ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.
இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.
பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.
அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!
திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.
முன்னுரையில் எழுதுகிறார் –
“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”
கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.
மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.
மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
திருமொழி அந்தாதி பேசுகிறது –
வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.
அடுத்த திருமொழி ஆரம்பம்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே
திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –
வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.
அடுத்த திருமொழி தொடக்கம்
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே
திருமொழி நூற்றந்தாதி –
முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு
இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.
ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.
கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.
__________________
வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.
__________________
அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு
__________________
கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே
இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்
செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்
தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.
__________________
தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்
வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா
புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்
கவிநமக்கு வாழ்வருளும் கண்
__________________
கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.
———————————–
ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply