ஸ்ரீ திருப்பாவை–கறவைகள் பின் சென்று– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

மார்கழி நீராடுவான் என்று நோன்பை ப்ரஸ்தாவித்து,
அந் நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும்,
நோன்பு தலைக்கட்டின பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும்
ப்ரீதி பரீவாஹமாகக் கூடிக் குளிர்ந்து பற்சோறுண்கையையும்
கீழிரண்டு பாட்டாலும் அபேஷித்த ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான்,
பெண்காள்! உங்களுடைய கருத்து இவ்வளவென்று எனக்குத் தோற்றவில்லை;
நீங்கள் இப்போது அபேஷித்தவற்றையும் இன்னுஞ்சில அபேஷித்தால் அவற்றையும் நான் தர வேண்டில்
உங்களுடைய நிலைமையை அறிந்து தரவேண்டியிரா நின்றது;
பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது முயற்சியுடையீர்களா யிருக்கவேண்டும்
அதுக்குடலாக நீங்கள் அநுஷ்டித்த உபாய மேதேனுமுண்டோ? என்று கேட்டருள
அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறிலையோ?
அறிவிலிகளான நாங்கள் எடுத்துக் கூறவேண்டும் படி நீ உணராத தொன்றுண்டோ?’
எங்கள் நிலைமையை நன்கு உணரா நின்ற நீ “நீங்களனுட்டித்த உபாய மேதேனுமுண்டோ?
என வினவியது மிக அற்புதமாயிருந்ததீ!” -என்று தங்கள் ஸ்வரூப மிருக்கும்படியை அறிவித்து,
இவ்விடைப் பெண்கள் கேவலம் தயா விஷயமென்று திருவுள்ளம் பற்றி
நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பஞ் செய்யும் பாசுரம், இது.

கீழ், போற்றியாம் வந்தோம், செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
உன்னை அருத்தித்து வந்தோம் என்றிவை முதலான பாசுரங்களினால்
ஆய்ச்சிகள் தங்களுக்குள்ள ப்ராப்ய ருசியை வெளியிட்டனர்;
அந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும்
அவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர், இப்பாட்டில்–

இவர்கள் – கீழ் “யாம்வந்த காரிய மாராய்ந்தருள்” என்றவாறே அவன் அதனை ஆராயாமல்
‘இவர்கள் நெஞ்சில் ஸாதநாம்சமாய்க்கிடப்பன ஏதேனுஞ்சில உண்டோ?’ என்று ஆராயத் தொடங்க.
அதை யறிந்த ஆய்ச்சிகள் ‘நாயனே! நின்னருளே புரிந்திருக்கிற எங்கள் பக்கலில் எடுத்துக் கழிக்கலாம் படியும்
சில உபாயங்களுள் வென்றிருந்தாயோ?
‘இரங்கு’ என்றும், ‘அருள்’ என்றும் நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பரதிபந்தகமாக
எங்கள் திறத்தில் ஸாதநாம்ச மொன்றுமில்லையென்று ஸர்வஜ்ஞனறிய அறிவிக்கிறார்கள்.

ஸாத்யோபாயங்களை ஒழித்து ஸித்தோபாயத்தை ஸ்வீகரிக்கு மதிகாரிகளுக்குப்
பேற்றுக்குக் கைம் முதலாயிருப்பதொரு நற்கருமமில்லை யென்கையும்,
மேலும் யோக்யதை இல்லை யென்கைக்காகத் தங்களுடைய அபகர்ஷத்தை அநுஸந்திக்கையும்,
மூலஸுக்ருதமான ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,
ஸம்பந்தத்தை உணருகையும்,
பூர்வாபராதங்களுக்கு க்ஷாமணம் பண்ணுகையும்,
உபாய பூதனான ஈச்வரன் பக்கலிலே உபேயத்தை அபேக்ஷிக்கையுமாகிற இவை ஆறும்
அதிகார அங்கங்களாதலால் இப்பாட்டில் இவ்வாறும் வெளியிடப்படுகின்றன–

கறவைகள் பின் சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ணபிரானே
உன் தன்னோகி உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆச்ரிதவத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய்

முதலடியில் –
பசுக்களின் பின்னே போய்த் திரிந்து சரீரபோஷணம் பண்ணுமவர்களாயிரா நின்றோ மென்கையாலே
தங்களிடத்தில் நற்கருமமொன்று மில்லாமையும்,

இரண்டாமடியில் –
“அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து” என்கையாலே, மேலும் யோக்யதையில்லை யென்கைக்காகத்
தங்களுடைய அபகர்ஷ அநு ஸந்தானத்தாலும் ,

நான்காமடியில் –
“குறையொன்றுமில்லாத கோவிந்தா!” என்கையாலே
மூலஸுக்ருதமான ஈச்வரனுடைய குணபூர்த்தியின் அநுஸந்தாநமும்,

ஐந்தாமடியில் –
“உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” என்கையாலே ஸம்பந்த வுணர்ச்சியும்,

ஏழாமடியில் –
“சீறியருளாதே” என்கையாலே பூர்வாபராதங்களுக்கு க்ஷாமணமும்,

எட்டாமடியில் –
“இறைவா நீ தாராய்பறை” என்கையாலே உபேயாபேக்ஷையும் விளங்காநின்றமை காண்க.

“குறை வொன்றுமில்லாத கோவிந்தா!” என்றது –
உனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும்.

கோவிந்தா:-
நித்யஸுரிகளுடைய ஓலக்கத்திலே அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கு மிருப்பைத் தவிர்ந்து
இடைச்சேரியிற் பசு மேய்க்கப் பிறந்தது குறைவாளரான எங்களை நிறைவாளராக்க வன்றோ வென்கை.

இங்குச் “சிறுபேர்” என்றது
நாராயண நாமத்தை யென்பர்; இந்திரன் வந்து கண்ணபிரானுக்குக் கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு,
அவனை நாராயணனென்கை குற்றமிறே.
ஒருவன் முடிசூடப் பெற்றபின்னர், அவனை முன்னைப் பெயரிட்டழைக்கைக்கு மேற்பட்ட குற்றமுண்டோ?

அழைத்தனம் –
‘நாராயணன்’ என்று ஒருகாற் சொல்லி நில்லாமல்,
‘நாராயணனே நமக்கே பறைகருவான்” என்றும்,
“நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும்,
“நாராயணன் மூர்த்தி” என்றும் பலகாற் சொன்னமையால், ‘அழைத்தனம்’ என்று பன்மையாகக் கூறப்பட்டது.

“உன்றன்னை- அழைத்தனவும்” என்ற உம்மைக்குக் கருத்து –
நாங்கள் எங்களுக்குள்ளே ஸ்நேஹ பாரவச்யத்தாலே
“பேய்ப்பெண்ணே!, ஊமையோ?, செவிடோ?, நாணாதாய், பண்டே யுன்வாயறிதும்” என்று
பலவாறாகச் சொல்லிக் கொண்டவைகளையும் பொறுத்தருள வேணுமென்பதாம்.

இங்ஙன் ‘பொருத்தருளவேணும்’ என்று ப்ரார்த்தித்த பெண்டிரை நோக்கிச் கண்ணபிரான்,
‘நம்மாலே பேறாம்படியான உறவு நம்மோடு உண்டாகிலும்,
குற்றத்தைப் பொறுக்கவேணு மென்றாலும்
பலனை அநுபவிக்குமவர்கள் நீங்களான பின்பு, நீங்களும் ஏதாவதொன்று செய்ததாக வேண்டாவோ?
வ்யாஜமாத்ரமாகிலும் வேணுமே; ‘இவர்கள் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான்’ என்று
நாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு ஆலம்பநம் வேண்டுமே!’ என்ன;
அது கேட்ட ஆய்ச்சிகள், ‘எதிர்த்தலையில் ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியஞ் செய்தால்
உன்னை விலக்குகைக்கு உரியாருண்டோ?’ என்னுங் கருத்துப்பட ‘இறைவா’ என்று விளிக்கிறார்கள்-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: