ஸ்ரீ திருப்பாவை–மாரி மலை முழைஞ்சில்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

இவ்வாய்ச்சிகள் “சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று
வேறு புகலற்று வந்து விழுந்தோ மென்றதைக் கேட்டருளின கண்ணபிரான், கடுக உணர்ந்தருளி,
“பெண்காள்! மிகவும் வருந்தி இவ்வளவும் வந்தீர்களே!
உங்களிருப்பிடந் தேடிவந்து உங்களை நோக்குகையன்றோ எனக்குக் கடமை!
என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்களன்றோ?
யாரேனும் பகைவர் கையிலகப்பட்டு வ்யஸநப்பட்டு நம்மிடம் வந்து முறைப்பட்டால்,
நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, ஆ! ஆ!! உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு
முன்னமே வந்து உங்களை நோக்க வேண்டிய கடமையையுடைய நான் அங்ஙனம் முந்துற வரப் பெறாதொழியினும்
வருத்தம் நேர்ந்தவுடனேயாகிலும் வந்து உதவப்பெறலாமே’ அங்ஙனமும் வந்து உதவப் பெற்றிலேனே’
வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்படி
நான் அந்ய பரனா யிருந்தொழிந்தேனே’ என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று
அஞ்சி நடுங்கிக் கூறும் முறையையுடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே யன்றோ
உங்களை நான் இவ்வளவு வருத்த முறுத்தியதைப் பற்றிப் பொறை வேண்டுகின்றேன்.
இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்:
உங்களுக்கு நான் செய்யவேண்டுவதென்?” என்ன’
அதனைக் கேட்ட ஆய்ச்சிகள், “பிரானே! எங்களுடைய மநோரதம் இப்படி ரஹஸ்யமாக
விண்ணப்பஞ் செய்யக் கூடியதன்று’ பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து கேட்டருளவேணும்” என்று
ஆஸ்தானத்திற் புறப்பாடு ஆக வேண்டிய கிரமத்தை விண்ணப்பஞ்செய்யும் பாசுரம் இது–

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

மாரி–மழைகாலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்

வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க் கோப்பாகும்படி மழை பெய்து வழியெல்லாம் தூறாகி
ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால் அம்ஸமாக அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து,
சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ந்து நாலாறு திங்கள் வரை
அந்தபுரத்தில் மன்னிக்கிடப்பர்’
சக்ரவர்த்தித் திருமகனும் பிராட்டியைப் பிரிந்த பின்னர் விரைவில் முயன்று அவளை வருவித்துக் கொள்ள வேண்டியிருந்தும்
வர்ஷா காலத்தில் மஹாராஜர் வெளிப்புறப்பட வொண்ணாதென்று ஸுக்ரிவ மஹாராஜரைத் தாரையோடு கூடிக்
கிடந்துறங்கவிட்டுத் தானும் இளையபெருமாளுமாக மால்யவத் பர்வதத்தில்; மிக்க வருத்தத்துடனே
அக்காலத்தைக் கழித்தருளினரன்றோ?
ஆனபின்பு மாரிகளுமானது பிரிந்தார் கூடுங்காலமாயும், கூடினார் ஸுரதரஸ மநுபவிக்குங் காலமாயுமிருக்குமாதலால்
சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குஹைகளிற் கிடந்துறங்கும்’
அக்குஹை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாத வாறாகவே அவை கிடந்துறங்கும்’
மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார்? எனச்சீறி
நோக்குவதுபோற் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து நாற்புறமும் நோக்கி,
உளைமயிர்கள் சிலம்பு மாறு சுற்றும் அசைந்து, உறங்கும்போது அவயவங்களை முடக்கிக்கொண்டு
கிடந்தமை யாலுண்டான திமிர்ப்பு தீரும்படி அவயவங்களைத் தனித்தனியே உதறி,
உலாவுகைக்கு உடல் விதேயமாம்படி உடலை ஒன்றாக நிமிர்த்து (சோம்பல் முறித்து என்றபடி),
மற்ற துஷ்ட மிருகங்கள் கிடந்த விடத்திற் கிடந்தபடியே உயிர் மாய்ந்து முடியும்படி வீர கர்ஜனை பண்ணிப் பின்பு
தன் இருப்பிடத்தை விட்டு யதேச்சமாக ஸஞ்சரிப்பதற்காக வெளிப்புறப்படுவது இயல்பு.
அங்ஙனமே கண்ணபிரான் புறப்பட்டு சிங்காசனத்தேற எழுந்தருளுமாறு வேண்டுகின்றனர்.
சிங்கம் மலைமுழஞ்சிற் கிடந்துறங்குவது போல் இவ்வசோதை யிளஞ்சிங்கம்
“நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா!” என்றபடி
நீளா துங்கஸ்தநகிரி தடீ ஸுப்தமாயிருக்கும்படி காண்க.

சிங்கம் பிறக்கும் போதே “மருகேந்திரன்” என்றும் “ம்ருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப்
பெறுதல் பற்றிச் சீரியசிங்க மெனப்பட்டது.
கண்ண பிரானும் நரஸிம்ஹாவதாரத்திற் போற் சிலபாகஞ் சிங்கமாயும் சிலபாகம் மானிடமாயுமிருக்கை யன்றியே
“சிற்றாயர் சிங்கம்” “எசோதை யிளஞ்சிங்கம்” என்றபடி
பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய என்னு மடைமொழி இவனுக்கு மொக்குமென்க.

அறிவுற்று – என்ற சொல்லற்றலால்,
அடியோடு அறிவில்லாததொரு வஸ்துவுக்கு அறிவு குடிபுகுந்தமை தோன்றும்’
சிங்கம் பேடையைக் கட்டிக் கொண்டு கிடந்துறங்கும்போது அறிவிழந்திருக்கும்.
கண்ணபிரானும் அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர்
அறிவற்றதொரு பொருளாகவேயன்றோ எண்ணப் படுவன்.

தீவிழித்து-
கண்ணபிரான் ஆய்ச்சிகளின் கூக்குரலைக்கேட்டு உணர்ந்தனனாதலால்,
“இவர்கள் இங்ஙனம் கூக்குரலிடும்படி இவர்கட்கு யாரால் என்ன துன்பம் நேர்ந்ததோ!” என்று
உடனே திருக்கண்கள் சீற்றந் தோற்றச் சிவக்குமென்க. (அடியாருடைய பகைவரைப் பற்றின சீற்றம்)

வேர்மயிர் பொங்க –
சிங்கத்தின் ஸடைகளில் ஜாதிக்கு ஏற்றதொரு பரிமளமுண்டாதல் அறிக.
கிடந்துறங்கும்போது உளைமயிர்கள் நெருக்குண்டு அமுங்கிக் கிடக்குமாதலால், உணர்ந்தவுடனே
அவற்றை மலரச் செய்வது சாதியல்பு.
அங்ஙனமவற்றை மலரச்செய்வதற்காக, எப்பாடும் போந்து உதறும்.
எப்பாடும் – எல்லாப் பக்கங்களிலும் என்றபடி.
பேர்ந்து – பெயர்ந்து என்றவாறு.
பெயர்தல் – அசைதல்.
மூரி என்று – சோம்பலுக்குப் பெயர்’
“மூரி நிமிர்ந்து” என்றது – சோம்பல் தீரும்படி நிமிர்ந்து என்றபடி.

(“யாம்வந்த காரியம்”)
இப்போதே இவர்கள் வந்த காரியம் இன்னதென்று இயம்பா தொழிவானென்? எனில்’
முதலடியிலே சொல்லி விட்டால்; ஸ்வதந்திரனாகிய இவன் மறுத்தாலும் மறுக்கக் கூடுமென்றஞ்சி,
இன்னும் நாலடி கிட்டச் சென்றவாறே விண்ணப்பஞ் செய்வோ மென்றிருக்கிறார்கள்.
அதாவது –
“சிற்றஞ்சிறுகாலே” என்ற பாட்டில் விண்ணப்பஞ் செய்கிறார்கள்.
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” என்றது காண்க.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: