ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —–

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —-
முமுக்ஷு –மோக்ஷத்தில் மிக ஆர்வமுடையவன் —
மிக முக்யமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும் ஸாரமான விஷயத்தை , நிர்ணயித்துச் சொல்கிறது ரஹஸ்யத்ரயம்—
அதன் பிரயோஜனம்–மோக்ஷம்– மோக்ஷ உபாயம்–இவற்றுக்கு சாஸ்த்ரமே ப்ரமாணம்–
அஸாரம் , அல்பஸாரம் , ஸாரதமம் —இவற்றின் விளக்கம்

அதிகாரத்திலிருந்து—–
ஸ்ருதி பத விபரீதம் க்ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
ப்ரக்ருதி புருஷ போக ப்ராபக அம்ச : ந பத்ய :
தத் இஹ விபுத குப்தம் ம்ருத்யுபீதா விசன்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே :உத்தமம் ஸார மார்யா :

வ்யாக்யானம் —-
வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும் விஷத்துக்குச் சமமானவை.
வேதங்களிலும், இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும்.
ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில்,உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,
முன்பு ஆசார்யர்களால் காப்பாற்றப்பட்டு வருகிறதுமான ,
மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்ய த்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.

அதிகாரத்திலிருந்து—-
ரஹஸ்யத்ரயத்தின் ப்ரயோஜன விசேஷங்கள்
இந்த ரஹஸ்யத்ரயத்தில் , திருமந்த்ரம் , ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாயிருக்கையாலும்
சரமச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்று தான் சொல்லுகிற
உபாயம் ஒன்றையுமே அவலம்பிக்க ஸர்வோபாய பலஸித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும் ,
த்வயமும் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒருகால் உச்சரித்தவனை
ஸர்வப்ராகாரத்தாலும் க்ருதக்ருத்யனாக்க வல்ல வைபவத்தை உடைத்தாயிருக்கையாலும்
ரஹஸ்யத்ரயமே முமுக்ஷுக்களுக்கு ஆதரணீயம்

வ்யாக்யானம் —–
ரஹஸ்யத்ரயம் –என்கிற மூன்று மந்த்ரங்களில், திருமந்த்ரம் என்று புகழப்படும், அஷ்டாக்ஷரம்
மற்றவற்றின் அர்த்தங்களையும் , அறியும்படி செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீத ஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–
சரமச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்கிறது—-
அதாவது, மோக்ஷத்துக்கான அனைத்து உபாயங்களையும் கைவிட்டு, என்னை அடைக்கலமாக அடைவாயாக —என்கிறது.
இப்படி ஒரே வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்;
இதுவே ”சரணாகதி ” –இந்த வழி , மற்ற எல்லா வழிகளின் பலனையும் அளிக்கக்கூடியது.
த்வயம் என்பது, கடோபநிஷத்தில் சொல்வதைப்போல, தன்னை ஒரு தடவை உச்சரித்தவனை, அவன், மோக்ஷம் பெறுவதற்கான
எல்லாக் கர்மாக்களையும் , செவ்வனேவாகவும், மிகச்சிறப்பாகவும் முடிக்க உதவுகிறது—
ஆகவே, முமுக்ஷுக்களுக்கு , ரஹஸ்யத்ரயமே சிறந்தது.

அதிகாரத்திலிருந்து—–
மோக்ஷம், மற்றும் மோக்ஷ உபாயங்களுக்கு , சாஸ்த்ரமே ப்ரதானம்
அஸார மல்பஸாரம் ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத்
பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே (ஸ்த்ரம் ) ரத்நாகர இவாம்ருதம்
பரம புருஷார்த்தமும் ததுபாயமும் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களால் அறியவொண்ணாத படியாலே இவற்றுக்கு—
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் என்றும்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள என்றும்
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி என்றும்-சொல்லுகிறபடியே சப்தமே ப்ரமாணம்

வ்யாக்யானம்—-
சாஸ்த்ரங்களில் , 1.அஸாரம் — ஸாரமே இல்லாதது (பலனே இல்லாதது)
2. அல்பஸாரம்—(-கொஞ்சம் ஸாரமுள்ளது) அற்பமான பலனைக் கொடுப்பது
3. ஸாரம் —-( ஸாரமுள்ளது ) பலனைக் கொடுப்பது
4.ஸாரதரம்—(மிகவும் ஸாரமுள்ளது )அதிக பலனைக் கொடுப்பது–இவற்றை விடவேண்டும்.
க்ஷீர சமுத்ரத்தில் அம்ருதம் போல, சாஸ்த்ரங்களில் மிக உயர்ந்த ,உத்தமமான ஸாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவன், அவனுடைய வாழ்க்கையில், மிக உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பதையும்
அதை அடையும் உபாயத்தையும், ப்ரத்யக்ஷம் –கண்ணால் காண்பது அல்லது, அநுமானம் –ஊகித்து அறிவதாலோ
இவைகளால், புரிந்துகொள்ள முடியாது.
ஆனால், சாஸ்த்ரமே ப்ரமாணம் என்பதன் மூலம் அறியலாம்
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது
சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–ச்லோகம் இதோ—
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
அர்த்தம்—செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம்தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது–
ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்

அதிகாரத்திலிருந்து —-
அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்
———————————————————
அவ்விடத்தில்,
அனந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்நா :
யத்ஸாரபூதம் ததுபாததீத ஹம்ஸோ யதா க்ஷீரம் இவ அம்புமிச்ரம்–என்கிற ச்லோகத்தில்,
ஸாரபூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக ஸாரத்தை விஷயீகரிக்கிற ஸாரதம ஸப்தம் உபாதேயம் .
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்த்ரங்கள் அத்யந்தா ஸாரங்களாகையாலே அநூபாதேயங்கள்.
வேதத்தில் பூர்வ பாகத்தில், ஐஹிகபலஸாதன ப்ரதிபாதகமான ப்ரதேசம் அத்யல்ப ஸாரமாகையாலே அனுபாதேயம் .
ஆமுஷ்மிகபல ப்ரதிபாதகாம்சம் ஐஹிக பலத்திற்காட்டில், அதிசயித பலத்தை உடைத்தாகையாலே சிலர்க்கு ஸாரம்
என்னவாயிருந்த போதிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டமாகையாலே அனுபாதேயம்.
ஆத்மதத்ப்ராப்தி தத்ஸாதனமாத்ரத்தை ப்ரதிபாதிக்கும்
அம்சமும் ஸாரதரமாய் இருந்ததேயாகிலும் அதிலும் அத்யந்தாதிசயிதமான பரமாத்மாநுபவ ஸாபேக்ஷர்க்கு அனுபாதேயம் .
பரமாத்ம தத்ப்ராப்தி தாதுபாயங்களை வெளியிடும் ப்ரதேசம் ஸாரதமமாகையாலே விவேகிக்கு உபாதேயம்

வ்யாக்யானம்—
ஸ்வாமி தேசிகன் உத்தவ கீதையிலிருந்து ( 3–10 ) உதாரணம் சொல்கிறார்–
நாம் அறியவேண்டிய வேதாந்த பாகங்கள் பற்பல இருக்கின்றன;இவ்வளவுதான் என்று நிச்சயிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன.
ஆனால், அறிவதற்கான ,காலமோ ( ஆயுட்காலம் ) மிகக் குறைவு;தவிரவும், தடங்கல்கள் –இடைஞ்சல்கள் பல உள்ளன;
ஆகவே, அன்னபக்ஷி ,எப்படி பாலிலிருந்து ,தண்ணீரைப் பிரிக்கிறதோ அதைப்போன்று,ஸாாரமில்லாதவைகளுடன் கலந்திருக்கும் ,
மிகவும் ஸாரமானதையே ஒருவன் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வேதத்தில் சேராத சாஸ்த்ரங்களும் , வேதத்தை மறுத்துச் சொல்லும் ,வேதத்திற்குப் புறம்பான ஸாங்க்ய, சார்வாக, ஜைன , யோக , பாசுபதாதி
மதவாதிகளாலும் ( இவர்கள் பாஹ்யர் எனப்படுவர் ) , அத்வைத ,பூர்வ மீமாம்ஸா மதவாதிகளாலும் ( இவர்கள் குத்ருஷ்டிகள் ),
செய்யப்பட சாஸ்த்ர விதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நூல்கள் அடியோடு ஸாரமற்றவை ; உயர்ந்தவை அல்ல ; தள்ளப்படவேண்டியவை.
வேதத்தின் பூர்வ பாகமாகிய முதல் பாகம், கர்ம காண்டத்தைச் சொல்கிறது;
உலக விஷயங்களை –இன்பங்களை –இவைகளை எப்படிப் பெறுவது ,என்பதைச் சொல்கிறது. இவையும் உயர்ந்தவை அல்ல.தள்ளப்படவேண்டியவை.
மேலுலகமான –ஸ்வர்க்கம் –இவற்றைப்பற்றிய பகுதி, உலக இன்பங்களைச் சொல்லும் பகுதியைவிட உயர்வாகத் தோன்றினாலும்,
இவையும் முடிவில் துன்பத்தில் முடிகிறது. ஸ்வர்க்க போகமும் நிலையானதல்ல ! மறுபடியும் பிறவியே–ஆகவே, இதுவும் பயனில்லாதது.
இவற்றைவிட , இன்னும் உசத்தியாகப் புலப்படும், ஆத்மாவை அறியும் பகுதியும் ஆத்மானுபவம்—அதற்கான உபாயத்தைச் சொல்லும் பகுதியும்,
உண்மையில் உயர்ந்தவை அல்ல ; இதுவும் தள்ளப்படவேண்டியதே !
பகவானை மட்டுமே அறியவும் அவனடி அடையவும் ஆவல்கொண்டவனுக்கு– விவேகிக்கு— பரப்ரஹ்மம் பற்றிய வேதப் பகுதிகள்
அவனை அடையும் உபாயம் பற்றிக் கூறும் வேதப் பகுதிகள் மிக மிக முக்கியமானதாகும்.
இதுவே ஸாரதமம்

ஜீவனுடன் சேர்ந்து, அவன் ஜ்ஞானம், கர்மங்கள் , வாஸனை –மூன்றும் தொடர்ந்து வருகின்றன.
ஜ்ஞானம், கர்மங்கள் –இவை, ஜீவனுக்கு அடுத்த பிறவியில், அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்துவைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள, பூர்வ ஜன்ம வாஸனை உதவுகிறது.
இல்லாவிடில், புது ஜன்மத்தில் ,இந்த்ரியங்களின் பழக்கம் இல்லாமலேயே வேலை செய்ய இயலாது. புது ஜன்மத்தில் ,வேலைகளைச் செய்வது,
பூர்வ ஜன்ம வாஸனை இருப்பதால்தான்.
ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்

அதிகாரத்திலிருந்து—
ஸாரதமமானதால் , ரஹஸ்யத்ரயமே மிகவும் உபாதேயம்
——————————————————————————————-
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத :–என்கிறபடியே ரஹஸ்யத்ரயம் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு மிகவும் உபாதேயமாகக்கடவது

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :

வ்யாக்யானம் —-
ஸ்வாமி தேசிகன், மஹாபாரதம்—சாந்தி பர்வத்திலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார்
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத : ( 176–66 )
பற்பல பெரிய சாஸ்த்ரங்கள் இருக்கின்றன—-அவைகளில், வேதாந்தங்கள் ஸாரமானவை . புத்திசாலியானவன், அவைகளிலிருந்தும் ,மிகுந்த
ஸாரமானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேனீ எப்படி, மலர்களைத் தேடித் தேடிச் சென்று, தேனை உறிஞ்சி எடுக்கிறதோ,அதைப்போல, முக்கியமானவற்றை–மிகவும் ஸாரமானவற்றை
க்ரஹிக்கவேண்டும்.
அதுவே, உள்ளபடியே அறியப்படவேண்டிய தத்வங்கள்—மோக்ஷத்துக்கு உபாயமாக உள்ளவை. தனித்து விளங்குபவை.
அவையே, மூன்று ரஹஸ்யங்கள்– மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுவுக்கு மிக முக்யமானவை
ஸ்வாமி தேசிகன், இதற்குப் பிறகு ஒரு பாசுரமிடுகிறார் —-
அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே
இதுவரை, நாம் கற்றவைகள் போதாதென்று, இன்னும் கற்கவேண்டும் என்கிற ஆசையால், உபயோகமில்லாமல், வெறும் சுமையாக இருக்கிற
பதினெட்டு வித்யைகள்— அதாவது–
நான்கு வேதங்கள், சிக்ஷை , வ்யாகர்ணம் , சந்தஸ் , நிருக்தம், ஜோதிடம், கல்பம், மீமாம்ஸை , ந்யாயம் ,
புராணம் , தர்மம், ஆயுர்வேதம், தனுர் வேதம்,காந்தர்வம், அர்த்தசாஸ்த்ரம்
இவை வெறும் எண்ணிக்கை— இவ்வளவு படித்திருக்கிறான் என்கிற கணக்குக்கு மாத்ரம் உபயோகப்படும் –இந்தக் கல்வி–சுமை என்கிறார்
ஆகவே,கண் இமையா–அதாவது ஞானக் குறைவே இல்லாத — நித்ய ஸூரிகள் பெருமையுடன் புகழ்ந்த–கொண்டாடிய —
எட்டு அக்ஷரமுள்ள மூல மந்த்ரத்தையும், மற்றும் இரண்டு— த்வயம், சரம ச்லோகம் இரண்டையும் எப்போதும் மனதில் தரித்துக்கொண்டிருக்கும்
நமது ஸித்தாந்தத்தை எங்கும் பரப்புகின்ற நமது ஆசார்யர்கள் ,சிறிய முயற்சியால் –ப்ரயத்தனத்தால்– ஸர்வார்த்த ஸித்தியைக்
கொடுக்கும், ஸாரத்தையே கொண்டிருக்கிற ஒப்பற்ற இருப்பைத் தந்தனர்—அதாவது—அஷ்டாக்ஷரத்தையும், த்வயம் , சரமச்லோகம்
இவற்றை , நமது ஆசார்யர்கள் நமக்கு அளித்தனர்.

ஸ்வாமி தேசிகனின் ஸம்ஸ்க்ருத ச்லோகம்—-
சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :
வேதங்களின் மேல் பாகம் , உபநிஷத் என்பர். இதில்,மூல மந்த்ரமான அஷ்டாக்ஷரம் ப்ரகாசிக்கிறது— விவேகியானவன்,
அஷ்டாக்ஷரம் மூலமாகத் தன்னுடைய உண்மையான நிலையை உணர்கிறான்.
இவன், தனது வாழ்நாள் முழுவதும் மிக உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கும் த்வயத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தாலோ,
ஒரு தடவை மட்டும் சொன்னாலோ, வேதத்தின் சிரத்துக்கு பூஷணம் போன்றவனும், தனது லீலையாக, அர்ஜுனனுக்கு தேர் சாரத்யம்
செய்தவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் , கருணை மேலிட்டுச் சொன்ன சரம ச்லோகத்தில் மஹாவிச்வாஸம் உள்ளவனாக இருந்தாலோ,
இப்படிப்பட்டவன், நமது கூட்டம் அனைத்துக்கும் ஸ்வாமி போன்றவன் .

2ம் அதிகாரமான ஸாரநிஷ்கர்ஷ அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: