தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளி தாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே–3-4-1-
பதவுரை
தழைகளும் தொங்கலும்–பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள்
எங்கும் ததும்பி–நாற் புறங்களிலும் நிறைந்து
தண்ணுமை–ம்ருதங்கங்களும்
எக்கம் மத்தளி–ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும்
தாழ் பீலி–பெரிய விசிறிகளும்
குழல்களும்–இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்
கீதமும்–இவற்றின் பாட்டுக்களும்
எங்கும் ஆகி–எங்கும் நிறைய
(இந்த ஸந்நிவேசத்துடனே)
கோவிந்தன்–கண்ணபிரான்
வருகின்ற–(கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற
கூட்டம்–பெரிய திருவோலக்கத்தை
கண்டு–பார்த்து
மங்கைமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி–‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து
சாலகம் வாசல் பற்றி–ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி
நுழைவனர் நிற்பனர் ஆகி–(வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும்,
(சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி
எங்கும்–கண்ணபிரான் நடந்த வழி முழுவதும்
உள்ளம் விட்டு–தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு
ஊண்–ஆஹாரத்தை
மறந்தொழிந்தனர்–மறந்து விட்டார்கள்.
விளக்க உரை
“கலாபந் தழையே தொங்கலென்றிவை, கலாபப் பீலியிற் கட்டிய கவிகை” என்ற திவாகா நிகண்டின்படி,
தழையென்றாலும் தொங்கலென்றாலும் மயிற்றோகையாற் சமைத்த குடைக்கே பெயராயினும்
இங்கு அவ் விரண்டு சொற்களையுஞ் சேரச் சொன்னது – அவாந்தர பேதத்தைக் கருதி யென்க;
“தட்டுந் தாம்பாளமுமாக வந்தான்” என்றார் போல.
தண்ணுமை – உடுக்கை, உறுமிமேளம், ஓர்கட்பறை, பேரிகை, மத்தளம்.
எக்க மத்தளி – ‘எக்கம்’ என்கிறவிது ‘ஏகம்’ என்ற வடசொல் விகாரமாய் – ஒரு தந்திக் கம்பியை யுடையதொரு
வாத்ய விசேஷத்தைச் சொல்லுமென்க. அன்றிக்கே ‘எக்கம்’ என்று தனியே ஒரு வாத்ய விசேஷமுமாம்.
தாழ்பீலி = தாழ்தல் – நீட்சி; பீலீ – விசிறிக்கும் திருச் சின்னத்துக்கும் பெயர்;
இங்குத் திருச் சின்னத்தையே சொல்லுகின்ற தென்றலும் ஏற்கும்.
கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு – கோவிந்தன் கூட்டமாய் வருகின்றமையைக் கண்டு என்றவாறு.
சாலகம் – ஜாàசும் ஊண் – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
கண்ணபிரான் கன்று மேய்த்து விட்டுத் தன்னோடொத்த நிறத்தனரான ஆயிரந்தோழன்மாருடன் கூடிப் பற்பல
பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலிய ஸம்ப்ரமத்துடன் வருகின்றவாற்றைக் கண்ட யுவதிகள்
‘ இவை மேகங்கள் திரண்டுருண்டு வருகின்றனவோ’ என்று தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு
இவனை இடைவிடாது காண்கைக்காகத் தந்தம் மாளிகைகளில் சுவாக் ஷத்வாரத்தளவிலே நின்று காணலுற்று,
கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக் காணப் பரவஸை களாய், நின்ற விடத்தில் நிற்கமாட்டாமல் சிலர்
அபிநிவேசாதிசயத்தால் கண் கலங்கிச் சன்னல் வழியாக வெளிப்புறப்பட முயல்வாரும்,
சிலர் மாமிமார் முதலியோருக்கு அஞ்சி அவ்விடத்திலேயே திகைத்து நிற்பாருமாய்
இப்படி தந்தம் நெஞ்சுகளை யிழந்து ஆஹார விருப்பத்தையும் மறக்கப் பெற்றார்கள் என்பதாம்.
————–
வல்லி நுண் இதழன்ன ஆடை கொண்டு வசை யறத் திரு வரை விரித் துடுத்து
பல்லி நுண் பற்றாக உடை வாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர் நின்று அங்கினவளை இழவேன்மினே-3-4-2-
பதவுரை
பிள்ளை–நந்த கோபர் மகனான கண்ணன்,
வல்லி–கற்பகக் கொடியினது
நுண்–நுட்பமான
இதழ் அன்ன–இதழ் போன்று ஸுகுமாரமான
ஆடை கொண்டு–வஸ்த்ரத்தைக் கொணர்ந்து
திரு அரை (தனது) திருவரையிலே
வசை அற–ஒழுங்காக
விரித்து உடுத்து–விரித்துச் சாத்திக் கொண்டு
(அதன்மேல்)
பணை கச்சு–பெரிய கச்சுப் பட்டையை
உந்தி–கட்டிக் கொண்டு
(அதன் மேல்)
உடை வாள்–கத்தியை
பல்லி நுண் பற்று ஆக சாத்தி–பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு
நல்–அழகியதும்
நறு–பரிமளமுள்ளதுமான
முல்லை மலர்–முல்லைப் பூவையும்
வேங்கை மலர்–வேங்கைப் பூவையும் (தொடுத்து)
அணிந்து–(மாலையாகச்) சாத்திக் கொண்டு
பல் ஆயர்–பல இடைப் பிள்ளைகளுடைய
குழாம் நடுவே–கூட்டத்தின் நடுவில்
பல தழை நடுவே–பல மயில் தோகைக் குடை நிழலிலே
எல்லி அம் போது ஆக–ஸாயம் ஸந்த்யா காலத்திலே
வரும்-வருவன்;
அங்கு–அவன் வரும் வழியில்
எதிர் நின்று–எதிராக நின்று
வளை இனம்–கை வளைகளை
இழவேல்மின்–இழவாதே கொள்ளுங்கள்.
விளக்க உரை
தோழிமார் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளும் பாசுரம் இது.
தோழிகாள்! இவ்வூரில் ஒரு பிள்ளை உளன் என்பது உங்களுக்குத் தெரியுமே, அவன் நல்ல நல்ல ஆடையைச் சாத்திக் கொண்டு
கச்சுங் கத்தியுமாகத் தனது தோழன்மாருடன் மஹா ஸம்ப்ரமமாக மாலைப் பொழுதாகிய இப்பொழுதிலே இச்சேரி யேற வரப்புகா நின்றான்;
அவன் வருமழகைக் காண விரும்பி வழியில் அவனை யெதிர் கொண்டு நின்றவர்களில் ஒருத்தரும் வளையிழவாதாரில்லை;
நீங்களாகிலும் ஜாகரூகதையுடனிருந்து உங்கள் கை வளைகளை நோக்கிக் கொள்ளுங்கள் என்று ஒருத்தி
தன் தோழிகளுக்கு எச்சரிக்கை கூறுகின்றனனென்க. வளையிழக்கைக்கு அடியென்? என்னில்;
ஸாக்ஷாந் மந்மதமந்மதனான அவனைக் கண்ணாற்கண்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு விசேஷமான வியாமோஹம் பிறக்கும்;
அதற்கு ஏற்றபடி அவனோடு ரமிக்கை அவர்களுக்கு அரிது; அதனால் க்ஷணே க்ஷணே உடல் இளைக்கும்;
உடனே கை வளைகள் கழன்று விழும் என்றறிக. இனம் – கூட்டம்; முழங்கை வரைக்கும் வளைகளை அடுக்கிக் கொண்டிருப்பர்களிறே.
வசை அற – குற்றம் இல்லாதபடி என்பது பொருள்; ஆடை யுடுக்கையில் குற்றமற்றிருக்கையாவது – ஒழுங்கு படச் சாத்துகையேயாட;
பல்லி நுண் பற்றாக – இவ்வுடை வாள் கச்சுப் பட்டையுடன் கூடவே பிறந்ததத்தனை யொழிய வைத்துக் கட்டினதல்ல
என்று தோற்றும்படிக்கு உவமை யென்க.
உடை வாளாவது – அதிகாரி புருஷர்கள் எப்போதும் இடுப்பிலேயே அணிந்து கொண்டிருக்கும் கத்தி.
————–
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3-
பதவுரை
தோழன்மார்–தன்னேராயிரம் பிள்ளைகள்,
சுரிகையும்–உடை வாளையும்
தெறி வில்லும்–சுண்டு வில்லையும்
செண்டு கோலும்–பூஞ்செண்டு கோலையும்
மேல் ஆடையும்–உத்தராயத்தையும்
(கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக)
கொண்டு–கையிற்கொண்டு
ஓட–பின்னே ஸேவித்து வர,
ஒருவன் தன்–ஒரு உயிர்த் தோழனுடைய
தோளை–தோளை
ஒரு கையால்–ஒரு திருக் கையினால்
ஊன்றி–அவலம்பித்துக் கொண்டு
(ஒரு கையால்)-மற்றொரு திருக் கையினால்
ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்–(கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை
(ஊன்றி)–ஏந்திக் கொண்டு
வருகையில்–மீண்டு வருமளவில்
வாடிய–வாட்டத்தை அடைந்துள்ள
பிள்ளை கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய
மஞ்சளும் மேனியும்–பற்று மஞ்சள் மயமான திருமேனியையும்
வடிவும்–அவயவ ஸமுதாய சோபையையும்
அருகே நின்றான் என் பெண்–(அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள்
கண்டாள்–(முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்;
(பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்)
நோக்கி கண்டாள்–கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்;
அது கண்டு–அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு
இ ஊர்–இச்சேரியிலுள்ளவர்கள்
ஒன்று புணர்க்கின்றது–(அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்;
ஏ–இதற்கு என் செய்வது!
விளக்க உரை
கரிகை – வடசொல் திரிபு. தெறி வில் – கல் முதலியவற்றைச் செலுத்தும் சிறு வில்.
செண்டு கோல் – நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள விலாஸ தண்டம். நிரை என்றாலும் இனம் என்றாலும் கூட்டமே பொருள்;
இதனால் எண்ணிறந்த பசுக்களை மேய்த்தவாறு தோற்றும். தூரத்திற்சென்ற பசுக்கள் அணுகுவதற்கும் மேய்கைக்கும்
பக்கங்களில் விலகாமைக்கும் மற்றுஞ் சில காரியங்களுக்கும் ஸூசகமாகக் கண்ணபிரான் வகை வகையாகச் சங்கு ஊதுவன் என்க.
இப் பாட்டின் கருத்து;- ஒருபெண் பிள்ளையின் தாய் சொல்லும் பாசுரம் இது.
கண்ண பிரான் காட்டில் கன்றுகளை மேய்த்து விட்டு, லீலோபகரணங்களுங் கையுமான தனது தோழன்மாருடன் மீண்டு
வரும் போது வழியில் நின்று கொண்டிருந்த என் மகள் முதலில் அவனைப் பொதுவாகப் பார்த்தாள்;
பிறகு ‘இவர்களில் இவனொருத்தன் விலக்ஷணனா யிருக்கின்றானே!’ என்று சிறிது உற்று நோக்கினாள்;
உலகத்தில் அபூர்வ வஸ்துவைப் பார்ப்பவர்களுக் கெல்லாம் இது இயல்பே; நெஞ்சில் ஒருவகை ஆசையைக் கொண்டு பார்த்தாளில்லை;
ஆயிருக்கச் செய்தேயும் ‘இவள் அவனை உற்று நோக்கினாளாகையால் இவளுக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கின்றது’ என்று
ஊரார் வம்பு கூறுகின்றனர், இது தகுமோ? என்று முறைப்படுகின்றாள்.
(மஞ்சளும்.) கீழ் “பற்று மஞ்சள் பூசி” என்ற பாட்டின் உரையைக் காண்க. நின்றாள் – முற்றெச்சம்.
“அது கொண் டிவ்வூர்” என்ற பாடமும் சிறக்கும்;
“கண்டதுவே கொண்டெல்லாருங்கூடி” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ஊர் – இடவாகுபெயர்.
—————-
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகி லேந்திள முலையும் என் வசமல்லவே–3-4-4-
பதவுரை
நங்காய்–பூர்த்தியை யுடையவனே!
ஏடி–தோழீ!
இவனை ஒப்பாரை–இவனைப் போன்றுள்ள வ்யக்தியை
என்றும்–எந்த நாளிலும்
கண்டு அறியேன்–(நான்) பார்த்ததில்லை;
வந்து காணாய்–(இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க,
அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;)
கோவலன் ஆய்–இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க)
(பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது)
குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்த–ரக்ஷித்தருளின
பிரான்–உபகாரகனும்
குழல்–குழலை
ஊதி ஊதி–பல கால் ஊதிக் கொண்டு
கன்றுகள்–கன்றுகளை
மேய்த்து–(காட்டில்) மேய்த்து விட்டு
தன் தோழரோடு உடன் கலந்து–தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு
தெருவில்–இவ் வீதி வழியே
வருவானை–வருபவனுமான கண்ணபிரானை
கண்டு–நான் கண்ட வளவிலே
துகில்–(எனது அரையிலுள்ள) புடவை
கழன்று–(அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய
வளை–கை வளைகளும்
ஒன்றும் நில்லா–சற்றும் நிற்கின்றனவில்லை;
ஏந்து–(என்னால்) சுமக்கப் படுகின்ற
இள முலையும்–மெல்லிய முலைகளும்
என் வசம் அல்ல–என் வசத்தில் நிற்கின்றனவில்லை.
விளக்க உரை
“பிரான்” என்றவிடத்தும் இரண்டனுருபுகூட்டுக. கண்ணபிரானெழுந்தருளுந் தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் பிள்ளை
ஸம்ப்ரம விசேஷத்துடனே வருகின்ற கண்ணனைக் கண்டு இவ் விலக்ஷண வ்யக்தியை நம் தோழியுங் கண்டு களிக்க வேண்டுமெனக் கருதி,
வீட்டினுள்ளே கிடப்பாளொரு தோழியை நோக்கித் “தோழீ! இதுவரை நம்மாற் காணப் பட்டுள்ளவர்களில் ஒருவரையும்
ஒப்பாகச் சொல்லப் பெறாத ஒரு விலக்ஷண புருஷன் இங்ஙனே வருகின்றான், சடக்கென வந்து காணாய்” என்றழைக்க,
அவள் ‘அவன் யார்? எக்குடியிற் பிறந்தவன்?’ என்றாற் போன்ற சில கேள்வி கேட்டுக் கொண்டு வரத் தாமஸிக்க,
அதற்கு அவள் ‘ஒருவன் இவ் விடைச்சேரியில் வந்து பிறந்து பற்பல அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்துளனென்று கேட்டுள்ளோமே,
அக்கண்ணபிரான் காண்’ என்ன; அதை அவள் கேட்டு ‘அவன் அத்தனை விலக்ஷணனோ?’ என்ன,
அதற்கு அவள் ‘பேதாய்! இவன் விலக்ஷணனல்லனாகில் யான் இவ்வாறு விகாரமடைவேனோ? பாராய்தோழீ!
அரையில் – துகில் தங்க வில்லை. (“என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ்செய்யும்” என்றபடி);
இன்னும் என்னாக வேணுமென்கிறாள். (இரண்டாமடியிறுதியில்) கண்டு – எச்சத்திரிபு; காண என்றபடி.
ஏடி – தோழி . இவ்விலக்ஷண புருஷனைக் காணப் பெறாக் குறை ஒன்றுண்டுனக்கென்பாள்.
‘நங்காய்’ என்று விளிக்கிறாளென்க. இவனைக் கண்டவுடனே தன் மனோதரம் பலிக்கப் பெறாமையால்
உடல் இளைக்கத் தொடங்கவே துகிலும் வளையுங் கழலப் புக்கன.
—————
சுற்றி நின்று ஆயர் தழைகளிடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்றொருவர்க்கு என்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால்
கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே–3-4-5-
பதவுரை
ஆயர்–இடைப் பிள்ளைகள்
சுற்றி நின்று–(தன்னைச்) சூழ்ந்து கொண்டு
தழைகள்–மயில் தோகைக் குடைகளை
இட–(தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக் கொண்டு வர,
சுருள் பங்கி–(தனது) சுருண்ட திருக் குழல்களை
(எடுத்துக் கட்டி)
நேத்திரத்தால்–பீலிக் கண்களாலே
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
ஆயர் கடைத்தலை பற்றி நின்று–இடைப் பிள்ளைகளின் கோஷ்டியில் முன் புறத்தில் நின்று கொண்டு
பாடவும் ஆடவும் கண்டேன்–பாட்டுங்கூத்துமாக வரக் கண்டேன்;
பின்–இனி மேல்
அன்றி–அவனுக்கொழிய
மற்று ஒருவற்கு–வேறொருவனுக்கு
என்னை பேசல் ஒட்டேன்–என்னை (உரியளாகத் தாய் தந்தையர்) பேசுவதை நான் பொறுக்க மாட்டேன்;
(ஆர்க்கொழிய வென்று கேட்கிறிகோளாகில்?)
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் நித்ய வாஸம் பண்ணுகிற
எம் மாயற்கு அல்லால்–எனது தலைவனுக்கொழிய
(மற்றொருவற்கு என்னைப் பேசலொட்டேன்;)
(ஆகையினால், தாய்மார்களே!)
இவள்–(‘நம் மகளான) இவள்
கொற்றவனுக்கு–அத் தலைவனுக்கே
ஆம்–உரியன்’
என்று எண்ணி–என்று நிச்சயித்து விட்டு
கொடுமின்கள்–(அவனுக்கே தாரை வார்த்து) தத்தம் பண்ணி விடுங்கள்;
கொடீர் ஆகில்–(அப்படி) கொடா விட்டீர்களே யானால்
கோழம்பமே–(உங்களுக்கு என்றைக்கும்) மனக் குழப்பமேயாம்.
விளக்க உரை
“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள்.
இடைப் பிள்ளைகளெல்லாம் தனக்குக் குடைபிடிக்கும்படி வீறுபாடுடைய இக் கண்ண பிரானைத் தவிரித்து மற்றொரு சப்பாணிப்
பயலுக்கு என்னை உரிமைப்படுத்த நினைத்தீர்களாகில் குடி கெட்டதாம்.
பிறனொருவனைக் கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் “கொம்மை முலைகளிடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யுந் தவந்தானென்?” என்றிருக்குமவளாகையால் அக்கண்ணனிடத்தே
பேரவாக் கொண்டு அதற்கேற்பப் பரிமாறப் பெற்றிலேனாகில் சிந்தயந்தியைப் போலே தன்னடையே முடிந்து போவேன்;
பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக் கவலையேயாம் என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லுகின்றாளென்க.
(சிந்தயந்தி – ஓர் ஆய் மகளின் பெயர்; இவள் குருஜநத்தின் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெறமாட்டாமல்
இருந்த விடத்திலேயே உள்ளே யுருகி நைந்து முடிந்துபோயினள்.)
பங்கி – ஆண்மயிர்; “பங்கியே பிறமயிர்க்கும் பகரு மாண்மயிர்க்கும் பேராம்” என்றான் மண்டலபுருடன்.
நேத்திரம் – கண், இங்கு மயிற்கண். கடைத்தலை – தலைக்கடை; சொல்நிலை மாறுதல்.
மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால் = “ ‘கண்ணனுக்கு’ என்னாதே இப்படி சொல்லிற்று இவனுக்கு ஓரடியுடைமை சொல்லுகைக்காக;
அடியுடைமை சொல்லும்போது ஒரு (கோத்ர) ஸம்பந்தஞ் சொல்ல வேணுமிறே” என்ற ஜீயருரை அறியத்தக்கது
(ஸம்பந்தம் – பர்வத ஸம்பந்தம் என்று சிலேடை.) கொற்றவனுக்கு = கொற்றம்… ஜயம்; அதை யுடையவனுக்கென்றபடி.
தன் பொருளைத் தானே கைக்கொள்ள வல்லவனுக்கென்க. அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்தவனிறே.
கோழம்பம் – குழப்பம்; கலக்கம் என்றவாறு. பெண் மாண்டால் தாய்மார்க்குக் கலக்கமே யன்றோ.
——————-
சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6-
பதவுரை
தோழீ–வாராய் தோழீ!
தன்–தன்னுடைய
திருநெற்றி மேல்–திரு நெற்றியில்
சிந்துரம்–சிந்தூரமும்
திருத்திய–(அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்–திலகப் பொட்டும்
திரு குழலும்–(அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க–விளங்கவும்,
அந்தரம்–ஆகாசமடங்கலும்
முழவம்–மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை–பீலிக் குடைகளாகிற
தண்–குளிர்ந்த
காவின் கீழ்–சோலையின் கீழே
வரும்–(தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்–இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச–வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத–(அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து–தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி–இத் தெரு வழியே
போதும் ஆகில்–வருவானாகில்
(அவனை)
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து–‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு
போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
(அவனுடைய)
பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்–புன் சிரிப்பையும்
காண்போம்–நாம் கண்டு அநுபவிப்போம்.
விளக்க உரை
கண்ணபிரான் பக்கல் தான் விசேஷ வ்யாமோஹங் கொண்டு அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாதிமிருக்க, அவனால் மிகவும்
உபேஷிக்கப் பெற்ற ஒரு ஆய்ச்சியின் பாசுரம் இது.
அலங்கார வகைகளை அழகு பெற அமைத்துக் கொண்டு பீலிக் குடைகளின் நிழலிலே தோழன்மாருடன் தடி வீசுகை என்ற
விளையாட்டைச் செய்து கொண்டு வருகின்ற இக்கண்ணபிரான் தன்னை யொழியச் செல்லாத என் தன்மையையும்
என்னையொழியச் செல்லும்படியான தன் தன்மையையும் தானறிந்துளனாகில் இத்தெருவழியே வருவதற்குத் தனக்கு யோக்யதையில்லை;
ஆயிருக்கச் செய்தேயும் அவன் மானங்கெட்டு இவ்வீதியில் வரப்போகிறன்; அப்போது எவ்வகையினாலாவது நாம்
அவனுடைய உபேக்ஷையை விலக்கிக் கொள்வோம்;
அதாவது –‘(நேற்று) நாங்கள் தோழிமாருடன் பந்தாடிக் கொண்டிருக்கையில் இவன் சடக்கெனப் புகுந்து அப்பந்தை
அபஹரித்துக் கொண்டு கள்ளன் போல ஓடிப்போய் விட்டான், அதை இப்போது தந்தாலொழிய இவனைக் கால் பேரவொட்டோம்’
என்றாற்போலச் சில ஸாஹஸோந்திகளைச் சொல்வோமாகில், அவன் திடுக்கிட்டு நிற்பன்,
‘இதென்ன ஸாஹஸம்!’ என்று வியந்து சிரிக்கவும் சிரிப்பன், இவ் வழியால் அவ் வழகையெல்லாம் நாம் காணப்பெறலாம்
என்று சொல்லி மகிழ்கின்றாள். முழவம் = மத்தளம். “அதினுடைய முழக்கமாய்க் கிடக்கிறது” என்ற ஜீயருரை காணத் தக்கது.
இரண்டாமடியிறுதியில், வீசா = ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்த கால வினையெச்சம். வீசி என்றபடி.
ஆயர் + பிள்ளை = ஆயப்பிள்ளை. போதும் – ‘போதரும்’ என்ற வினைமுற்றின் விகாரமென்பர்.
————–
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ் தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத் தாலணிந்து பல்லாயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் யயர்க்கின்றதே–3-4-7-
பதவுரை
சால பல் நிரை பின்னே–பற்பல பசுத் திரளின் பின்னே
தழை–பீலிக் குடைகளாகிற
காவின் கீழ்–சோலையின் கீழே
தன்–தன்னுடைய
திருமேனி–திருமேனியானது
ஒளி திகழ நின்று–பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்–நீல நிறத்தை யுடைத்தாய்
நல்-சுருட்சி, நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு–பரிமளம் வீசா நின்றுள்ள
குஞ்சி–திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அணிந்து–அலங்கரித்துக் கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே–பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர–அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக் கண்கள் ஸ்புரிக்கப் பெற்று
குழல்–வேய்ங்குழலை
ஊதி–ஊதிக் கொண்டும்
இசை–(அதுக்குத் தக்க) பாட்டுக்களை
பாடி–பாடிக் கொண்டும்
குனித்து–கூத்தாடிக் கொண்டும்
ஆயரோடு–இடைப் பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற–மகிழ்ந்து வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
அயர்க்கின்றது–அறிவு அழியாநின்றாள்.
விளக்க உரை
கண்ண பிரானுடைய வடிவழகில் ஈடுபட்டுச் சைதந்யத்தை யிழந்து தம்பகம் போலத் திகைத்து நிற்பாளொரு ஆய்ப் பெண்ணின்
தாய் சொல்லும் பாசுரம் இது. “சால உறு தவ நனி கூர் கழி மகில்” என்ற நன்னூலின்படி மிகுதியைச் சொல்லக் கடவதான
‘சால’ என்ற உரிச் சொல்லோடணைந்த ‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிறவைக் காட்டுமென்க.
(கோலச்செந்தாமரை யித்யாதி.) “இத்தால், திருத்தோழன் மாருடைய திரளை இடம் வலங் கொண்டு பார்த்து மகிழ்ந்து
கொண்டு வரும்படி சொல்லுகிறது” என்ற ஜீயருரையைக் காண்க.
“என் மகள் அயர்க்கின்றாள்” என்ன வேண்டியிருக்க, “அயர்க்கின்றது” என்று அஃறிணையாகக் கூறியது வழுவமைதியின் பாற்படுமென்க;
அன்றி, அயர்க்கின்றதே – திகைத்து நிற்கிறபடி என்னே! என்று முரைக்கலாம்.
————
சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8-
பதவுரை
சிந்துரம் பொடி கொண்டு–ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து
தன்–தன்னுடைய
சென்னி–திரு முடியிலே
சிப்பி–அப்பிக் கொண்டும்,
அங்கு–திரு நெற்றியில்
ஓர் இலை தன்னால்–ஒரு இலையினாலே
திரு நாமம் இட்டு–ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும்
நெறி–நெறித்திரா நின்றுள்ள
பங்கியை–திருக் குழலை
அழகிய–அழகிய
நேத்திரத்தால்–பீலிக் கண்களினால்
அந்தரம் இன்றி அணிந்து–இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்,
இந்திரன் போல்–ஸாக்ஷாத் தேவேந்திரன் போல
வரும்–(ஊர்வலம்) வருகின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு
எதிர் அங்கு–எதிர்முகமான இடத்தில்
நின்று–நின்று கொண்டு
வளை இனம்–கை வளைகளை
இழவேல்–நீ இழக்க வேண்டா”
என்ன–என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்
நங்கை–(எனது) மகளானவள்
சந்தியில் நின்று–அவன் வரும் வழியில் நின்று
தன் துகிலொடு–தனது துகிலும்
சரிவளை–கைவளைகளும்
கழல்கின்றது–கழன்றொழியப் பெற்றாள்.
ஏ–இதென்ன அநியாயம்!
விளக்க உரை
“இலையந்தன்னால்” என்றவிடத்து, அம் – சாரியை.
அன்றிக்கே, “இலயந்தன்னால்” என்று பாடமாகில்,
இல் அயம் எனப்பிரித்து, இல் என்று உள்ளாய், “அயமென்ப நீர் தடாகம்” என்ற நிகண்டின்படி அயம் என்று ஜலமாய்,
ஓர் இலயமென்றது திருப் பவளத்துக்குட் பட்டதொரு ரஸமென்றபடியாய், சிந்துரப் பொடியை அதராம்ருதத்தினால் நனைத்துக்
குழைத்து அதைத் திருநாமமாகச் சாத்தி என்று பொருள் கொள்க.
அன்றிக்கே, “இலயந்தன்னால் வருமாயப்பிள்ளை” என இயைத்து,
“இலயமே கூத்துங் கூத்தின் விகற்பமுமிருபேரென்ப” என்ற நிகண்டின்படி ‘கூத்தாடிக் கொண்டு வருகின்ற’ என
உரைத்துக் கொண்டே கூட்டுப்பொருள் கோளாகக் கொள்வாருமுளர்;
இப் பொருளில் நேரியதாய் நீண்டு ஒட்டின விடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையைத் திரு நெற்றியிலே
திரு நாமமாக இட்டனனென்க.
இரண்டாவது யோஜனையில், “சிந்தூரப்பொடிக்கொண்டு” என்பதை மீண்டுங் கூட்டிக் கொள்க.
கீழ் ஆறாம்பாட்டில் சிந்தூரப் பொடியைத் திருநெற்றியில் திலகமாகச் சாத்தினபடி சொல்லிற்று;
இப் பாட்டில் அதனைத் திருக்குழல் மேல் அலங்காரமாகத் தூவினபடி சொல்லுகிறதென்று வாசி காண்க.
‘கண்ண பிரான் வரும் வழியில் எதிர் நோக்கி நின்று அவனைக் காமுற்றுத் தம் மனோரதத்தின்படி அவனோடு பரிமாறப் பெறாமல்
உடனே உடவிளைத்து வளைகழலப்பெற்றார் பலருண்டு; அவர்களைப் போல் நீயும் வளையிழவாதேகொள்’ என்று
என் மகளை நோக்கி நான் முறையிடச் செய்தேயும்’ அவள் அப் பேச்சைப் பேணாமல் அவ்வழியில் நின்று
துகிலையும் வளையையுந் தோற்றுத் தவிக்கின்றாளென்று ஒருத்தியின் தாய் இரங்குகின்றாள்.
சந்தி -பலர் கூடுமிடம். கண்டீர் – முன்னிலையசை. “நங்கை சரிவளை கழல்கின்றாள்” என்ன வேண்டியிருக்க,
“கழல்கின்றது” என அஃறிணையாகக் கூறியது – வழுவமைதி; சரிவளை கழலப்பெற்றவாறு என்னே! என்று முரைக்கலாம்.
—————-
வலங்காதின் மேல் தோன்றிப் பூ வணிந்து மல்லிகை வன மாலை மெளவல் மாலை
சிலிங்காரத் தால் குழல் தாழ விட்டுத் தீங் குழல் வாய் மடுத் தூதி யூதி
அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே–3-4-9-
பதவுரை
வலங்காதில்–வலது காதில்
மேல் தோன்றிப் பூ–செங்காந்தள் பூவையும்
வனம் மல்லிகை மாலை–(திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும்
மௌவல் மாலை–மாலதீ புஷ்ப மாலையையும்
அணிந்து–அணிந்து கொண்டு,
சிலிங்காரத்தால்–அலங்காரமாக
குழல்–திருக்குழல்களை
தாழ விட்டு–(திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு
தீம் குழல்–இனிமையான வேய்ங்குழலை
வாய் மடுத்து–திருப் பவளத்தில் வைத்து
ஊதி ஊதி–வகை வகையாக ஊதிக் கொண்டு,
அலங்காரத்தால்–(கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே
வரும்–வாரா நின்ற
ஆயர் பிள்ளை–இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு–வடிவழகை
என் மகள் கண்டு–என் மகள் பார்த்து
ஆசைப்பட்டு–(அவனிடத்தில்) காமங் கொண்டு,
(இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,)
விலங்கி நில்லாது–(அப்படி) வழி விலங்கி நில்லாமல்
எதிர் நின்று–(அவனுக்கு) எதிர்முகமாக நின்று
வெள்வளை கழன்று–(தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று
மெய் மெலிகின்றது–உடலும் இளைக்கப் பெற்றாள்.
விளக்க உரை
கண்ணன் பசுக்களை மேய்த்து விட்டுப் பலவகை யலங்காரங்களோடு திரும்பி வரும் போது என் பெண் அவனுடைய
மநோஹரமான அழகைப் பார்த்து ஆசை கொண்டு ‘இது கண்டவர்களை வருத்தும்’ என்று கண்ணை மாற வைத்து
விலங்க வேண்டியதாயிருக்க, அப்படி செய்யாமல் அவனழகைப் பார்த்துக்கொண்டு எதிரே நின்றதனால்
வளை கழல உடம்பு மெலியப்பெற்றாளென்று – தன் பெண்ணின் தன்மையை வினவ வந்தவர்கட்குச் சொல்லி வருந்துகின்றா ளொருத்தி.
இடக்காதிற்கு ஒன்றும் சாத்திக் கொண்டதாகச் சொல்லாமையால் ஒரு காதுக்குச் சாத்திக் கொண்டிருக்குமதுதானே
ஓரழகாகக் கொண்டு வந்தானென்றாவது, ஒரு காதுக்குச் சாத்தின வளவிலே மல்லிகை மௌவல் மாலைகளைக் கண்டு
மற்றொரு காதிற்குத் தோன்றிப் பூவைச் சாத்திக் கொள்ள மறந்தானென்றாவது கொள்க.
உடம்பு மெலிந்ததை முன்னே சொல்லாமல் வளைகழன்றதை முன்னே சொன்னதற்குக் காரணம் – வளை கழன்ற பின்பே
இவளுடம்பு மெலிந்ததைத் தானறிந்ததனாலென்க. வனம் என்று அழகுக்கும் பேர்.
மௌவல் என்று மல்லிகைக்கும் முல்லைக்கு மாலதிக்கும் பேர்; “மல்லிகை மௌவல்,” “மௌவலுந் தளவும் கற்பு முல்லை,”
“மாலதி மௌவலாகுமென்ப என்பவை – சேந்தன்திவாகரம்.
சிலிங்காரம் – அலங்காரமென்றபடி. தீம் – இனிமை; “தீமு மதுரமுந் தேமுந் தேக்கும், ஆயநான்குந்த தித்திப்பாகும்” என்பது நிகண்டு.
மெய்மெலிகின்றது – இதுவும் கீழிற்பாட்டுக்களிற்போல, வழுவமைதி.
————–
விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே
கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10-
பதவுரை
விண்ணின் மீது–பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே
அமரர்கள்–நித்ய ஸூரிகள்
விரும்பி–ஆதரித்து
தொழ–ஸேவியா நிற்கச் செய்தேயும்
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா
மறைத்து–(அவர்களை மதியாமல்) மேனாணித்து
ஆயர் பாடியில்–திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து)
வீதி ஊடே–தெருவேற
காலி பின்னே–பசுக்களின் பின்னே
எழுந்தருள–எழுந்தருளா நிற்க,
(அவ்வழகை)
இள ஆய் கன்னிமார்–யுவதிகளான இடைப் பெண்கள்
கண்டு–பார்த்து
காமுற்ற வண்ணம்–காம லிகாரமடைந்த படியை,
வண்டு அமர் பொழில்–வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
இன்பம் வர–இனிமையாக
பண்–பண்ணிலே
பாடும்–பாட வல்ல
பக்தருள்ளார்–பக்தர்களா யிருக்குமவர்கள்
பரமான–லோகோத்தரமான
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவர்–அடையப் பெறுவார்கள்.
விளக்க உரை
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளனைவரும் தன்னைத் தொழா நிற்கவும் எம்பெருமான் அவ்விடத்தே வீற்றிருந்து தனது
பரத்துவத்தைப் பாராட்டலாமாயிருக்க, அங்ஙன் செய்யாது இடைச்சேரியில் வந்து பிறந்தது தனது ஸௌசீல்யத்தை
வெளிப்படுத்துகைக்காகவென்க. காமுற்ற – ‘காமம் உற்ற’ என்பதன் தொகுத்தல்.
இப் பாட்டால் இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டியவாறு.
——-
அடிவரவு :- தழை வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி வலம் விண் அட்டு.
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –