ஸ்ரீ திருப்பாவை–உந்து மதகளிற்றன்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

கன்னிகை யின்றிக் கண்ணாலங் கோடிப்பதுபோல், பாதந பூதையான நப்பின்னைப் பிராட்டியைப் பற்றாமல்,
வழிப் போக்கர்களோடொந்த வாசற்காப்பானையும் நந்தகோபனையும் பலதேவனையும் பற்றுவதனால் பயன் யாது கொல்?”
என்று கண்ணபிரான் திருவுள்ளத்திற் கொண்டுள்ளென் என் நினைத்த இவ் வாயர்ப் பெண்டிர்
நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் பாசுரம், இது–

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மதயானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லாவிடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ணபிரானுடைய திருநாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர்ஆர்வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கைவளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப்போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர்எம பாவாய்

எம்பெருமானைப் பற்றுவார்க்கு ஒரு புருஷகாராபேக்ஷ உள்ளவாறு போலப்
பிராட்டியைப் பற்றுவார்க்கும் ஒரு புருஷகாரம் அபேக்ஷிதமாக வேண்டாவோ? என்னில்’ வேண்டா’
அவளுடைய கருணை தானே அவளைப் பற்றுகைக்குப் புருஷகாரமாக வற்றாம்
’ நெருப்பை ஆற்றுகைக்கு நீர்வேண்டும்’ நீரை ஆற்றுகைக்கு நீரே போதுமன்றோ.

எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டி முன்னாகப் பற்றவேணுமென்று பிரமாணங்கிடக்க,
இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவதென்? எனில்’
க்ருஷ்ணாவதாரத்திற்கு இவள் ப்ரதாந மஹிஷியாதலால் இவளைப் பற்றுகின்றனரென்க.

(உந்துமதகளிற்றன் இத்தியாதி)
கண்ணபிரானைச் சொல்லும்போது “நந்தகோபன் குமரன்” என்று நந்தகோபருடைய ஸம்பந்தத்தை யிட்டுச் சொல்வது போல,
நப்பின்னையும் நந்தகோபர் ஸம்பந்தத்தை யிட்டுக் கூறுகின்றனர்,
அவருடைய ஸம்பந்தம் இவளுகப்புக்கு உறுப்பாயிருத்தலால்.

“உந்துமதகளிற்றன்” என்பதற்கு
மதயானைகளை உந்துமவன்-நொறுக்கித்தள்ளுமவன்,
உந்துகின்ற (பெருக்குகின்ற) மத நீரையுடைய களிறுபோன்றவன், (அல்லது)
களிறுகளை யுடையவன் எனப்பொருள்கள் காண்க.

“ஓடாத தோள்வலியன்” என்பதற்கு
போர்க்களத்திற் பகைவரைக் கண்டு அஞ்சி ஓடாத மிடுக்கன் என்றும்,
நாட்டில் நடையாடாத (லோக விலக்ஷணமான) தோள் வலியை யுடையவன் என்றும் பொருள் கொள்க.
இங்ஙன் சிறப்பித்துக் கூறுகைக் கீடான வலியின் கனம் இவர் பக்கல் இருக்கவேயன்றோ
கண்ணனிடத்துக் கறுக்கொண்ட கஞ்சன் தான் நேரில் வந்து தீங்கு செய்யமாட்டாமல்,
பூதயனை ஏவுவது சகடாசுரனை ஏவுவதாய் இப்படி களவிலே நலியப் பார்த்தது.
அக்கஞ்சன் மாளிகையின் கீழ் பிள்ளைகளை வளர்த்த நந்தகோபர்க்கு இவ்வளவு வலி இன்றிமையாததாம்.
நித்ய ஸம்ஸாரியாயிருப்பவன் தனது அநீதிகளை நினைத்து அஞ்சினால்
எம்பெருமானுடைய குணங்களை அநுஸந்தித்து அச்சங்கெடுவது போல,
கண்ணபிரான் செய்யுந் தீமைகளை நினைத்து அஞ்சுமாய்ச்சிகள் நந்தகோபருடைய தோள்வலியை நினைத்து அச்சங் கெடுவராம்.

இங்ஙனம் பெரு மிடுக்கைப் பெற்றுள்ள இவர் அஹங்கார லேசமுற்றவராய்,
தாழ்ந்தார்க்கும் பரம ஸுலபராயிருக்குந் தன்மையைத் தெரிவிக்கும் ‘நந்தகோபாலன், என்று இவர் படைத்த பெயர்.
நப்பின்னை கும்பர்மகளாயிருக்க, அவளைக் “கும்பர் மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என
விளித்தற்குக் கருத்து யாதெனில்’ நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளருகையாலும்,
தனது தந்தையரை மறந்திட்டதனாலும்,

“இராமழை பெய்த வீர வீரத்துள் பனை நுகங்கொண்டு யானையோ;
பூட்டி வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே,
செங்கேழ்வரகுப் பசுங்கதிர் கொய்து கன்று காத்துக் குன்றிலுணக்கி ஊடு பதர் போக்கி
முன்னுதவினோர்க்குதவிக் காடுகழியிந்தனம் பாடுபார்த் தெடுத்துக் குப்பைக்கீரை உப்பின்று
வெந்ததை இரவற்றாலம் பரிவுடன் வாங்கிச் சோறது கொண்டு பீறலடைத்த ஒன்று
விட்டொருநாள் தின்று கிடப்பினும் நன்றே தோழி! நங்கணவன் வாழ்வே.”என்றபடி
புத்தகத்தில் வாழ்வையே பெருக்க மதித்து ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெறாப் பேறாக
நினைத்திருப்பதனாலும் இங்ஙன் விளிக்கப்பட்டனள் எனக் கொள்க.

இவர்கள் இங்ஙன் அழைக்கையிலும், அவள் “கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர்க்கு மருமகளாகாதவள்
திருவாய்ப்பாடியில் எவள்? இப்போது இவர்கள் அழைப்பது நம்மைத் தானென்றறிவது எங்ஙனம்?”
என நினைத்துப் பேசாதே கிடந்தாள்’ இதனை அறிந்த அவர்கள் ‘நப்பின்னாய்!’ எனப் பேர் கூறி அழைக்கின்றனர்.

நந்தகோபலனுக்கு மருமக்கள் பலர் கிடப்பினும் அவர்களைக் கொண்டு எமக்குப் பணியென்?
உன்றன் காலில் விழுமவர்கள் காண் நாங்கள் என்பது உட்கருத்து.

இங்ஙனம் ஆய்ச்சிகள் விளிக்க, அதனைக் கேட்ட நப்பின்னை
“க்ருஷ்ணாநுபவம் நானொருத்தியே பண்ணுகிறேனென்றும், க்ருஷ்ணனோடே நாமும் கலவி செய்யுமாறு
இவள் கருணை புரிந்திலன் என்றும் இவ்வாய்ச்சிகட்கு நம்மேற் சிறிது சீற்றமிருக்குக் கூடுமாதலால்,
இப்போது இவர்களுக்கு மறுமொழி கூறாதிருப்போம்” என்றெண்ணி மீண்டும் பேசாதே கிடக்க’
“கந்தங் கமழுங் குழலீ!” என்கிறார்கள்’

நீ உள்ளே கிடக்கவில்லை என்று தோற்றுமாறு சலஞ் செய்தியேலும் உன்னுடைய குழலின் பரிமளம்
உன் இருப்பைக் கோட் சொல்லித் தாரா நின்றதே! எங்கள் கூக்குரலுக்கு நீ மறுமொழி தந்திலையாகிலும்
உன் குழலின் கந்தம் கடுகவந்து மறுமொழி தாராநின்றதே! என்கிறார்களெனக்கொள்க.
கந்தம் – வடசொற்றிரிபு.

இவர்கள் இங்ஙனம் கூறுவதைக் கேட்ட நப்பின்னை “மலரிட்டு நாம் முடியோம்;’ என்று முதலில் பண்ணின
ப்ரதிஜ்ஞையை நாம் மீறிக் கிடக்கும்படியை இவர்களுணர்ந்தனர் போலும்” என்று அஞ்சி மீண்டும் பேசாதே கிடக்க,
“கடைதிறவாய்” என்கிறார்கள்.

அனைவருமாகத் திரண்டு பண்ணின ப்ரதிஜ்ஞையை அதிலங்கநஞ் செய்து நீ பூ முடித்தாற்போல
நாங்களும் எங்கள் சென்னிப்பூவை (கண்ணனை) அணிந்து கொள்ளும்படி கதவைத் திறந்துவிடாய் என்றபடி,
அப்பரிமள வெள்ளம் வெளிப்புறப்படுமாறு கதவைத் திறந்துவிடாய் என்றபடியுமாம்.

இதனைக் கேட்ட நப்பின்னை ‘இங்ஙன் நடுநிசியில் வந்தெழுப்புவதென்?
பொழுது விடிய வேண்டாவோ கதவைத் திறக்கைக்கு? என்ன’
இவர்கள் ‘பொழுது விடிந்தொழிந்து என்ன’ அவள் ‘விடிந்தமைக்கு அடையாளங் கூறுமின்’ என்ன’
இவர்கள் கோழியழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர்.

இங்ஙனங் கோழி கூவினதைப் பொழுது விடிவுக்கு அடையாளமாகக் கூறியதைக் கேட்ட நப்பின்னை,
சாமக்கோழிகளின் கூவுதல் பொழுது விடிவுக்கு அடையாளம் ஆகாது ’ அவை சற்றுப்போது கூவிப்பின்னை உறங்கும்’
இங்ஙன் அவை சாமந்தோறுங் கிளர்ந்தடங்கும்’ இனி வேறடையாள முண்டாகிற கூறுமின்” என்ன’
குருக்கத்திப் பந்தலின்மேற் கிடந்துறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையை அடையாளமாகக் கூறுகின்றனர்’

“வந்தெங்குங் கோழியழைத்தனகாண்” என்றாற் போலப் “பலகால் குயிலினங்கள் கூவினகாண்” என்றாற் போதுமே,
“மாதவிப்பந்தல் மேல்” எனக் கூறியதற்குக் கருத்து யாதெனில்’
படுக்கையின் வாய்ப்பாலே அவை பொழுது விடிந்தமையையு முணராமல் உறங்க வேண்டியிருக்க,
உணர்ந்தெழுந்தன வென்றால், பொழுது நன்றாக விடிந்ததாக வேண்டாவோ? என்றவாறு.
மாதவிப் பந்தல் குயில்கட்கு மிகவும் வாய்த்த படுக்கையாம்.
மாதவி-வடசொல் விகாரம்.

இப்படிப்பட்ட அடையாளந்தன்னை இவர்கள் கூறவும் நப்பின்னை
“இவ்வடையாளம் மாத்திரம் கண்ணழிவற்றதோ?
கொத்தலர் காவின் மணித்தடங் கண்படை கொள்ளுமிளங்குயிலே,
என் தத்துவனை வரக்கூகிற்றியாகில் தலையல்லாற் கைம்மாறி லேனே’ (நாச்சியார்திருமொழி.) என்று
உறங்குங் குயில்களையும் கிளப்பிக் கூவச் சொல்லி வருத்துகிறவர்களன்றோ?
இவர்கள் சொல்லியபடி அவை கூவாதொழியல்
‘இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்து நின்றுந்துரப்பன்’ என்று அவற்றைச் சோலையினின்றுந்
துரத்தி விடுவதாகச் சொல்லி அச்சமுறுத்துகிறவர்களுமன்றோ இவர்கள்.
ஆன பின்பு இவர்களில் இருப்பையே கூலியாகக் கொண்டு அவை கூப்பிட்டனவாமத்தனை’

இக் கூவுதல் ஒரு அடையாளமாக வற்றன்று” என்றெண்ணிப் பேசாதே கிடந்தாள்’
கிடக்கவே, மீண்டும் அவளை விளிக்கின்றனர் “பந்தார் விரலி!” என்று.
கண்ணபிரானும் நப்பின்னைப் பிராட்டியும் இரவிற் பந்தடித்து விளையாட, அவ்விளையாட்டில் கண்ணபிரான்
தோற்றனனாக’ நப்பின்னை, தனக்கு வெற்றியைத் தந்த அப்பந்தைக் கையாலணைத்துக் கொண்டே கிடந்துறங்க,
அதனைச் சாலக வாசலாற் கண்ணுற்ற இவ்வாய்ச்சிகள் “பந்தார்விரலி” என்கின்றன ரென்க.
நாங்களும் பந்து போல் ஒரு அசேதந வஸ்துவாகப் பிறந்திருந்தோமாகில் எங்களையும் நீ
உன் கைக்குள் அடக்கிக் கொள்வாயன்றோ? என்ற கருத்தும் இதனில் தோற்றும்.

தாம் வந்த காரியத்தைக் கூறுகின்றனர், “உன் மைத்துனன் பேர்பாட” என்று. அதாவது –
“இன்னாளடியான், இன்னாளடியான்” என்று எல்லையின்றி அவன் படைத்துள்ள பல பெயர்களையுஞ் சொல்லி
வாயாரப் பாடுவதற்கு என்றபடி.

இங்ஙனங் கூறக்கேட்ட நப்பின்னை,
“யந்த்ரத்தினால் கதவைத் திறந்து கொள்ளலாம்படி பண்ணி வைத்திருக்கிறேன்’
உபாயமாகத் திறந்துகொண்டு புகுருங்கள்” என்ன’
அதனைக் கேட்ட ஆய்ச்சிகள், “நாங்கள் ஸ்வப்ரயத்நத்தினால் பேறு பெற நினைத்துளோமோ?
உன்னாலே பெறவிருக்கிறவர்களன்றோ? உன் கைபார்த்திருக்கிறவர்களன்றோ?
நாங்களே திறந்து கொண்டு புகவல்லோமல்லோம்’ உன்றன் கையில் வளைகள் நன்கு ஒலிக்க,
அவ்வொலியைக் கேட்டு எங்கள் நெஞ்சு குளிரும்படி நீயே எழுந்து வந்து திறக்கவேணு மென்கிறார்கள், கடையிரண்டிகளால்.

செந்தாமரைக் கையால் –
இயற்கையாயுள்ள செம்மைக்குமேல் பந்துபிடித்த தனாலும் மிக்கசெம்மையுடைய கையால் என்க.

சீரார்வளை –
வளைக்குச் சீர்மையாவது – என்றுங் கழலாதிருக்கப் பெருகை.
ஒரு காலாகிலும் விச்லேஷம் நேர்ந்தாலன்றோ
‘தாமுகக்குந் தங்கையிற் சங்கமே போலாவோ யாமுகக்கு மென்கையிற் சங்கமு மேந்திழைவீர்!” என்றும்,
“என்னுடைய கழல் வளையைத் தாமுங்கழல் வளையே யாக்கினரே” என்றும்,
“என்னுடைய கழல் வளையே யாக்கினரே” என்றும் வருந்தவேண்டுவது.
நப்பின்னை நித்ய ஸம்ச்லிஷ்டை யாகையாலே சீரார்வளைக்கையாளா யிருப்பளிறே.
இவ்வளையின் ஓசையைக் கேட்டுக் கண்ணனும் உணர்ந்தானாய்,
தாங்களும் வாழ்ந்தாராகக் கருதி ‘ஒலிப்ப’ என்கிறார்கள்.

க்ருஷ்ண ஸம்ச்லேஷத்துக்கு விரோதமாக வொண்ணாதென்று நப்பின்னை கிடந்தபடியே கதவைத்திறக்க முயல,
அதனை யறிந்த இவர்கள், எங்களுக்காக நீ நாலடி நடந்து வந்தாய்’ என்னும் பரிசை நாங்களும் பெறுமாறு
எழுந்து வந்து திறக்க வேணுமென்பார், “வந்து திறவாய்” என்கிறார்கள்.

இப் பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்தருளின் பாட்டு என்று நம் முதலிகள் மிகவும் ஆதரித்துப் போருவராம்.
அவ்வரலாறு வருமாறு:- எம்பெருமானார் திருப்பாவை அநுஸந்தாநத்துடன் மாதுகரத்திற் கெழுந்தருளுகிற அடைவில்,
ஒரு நாள் பெரியநம்பி திருமாளிகைக்கு எழுந்தருள அப்போது திருக்காப்பு சேர்ந்திருக்கையாலே,
அநுஸந்தாநத்தைக் கேட்டு அத்துழாய் திருக்காப்பு நீக்கியருள,
எம்பெருமானார் அவளைக் கண்டவாறே மூர்ச்சித்துவிழ, அத்துழாய் பெரியநம்பி பக்கலிற் சென்று,
“ஐயா! கதவைத் திறந்து சென்றேன்’ என்னைக் கண்டவுடனே ஜீயர்மூர்ச்சித்து விழுந்தார்” என்ன’
நம்பி ஸர்வஜ்ஞாராகையாலே “உந்து மதகளிறு அநுஸந்தாநமா யிருக்கவடுக்கும்” என்றருளிச் செய்ய,
அதனைக்கேட்ட அத்துழாய் ‘ஆவதென்? என்ன’
“செந்தாமரைக்கையால் சீரார்வளை யொலிப்ப வந்து திறவாய், என்று அநுஸந்தியா நிற்க
நீ திறந்தவாறே அவ்வாறே உன்னைக் கண்டு
‘நப்பின்னையை ஸேவிக்கப்பெற்றேன்’ என்று மூர்த்தித்தாராக வேணும்” என்று நம்பி அருளிச் செய்தார்.
ஆகையாலே இப்பாட்டு எம்பெருமானாருகந்ததென்று நம்முதலிகள் ஆதரிப்பாரென்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: