ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் —

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் —-

முமுக்ஷுக்கள் அறிந்துகொள்ள வேண்டிய 5 தத்வங்கள்

1.ஈச்வர ஸ்வரூபம்
2.ஜீவ ஸ்வரூபம்
3.மோக்ஷோபாயம்–மோக்ஷம் என்கிற பலன்
4.ப்ராப்தி விரோதி
5.அதற்கான பரிகாரம்
இவையே அந்த 5 தத்வங்கள்
இவற்றை விவரிக்கிறார், ஸ்வாமி தேசிகன் இந்த அதிகாரத்தில்–

அதிகாரத்திலிருந்து —-

ஆதெள ப்ராப்யம் பரமம் அநதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதெள
இஷ்ட உபாயம் து அயனன மஸோரீர்ப்ஸிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத்ப்ராயம் ச த்வயம் அபி விதந் ஸம்மத :ஸர்வவேதீ

வ்யாக்யானம் —-

1.ப்ரணவத்திலும் ”அ ” உள்ளது; அஷ்டாக்ஷரத்தில் , நாராயண என்பதிலும் ”அ ” உள்ளது. இவற்றின் மூலமாக, குற்றமே இல்லாததும்,
மிக மிக உயர்ந்ததும், அடையப்படவேண்டிய பொருளாக உள்ளதும் , இருப்பது ”பகவான் ” என்று கூறப்பட்டது.
நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை (உ–ம்.விவசாயி மாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறான் )
அடைய ஆசைப்படும் பகவானைச் சொல்லிற்று.
”அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே —-” என்று ஆரம்பிக்கிறது ,
மஹா நாராயண உபநிஷத்
2. நம என்கிற பதத்தில் உள்ள ”ம ” என்கிற அக்ஷரத்தின் மூலமாக ,பகவானை அடையவேண்டியஜீவாத்மாவின் ஸ்வரூபம் கூறப்பட்டது.
3.நாராயணாய என்பதில் உள்ள, ”அயநம் ” என்பதன் மூலமாக, பகவானை அடையும், ஸித்தோபாயம் கூறப்பட்டது.
4. நம என்பதன் மூலமாக, இப்படிப்பட்ட உபாயத்துக்கு வேண்டிய முக்கிய அங்கமான சரணாகதி (ஸாத்யோபாயம் ) கூறப்பட்டது.
.5.”நம ” என்பதில் உள்ள ”ம ” என்கிற எழுத்து, பகவானை அடையத் தடையாக உள்ள ”மமகாரத்தைச் சொல்லிற்று .
மமகாரம் என்றால்,நான், என்னுடையது என்கிற எண்ணம்–சிந்தனை–

இங்ஙனம் 5 உன்னத விஷயங்களை விளக்குகின்ற அஷ்டாக்ஷரத்தையும் இதைப்போல , த்வயம் , சரம ச்லோகம்
இவற்றையும் தெளிவாக அறிபவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்.

அதிகாரத்திலிருந்து—-

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் , ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான
ஸம்பந்த விசேஷத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி இத்தை அநுபந்தித்திருக்கும் அர்த்தபஞ்சகத்தைச் சிலர் விசாரித்தார்கள்
இச் சம்பந்தத்தோடே கூட ஷடர்த்தங்களென்று சிலர் அநுஸந்தித்தார்கள்

வ்யாக்யானம்—-

நாராயணாதி ஸப்தங்களிலே —” நாராயண ” , ”ஓம் ” ஆகியபதங்களின் மூலமாக பகவானுக்கும், ஜீவாத்மாவுக்கும் இருக்கிற உறவுமுறை ,
ஆத்மாவுக்கும், சரீரத்துக்கும் இருப்பதைப் போன்றது என்பது இங்கு விவரிக்கப்பட்டது.

இந்தத் தத்வம் , நமது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு அடிப்படை என்று பறை சாற்றுபவர்கள் , முமுக்ஷுவால் ( மோக்ஷத்துக்கு ஆசைப்படுபவன் )
தெரிந்துகொள்ள வேண்டியது, அர்த்தபஞ்சகம் எனக் கருதி, அதை ஆராய்ந்தார்கள். இன்னும் சிலர், ஈச்வரன்—ஜீவன் என்கிற உறவுமுறையும்
நன்கு அறியப்படவேண்டும் என்று உணர்ந்து, ஆறு அர்த்தங்களையும் ஆராய்ந்தனர்

அதிகாரத்திலிருந்து——

அர்த்தபஞ்சகத்தின் விவரம்
———————————————-
இச் சம்பந்தம் போலே , முமுக்ஷுவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாகச் சேர்த்த அர்த்தபஞ்சகம் ஏதென்னில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந :
ப்ராப்த்யுபாய பலம் ச ஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி ஸகலா வேதா : ஸ இதிஹாஸ புராணகா :

வ்யாக்யானம் —-
—————————-

ஸ்வாமி தேசிகன், ஹாரீத ஸம்ஹிதையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் —
முமுக்ஷுக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் இதில் சொல்லப்படுகின்றன-
ஜீவாத்மா அறியவேண்டியவை —
1.ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்
2.அவனை அடைய விரும்பும் ஜீவனின் ஸ்வரூபம்
3.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்கான உபாயம்
4.ப்ரஹ்மத்தை அடைவதால் பெரும் பயன்
5.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்குத் தடையாக உள்ள விஷயங்கள்

ப்ரஹ்மத்தின்-ஈச்வரனின் ஸ்வரூபம்

அதிகாரத்திலிருந்து—
———————————

இவற்றில் ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபம் –திருமந்த்ரத்தில் ப்ரதம அக்ஷரத்திலும் நாராயண சப்தத்திலும் ,
த்வயத்தில்
ஸவிசேஷணங்களான நாராயண சப்தங்களிலும் ,சரம ச்லோகத்தில்
மாம் , அஹம் என்கிற பதங்களிலும் அனுஸந்தேயம்

வ்யாக்யானம்
———————-

இவற்றில் –அதாவது–அர்த்த பஞ்சகத்தில்
அடையப்பட வேண்டியதான லக்ஷ்யமான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் திருமந்த்ரத்தின் முதல் அக்ஷரமான –”அ ” என்பதன் வாயிலாகவும்,
”நாராயண ” என்கிற பதத்தின் வாயிலாகவும் நன்கு தெளிவாகிறது.
”த்வய ” மந்த்ரத்தில் இருக்கிற ”ஸ்ரீமந் ” என்கிற பெருமை சேர்க்கும் சொல்லுடன் கூடிய ”நாராயண –” என்கிற சொல் மூலமாகத் தெளியப்படுகிறது.
சரம ச்லோகத்தில் உள்ள ”நான் ”, ”என் ” என்கிற சொற்கள் மூலமும் அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து——

ஈச்வரன் , பிராட்டியை விட்டுப் பிரியாதவன் , ஜ்ஞானானந்த ஸ்வரூபன்
———————————————————————————————–

அவ்விடங்களில் அநுஸந்திக்கும்போது

1.ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :
2.ஏஷ நாராயண: ஸ்ரீமாந்
3.பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ரதரோ விபு :
4.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ :
5.விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ
6.ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனமப்ரவீத்
7.ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ருதம்
8.அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம்
9.பவேயம் சரணம் ஹி வ :
10.பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா
11.தயா ஸஹாஸீநமனந்த போகினி
12.காந்தஸ்தே புருஷோத்தம :
13.ஸ்வபரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே
14.ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம :
15.ஸ்ரீய :காந்த :அநந்தோ வரகுணகணைகாஸ்பத வபு :
16.ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ
17.ஸ்ரீய :பதிர் நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :
18.நீயும் திருமகளும் நின்றாயால்
19.ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
20.கோலத் திருமாமகளோடு உன்னை
21.நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
22.உன் தாமரை மங்கையும் நீயும்
23.அகலகில்லேன் இறையும்
24.உணர் முழு நலம்
25.நந்தாவிளக்கே அளத்தற்கரியாய்

என்றும் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே ,ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வாவஸ்தையிலும் ஸஹதர்மசாரிணியான
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அநுஸந்திக்க வேணும்

வ்யாக்யானம்
——————————

பகவானின் ஸ்வரூபம் ,எல்லையில்லா ஞானம் உள்ளதாகவும், எல்லையில்லா ஆனந்தம் உடையதாகவும் அறியவேண்டும்.
அவன், எப்போதும், எந்த உருவிலும், எந்தச் சூழலிலும் , தனது நாயகியான பெரிய பிராட்டியாரை விட்டுப் பிரியாமல்
இருக்கிறான் என்பதையும் அறியவேண்டும் . பெரிய பிராட்டியார், பகவானுடைய எல்லாச் செயல்களிலும் உதவி–பங்கு பெற்று–
இருக்கிறாள் என்பதையும் அறியவேண்டும். இவற்றைப் பல ப்ரமாணங்கள் மூலமாக அறியலாம்

1. லைங்க புராணம்—-

ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :—-உலகங்களுக்குப் பதியான நாராயணன்,
ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் இருக்கிறான்

2.ஹரிவம்ஸம் (113–62 )

ஏஷ நாராயண: ஸ்ரீமாந் —இந்த ஸ்ரீமந் நாராயணன் எப்போதும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதமாகவே இருக்கிறான்

3.ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 120–13 )

பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ரதரோ விபு :—–ராமா —
நீயே மஹாலக்ஷ்மியின் நாயகனும் சக்ரதாரியும் எல்லா உலகங்களுக்கும் எஜமானனுமான நாராயணன் ஆவாய்

4. ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 114–15 )

ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ ——-ஸ்ரீ வத்ஸம் என்கிற மறுவை தன்னுடைய திருமார்பில் தரித்தவரும், எப்போதும்
பெரிய பிராட்டியாருடன் கூடியிருப்பவரும் —

5. விஷ்ணு புராணம் ( 1–18–17 )

விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ ——மஹாலக்ஷ்மி எம்பெருமானை விட்டு எப்போதும் பிரியாதவள்

6.ஸ்ரீமத் ராமாயணம் ( 3–15–6 )

–ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனமப்ரவீத் —-லக்ஷ்மணன், ஸீதையின் முன்பாக, ராமனிடம் இந்த வார்த்தையைச் சொன்னான்.

7.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–31–2 )

ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ருதம் ——தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பேன் என்கிற ஸங்கல்பத்தை
உடைய ராமனிடமும், ஸீதையிடமும் ,லக்ஷ்மணன் சொன்னான்

8.ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–87 )

அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம் —-ராக்ஷஸிகளின் கூட்டத்தை, ராமனிடமிருந்து காப்பாற்றும் சக்தி ,ஸீதையிடம் உள்ளது.

9. ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–90-)
பவேயம் சரணம் ஹி வ :—–ஹே ராக்ஷஸிகளே — உங்களுக்கு நான் சரணம் புகுகின்றவள் ஆவேன் –( சரணம் என்று
அடைந்த ராக்ஷஸிகளைக் காப்பேன் )

10. ஸ்ரீமத் ராமாயணம் (2–31–27 )

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா —–ஹே ராமா, இந்த மலை அடிவாரத்தில் ஸீதையுடன் சுகமாக இருப்பீராக —
நீர் விழித்து இருந்தாலும், தூங்கினாலும் உங்களுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் ,நான் செய்வேன்

11.ஸ்தோத்ர ரத்னம் (39 )–ஸ்ரீ ஆளவந்தார்

தயா ஸஹாஸீநமநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி |
பணாமணி வ்ராதமயூகமண்டல
ப்ரகாசமாநோதர திவ்ய தாமநி ||

தயாஸஹ –பெரிய பிராட்டியுடன் — வீற்றிருக்கிறான் பகவான் எங்கு வீற்றிருக்கிறான்
சிறந்த ஜ்ஞானம் , பலம் என்பனவற்றுக்கு முக்கிய இடமாய், தன்னுடைய படங்களிலிருக்கும் ரத்னக்கூட்டங்களின்
ஒளிவட்டத்தாலே உள்பிரதேசமெல்லாம், பிரகாசமாக இருப்பதான அப்ராக்ருதமான மணிமண்டபத்தை உடையவனுமான
திருவனந்தாழ்வான் என்கிற நாகணைமேல் வீற்றிருக்கிறான்
பெரிய பிராட்டி ,திவ்யமஹிஷி என்று ஸேவிப்போர் அறியும் வண்ணம் வீற்றிருக்கிறான்.

12.சதுச்லோகீ –ஸ்ரீ ஆளவந்தார் ( 1 )

காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதி : ஸய்யாஸனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா , மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ :ஸதயித : த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம : கதம் த்வாம் வயம் ||

ஹே –பகவதீ —புருஷர்களில் உத்தமனாகிய புருஷோத்தமனாகிய பகவான் , உனக்குக் காந்தன்; ப்ரியன் . கைங்கர்யபதியான
ஆதிசேஷன் சயனமும் ,ஆஸனமும் ஆகிறான். வேதஸ்வரூபியான கருடனும் , உனக்கு வாஹனம் ;ஆஸனம் .
ஹே –ஜகன்மோஹினீ –உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு, விபரீத ஜ்ஞானத்தைக் கொடுக்கும் மூலப்ரக்ருதி என்கிற தத்வம்
உனக்கு சேஷம்—-அதாவது அடிமை. இது திரைபோல் இருக்கிறது. ஜீவர்கள் உன்னைத் தரிசிக்கவிட்டாமல் தடுக்கிறது. ப்ரஹ்மா,
ருத்ரன் முதலான தேவர்கள் ,அவர்கள் மனைவியரும் உனக்கு ”தாஸத்வம் ” செய்யும் ஸ்த்ரீகளுடன் சேர்ந்து ,
அடிமைக்கூட்டமாக இருக்கிறார்கள். இதில், நீ ”ச்ரீ ” என்று சொல்லப்படுகிறாய்.நாங்கள் யாராக இருந்தாலும்,
உன் பெருமைகளைத் தெளிவாகச் சொல்ல இயலாது.
பெரியபிராட்டியார், தானே விரும்பி, எம்பெருமானுக்கு சேஷமானதையும்,
நித்ய விபூதி, லீலா விபூதி என்கிற மற்ற எல்லாவற்றிலும் அவள், எம்பெருமானுடன் சேர்ந்து சேஷியாகிறாள்

13.ஆத்ம ஸித்தி ( மங்கள ச்லோகம் ) ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்வபரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே —–எம்பெருமானுடைய
கைங்கர்யங்களைப் போகமாக எண்ணுகிற நித்யஸூரிகளால்
சந்தோஷப்படுத்தப்பட்ட பெரிய பிராட்டியுடன் கூடிய
பகவானிடத்தில் பக்தி உண்டாகவேணும்

14.வேதாந்த ஸாரம் –மங்கள ச்லோகம் (ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம —
அசேஷ சிதசித் விஷ்ணு சேஷிநே சேஷஸாயிநே
நிர்மலாநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம :
மஹாலக்ஷ்மியுடன் கூடியவனும் கெட்ட குணங்களே இல்லாமல் ஆனந்தக் கடல் போலிருப்பவனும் ஆகிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம் .
( இது 32 அக்ஷரங்களைக் கொண்டது என்றும் , 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது என்றும்,
எல்ல வேதங்களும் இந்த 32 அக்ஷரங்களில் அடக்கம் என்றும் சொல்வர் )

15. வேதாந்த தீபம் –மங்கள ச்லோகம்–( ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீய :காந்த :அநந்தோ வரகுணகணைகாஸ்பத வபு :—-
மஹாலக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும் ,எங்கும் நிறைந்தவனும், எல்லையில்லாக் கல்யாண குணங்களுக்கு ஒரே இடமான
திருமேனியை உடையவனுமான எம்பெருமான்—

16.ஸ்ரீபாஷ்யம் –மங்கள ச்லோகம்—ஸ்ரீ உடையவர்

ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ –மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மத்தினிடத்தில்

17.ஸ்ரீ கீதா பாஷ்யம் —ஸ்ரீ உடையவர் —

ஸ்ரீய :பதிர் நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :—-
லக்ஷ்மிபதியான எம்பெருமான், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், எல்ல நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய்,
தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.

18. முதல் திருவந்தாதி ( 86 ) பொய்கை ஆழ்வார்

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா —வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி .

குன்றெடுத்து மழையைத் தடுத்து, ஆயர்களையும் கோக்களையும்
காத்தவனே—நீ திருமகளுடன் இடைகழியில் நின்றாய்– —
——————————————————————–.
என்னிடம் உள்ள அன்பால் அங்கேயே நின்றாய்—இடைகழியை விட்டு வெளியேயும் வரவில்லை; உள்ளேயும்
புகவில்லை.எங்களுடன் கலந்த மகிழ்ச்சியால் இடைகழியிலேயே நின்றாய்.

19. திருவாய்மொழி ( 4–9–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப—-

கண்டு கேட்டுற்று மோந்து உண்டுழலு மைங்கருவி
கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தே னுன் திருவடியே

அழகிய முன்கைவளைகளை உடைய பெரியபிராட்டியும் , நாராயணனான நீயும் , நிலாநிற்ப—கைங்கர்யம் பெறுவதற்குச்
சேஷியாய் நிலைத்திருக்க

20. திருவாய்மொழி ( 6–9–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

கோலத் திருமாமகளோடு உன்னை

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ

மஹாலக்ஷ்மியுடன் பொருந்தியுள்ள உன்னை—–

21. திருவாய்மொழி ( 9–2–1 ) ஸ்ரீ நம்மாழ்வார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்

பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தென்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே

தேவரீருடைய கருணையையும் தாமரையில் வஸிக்கும் பிராட்டியின் கருணையையும் கொண்டு,
தேவரீருடைய கோயிலைச் சுத்தப்படுத்தி ( கைங்கர்யங்கள் செய்து )

22.திருவாய்மொழி ( 9–2–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

.உன் தாமரை மங்கையும் நீயும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி ? உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி
தடங்கொள் தாமரை கண்விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே

உனக்குத் தகுந்த திவ்ய மஹிஷியாய் தாமரைப் பூவிலிருக்கும் பிராட்டியும் , நீயும் (மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யுமாறு
இருந்து அருள வேண்டும் )

23. திருவாய்மொழி ( 6–10–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

அகலகில்லேன் இறையும்

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

ஒரு க்ஷண நேரம்கூட உன்னைவிட்டுப் பிரியச் சக்தியில்லையென்று தாமரையில் இருக்கும் பிராட்டி வஸிக்கின்ற திருமார்பை உடையவனே

24. திருவாய்மொழி (1–1–2 ) ஸ்ரீ நம்மாழ்வார்

உணர் முழு நலம்

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே

எம்பெருமான், முழுவதும் ஞான ஸ்வரூபன் மற்றும் ஆனந்த ஸ்வரூபன்

25. பெரிய திருமொழி ( 3–8–1 )

.நந்தாவிளக்கே அளத்தற்கரியாய்

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவும் இடம் , எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே
களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே

நாசமல்லாததாயும் , ஸ்வயம் ப்ரகாசமாயும் , தேசம்,காலம், வஸ்து இவைகளின் அளவுகளில்
இல்லாததாயும் ஸ்வரூபத்தை உடையவனே

அதிகாரத்திலிருந்து—–

ஈச்வரன், இழி குணங்களே இல்லாதவன்

இப்படி ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்
பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே-என்கிறபடியே ஹேய ப்ரத்யநீகமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

விஷ்ணு புராணத்திலிருந்து ,ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டுகிறார்

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம் ( 1–22– 53 )——-
விஷ்ணு என்கிற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்களே இல்லாதது.

பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே ( 6–5–85 )

பகவான் , உயர்ந்தவைகளை விட மிகவும் உயர்ந்தவன்; அவனிடம்,க்லேசங்கள் முதலான தோஷங்களும் கிடையாது.

அதிகாரத்திலிருந்து
———————————–

ஈச்வரன்,அநந்த கல்யாண குணங்களை உடையவன்

1. தைர்யுக்த : ச்ரூயதாம் நர :
2.தமேவம் குண ஸம்பன்னம்
3.ஜ்யேஷ்டம் ச்ரேஷ்டகுணைர்யுக்தம்
4. ஏவம் ச்ரேஷ்டகுணைர்யுக்த :
5.குணைர்விரருசே ராம :
6.தமேவம் குணஸம்பன்னம் அப்ரதத்ருஷ்யபராக்ரமம்
7. பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே
8. ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம்
9. விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :
10. சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய :
11. நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :
12.தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி :
13. ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
14. யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா :
15. வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை :
16. சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத
17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா : யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :
18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத் மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்
19. வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
20. உயர்வற உயர்நலம் உடையவன்-என்கிறபடியே
ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

ஈச்வரன் –ஸ்ரீமந் நாராயணன் , ஜீவன்களால் அடையக்கூடியவனாக இருப்பதற்கு எந்தெந்தக் குணங்கள் தேவையோ , அப்படி அளவற்ற
கல்யாண குணங்களை உடையவன் என்றும், அவ்விதம் ஜீவன்கள் அடைவதற்கு ஏற்ற உபாயமாக இருப்பதற்கும் , கல்யாண
குணங்களைக் கொண்டுள்ளான் என்றும் , அவற்றுக்கான பற்பல எடுத்துக் காட்டுக்களை ,ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்

1. ஸ்ரீமத் ராமாயணம் ( 1–1–7 )

தைர்யுக்த : ச்ரூயதாம் நர : ——இப்படிப்பட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவரைச் சொல்கிறேன்—கேட்பீராக

2.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–2–48 )
தமேவம் குண ஸம்பன்னம் ——இப்படி குணங்கள் நிறைந்த அந்த ராமனை–

3. ஸ்ரீமத் ராமாயணம் (1–1–20 )
ஜ்யேஷ்டம் ச்ரேஷ்டகுணைர்யுக்தம்—-மூத்தவனும், இப்படி மிக உயர்ந்த குணங்களை உடைய ராமனை

4.ஸ்ரீமத் ராமாயணம்– 2–1–31
ஏவம் ச்ரேஷ்டகுணைர்யுக்த :—-இப்படி , மிகவும் உன்னதமான குணங்கள் கொண்ட ராமனை

5.ஸ்ரீமத் ராமாயணம்–
குணைர்விரருசே ராம :——கல்யாண குணங்கள் மூலமாக ராமன் விளங்கினான்

6.ஸ்ரீமத் ராமாயணம் —
தமேவம் குணஸம்பன்னம் அப்ரதத்ருஷ்யபராக்ரமம் —இப்படி, எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், யாராலும்
வெல்லப்படாதவனுமான உள்ள ராமன்
7. ஸ்ரீமத் ராமாயணம் —
பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே –தசரதா , உன் புத்திரனான ராமனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன.

8. ஸ்ரீமத் ராமாயணம்—
ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம் —–தன்னைச்
சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பாற்றும் தன்மை (குணம் ) அளப்பரிய கருணை, வேதங்களின் –சாஸ்த்ரங்களின் பொருளை
உணர்ந்திருக்கும் தன்மை, தாழ்ந்தவர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை, மனத்தை அடக்கும் திறன், இந்த்ரிய நிக்ரஹம்–
அதாவது,புலனடக்கம் –ஆகிய ஆறு குணங்களும் புருஷ ச்ரேஷ்டனான ராமனை அலங்கரிக்கின்றன
9. ஸ்ரீமத் ராமாயணம்—
விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :—–எல்லாத் தர்மங்களையும் அறிந்த ராமன், தன்னிடம் சரணம்
அடைந்தவர்களிடம் மிகுந்த அன்பு உடையவன் என்று எல்லோராலும் அறியப்பட்டவன் அல்லவா
10. ஸ்ரீமத் ராமாயணம்—
சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய :—-ராமா —-நீயே சரணாகத ரக்ஷகன் என்றும், சரணம் என்று
அடைபவர்களுக்கு ஏற்றவன் என்றும்,சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பவன் என்றும், ஸநகாதி மஹரிஷிகள் கூறுகின்றனர்
11.ஸ்ரீமத் ராமாயணம்
நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :—
ஸாதுக்களுக்கு , நிழல் கொடுக்கும் கற்பக மரம் ; ஆபத்தில் உள்ளவர்கள் அடையவேண்டிய உயர்ந்த கதி

12.விஷ்ணு புராணம்
தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி : —மிக உயர்ந்த தேஜஸ், பலம், ஐச்வர்யம் ,
ஜ்ஞானம், வீர்யம், சக்தி,இவை முதலான குணங்கள் யாவும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடம்—ஷாட்குண்ய பரிபூர்ணன்

13.ப்ரஹ்ம புராணம்
ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற விஷ்ணுவின் குணங்களை( ருத்ரனையும் ,பார்வதியையும் காட்டில் ), எவன் அறியவல்லவன் !
14. வாமன புராணம்–
யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா
குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா : —
ஸமுத்ரத்தில் உள்ள ரத்னக் கற்களைக் கணக்கிட இயலாது; அதைப்போல , சக்ரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது.
15. மஹாபாரதம் —
வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை : எல்லாத் தேவர்களும் ஒன்றுகூடி,
இருந்து பலப் பதினாயிரம் வருடங்கள் சொன்னாலும்,அவனது குணங்களை முழுமையாகக் கூறிவிட முடியாது.
16. வராஹ புராணம் —-
சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம்
வதேந்ந வா தேவவர ப்ரஸீத —–ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸும் – பல ஆயிரக்கணக்கான வாய்களும், மிகவும் சுத்தமான
மனமும் உள்ள ஒருவன் எங்கேயாவது இருந்து, அவன், உன்னுடைய குணங்களின் பதினாறாயிரத்தின்
ஒரு பாகத்தையாவது கூற முடியுமோ ? முடியாதோ ?( முடியாது என்பது தேற்றம் )

17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா :
யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :

நீ ,கணக்கற்ற குணங்களை உடையவன்;ஆனாலும், ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற
ஆறு குணங்கள் முக்யமானவை .இவ்வுலகை , நீ, வயிற்றில் வைத்திருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும் மற்ற
குணங்களைத் தங்களுக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றன.

18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத்
மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்

ஆகாசம் முழுவதும் பாணங்களால் நிரப்பவேண்டும் என்று அம்புகளைப் போடும் சிலர், தங்களிடம் பாணங்கள்
தீர்ந்து விடுவதால், ஓய்ந்து போகிறார்களேயன்றி ஆகாசம் , நிரம்புவதால் அல்ல. இதைப்போல,முழுவதும்
சொல்ல புத்தியின் ஆற்றல் இல்லாதவர்கள் கோவிந்தனுடைய குணங்களை சொல்லி ஓய்ந்து
போகிறார்களேயன்றி , குணங்கள் யாவையும் சொல்லி முடிந்துவிட்டதால் அல்ல
19. திருவாய்மொழி
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்

மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனையீர்கின்ற
குணங்களையுடையாய் ! அசுரர் வன்கையர் கூற்றமே 1கொடியபுள்ளுயர்த்தாய் !
பணங்களாயிரமு (மு )டைய பைந்நாகப் பள்ளியாய் !பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே

மிகவும் கொடிய பிரபலமான பாவங்களைச் செய்த என் போன்றவனையும் உன்பால் ஈர்க்கின்ற குணங்களை உடையவனே
பாசுரத்துக்கு,சுருக்கமான பொருள்—-
நப்பின்னையைப் போல ,பல கோபிகைகள் , பேர் ஆயா –கோபர்களின் அரசனே –கண்ணனே
மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
ஆச்ரிய சேஷ்டிதங்கள் அகடதகடினா சாமர்த்யங்கள் இவற்றால் வல்வினையேனை
——கொடிய பாபியான என்னை , சிறிதும் விடாமல் ,பாபங்களைப் பிளந்து எறிகின்ற , கோபிகைகள் அநுபவித்த கல்யாண குணங்களை
உடையவனே–புஜபல பராக்ரமம் உடைய அசுரர்களுக்கு யமனே —கருடக்கொடி உடையவனே
ஆயிரம் படங்களை உடைய ஆதிசேஷன்மீது, திருப்பாற்கடலில் சயனித்து இருப்பவனே
வணங்கும் ஆறு –வழி –அறியேன் –உன்னைத் துதிக்கும் வழி தெரியாதவன்
மனம் ,வாக்கு,செய்கை இவைகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனே — என்கிறார்

20. திருவாய்மொழி
உயர்வற உயர்நலம் உடையவன்

உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே

உயர்வு இவ்வளவுதான் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாதபடி, உயர்ந்ததான ஆனந்தம் முதலிய குணங்களை உடையவனே

ஹே—மனஸே —வேறு எவரும் தன்னைவிட ஏற்றமில்லாதபடி இருப்பவனும் உயர்ந்த ஆனந்தமான கல்யாண குணங்களை
எப்போதும் உடையவனும் வேதத்தால் புகழப்படுபவனும் அஞ்ஞானத்தை அகற்றி அறிவையும் பக்தியையும் அளிப்பவனும்
மறதி ,தளர்வு இல்லாத நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியும் — இப்படிப்பட்ட பகவானுடைய, ஆச்ரிதர்களின் துக்கங்களைப்
போக்கும் குணமுடைய ,ஜ்யோதிஸ் ஸ்வரூபமான திருவடிகளை எப்போதும் வணங்கி உஜ்ஜீவிப்பாயாக —-
என்கிறபடியே ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான
குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம் —

தன்னை அடைவதற்கும் அடைவிப்பதற்கும் தேவையான குணங்களுடன் இருக்கிறான்.
இந்தப் பகவத் குணங்கள், உபயோகத்துக்கு ஏற்ப, ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் என்றும்,
ப்ராபகத்வோபயுக்த குணங்கள் என்றும்உபயோபயயுக்த குணங்கள் என்றும் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.
ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் —எல்லாவற்றிற்கும் சேஷியாக இருப்பது , எல்லை இல்லாத ஆனந்த ஸ்வரூபனாக இருப்பது
ப்ராபகத்வோபயுக்த குணங்கள்—- தயை, வாத்ஸல்யம் , ஒளதார்யம், –முதலிய குணங்களோடு இருப்பது
உபயோபயயுக்த குணங்கள் —ஷாட்குண்யம் — ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
இப்படியாக, எம்பெருமான் ,அளவில்லாக் கல்யாண குணங்களை உடையவனாக இருக்கிறான்.

அதிகாரத்திலிருந்து ———-

ஈச்வரன் ”திவ்ய மங்கள விக்ரஹமுடையவன்

1.ஸதைக ரூப ரூபாய
2. நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத்
3. ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்
4. இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ :
5. ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந :
6. ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா
7. பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச
8. ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம்
9.தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம்
10. பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
11. அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம்
12. பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத்
13. தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :–என்கிறபடியே
ஸர்வ ஜகதாச்ரயமான அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டமாக அநுஸந்தேயம் .
இவ்விக்ரஹம் பர வ்யூஹ விபவ ஹார்த்தர்சாவதார ரூபேண பஞ்சப்ரகாரமாயிருக்கும்படியும்
இவற்றிலுள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும்

வ்யாக்யானம்
————————-
1. விஷ்ணு புராணம் —
ஸதைக ரூப ரூபாய—எப்போதும் ஒரேவிதமான மாறுதல் இல்லாத திருமேனியை உடையவன்

2. பௌஷ்கர ஸம்ஹிதை
நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத் ————————
ஹே , பௌஷ்கரனே —எப்போதும் இருப்பதுமான திருமேனியை உடையவன் ;அவன் எல்லோருக்கும் மேம்பட்டவன் என்றும் ,
எவனுடைய மனத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறதோ, அவன் அருகில் எம்பெருமான் எப்போதும் உள்ளான் .
3. விஷ்ணு புராணம்
ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்—
எல்லா சரீரங்களைக் காட்டிலும், வேறான திருமேனியை உடையவன்,
எம்பெருமான்.அந்தத் திருமேனியில், எல்லா சக்திகளும் நிலையாக உள்ளன.
4. விஷ்ணு புராணம்—
இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ : —
பக்தர்களுக்கு இஷ்டமான , அனைவர்க்கும் இன்பம் தருகிற திருமேனியைத் தன் ஸங்கல்பத்தாலே பகவான் எடுத்துக்கொள்கிறான் .
5. மஹா பாரதம்—சாந்தி பர்வம்—-
ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந : —-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானதல்ல
6.வராஹ புராணம்—
ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா —–
எம்பெருமானின் திருமேனி, மாம்ஸம், மேதஸ் (மஜ்ஜை ) எலும்பு ஆகியவற்றால் ஆனதல்ல
7.மஹாபாரதம்—
பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச —
பகவானது திருமேனி, நான்கு திருக்கரங்களுடன் உள்ளது;சிறப்பானது; பரமபதத்தில் நிலையாக உள்ளது.
8.மநு ஸ்ம்ருதி—
ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம் —–தங்கம் போன்று ப்ரகாசிப்பவன்; அவனைக் கனவில் காண்பதைப் போல மனத்தால் மட்டுமே நினைக்க முடியும்.
9.ஸ்ரீமத் பகவத் கீதை—
தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் ப்ரவிபக்த மநேகதா |
அபஸ்யத் தேவ தேவஸ்ய சரீரே பாண்டவஸ்துதா ||
உலகங்கள் பலவிதமாகப் பிரிந்து இருக்கின்றன.ஆனால், அவையாவும் தேவதேவனான பகவானின்–ஸ்ரீ க்ருஷ்ணனின் திருமேனியில் ,
ஒரு சிறிய பகுதியாக இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.
10.ஸ்ரீமத் பகவத் கீதை—
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விசேஷ ஸங்காத் |
ப்ரஹ்மாண மீஸம் கமலாசநஸ்தம்ம்ருஷீம்ஸ்ச ஸர்வானுரகாம்ஸ்ச திவ்யாந் ||
ஆச்சர்யப்பட்டு, மெய்சிலிர்க்க அர்ஜுனன் வணங்கிக் கூறுகிறான்.
—–ஹே தேவாதி தேவனே, க்ருஷ்ணா —உன்னுடைய திருமேனியில் அனைத்துத் தேவதைகளையும் நான் காண்கிறேன்.
பிராணிகளின் கூட்டங்களைப் பார்க்கிறேன்.கமலாஸனத்தில் வீற்றிருக்கும் ப்ரஹ்மாவைப் பார்க்கிறேன்.
ஸகல ரிஷிகளையும் பார்க்கிறேன்.தெய்வத் தன்மை உள்ள ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
11.விஷ்ணு புராணம்—-
அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம் ——–ஆயுதங்களும் ஆபரணங்களும் உன் திருமேனியை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன.
12. விஷ்ணு புராணம்—-
பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத் —- உலகங்கள் யாவும் அவனது திருமேனியில் ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் உள்ளன.
13.ஸ்ரீமத் ராமாயணம்—
தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :——
ப்ரக்ருதிக்கும் மேலிடத்தில் இருப்பவனாய், சங்க,சக்ர ,கதாதாரியாய் போஷகனாக இருக்கிறான், ஸ்ரீ ராமன்.

என்றெல்லாம் சொல்லுமாப்போலே ,இவற்றிலுள்ள விசேஷங்களும் பக்வச்சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும் ——
இந்த விதங்களில் அமைந்திருக்கும் தனித்வ பெருமைகளும் பகவானைப் பற்றிச் சொல்லும் சாஸ்த்ரங்களும் பாஞ்சராத்ர முதலிய
ஸம்ப்ரதாய க்ரந்தங்களாலே தெளிந்து கொள்ளலாம்

அதிகாரத்திலிருந்து–

பகவான் எல்லையற்ற விபூதிகளை உடையவன்
————————————————————————-

1.விஷ்ணோரேதா விபூதய :
2.மஹா விபூதி ஸம்ஸ்தாந
3.நாந்த : அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப இத்யாதிகளுடைய
ஸங்க்ரஹமான
4. யதண்டமண்டாந்தர கோசரம் ச யத்

என்கிற ச்லோகத்தின்படியே அநந்தவிபூதி விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-

1.விஷ்ணு புராணம்—விஷ்ணோரேதா விபூதய :
இவை எல்லாமும் –அதாவது, மநு முதலானோர்,காலம் , எல்லா ஜந்துக்கள் இவையாவும், உலகின் ஸ்திதிக்குக் காரணமான மஹாவிஷ்ணுவின்
விபூதிகள் –ஐச்வர்யங்கள்

2. விஷ்ணு புராணம்— மஹா விபூதி ஸம்ஸ்தாந–மஹா விபூதி எனப்படுகிற நித்ய விபூதியைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே

3.ஸ்ரீமத் பகவத் கீதை–
நாந்த : அஸ்தி மமதிவ்யானாம் விபூதினாம் பரந்தப |
ஏஷ தூத்தேஸத : ப்ராக்தோவிபூதேர் விஸ்தரோமயா ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறான்—–
ஹே—அர்ஜுனா—பகைவரை வாட்டுபவனே ! என்னுடைய திவ்ய விபூதிகளுக்கு முடிவே கிடையாது. இதுவரை நான் சொன்னவை
என்னுடைய விபூதியின் ஓரளவுதான்–சிலவற்றையே சொன்னேன்.

4. ஸ்தோத்ர ரத்னம் —
யதண்டம் அண்டாந்தர கோசரஞ்ச யத்
தசோத்தராண்யா வரணாநி யாநி ச |
குணா : ப்ரதானம் புருஷ : பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய : ||

தே –விபூதய :–உனது ஐச்வர்யங்கள் எவை என்றால் யத் அண்டம்—எந்த எந்த அண்டங்களோ , அவற்றின் உட்புறங்கள்
எவையோ, அந்த அண்டங்களுக்கு மேன்மேல் ,பத்து மடங்கு அதிக விஸ்தீரணங்கள் உள்ள ,மேலும் மேலும் சூழ்ந்து இருக்கிற
பஞ்ச பூதங்கள்–நீர், நெருப்பு, இவை எவையோ,
குணா : —- ஸத்வ ,ரஜோ ,தாமஸ குணங்களும்
ப்ரதானம் —-அவற்றுக்கு ஆதாரமான மூல ப்ரக்ருதியும்
புருஷ :=பக்த ஜீவர்களும்
பரம்பதம் = ஸுத்த ஸத்வ த்ரவ்யமான ஸ்ரீ வைகுண்டமும்,
பராத்பரம் =இவற்றில் பரம் ஆனதற்கும் மேலாக பூர்ண சைதன்ய
விகாஸம் உடைய முக்தர்களும், நித்யர்களும், இப்படி எல்லாமும்
தே விபூதய : =உனது ஐச்வர்யங்கள்
என்று , ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் ( 17 ) கூறுகிறார்

அதிகாரத்திலிருந்து—

ஈச்வரனின் லீலா ரூப ஜகத் வ்யாபாரம்
—————————————————————

இவ்விபூதிகளில் ,சேதநங்களாயும் அசேதநங்களாயும் உள்ள இரண்டு வகையும் லீலார்த்தங்களையும் போகார்த்தங்களையும் விபக்தங்களாயிருக்கும்
அநுஸந்தேயம் பொதுவாயிருக்க ரஸ வைஷம்யத்தாலே லீலா-போக–விபாகம் யதாலோகம் கண்டு கொள்வது. அப்படியே ,
1.ஜந்மாத்யஸ்ய யத :
2. க்ரீடா ஹரேரிதம் ஸர்வம்
3. க்ரீடதோ பாலகஸ்யேவ
4. பால :க்ரீடநகைரிவ
5. ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி :
6. லோகவத்து லீலா கைவல்யம்
என்கிறபடியே லீலாரூப ஜகத்வ்யாபார லக்ஷணமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-
பகவானின் விபூதிகள், சேதனம், அசேதனம் என்று இருவகைப்படும். இவை, பகவானுடைய லீலைக்காகவும், அவன் அநுபவிப்பதற்காகவும்
உள்ளன. இப்படிப்பட்ட இரண்டு பிரிவு ,அவனது ”ரஸத்”துக்காக மட்டுமே.
அனைத்தும் அவனால் ஏற்கப்படுகிறது.பகவான் இவ்வுலகில் ஈடுபடுவது, அவனது லீலைக்காக என்பதை இப்போது அறியலாம்.

1. ப்ரஹ்ம ஸூத்ரம் —ஜந்மாத்யஸ்ய யத : =கண்ணால் பார்க்கப்படும் இவ்வுலகின் பிறப்பு முதலானவைகளை, யாரிடமிருந்து உண்டாகிறதோ , அவனே ”ப்ரஹ்மம் ”

2.மஹாபாரதம்—சாந்தி பர்வம்–க்ரீடா ஹரேரிதம் ஸர்வம் = இவை யாவும் பகவானுக்கு விளையாட்டு

3. விஷ்ணு புராணம்–க்ரீடதோ பாலகஸ்யேவ = விளையாடும் குழந்தையின் சேஷ்டைகள் போலிருக்கிற ,எம்பெருமானின் லீலைகளைப் பார்.

4. மஹா பாரதம்–ஸபா பர்வம்–பால :க்ரீடநகைரிவ = குழந்தை, விளையாட்டுக் கருவிகளான பொம்மைகளை வைத்து விளையாடுவதைப்
போல, பகவான், நம்மை வைத்து விளையாடுகிறான்.

5. விஷ்ணு தர்மம்—ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி := பந்துகளை வைத்து விளையாடுவதைப் போல,ஸ்ரீ ஹரியே—உனது விளையாட்டு இருக்கிறது.

6. ப்ரஹ்ம ஸூத்ரம் –லோகவத்து லீலா கைவல்யம் =இவை எல்லாமே அவனது விளையாட்டுக்காகவே

இப்படி, எல்லாமே அவனது, உலக வியாபார லீலா விநோதங்களின் லக்ஷணம் என்று அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து–
——————————–

ஜீவ ஸ்வரூபம்
————————
இப்படி, லக்ஷ்மி ஸஹாயமாய் அபரிமித ஞானானந்தமாய் , ஹேயப்ரத்யநீகமாய் ,ஞான –சக்த்யாத்யனந்த –மங்களகுண –விசிஷ்டமாய்,
திவ்ய மங்கள–விக்ரஹோபேதமாய்,சரீரபூத–விபூதித்வய –யுக்தமாய் , ஜகத்ஸ்ருஷ்ட்யாதி –வ்யாபார –லீலமாய்க் கொண்டு,
ப்ராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் , ப்ரத்யகாத்மாவினுடைய ,பத்த–முக்த –நித்ய–ஸாதாரண– ரூபமும்
உபாயாதிகாரியான தனக்கு இப்போது அஸாதாரணமான ரூபமுமறியவேணும் .

வ்யாக்யானம்
————————

இப்படி, எம்பெருமான் ,மஹாலக்ஷ்மியுடன் எப்போதும் இணைந்தவனாக இருக்கிறான்
அவன், எல்லையில்லா ஜ்ஞானம் உள்ளவன். எல்லையில்லா ஆனந்தம் உள்ளவன். எல்லாத் தாழ்வுகளுக்கும் , எதிராக உள்ளவன்.
ஜ்ஞானம், சக்தி போன்ற அளவற்ற மங்கள குணங்களை உடையவன் . திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபி.
தன்னுடைய சரீரமாக, லீலா விபூதி, நித்ய விபூதியை உடையவன். படைத்தல், காத்து நிர்வஹித்தல் இவனுக்கு பொழுதுபோக்கு –விளையாட்டு.
இங்ஙனம் அடையவேண்டிய ப்ராப்யமாக –பொருளாக –இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனை அடைய விரும்பும் ஜீவன்கள் —
பத்தர், முக்தர், நித்யர் என்று மூன்று விதமாக இருப்பதையும் அவர்களுக்குள்ள வேறுபாட்டையும் அறிய வேண்டும்.

அதிகாரத்திலிருந்து

மூன்று வகைச் சேதனர்களின் லக்ஷணம்

இவர்களில்,
பத்தரானவர் அநாதி கர்ம ப்ரவாஹத்திலே ,அனுவ்ருத்த ஸம்ஸாரராய் ப்ரஹ்மாதி ,ஸ்தம்ப ,பர்யந்த ,விபாக ,பாகிகளான க்ஷேத்ரஜ்ஞர்.

முக்தராவார் , சாஸ்த்ர சோதிதங்களான ,உபாய விசேஷங்களாலுண்டான பகவத்ப்ரஸாதத்தாலே , அத்யந்த ,நிவ்ருத்த ,ஸம்ஸாரராய் ,ஸங்கோச
ரஹித பகவதனுபவத்தாலே ,நிரதிசயானந்தராய் இருக்குமவர்கள்

நித்யராவார், ஈச்வரனைப் போலே அநாதியாக ஞானசங்கோசமில்லையாமையாலே
ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த , கருட ,விஷ்வக்ஸேனாதிகள்

இவர்களெல்லார்க்கும் ஸாதாரணமான ரூபம் அணுத்வ ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் பகவத் சேஷத்வ பாரதந்த்யாதிகளும் முமுக்ஷுவான
தனக்கு அஸாதாரணமாக அறியவேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம்.
மேலும் கண்டு கொள்வது

வ்யாக்யானம்
——————–
பத்தர்கள் எனப்படுவோர், கணக்கற்ற முடிவே இல்லாத காலமாகத் தொடர்ந்துகொண்டே வருகிற கர்மாக்கள் காரணமாக, ஸம்ஸாரம்
என்கிற சக்கரத்தில் அகப்பட்டு, அதில் சுழன்று, அதிலேயே உழன்று வருபவர்கள். புல் முதலாக, ப்ரஹ்மா வரையிலும் க்ஷேத்ரஜ்ஞர்.ஆவர்.

முக்தர் என்பவர்கள், சாஸ்த்ரங்களில் சொல்லிய உபாயங்களைச் சரியானபடி பின்பற்றி, எம்பெருமானின் க்ருபையைப் பெற்றவர்கள்.
இவர்கள், ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, வெளியேறி, பகவத் அனுபவத்தில் எல்லையில்லா ஆனந்தத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்கள்.

நித்யர்கள் என்பவர்கள் , தங்களுடைய ஜ்ஞானம் எப்போதுமே சுருங்காமல், விகஸித்து பிரகாசிக்க, பகவானையே ஒத்து இருப்பவர்கள்.
இதனை ,
ஸ்ரீ பராசர பட்டர் தனது க்ரந்தமான குணரத்ன கோசத்தில் சொல்கிறார் (27 )

தே ஸாத்யா : ஸந்திதேவா : ஜனனி ! குண–வபுர் –வேஷ–வ்ருத்த –ஸ்வரூபை :
போகைர்வா நிர்விசேஷா : ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : |
ஹே—ஸ்ரீ : ! ஸ்ரீரங்கபர்த்து : தவச பத பரீசார வ்ருத்த்யை ஸதா பி
ப்ரேம ப்ரத்ராண பாவவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்யபோகா : ||

ஹே–ஜனனீ —தாயே— ஹே–ஸ்ரீ —பெரிய பிராட்டியே–எவர்கள் நல்லகுணங்கள் ,வயசுக்கு ஏற்ற நடத்தைகளுடன் , ஆத்ம ஸ்வரூபத்தாலும்
பகவத் அநுபவங்களாலும் ,வேறுபாடு இல்லாமல், ஒரே வயதுள்ளவர்களாய் எப்போதும் எந்தக் குற்றமும் அற்றவர்களாய்,பகவானிடம் ப்ரீதியுடன்
நல்ல மனஸ்ஸுடன் கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த ஸாத்ய தேவர்கள் எனப்படும் நித்ய ஸூரிகள் ,
உனக்கும், பகவானுக்கும் திருவடிகளில் கைங்கர்யம் செய்துகொண்டு எப்போதும் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.இவர்கள், ஆதிசேஷன், கருடன்,
விஷ்வக்ஸேனர் முதலானவர்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான தன்மைகள் என்னவெனில்—
அணு போன்று அளவுள்ள தன்மை , ஞானமயமாக இருத்தல், ஆனந்த மயமாக இருத்தல், எவ்விதக் குற்றமும் இல்லாமல் இருத்தல்,
முதலியவையாகும்.
இப்படி, இவர்கள் யாவரும் பகவானுக்கு அடிமைகள்.அவனது ஸங்கல்பத்தின்படி பணியாற்றுபவர்கள்.

அதிகாரத்திலிருந்து—-
————————————–

ஜீவனின் ஸ்வரூபத்தை ,ரஹஸ்யத்ரயத்தில் அநுஸந்திப்பது

இப்ராப்தாவினுடைய ஸ்வரூபம், ப்ரணவ நமஸ்ஸுக்களில் மகாரங்களிலும் நார சப்தங்களிலும், ப்ரபத்யே என்கிற உத்தமனிலும் ,வ்ரஜ என்கிற
மத்யமனிலும் , த்வா என்கிற பதத்திலும் , மா சுச : என்கிற வாக்யத்திலும் அநுஸந்தேயம்

மோக்ஷோபாயம் , பற்றி –ரஹஸ்யத்ரயத்தில்
———————————————————————————————————–

ப்ராப்த்யுபாயமும் , இதில் பரிகரங்களும் , பலஸ்வரூபமிருக்கும்படியும் மேலே ப்ராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்.
இவற்றில் உபாயம் ,
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் , அயந சப்தத்திலும் த்வயத்தில் பூர்வ கண்டத்திலும் , சரம ச்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் அநுஸந்தேயம்.
பல ஸ்வரூபம்,
சதுர்த்யந்த பதங்களிலும் த்வயத்தில் நமஸ்ஸிலும் ,ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிறவிடத்திலும் அநுஸந்தேயம் .

வ்யாக்யானம்
———————

ஜீவனின் ஸ்வரூபம்—அஷ்டாக்ஷரத்தில் ”ஓம் ” என்கிற அக்ஷரத்தின் மூன்றாவது அக்ஷரமான ( எழுத்தான ) , ”ம ” என்பதன் மூலமாகவும், ”
”நம ” என்கிற பதத்தின் மூலமாகவும், ”நாராயணா ” என்பதில் ”நார ” என்பதன் மூலமும், சொல்லப்பட்டது.
த்வயத்தில் , ”ப்ரபத்யே ” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது.
சரம ச்லோகத்தில், ”வ்ரஜ ” என்பதன் மூலமும், ”த்வா ” என்பதன் மூலமும் ”மா சுச : ” என்பதன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டது.

மோக்ஷோபாயம் போன்றவற்றுக்கு, பகவானை அடையும் உபாயம் ஸம்பந்தமாகவும் அவ்விதம் மோக்ஷம் அடைந்த பிறகு, கிடைக்கின்ற
பலன்கள் பற்றியும் , நாம் போகப்போக விவரிப்பதாக, ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்.
உபாயம் என்பது,
அஷ்டாக்ஷரத்தில் உள்ள –ஓம் நமோ நாராயணாய — என்பதில் உள்ள ”நம ” என்பதன் மூலமும்,
நாராயணாய என்பதில் உள்ள ”அயந ” என்பதன் மூலமும், அறியக்கடவோம் .

த்வய மந்த்ரத்தில் , ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே — என்கிற முதல் வரியின் மூலம் அறியக்கடவோம் .

சரம ச்லோகத்தில், இரண்டாவது வரியான ”அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ” என்பதன் மூலமும் அறியக்கடவோம்

அதிகாரத்திலிருந்து—-
—————————————–

மோக்ஷம் பெறுவதைத் தடுக்கும் விரோதிகள் –பகவன் நிக்ரஹமே முக்ய விரோதி
——————————————————————————————————————-

ப்ராப்தி விரோதியாவது
அவித்யா–கர்ம — வாஸனாதி —ரூபமான மோக்ஷ ப்ரதிபந்தக வர்க்கம்.
இதில் ப்ரதானம் , அநாதியாக ஸந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கன மடியாகப் பிறந்த பகவான் நிக்ரஹம் .
இது, க்ஷேத்ரஜ்ஞர்க்கு –ஞானசங்கோசகரமான , த்ரிகுணாத்மக , ப்ரக்ருதி ஸம்ஸர்க்க விசேஷத்தை உண்டாக்கியும் ,
இப்ப்ரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீரேந்த்ரியாதிகளோடே துவக்கி,
திண்ணமழுந்தக்கட்டி பல செய்வினை வன்கயிற்றால் புண்ணை மறையவரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன் என்றும்–சொல்லுகிறபடியே
தேஹேந்த்ரியாதி பரதந்த்ரனாக்கியும்
அவ்வவஸ்தையிலும் சாஸ்த்ரவச்யதை கூடாத திர்யகாதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்த்ர யோக்யங்களான மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும் ,
அவற்றில் இழியாதவர்களையுமுள்பட பகவத் ஸ்வரூப திரோதானகரீம்
விபரீத ஞான ஜனனீம் ஸ்வவிஷயாயாச்ச கோப்யபுத்தேர்ஜனனீம் என்கிறபடியே ,
இம்மூலப்ரக்ருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களைப் பண்ணியும்
இவையடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸுகலவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதிலங்கனத்தைப் பண்ணுவித்தும் ,
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக
க்ஷிபாம்யஜஸ்ரம் இத்யாதிகளிற்படியே , கர்ப ,ஜன்ம, ஜரா, மரண , நரகாதி சக்ர பரிவ்ருத்தியிலே பரிப்ரமிப்பித்தும் க்ஷுத்ர ஸுகாதிகளுக்கு
ஸாதனமான ராஜஸ தாமஸ சாஸ்த்ரார்த்தங்களைக்கொண்டு
யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா :ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜனா : என்கிறபடியே
தன்னோடு ஒக்கவொழுகு சங்கிலியிலே கட்டுண்டு உழலுகிற க்ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப்பண்ணியும் ,
அவர்கள் கொடுத்த ஜூகுப்ஸாவஹ க்ஷுத்ர தேவதா புருஷார்த்தங்களாலே க்ருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக ப்ரவ்ருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல் நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல்
மூளப்பண்ணிச் சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலைசாய்ப்பித்தும்
,ஆத்மப்ரவணரையும் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டம் , ப்ரக்ருதி வியுக்தமென்கிற இவ்விரண்டு படியிலும் ப்ரஹ்மாத்யஷ்டையாலேயாதல் ,
ஸ்வரூப மாத்ரத்தாலேயாதல் உபாஸிக்க மூட்டி
அவை நாலுவகைக்கும் பலமாக அல்பாஸ்வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்
ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மசிந்தன ப்ரவ்ருத்தரானவர்களையும் ஸ்வாத்மசரீரக பரமாத்ம சிந்தனபரரையும் அந்தராயமான
ஆத்மாநுபவத்தாலேயாதல் , அஷ்டௌ ஸ்வர்ய ஸித்திகளாலேயாதல்,வஸ்வாதிபதப்ராப்தி ப்ரஹ்மகாயநிஷேவணாதிகளாலேயாதல்
,அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜகுமாரனுக்குச் சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டமுண்டாமாப் போலே
ப்ராரப்த கர்மபலமான தேஹேந்த்ரியங்களிலும் ததனுபந்திகளான பரிக்ரஹங்களிலும் தன்மூல போகங்களிலும் கால்தாழப்
பண்ணியாதல் அந்யபரராக்கியும் இப்படிப் பல முகங்களாலே பகவத்ப்ராப்திக்கு விலக்காயிருக்கும் .முப்பத்திரண்டு அடியான
துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாமடியிலே அந்தராயமுண்டானாலும் இவன் ஸம்ஸாரத்தைக் கடந்தானாகான்

கர்மயோகாதிகளில் ப்ரவர்த்தனுக்கு நேஹாபிக்ரம நாசோ அஸ்தி இத்யாதிகளிற்படியே இட்டபடை கற்படையாய் என்றேனுமொருநாள்
பலஸித்தியுண்டாமென்கிறவிதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர ஜன்மாந்தராதிகளில் எதிலே யென்று தெரியாது.
அனுகூல்யம் மிகவுமுண்டாயிருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பங்காணா நின்றோம்..
ப்ரதிகூல்யம் மிகவுண்டாயிருக்க வ்ருத்ர க்ஷத்ரபந்து பரப்ருதிகளுக்குக் கடுக மோக்ஷமுண்டாகக் காணா நின்றோம்.
ஆதலால், விலம்பரஹித மோக்ஷஹேதுக்களான ஸுக்ருதவிசேஷங்கள் ஆர்பக்கலிலே கிடக்குமென்றும் தெரியாது .
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்குக் காரணங்களான துஷ்கர்மவிசேஷங்களும் ஆர்பக்கலிலே கிடைக்குமென்றுந்தெரியாது.

வ்யாக்யானம்
————————-

மோக்ஷம் பெறுவதற்குத் தடையாக உள்ளவை–
1. அவித்யை—சரீரத்தை ஆத்மாவாக நினைத்தல்மற்றும் ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று நினைத்து இறுமாந்து, அஹங்காரம் ,மமகாரம் கொள்ளுதல்
2.கர்மா அல்லது கர்மம் —ஜீவன் செய்யும் புண்ய ,பாபச் செயல்கள்
3.வாசனை —முன்னாலே சொன்ன அவித்யை,கர்மா இவைகளாலே உண்டாகும் ஸம்ஸ்காரம் அதாவது தன்மை
4. ருசி—மேற்சொன்ன வாசனைக்கு ஏற்ப உண்டாகிற விருப்பம் /ஆசை
5. ப்ரக்ருதி ஸம்பந்தம் —சரீர சம்பந்தத்தாலே ,ஜீவன் மேற்சொன்ன ருசிக்கு ஏற்ப ,உலக விஷயங்களில் ஈடுபடல்

இந்த ஐந்தும் , சேதனனுக்கு ( ஜீவன் )சக்கரச் சூழற்சியைப் போலத் தொடர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான தடை, பகவானின்
கட்டளைகளை, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து மீறியபடி இருப்பது. அதனால், பகவானின் தண்டனைக்கு ஆளாதல்.

ப்ரதிபந்தக வர்க்கம் –அடிக்கடி செய்யப்பட்ட பாபமானது, அறிவை அழிக்கிறது. அறிவை இழந்த ஜீவன், மறுபடியும் பாபத்தையே செய்கிறான்.
இவற்றில் மோக்ஷத்துக்கு முக்யத் தடை யாதெனில்,
காலங்காலமாக பகவானின் கட்டளைகளைத் தொடர்ந்து மீறியபடி இருப்பதால், அவற்றுக்காக அவன் கொடுக்கும் தண்டனைகளே
ஆகும். இதன்காரணமாக, நிகழ்வது பலப்பல—-

1. சேதனனுக்கு,ப்ரக்ருதியுடன் ஏற்படும் தொடர்பு
2. இந்தப் ப்ரக்ருதி ஸத்வம் ,ரஜஸ்,தமஸ் என்கிற மூன்று குணங்களுடன் இருப்பதால், சேதனனின் ஜ்ஞானம் சுருங்குகிறது.
3. ஜ்ஞானம் சுருங்குவதால், சேதனன் ப்ரக்ருதி சம்பந்தமுடைய சரீரத்தோடும் இந்த்ரியங்களோடும் சேர்கிறான்.
4.இதனை ஸ்ரீ நம்மாழ்வார் ,திருவாய்மொழியில் (5–1–5 ) கூறுகிறார்.

கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வல் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே

பரமபதத்தில் இருப்பவர்க்கு ,கரிய மாணிக்கம் போல் மதிப்பும் அமுது =போக்யமாயும் உள்ள கண்ணனே –கண்ணனான பகவானே —
மனஸ்ஸால் நினைத்து, அவ்வப்போது செய்யும் கர்மாவுக்கு இணங்க, ப்ராக்ருத சரீரத்தில் இந்த ஜீவனைப் புகுவித்து,
ஜீவன் செய்த (நான் செய்த ) பல பாபங்கள் என்கிற கயிற்றால் இந்த சரீரத்தில் , திண்ணம் அழுந்தக்கட்டி = அமிழ்ந்து
கிடக்கும்படி இறுக்கமாகக் கட்டி , புண்ணை மறைய = உடம்பிலே இருக்கிற ரணங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் மூடி,
என்னைப் புறமே போரவைத்தாய் = உனக்கு அடிமையான என்னை இந்தப் ப்ரக்ருதியில் உழன்று நீடித்து இருக்கும்படி செய்துவிட்டாய்

5. திருவாய்மொழி ( 3–2–1 )

முந்நீர் ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவனே

மூன்று விதமான ஜலத்தை உடைய –அதாவது—மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் —பூமியைக் கடல் சூழ்ந்து இருக்குமாறு
படைத்த முகில் வண்ணனே ! ஜீவன்களாகிய எங்களிடம் கருணை கொண்ட காளமேகம் போன்றவனே !
ச்ருஷ்டியின் தொடக்கத்தில், நீ , என் நன்மைக்காக அருளிய ஆக்கையின் வழி உழல்வேன் =உடல் செல்லும்
வழியிலே நடந்து ஸம்ஸாரத்திலே அலைகிறேன் .
வெந்நாள் நோய் வீய= ப்ரளய அக்னி போல எரிக்கின்ற ச்ருஷ்டியின் பாதைகள் அழியும்படி ,
வினைகள் வேர் அறப் பாய்ந்து=என் , புண்ய பாபக் கர்மாக்களை வேரோடு அறுத்து அழித்து
எந்நாள் நான் உன்னை = என்றுதான் நல்ல வழியை அடைந்து என்றைய நாளில் ,அடியேன், உன் திருவடித்தாமரைகளில்
இனி வந்து கூடுவனே = இனி எப்போது வந்து சேர்வேனோ ?

6. ஜீவனை–சேதனனை—ஸாஸ்த்ரங்களின்படி நடக்க இயலாத விலங்கு போன்ற சரீரங்களை எடுக்கும்படி செய்துவிடுகிறது.

7.ஸாஸ்த்ரங்களின்படி நடக்கக் கூடிய மனிதப் பிறவி அளித்தாலும், வேதங்களுக்குத் தவறான விளக்கங்களைக்
கொடுக்கும் மதங்களில்,ஜீவனின் மனஸ்ஸை ஈடுபடுத்துகிறது

8. ஸ்ரீ உடையவர் ஸரணாகதி கத்யத்தில் கூறுகிறார்(கத்ய த்ரயம் )

மதீயானாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்–பகவத் ஸ்வரூப திரோதானகரீம்–விபரீத ஜ்ஞான ஜனனீம்
ஸ்வவிஷயாயாஸ்ச போக்த புத்தேர் ஜனனீம்–தேஹேந்த்ரியத்வேன–போக்யத்வேன–சூக்ஷ்மரூபேண சாவஸ்திதாம்
தைவீம்–குணமயீம் மாயாம் தாஸபூத சரணாகதோஸ்ம தவாஸ்மி தாஸ : இதி வக்தாரம மாம், தாரய |

இந்தப் ”ப்ரக்ருதி ” இருக்கிறதே , இது ,,அநாதிகாலமாக அடியேன் செய்த கர்மவினை என்கிற ஆற்று வெள்ளத்தில் அடித்துத்
தள்ளப்பட்டு பகவானின் ஸ்வரூபத்தை அறியாதபடி செய்கிறது.
நாராயணன் , பரமன்; அவனுக்கு நாம் நல்லடியோம் என்கிற நல்ல எண்ணங்கள் தோன்றாதபடி தடுத்து, அதற்கு எதிரான
எண்ணங்களை நினைக்கச் செய்கிறது.
ஒரு பொருளை, வேறு ஒரு பொருளாக நினைக்கச் செய்கிறது.
தனக்குத் தானே இன்பமானவன் என்கிற எண்ணத்தைத் தோன்றச் செய்கிறது. மாயாவித்யை செய்பவன்,காண்பவரை
மயக்க , தன் கையில் மயில்தோகை வைத்திருப்பதைப் போன்று ப்ரக்ருதியானது , சரீரத்தையும் , இந்த்ரியங்களையும்
தன்வசம் வைத்து ஜீவனை மயக்கி அவன் உண்மையை அறியாமல் , அவனுக்குத் தவறான அறிவைக்கொடுத்து,
புலன் இன்பங்களில் ஈடுபடச் செய்கிறது.
” நான் உமக்கு அடிமை ; உம்மையே தஞ்சமாகப் பற்றினேன்” என்று சரணாகதி மந்த்ரத்தைச் சொல்லும் அடியேனை ,
இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தத்திலிருந்து தாண்டும்படி செய்து அருளவேணும்

9. இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமானது , ஜீவனை, பகவானின் கட்டளைப்படி நடக்கவிடாமல், சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடவைக்கிறது
திருவாய்மொழி ( 6–9–9 ) பாசுரத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துச் சொல்கிறார்

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ ?
தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ ?

என் மனஸ் கலங்கும்படி ஐந்து இந்திரியங்களும் எனக்குத் துக்கத்தை ஏற்படுத்த ,அல்ப ஸுக விஷயங்களை எனக்குத் தோன்றத் செய்து,
உனக்குத் தாஸனான நான் , தாஸத்வம் செய்யாமல், ப்ரக்ருதியில் தங்கும்படி பாபம் செய்த என்னை , உன்னை அநுபவிக்க இயலாமல்,
இந்த உலகத்திலேயே மூழ்கடித்து அழிக்கப் பார்க்கிறாயா ?
உலகங்களை எல்லாம் ,திருவடிகளால் வசப்படுத்திய அந்தத் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய ,
நீயே ,என்னைக் கூப்பிட்டு ஆட்கொள்ளும் நாள் நெருங்காதோ ?

10. மஹாபாரதம் –உத்யோக பர்வம் —

பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து செய்கின்ற பாபம் அறிவை அழிக்கிறது;
அறிவை அவன் –ஜீவன்–இழப்பதால், மேலும் மேலும் பாவங்களையே செய்கிறான்.

11. ஸ்ரீமத் பகவத் கீதை –16ம் அத்யாயம்–19 வது ச்லோகம்

தாநஹம் த்விஷத :க்ரூரான் ஸம்ஸாஸேஷு நராதமாந் |
க்ஷிபாம் யஜஸ்ர மஸுபா ராஸுரீஷ்வேவ யோநிஷு ||

என்னை வெறுக்கிற க்ரூரர்களான மனுஷ்யப் பதர்களை , அசுரப் பிறவிகளில் அடிக்கடித் தள்ளுகிறேன்

இப்படி மேலும் மேலும் பாபம் செய்கிறவர்களை, கர்பவாஸம் , பிறப்பு, கிழத்தன்மை, மரணம், நரகம், என்னும் சுழற்சியில் ஆழ்த்தி விடுகிறான்.

12. க்ஷுத்ர ஸுகங்களில் –மிக அல்பமான ஸுகங்களில் இழிவோர், ராஜஸ —தாமஸ ஸாஸ்திரங்களை அப்யஸித்து
தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ,தங்களுக்குச் சமமான சங்கிலியால் கட்டப்பட்டவர்களும் ,ஆகிய க்ஷுத்ர தேவதைகளின் கால்களில் விழுகின்றனர்.
இதை .ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீ கண்ணன் சொல்கிறார்

யஜந்தே ஸாத்விகா தேவாந் யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா : |
ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா : ||

ஸாத்விகர்கள் , தேவர்களையும் , ராஜஸ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும் , தாமஸ குணம் உள்ளவர்கள் ப்ரேதங்களையும்
பூதங்களையும் பூஜிப்பார்கள் .
இந்த க்ஷுத்ர தேவதைகள் இவர்களுக்கு அருவருப்பைத் தரும் மிக்க தாழ்ந்த பலன்களைக் கொடுக்கின்றன. சேற்றில் உள்ள
புழுக்கள் , அந்தச் சேற்றில் மகிழ்வதைப்போல, இந்த அல்பப் பலன்களை , தங்களுக்குக் கிடைத்த உயர்ந்த பலன்களாகக் கருதி மகிழ்கின்றனர்

13. யோக ப்ரவருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல்
நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல் மூளப் பண்ணிச்
சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலை சாய்ப்பித்தும்—-என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார் . அதாவது—–
யோகம், துக்க நிவ்ருத்திக்குச் சாதகமாகச் சொல்லப்பட்டாலும், யோகத்தில் ஈடுபடும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்களையே உபாஸிக்கின்றனர் .
இந்த யோகிகளிலும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிந்து, ”நாமோபாஸன”த்தில் ஈடுபடுகின்றனர்.இது ,
சாந்தோக்யத்தில் ”பூம வித்யை யில் உள்ளது.
இதில், வேதங்களின் சப்தத்தையோ வாக்கு, மனஸ் , ஆகாசம் ,ஜலம் –இந்த அசேதநங்களை, ”ப்ரஹ்ம”மாக உபாஸிப்பது .
இதனால், தன் விருப்பப்படி எங்கும் சஞ்சரிப்பது, போன்ற பலன்களை அடைந்து, இவற்றையே பெரிய பலனாக நினைத்து,
உயர்நிலையை அடையாது தடைப்பட்டு விடுவர் .

பூம வித்யை–சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ளது–
நாரதர், ஸநத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார் .
அவரது மனஸ் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால் !
ஸநத்குமாரர் , நாரதரைப் பார்த்து, ”முதலில் உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லுங்கள் ” என்கிறார்.
நாரதர் =நான் எல்லா ஸப்தங்களையும் அறிந்திருக்கிறேன்
ஸநத்குமாரர் ==இதை ப்ரஹ்மமாக உபாஸித்து ஸப்தம் கேட்கும் இடங்களில், எல்லாம் சஞ்சரித்து ஆனந்தம் அடையலாமே
நாரதர் =இதற்கு மேலும் உண்டா
ஸநத்குமாரர் =ஸப்தம் , வாக்கு, மனஸ் , ஸங்கல்பம் , சித்தம் , த்யானம் , விஜ்ஞானம் , பலம்,அன்னம் , தண்ணீர் , தேஜஸ் , ஆஸயம் ,
நினைவு, ஆசை , என்று 14 ஐயும் ப்ரஹ்மமாக உபாஸிக்கலாம்
நாரதர் = இதற்கும் மேலானது, எது
ஸநத்குமாரர் =”ப்ராணனை ” மேலானதாக உபாஸிக்கலாம்.ப்ராணன் — ஜீவாத்மா–இதை உயர்ந்த புருஷார்த்தமாக உபாசிக்கலாம்.
நாரதர் =இதைவிட உயர்ந்தது உள்ளதா
ஸநத்குமாரர் = ப்ரஹ்மத்தை உபாஸிப்பது சிறந்தது.இதற்கு உபாஸனம்மனனம்; இதில் ச்ரத்தை;இதில் அசைக்கமுடியாத பற்றுதல்;அதற்குத்
தகுந்தவாறு செய்யப்படும் செய்கை;ஊக்கம்; இப்படி இருந்து, ப்ரஹ்மத்தை உபாஸிக்கலாம் . இதற்கு ”பூம வித்யை ”என்று பெயர்.
இதற்கு மேம்பட்டது இல்லை.ப்ரஹ்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா.பரமாத்மா.இப்படி உபாஸிப்பவன் , கர்மாக்களிலிருந்து விடுபடுகிறான்.
இதற்கு, மனஸ் சுத்தம் வேண்டும். மனஸ் சுத்தமாவதற்கு , சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடவேண்டும்.
ஸநத்குமாரரை , ”ஸ்கந்தர் ” என்றும் சொல்வதுண்டு.

ஆத்மாவின் விஷயத்தில் ஈடுபடுவோர்— ஆத்மாவானது ப்ரக்ருதியுடன் தொடர்பு உடையதாகவோ, அல்லது
இல்லாததாகவோ உபாசிப்பர். இப்படி நான்கு த்யானங்கள் — உபாஸனங்கள் சொல்லப்படுகின்றன
1.ப்ரக்ருதியுடன் கூடியதாக, தன்னுடைய ஆத்மாவையே ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸிப்பது
2.ப்ரக்ருதியுடன் கூடிய தன்னுடைய ஆத்மாவை , ப்ரஹ்மம் என்று ஏறிடாமல், ”அஹம் , அஹம் ” ( நான், நான் ) என்று உபாசித்தல்
3.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸித்தல்
4.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ”அஹம் ,அஹம் ” ( நான் , நான் , ) என்று உபாஸித்தல் .
சேதநாசேதநங்களைசரீரமாக உடைய ப்ரஹ்மத்தினுடைய அவயவமான ஜீவனை உபாஸிப்பதால் ,
இவை நான்கும் ப்ரதீக ( அவயவ ) உபாஸனங்கள் எனப்படுகிறது. இவை, பகவத் அனுபவத்தைத் தராது.
தாழ்ந்த ஆத்ம அனுபவத்தைக் கொடுத்து, மறுபடியும் ஸம்ஸாரத்தில் சிக்குவர் ஸ்ரீ உடையவரின் ஸ்ரீ பாஷ்யம் ( 4–3–5 )
இதுவும் மோக்ஷத்தைத் தராது.

இவை தவிர, த்ருஷ்டி உபாஸனம் போன்ற பல உபாஸனங்கள் உள்ளன.

இன்னும் சிலர், சேதநர்கள் —ப்ரஹ்மத்தையே உபாஸித்தாலும் ,தங்களது ஆத்மாவைத் தியானித்து,( ஆத்மோபாஸனம் ) அந்த ஆத்மாவில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம்
இருப்பதாகவும் , ஆத்மாவைச் சரீரமாகக் கொண்டுள்ளதாகவும் உபாஸித்தாலும் மறைமுகமாக,தங்களின் ஆத்ம த்யானத்தில் ஈடுபடுவதால், ”கைவல்ய ”
நிலையை அடைகிறார்கள். இதில் அஷ்டமாஸித்திகள் கிடைக்கும்; ”வசு”க்கள் போன்ற ஜன்மங்கள் கிடைக்கும்.அல்லது ப்ரஹ்மா முதலானவர்களின்
சரீரத்தில் புகுகின்ற ஆற்றல் கிடைக்கும். அரசாள்வதற்காக, ”ராஜ கிரீடத்”தைச் சூட்டிக்கொள்ளும் நிலையில் உள்ள அரசகுமாரன், தான் காராக்ருஹத்தில்
( சிறையில் ) இருந்தபோது, தன்னைக் கவனித்துக் கொண்ட வேலைக்காரப் பெண்கள் பக்கம் சாய்வது போலாகும் என்று இதற்கு உதாரணமிட்டுக் கூறுவர்.

இப்படியாக,தங்களுடைய வினைப்பயன் காரணமாக , சரீரத்தாலும், இந்த்ரியங்களாலும் உழன்று அலைந்து, அவற்றால் கிடைக்கும் போகமே நிலை என்பதாக
எண்ணி,புருஷார்த்தத்தை இழந்து, சேதநர்கள் —ஜீவாத்மாக்கள் உள்ளனர்.
மேற்சொன்னவாறு பகவானை அடையப் பற்பலத் தடைகள் உள்ளன. பகவானை அடையச் சரியான வழியில் செல்வதாகச் சொன்னாலும்,
அந்த வழியில்( கிணறு தாண்டுவார் ) முப்பத்திரண்டு படிகள் இருப்பதாக வைத்துக் கொண்டால்,
முதல் படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், முப்பத்திரெண்டாவது படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், எந்த வித்யாஸமும் இல்லை.
இப்படி, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்தக் காலமாக இருந்தாலும், இப்படித் தடைகள் நேரிடில், சேதநன்–ஜீவன் , ஸம்ஸாரத்தில்
உழன்றுகொண்டேதான் இருப்பான்.

கர்மயோகத்தைப் பற்றி.ஸ்ரீ கிருஷ்ணன் , கீதையில் சொல்லும்போது—
நேஹாபி க்ரமநாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே |
ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ||
அதாவது, கர்மயோகத்தை ஒரு சேதநன்—ஜீவாத்மா– முமுக்ஷு ( மோக்ஷத்தில் ஆசையுள்ளவன் ) ஆரம்பித்தால் , அது வீணாகப்போய்விடும் என்பது இல்லை.
ஜன்மங்களின் முடிவிலோ , யுகத்தின் முடிவிலோ , கல்பத்தின் முடிவிலோ , மன்வந்த்ரத்தின் முடிவிலோ —அதன் பயன்–எப்போது கிடைக்கும் என்று
சொல்லமுடியாது. எதிர் பலனும் வராது. ஆனால், இதன் சிறு பகுதிகூட, ஸம்ஸாரம் என்கிற பெரிய பயத்திலிருந்து காக்கும்.
அதாவது, கர்மயோக பலன் என்பது–கல்லால் கட்டப்பட்ட சுவர் போன்றது; என்றும் நிலையாக இருக்கும். ஆனால், அதன் பலன், எப்போது கிட்டும்
என்று உறுதியாகச் சொல்லமுடியாது.
பகவான் உகக்குமாறு பற்பலச் செயல்களைச் செய்த வசிஷ்டர் முதலானோர்கூட, பலகாலம் காத்திருக்கும்படி ஆயிற்று.
ஆனால், பகவானை விரோதித்த வ்ருத்ராஸுரன் , க்ஷத்ரபந்து முதலானோர் மிகவும் எளிதாக,தாமதமின்றி, மோக்ஷம் அடைந்தனர்.

வ்ருத்ராஸுரன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம் — ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது–
தேவர்களுக்கு, புரோஹிதர் இல்லாத சமயம். த்வஷ்டா என்கிற ரிஷியின் குமாரன் விச்வரூபன் தேவர்களுக்குப் புரோஹிதர் ஆனார்.
சுக்ராச்சார்யரால் ( அசுரர் குரு )அவருடைய வித்யையால் மறைத்துவைக்கப்பட்டிருந்த தேவர்களின் சொத்துக்களை , நாராயண கவசம்
என்கிற வைஷ்ணவ வித்யையை உபாஸித்து , அந்தச் சொத்துக்களை மீட்டு, விச்வரூபன் என்கிற தேவர்களின் புரோஹிதர் ,இந்த்ரனுக்கு
அளித்தார். நாராயண கவசத்தையும் இந்திரனுக்கு உபதேசித்தார் .
இந்த உபாஸனத்தால் , இந்த்ரன் , தன்னுடைய உலகங்களை அசுரர்களிடமிருந்து மீட்டான்.
இந்த விச்வரூபனுக்கு , மூன்று தலைகள். இவர், யாகங்கள் செய்யும்போது, ஹவிர்ப் பாகங்களை ,மறைமுகமாக , அசுரர்களுக்கு
அளித்தார். மேலும், இந்த்ரன் ஆகும் தவ வலிமையும் இவருக்கு இருந்தது.
அதனால்,இந்த்ரன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் இவர் தலைகளை வெட்டி, இவரைக் கொன்றுவிட்டான்.
விச்வரூபனின் தகப்பனாரான ”த்வஷ்டா ” என்கிற ரிஷி,
இந்த்ரனைக் கொல்லக்கூடிய சத்ரு வேண்டும் என்று ஒரு ஹோமம் வளர்த்து ,அதில், ”இந்த்ர சத்ரோ வர்தஸ்வ ” என்று ஆஜ்யத்தைச் ( நெய் )
சேர்த்தார்.மந்த்ரத்தில் ஸ்வரப்பிழை இருந்ததால்,இந்த்ரனால் கொல்லப்படும் ஒரு புருஷன் கோரமான ரூபத்துடன் தோன்றினான்.
இவன்தான் ”வ்ருத்ராஸுரன் ”.

இவன் செய்த கொடுமைகளைத் தாங்கமுடியாத ரிஷிகளும் தேவர்களும் பகவானிடம் ப்ரார்த்தித்தார்கள் .
பகவான், ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவைக் கொண்டு அதை ஆயுதமாகச் செய்து, அந்த ஆயுதத்தைப் ப்ரயோகித்தால்
அவன் மடிவான் என்று அருளினார்.
தேவர்கள், ரிஷியைப் ப்ரார்த்தித்தார்கள் . அவர், பகவானைத் த்யானித்து தன்னுடைய சரீரத்திலிருந்து வெளியே வந்தார்.பகவானின் கட்டளைப்படியே
ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவிடம் கொடுத்து , அவர் அதை ஆயுதமாகச் செய்துகொடுக்க அந்த ஆயுதத்தை ஏந்தி,
இந்த்ரன் வ்ருத்ராஸுரனோடு யுத்தம் செய்தான்.
த்ரேதா யுகத்தில், நர்மதா நதி தீரத்தில்,மிகக் கோரமான தேவாஸுர யுத்தம் நடந்தது.சம்பரன் போன்ற அசுரர்கள் பயந்து ஓடினர் .
வ்ருத்ரன் மட்டில், இந்த்ரனை எதிர்த்து சண்டையிட்டான்.அப்போது சொன்னான்—
” இந்த்ரா —-இந்த ஆயுதத்தால் என்னைத் தாக்கு . நான் பாபங்கள் அகன்று மோக்ஷம் அடைவேன். என் மனம் பகவான் நாராயணனின் சரணங்களைப்
பற்றி இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டே , பெரிய உருவம் எடுத்து, ஐராவதத்துடன் இந்த்ரனை விழுங்கிவிட்டான்.இந்த்ரன் , அஸுரனின் வயிற்றை
விச்வகர்மா செய்து கொடுத்த ஆயுதத்தால் கிழித்து, வெளியே வந்து வ்ருத்ரனின் தலையை அறுத்து அவனைக் கொன்றான். அஸுரனின்
ஆத்மா, பரமாத்மா ஜ்யோதிஸ்ஸை அடைந்து மோக்ஷம் பெற்றது.

க்ஷத்ர பந்து வ்ருத்தாந்தம் –குருபரம்பரா ஸாரத்தில் முன்னமேயே பார்த்தோம்.
ஆக மோக்ஷத்தை அடையும் விசேஷமான கர்மாக்களை யார் செய்தார்கள் என்றோ, மோக்ஷம் அடையத் தாமதமான கர்மாக்களை
யார் செய்தார்கள் என்றோ, கூற இயலாது.

அதிகாரத்திலிருந்து
———————————-

மோக்ஷத் தடையை விலக்க , சரணாகதியே பரிஹாரம்
—————————————————————————————–

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதிலங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷமாகிற ப்ரதான விரோதிக்குச் செய்யும்
பரிஹாரத்தை ,தஸ்ய ச வசீகரணம் தச்சரணாகதிரேவ —-என்று கடவல்லியில்வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர்
அருளிச் செய்தார்.

மோக்ஷத் தடைகள் பற்றி ரஹஸ்யத்ரயம் சொல்வது—
——————————————————————————

இவ்விரோதி வர்க்கத்தையெல்லாம் ரஹஸ்யத்ரயத்தில் விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும், நமஸ்ஸுக்களில்
மகாரங்களில் ஷஷ்டிகளாலும் ஸர்வபாப ஸப்தத்தாலும் அநுஸந்தித்து ஸம்ஸாரத்தில் அடிச்சூட்டாலே பேற்றுக்குறுப்பான
வழிகளிலே த்வரிக்க ப்ராப்தம்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

வ்யாக்யானம்
—————————-

மோக்ஷம் அடைவதற்குத் தடையாக இருப்பவனவற்றில் முதன்மையானது எதுவெனில், பகவானின் கட்டளைகளை மீறுவதே ( வேதங்களும் சாஸ்த்ரங்களும்
சொல்வதுதான் பகவானின் கட்டளை )இப்படி மீறிச் செயல்படுவதே, சங்கிலித் தொடர் போன்ற சொல்லொணாத் துன்பங்களுக்குக் காரணம்.
இவற்றை விலக்குவது எப்படி என்று ஸ்ரீ பாஷ்யகாரர் சொல்வது என்னவெனில்,
எம்பெருமானை வசப்படுத்துக —இது ஒன்றே நமக்கு அநுக்ரஹம் பண்ணும்படி பகவானை வசப்படுத்தும்
ஸாதனம் —-அவனிடம் செய்யும் சரணாகதியே
இதனை, கடோபநிஷத்தில் புலன் மனம் போன்றவற்றை அடக்கும் வரிசை கூறும் இடத்தை விளக்கும்போது விவரிக்கிறார்.
யோகத்தில் இழிபவன் எதை வசப்படுத்தவேண்டும் —வசீகரிக்க வேண்டும், எதை விட வேண்டும், எதை வசீகரிப்பதில் ச்ரமம் அதிகம் என்பதையெல்லாம்
இதில் காணலாம்.
புற இந்த்ரியங்களை , மனஸ்ஸிலும் ,மனஸ்ஸைப் புத்தியிலும் புத்தியை ஜீவாத்மாவிலும் , ஜீவாத்மாவைப் பரமாத்மாவிலும் அடக்கவேணும்.
இதுவே வசீகரிக்கும் முறை என்று கடோபநிஷத் கூறுகிறது.
பக்தி யோகத்தால் ,பகவானை வசீகரிக்கலாம் ; பக்தியோகம் செய்ய இந்த்ரியங்களை வெல்ல வேண்டும் ; இந்திரியங்களை வெல்ல பகவானை
வசீகரிக்க வேண்டும். இப்படி ஒன்றையொன்று பிணைத்திருப்பதால் சக்ரக தோஷம் என்பது ஏற்படுகிறது. இதை போக்க, எம்பெருமானைச்
சரணமடைவதே வழி ( ஸ்ரீபாஷ்யம் –ஆநுமாநிகாதிகரணம் )

இவ்விதம் , மோக்ஷத்தைத் தடை செய்யும் விரோதிகளை ”வ்யவச்சேத சக்தியால் ” அதாவது, மறைமுகமாகக் கூறப்படும் கருத்துக்கள்—
”நம” என்பதில் உள்ள மமகாரம் ( நான், எனது ) சரம ச்லோகத்தில் ”ஸர்வ பாபம் ”
இப்படி மறைமுகமாக அறிவதன்மூலமாக ஒரு சேதநன் ,”நாம் ஸம்ஸாரம் என்கிற சூடான மணலில் நடக்கிறோம்;–அடிச்சூடு —
மிகவும் வேகமாக நடந்து இதைக்கடந்து, மகிழ்ச்சிப் பாதையை அடையவேண்டும் என்பதை உணர்வான்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

பரமாத்மா இவன் ஒருவனே, தாமரைச் செல்வியின் நாதன் இவனே-இவனே எம்பெருமான்
எம்பெருமானை மிக விரும்பி, அவனது அருளை யாசித்து, அவனது திருவடிகளை சரணம் என்று பற்றியிருக்கும
ஜீவன் இதற்கு, எம்பெருமானை அடைய ஜீவன் கைக்கொள்ளும் உபாயம் எம்பெருமானை அடைந்த பின்னர் பெரும் பலன்
எம்பெருமானை அடைவதற்குத் தடையாக உள்ள அறியாமை போன்ற வினைப்பயன்கள்
இந்த ஐந்து விஷயங்களையும் எல்லாம் அறிந்த நம் ஆசார்யர்கள் ,ஐயம் அற நமக்கு உபதேசித்தனர்

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

நான் அடையவேண்டிய லக்ஷியம் –மிக உயர்ந்ததான ,எல்லாருக்கும் எஜமானான பரமாத்மா. அவனை அடைவதற்கு ஏற்றவன் நான்.
தகப்பனாரின் சொத்து, பிள்ளைக்கு வருவதைப்போல நித்ய சூரிகளுக்குக் கிடைத்த கைங்கர்யம் எனக்கும் கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், நான், அறியாமை, அஹங்காரம் இவற்றால் இதனை இழந்துள்ளேன்.
திவ்யதம்பதியரான –எம்பெருமானையும் பிராட்டியையும் சரணாகதி செய்யும்போது, இவை கிடைத்துவிடும்.
சரணாகதி என்பது, இந்த லக்ஷ்யத்தை அடையும் உபாயம் என்பதைத் தெளிந்தேன் .

——————

அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: