார ரஹஸ்யத்தையும் , அர்ச்சாவதார வைலக்ஷண்யத்தையும்
ப்ரசுரமாக அநுஸந்தித்து , இதற்கு பேரணியாக பரத்வத்தைக் கண்டு
போந்தார்கள்

வ்யாக்யானம்

இப்படியே அர்ச்சாவதார ஈடுபாடும் ,எவ்விதக் கஷ்டமும் இன்றி
மோக்ஷம் பெறுவதற்கு உதவுகிறது. இதை ஸ்ரீ சௌனகர்
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் கூறுகிறார்

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ : ப்ரஸந்ந வதநேக்ஷணாம்
க்ருத்வா ஆத்மந : ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி : |
தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத்
விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் ||

தங்கத்தாலே விக்ரஹத் திருமேனி, வெள்ளியாலே அப்படித் திருமேனி
தரிசிப்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்குமாறு வடித்து,
அர்ச்சனம் செய்து த்யானிக்கவேண்டும். இதன்மூலமாக, அனைத்துத்
தோஷங்களும் தொலைந்து ப்ரஹ்ம ரூபமான அதையே
அடைந்து விடுவான் இந்த அர்ச்சாவதார ரஹஸ்யம் ,இதன் மேன்மை
இவற்றை உணர்ந்த ஆழ்வார்கள், அர்ச்சாவதாரத்திலேயே
முழுதும் மூழ்கி ,இதன் மூலமான பரமாத்மாவையே தர்ஸித்தனர் .

இப்படிப்பட்ட அர்ச்சாவதாரம் ,
தெய்வம்
மானுஷம்
ஆர்ஷம்
ஸ்வயம்வக்தம் என்று நான்கு விதமாக உள்ளன.

தெய்வம்—-தேவதைகளால் ப்ரதிஷ்டை செய்யப்பட விக்ரஹங்கள்
மானுஷம் —மநுஷ்யர்கள்,ஆகம சாஸ்த்ர விதிப்படி, தங்கம், வெள்ளி,
தாமிரம்,அல்லது, பஞ்சலோகம்
(தங்கம், வெள்ளி, தாமிரம்,இவற்றுடன் வெண்கலம், இரும்பு சேர்த்தால் பஞ்சலோகம் )
என்கிற உலோகக்கலவையில் ”ஸ்தபதி ”மூலம் விக்ரஹங்களை வார்ப்பது )
இவற்றால் செய்து விசேஷமாகப் ”ப்ரதிஷ்டை ” செய்யப்பட விக்ரஹங்கள்
ஆர்ஷம் —மஹரிஷிகளுக்குப் ப்ரத்யக்ஷமாகி அவர்களால் ப்ரார்த்திக்கப்பட்ட
பிம்பங்களில் பகவான் எழுந்தருளியிருப்பது
ஸ்வயம்வக்தம்—-தானே விரும்பி எழுந்தருளி இருப்பது

அதிகாரத்திலிருந்து

ஈச்வரனுடைய ப்ரவ்ருத்திகள்

இப்படியிருக்கிற ஈச்வரன் தன் ஆனந்தத்துக்கு பரீவாஹமாகப் பண்ணும்
வ்யாபாரங்கள் ஸகலஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷப்ரதத்வாதிகள்

வ்யாக்யானம்

இப்படியிருக்கிற–மேலே சொல்லப்பட்டவாறு மோக்ஷத்தை அளிப்பவனான
எம்பெருமானின் செயல்களாவது —எல்லா உலகங்களையும் படைத்து,
அவற்றை ரக்ஷித்து,அதன்பிறகு ஸம்ஹரித்து , தன்னுடைய மகிழ்ச்சிக்காக
இவையெல்லாம் செய்கிறான்.

ஸ்ருஷ்டி முதலியவை–பகவானுக்கு விளையாட்டு –லீலை .
இவற்றால் அவனுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. இந்தச் செயல்களால்
ஜீவன்களுக்கு மோக்ஷம் அளிக்க , தன்னுடைய வாத்ஸல்யத்தாலே
ஜீவன்களின் கர்மக்களைக் கழிப்பதற்காக, இப்படி இவைகளை லீலைகளாகச்
செய்கிறான்.

அதிகாரத்திலிருந்து

ஈச்வரன் எந்த நிலையிலும் பிராட்டியைப் பிரியாமை

இவ்வீச்வரன் , ”நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ : ஸ்ரீ ரநபாயிநீ ..”
இத்யாதிகளிற்படியே , ஸர்வாவஸ்தையிலும் ஸபத்நீகனாய்க் கொண்டேயிருக்கு
மென்னுமிடத்தை தத்த்வேந ய : மாதா பிதா என்கிற ச்லோகங்களிலே
உபகார விசேஷத்தாலே ஸாதரமாக விசேஷித்துச் சொல்லப்பட்ட
பராசர பராங்குச ப்ரபந்தங்களிலே தெளிந்து கொள்வது

வ்யாக்யானம்

எம்பெருமான் எப்போதும் தன்னுடைய பத்நியாகிய பெரியபிராட்டியாருடன்
கூடியவனாகவே உள்ளான் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது
‘நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ : ஸ்ரீ ரநபாயிநீ ..’
உலகத்துக்கே தாயான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , நாயகனான விஷ்ணுவை எப்போதும்
பிரியாமல் உள்ளாள். ( ப்ருகு மஹரிஷிக்குப் பெண்ணான பிறகோ ,
திருப்பாற்கடலில் தோன்றிய பிறகோ பகவானுடன் சேர்ந்தாள் என்பதல்ல–
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ,ரக்ஷண ,ஸம்ஹார ,மோக்ஷ தசைகளிலும்
பகவானுடன் கூடவே ஸர்வ அவஸ்தைகளிலும் பகவானுடன் கூடவே இருக்கிறாள் )
இதனை , பராசரர் –ஸ்ரீ விஷ்ணு புராணத்தை இயற்றியவர்—
மற்றும் பராங்குசர் –ஸ்ரீ நம்மாழ்வார்–அருளிச் செயல்—பகவத் விஷயம்—
மூலமாக அறியலாம்.
இதனை ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் 4 மற்றும் 5 வது ச்லோகங்கள் மூலம் அறியலாம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் –4 வது ச்லோகம்

தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ
போகாபவர்க ததுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

எந்த மஹரிஷி , வள்ளல்தன்மையுடன் ஜீவன், அசேதநம் ,ஈச்வரன்
இவர்களின் தன்மை, ஜீவனின் அநுபவம், அசித்தின் அநுபவமான
கைவல்ய, ஐச்வர்ய , புருஷார்த்தங்கள் , மோக்ஷம், அவருக்கான -உபாயம்-வழி
இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியாக தெளிவாகக் காண்பிக்க
புராண ரத்னம் என்பதை இயற்றினாரோ –அந்தப் பராசரருக்கு எனது வந்தனம்

5 வது ச்லோகம்

மாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
இமாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
இது ஸ்ரீ நம்மாழ்வாருக்கான தனியன்-ஸ்ரீ ஆளவந்தார் அருளியது.

ஸ்ரீநம்மாழ்வார்—”ஆத்யஸ்ய ந குலபதே —-”, ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர் .
”மதன்வயாநாம்—” ஆளவந்தார், தம்மைச் சேர்ந்தவர் எல்லாரையும்
சேர்த்துக்கொண்டு,ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே ”சரணம்” என்கிறார்.
எனக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும் எப்போதும் தாயாகவும், தகப்பனாகவும்,
பிள்ளைகள், ஆகவும், தன்னோடு ஸம்பந்தம் உள்ள –வித்யை,பிறப்பு —

அதாவது ”வித்யா வம்சம்” , ஜன்ம வம்சம்”—வித்யா வம்சம் என்பது—ஆசார்ய சம்பந்தத்தால் வருவது—வளருவது.
ஆசார்யன் —அவனுக்கு ஸத்சிஷ்யர்கள் —அவர்கள், ஆசார்யர்களாகி ,
வித்யைகளைக் கற்றுக்கொடுத்து அடுத்த சிஷ்யர்களை உண்டாக்குவது–

என்று இப்படி வளருவது—-வித்யா வம்சம். எல்லா சிஷ்யர்களும்
சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டால்கூட ,ஒன்றிரண்டு சிஷ்யர்களால்
இந்த ”வித்யா வம்சம் ”வளரும்.

”ஜன்ம வம்சம்”என்பது, தேஹ சம்பந்தத்தால் வருவது. ”க்ருஹஸ்தாஸ்ரமத்”தில்
இருந்து பிள்ளை பெண், பேரன் , பேத்தி, என்று தொடருவது இந்த வம்சம்.
இப்படி வளரும் இந்த வம்சம், எண்ணத்தொலையாத வம்சங்களைப் போல,
எவ்வித முக்யத்வமும் இன்றி இருப்பதுண்டு.
ஏதோ, சில தலைமுறைகளில் சொல்லிக்கொள்ளும்படியாக சில வம்சத்தவர் இருப்பதுண்டு.
இது, பெரும்பாலும் ”பித்ரு கடன்” தீர்ப்பதற்கே இருக்கும்

இவைகளினால் தன்வம்சத்தைச் சேர்ந்த முன்னோர், பின்னோர், —
யாவருக்கும் பகவான் முதல் ஆசார்யன் . பொதுவானவன்.ஆனால் நமக்கு,
நாதமுனிகள் ஸம்ப்ரதாயம் —ஆதலால் ஆழ்வார் நமக்கு ”அஸாதாரணர் ”
பரதத்வத்தை நிச்சயிக்கும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள்,
எப்போதும் மாறாத உண்மையைச் சொல்கிறது.ஸாத்விகர் ஸமர்ப்பித்த
மகிழம்பூ –இவற்றை மாலையாக அணிந்தவர் .

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ளக்
காரணமாயும், அப்போதே பகவானின் திருவுள்ளத்துக்கு உகப்பைக்
கொடுக்கக்கூடியதாயும், மதுரகவி முதலான ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள்
புகழ்ந்தும், ஸ்ரீமந் நாதமுநிகளுக்கு பகவானின் ஸங்கல்பத்தினால்
யோகதசையில் ஆவிர்ப்பவித்து, எல்லா வேத ,உபநிஷத்துக்களுக்கும்
ஸாரமான அர்த்தங்களை உபதேசித்தவராயும்,தாய், தகப்பன் ,ஸஹோதரன்
எல்லாமே ,ஸ்ரீமந் நாராயணனே என்கிற உபநிஷத் வாக்கியத்தில் சொல்லப்படுகிற
பகவானுடைய ஸ்வபாவத்தை உடையவராகத் தெரிந்து, தெளிந்து,ஸ்ரீ ஆளவந்தார் இந்தத்
தனியனின் மூலமாக ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளில் ஸேவிக்கிறார் .

ப்ரணமாமி மூர்த்நா —தலையால்—சிரஸ்ஸால் வணங்குகிறேன் என்கிறார்–
விபூதி—வேலைக்காரர்கள், தாஸர்கள் ,பணம், ரத்நம் ,எல்லாமும்—விபூதி –செல்வம்.
இவையெல்லாமிருந்தும் , .
இந்தத் திருவடியே,,நம்மால் அபேக்ஷிக்கப்படுகிற பலன்.
இப்படிப் பகவானின் திருவடி வேண்டுமென்றால், ஆசார்யனின் க்ருபை வேண்டும்,
ஆசார்ய க்ருபை இருப்பின் அச்யுதனின் நிக்ரஹத்தையும் சமன் செய்துவிடலாம்.

பாஷ்யம்(வ்யாக்யானம் ) இப்படிக் கூறுகிறது—-

ஈச்வருகிருபா அநாதிரபி ஆசார்யக்ருபாம் அபேக்ஷதே லீலாரஸ ஸஹசரிதா ச
ஆசார்யக்ருபாது தந்நிக்ரஹமபிசமயதி . அநுக்ரஹைக ரஸா ச . ஈச்வரஸ்ய
க்வசித் அதோ நீநீஷாபிவர்த்ததே அஸாது காரயித்ருத் வம் ச . ஆசார்யஸ்தது
ஸர்வத்ர உந்நிநீஷைவ ஸ ஸாத்வேவ காரயதி —
எம்பெருமானின் தயை ,ஆசார்யனின் தயையை அபேக்ஷித்தே
நமக்கு நன்மையைச் செய்கிறது.சிலபேர்விஷயத்தில், ஈச்வரன் நிக்ரஹமும்
செய்வன் . கெட்ட செயல்களைச் செய்யஇடமளிப்பான்.ஆசார்யனின் க்ருபை
அநுக்ரஹத்தையே செய்யும்.நன்மையையே விளைவிக்கும்.

பகவானுக்குச் சில விஷயங்களில், சிலருக்கு (அஸுரர்களுக்கு ) சாஸ்த்ர வ்ருத்தமான
அர்த்தங்களை ஏற்படுத்தி,பாபகார்யங்களைச்செய்யவைத்து,கீழே தள்ளிவிடும்
ஆசையும் உண்டு. ஆசார்யனுக்கோ,எல்லா சிஷ்யர்களும் உஜ்ஜீவிக்கவேண்டும்
என்கிற ஆசைதான். எந்தச் சமயத்திலும் .சாஸ்த்ர விரோதமான பேச்சே இராது–

குழந்தையை —
தாயார்—தன் த்ரேகம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சுமந்து, பெற்று வளர்க்கிறாள்;
எவ்வளவு அலக்ஷ்யம்செய்தாலும் ,அன்பைச் செலுத்துகிறாள் .
தகப்பனார், —-பேச ஆரம்பிக்கும்போது, எடுத்துக் கொஞ்சி, நல்லொழுக்கம், வேதம் ,புராணம் ,
இதிஹாசம் முதலியவற்றைப் போதிக்கிறார் .
மனைவி—யௌவன வயதில் தாய் தந்தைக்கும் மேலாக உதவி, அமைச்சனாகவும்
இருந்து உதவுகிறாள்
பிறக்கும் மக்கள்—-வயதானபோது, அரவணைத்து, ஆதரவு நல்குகிறார்கள் .
இப்படி இவர்கள் எல்லோருடைய மூலமாக சுகங்களும்,(இடர்களையும் சேர்த்து) சேர்ந்து அனுபவிக்க
பந்துக்களும், நண்பர்களும், வேண்டும்;
இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ”தனம்”—சொத்து.இது ப்ரஜைகளுக்கு
அந்தந்த சமயங்களில் தேவைப்படும்.

ஆனால்,
வித்யா வம்சம், ஜந்ம வம்சம் ஆகிய இரண்டு வம்சங்களில், முன்னேயும் பின்னேயும்
சம்பந்தப்பட்டவருக்கும் ஆசார்ய ,ப்ராசார்ய என்று சம்பந்தப்பட்டவர்கட்கும்,வேண்டிய தனம் —

முதல் குலபதி —-ஸ்ரீ நம்மாழ்வார்
குலபதி எனில் , பரம்பரை, பரம்பரையாக பல கிளைகளாக வித்யைகள்
பெருக , மூலகாரணமாக இருப்பவர். முதல் ஆசார்யன் எம்பெருமானாக இருந்தாலும்,
பரம்பரை என்று சொல்லப் புகுந்தால், ஸ்ரீ சடகோபனே மூல புருஷராவார் .
அதனாலேயே அவர் ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர்.

அவரது திருவடிகளைத் தலையாலே வணங்குகிறேன்.
ப்ரணமாமி மூர்த்நா —-
தலையால் வணங்குவது என்பதற்கு, வ்யாக்யானம் செய்யத் தொடங்கினால் ,
இந்தப் ப்ரணாமம் , பஞ்சாங்க ப்ரணாமம், ஷடங்க ப்ரணாமம், அஷ்டாங்க ப்ரணாமம்,
த்வாதசாங்க ப்ரணாமம்,, ஷோடசாங்க ப்ரணாமம், ஸுக்ருத் ப்ரணாமம், தண்டாங்க ப்ரணாமம்,
மஸ்திஷ்க ப்ரணாமம்,, ஸம்புட ப்ரணாமம், ப்ரஹ்வாங்க ப்ரணாமம்என்று பலவகையாக
இருக்கிறது இருப்பினும், மிகவும் அனுஷ்டானத்தில் உள்ள,

”அஷ்டாங்கப் ப்ரணாமத்தைச் சொல்ல வேண்டி வருகிறது.
ஸ்ரீ பாஷ்யகாரர் நித்ய க்ரந்தத்தில்
மனம், அறிவு, எண்ணம், இவைகளுடன் ஆமையைப் போன்று இருகைகளையும்
தரையில் பதியவைத்து,இருகால்களையும் நன்கு நீட்டி,
தலையால் வணங்குவது அஷ்டாங்க ப்ரணாமம் எனச் சொல்லப்படுகிறது.

ஸ்வாமி தேசிகன், நித்ய வ்யாக்யானாதிகாரத்தில்,
மார்பு, தலை, சொல், மனம்,அறிவு, கன்னங்கள், கால்கள், கைகள், —என்று எட்டு அங்கங்கள் சொல்கிறார்.
”ஸ்ரீ” உள்ளவராக, இளையபெருமாளாகிய லக்ஷ்மணன் ,கஜேந்த்ரன் போன்றோரைச்
சொல்கிறோம். எதனால் —பகவத் கைங்கர்யத்தில் எப்போதும் இழிந்து இருந்ததால்.

அவ்வாறே,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டுமென
அருளினார். திவ்யதேசம் தோறும் நடந்து , பாடி, கும்பிட்டு, நர்த்தனமாடவேண்டுமென
அருளினார். அதனால் இவரும்”ஸ்ரீ” உள்ளவரே . இது இவருக்கு அழியாச் செல்வம்.
இதற்கு அழியா மணமுள்ள ”மகிழ் மாலை ” யும் பூண்டு அழியாச் செல்வமாயிற்று.
எம்பெருமானுக்கு ”துளஸி ” எப்படியோ, அவ்வாறு, ஆழ்வாருக்கு ”மகிழம்பூ ”
ஆழ்வாருக்கு உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை பருகும் நீர் -எல்லாமே கண்ணன்.
நமக்கு, இவை எல்லாமே ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி .ஆசார்ய பரம்பரையில் வரும்
ஸ்ரீமந் நாதமுநிகளும் ,மற்றோரும் அவரது திருவடியே.
ஆழ்வார் குலபதி ஆவதால், அவரது திருவடி, நமக்கு, மாதா பிதா எல்லாமே என்பதாம்.

ஸ்ரீ ஆளவந்தார் ,வாழ்ந்த காலத்தில் அவரது திருமாளிகையில், ஸ்ரீ நம்மாழ்வாரின்
திருவடி நிலைகள் ”மகிழ்மாலை” சார்த்தப்பட்டு.ஆராதிக்கப்பட்டது என்பதும் குருபரம்பரைச் செய்தி.

ஸ்ரீ விஷ்ணு புராணம்— பராசரர் அருளியது–புராண ரத்னம்
ஸ்ரீ ஆளவந்தார் அருளியது –ஸ்தோத்ர ரத்னம்
த்வய மந்த்ரம்—மந்த்ர ரத்னம்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை, ஸ்ரீ ஆளவந்தார் ”புராண ரத்னம் ”
என்கிறார். ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ஸ்தோத்ர பாஷ்யத்தில்
அத்ராஸம் மானதம் ரத்னம் ஸ்திரம் போக்யம் ப்ரகாஸகம் |
மஹார்கம் மங்களம் மான்யம் ஸுரக்ஷம் ஸுக்ரஹம் ந்ருணாம் ||-என்கிறார்
த்ராஸம் என்றால் ரத்னத்துக்கு உள்ள தோஷத்தைச் சொல்வது.
இது ”அத்ராஸம் ”. இந்த ரத்னம் எவ்விதத் தோஷமும் இல்லாதது.
மேலும் வைத்திருப்பவருக்குப் பெருமை முதலியன தருவது.
தோத்ர ரத்னத்தில் , ஸ்ரீ ஆளவந்தார்
முதல் 5 ச்லோகங்களாலே ஜ்ஞானத்தைக் கொடுத்தவர்களை நமஸ்கரிக்கிறார்.
ச்லோகம் 6ம் 7ம் —பரத்வம்
ச்லோகம் 8ம் 9ம் —ஸௌலப்யம்
ச்லோகம் 10 முதல் 21 —நாராயண ஸப்தார்த்தம்
ச்லோகம் 22–ப்ரபத்தி அநுஷ்டித்தது
ச்லோகம் 23—27 =ப்ரபத்திக்கு அதிகாரம் தமக்கு உள்ளதென்கிறார்
ச்லோகம் 28ம் 29ம், —லகு உபாயத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 30—46 =த்வயத்தில் உத்தரகண்டத்தின் பொருளைச் சொல்கிறார்
ச்லோகம் 47—-பலனில் ஆசையுடன் தகுந்த உபாயம் செய்யாததற்காக வருத்தம்
ச்லோகம் 48—51 =ப்ரபத்தி அளிக்கும்படி வேண்டுகிறார்
ச்லோகம் 52ம் 53ம் —ஸரணாகதி —ஸமர்ப்பணத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 54—57 =தேஹம் விடும்வரை இருக்க வேண்டுகிறார்
ச்லோகம் 58—63 =பகவானின் காருண்யம் பரத்வம், வாத்ஸல்யம்
ச்லோகம் 64—–வ்ரதம்
ச்லோகம் 65—ஆசார்ய அநுக்ரஹத்தின் பெருமை

இப்படியாக ”ஸ்தோத்ர ரத்ன”த்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டது.

அதிகாரத்திலிருந்து

திவ்ய -தம்பதிகள்-தங்களுக்குள் பிரித்துக்கொண்ட செயல்கள்

இவ்விடத்தில் தண்டதரத்வமும் புருஷகாரத்வாதிகளும் எம்பெருமானுக்கும்
பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வ்யாபாரங்கள் .உபசித்யமான தர்மாதாரத்திற்
காட்டில் அதிதிச்யமான தர்மாதாரத்துக்கு விசேஷம் ஸ்வத ;ப்ராப்தம்
என்று உவர் அருளிச் செய்ததுக்கும் இப்படி விபாகத்தால் வந்த
வைஷம்யத்தாலே தாத்பர்யம் . இது யுவத்வாதெள துல்யே அபி
என்கிற ச்லோகத்திலே நிர்ணிதம் . இறை நிலையுணர்வரிது என்று
ஆழ்வார் அருளிச் செய்த நிலத்திலே ஏதேனுமொரு வ்ருதாநிர்ப்பந்தம்
ஆகாது . க்ருசாநர்தாம்ஸ்த : கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே
என்கிறபடியே தர்க்கபாண்டியத்தாலே நினைத்ததெல்லாம்
ஸாதிக்கலாயிருக்கச் செய்தேயிறே நாம் ப்ரமாண சரணராய்ப்
போருகிறது . ஆகையால் இவ்வீச்வரத்தையும் ஈசிதவ்யதத்வங்களையும்
யதாப்ரமாணம் தெளியப் ப்ராப்தம்

இவ்விடத்தில் ஸர்வஜ்ஞனாகவும் வேண்டா. அத்யந்தானுபயுக்தங்களிற் போலே
ஸ்வல்போபயுக்தங்கலானவற்றில் அபிஸந்தி பண்ணவும் வேண்டா .
அபரிச்சேத்யமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன
தெளியுமாப்போலே இவ்வளவு விவேகிக்கை அவச்யாபேக்ஷிதம் .
இது ப்ரதிஷ்டிதமாகைக்காக இவற்றின் விரிவுகள் எண்ணுகிறது

இப்படி மூன்று தத்வங்களாக வகுத்துச் சிந்தித்தாற்போலே
ஸர்வவிசிஷ்டவேஷத்தாலே ஈச்வரன் ஏகதத்வமாக அநுஸந்திப்பார்க்கும்
ஈச —ஈசிதவ்யங்கள் , ஆத்மா –அநாத்மாக்கள் , உபாய–உபேயங்களென்றாற்போலே
இரண்டு அர்த்தம் ஞாதவ்யமாக வகுப்பார்க்கும் , ரக்ஷ்யம் —ரக்ஷகன் ,
ஹேயம் –உபாதேயம் என்று இப்புடைகளிலே அர்த்தசதுஷ்டயம் ஞாதவ்யமாக
ஸங்க்ரஹிப்பார்க்கும் , முன்பு சொன்னபடியே அர்த்தபஞ்சகம்
ஷடர்த்தங்களென்று விவேகிப்பார்க்கும் , ரஹஸ்ய ஸாஸ்த்ரங்களிலே
ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் பண்ணுவார்க்கும் அவ்வோ
ஞானாநுஷ்டான –ப்ரதிஷ்டாரூபங்களான ப்ரயோஜனவிசேஷங்கள்
கண்டுகொள்வது

முக்யமான ஜ்ஞானம் பெற்று உபாயத்தில் மூளுகை
—————————————————————————-
சாஸ்த்ரஞானம் பஹுக்லேசம் புத்தேச்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸு

என்கிறது உபயுக்தமான ஸாராம்ஸத்தைக் கடுக ச்ரவணம் பண்ணி க்ருஷி
பண்ணாதே உண்ண விரகுடையவன் க்ருஷி சிந்தையை விடுமாப்போலே
விரிவுகற்கைக்கு ஈடான சாஸ்த்ராப்யாஸாதிகர்மங்களில் உபரதனாய்க்
கடுக மோக்ஷோபாயத்திலே மூள ப்ராப்தமென்றபடி

உபயுக்தேஷு த்ரிவர்க்க நிரபேக்ஷதா
கராணத்ரய ஸாரூப்யம் இதி ஸெளக்ய ரஸாயனம்

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும், வினை உடம்பில்
கூறுபடும் கொடுமோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாறநினைந்து அருளால் மறைநூல் தந்த வாதியரே

ஆவாப உத்வாபதஸ்ஸ்யு : கதி கதி கவிதீ சித்ரவத்தத்ததர்தேஷு
ஆனந்த்யாதஸ்திநாஸ்த் யோரநவதி குஹநா யுக்திகாந்தா : க்ருதாந்தா : |
தத்த்வாலோகஸ்து லோப்தும் ப்ரபவதி ஸஹஸா நிஸ்ஸமஸ்தாந் ஸமஸ்தாந்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு ப்ராணிதா ஸ்தாணுதாதி : ||

வ்யாக்யானம்

இவ்விடத்தில், இப்போது, பெருமானுக்கும் ,பிராட்டிக்கும் செயல்களில்
உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.
பகவான், தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறான்
பிராட்டியோ, அவ்வாறு தவறு செய்பவர்களை மன்னிக்கும்படி ,பகவானிடம்
வேண்டுகிறாள்
மீமாம்ஸம் படித்தவர்கள் சொல்வர் —-
ஒரு வஸ்துவானது, எந்தத் தன்மையால் மற்றொரு வஸ்து போன்றே
உள்ளதோ , அதே தன்மையால் அந்த வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
இருக்கும். இங்கு பகவானின் மற்றும் பிராட்டியின் ஸங்கல்பம் என்பது
இவ்விதமே என உணரலாம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிய ”ஸ்ரீ குணரத்னகோசம் ”
( 34 வது ச்லோகம் )இப்படிக் கூறுகிறது

யுவாத் வா தெள துல்யேப்ய பரவஸதா–ஸத்ரு –ஸமன–
ஸ்த்த்ரவாதீன் க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வஸுலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பாரார்த்தய கருணா
க்ஷமாதீன் வா போக்தும் பவதி யுவயோராத்மனிபிதா

ஹே பெரியபிராட்டியாரான ரங்கநாயகி—-
இளமை முதலானவை ஒத்து இருந்தாலும் தனித்துச் செயல்படும்
திறமை,எதிரிகளை அடக்குவது , எடுத்த காரியத்தில் உறுதியோடு
இருப்பது, முதலான நல்ல குணங்கள் ஆண்மைக்கு அநாதிகாலமாக
இருக்க, ஜகன்மாதாவான உம்மிடம் பெண்மைக்கே தகுந்தவை என்று
ஏற்பட்ட மனஸ்ஸின் தன்மை , நாயகனான பகவானின் திருவுள்ளத்துக்கு மீறாமல் இருப்பது
, பிறர் கஷ்டங்களைத் துடைப்பது, பொறுமை , இவை முதலானவை
அநாதிகாலமாக அமையப்பெற்று ஜீவன்கள் அநுபவிக்க ஏற்றவாறு
உங்கள் இருவரின் ஆத்ம ஸ்வரூபத்தில் பிரித்து அறியும் நிலை ஏற்பட்டுவருகிறது.

குணங்கள் மூன்று வகை
ஆத்ம குணங்கள் ஞானம் , சக்தி, ஆனந்தம் முதலியவை
திவ்ய மங்கள விக்ரஹத்தை ஆச்ரயித்த குணங்கள் –ஒளஜ்வல்யம்
ஸௌந்தர்யம் , ஸௌகந்த்யம் , ஸௌகுமார்யம் , லாவண்யம் ,யௌவனம்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் —இரண்டையும் ஆச்ரயித்த குணங்களான-ஸௌஹார்த்தம் , மாதுர்யம் , சாதுர்யம் , தைர்யம் முதலியன
-நமக்கு-பகவான்–சேஷீ பிராட்டி–சேஷி பூதை
தாயார், பகவானுக்கு மட்டில் =சேஷ பூதை

ஈச்வரனின் உண்மையான நிலையை அறிவது கடினம் என்று
ஸ்ரீ நம்மாழ்வார் கூறுகிறார் –திருவாய்மொழி ( 1–3–6 )

உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள் !
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்றும் இவரை
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே

உணர்வுள்ளவர்களே ! பகவானின் தன்மையை அறிதல் அரிதாகும் .
அவனை இன்னானென்று அறிய இயலாது.

மஹாபாரதத்தில் சொல்வது —

க்ருசாநர்தாம்ஸ்த : கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே
சிலர் சிறிய விஷயங்களையும் பெரிதாக்குகின்றனர் . நாம் நமது
வாதங்களை நமக்குள்ள தர்க்கவாத அறிவைக்கொண்டே
நிரூபித்து விடலாம்.ஆனாலும் சிறிய விஷயங்களாக இருந்தாலும்
சாஸ்த்ர பிரமாணம் தேவைப்படுகிறது. ஆதலால்,இந்த ஈச்வர தத்வத்தையும் சாஸ்த்ர ரூபமாக அறிய வேணும்

உபசித்யமான தர்மாதாரத்திற்காட்டில் அதிதிச்யமான
தர்மாதாரத்துக்கு விசேஷம் ஸ்வத ;ப்ராப்தம்= இதற்கான விளக்கம்

சில தர்மங்கள் அவரவர்களுக்கு இயற்கையிலேயே உள்ளன.
பூர்வ மீமாம்ஸையில் , யாகாதிகளை ,ப்ரக்ருதி யாகம், விக்ருதி யாகம்-என்று இரண்டாகச் சொல்வர்.
ப்ரக்ருதி யாகம்= அந்த யாகத்தில் செய்யவேண்டிய தர்மங்களுக்கு எல்லாம்-எதற்கு ஸ்பஷ்டமாக உபதேசம் ஆகியுள்ளதோ அது.
விக்ருதி யாகம் = இங்கு உபதேசிக்காத தர்மங்களையும் இதற்கு முன்பு-சொல்லப்பட்ட ப்ரக்ருதி யாகத்திலிருந்து கொண்டுவரவேண்டுமென்று ஆராய்ந்து
அதைப்போல இதையும் செய்யவேண்டும் என்று நிரூபிக்கிறோமோ அது.
ப்ரக்ருதி யாகம் =ஆக்னேய யாகம் —–அக்னி தேவதா யாகம்
விக்ருதி யாகம் =சௌர்ய யாகம் —ஸூர்ய தேவதா யாகம்

இதைப்போலப் பிராட்டிக்கும் சில விசேஷங்கள்உண்டு,.சில குணங்கள்
பிராட்டிக்கும் , பகவானுக்கும் பொதுவாக இருந்தாலும்
சில குணங்கள் பிராட்டிக்கு மட்டில்; சில குணங்கள் பகவானுக்கு மட்டில்.

இருந்தாலும், நாம் , எல்லாவற்றையும் அறிய வேண்டியதில்லை.
தேவையில்லாத விஷயங்களைக் குறித்து ச்ரமப்படவேண்டியதில்லை.
பெரிய ஸமுத்ரத்தில் படகை ஓட்டுபவனுக்கு , தான் போகவேண்டிய
வழியை அறிந்தாலே போதுமானது. நமக்கு அவச்யமானதை
அறிந்தாலே போதுமானது. இந்தத் தத்வங்களை நன்கு உறுதியாக
அறிய விரிவாகக் கற்பது அவசியமாகிறது

தத்வங்களை மூன்றாகப் பிரித்தாலும் , சிலர் ஈச்வரன் மட்டுமே தத்வம் என்றும்
மற்றவை அவனது தன்மைகள் என்பர்.வேறு சிலர், தத்துவங்கள் இரண்டு என்பர்.
1.ஈச்வரன்—அவனுக்கு அடங்கியவை . ஆத்மா–ஆத்மா அல்லாதவை
2.அடையப்படும் இடம் –அதற்கான வழி

இன்னும் சிலர் நான்கு விதமாகச் சொல்வர்
1. ரக்ஷிப்பவன்
2. ரக்ஷிக்கப்படுவது
3. விலக்கப்பட வேண்டியவை
4. ஏற்கப்பட வேண்டியவை

இதில் விசேஷமென்னவெனில்,
அர்த்த பஞ்சகம் ஐந்து என்பாரும் உளர்;ஆறு என்பாரும் உளர்

ரஹஸ்யார்த்தங்களில் —
ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் பண்ணுவார்க்கும் அவ்வோ
ஞானாநுஷ்டான –ப்ரதிஷ்டாரூபங்களான ப்ரயோஜனவிசேஷங்கள்
கண்டுகொள்வது —இது என்னவெனில்,
1.ஈச்வரன்
2. அவித்யை ( அஞ்ஞானம் )
3. கர்மம் ( ஊழ்வினை )
4.காலம்
5. கடமை ( கர்த்தவ்யதை )
6.செய்யவேண்டிய முறை ( இதி கர்த்தவ்யதை )
7. புலனடக்கம் (ஸம்யமம் )
அவரவர் சிந்தனைக்கு ஏற்றவாறு தத்வங்களை அணுகி அறிந்து
செயல்பட அவற்றுக்கேற்ற நன்மைகளும் , பலன்களும் கிடைக்கிறது

சாஸ்த்ரஞானம் பஹுக்லேசம் புத்தேச்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸு

சாஸ்த்ரஜ்ஞானம் ஸம்பாதிப்பதில் மிகவும் கஷ்டம்.
அதனால் மதி கலக்கம். எனவே,ஆசார்யனின் உபதேசத்தைப்
பெற்று, அந்த உபதேசத்தால் எம்பெருமானையும் , மற்றவற்றையும்
தெரிந்து, சாஸ்த்ரஜ்ஞானம் ஸம்பாதிப்பதான மீதி எல்லாச்
செயல்களிலிருந்தும் விலகவேண்டும். மேலும் மேலும் ஆராய்ந்து,
மோக்ஷ பலனை அடைவதை தாமதம் செய்யக்கூடாது.
தனக்குத் தேவையான உணவைப் பெற்றிருப்பவன்,
விவசாயம் இழியமாட்டான் . அதைப்போல , ஆசார்யன்
உபதேசத்தைப் பெற்று இருப்பவன் தாமதமின்றி,
மோக்ஷ உபாயங்களில் இழியவேண்டும்

உபயுக்தேஷு த்ரிவர்க்க நிரபேக்ஷதா
கராணத்ரய ஸாரூப்யம் இதி ஸெளக்ய ரஸாயனம்

எது ஸெளக்ய ரஸாயனம் ( நலத்தைத் தரும் மருந்து ) என்றால்,
தேவையானவற்றில் ஜ்ஞானம், தர்ம ,அர்த்த ,காமப் பற்றை
அறுத்தல், எண்ணம்,சொல் செயல் –மூன்றும் ஒருப்பட்டு இருப்பது.

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும், வினை உடம்பில்
கூறுபடும் கொடுமோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாறநினைந்து அருளால் மறைநூல் தந்த வாதியரே

வேதமாகிய சாஸ்த்ரத்தை உபதேசித்த ஆசார்யர்கள் , நம்மீது
ஏற்பட்ட அளவற்ற கருணையால் , கர்மவினையால் இந்த சரீரத்தின் மீது
உள்ள -மோகம் – அதாவது சரீரமே ஆத்மா என்கிற எண்ணம்–மற்றும்
நான் சுதந்திரன் என்கிற –கர்வம் இவைகளை நீக்கத் திருவுள்ளம்
பற்றி, சேதநன் , அசேதநம் , ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்கள்
இவைகளின் வேறுபாடுகள் என்று எல்லாவற்றையும் நமக்குத் ,
துளியும் சந்தேகமின்றி உபதேசித்தார்கள்

ஆவாப உத்வாபதஸ்ஸ்யு : கதி கதி கவிதீ சித்ரவத்தத்ததர்தேஷு
ஆனந்த்யாதஸ்திநாஸ்த் யோரநவதி குஹநா யுக்திகாந்தா : க்ருதாந்தா : |
தத்த்வாலோகஸ்து லோப்தும் ப்ரபவதி ஸஹஸா நிஸ்ஸமஸ்தாந் ஸமஸ்தாந்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு ப்ராணிதா ஸ்தாணுதாதி : ||

பலபலத் தத்வங்கள் சொல்லப்படுகின்றன . ஒன்றில் இல்லை ;மற்றொன்றில் உளது. இன்னொன்றில் நீக்கல்; வேறொன்றில்
சேர்க்கை.இப்படியாக, அவரவர் வாதங்களால் கேட்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது .புலவர்களின் எல்லையில்லச் சிந்தனையைப்
போல, தத்வங்கள் எல்லையற்று உள்ளன உண்மையைக் காணும் அறிவு, இவை அனைத்தையும் இருக்குமிடம் தெரியாமல் போக்கிவிடும் .
ஒரு மனிதன் தனக்கு முன்பு உள்ள பொருளை ”மணிதன் எனத் தெளிந்தால் , பின்பு ,அது மிருகமா, கட்டையா என்கிற ஐயம் வராது.
அப்படியே எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எனத் தெளிந்தபிறகு ,ருத்ரனா ,ப்ரம்மனா என்கிற ஐயம் அடியோடு நீங்கும்

அதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம்—-நிறைவு —

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: