ஸ்ரீ திருப்பாவை–கூடாரை வெல்லும் சீர்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

கீழ்ப்பாட்டிற் சங்குகளையும் பறைகளையும் பல்லாண்டிசைப்பாரையும் கோல விளக்கையும்
கொடியையும் விதானத்தையும் அருளவேண்டுமென்று அபேக்ஷித்த ஆயர்மாதரை நோக்கிக் கண்ணபிரான்,
“பெண்காள்! நம்மோடு ஒத்த ஈச்வரனொருவ னுண்ணடாகிலன்றோ
நம் பாஞ்சஜந்யத்தோடு ஒத்ததொரு சங்கு உண்டாவது;
அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேணுமென்னா நின்றீர்கள்;
ஒன்றரை தேடினோமாகிலும் பாஞ்ச ஜந்யத்தோடொத்த பல சங்குகள் கிடையாவே;
நம் பாஞ்சஜந்யத்தையும், *புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கையும்,
ஆநிரையினம் மீளக்குறித்த சங்கத்தையும் தருகிறேன், கொள்ளுங்கள்;

இனி, ‘பறை’ என்றீர்களாகில்;
நாம் உலகளந்தபோது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்;
‘பெரும்பறை’ என்றீர்களாகில்,
நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயஞ்சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்;
அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில்
மிகவும் பெரிதான பறையாவது – நாம் *பாரோர்களெல்லாம்; மகிழப் பறை கறங்கக் குடமாடுகிறபோது
நம் அரையிலே கட்டியாடின தொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; கொள்ளுங்கள்;

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு;
அவரைப் போலெ ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று
உங்களையும் நம்மையுஞ் சேர்த்துக் காப்பிடுகை யன்றியே
“பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையுங் கொண்டு போங்கள்;

இனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்;

அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருளக்கொடி யொன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும்
பெரிய திருவடியைக் கொண்டு போங்கள்;

அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இச்சேரிக்கு வரும் போது
நம்மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்;
இவ்வளவேயன்றோ நான் உங்களுக்குச் செய்யவேண்டுவது” என்ன;

இதுகேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப் போம் போதைக்கு வேண்டியவை இவை;
நோன்பு நோற்றுத் தலைக் கட்டின பின்பு நாங்கள் உன்னிடத்துப் பெற வேண்டிய பல பஹுமாந விசேஷங்களுள்
அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்திக்கும் பாசுரம், இது–

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களையுடைய
கோவிந்தா–கண்ணபிரானே!
ஊன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப்பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்டயாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும்படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும்படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடியிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–.

“கூடாரை வெல்லுஞ் சீர்க்கோவிந்தா!” என்னும் விளி –
கூடுமவர்கட்குத் தோற்று நிற்குமவனே! என்ற கருத்தை உளப்படுத்தும்.
ஆச்ரிதர் திறத்திலே எல்லாப்படிகளாலும் பரதந்த்ரனாயிருப்பவனே! என்கை,
ராமாவதாரத்திலே தன்னோடு கூடின ஸுக்ரிவ மஹாராஜர்க்குப் பரவசப்பட்டு வழியல்லா வழியில்
வாலியை வதை செய்தமையும்,
கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்க்குப் பரவசப்பட்டுப் பொய் சொல்லியும் கபடங்கள் செய்தும்
நூற்றுவரை முடித்தமையும் முதலானவை இங்கு அநுஸந்திக்கத்தகும்;
இவையெல்லாம் ஆச்ரிதர்க்கும் தோற்றுச்செய்யுஞ் செயல்களிறே.
இப்போது இவர்கள் இங்ஙனே விளித்தற்குக் காரணம் யாதெனில்;
நீ எங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்று, நாங்கள் வேண்டியனபடியே பறை முதலியவற்றை
யெல்லாம் தந்தருளினவனல்லையோ? என்னுங்கருத்தைக் காட்டுதற்கென்க.

(உன்றன்னை இத்யாதி.)
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் நெடுநாள்பட்ட துயரமெல்லாந் தீரப்பாடி,
அப்பாட்டினால் தோற்ற உன்னிடத்துப் பறையைப் பெற்று,
மேலும் பெறவேண்டய பரிசுகள் பல உள் அவற்றையும் நீ குறையறப் பெறுவிக்க வேணுமென்கிறார்கள்.

நாடு புகழும் பரிசினால் –
நெடுநாளாக நாங்கள் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும்படியாக,
‘ஆ! பெண்கள் கண்ணபிரானைக் குறித்து நோன்பு நோற்றுப் பேறு பெற்றபடி என்னே!’ என்று
அனைவரும் கொண்டாடும்படி நீ எம்மை பஹுமானிக்க வேணுமென்றபடி.

பஹுமாநிக்கவேண்டியபடியைக் கூறுகின்றனர், சூடகமே என்று தொடங்கி.

பாடகம் – பாதகடகமென்னும் வடசொற்சிதைவு.
இன்னவை என்று எடுத்துக் கூறப்பட்ட இவ்வாபரணங்களையும் இவை போல்வன மற்றும் பல ஆபரணங்களையும்
நீ உன் கையால் எங்களுக்குப் பூட்ட, நாங்கள் அணிந்தோமாகவேணும்;
அங்ஙனமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்களுக்கு உடுத்த நாம் உடுத்தோமாக வேணாமென்கிறார்கள்.

(பாற் சோறு இத்தியாதி)
“வையத்து வாழ்வீர்காள்” என்ற பாட்டில் “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று பிரதிஜ்ஞை பண்ணின
இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிக்கையாலே உணவை வேண்டுகின்றன ரென்க.
இன்றளவும் ஆய்ச்சிகள் உணவைத் தவிர்ந்திருக்கின்றனரே; என்று கண்ணபிரான்றானும் உண்ணாதிருந்தமையால்
ஊரில் நெய்பால் அளவற்றுக் கிடக்குமாதலால் “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” என்கிறார்கள்.

“கூடியிருந்து குளிர்ந்து” என்கையாலே,
பசி தீருகைக்காக உண்ணவேண்டுகிற தன்று,
பிரிந்து பட்ட துயரமெல்லாம் தீருமாறு எல்லாருங் கூடிக் களித்திருக்கை உத்தேச்ய மென்பது போதரும்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: