ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் —

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸமாச்ரயணம் ஆனபிறகு, ”க்ரந்த சதுஷ்டயம் ” என்கிற நான்கு க்ரந்தங்களை,
ஆசார்யனிடம் , ”காலக்ஷேப ” மாகக் கேட்கவேண்டும் என்று ஆசார்யர்கள் கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ரீ வ்யாஸரின் ”ப்ரஹ்ம ஸுத்ர”த்துக்குஸ்ரீ உடையவரின் வ்யாக்யானம் —உரை
2. ஸ்ரீ கீதா பாஷ்யம்—ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ராமானுஜர் அருளிய உரை
அதற்கு, ஸ்வாமி தேசிகன் ஸாதித்த ”தாத்பர்ய சந்த்ரிகை ”
3. பகவத் விஷயம் –ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு , ஸ்ரீ ராமானுஜர் கட்டளைப்படி, அவருடைய ஞான புத்ரர்
”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ” அருளிய வ்யாக்யானம் –ஆறாயிரப்படி –மணிப்ரவாள நடையில்
4. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —ஸ்வாமி தேசிகன், நாமெல்லோரும் நல்ல கதியை அடையவேண்டுமென்று விரும்பி ,
தனது அந்திம காலத்தில்,அருளிச் செய்த க்ரந்தம்

இந்த நான்கும், மாறுபட்ட கருத்து ஏதுமில்லாமல், ஒரே குரலில், நமது ஸம்ப்ரதாயக் கொள்கைகளைச் சொல்கின்றன.
இதை ”உபய வேதாந்த ஐக கண்ட்யம் ” என்று சொல்வார்கள்.

——-

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்
இது 4 பாகம்—-32 அதிகாரங்கள்
1. அர்த்தாநு சாஸன பாகம்
2.ஸ்த்திரீகரண பாகம்
3. பதவாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம்

1-அர்த்தாநு சாஸன பாகத்தில் –22 அதிகாரங்கள்
2-ஸ்த்திரீகரண பாகத்தில் —4 ”
3-பதவாக்ய யோஜனா பாகத்தில் — 3 ”
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகத்தில்–3 ”

——–

அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் –

ஆபகவத்த :ப்ரதிதாம் அநத்யாம் ஆசார்ய ஸந்ததிம் |
மனஸி மம யத் ப்ரஸாதாத் வஸதி ரஹஸ்ய த்ரய ஸார : அயம் ||

தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , மிகவும் ப்ராபல்யமானதும்,
பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான , இந்தக் குரு பரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –
அவர்களின் க்ருபையால், அடியேன் மனஸ்ஸில் மூன்று முக்ய ரஹஸ்யங்களின்
( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் ) ஆழ்ந்த உட் கருத்துக்கள் எப்போதுமே நிலைத்து உள்ளன

2. கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகாந் |
வந்தே ஹஸ்திகிரி ஈசஸ்ய வீதீ சோதக கிங்கராந் ||

கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய வேத சாஸ்த்ரங்களில் , ஹைதுகர்கள் —-
அதாவது, எதற்கும் காரணம் கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும்,
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் செய்பவர்களுமான
ஆசார்யர்களை நமஸ்கரிக்கிறேன்.
இவர் ஸ்ரீ அப்புள்ளார் — ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார்

3. ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க இங்கே நமக்கு ஓர் விதி வாய்க்கின்றதே

நம்மைக் காப்பாற்ற வேண்டியதாகத் தீர்மானித்து, நம்மைக் காக்கச் சங்கல்பித்து இருக்கிற ,தாமரைப் புஷ்பத்தில்
வசிக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனான எம்பெருமானின் ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளை உபாயமாகப் பற்றி,
நமக்கும் அத் திருவடிகளையே உபாயமாகக் காட்டிக் கொடுத்த க்ருபையை உடைய ஆசார்யர்கள் ,
மேலும் மேலும் பெருகுகின்ற அஜ்ஞான இருட்டுக்கள் அழிய வேணுமென்று ஆசைப்பட்டு–முயற்சித்து ,
உபதேசித்த மூன்று ரஹஸ்யங்களின் உள்ளார்ந்த அர்த்தத்தை எந்நாளும் –எப்போதும் நினைத்து
உகக்க இவ்வுலகில் நமக்கு ஒப்புவமை இல்லாத ஒரு விதி–பாக்யம் கிடைக்கிறதே

திருமகள் கேள்வனான எம்பெருமானின் திருவடிகள் மட்டுமே தங்களைக் காக்கும் என்றும் அவன் மட்டுமே தங்களுக்கு
அடைக்கலம் என்றும், அறிந்த நமது ஆசார்யர்கள் அவனது திருவடிகளையே தங்களுக்கு உபாயமாகப் பற்றி,
அந்தத் திருவடிகளே நமக்கும் உபாயம் என்று காட்டிக் கொடுத்தார்கள்.
இப்படிப்பட்ட ஆசார்யர்கள் நமது அறியாமை என்கிற இருளை ஒழிக்க மூன்று ரஹஸ்யங்களின் உட்பொருளை நமக்கு அளித்தார்கள்.
இதைத் தினமும் இடைவிடாது அனுபவித்து சந்தோஷப்படும் பாக்யம் இவ்வுலகில் நாம் எந்தவொரு ப்ரயத்னமும் செய்யாதிருக்க
நமக்கு, ஆசார்ய பரம்பரை மூலமாகக் கிடைத்துள்ளதே !

4. மணிவர இவ சௌரே :நித்ய ஹ்ருத்ய அபி ஜீவ :
கலுஷமதி : அவிந்தந் கிங்கரத்வ ஆதி ராஜ்யம் |
விதி பரிணதி பேதாத் வீக்ஷித :தேந காலே
குருபரிஷத் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம் ||

கௌஸ்துபமணி போன்ற ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்து பமணிக்குப் பிரியமானவன்.
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும் கைங்கர்யத்தை , ஒரு கால கட்டத்தில் கைவிடும்போது,
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள் மூலமாக, தனது ஸ்வரூபம் பற்றிய உண்மை அறிவு, –
அதாவது–ஜீவன் எம்பெருமானின் அடிமை, ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் ஏற்படுகிறது.
இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.

ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை
————————————————————–

ஸ்ரீயப்பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானீயனாய்க் கொண்டு
ஹ்ருதயங்கமனாய் குமாரனென்றும், புத்ரனென்றும், சிஷ்யனென்றும் ,ப்ரேஷ்யனென்றும் ,சேஷபூதனென்றும் , தாஸபூதனென்றும் ,
அவ்வோ ஸாஸ்த்ரங்களிலே ப்ரதிபன்னனாயிருக்கும் ஜீவாத்மா , இவன் தனக்கு வகுத்த சேஷியாய் ,அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ,
உயர்வற உயர்நலம் உடையவனாய் ,நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன்

வ்யாக்யானம் :—
ஸ்ரீ லக்ஷ்மி நாயகனான பகவானுக்கு , ஜீவாத்மா பகவானின் கௌஸ்துபமணி போன்று மிகவும் பிரியமானவன் என்றும் .
இவன் , பகவானுக்கு இளவரசன் எனவும் , புத்ரன் எனவும் சிஷ்யன் எனவும் வேலைக்காரன் எனவும் , அவனுக்காக மட்டுமே உள்ளவன் எனவும்,
அடிமை எனவும் பற்பல சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
இந்த ஜீவாத்மாவுக்கு , வகுத்த எஜமானனாய் ,அறியாமையே இல்லாத நித்ய ஸூரிகளுக்கு அதிபதியாய், தன்னையொத்தாரும் ,மிக்காரும்
என்று ஏதுமில்லாத கல்யாண குணசாலியாய் , தனது திருமார்பில் தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எந்த அளவுக்கு
விரும்புகிறானோ அந்த அளவுக்கு விரும்புகிறவனாய் இவ்வுலகவாசிகள், அவ்வுலகவாசிகள் அனைவருக்கும் எம்பெருமான் ,ஸர்வேச்வரனாக உள்ளான் .

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : ஆஸ்தே என்றும்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப என்றும் சொல்லுகிறபடியே
பெரிய பிராட்டியாரோடே கூடத் தெளி விசும்பிலே ,
யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா என்கிறபடியே
அயோத்யாதி சப்தவாச்யமான கலங்காப் பெரு நகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே ,
கௌஷீதகி ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
நிவாஸசய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே ,
ஸர்வ தேச –ஸர்வ கால –ஸர்வவஸ்தோசித் –ஸர்வ வித கைங்கர்யங்களையும் ,ஸர்வவித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே
தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாகும்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே
வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேணும் என்று ஸஹ்ருதனாயிருக்கிற
இருப்பு அடியாக நித்யானுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான நித்யஸூரிகளோடு ஒக்கத் தானும்
ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து அநாதி மாயையாலே ஸுப்தனாய் —
அநேக ஜன்ம ஸாஹஸ் ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :—- என்கிறபடியே
ப்ரக்ருதியாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே
தத்வஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க—-

வ்யாக்யானம் :—
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : லைங்க புராணம் இப்படிக் கூறுகிறது—-ஸமஸ்த உலகங்களுக்கும்
எஜமானன் ஆக இருக்கிற பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் விளங்குகிறான்.

கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் , உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக் கைங்கர்யம் செய்யும்படியான –
இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாக்ஷாத்கரித்தேன்
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் )
இன்பத்தை அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால் மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து,
அவை அற்பமாய் துயரமாகவே இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப் பற்றிய அறிவு சிறிதும்
அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும், அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

ஸ்ரீ குணரத்னகோசம் ( 23 ) ( ஸ்ரீ பராசர பட்டர் அருளியது–)
ஆஜ்ஞாநுக்ரஹ பீமகோமலபுரீபாலா பலம் பேஜுஷாம்
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா |
————————————————————————————————–
பாவை ரத்புத போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||

ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் , ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் விவரிக்கும் பரமபதத்தை
இந்த ச்லோகத்தில் , ஸ்ரீ பட்டர் கூறுகிறார்
ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு, அடைய வேண்டிய பயன் ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——–
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ——— ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் செழிப்பான நகரம்———–
அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது– திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர்
என்று வேத விற்பன்னர்கள் புகழ்கிறார்கள்

தலவகாரோபநிஷத் கூறுகிறது—

அயோத்யாதிசப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி
வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே
————————————————————————————–
வைகுண்டத்துக்கும் அப்பால், அயோத்யா என்றும், எவராலும் வெல்ல இயலாத அபராஜிதா என்றும் கூறப்படும் நகரத்தில்,
ஆயிரமாயிரம் தூண்களையுடைய திருமாமணி மண்டபத்தில்,

கௌஷீதகி
ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
——————————————————————————————–
கௌஷீதகி ப்ராம்மணம் போன்றவைகள் சொல்கின்றன—

பர்யங்கம்–உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே அமர்ந்துள்ளான்
முக்தனான ஜீவன், அளவற்ற பிரகாசத்தை உடைய ஸிம்ஹாஸனத்தை நெருங்குகிறான்.
அந்த ஸிம்ஹாஸனத்தில் , பரமாத்வாகிய பகவான் வீற்றிருக்கிறான்.

அந்தஸிம்ஹாஸனம் .

— சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
——————————————————————————————————-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் —-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

ஆதிசேஷன், எம்பெருமான் நடந்தால் குடையாகவும், அமர்ந்தால் ஸிம்ஹாஸனம் ஆகவும், இருக்கிறான் .

நிவாஸஸய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே
———————————————————————————-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் —-ஸ்தோத்ர ரத்னம் ( ச்லோகம் 40 )

நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி : |
———————————
சரீர பேதைஸ்தவ சேஷதாம் கதை :யதோசிதம் சேஷஇதீரிதே ஜநை : ||

ஆளவந்தார் ஸ்தோத்தரிக்கிறார் —
திருக்கோயில், திருப்பள்ளி ,சிங்காசனம் ,திருவடிநிலை, பீதாம்பராதி,தலையணை முதலானவை,
மழையையும் வெய்யிலையும் விலக்கவான குடை,பாதபீடம் முதலாக மாற்றுமான தகுமாறு உனக்கு பணிவிடைக்கான
நிலையைப் பெற்றவனான தனது உருவங்களாலே அந்தந்தக் கார்யங்களுக்குத் தகுந்தாற்போல
எல்லா ஜனங்களாலும் சேஷனென்றே அழைக்கப்படுகிற –ஆதிசேஷன் .
இவ்வாறு, எண்ணற்ற உருவங்களெடுத்து , தனக்கென்று எந்த எண்ணமுமின்றி, பகவானுக்கு மட்டுமே அடிமையாகி,
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்துவருவதால், சேஷனாயிருப்பவனின் செயல்கள் எல்லாம் இருப்பதாலே,
சேஷன் என்றே பேர் பெற்று, அறிந்தவர், அறியாதார் எல்லோராலும் சேஷன் என்றே பேசப்படுகிறான்

இவ்விதம் , தான் பெறுகின்ற நிலையான கைங்கர்யத்தைப் போன்று, அனைத்து ஆத்மாக்களும் செய்து
தன்னை அனுபவிக்க வேண்டும் என்கிற திருவுள்ளம் கொண்டவனாக எம்பெருமான் உள்ளான்
—இப்படியாக, ஜீவாத்மா , தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்றவாறு , எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்வதில்
எல்லையற்ற பரமானந்தம் உள்ள நித்ய ஸூரிகளைப் போலவே ,கைங்கர்யம் செய்யும் தகுதி உள்ளவனே—
ஆனால், இந்த ஜீவாத்மா, அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் எண்ணிலாப் பிறப்புகள் அடைந்து, தட்டித் தடுமாறி, ஸம்ஸார அழுக்கடைந்து,
சுருங்கிய ஞானத்தை உடையவனாய் , ஒன்றும் விளையா நிலம் போலே ,கிடைக்கவேண்டியது கிடைக்காமல்,
இளைப்பாறும் இடமில்லாதவனாகி,விபரீத வாஸனாருசிகளை அடைந்து, ஸ்வரூபப் பிரகாசத்தையும் இழந்து,உண்மையான ஞானமில்லாமல் இருக்கிறான்
இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் இவ்வாறு சொல்கிறது—
அநேக ஜன்ம ஸாஹஸ் ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ
ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :

அநேகமாயிரமாயிரம் ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை அடைந்து, தான் யாரென்றே அறியாதபடி,
மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற புழுதியில் அகப்பட்டு, ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான் .

இனி, ஸ்வாமி தேசிகன்,” ராஜகுமார த்ருஷ்டாந்தம்” சொல்கிறார்—
வழி தவறிய ராஜகுமாரன் —உதாரணம்

ஒரு ராஜா அந்தப்புரத்துடனே வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே ஸக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழிதப்பின ராஜகுமாரன் எடுத்தார்கையிற் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர , அவன் தனக்கில்லாத சபரத்வாதிஜாதிகளை ஏறிட்டுக்கொண்டு ,

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |–என்கிறபடியே
வேடுவச் சேரியிலே கிளிபோலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே
அவர்கள் ஊணும் வ்ருத்தியுமே தனக்கு ஊணும் வ்ருத்தியுமாய் ,தன் பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும்
புதியது உண்ணாதே ராஜபோக விருத்தங்களான ஜூகுப்ஸித விஷயங்களிலே தனக்குப் பேறுமிழவும் ஹர்ஷ சோகங்களுமாய் ,
ராஜகுமாரனென்று தன்னடி அறிவார் சில ரிஷிப்ராயர் உண்டானாலும் அவர்களுக்குக் கிட்டவொண்ணாத அவஸ்தையையுடையவனாய்
இப்படி ப்ராந்திஸித்த சபரத்வாத்யவஸ்தையோடே யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும் ஒரு யோக்யதை பெற
விரகில்லாதபடியாய்த் தட்டுப்பட்டு நிற்குமாப்போலே , இவனும் தேஹாத்மாபிமானாதிகளாலே தன்னுருக்கொடுத்து
வேற்றுருக்கொண்டு நிற்க —

வ்யாக்யானம் : —

ஒரு அரசன் , தனது அந்தப்புரத்திலுள்ள எல்லோருடனும் வேட்டையாடக் காட்டுக்குச் சென்று, அந்த வேட்டையிலேயே ஆழ்ந்திருக்க ,
அப்போது அந்த அரசனின், சிறுபிள்ளை— அறியாச் சிறுபிள்ளை– பேச்சு வராத சிறுபிள்ளை–
தன்னுடன் ஒருவரும் இல்லாத நிலையில், காட்டில் வழியைத் தவறவிட்டு , அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க ,
அப்போது அந்தக் காட்டில் இருந்த வேடர்கள் இச் சிறுபிள்ளையைப் பார்த்து, இக்குழந்தையை அழைத்துச் சென்று
தங்கள் இருப்பிடத்தில் வைத்து வளர்த்தார்கள்.
இச் சிறுபிள்ளையும், தான் யார் என்று அறியாத நிலையில், தனக்குப் பொருந்தாத, வேடுவர்கள் வாழ்க்கை வாழலானான் .
விஷ்ணு புராணம் கூறுகிறது—-

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |

விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள் பற்றிய சம்பவத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-
எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசு மாம்ஸம் தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின் தன்மையையும் கேட்டு,
இவற்றிலுள்ள வேறுபாட்டை நீ தெரிந்துகொண்டு இருக்கலாம்.
இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —- நல்ல பண்புகளும், தீய பண்புகளும் , சேர்க்கையால் ஏற்படுகின்றன
என்று சொல்லிற்று

வேட்டுவர்களால் வளர்க்கப்பட்ட கிளியைப் போன்றே , இந்த ராஜகுமாரனும் வேடர்கள் மொழியே தன் மொழியாகவும்,
அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படியே பேசியும் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப்போல
அவர்கள் உண்ணும் உணவையே உண்டும் வாழலானான்
அரசனுக்கு உரிய ஆசாரங்கள், ஸம்ப்ரதாயம், போகங்கள் –இவற்றை அறவே அறியாமல், ஒரு ராஜகுமாரன் எப்படி நடந்துகொள்வானோ
அதற்கு நேர் எதிரிடையாக , வாழ்ந்தான். அந்த வனத்தில் வசித்த சில ரிஷிகளுக்கு, இவன் ஒரு ராஜகுமாரன் என்று தெரிந்து, இவனைத்
திருத்த முயற்சி செய்தபோதும், இவன் அவர்கள் பக்கலிலேகூடப் போகாமலிருந்தான். இன்னொரு ஜன்மம் எடுக்கும்போதாவது,
உன்னதமான பிறவி எடுக்கவேணும் என்கிற எண்ணமோ , முயற்சியோ இல்லாதவனாக இருந்தான்.

தனது நிஜ ஸ்வபாவத்தை இழந்து, வேறு ஸ்வபாவம் எடுத்த ராஜகுமாரனைப் போன்றே —ஜீவாத்மா—தானும் ,தான் உள்ள உடலும்
ஒன்றே என்கிற மயக்கத்தில், தன்னுடைய நிஜ ஸ்வபாவத்தை இழக்கிறான்.

அதிகாரத்திலிருந்து—–

அந்த ராஜகுமாரனுடைய லக்ஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் . ஒரு விரகாலே இவனை மீட்கப்பெற்று
அபிமானிக்க இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தராபிமானத்தை வழிவிலக்கி த்ருஷ்டாத்ருஷ்ட ஸம்ஸ்காராதிகளாலே உத்தரோத்தர போக
ததுபாயங்களுக்கு யோக்யநாம்படி விரகு செய்து , இவனுக்கு ஸ்வஜாத்யனுரூபமான குண வ்ருத்தங்களைத் தங்கள் உபதேச
அநுஷ்டானங்களாலே குடிபுகரவிட்டு இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போக்ய க்ஷுத்ர விஷயங்களை
அருவருப்பித்து ராஜாதி போக்யங்களான அதிசயித புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்கவல்ல அளவுடைமையை உண்டாக்கி நிறுத்துமாப்போலே
இவ்வாத்மாவுக்குச் சில தார்மிகர் பித்ராதி முகேந நொடித்து,

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :–என்கிறபடியே உரு வியந்தவிந்நிலைமையை உணர்த்தி ,
அதுக்கு அநுரூபமான புருஷார்த்த ததுபாயங்களிலே அந்வயிக்கிலாம்படி விரகு செய்து உடம்பு தின்றார்படியன்றிக்கே
ஒரு வெளிச்சிறப்புடையார்க்கு வரும் குண வ்ருத்தங்களை உண்டாக்கி ஹேயோபாதேய விபாகக்ஷமனுமாக்கி நிறுத்தினவளவிலே ,

இவனுடைய அடியுடமையையும் சில தார்மிகரடியாக வந்த யோக்யதையும் அளவுடைமையையும் நேராகக் கண்டு பரமகாருணிகனான பரம
சேஷியாலே ப்ரேரிகராய்த் தாங்களும் காருணிகோத்தமராயிருப்பார் சில தேசிகர் .

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :–என்கிறபடியே நேர்பட்டு ——

வ்யாக்யானம் :—
இச்சிறுபிள்ளையின் தேஜஸ் போன்ற முக விலக்ஷணங்களாலே இவன் ராஜகுமாரன் என்று உணர்ந்த சில தார்மிகர்—மஹான்கள்—
இவனை ஏதேனும் ஓர் உபாயத்தால், மீட்க எண்ணி முதலில் அவன் ஒரு வேடன் என்கிற மதி மயக்கத்தைப் போக்கடித்தனர் .
த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை
அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை அறியும்படி செய்தனர்.
இதன்மூலமாக ராஜகுமாரன் ஒருவன் ,அனுபவிக்கத்தக்க விஷயங்களை அனுபவிக்கும் தகுதியை இந்த ராஜகுமாரன் அடைந்தான்.
அரசகுமாரனுக்கு ஏற்றதான குணங்கள், உருவம் முதலியவற்றை உபதேசம் மூலமாகவும், எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும் அறியச் செய்தார்கள்.
இதனால், இவன் இதுவரை கொண்டிருந்த தாழ்வான வாழ்க்கையை வெறுக்கும்படி செய்தனர் .
புருஷார்த்தங்களை ஆராய்ந்து தெளியவும் தேவையான அறிவையும் அளித்தனர்

இந்த ஜீவாத்மாவுக்கு , தந்தை முதலான பித்ருக்கள் மூலமாக, சில தார்மிகர்களின்
தொடர்பு ஏற்படுகிறது அந்த நல்லவர்கள்—மஹான்கள், இந்த ஜீவாத்மாவுக்கு
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உள்ள நல்லதைச் சொல்கிறார்கள்

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும் சரீர அமைப்பில்
ஏற்பட்ட வேறுபாடானது, அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—
இப்படிப் பலப் ப்ரமாணங்களைச் சொல்லி, ஜீவன் உடலைக்காட்டிலும் வேறுபட்டவன்; ஜீவனின் ஸ்வரூபத்துக்கு ஏற்றதாக உள்ள புருஷார்த்தங்கள் எவை ,
அவற்றை அடையும் உபாயம், இவற்றையெல்லாம் உபதேசிக்கின்றனர்
(ஆத்மா, சரீரத்தைக் காட்டிலும் வேறு என்கிற ஞானம் இல்லாதார் –உடம்பு தின்றார் )
இப்படி உயர்ந்த குணங்களை உண்டாக்கி, எவற்றை ஏற்கவேண்டும் எவற்றை விலக்க வேண்டும் என்கிற விவேகம் வளரும்படி செய்கின்றனர்.

இப்படி இந்த ராஜகுமாரன், அவனுடைய ஸ்வரூபத்துக்கு மாறியிருப்பதையும், சில தார்மிகர்கள் செய்த நல்லுபதேசங்களையும்
அவற்றால் அவனது அறிவு பிரகாசிப்பதையும், பகவானின் கருணையால் சில ஆசார்யர்கள் காண்கிறார்கள்
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் தொடர்பு எப்படி ஏற்படுமென்றால்

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :

ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும் –என்கிறபடி அணுகி,
ஆசார்ய உபதேசம் மூலமாக, முமுக்ஷு தெரிந்துகொள்ள வேண்டியவன

அதிகாரத்திலிருந்து——
அந்த ராஜகுமாரனுக்குச் சில ராஜாந்தரங்கர் மேற்பட்டு, பிறவியை உணர்த்தி, மேலுள்ள ப்ரிய தமங்களையும் ஹிததமங்களையும் தெளிவித்து
ஒரு விரகாலே அந்த ராஜாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷாகாங்க்க்ஷையை உத்தம்பிக்குமாப்போலே ,இவனுக்கும்

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–என்றும்,
தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :-என்றும்,–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ்சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய ஸ்ரீய:பதி நாராயணனுடனே
குடல் துவக்கத்தைத் தெளிவித்து இவனுக்கு தத்ப்ராப்த்யுபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே
தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து
அதடியாக அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கிச் சுரக்கும் தேநுவைப்போல
இத்தேசிகர் இவ்வாத்மாவுக்கு அஜ்ஞான ஸம்சய விபர்யயங்கள் தீரவேண்டுமென்று மிகுந்து குறைவரச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ–இத்யாதிகளிற்படியே
ஈச்வரனுடையவும் ஈசிதவ்யங்களுடையவும் ஸ்வரூப, ஸ்வபாவ ஸம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்யோபாதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதிப்ரகாரங்களும் உக்தாநுக்தங்களான மோக்ஷ விரோதிகளுமாகிற
இவ்வர்த்தங்கள் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யங்கள்
இவ்வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய ஸப்தராசியில் ஸாரதமமான ரஹஸ்யத்திலே ப்ரதிதந்த்ர ஸாரோத்தாரேண ஸங்க்ரஹிக்கப்படுகின்றன

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

வ்யாக்யானம் —–
அவர்கள், இந்த ராஜகுமாரனுக்கு அவனுடைய அரச பிறப்பைக் கூறி, அதற்கு ஏற்றதான நன்மைகள் எவை என்றும், அவற்றை அடைவதற்கான
உபாயங்கள்–வழிகள் –எவை என்றும், உணர்த்தி, அவனும் , ராஜாவும் ஒன்றுசேர்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கின்றனர்.
இதைப்போலவே, ஜீவனுக்கும் ஆச்சார்யர்கள் மூலமாக நடைபெறுகிறது–

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக
உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.பகவானையே அண்டி இருக்கிறான். அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.

தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :

மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் —
எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன்

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே –நாச்சியார் திருமொழியில் ( 11–3 )

”பொங்குகிற ஸமுத்ரத்தால் சூழப்பட்ட பூமியையும், வைகுந்தமென்னும் உலகத்தையும் அவைகளில் ஒன்றும்
விட்டுப்போகாமல் செங்கோல் செலுத்தி ஆளுகின்ற எம்பெருமானான ,லக்ஷ்மிகாந்தனுக்கும், ஜீவனுக்கும் உள்ள—
பிறப்பால் வந்த—-உறவை ஆசார்யர்கள் உபதேசிக்கின்றனர் .
அந்த ஜீவன், பகவானை அடைவதற்கு முயற்சிக்கின்றனர் .இப்படி அந்த ஜீவன் பெறுகின்ற பேறு மூலமாக , தங்களுக்கே
இந்த நித்ய விபூதியும், இவ்வுலகம் முழுவதும் கிடைத்ததாக எண்ணுவர்.
அன்று பிறந்த தன்னுடைய கன்றுக்கு ,பசுவானது , தானே பாலைச் சுரப்பதுபோல, ஜீவனிடம் அன்பு செலுத்துகின்றனர்.
அவனுடைய அஜ்ஞானம், தவறான ஞானம் , சாஸ்த்ர சந்தேகம் இவற்றையெல்லாம்,
தங்களுடைய கச்சிதமான உபதேசங்கள் மூலமாக விலக்குகின்றனர்.

ஸ்வாமி தேசிகன் , ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து ச்லோகத்தை இங்கு சொல்கிறார் —
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள் ( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள், மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,
ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம் உள்ளபடி விளக்கி ,எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்
இப்படி ஸ்ரீ பராசரர் கூறுவதை போன்று,
ஆசார்யர்கள் ஜீவனுக்கு, சேதன–அசேதனங்களை நியமிப்பவரான பகவானின் குணங்களை உபதேசிக்கின்றனர்.
சேதன–அசேதனங்களின் தனமைகள், அவற்றின் இடையே உள்ள உறவு இவற்றையும் சொல்கின்றனர்.
இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகம்—துக்கம் இவற்றையும் விளக்கி, இந்தப் பிறவியிலிருந்து விடுபடும் உபாயங்கள், அடையப்படும்
மோக்ஷம், ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் வழி , அதற்கு ஏற்படும் தடைகள்,
இப்படி ”அர்த்த பஞ்சகத்தை”— விளக்குகின்றனர்.
இவை யாவுமே, மோக்ஷத்தில் ஆசை உடைய ” முமுக்ஷு ”தெரிந்துகொள்ள வேண்டியவை
இவை யாவும் ”ரஹஸ்யத்ரயத்தில் ”சொல்லப்படுகின்றன.

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

ஜீவாத்மாக்களாகிய நாம், பகவானின் திருமார்பில் இருப்பதும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வெளியே வந்ததுமான
”கௌஸ்துப மணி ”போன்று , பகவானின் திருமார்பில் இருப்பதற்குத் தகுதி உடையவர்களே —
தவிரவும், அவனது தாமரை போன்ற திருவடிகளை , நமது தலையில் கிரீடம் போன்று அணிந்துகொள்ளும் தகுதியும் உள்ளவர்களே
ஆனாலும், தாயின் கர்பத்தில் , நமது கர்மங்கள் என்கிற வெள்ளத்தில் விழுகிறோம். அந்தக் கர்மானுபவ வெள்ளத்தில்
அடித்துச் செல்லாமல் , நம்மைக் காப்பாற்றுவதற்காகவே ”அர்த்த பஞ்சக ” ஞானம் பெற்ற ஆசார்யர்கள் , அவதரித்தனர்

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை போன்ற வினைகளில் சிக்குண்டு ,
எத்தனையோ வருஷங்களாக, அல்லல்படுகிறான். பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது,
பகவானின் கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே கிடைக்கிறது –
இப்படிப் பெறும் கருணையால், இவன் பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –
இந்த ஐச்வர்யம் நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது

———–

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: