பிரதம மத்யம சரம பர்வ மூ வகை தீர்த்தங்கள் —

ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று (மழை) நீர் என்பதை முந்நீர் என்பர்கள் தமிழர்.

ஆற்று நீர் போல் -ஆச்சார்யர்கள் -நல் ஞானத்துறையில் இருந்து பாவானத்வம்
ஊற்று நீர் போல் -நாள் ஏற அவகாசம் பார்த்து உள்ளேயே பதி கிடக்கும் அந்தர்யாமித்வம்
வேற்று நீர் -மழை நீர் போல் -அடியார்கள் -எங்கும் திரிந்து பாவனத்வம்

நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே!” என்கிறார்.

அதன்றி, மூன்று செய்கையுடைய நீர் – அதாவது
படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் நீர் என்றும் பொருள் கூறுவர்.

நம் தலைப்பில் மூவகைத் தீர்த்தம் என்றது இதைத் தான் சொல்கிறதா என்றால். இல்லை,
தீர்த்தம் என்பதால் வேறொன்றைக் குறிக்கிறது.

செய்கையையும், அதற்குண்டான அதிகாரியையும் இட்டு இத்தலைப்பு வருகிறது.

வடமொழிச் சொல்லான தீர்த்தம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அதில் ஒன்று தண்ணீர் என்பதாம்.
இப்பொருளிலேயே இச்சொல் தமிழிலும் பொதுவாக வழங்கி வருவதைக் காண்கிறோம்.

தென்மொழியில் தண்ணீருக்கு நீர், சலம், தீர்த்தம் போன்ற பல பெயர்கள் உள்ளன.

ஸமஸ்க்ருதத்திலும் தீர்த்தம், ஜலம், அம்பு, புஷ்கரம் எனப் பல பெயர்கள் இருக்கின்றன.

தன்மைக்கேற்ப நீரானது தண்ணீர், வெந்நீர், சுடுநீர், பனிநீர், நெடுநீர் என பலவகைகளிலும் அழைக்கப்படும்.

நீர் நிலைகளும் கிணறு, குளம், கயம், கேணி, ஏரி, கடல் என்று பல நிலைகளில் காணப்படும்.

நீருக்கு அடைச்சொல்லாகப் பல அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளனர் ஆழ்வார்கள்.
மாநீர், முதுநீர், முந்நீர், அலைநீர், மணிநீர், பெருநீர், பாயுநீர், விரிநீர், வெள்ளநீர் என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருமங்கையாழ்வாரின் இயற்கை வர்ணனைகளில் நீரைப் பற்றி அதிசயமான சில ப்ரயோகங்களையும் நாம் பார்க்கிறோம்.

உதாரணமாக, வண்டறை மாநீர் என்றொரு தொடர் இடுகிறார் ஆழ்வார்.
அதாவது வண்டுகள் படிந்து அதனால் ஓசை எழக்கூடியதான சிறந்த நீர் என்கிறார்.

இன்னொன்று துஞ்சா நீர் என்பதாகும். துஞ்சுதல் என்பதற்கு தூக்கம், இறப்பு, சோர்வு என்ற பொருள்கள் உண்டு.
அதைத் திருக்கோவலூர் திவ்யதேசத்தில் பெண்ணை நதிக்குப் பயன்படுத்தி
“துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை” என்கிறார் ஆழ்வார்.
அதாவது, மாறாத தன்மை உடைத்தாய் இருக்கும் என்றபடி.

எங்கும் எதிலும் பாய்ந்து கலக்கும் நீரின் தன்மையால் நீர்மை என்றொரு குணம் ஏற்படுகிறது.
பெரியோர்கள் பேதம் நோக்காது எல்லாரொடும் புரையறக் கலந்து பழகும் குணமே இது.
வடமொழியில் இதைச் ஸௌசீல்யம் என்பர்கள்.

திருமங்கையாழ்வாரின் ஏழை ஏதலன் பாசுரத்தில் ஸ்ரீ ராம பிரானின் நீர்மை குணம் விவக்ஷிதம்.

எம்பெருமானுடைய பல நிலைகளில், நீராய் இருக்கும் நிலையுமுண்டு.
புஷ்கரத்தில் எம்பெருமான் நீர் நிலையாக இருக்கிறான்.

ஆழ்வாராசார்யர்களும் அவனைத் தடமாகவும், தடாகமாகவும் வர்ணிக்கின்றனர்.

“வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரதக மணித்தடம்” என்றும்,
“தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே!” என்றும் கூறுகிறார் ஆழ்வார்.

ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “உத்புல்ல பங்கஜ தடாகமிவ” என்றார் பராசர பட்டர்.

முகுந்தமாலையில் குலசேகராழ்வாரும்
“கர சரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீநே ஸ்ரமமுஶி புஜவீசி வ்யாகுலே அகாத மார்க்கே ஹரி ஸரஸி” என்றார்.

ஆசார்யர்களும் நாம் குடைந்தாடி ச்ரமம் தீரும் நீர் நிலையாகவே இருக்கிறார்கள் என்று
அவர்களை நன்ஞானத்துறையாகக் காட்டுகிறார் நம்மாழ்வார்.

ஆண்டாளும் “சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்” என்று எம்பெருமானை அழைத்தாள்.

இது நிற்க.

இத்தீர்த்தங்கள் மூவகை என்றோமே, அவையாவன?

1. தீர்த்தம்

தீர்த்தம் என்றாலும் நீர் என்றாலும் பொதுவாகத் தண்ணீர் என்ற அர்த்தம் இருந்தாலும்,
தீர்த்தம் என்ற சொல்லுக்கு பாவனமாக்கும், அதாவது சுத்தி தரும் என்ற அர்த்தமும் உள்ளது என்பதைக் கொண்டு,
திருமங்கையாழ்வார் இரண்டையும் சேர்த்து
“தீர்த்த நீர்த் தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடை நெஞ்சமே” என்று தம்முடைய பெரிய திருமொழியிலே காட்டுகிறார்.

தீர்த்தம் என்பது புண்யம் அல்லது பாவனம் தரும் என்பதால் அது நீருக்கு உபலக்ஷணமாயிற்று.
“எல்லா சம்ருத்தியையும் பண்ணிக் கொடுக்கவற்றான ஜலசம்ருத்தி” என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

“கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்” என்கிறார் பெரியாழ்வார்.
எம்பெருமான் திருவடி சம்பந்தம் பெற்றதாலேயே அதற்கு இத்தன்மை வாய்த்ததாம்.

“கங்கையிலும் தீர்த்தமலி” என்கிறார் குலசேகரப் பெருமாள்.
கங்கையின் புனிதமும், புனிதமாக்கும் தன்மையும், அவனுடைய திருவடி சம்பந்தம் ஒரு முறை பெற்றதால் உண்டாயிற்று.
ஆனால் திருக்கண்ணபுரத்தம்மானின் திருவடி சம்பந்தம் நித்யமும் பெற்றதால்
அங்கிருக்கும் பொய்கை, கங்கையைக் காட்டிலும் மேன்மை பெற்றதாகிறது.

இக்காரணத்தாலேயும்,
கங்கையைப் போல் ருத்ர சம்பந்தம் பெறாமல் இருப்பதாலேயும்,
“கங்கையில் புனிதமாய காவிரி” என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.

“கங்காஸாம்யம் புரா ப்ராப்தா … ஆதிக்யஞ்சாப்யவாப ஸா” என்கிறது ஸ்ரீரங்கமாஹாத்ம்யம்.

எம்பெருமானுடைய திருவாராதனத்தில் உபயோகிக்கப்பட்டதாலேயே நீரும் தீர்த்தமாகிறது என்று
கோவில்களிலும், திருமாளிகைகளிலும் பார்க்கிறோம்.

ஆசார்யர்கள் திருவடி சம்பந்தம் பெற்ற நீரை ஸ்ரீ பாத தீர்த்தம் என்றே கொள்வர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள்.

ஆக, முதல் வகை தீர்த்தம் என்பதாகிறது. அதாவது,
சுத்தி செய்யும் கார்யத்தையும், அக்கார்யம் செய்யும் வஸ்துவினாலேயும் தீர்த்தம் என்ற வகை ஏற்படுகிறது என்பதாம்.

——

2. தீர்த்தன்

தீர்த்தம் என்பது அஃறிணைப் பொருளாகும்.
அதை அன் விகுதியுடன் இணைத்து எம்பெருமானுக்குரிய திருநாமம் ஆக்குகிறார்கள் ஆழ்வார்கள்.

“தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே” என்றார் ஆழ்வார் தம்முடைய திருவாய்மொழியில்.

தீர்த்தன் என்றால் என்ன என்றால், தம்மைப் பரிசுத்தன் ஆக்க வல்ல எம்பெருமான் என்கிறார்.

பூர்வாசார்யர்கள் வ்யாக்யாநம் காண்மின்.

“என்னைப் ப்ரயோஜநாந்தர பரதையைத் தவிர்த்தவன்” – ஒன்பதினாயிரப்படி

“நல்ல போக்யஜாதம் இருக்க, நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே,
தானும் தன்னுடைய குணங்களும் இருக்க,
சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை,
அவற்றை விட்டுத் தன்னையே விரும்பும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்” – இது ஈடு

இதற்கு அடுத்த பாசுரம்:

தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?— திருவாய்மொழி 2.8.6

இங்கு தீர்த்தன் என்பது பரமபவித்ரன் என்ற அர்த்தத்தில் வருகிறது.
என்னை மட்டுமன்றி ருத்ரனையும் சுத்தன் ஆக்கி, சிவன் என்னும்படி பண்ணின பரமபவித்ரன் என்கிறார்.
ஸ்ரீபாத தீர்த்தத்தை முடி மேல் தரித்து ருத்ரன் சிவனாயினான் என்றபடி.

ஸ்ரீராமாயணமும் எல்லோரையும் பாவனமாக்கும் அவன் தன்மையை
“பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந” என்றது.

மஹாபாரதம் வனபர்வத்தில் தீர்த்த யாத்ரையில்

பவித்ராணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யதே |
புண்யாநாம் அபி புண்யோஸௌ மங்களாநாஞ்ச மங்களம் ||–என்றது.

பவித்ரங்களுக்குள் எல்லாம் பரமபவித்ரன் என்றும்,
புண்யங்களுக்குள் எல்லாம் பரமபுண்யன் என்றும்,
மங்களங்களுக்குள் எல்லாம் பரமமங்களன் என்றும் சொல்லிற்று.

எம்பெருமானேலேயே நமக்குப் பாவனம் என்பதை ஶாஸ்த்ரமும்

ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஶுசி: ||–என்று கூறுகிறது.

சுத்தி உடையவனோ, இல்லாதவனோ, எவனாயிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும்
தாமரைக்கண்ணனை நினைத்தே உள்ளும் புறமும் சுத்தி அடைவன் என்பதாம்.

மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்தவரான திருமங்கையர் கோனும் எம்பெருமானைத் தீர்த்தன் என்கிறார்:

பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர் முந்நின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மாமலையை
தீர்த்தனைப் பூம்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியுங்கொல்? என்மொய்குழற்கே— பெரிய திருமொழி 9.9.8

தீர்த்தன், அதாவது பரமபவித்ரன் என்றது,
அர்ஜுனனுக்குச் சாரதியாய் இருந்து ரக்ஷித்தும்,
நித்யஸூரிகளுக்கு அநுபவிக்க உரியனாய் இருந்தும், அதை இங்குள்ளாரும் அநுபவிக்கும்படியாய் திருமாலிருஞ்சோலையில் நின்றும்,
தன்பேறாகச் செய்து
அதனால் பரம சுத்தி உடையவன் என்றபடி.

மற்றோரிடத்தில் நம்மாழ்வார் “என் தீர்த்தனே! என்னும்” என்கிறார்.
அங்கு கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் பராங்குச நாயகியானவள்,
எனக்கு நீ முகம் காட்டாதிருந்தாலும் உன்னை ஒழிய மற்றொன்றறியா பரிசுத்தியைத் தந்தவனே என்கிறாள்.

திருவரங்கத்தமுதனாரும் தம்முடைய இராமாநுச நூற்றந்தாதியில்
“வாணன் பிழை பொறுத்த தீர்த்தன்” என்று ஸ்ரீ க்ருஷ்ணனைக் கொண்டாடுகிறார்.

————-

3. தீர்த்தகரர்

பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில் 14ம் பாசுரம் காண்மின்.

பண்டிப்பெரும் பதியையாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே – எண்திசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின் திரிந்து

தாழ்ந்தோரைப் பற்றிக் கூறித் திரியாது, எம்பெருமானுடைய திருநாமத்தை எங்கும் சொல்லி
நாடு முழுவதையும் பரிசுத்தம் ஆக்குமவராய் ஆகுங்கோள் என்று கூறும் ஆழ்வார்,
அப்படி இருப்போரை தீர்த்தகரர் என்கிறார்.

உங்கள் பழிபாவம் தீர்ந்து, நீங்கள் சுத்தராவது மட்டுமன்றி
மற்றையோரையும் சுத்தப்படுத்துங்கள் என்கிறார் ஆழ்வார்.
இது “தீர்த்தம் பரோதீதி தீர்த்தகர:” என்ற வ்யுத்பத்தியிலிருந்து தேறுகிறது.

எம்பெருமான், தானும் பாவனத்தைக் கொண்டும்,
மற்றையோரையும் பாவனர்களாக்குவான் என்பதைச் சேரப்பிடித்து அவனை “அமலன்” என்கிறார் திருப்பாணாழ்வார்.

இங்கு பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநம் காண்மின்:
“தான் ஒருத்தன் சுத்தனாகையன்று; தன்னோடு ஸம்பந்தித்தாரையும் சுத்தராக்கவல்ல அடியுடைமை.”

ஶாஸ்த்ரமும்

அதிபாதக யுக்தோபி த்யாயந் நிமிஷம் அச்யுதம் |
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்திபாவந பாவந: ||–என்றது.

அதாவது, எம்பெருமானை ஒரு நிமிடம் த்யானம் செய்தால், மஹாபாபியானவனும் மஹாதவம் செய்தவனாகவும்,
தன் சம்பந்தத்தால் ஒரு வரிசை முழுவதையும் பாவனமாக்கும் பங்க்திபாவனர்களையும் பாவனமாக்குமவன் ஆகிறான் என்றபடி.

திருவாறன்விளை பதிகத்தில் நம்மாழ்வார் அவன் பரமபவித்ரன் என்பதைத் தீர்த்தன் என்று கூறிய பின்,
அவனைப் பற்றிய திருவாய்மொழிப் பாசுரங்களும் பவித்ரமானவை என்பதை தீர்த்தங்கள் ஆயிரம் என்கிறார்.
இந்த நாலாவது வகையான தீர்த்தத்தைப் பிறிதொரு சமயத்தில் ஆராய்வோம்.

இவ்விடத்தில் ஆழ்வார் இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் பவித்ரமானவர்கள் என்பதை,
நித்யஸூரிகள் தங்கள் தேவிமார்களிடத்தில் அவர்களைத் தீர்த்தங்கள் என்றே ஏத்துவர்கள் என்கிறார்:

தீர்த்தனுக்கற்றபின் மற்றோர் சரணில்லை என்றெண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங்குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே— திருவாய்மொழி 7.10.11

இத்தால் எம்பெருமான் மட்டுமன்றி அவனடியார்களும் தீர்த்தர்கள் என்றாகிறது.

ஆக
தீர்த்தமும்,
தீர்த்தனும்,
தீர்த்தகரரும்,
தாங்களும் சுத்தர்களாய், மற்றையோரையும் சுத்தர்களாக்குகிறார்கள் என்றதாயிற்று.

இம்மூவகைத் தீர்த்தங்கள் மூலமாக நாமும் சுத்தி அடைவோமாக

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: