ஸ்ரீ திருப்பாவை–சிற்றம் சிறு காலே– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

கீழெல்லாம் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சிகள் அப் பறையின் பொருளை
நிஷ்கர்ஷித்து விண்ணப்பஞ்செய்யும் பாசுரம், இது.

‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை வியாஜமாகக் கொண்டு வந்து புகுந்தோமத்தனை யொழிய,
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் பண்ணுகை தான்;

இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிந்தோமாக வொண்ணாது;
வேறு ஒருவகையான விருப்பமும் எமக்குப் பிறவா வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று தலைக் கட்டுகிறார்கள்.

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

சிற்றஞ்சிறுகாலை – அருணோதய காலத்தைக் கூறியவாறு.
‘சின்னஞ்சிறுப் பையன், செக்கச் சிவந்த தலை’ என்னும் பிரயோகங்களை யொக்கும் இப் பிரயோகம்.
“சிற்றஞ்சிறுகாலே” என்றும் ஓதுவர்’

“காலை வந்து” என்னாமல், ‘சிறு காலை வந்து’ என்னாமல், “சிற்றஞ்சிறு காலை வந்து” என்றதற்குக் கருத்து –
எங்கள் பருவத்தை ஆராய்ந்தால் பொழுது விடிந்து பதினைந்து நாழிகையானாலும் குளிருக்கு அஞ்சிக்
குடிலை விட்டுக் கிளம்ப மாட்டாதாரென்று தோற்று நிற்க, குளிரை ஒரு பொருளாக நினையாமல் நாங்கள்
இத்தனை சிறு காலையில் வந்தது எவ்வளவு ஆற்றாமையின் கனத்தினாலாகக் கூடுமென்பதை
ஸர்வஜ்ஞனான நீயே ஆய்ந்தறிந்து கொள் என்றவாறு.

“உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்” என்றது –
நாங்கள் எதை உத்தேசித்து உன்னைக் காப்பிடுகின்றோமோ அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றோம்,
கேட்டருள் என்றபடி. அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றன, மற்ற அடிகள்.

(பெற்றம் மேய்த்து இத்தியாதி.)
நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கு மிருப்பைத் தவிர்ந்து
இவ்விடைக் குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ?
எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனறற்தாமான்றோ? என்கிறார்கள்.

எங்களை – உருபு மயக்கம்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் கொள்க.
“குற்றேவலெங்களைக் கொள்ளாமற் போகாது” என்றவிடத்தில்,
“கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யத் தவந்தானென்” என்ற நாச்சியார் திருமொழியை நினைப்பது.

இப்படி, ‘எங்களிடத்திற் குற்றேவல் கொள்ளவேணும்’ என்று வேண்டின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ண பிரான்,
‘பெண்காள்! அது அப்படியே ஆகிறது; அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுகிறேன்;
நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கு உபகரணமாகக் கேட்டவற்றைத் தருகிறேன், கொண்டு போங்கள் என்று
ஒரு பறையை எடுத்து வரப்புக் காண்;

அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! கருத்தறியாமற் செய்கிறாயே;
நாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்துரைக்கின்றோம் கேளாய்’ என்று உரைக்கத் தொடங்குகின்றனர்
“இற்றைப் பறை” இத்யாதியால்.

இன்று + பறை, இற்றைப் பறை. இப்போது நீ எடுத்துக் கொடுக்கும் பறை என்றபடி.
கொள்வானன்று – கொள்வதற்காகவன்று; ‘நாங்கள் வந்தது’ என்று சேஷ பூரணம் செய்க.

எற்றைக்கும் – என்றைக்கு மென்றபடி.
“ஏழேழ் பிறவிக்கும்” – “தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ” என்றபடி
எம்பெருமானுடைய பிறவி தோறும் ஒக்கப் பிறக்கும் பிராட்டியைப் போலே
தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட் செய்ய நினைக்கிறார்கள்.

(“மற்றை நங்காமங்கள் மாற்று”.)
இதற்குப் பலபடியாகப் பொருளுரைப்பர்;
கைங்கரியத்தில் ஸ்வ ப்ரயோஜநத்வ புத்தி நடமாடுகையைத் தவிர்க்க வேணுமென்ற பொருள் முக்கியம்.

“ப்ராப்ய விரோதி கழிகையாவது –
மற்றை நங்காமங்கள் மாற்றென்றிருக்கை” என்ற முழுக்ஷுப்படி அருளிச் செயல் அறியத் தக்கது.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: