ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-3–பகுதி -1- அஸ்வல பிரமாணம்/ஆர்த்தபாக பிரமாணம்/புஜ்ய பிரமாணம்/உஷஸ்த பிரமாணம்/கஹோல பிரமாணம் /கார்கி பிரமாணம் /அந்தர்யாமி பிரமாணம் —

இந்த அத்யாயம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. முதல் மூன்று பகுதிகள் உபாஸனையைப்பற்றி விவரிப்பதால்
அதாவது கர்மகாண்ட்த்தில் உள்ள ஞானத்தை சோதிக்கின்ற மாதிரி இருக்கும்.
எனவே அதன் சாராம்சத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இதனால் அடையும் பலன்களாவது:
தானம் என்ற குணத்தில்தான் சித்தஸுத்தியை அடைய முடியும்
வித்யா ப்ராப்தி சாதனம்தான் தானம். எதையுமே இலவசமாக பெறக் கூடாது. அறிவை தானம்மூலம்தான் பெற வேண்டும்.
வித்வத் சம்யோகஹ பிரக்ஞா விருத்தி – கற்றறிந்தவர்கள், ஞானிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
நம்மையே நாம் அங்கீகரித்தல் – நம் அறிவை நாமே அங்கீகரித்தல்

———-
பகுதி-1 : அஸ்வல பிரமாணம்
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் மிகப் பெரிய யாகத்தை மேற்கொண்டார்.
இந்த யாகத்தில் குரு, பஞ்சால தேசத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.
இவர்கள் அனைவரும் சாஸ்திரங்களை கற்று அறிந்த வேத விற்பன்னர்கள். ஜனகருடைய மனதில் ஒரு ஆசை எழுந்தது.
இங்கு கூடியுள்ள இந்த பிராமணர்களுக்குள் யார் வேதாந்தத்தை நன்குணர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
இந்த யாகத்திற்கு ஆயிரம் பசுக்களை கொண்டு வரச் செய்தார், ஒவ்வொரு பசுவின் கொம்பில் ஐந்து தங்க நாணயங்களை கட்டி வைத்திருந்தார்

ஸ்லோகம்-2
பிராமணர்களே உங்களுக்குள் யார் சாஸ்திரங்களை அதிகம் கற்றிருக்கிறீர்களோ, பிரம்ம ஞானத்தில் நிஷ்டையடைந்தவர்களோ
அவர்கள் இந்த பசுக்களை அழைத்து செல்லலாம். யாரும் முன்வரவில்லை.
பிறகு யாக்ஞவல்கியர் என்பவர் தன் சிஷ்யர்களைப் பார்த்து, “இந்த பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள்” என்று சத்தமாக கூறினார்.
அவர்கள் பசுக்களை அழைத்து செல்ல முற்பட்ட போது அங்குள்ள பிராமணர்களுக்கு கோபம் வந்து விட்டது.
அவர்கள் யாக்ஞவல்கியரை பார்த்து, நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள்தான் பிரம்மஞான நிஷ்டையை அடைந்தவர்(பிரம்மிஷ்டன்)
என்று நினைக்கிறீர்கள் என்று வினவினர். அப்பொழுது ஜனகரின் அரசவையில் அமர்ந்திருந்த அரசவை புரோகிதர் யாக்ஞவல்கியரிடம் வந்து,
“நீதான் எங்களுக்குள் பிரமிஷ்டனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை பார்த்து,
“இங்கு அமர்ந்திருக்கும் எல்லா பிரமிஷ்டர்களுக்கு என் நமஸ்காரங்கள்,
எனக்கு பசுக்கள் தேவை அதனால்தான் நான் எடுத்துச் செல்கிறேன்.” என்று தெரிவித்தார்.
அப்பொழுது அஸ்வலர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியைக் கேட்க துணிந்தார்.

ஸ்லோகம் 3 லிருந்து 6 வரை நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.
கேள்வி: 1
யாகத்தை மேற்கொள்ளும் சாதாரண மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?
ஸ்வாபாவிக கர்மம் – ராக-துவேஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் இரண்டு விதமாக இருக்கும்.
1. சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மங்கள் (சாஸ்திரீய கர்மம்)
2. ஸ்வாபாவிக கர்மம் – நம் விருப்பு-வெறுப்புக்களின் தூண்டுதலால் செய்யப்படுவது
ஒவ்வொருவரும் ராக-துவேஷத்தின் தூண்டுதலால் செய்கின்ற கர்மத்தின் பிடியில்தான் இருக்கிறோம்.

பதில்: நம் அபிமானம் சமஷ்டியோடு கலந்து விட்டால் இதிலிருந்து விடுபடுவோம்.
எல்லோருடைய நலமும் என் நலம் என்று நினைப்பதுதான். வியஷ்டியை சமஷ்டியோடு ஐக்கியப்படுத்துதல்.
யாகத்தின்போது ரிக் வேதத்தை சொல்வோம், ஓதுவோர் ஹோதா என்று அழைக்கப்படுவார்.
அதியக்ஞம் – யாகத்தில் உள்ள வியஷ்டி தத்துவம்
அதியாத்மம்- நம்மிடத்தில் உள்ள (எஜமானனிடத்தில் உள்ள ) வியஷ்டி வாக்கு.
அதிதெய்வம் – அக்னி தேவதை – சமஷ்டி
இந்த வியஷ்டிகளை அதி தெய்வமன அக்னி தேவதையான சமஷ்டியுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும்போது நம்முடைய வாக் என்னும் வியஷ்டியை அக்னி சமஷ்டியுடன் ஒன்று சேர்ந்து நம்மை ம்ருத்யுவின் பிடியிலிருந்து விடுவித்து விடும்.

ஸ்லோகம்-3
கேள்வி-2
கால பரிசேதம் ( காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்) இதிலிருந்து எப்படி விடுபடுவது?
· சூரியனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
· சந்திரனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
காலத்தினால் நமக்கு ஏற்படுகின்ற விளைவு கண்டு மனம் பாதிக்கப்படுகின்றது. காலத்தினால் வரும் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?

ஸ்லோகம்-4
அதியக்ஞம் – யஜுர் வேதத்தை உச்சரிக்கின்றவர், ஓதுபவர்
அதியாத்மம் – கண்
அதிதெய்வம் – சூரியன் – ஆதித்ய தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-5
அதியக்ஞம் – உத்கர்த்த, சாம வேதத்தை உச்சரிக்கின்றவர்
அதியாத்மம் – பிராணன்
அதிதெய்வம் – வாயு தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-6
சுவர்க்க லோகத்திற்கு செல்வதற்கு உபாஸனை ஏதாவது உண்டா?
அதியக்ஞம் – அதர்வன வேதத்தை உச்சரிக்கின்றவர், பிரம்மா
அதியாத்மம் – மனம்
இதையிரண்டையும் சந்திரன் தேவதையிடம் ஐக்கியப்படுத்துதல்

ஸ்லோகம்-7
சம்பத் உபாஸனை என்று ஒரு உபாஸனை இருக்கிறது அதை தியானிப்பதால் நிகிருஷ்ட கர்மணி உக்ருஷ்ட கர்ம தரிசனம்
அதாவது எளிமையான சிறிய கர்மத்தில் பெரிய கர்மத்தின் பலனை அடைதல்.
உதாரணமாக சாதரண நீரை கங்கை நீராக நினைத்து குளிப்பது, சாதாரண கல்லில் மேலான தெய்வத்தை பார்த்தல்.
அதுபோல சாதாரண கர்மத்தை செய்து பெரிய கர்மத்தால் அடையும் பலனை அடைதல்.

யாகங்கள் செய்யும் போது மூன்று இடங்களில் ரிக் வேதம் ஓதப்படும்.
1. ஆஹுதிகளை போடுவதற்கு முன் – புரோனுவாக்யா
2. ஆஹுதிகளை போடும்போது யாஜ்யா
3. ஆஹுதிகளை போட்ட பிறட்கு சஷ்யா
இந்த மூன்று கர்மத்தில் மூன்று விதமான உலகத்தை (பூர், புவ, ஸ்வ) தியானித்தல்.

மூன்று விதமான ஆஹுதிகள் (oblations) போடும்போது, மூன்று நிலைகளாக நெருப்பானது தோன்றும்
1. சுடர்விட்டு எரிவது 2. சப்தத்தை எழுப்புவது 3. கீழே சென்று விடும். இந்த மூன்று உலகத்தை தியானிக்க வேண்டும்.

சாம வேதத்தை ஓதுபவர் – மேலே கூறியபடி தியானிக்க வேண்டும்.
பிரம்மா என்கின்ற ரித்விக் – யாகம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வையிடுபவர்.
இவர் மனதை அனந்தமான உலகமாக தியானித்தல். நம் மனதில் வரும் எண்ணங்களெல்லாம் ஒரு உலகமாக தியானித்தல்.

—————

பகுதி-2 : ஆர்த்தபாக பிரமாணம்
கேள்வி-1
மனிதனை பிடித்து வைத்திருப்பது எது?
இந்த பிரபஞ்சத்தில் எட்டு கிரகங்கள் (நம்மை பிடித்து வைத்திருப்பது), எட்டு அதிகிரகங்கள் (கிரகத்தையே பிடித்து வைத்திருப்பது) உள்ளன.
இங்கு கிரகங்கள் என்று கூறுவது நம்முடைய இந்திரியங்களை குறிக்கிறது. அதிகிரகங்கள் என்பது இந்திரியங்களின் விஷயங்களை குறிக்கிறது.
நாம் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறோம். எனவே இவைகளை கிரகங்கள் என்று கூறுகிறோம்.
இந்திரியங்கள் அதனுடைய விஷயங்களின் வசத்தில் இருக்கின்றது எனவே இதை அதிகிரகம் என்று கூறுகிறோம்.
உதாரணமாக சுவையுணரும் நாக்குக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். ஆனால் நாக்கோ சுவைதரும் பொருட்களின் வசத்தில் இருக்கிறது.
எனவேதான் நாம் இந்த அதிகிரகத்தால் சுவையான உணவு பண்டத்தை அதிகமாக உட்கொள்கிறோம்.
வெளி சூழ்நிலைகள்தான் இந்திரியங்களை தம் வசப்படுத்துகிறது. எனவே நாம் இந்த சூழ்நிலைகளை விட்டுவிலகி ஓடி விட வேண்டும்.
வெளிசூழ்நிலைகளை இந்திரியங்களை பாதிக்காமல் இருக்க நல்ல சூழ்நிலைகளை நோக்கு சென்றுவிட வேண்டும்.

கிரகம் அதிகிரகம்
பிராணன்(சுவாசிக்கின்ற பிராணன்) வாசனை
வாக் (பேசுகின்ற சக்தி) நாமம், சொற்கள், விஷயங்கள், செய்திகள்
நாக்கு (சுவையுணரும் சக்தி) ரஸஹ – சுவை
கண்கள் (பார்க்கும் சக்தி) ரூபம், உருவம்
காது (கேட்கும் சக்தி) சப்தம் (இனிமையான் சப்தங்கள்)
மனது ஆசை, எண்ணங்கள், சங்கல்பத்தின் வசத்தி இருத்தல்
கைகள் கர்ம, செயல்
தோல் தொட்டு உணரும், இன்பத்தை கொடுக்கும் விஷயங்கள்

கேள்வி-2
ம்ருத்யுவின் சுபாவம் அனைத்தையும் சாப்பிடுவது, அழிப்பது ஆனால் அந்த ம்ருத்யுவை சாப்பிடும் ம்ருத்யு எது? ம்ருத்யுவுடைய ம்ருத்யு எது?
அக்னி என்ற ம்ருத்யுவிற்கு தண்ணீர்தான் ம்ருத்யு அதுபோல ஆத்ம ஞானம்தான் ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கிறது.
மரணம் என்பது ஸ்தூல சரீரத்தை அழித்து விடுகிறது. சூட்சும சரீரத்தை பாதிக்கிறது.
நான் என்ற அபிமானம் ஆத்மாவின் வைக்கும்போது மரணம் நம்மை நெருங்குவதில்லை. மரண பயம் ஏற்படுவதில்லை.
ஆத்மஞானம் என்ற நீரைக் கொண்டு சம்சாரம் என்ற தீயை அணைத்து விடலாம்.

கேள்வி-3
ஞானி மரணமடைந்தால் அவனது சூட்சும சரீரங்களின் நிலை என்ன?
ஞானி மரணத்திற்கு பிறட்கு அவனது இந்திரிய சக்திகளெல்லாம் அந்தந்த தேவதைகளோடு கலந்து விடுகின்றது.
சூட்சும சரீரமாக எங்கும் செல்வதில்லை அது அந்தந்த சமஷ்டியுடன் ஐக்கியமாகி விடுகிறது எந்த பயணமும் மேற்கொள்வதில்லை.
அவரது ஸ்தூல உடம்பு உப்பி அழிந்து விடும். அக்ஞானிகளின் ஸ்தூல உடம்பு இவ்வாறுதான் அழியும்.

கேள்வி-4
ஞானி இறந்ததற்கு பிறகு ஏதாவது மீதி இருக்கிறதா?
அவரது பெயர்தான் விட்டுவிட்டு போகமுடியும்.

கேள்வி-5
அக்ஞானிகளுடைய மரணத்திற்கு பிறகு நிலை என்ன?
இந்திரியங்கள் எல்லாம் சூட்சும சரீரத்தில் ஒடுங்கி பயணம் மேற்கொள்கிறது.
அவரவர்களுடைய கர்ம வினைப்படி அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.

————–

பகுதி-3: புஜ்ய பிரமாணம்
பாரிக்‌ஷதர்கள் (நல்ல கர்மத்தை செய்தவர்கள்) இறந்த பிறகு எங்கு செல்கிறார்கள். இவர்கள் பிரம்ம லோகத்திற்குத்தான் செல்வார்கள்,
ஹிரண்ய கர்ப்ப லோகத்திற்கு செல்வார்கள்.

சங்கரர் பாஷ்ய விசாரம் (கர்மபல விசாரம்)
சம்சாரத்தில் அடையும் அதிகபட்ச பலன் பிரம்மலோகத்தை அடைவதுதான். ஞானிகளுக்கு கர்மம் எதுவும் இல்லாததால்
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் அக்ஞானிகள் பாவகர்மங்களை செய்திருந்தால் கீழான பிறவியைதான் அடைவார்கள்,
அதிலிருந்துகொண்டு துயரத்தைத் தான் அனுபவிப்பார்கள். புண்ணிய கர்மங்களான தமம், யாகம், தவம் போன்ற
நற்காரியங்களைச் செய்வதனால் வைராக்யத்தை அடையலாம்.

தர்மத்தால் சுகமும், ஞானமும் கிடைக்கின்றன. புண்ணியத்தின் வழியேதான் மோக்‌ஷத்தை அடைய முடியும்.
புண்ணியத்தால் மட்டும் மோக்‌ஷத்தை அடைய முடியாது அதிக பட்சமாக ஹிரண்யகர்ப்பலோகத்தைத்தான் அடைய முடியும்.

பிரம்மலக்‌ஷணம் – அவ்யாக்ருதம் (வெளித்தோற்றத்திற்கு வராத), அகாரிய, நித்தியமான பிரம்மத்தை கர்மத்தின் மூலமாக அடைய முடியாது.
வெளித்தோற்றதிற்கு வந்த ஒன்றில் கர்ம்ம் என்பதை செய்ய முடியும். விதைக்குள் உள்ள மரத்தை ஒன்றும் செய்ய முடியாது.
விதையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதனுடல் விவகாரம் செய்ய முடியும்.
கர்மமானது ஆத்ம விசாரத்திற்கு தகுதிபடுத்தும், தகுதியடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.
பிறகு அறிவையடைந்து ஞானமடைய வேண்டும் அதற்குப்பிறகு அதில் நிலை பெற்று நிற்க வேண்டும்.

கேள்வி: புண்ணிய கர்மத்தின் மூலமாக மோட்சத்தையடையலாம்.
பதில்: பந்தம் என்றால் என்ன? அதற்குக் காரணம் என்ன?
பந்தத்திற்கு காரணம் அறியாமைதான். ஒருவேளை அறியாமையில்லையென்றால் என்னவாகும்.
பூரணமான பிரம்மத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் பிறகு அதை அடைய வேண்டும்.
இது சாத்தியமில்லை எனவே அவித்யா ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் இதை நீக்க வித்யாவை தவிர வேறெந்த சாதனமும் இல்லை.
உண்மையில் புருஷார்த்தம் என்பது அவித்யா நீங்கினால் மோட்சம். கயிற்றில் தோன்றிய பாம்பு அவித்யா நீங்கி விட்டால் மறைந்து விடும்,
அதனால் ஏற்பட்ட பயமும் போய் விடும். கர்ம்ம அறியாமையை நீக்கும் சாதனம் கிடையாது.

கர்மத்தால் அடையும் பலன்களில் மோட்சம் என்பது கிடையாது.
1. கர்மத்தால் உற்பத்தி – ஒரு பொருளை உருவாக்கல்லம், பிரம்மன் உருவாக்க-படுவதில்லை எனவே இந்த முறையில் பிரம்மத்தை அடைய முடியாது.
2. ஆப்தி – அடைதல், ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது (காலமும், தேசமும் ).
காலத்தால் ஒன்றை அடைவது, இப்படி பிரம்மத்தை அடைய வேண்டிய விஷயமல்ல. இந்த பிரம்மன் ஆத்மாவாக இருப்பதால்
அதை அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த முறையிலும் ஆத்மாவை அடைய முடியாது.
3. விகாரியம் – மாற்றம் – கர்மத்தால் சில மாற்றங்களை கொண்டு வருதல்; பிரம்மத்தை ஒரு மாற்றத்தின் மூலம் அடையலாம்
என்ற வழியிலும் அதை அடைய முடியாது. பிரம்மத்திற்கு அவயவங்கள் கிடையாது, அதனால என்றும் மாறாதது(நிர்விகாரம்).
எனவே இந்தப் பாதையிலும் பிரம்மத்தை அடைய முடியாது
4. தூய்மைபடுத்துதல் (ஸம்ஸ்காரியம்) – ஒரு பொருளை தூய்மைப்படுத்துதல் என்பது தீயகுணங்களை நீக்கி
நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல். பிரம்மன் என்றும் சுத்தமாக இருப்பதால், எந்த குணங்களும் இல்லாத்தால் அஸங்கம்.
இந்த வகையினாலும் பிரம்மத்தை அடைய முடியாது.
இதனால் அறிவது கர்மத்தின் மூலம் மோட்சத்தை அடைய முடியாது. அறியாமையை நீக்குவதன் மூலம்தான் அதை அடைய முடியும்.

கேள்வி : கர்மத்தினுடன் உபாஸனையை சேர்த்துக்கொண்டு நிஷ்காம்யமாக செய்தால் இந்த நான்கு பலன்களை தவிர்த்து
வேறு பலன் வரலாம் அல்லவா, அது ஏன் மோட்சமாக இருக்கக் கூடாது
பதில்: உன்னுடைய இந்த கருத்துக்கு எந்தவிதமான பிரமானமும் இல்லை. இது உன் சொந்த கற்பனை.
இது பிரமான அபாவாத். இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

பிரத்யக்‌ஷ பிரமாணம்: கர்மம் செய்தால் அதனுடைய பலன் சாஸ்திரத்தின் மூலம்தான் நாம் அறிகிறோம். நம் அனுபவத்தின் மூலம் இதை நிரூபிக்க முடியாது.
அனுமானம் பிரத்யக்‌ஷத்தால் நிரூபிக்க முடியாததை அனுமானத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது.
உன்னுடைய உதாரணத்தின் மூலம் தெரிவது என்னவென்றால் எதை செய்கிறாயோ அதற்குள்ளேயேதான் பலன் வரமுடியும்,
அதை விட்டு விட்டு வேறொன்று பலனாக வர முடியாது.

கேள்வி : நித்திய கர்மத்திற்கும், நிஷ்காம கர்மத்திற்கும் பலனாக மோட்சத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அர்த்தாபத்தி பிரமாணத்தை உபயோகிக்கலாம். விஷ்வஜித் நியாயமான பலன் சொல்லப்படாத கர்மத்திற்கு
சுவர்க்க லோகம் பிராப்தி என்று எடுத்துக் கொள்வதை போல!!
அர்த்தாபத்தி பிரமாணம் – நித்திய கர்மங்களை பலன் சொல்லி யிருந்தாலும், சொல்லவில்லை யென்றாலும் காம்யமாக
செய்யக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. இதை உயிரோடு இருக்கும் வரை எல்லோராலும் செய்ய வேண்டும்.
எனவே மோட்சம் என்பதை பலனாக இதற்கு சொல்லலாம்
பதில் இப்படி பலனை கற்பனை செய்வதால் விஷ்வஜித் நியாயத்தை உன்னை அறியாமல் நீ பயன்படுத்தி இருக்கிறாய்
கேள்வி மோட்சத்தை பலனாக சொல்லவில்லை, மோட்சம் தன்னிடத்திலே இருப்பதுதானே
பதில் முதலில் கர்மத்தின் பலன் என்று சொன்னாய், இப்பொழுது பலன் இல்லை என்று முரண்பட்டு பேசுகிறாய்.
கேள்வி மோட்சத்தை ஞானத்தின் பலன் என்று சொல்வது போல நானும் அதேமாதி சொல்கிறேன்.
பதில் ஞானத்தின் பலன் அறியாமை நீங்குதல் என்றுதான் பொருள். வெளிச்சம் இருளை நீக்கி பொருட்களை
காட்டிக் கொடுப்பதை போல அறியாமை நீங்கி விட்டால் அதனால் அடைந்த விளைவுகளும் நீங்கி விடும்.
இதைத்தான் ஞானத்தின் பலன் மோட்சம் ஆனால் கர்மத்தின் பலன் அக்ஞான நிவிருத்தி அல்ல, அறியாமையை நீக்க முடியாது.
கேள்வி கர்மத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு அவைகள் திருஷ்ட பலன், அதிருஷ்ட பலன்.
இதில் அதிருஷ்ட பலன் ஏன் அறியாமையை நீக்கி மோட்சத்தை கொடுக்க முடியாது?
பதில் கர்மங்களில் நிலவற்றிற்கு திருஷ்ட பலனோடு முடிந்து விடுகிறது. சில இடங்களில் அதிருஷ்ட பலனை
கற்பனை செய்தாக வேண்டும், அந்த இடங்களில் திருஷ்ட பலனை சொல்ல முடியாததாக இருக்கும்.
மோட்சம் என்பது திருஷ்ட பலன், ஜீவன் முக்தி. எனவே அதிருஷ்ட ப்லன் என்று கற்பனை செய்தது தவறு.
நித்திய கர்மங்கள், நிஷ்காம கர்மங்கள் சித்தஸுத்தியைத்தான் தரும்.
இது நம்மை ஆத்ம விசாரத்திற்கு தகுதிப்படுத்துகிறது அதன் மூலம் ஞானத்தை அடைந்து மோட்சத்தை அடையலாம்.

———–

பகுதி-4: உஷஸ்த பிரமாணம்
உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேளியை கேட்க ஆரம்பித்தார்.
கேள்வி: அனைத்துக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா அபரோக்‌ஷமாகவும், நேரிடையாகவும், சாக்ஷாத்காரமாகவும்,
மிகத் தெளிவாகவும் உள்ள ஸ்வரூபத்தை விளக்குங்கள்
பொருட்கள் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் தூரத்தில் இருக்கின்ற பொருளை குறிப்பது
அபரோக்ஷ ஞானம் அருகில் இருக்கின்ற பொருளை குறிப்பது
பிரம்மன் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் பிரம்மன் ஒன்று இருக்கிறது என்ற அறிவு
அபரோக்ஷ ஞானம் பிரம்மன் நம்மிட்த்திலே இருக்கிறது என்ற அறிவு அது ஸ்வயம் பிரகாசமாகவும், தானாக விளங்கி கொண்டிருப்பதாகவும் இருக்கிறது
எனவே ஒரு பொருள் தன் இருத்தலையும், பிரகாசிப்பதையும் பிரமாணத்தை சார்ந்திருக்கிறது.
பிரம்மன் மட்டும்தான் பிரமாணம் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கின்றது (ஸ்வயம் பிரகாசம்) நான் அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன்
என்பதற்கு எந்த பிரமாணமும் வேண்டாம்.
சாக்ஷாத் அபரோக்‌ஷம்: இது இந்திரியத்திற்கு விஷயமாக வராத ஒரு வஸ்து அன்பதை உறுதியிட்டு கூற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரத்யக்‌ஷ பிரமாணத்தால் தெரிந்துக் கொண்டிருக்கும் பொருளை அபரோக்‌ஷம் என்றும் கூறுவர்.
இந்த அர்த்தத்தில் பிரம்மத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சாக்ஷாத் அபரோக்‌ஷம் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் एषः आत्मा सर्वन्त्रः இந்த ஆத்மாதான் எல்லா உயிர்களிடத்திலும் உள்ளது, உன்னிடத்திலும் உள்ளது
கேள்வி ஸர்வாந்தர ஆத்மாவை மேலும் விளக்குங்கள்?
பதில் ஆத்மாவின் துணைக் கொண்டு ஜடமான இந்திரியங்கள் அறிவு பெற்று செயல்படுகின்றது.
ஆத்மா செயல்படாதது, அறிவு பூர்வமானது ஜடமான ஒன்று எதனால் சேதனத்தைப் போல செயல்படுகிறதோ
அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றினால் ஜடமான பிராணன் சேதனமாக செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவின் இருப்பால் அனாத்மாக்கள் அறிவை அடைந்து செயல்படுகிறது.
यः प्राणेन प्राणितः – எந்த ஒரு ஆத்மா இருப்பதனால் சூட்சும சரீரத்தின் துணைக் கொண்டு பிராணன் செயல்படுகிறதோ
அந்த ஒன்று தான் எல்லோருடைய சரீரத்திற்குள்ளும் இருக்கிறது.
இதேமாதிர் அபானன், வியான்ன், உதானன் இவைகளின் செயல் புரியம் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
உன்னிட்த்தில் இருக்கும் இப்படிபட்ட ஆத்மாதான் எல்லோரிடத்தின்னுள்ளும் இருக்கிறது

ஸ்லோகம்-2
கேள்வி இது பசு, இது குதிரை என்று எப்படி நேரிடையாக குறிப்பிடுகிறோமோ அப்படி ஆத்மாவைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.
பதில் द्रुष्दे द्र्ष्टारम – த்ருஷ்டா – மனதில் தோன்றும் எண்ணங்கள், மனோவிருத்தி
த்ருஷ்டே – மனதில் தோன்றும் எண்ணத்தை
த்ரஷ்டா – சாட்சி, த்ரஷ்டாரம் – சாட்சியை
மனதில் எழும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது. உலகை பார்க்கும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது.
சப்தத்தை கேட்கும் எண்ணத்தை கேட்கும் சாட்சியை பார்க்க முடியாது. சுவைக்கின்ற சுவையை உணரும் சாட்சியை பார்க்க முடியாது.

விசாரம் (த்ருஷ்டி, த்ரஷ்டா)
த்ருஷ்டி
1. கரணம்: மனதிலுள்ள எண்ணம். ஒரு அறிவை அடைய வேண்டுமென்றால் அதை கொடுப்பதற்கு கரணம்(கருவி) தேவை,
அதன் உதவியால்தான் நாம் அறிவை அடைய முடியும். இது மாற்றத்திற்குட்பட்டது.
சவிகார விருத்தி: மனதில் தோன்றும் மாற்றத்தை உடைய எண்ணங்கள்
2. சைதன்யம்(அறிவு): இது மனதில் எழும் எண்ணங்களை விளக்குகிறது. மாற்றம் எண்ணத்தில்தான் இருக்கும் அறிவில் அல்ல.
இது நிர்விகார சைதன்யம்- மாற்றமடையாத அறிவு ஸ்வரூபம்.

த்ரஷ்டா
1. பார்ப்பவன்: கர்த்தா, பிரமாதா, போக்தா (பார்த்து, கேட்டு, சுவைத்து) அறிபவன்.
இந்த நிலையில் சவிகார த்ரஷ்டா, சவிகார பிரமாதா – மாற்றத்தை அடைகின்ற போக்தா
2. நிர்விகார சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாத சாட்சி.

சாதாரணமாக நாம் மனதைத்தான் அறிபவன், அனுபவிக்கின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இதை அறிவதற்கு எண்ணங்கள்தான் கருவியாக பயன்படுத்துகிறோம். எண்ணங்கள் என்றும் மனதில் தோன்றி மறைவதாக இருக்கின்றது.
மனதை எண்ணங்கள் சார்ந்திருக்கிறது. எண்ணங்களை பதிவு செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், எண்ணங்களை எடுத்து
ஆராய்ச்சி செய்வது போன்ற எல்லாமே மனதை ஆதாரமாக வைத்துத்தான் நடக்கிறது. த்ருஷ்யம் – உலகம், த்ருஷ்டி – எண்ணங்கள், த்ரஷ்டா-மனம்.
சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாமல், மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருப்பவன்.
சாக்‌ஷியாக இருப்பவனுக்கும் ஒரு த்ருஷ்டி தேவை. இதற்கு கரணமாக இருப்பது நிர்விகார சைதன்யம்,
இது அறிவது எதை என்று நினைத்தோமானால் அது மனதையும், மனதில் தோன்றும் எண்ணங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
த்ருஷ்டி
த்ரஷ்டா
த்ருஷ்யம்
அனாத்மா
எண்ணம்
மனம்
ஜகத்
சாட்சி
மனம்
சைதன்யம்
மனம்
ஜகத்தை மனம் அறிகிறது, மனதை சாட்சி அறிகிறது. சாட்சி உறங்குவதே கிடையாது. மனதை ஜடமாக அறியாததற்கு காரணம்,
சாட்சி எப்பொழுதும் மனதை விளக்கிக் கொண்டிருப்பதனால். ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை சாட்சி அறிந்து
கொண்டிருப்பதால் நம்மால் விழித்தப்பின் அதை நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.

சாஸ்திரம் இங்கே இந்த உபதேசத்தின் மூலம் சொல்வது நான் அன்பதை சட்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை விட்டுவிட வேண்டும்.
இந்த உலகம் நமக்கு விஷயமாக இருக்காது. அதனால் உலக விஷயங்களில் வரும் துயரங்கள் எதுவும், அனைத்து மாற்றங்களும் நம்மை பாதிக்காது.
இதன் மூலம் மனதை பார்க்கப்படும் பொருளாக மாறி விட்டால் துயரமே வராது. எப்படி சம்சார காலத்தில் துயரம் தானாக வருவது போல
மோட்ச காலத்தின் மனநிறைவு தானாக வரும் என்றாகி விடும்.

உபதேசம் சாட்சியை யாராலும் விளக்க முடியாது
த்ருஷ்டி மனதில் உள்ள எண்ணங்கள்
த்ரஷ்டா சாட்சி
த்ருஷ்டே உலகத்தை பார்க்கும் எண்ணங்கள்
த்ரஷ்டா இதை பார்க்கும் சாட்சியை யாரும் பார்க்க முடியாது, விளக்க முடியாது

சப்தத்தை கேட்கும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
சிந்திக்கின்றதால் வரும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
ஆராய்ந்தறியும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
அதுதான் உன்னுடைய ஆத்மா. அதைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் இதுவேதான் இருக்கிறது.

अतः अन्यत आर्तम – சாட்சியிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருக்கின்ற அனைத்தும் (அனாத்மக்களும்) மித்யா, துயரத்தைக் கொடுப்பவைகள்
आर्तँ துயர ஸ்வரூபம், அழிவுக்குட்பட்டது, மித்யா
अन्यत ஜகத், ஜகத்தை கிரகிக்கும் எண்ணங்கள், மனது
மனமும் அதில் எழும் எண்ணங்களும், எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும் இந்த ஜகத் அனைத்தும் மித்யா.

सत – அந்தகரணத்வம், असत – மித்யாத்வம்
அதிகரணம் X அந்தகரணம் (ஆதாரம் – அதிஷ்டானம்) அற்றது.
“புத்தகம் மேசை மேல் இருக்கிறது”
இதில் புத்தகம் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது. நாம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஸத் அதிகரணம். சில பொருட்கள் இல்லாமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. மேசை மீது மலர் இல்லை.
அதில் மேசையானது மலரின் இல்லாமைக்கு ஆதாரமாக இருக்கிறது.
எந்த ஒன்று ஸத்திற்கும் ( இருத்தலுக்கும்), அஸத்திற்கும் (இல்லாமைக்கும்) ஆதாரமாக இருக்கிறதோ அதுதான் மித்யா.
”கயிற்றில் தோன்றும் பாம்பு”
இதில் பாம்பு ஸத்தின் ஆதாரமில்லை, ஏனெனில் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. இல்லாமைக்கும் அதிகரணம் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் அது அனுபவித்திற்கு வருகிறது. இதில் பாம்பானது இருத்தலுக்கு அந்திகரணம் இல்லாமைகும் அந்திகரணம். இதுவேதான் மித்யா.

————-

பகுதி-5: கஹோல பிரமாணம்
இந்தப் பகுதியில் கீழ்கண்ட கருத்துக்கள் விளக்கப்படுகிறது.
1. ஆத்மா ஸ்வரூபம் – சம்சாரமற்றது
2. இரண்டு சாதனைகள் – ஞானம், சந்நியாஸம் (தியாகம்)
3. அனாத்மாக்களில் இருக்கின்ற ஆசைகளின் வேற்றுமைகள்
4. சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் விளக்கம்
5. ஞானியின் லட்சணம்
6. மித்யாத்வம்

சங்கரரின் முகவுரை:
கேள்வி: சென்ற பிராமனத்தில் பேசப்பட்ட ஆத்மா வேறு, இந்த பிராமனத்தில் பேசுகின்ற ஆத்மா
வேறு போல என்பது போல தோன்றுகிறதே. இரண்டும் ஒன்று என்றால் மீண்டும் சொல்கிறாய் என்ற தோஷம் இருக்கிறதே.
அதனால் இந்த பிராமனத்தில் வேறொன்றுத்தான் விளக்கப்படுகிறது.
பதில்: சென்ற பிராமனத்தில் விளக்கப்பட்ட ஆத்மாவைத்தான் இந்த பிராமனத்தில் விளக்கப்படுகிறது.
ஆத்மாவின் வேறு சில விசேஷங்கள் இங்கு பேசப்படுகின்றது. ஆத்மா சம்சாரமற்றது என்ற புதிய கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல சில சாதனைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி நான் என்ற சொல்தான் சம்சாரியாக இருக்கிறது. ஆனால் இங்கு எப்படி ஒரு வஸ்து சம்சாரியாகவும், அசம்சாரியாகவும் இருக்கும்?
பதில் பிராந்தி மாத்திரம். வெறும் குழப்பத்தால் வந்தது. சம்சாரமே மித்யாதான். எங்கே மித்யா வருகிறதோ
அங்கே இரண்டு விஷயங்கள் சம்பவிக்கும். எனவே நான் என்பதில் மித்யாவான சம்சாரமும், சத்யமான ஆத்மாவும் இருக்கலாம்.

மந்திர விளக்கம்: (ஆத்ம ஸ்வரூபம்)
கேள்வி எந்த ஒன்று சாக்‌ஷாத் அபரோக்‌ஷமாக இருக்கின்றதோ, எந்த ஒன்று அனைவருக்குள்ளும் இருக்கின்றதோ அதை விளக்கி சொல்லுங்கள்.
பதில் உன்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
கேள்வி இதை மீண்டும் விளக்கி சொல்லுங்கள்.
பதில் எந்த ஒன்று ஆறு தத்துவங்களான அஸனாய, பிபாஸே, சோகம், மோஹம், ஜராம், ம்ருத்யு என்கின்ற
சம்சாரத்தை கடந்து இருக்கின்றதோ, அதுவே ஆத்மாவாக இருக்கின்றது.
அஸனாய – பசி; பிபாஸே-தாகம்; சோகம் – துயரம்; மோஹம் – ஆசை;
ஜரா – வயோதிகம்; ம்ருத்யு – மரணம்.
அஸனாய, பிபாஸ – பிராணமய கோசம் – இதில் உள்ள அபிமானத்தால்தான் துயரத்தை அனுபவிக்கின்றோம்.
சோகம் – மனோமய கோசம்
மோகம் – விக்ஞானமய கோசம்
ஜரா, ம்ருத்யு – அன்னமய கோசம்
ஆனந்தமய கோசமே சம்சாரத்தை மறந்த நிலை. ஆனால் துயரத்தினுடைய விதை இருந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு அடைந்த இன்பத்தை திரும்ப திரும்ப எடுக்கும் முயற்சியில் சம்சாரத்தை வீழ்த்தி விடும்.
இதனால் கோபம், மோகம், என்பதை அன்பவிக்க நேரிடும்.

அஸனாய (பசி), பிபாஸ (தாகம்)
எதுவரை பிராணமய கோசத்தில் அபிமானம் இருக்கிறோமோ அதுவரை பசி தாகம் என்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.
சோகம்: மனதில் இருக்கும் விகாரம். துயத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆசைப்பட்ட பொருளை அடையாவிட்டால் சோகத்தை அடைவோம். சங்கரர் சோகத்தின் விளைவே ஆசை என்று கூறுகிறார்.
ஸித்த அநவஸ்திதி (அரதி) மன சஞ்சலத்தில் இருத்தல், சித்தம் நிறைவில்லாமல் இருத்தல், இதனுடைய விளைவுதான் ஆசை.
இங்கு சோகம் என்பதற்கு மன நிறைவின்மையால் வரும் ஆசை என்ற பொருள் கொள்கிறார்.
மனநிறைவுடன் இருக்கும்போது மனமானது எதற்கும் ஆசைப்படாது.
மோகம்(விபரீதம்): விக்ஞானமய கோசத்தின் மீது உள்ள அபிமானத்தால் வருவது அநித்ய, தூய்மையற்ற,
துயரத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் அனாத்மாவில் நித்ய, தூய்மையான, சுகமானது என்கின்ற புத்தி மோகம்.
இது துக்கத்திற்கு காரணமாக இருப்பது.
ஜரா, ம்ருத்யு: ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற மாற்றம். இதிலிருந்து விடுதலை முடியாது.
இதிலிருந்து அபிமானத்தை எடுத்து விட்டால் இதனால் பாதிக்கப்பட மாட்டோம்.

ஐந்து கோசத்தையும் தாண்டியது, மூன்று உடலினையும் தாண்டியது ஆத்மா. சம்சாரமானது ஆத்மாவையும் சார்ந்திருக்காது,
ஜடமாக இருப்பதால் அனாத்மாவையும் சார்ந்திருக்காது. எனவே இது மித்யா.
இப்படிபட்ட மித்யாவான சம்சாரத்தை கடந்து இருப்பது, ஆதாரமாக இருப்பது ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பிரஸகதி – செய்யும் வாய்ப்பு உள்ள இடத்தில்தான்
பிரதிசேதம் – செய்யாதே என்று சொல்ல முடியும்.

அத்யாஸத்தினால் அனாத்மாவானது ஆத்மாவில் ஏற்றி வைத்து பார்க்கிறோம். எனவே ஆத்மா இவைகளை கடந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-2 சாதனைகள் (ஞானம், சந்நியாஸம்)
एतम तँ आत्मानम विदित्वा ब्राह्मणा – இந்த ஆத்மாவை அறிந்த சாதகர்கள்
पुत्र एषनायाः புத்திரன் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
विथैषयात्: – சொத்தின் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
लॊकेषयात् உலகத்தின் மீது இருக்கும் ஆசையிலிருந்தும்
वियुत्ताय – விடுபட்டு, भिक्शाचर्यम् – சந்நியாஸம் सरन्ति – எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆத்மவிசாரம்-1
ஆத்மாவை அடைதல் என்பது என்னையே அடைதலாகும். சம்சாரியான அஹம் அசம்சாரி அஹத்தை அடைய வேண்டும்.
இந்த நிலையை ஞானத்தினால்தான் அடையமுடியும். அடையும் வஸ்து ஏற்கனவே நம்மிட்த்தேதான் இருக்கிறது.
அக்ஞானமும் அதைத் தொடர்ந்து வருகின்ற அத்யாஸத்தினால், சம்சாரத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம்
இந்த நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

· ஆத்மாவை அறிந்த பிறகு சந்நியாஸத்தை எடுத்துக் கொள்வது
· சந்நியாஸத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஆத்மாவை அறிந்து கொள்வது
· ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பி எடுத்துக் கொண்ட சந்நியாஸம்.

விவிதிக்ஷா சந்நியாஸம் – புத்ர, வித்தம், லோகம் ஆகியவற்றை விட்டுவிட்டு வைராக்யம் அடைந்து,
ஆத்ம ஞானம் அடைய உதவும் சாதனைகளை செய்து அடைதல்
வித்வத் சந்நியாஸம் வைரக்யமும், ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எடுத்துகொள்ளும் சந்நியாஸம்.
இவர்களது லட்சியம் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவது.

இந்த இரண்டு சந்நியாஸமும் சாதனை ரூபமாக இருக்கின்றது. எனவே இவையிரண்டும் சாதனை ரூப சந்நியாஸம் என்று கூறுவர்.
இந்த சந்நியாஸத்தில் இருக்கும் சாதனைகளை சந்நியாஸ வாழ்க்கையில் இல்லாமல் இருப்பவர்களும் கடைப்பிடித்தால்
அவர்களும் ஞானமும் ஞான நிஷ்டையும் அடையலாம். ஸம்யக் ஞானம் ( ஞான நிஷ்டை) உள்ளவர்களுக்கு
சந்நியாஸம் என்பது லட்சணையாக இருக்கிறது.

ஆத்மவிசாரம்-2
கேள்வி: व्युत्थाय भिक्शचर्यँ चरन्ति – இதை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம். பூதார்த்த வாக்கியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. பூதார்த்த வாக்கியம் என்பது இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறது என்ற வாக்கியமானது நம்மால்
ஒத்துக் கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
இந்திரன் சக்தி வாய்ந்தவன் என்று சொல்வதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் இருக்கிறது.
இந்த வாக்கியத்தை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. வேதம் சொல்வது போல் வாழாதவன் கீழான நிலைக்கு சென்று விடுவார்கள். சந்நியாஸத்தில் எந்த விதிமுறையும் கிடையாது.
3. சந்நியாஸம் எடுத்துக் கொண்டால் வேதத்தை படிக்கக்கூடாது.
4. இங்கு மூன்று மட்டும் துறக்கப்படும், எல்லாவற்றையும் துறக்க தேவையில்லை.
பதில் வேதாந்தத்தில் உள்ள கர்மகாண்டம் முழுவதையும் சந்நியாஸம் எடுத்துக் கொண்டவர்கள் துறந்து விட வேண்டும்
என்று ஸ்ருதியே விதித்துள்ளது. எந்த அதிகாரிக்கு வேத வாக்கியம் கூறப்படுகிறது என்று பார்த்து பொருள் கொள்ள வேண்டும்.
இங்கே ஆசையுடையவனுக்கு சந்நியாஸம் தேவையில்லை, அனாத்ம விஷயங்களில் பற்றில்லாதவன் சந்நியாஸம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆசைகளை இரண்டு விதமாக நீக்கலாம். 1. தர்மப்படி அனுபவித்து நீக்கலாம், 2. ஞானத்தாலே நீக்க முடிவது.
எல்லா உபநிஷத்தின் குறிக்கோள் ஆத்மஞானம்தான் அதை அடையும் நேரடி சாதனங்கள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
இதில் வெற்றி அடைய சந்நியாஸம் உதவி புரிகிறது.

ஆத்மவிசாரம்-3
அனாத்மாவில் இருக்கும் ஆசைகளை ப்ரித்தறிதல். அனைவரும் மூன்று பெரிய ஆசைகளில் விழுந்திருக்கிறார்கள்.
அந்த ஆசைகளின் பிடியில் சிக்காமலிருக்க வேண்டும்.
புத்ர ஏஷணா- இது சாதனை இச்சாவாக கருதப்படுகிறது. தன் மகன மீதுள்ள ஆசை. இங்கு புத்திரன் ஒரு சாதனமாகவும்
அதைக் கொண்டு அடையும் சாத்தியமாக இகலோக, பரலோக சுக ப்ராப்தி. இங்கு புத்திரன் என்பதை உபலக்ஷணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே புத்திரன் மட்டுமல்ல மற்றவர்களின் உதவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும்.
இந்த உறவுகளால் நமக்கு பாதுகாப்பை பெறுவோம். ஆனால் பாதுகாப்பை கடைசி வரையில் வைத்திருக்க கூடாது.
அதை விட்டுவிட்டு வருவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறந்ததற்கு பிறகு புத்திரன் செய்யும் சிரார்தத்தால் நற்பலன் கிடைக்க உதவும். சாத்தியத்தின் மீதுள்ள பற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பிறகுதான் சாதனையை விடவேண்டும், முதலில் நம்மிடத்திலுள்ள பாதுகாப்பற்ற நினைப்பை அகற்ற வேண்டும்,
தனிமையில் பயமின்றி இருந்து பழக வேண்டும். அப்புறம்தான் சாதனையை விடவேண்டும்.,

வித்த ஏஷணா- இதுவும் சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.
· அசையா சொத்து: இதன் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும். இதுவும் சாத்தியத்தை துறந்த பிறகுதான், சாதனையை துறக்க வேண்டும்.
· வித்தத்தை பயன்படுத்துதல்: சொத்து இருந்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்தி சுகத்தை அடைந்தால்தான் அதனால் பிரயோஜனம் உண்டு.
· உபாஸனம் (அ) வித்யா: நாம் அடையும் வித்யாவுக்கு பொருள் தேவைப்படுகிறது.
நாம் அடையும் வித்யாதான் அதிக சுகத்தை அனுபவிக்கவும், மேலும் சொத்தை பெருக்கவும் உதவி செய்கிறது.
உபாஸனமும் ஒருவிதமான வித்தம்தான் எனவே இதன் மூலம் அடையும் செல்வங்களையும், அஷ்டமா சித்திகளையும் துறக்க வேண்டும்.

லோக ஏஷணா- இது சாத்திய இச்சாவாக கருதப்படுகிறது.
லோகம் என்பது இன்பத்தை நேரிடையாக கொடுக்க கூடிய உலகங்கள். இன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையில் இருத்தல்.
இந்த சூழ்நிலையை உருவாகும் முயற்சியை துறக்க வேண்டும்.

இதைப்போன்ற இச்சாக்கள் அனைத்தையும் அனாத்மா இச்சா என்று கூறலாம்.
இந்த அனாத்மா இச்சா சாதன இச்சா, சாத்திய இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாதன இச்சாவானது புத்ர இச்சா, வித்த இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாத்திய இச்சாவானது இகலோக, பரலோக இன்பங்கள்.

மந்திர விளக்கம்: புத்திரன் மீதுள்ள ஆசையானது வித்தத்தின் மீதிருக்கும் ஆசை, வித்தத்தின் மீதுள்ள ஆசையானது
லோகத்தின் மீதிருக்கும் ஆசை. ஆகவே ஆசை என்பது ஒன்றுதான். இந்த ஆசையை இரண்டாக பிரிக்கலாம், அவைகள் சாதன ஆசை, சாத்ய ஆசை.

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஸ்வரூப விளக்கம்:
तस्मात ब्राह्मणः पाण्डित्यम निर्विद्या –
ब्राह्मणः – சித்தஸுத்தி அடைந்தவர்கள், ஆசையிலிருந்து விடுதலையடைந்தவர்கள், வைராக்யத்தை அடைந்தவர்கள்,
சம, தமாதிகள் மூலம் வைராக்கியத்தில் நிலை பெற்றவர்கள்.
पाण्डित्यम निर्विद्या – பாண்டித்யத்தை முழுமையாக செய்து முடித்து
पाल्यॆन दिस्टासेत – பாலயத்துடன் இருக்க ஆசைப்பட வேண்டும்.
பால்யம், பாண்டித்யம் இவையிரண்டையும் செய்து முடித்த பிறகு मुनिः भभेत முனிவராக இருக்க வேண்டும்.
இவை மூன்றும் செய்து முடித்திருந்தால் அவன் பிராமணனாகி விடுகிறான், முக்தனாகி விடுகிறான், மோட்சத்தை அடைகிறான்.

சொல் விளக்கம்:
பாண்டித்யம்: ஆத்ம ஞானம்; உபநிஷத் சாஸ்திரத்திலிருந்து தோன்றியது பண்டா (पण्डा). இந்த பண்டாவை அடைந்தவன் பண்டிதன்.
பண்டாரம் என்ற சொல் ஆத்மஞானியை குறிக்கிறது. அந்த பண்டிதனாவதற்கு மேற்கொண்ட செயல்களை பாண்டித்யம் என்று கூறுவர்.
அந்த செயல்கள் வேதந்த வாக்ய விசாரம், குருவின் துணைக் கொண்டு செய்வதே சிரவணம்.
பாண்டித்ய நிர்வித்யா என்பது சிரவணத்தை பூர்த்தி செய்தல், முழுமையாக செய்தல் என்று பொருள்.
சிரவணம் எப்பொழுது முடிவடைகிறது என்று எப்படி அறிய முடியும் என்றால், உணவு உட்கொள்ளும்போது
எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று உணர்கிறோமோ அதேமாதிரி எப்பொழுது சந்தேகமில்லாமல் நான் தெரிந்து கொண்டேன்
என்ற உணர்வு வருகின்றதோ அப்போதுதான் சிரவணம் முடிவடைந்து விட்டது என்று உணரலாம். இந்த கேள்வியே நம் மனதில் எழும்பாது.

சுரேஷ்வராச்சாரியார் நான்கு நிலைகளில் (தத்வமஸி) என்ற ஞானத்தை அடைகிறோம் (சதுர்வித ஞானம்) என்று விவரிக்கிறார். (தத்+த்வம்+அஸி)
1. பதார்த்த அவகதி பூர்வம்: மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுதல்
2. ததஸ்ததி அவி சங்கதிஹி – இரண்டு சொற்களின் பொருள்களுக்கிடையே உள்ள சம்பந்தம்
(தத் என்ற சொல்லுக்கும், த்வம் என்ற சொல்லுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளுதல்)
3. விருத்தார்த்த துதி பஷ்சாத் – இந்த சம்பந்த த்தை கேட்ட உடனேயே வேறு விதமான எண்ணங்கள்தான் முதலில் தோன்றும்,.
இப்படி தோன்றும் விருத்தமான அர்த்தத்தை விட்டுவிட வேண்டும்.
4. த்தோ வாக்யார்த்த போதனம் – இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள ஐக்கியத்தைத்தான்.

पाल्यॆन दिस्टासेत – பால்யத்துடன் இருக்க முயற்சி செய்.
ஞானத்தையே பலமாக கொண்டிரு. அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பணமிருந்தால் நமக்கு மனபலம் கிடைக்கும்.
உறவுகள் நிறைய இருப்பதாலும் நமக்கு பலம் கிடைக்கும். இவ்வாறு அனாத்மா விஷயங்கள் நமக்கு பலத்தை கொடுப்பதாக உணர்கிறோம்.
இந்த பலத்தை நாம் தியாகம் செய்து விட வேண்டும். சிரவணத்தை முடித்தவுடன் அடைந்த ஞானமே எனக்கு பலம் என்று உறுதியாக இருக்க வேண்டும்.
அனாத்மாவிலிருக்கிற பலத்தை துறந்து விட்டு, ஞானத்திலிருந்து பலத்தை அடைய உறுதி கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். பணம், புகழ், பதவி, சொத்து இவைகளை வேண்டாம் என்று சொல்கின்ற மன உறுதியே பலம்.

पाल्यॆन भावः- குழந்தையைப் போல் இருக்க வேண்டும்,
1. விருப்பு-வெறுப்புக்களை, மற்ற தீய எண்ணங்களை துறந்த நிலை
2. குழந்தைகளிடத்தில் அகங்காரம் இல்லாத காரணத்தால் தன்னை மற்றவர்கள் முன் பெருமைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது போன்ற நிலை
3. நான் ஞானத்தை அடைந்தவன் என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதிருத்தல், அதை நிரூபிக்க முயற்சி செய்யாதிருக்கும் நிலை
4. ஞானத்தை அடைந்த்து விட்டேன் என்ற கர்வம் கொள்ளாதிருத்தல், எளிமையாக வாழ்தல்

அடைந்த ஞானத்தை உறுதிப்படுத்த வேண்டும். மனனம் என்ற சாதனை மூலம் இந்த பலத்தை அடைய வேண்டும்.
சந்தேகத்தை நீக்குவதன் மூலம் இந்த பலம் வந்து விடும். ஞானம் உறுதியாக வேண்டுமென்றால் அடைந்த ஞானத்தின் சந்தேகமற்று இருக்க வேண்டும்.
பாண்டித்யம், பால்யம் இவை இரண்டையும் முழுமையாக கடைப்பிடித்து ஒரு முனிவராக இருக்க வேண்டும்.
மௌனமாக இருக்க விரும்ப வேண்டும். அடைந்த ஞானத்துடன் மௌனமாக இருப்பவர்கள், அதைக் கடைபிடிப்பவர்கள் முனிவர் என்று அழைக்கப்படுவர்.

அமௌனம் – சிரவணம், மனனம் இவற்றைக் குறிப்பது
மௌனம் – நிதித்யாஸனத்தைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.

மௌனம்: வாய் திறந்து பேசாதிருத்தல், ஞானத்தை அடையாமல் உபாஸனை காலத்தில் இருக்கும் மௌனம், ஞானத்தை அடைந்த பின் இருக்கும் மௌனம் என்று இருவகையாக இருக்கிறது. உபாஸகர்களின் மௌனம் இரண்டாக உள்ளது. அவைகள்,
1. காஷ்ட மௌனம்: வாய் மட்டும் பேசாதிருத்த;
2. ஆகாஷ்ட மௌனம்: கை, கால் இவைகளினால் எந்த செய்கைகளினாலும் பேசாதிருத்தல்.
இதனால் அடையும் பலன்களாவது, மனதில் இருக்கின்ற சஞ்சலங்கள் நீங்கும், மனமானது ஒரு இடத்தில் குவியும், ஜபம் நன்றாக சித்திக்கும்.
ஸ்வதோஷம் – நம்மிடம் உள்ள குறைகள் எல்லாம் நமக்கே தெரிய வரும். சில பதிவுகள் எல்லாம் ஞானம் வந்தவுடன் சென்று விடாது.
இந்த ஞானத்தின் உதவிக் கொண்டு எல்லாவிதமான விபரீதபாவனைகளான இருமை, நான் கர்த்தா நிதித்யாஸனம் என்ற சாதனையின் மூலம் நீக்குதல்.

நிதித்யாஸனம்: நாம் அடைந்த ஞானத்தில் நின்று பழகுதல். இந்த நேரத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அனாத்மா விஷயமான பேச்சை மட்டும் விட்டுவிட வேண்டும். அனாத்ம விஷயத்தைப் பற்றி பேச பேச த்வைத புத்தி மேலும் பெருகும்.
நமக்கு தேவையில்லாத சங்கங்களை ஏற்படுத்தி விடும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தனிமை கிடைத்து விடும். மனமானது ஒருமுகப்பட்டு விடும்.

अथ मुनिः மௌனத்தில் ஈடுபட்டு நிதித்யாஸனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
வாக் என்கின்ற இந்திரியத்தின் துணைக் கொண்டு தான் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமௌனம் – சிரவணம், மனனம்; மௌனம்: நிதித்யாஸனம்.
அமௌனத்தையும், மௌனத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்தையும் முழுமையாக
பூர்த்தி செய்தவன் பிரம்மத்தை அடைகின்றான், அவனே ஜீவன் முக்தனாகின்றான்.

सः ब्राह्मः केन सयात्? இப்படிபட்ட ஜீவன் முக்தனை எப்படி அறியலாம்? எந்த நடவடிக்கையின் மூலமாக அவனை கண்டு கொள்வது?
येन स्यात्तेन அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான். வெளித்தோற்றத்தைக் கொண்டும்,
அவன் செய்யும் செயல்களை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. எனவே அவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

தொகுப்பு:
ஆத்மாவுக்கு சம்சாரம் இல்லை. இதை அடைதல் என்பது அறிவது என்பதாகும். புத்ரன், வித்தம், லோகம்
இந்த மூன்று பேராசைகளிலிருந்து விடுபட வேண்டும். பாண்டித்யம், பால்யம், முனி என்ற சாதனங்களை கூறி
இதன் மூலம்தான் ஞான பலத்தை அடைய வேண்டும். இப்படி சொல்லியபடி சாதனைகளை கடைபிடித்து
ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றவன் பிரம்மத்தை அடைந்தவனாகிறான். அவனையே ஜீவன்முக்தன் என்று கூறுவர்.
இவனுக்கென்று தனி லக்‌ஷணம் என்று ஒன்றும் கிடையாது. அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான்
அவன் செய்யும் செயல்களிலிருந்து நாம் அவனை அறிய முடியாது.

————

பகுதி-6: கார்கி பிரமாணம்
ஸ்லோகம்-1
இந்தப் பகுதியில் ஸ்தூலமான பிருத்வியிலிருந்து மிக மிக சூட்சுமமான ஹிரண்யகர்ப்பன் வரையில் விசாரம் செய்யப்படுகிறது.
आन्तरः மூலக்காரணமாக இருப்பது:
ஸர்வாந்தரஹ : எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றது, ஆதாரமாக இருக்கின்றது.
ஆந்தர தத்துவ விளக்கம்:
ஆந்தரம்: காரணம்; அபரிச்சின்னம் (வரையறுக்கப்படாதது); சூட்சுமம், சத்யம்.
· எது காரியமாக இருக்கிறதோ அது காரணத்தால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது வரையறுக்கப்பட்டதோ அது வரையறுக்கப்படாத தத்துவத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது ஸ்தூலமாக இருக்கிறதோ அது சூட்சுமத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
· எது மித்யாவாக இருக்கிறதோ அது சத்யத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
எல்லாவற்றிலும் ஆந்தரமாக இருப்பது எது?

மந்திர விளக்கம்:
பிருத்வியானது நீரினால் வியாபிக்கபட்டிருக்கிறது, நீரானது வாயுவினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது.
வாயுவானது ஆகாசத்தினால் வியாபிக்கபட்டிருக்கிறது, ஆகாசமானது கந்தர்வலோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது,
கந்தர்வலோகமானது பிரஜாபதி லோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது, பிரஜாபதிலோகமானது பிரம்மலோகத்தினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது,
பிரம்மலோகமானது எதனால் வியாபிக்கபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாக்ஞவல்கியர் பதில் சொல்லவில்லை
ஆனால் எச்சரிக்கை செய்கிறார் இதற்கு மேல் போனால் உன் தலை வெடித்து விடும்.
ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அனுமானம் மூலம் விளக்க முடியாது. தர்க்க பிரமானத்திற்கப்பால் உள்ள விளக்கத்தை
தர்க்கத்தில் பெற முயற்சி செய்யாதே என்று எச்சரிக்கிறார் யாக்ஞவல்கியர்.
अनतिप्रश्न्याँ – அனுமான பிரமானத்திற்குப்பாற்பட்ட விஷயத்தை, தர்க்க பிரமானத்திற்குள் வராததை
अतिप्रुच्छसि – தர்க்கத்தால் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்;
मातिप्राक्षीरिति- அந்த மாதிரி முயற்சிக்காதே.
பிரத்யக்‌ஷம் இல்லாமல் அனுமானம் பண்ண முடியாது. ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை ஆகாம பிரமானத்தால்தான் அடைய முடியும்.

——–

பகுதி-7: அந்தர்யாமி பிரமாணம்
ஸ்லோகம்-1
உத்தலகா என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்பதற்கு முன் ஒரு கதை சொன்னார்.
மத்ரா என்ற ஊரில் பதஞசலகாப்யம் என்பவர் வீட்டில் யக்ஞங்களை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருந்தோம்.
பதஞ்சலகாப்யாவின் மனைவிக்குள் ஒரு கந்தர்வன் புகுந்து கொண்டான்/ அந்த கந்தர்வனிடம் “”நீ யார்?” என்று கேட்டோம்.
அந்த கந்தர்வன், ‘என் பெயர் கபந்தன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பிறகு அவன் எங்களை பார்த்து, “எந்தவொரு சூத்ர தத்துவம் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும்
சீராக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த சூத்ர தத்துவத்தை, ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அறிவீர்களா? என்று கேட்டான்.
பதஞ்சலகாப்யர், ‘ஏ பகவான் எனக்கு அந்த தத்துவம் தெரியாது” என்று பதிலளித்தார்.
”அந்தர்யாமி தத்துவத்தைப்பற்றி தெரியுமா? இகலோக, பரலோக ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளே இருந்து கொண்டு
அவைகளை தன் வசம் வைத்திருக்கும் ஈஸ்வர தத்துவத்தை அறிவீர்களா” என்று மேலும் கந்தர்வன் கேட்டான்.
அதுவும் எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார்.
யார் இந்த சூத்ரத்தையும் அந்தர்யாமி தத்துவத்தயும் அறிந்தவர்களோ அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்களாவர்கள்.
அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகிறார்கள்.” என்று கந்தர்வன் கூறினான். பிறகு அங்கிருந்தவர்களுக்கு அந்த தத்துவங்களை உபதேசித்தான்.

எனக்கு இப்போது அந்த தத்துவங்கள் தெரியும், அந்த தத்துவங்களை நீ அறியாமல்
இந்த பசுக்களை எடுத்துச் சென்றால் உன்னுடைய தலை வெடித்து விடும்.

யாக்ஞவல்கியர், “எனக்கு அந்த இரண்டு தத்துவங்களும் தெரியும்” என்று பதிலளித்தார்.
உத்தலகா, ‘எல்லோரும் இப்படிதான் சொல்வார்கள், முதலில் உனக்கு எப்படி தெரியுமோ அப்படியே கூறுவாயாக” என்று கேட்டார்.

ஸ்லோகம்-2
யாக்ஞவல்கியர் பதிலளிக்க ஆரம்பித்தார். ”அந்த சூத்ரமானது வாயுவாகும். ஹிரண்யகர்ப்ப தத்துவமாக இருக்கின்ற
இந்த சூத்ரத்தினால் நாம் அனுபவிக்கும் உடல், இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள ஜீவராசிகளும் சீராக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இங்கே வாயு என்பது உடலுக்கு வெளியே இருப்பது, உடலுக்கும் உள்ளெ பிராணனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இறந்த பின் இந்த பிராணனானது வெளியே சென்று விடுகிறது, இதுவே சூட்சும சரீரம் என்றும் கூறுவர்.
இவைகளெல்லாம் சீராக இயங்குவதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகின்றது. சமஷ்டி, வியஷ்டி இரு அங்கங்களும்
ஒன்று சேர்ந்தால்தான் ஒரு ஜீவன் தோன்றும், மாலையில் பூக்களை ஒன்றாக சேர்த்து கொண்டிருக்கும் நூல் போல அனைத்து
ஜீவராசிகளையும் நன்றாக ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகிறது.
ஸ்தூல உடலை விட்டு ஹிரண்யகர்ப்ப தத்துவம் சென்று விட்டால் அந்த உடலை பிரேதம் என்று கூறுவர்.
அந்த உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் அழுகி விடும். இந்த சூத்ர வாயு, ஹிரண்யகர்ப்பமானது அனைத்தும்
சீராக இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது”. என்று முடித்தார்.
இந்த பதில் சரியென்று ஒத்துக் கொண்ட உத்தாலகா பின்பு அந்தர்யாமியை பற்றி இப்போது சொல்லுங்கள் என்று வினவினார்.

ஸ்லோகம்-3
ஹிரண்யகர்ப்பனுக்கு ஆதாரமாக இருப்பது எல்லா காரண ஸரீரத்தையும் அபிமானிக்கின்ற சேதனமான பிரம்மம் அந்தர்யாமி.
மாயையில் பிரதிபிம்பிக்கின்ற ஆத்மா. சூட்சும சரீரத்திற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். இதுதான் இங்கே விளக்கப்படுகிறது.
இதுவே ஈஸ்வரன், அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது.

இங்கே அந்தர்யாமி தத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்றால், இந்தப் படைப்பை மூன்றாக முதலில் பிரிக்கிறார்.
அவைகள்
அதிதெய்வம் – தேவர்கள் போன்ற மேலான பிறவிகள்,
அதிபூதம் – இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும்,
அத்யாத்மா – மனிதனிடத்தில் உள்ள இந்திரியங்கள்.
இந்த மூன்று விதமான ஸ்ருஷ்டிகளுக்குள்ளும் அந்தர்யாமி ஊடுருவி இருக்கிறார்.
மாயையுடன் கூடிய பிரம்மத்தையே அந்தர்யாமி அல்லது ஈஸ்வரன் என்று அறிய வேண்டும்.

· அந்தர்யாமி எங்கு குடியிருக்கிறார் என்றால் ஹிரண்யகர்ப்பனுடைய வீடுதான் இவர் குடி இருக்குமிடம்
· வெளித்தோற்றத்திற்கு வராமல் உள்ளேயிருப்பது
· அவிஷயஹ- விஷயமாக யாராலும் கிரகிக்க முடியாத ஒன்று.
· ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம்தான் இவருடைய சரீரமாக இருக்கிறது
· ஹிரண்யகர்ப்பனையும் தன் கட்டுக்கும் வைத்திருப்பவர்
· அந்தர்யாமியின் ஸ்வரூபமும் ஜீவனுடைய ஸ்வரூபமும் ஒன்றேதான்.
· அந்தர்யாமி சம்சாரமற்றது

यः प्रुतिव्याम तिष्ट्न – அந்தர்யாகி ப்ருதிவியில் இருந்து கொண்டு
प्रुतिव्या अन्तरः – ப்ருதிவிக்குள்ளே இருக்கிறார்
प्रुथिवि न वेद – ப்ருதிவியே அறியாதவாறு
यस्य प्रुत्वि सरीरँ – ப்ருதிவியானது சரீரமாக இருக்கிறது.
यः प्रुतिवि अन्तरः यमयति – ப்ருதிவிக்குள்ளே இருந்து கொண்டே அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது
एष त आत्मा – இப்படிபட்ட ஸ்வரூபம்தான் அந்தர்யாமி, இதுவே ஜீவனின் ஸ்வரூம்
अम्रुतः – இவர் சம்சாரமற்றவர், நித்தியாமானவராக இருக்கிறார்.

ஸ்லோகம்-4 லிருந்து – ஸ்லோகம்-23 வரை கீழே விளக்கப்பட்டிருக்கிறது

நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, சுவர்க்கலோகம், சூரியன், திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், வெளிச்சம்,
எல்லாவற்றிலும், மூக்கு, வாக் இந்திரியம், கண், காது, மனது, தோல், புத்தி, பிறப்புறுப்புக்கள் போன்ற இவைகளில் முழுவதும் வியாபித்தும்,
உள்ளேயும் இருந்து கொண்டு அதேசமயம் அவைகள் அறியாதவாறும் இருந்து கொண்டு அவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
இப்படிப்பட்ட ஸ்வருபமாக என்றும் அழியாததாக சம்சாரமற்று இருப்பது அந்தர்யாமி.

அதிருஷ்ட – பார்க்கப்படாதது; திருஷ்ட – பார்க்கின்றவன்
எவையெல்லாம் பார்க்கப்படுகிறதோ அவையெல்லாம் வரையறுக்கப்பட்டது. இது அறியப்படாதது ஆனால் அறிபவனாக இருக்கின்றது.
சிதாபாஸனை ஆதாரமாக கொண்ட மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது. அதே சமயம் பார்க்கபடுவதாகவும், கேட்கப்படுவதாகவும் இருக்கிறது.
இந்த அறியப்படாதவந்தான் நிர்விகார த்ருஷ்டா. न अन्यः अथः अस्ति द्रुष्ट – அந்தர்யாமியை தவிர வேறொரு அறிபவன் கிடையாது.

சைதன்யமான அந்தர்யாமி ஒன்றுதான் இருக்கிறது; அதைத் தவிர வேறொன்றும் இல்லை
மனதிற்கு அறியும் தன்மை கிடையாது ஏனென்றால் அது ஜடமான வஸ்து.
ஆனால் அதில் பிரதிபலிக்கும் சைதன்யத்தின் (சிதாபாஸத்தின்) துணைக் கொண்டு எல்லாவற்றையும் அறிகிறது.
ஆனால் இதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாபாஸனும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஜீவனும் மித்யா என்று அறிந்து கொள்ளலாம்.
இப்படி கட்டுபடுத்துபவர் என்று புரிந்து கொண்டால், கட்டுபடுத்துபவர் என்ற வேறொன்று இருக்கிறது என்ற த்வைதம் வந்து விடுகிறது.
ஆனால் இங்கு இரண்டுமே ஒன்றுதான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மாயையினால்தான் த்வைதம் தெரிந்து கொண்டிருக்கிறது.
ஜீவ சைதன்யம், ஈஸ்வர சைதன்யம், ஸ்வரூப சைதன்யம் இந்த மூன்றில் உள்ள ஸ்வரூப சைதன்யம் ஒன்றுதான்.
அதுவே மாயை, வியஷ்டி என்ற இரண்டு பெயர்களை கொண்டதாக இருக்கிறது
இப்படிபட்ட அந்தர்யாமிதான் ஆத்மா, அதுவே உன் ஸ்வரூபம், நித்தியமானது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: