ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் -/ ஸ்ரீ திருக்குருகூர் வரி -ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்–

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. ( ஸ்ரீ திருவரங்கக் கலம்பகம், ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் )

மறைப் பாற்கடலை…..
ஆஹா ! அழகு. மறை என்னும் வேதாந்தமாகிய பாற்கடலை. ஏன் பாற்கடல்?
ஆமாம் வேதாந்தத்தில் உறைபவன் யார்? திருமால் அல்லவோ? திருமால் உறையும் இடம் திருப்பாற்கடல்தானே?

திருநாவின் மந்தரத்தால் கடைந்து…..
அற்புதம்! திருநா..ஆம்..மறையாகிய பாற்கடலைக் கடையும் நாவு திருநாவுதானே?
திருநாவு என்பது மந்தர மலை…..மறையாகிய பாற்கடலைக் கடைய….

துறைப்பாற்படுத்தி….
என்ன கருணை! வெறுமனே கடைந்து அள்ளிவிட்டுப் போகாமல், என்றென்றைக்கும், எந்நாட்டவர்க்கும், பின் வருவோர்க்கும்
பயன்படும் வண்ணம் அதன் பொருள், உள்கருத்து, உள்மறை என்று அனைத்தும்
நன்கு பயன் கொள்ளும் வண்ணம் தமிழ் யாப்பின் துறைகளில் யாத்து….

ஆனால் எங்கே இந்த திவ்ய அமுதம் சேமிக்கப்பட்டு இருக்கிறது?
இந்திர லோகத்து அமுதம் கொணர்வதற்கே கருடனே அவ்வளவு போர் செய்ய வேண்டியிருந்தது.
இந்த அமுதமோ அதைப் போன்று வெறும் அமுதம் அன்று. திவ்ய அமுதம் !
என்ன கஷ்டமோ பெறுவதற்கு? எங்கு உள்ளது இந்த அமுதம்?

தமிழ் ஆயிரத்து…..

என்ன? தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். தமிழ் ஆயிரத்து என்றால் முடிவற்ற இனிமையின் உள்ளே….
இனிய தமிழ்ப் பாடல் ஆயிரத்தின் உள்ளே….அதாவது….ஆமாம்….
திருவாய்மொழி என்னும் ஆயிரம் இன் தமிழ்ப்பாவின் உள்ளே சேமித்துவைக்கப் பட்டிருப்பது

இன்சுவை அமிர்தம் —
நிச்சயம் கிடைக்காது. வேறு வேலை பார்ப்போம். இவ்வளவு சிறந்த அமிர்தத்தைத் தமிழாயிரத்தில் தேக்கி
வைத்துப் போய் எடுத்துக்கொள் என்றால்…..யார் போய் எடுப்பது?
போய்ப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்ததுபோல் தேமா புளிமா என்று சுற்றிச் சுற்றி வந்துவிட்டு, அங்கு ஒன்றுமே இல்லையே…..
போய்ப் பார்த்தேனே….வெறுமனே அசை, சீர், தளை, பாவினம் இவ்வளவுதான் உள்ளன.
அங்கு போய் அமுதத்தை எங்கு ஒளித்து வைக்க முடியும்? என்று வந்துவிடுவோம்.

“இல்லை. அங்குதான் இருக்கிறது. அந்த அமுதத்தை அருந்த ரசிகர்களாகிய புவி பாவுகர்கள்,
திருநாரணன் தன் தொல்லடியார் கூடுவார்கள். யாரால் என்ன வருகிறதோ என்று காரணமே இல்லாமல்
தன் பிரேமையின் காரணமாக வெறுமனே சீறிக்கொண்டிருக்கும் பணாமுடி ஆயிரமும்,
தன் திருவுடலெங்கும் அழகிய புள்ளிகள் திருஷ்டிப் பொட்டுகளாய் விளங்க
அந்தத் திருவநந்தன் திருவணையில் பள்ளிகொள்ளும் பிரான் களிக்க,
அந்த அடியார் ஈட்டம் களித்து அருந்தும் படியாக ஒருவர் யாருடைய கோப்பையும் குறைவுபடாமல் இருக்கும்படியாக
அந்தத் திவ்ய இன்சுவை அமிர்தத்தை ஊற்றி நிறைத்தவண்ணம் நிற்பார்.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை பொருள் சுரக்கும் அமுத்தீஞ்சொல் பாசுரங்களாய்
அவர் ஊற்றும் அந்த திவய இன்சுவை அமிர்தமே நீ தவித்த விடாயாற்றி.”

நிழல்? நிழல்? குரலே….நிழல்?

“ஹ ஹ…இன்னுமா தெரியவில்லை? அப்படி நிறைப்பவர் யார் என்று பார்.
அந்த நம்மாழ்வாரின் கழல் அன்றி வேறு நிழலே இல்லை.”

———-

கூடற்புராணத்தில் நாதமுனிகளைப் போற்றிப் பாடப்பட்ட,
அண்டகோளத்தாரென்னும் ஆரியத்தமிழாலன்று
தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர் தாமேசிற்பங்
கண்டதோர் வடிவாற் பேசத் திரைப்புறத்திருந்திக்காலத்
துண்டெனப் பதின்மர் பாடல் உத்தரித்தவர் தாள் போற்றி.

என்ற பாடலும், நம்மாழ்வார் காலத்தில் தமிழ்ச்சங்கமொன்றிருந்ததையும்,
சங்கப் புலவர்களை அவர் வாதிட்டு வென்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்தக் குழுமத்தில் முன்பு பேசப்பட்ட, ‘அண்டகோளத்தாரணுவாகி’ என்று தொடங்குகிற பாடல்,
சங்கத்தாரை எதிர்த்து நம்மாழ்வார் பாடியதாக கருதப்படுகிறது.

——–

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

———-

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37

திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்

—————–

கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.

சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்

————

நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே!
அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி,
மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார்.
நூல் – திருக்குருகூர்வரி . பாடியவர் – கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்

தொடக்கமே பாருங்கள் –

கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை !
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி
அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

_____________________

நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற
தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

————

நிலைவரி –

கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்
அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !
அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே
இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !

———

முரிவரி –

பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே
திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே
பருமணி வடவரையே பணையிணை யிருகரமே
இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே

———

திணை நிலைவரி –

தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்
என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!
மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்
என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!

___________________

காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்
கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !

————-

மயங்கு திணை நிலைவரி –

மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து
பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!
மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்
டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?

—————-

வேறு

மாழ்கும் மாய மயக்கில் வந்தென்
தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்
தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்
ஆழும் அன்பை அறியார் அல்லர்

———-

முகமில்வரி —

சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!
சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !
ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,
சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!

வரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால்
அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: