ஸ்ரீ திருப்பாவை–மாலே மணிவண்ணா– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

‘பெண்காள்! “உன்னை யருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள்;
நம்முடைய ஸம்சலேஷ ரஸத்திலே உத்ஸாஹமுடையவர்கள் வேறொன்றை விரும்பக் கூடாமையாலே,
அதென் சொன்னீர்களென்று அதிலே ஒரு ஸம்சயம் பிறவாநின்றது;
அதாகிறது எது? அதற்கு மூலம் எது? அதற்கு வேண்டுவன எவை? அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை?
இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் நியமித்தருள,
அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! உன் முகவொளியை வெளியிலேகண்டு உன் திருநாமங்களை
வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாயிருப்பதொரு நோன்பை இடையர் ப்ரஸ்தாவிக்கையாலே
உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமா யிருக்கின்றமையைக் கருதி இடையர் பக்கலில் நன்றி ‘நினைவாலே’
அந்நோன்பிலே இழிந்தோம்; அதற்கு, முன்னோர்கள் செய்து போருவதொன்றுண்டு;
அதற்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை;
அவற்றையும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் பாசுரம், இது.

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹமுடையவனே!
மணிவண்ணா–நீலமணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தமபுருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமியடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருளவேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

இவர்கள் “மார்கழி நீராடுவான்” என்றவுடனே, கண்ணபிரான் மேன் மேலும் இவர்கள் வாயைக் கிளப்பி
வார்த்தை கேட்கவிரும்பி, ‘மார்கழியாவதென்? நீராட்டமாவதென்? இது யார்செய்யுங் காரியம்?
அப்ரஸத்தமான தொன்றைச் சொல்லா நின்றீர்களே என்ன;
அது கேட்ட இவர்கள் “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்” இத்யாதிகளை நெஞ்சிற்கொண்டு,
‘சிஷ்டாநுஷ்டாநம் ப்ரமாணமன்றோ? இந்நோன்பு சிஷ்டாநுஷ்டாந ஸித்தமன்றோ?’ என்கிறார்கள்.

இங்ஙன இவர்கள் சிஷ்டாநுஷ்டாநத்தை எடுத்துக் கூறியவாறே,
அவன் ‘பெண்காள்! லோகஸங்க்ரஹார்த்தமாக அவர்கள் அபேக்ஷிதங்களையுஞ் செய்ய நிற்பர்;
அவர்கள் செய்யுமாபோலே அவையெல்லாம் செய்யப்போகாதே’ என்ன;
“வேண்டுவன கேட்டியேல்” என்கிறார்கள்.
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்திற்கு அபேக்ஷிதமுமாய்
ஸ்வரூபத்திற்கு அவிருத்தமுமாயிருக்குமவற்றைக் கேட்கிறாயாகில் என்றபடி.

“ஞாலத்தை எல்லாம்” என்றது
“ஞாலமெல்லாம்” என்றபடி; உருபு மயக்கம் அன்றேல்,
“நடுங்க” என்னும் வினையெச்சத்திற்குப் பிறவினைப் பொருள் கொள்ளவேண்டும்.

திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்;
புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்;
பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்;
பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்;
நெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்;
புறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்?
ஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள்.

இது கேட்ட கண்ணபிரான்,
‘பெண்காள்! இவ்வளவு பொருள்களை நான் எங்ஙனே சேமித்துத் தரவல்லேன்?
இஃது எனக்கு மிகவும் அரிய காரியமாயிற்றே!’ என்ன;

உன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்களெல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து
அகடிதங்களைச் செய்யவல்ல உனக்குங் கூட அரிய தொன்றுண்டோ? என்னுங்கருத்துப்பட
“ஆலினிலையாய்!” என விளிக்கின்றனர்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: